World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

The fascist atrocities in east Ukraine and the fraud of “humanitarian” war

கிழக்கு உக்ரேனில் பாசிச அட்டூழியங்களும், “மனிதாபிமான" யுத்தத்தின் மோசடியும்

By Alex Lantier
14 August 2014

Back to screen version

உக்ரேனிய நகரங்களான டொனெட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ்க் நகரங்கள் மீது கியேவ் ஆட்சியால் தொடங்கப்பட்ட முற்றுகையும், அமெரிக்க அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அதற்கு துணைபோவதும், கூட்டு தண்டனை வழங்கும் ஒரு காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையாகும்

கியேவில் உள்ள அரசியல் குண்டர்களும், வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களில் உள்ள அவர்களின் ஊக்குவிப்பாளர்களும் கிழக்கு உக்ரேனின் ஒட்டுமொத்த மக்கள் மீதும் யுத்தம் தொடுக்க Right Sector மற்றும் Azov Battalion போன்ற பாசிச துணைஇராணுவப்படை பிரிவுகளைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள், மகப்பேறு விடுதிகள், இரசாயன ஆலைகள் மீது பீரங்கி தாக்குதல் நடத்தி வரும் அவர்கள், நகரத்தின் மையப்பகுதிகளுக்குள்ளேயே  கண்மூடித்தனமாக ராக்கெட் குண்டுகளை வீசிவருவதோடு, மொத்தமாக 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இருக்கும் அந்நகரங்களுக்கான குடிநீர், உணவு, மின்சாரம் மற்றும் மருந்து வினியோகங்களையும் துண்டித்து விட்டிருக்கிறார்கள். அந்த தாக்குதலில் ஏற்கனவே நூற்றுக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் உட்பட 2,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மனிதாபிமான உதவியை கொண்டுசெல்லும் ரஷ்ய பாரவூர்திகள் இப்போது கிழக்கு உக்ரேனுக்குள் நுழைந்துவிடுமோ என்று நேட்டோ சக்திகளின் கோபமான ஓலங்களில் இருக்கும் பாசாங்குத்தனம் வெறுப்பூட்டுவதாக இருக்கிறது. படையெடுப்பு மட்டுமே மக்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழியென்ற போலிக்காரணத்தின் அடிப்படையில் யூகோஸ்லேவியா, லிபியா மற்றும் ஈராக்கைத் தாக்கிய அவை தற்போது 180-பாகை திரும்பி, அவற்றின் கைப்பாவை ஆட்சி கிழக்கு உக்ரேனியர்களை இடையூறின்றி படுகொலை செய்வதை அனுமதிக்க வேண்டுமென கோரி வருகின்றன

திங்களன்று ஒரு சிறிய பத்திரிகையாளர் கூட்டத்தில், அரசு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரும் CIAஇன் முன்னாள் மத்திய கிழக்கு பகுப்பாளருமான மரீ ஹார்ஃப், கிழக்கு உக்ரேனிய அட்டூழியங்களுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் முழு ஆதரவு இருப்பதைத் தெளிவுபடுத்தினார். “அங்கே 1,500 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பிரிவினைவாதிகள் கூறுகிறார்கள், அவர்களின் பகுதிகளில் மின்சாரம் இல்லை, அவர்களுக்கு தேவையான பொருட்கள் போதுமானதாகவில்லை, இன்னும் இதுபோல பல உள்ளன. அங்கே அந்த நகரங்கள் மற்றும் கிராமங்களில்  பொதுமக்கள் இருக்கிறார்கள்," என்று குறிப்பிட்டு ஒரு செய்தியாளர் ஒரு கேள்வியைக் கேட்கத் தொடங்கினார்.

அந்த கேள்வி எழுப்பியவரை இடைமறித்து, அக்கேள்வியை ஹார்ஃப் துண்டித்தார்: “அந்த பிரிவினைவாதிகளுக்கு என்னிடம் எந்தவொரு அனுதாபமும் கிடையாது," என்றார்.

கிழக்கு உக்ரேனிற்கு உணவு, குடிநீர் மற்றும் மின்சார ஜெனரேட்டர்களைத் தாங்கியிருந்த அந்த முன்னேற்பாடான ரஷ்ய பாரவூர்திகளின் வரிசையை தந்திரமென்று குற்றஞ்சாட்டினார்: “உக்ரேனுக்குள் இராணுவ படைகளின் பிரிவுகளைச் உள்செருக ரஷ்யா ஒரு மனிதாபிமான அல்லது சமாதானத்திற்கான நடவடிக்கையென்ற ஒரு வேஷத்தைப் பயன்படுத்த முயலுகிறதென நாங்கள் கவலை கொள்கிறோம். அது மனிதாபிமானமாக இருக்கட்டும் அல்லது வேறெதுவாகவும் இருக்கட்டும், கியேவின் நேரடி அனுமதியில்லாமல் உக்ரேனில் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் நம்ப மாட்டோம்," என்றார்.

அமெரிக்க அரசு பிரச்சாரத்தின் தரமற்ற தன்மைகளை விட, ஹார்ஃபின் பாசாங்குத்தன கருத்து அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. கியேவினால் தான் ஒரு மனிதாபிமான பேரழிவு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை மறைமுகமாக ஒப்புக் கொள்வதோடு, ரஷ்யா என்ன செய்து வருவதாக ஆதாரமில்லாமல் அவரது கருத்து குற்றஞ்சாட்டுகிறதோ, துல்லியமாக அதைத் தான் 1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னரிலிருந்து பல தசாப்தங்களாக வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் செய்து வந்துள்ளன: அதாவது நாடுகளின் மீது படையெடுக்க மனிதாபிமான தலையீடு என்ற போலிக்காரணத்தைப் பயன்படுத்துவது. ஒபாமா நிர்வாகம் மக்களுக்கு விரோதமாக அதன் யுத்தங்களைத் தொகுத்தளிக்க துல்லியமாக இதே போலி தந்திரோபாயத்தைத் தான் பயன்படுத்தி உள்ளதுடன், தொடர்ந்தும் பயன்படுத்தி வருகிறது.

எண்ணெய் வளங்கள் 76.4 பில்லியன் பரல்கள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டிருக்கின்ற லிபியாவில், 2011 யுத்தத்தை அவர் தொடங்கிய போது ஒபாமா அமெரிக்க மக்களிடம் கூறியது: “ஒரு கொடுங்கோலர் அவரது மக்களிடம் இங்கே இரக்கமென்பதெல்லாம் கிடையாது என்றும், பெங்காசி மற்றும் மிஸ்ராடா போன்ற நகரங்களில் அவர்கள் மீது அவரது படைகள் தாக்குதலை அதிகரிக்கும் என்றும் அவர் கூறும்போது, அப்பாவி ஆண்களும் பெண்களும் காட்டுமிராண்டித்தனத்தை முகங்கொடுத்தும், அவர்களின் சொந்த அரசாங்கத்தின் கரங்களில் கொல்லப்பட்டும் வருகின்ற நிலையில், நம்மால் வெறுமனே நின்று கொண்டிருக்க முடியாது. ஆகவே நாம் தெளிவாக இருக்க வேண்டும்: செயல்களுக்கு விளைவுகள் உண்டு, சர்வதேச சமூகத்தின் விதிமுறை ஆவணம் நடைமுறைப்படுத்த  வேண்டும்," என்றார்

லிபியாவில் அமெரிக்க-ஆதரவிலான போராட்டக்காரர்களின்  ஒடுக்குமுறை எதிர்காலத்தில் நடக்கக்கூடுமென்ற இந்த எச்சரிக்கையின் அடிப்படையில் மட்டும் தான், ஒபாமா ஆயிரக் கணக்கான பொதுமக்களைக் கொன்ற ஒரு யுத்தத்தைத் தொடங்கினார்; அத்தோடு லிபியாவை பழங்குடியின மற்றும் அல் கொய்தா தொடர்பு கொண்ட ஆயுதக்குழுக்களின் ஒரு இணைப்பாக இருந்த குழுக்களிடம் ஒப்படைத்தார். எவ்வாறிருந்த போதினும், பெங்காசி மற்றும் மிஸ்ராடா என்பதற்கு பதில் டொனெட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ்க் என்று மாற்றிக்கொள்ளுங்கள், மேலும் பிளாக்வாட்டர் கைக்கூலிகள் மற்றும் சிஐஏ உடன் இயங்கிவரும் கியேவுக்கு ஆதரவான பாசிசவாதிகளால் உக்ரேனிய மக்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்களுக்கு குறுக்கீடாக இருக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் ஒபாமா நிர்வாகம் எதிர்க்கிறது.

எண்ணெய் வளங்கள் 140 பில்லியன் பேரல்கள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ள ஈராக்கில், மக்கள் விரும்பாத மற்றொரு அமெரிக்க யுத்தத்தை அவர் இந்த வாரம் தொடங்கியுள்ள நிலையில், ஒபாமாஇந்த விடயத்தில், ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு படைகளிடமிருந்து தப்பிக்க சின்ஜார் குன்றுகளில் மறைந்துள்ள யாஜிதி அகதிகள் மீதான மனிதாபிமான கவலைகளால் இந்த யுத்தத்திற்கு கட்டளையிட்டிருப்பதாக சலித்துபோன அதே பொய்யை உரைத்திருந்தார். “பல ஆயிரக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் நிர்மூலமாக்கப்படும் அபாயத்தை முகங்கொடுத்திருக்கையில், அதற்காக ஏதாவது செய்யக்கூடிய தகைமையை நாம் பெற்றிருக்கும் போது, நாம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அமெரிக்கர்களாக அது நமது கடமைப்பாடாகும். அதுதான் அமெரிக்க தலைமையின் சிறப்பம்சமாகும். நாம் அப்படிப்பட்டவர்களாவோம்," என்றுரைத்தார்.

ஒபாமா யாரை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக நினைக்கிறார்? 1990-1991 வளைகுடா யுத்தத்தில் இருந்து சுமார் ஒரு கால் நூற்றாண்டு அளவிற்கு அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் பரந்த எதிர்ப்பிற்கு இடையே ஈராக்கில் தொடர்ச்சியான யுத்தங்கள் மற்றும் குண்டுவீச்சுக்களை நடத்திய அமெரிக்க ஏகாதிபத்தியம், பாரிய படுகொலைகளே அமெரிக்க வகைப்பட்டதாக காட்ட அதனால் ஆனமட்டும் செய்துள்ளது.

சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், ஈராக்கை உலகப் பொருளாதாரத்தில் இருந்து விலக்கி வைத்த, வளைகுடா போருக்குப் பின்னர் ஈராக் மீது திணிக்கப்பட்ட வாஷிங்டனின் பேரழிவுகரமான தடைகள் குறித்து, 1996 மே இல், CBS செய்தி தொடர்பாளர் லெஸ்லி ஸ்டாஹ்ல் கிளிண்டன் நிர்வாகத்தின் வெளியுறவுத்துறை செயலர் மட்லன் அல்பிரைட்டிடம் கேள்வி எழுப்பினார். “ஒரு அரை மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளதாக நாம் கேள்விப்படுகிறோம். அது ஹிரோஷிமாவில் இறந்த குழந்தைகளை விட அதிகமாகும். மேலும், உங்களுக்கே தெரியும், இது பெரும் விலைகொடுப்பு இல்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.

இழிவார்ந்த விதத்தில் அல்பிரைட் விடையிறுக்கையில்: “இதுவொரு கடினமான தேர்ந்தெடுப்பாக தான் நான் நினைக்கிறேன், ஆனால் கொடுக்கப்பட்ட விலை பிரயோசனமானது என நான் கருகிறேன்," என்றார்.

அப்போது, துன்பியலான விதத்தில், 2003 படையெடுப்பும் மற்றும் 1 மில்லியனுக்கும் அதிகமான ஈராக்கியர்களின் உயிரைப் பறித்த கொடூரமான அமெரிக்க-இங்கிலாந்து ஆக்கிரமிப்பின் ஒன்பது ஆண்டுகள் மற்றும் உள்நாட்டு யுத்தம் என்பதைவிட, ஈராக்கிய மக்களின் மீது மேலதிகமான குண்டுவீச்சுக்களும் இன்னும் மோசமானவையும் இன்னும் வரவிருக்கின்றன.

உக்ரேனில் அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித்தனம் அவர்களின் தற்போதைய யுத்தங்களை மட்டும் அம்பலப்படுத்தவில்லை, மாறாக போர்கள் மற்றும் சூறையாடல்களுக்கு ஒரு எரிச்சலூட்டும் தார்மீக ஒழுக்கத்தின் வேஷத்தை வழங்க பல தசாப்தங்களாக அபிவிருத்தி செய்யப்பட்ட அரசியல் கட்டமைப்பையே அம்பலப்படுத்துகிறது

முன்னாள்-அதிருப்தியாளரும், ஏகாதிபத்திய-சார்பு துஷ்டருமான செக் குடியரசின் ஜனாதிபதி வாக்லாவ் ஹாவெல், முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசில் இருந்த கொசொவோ மற்றும் சேர்பியா மீது நேட்டோ குண்டுகள் விழுந்த போது, 1999இல் Le Mondeக்கு அளித்த ஒரு நேர்காணலில் "மனிதாபிமான குண்டுவீச்சு" என்ற ஓர்வெல்லியன் பதத்தைப் பயன்படுத்தினார். ஹாவெலின் கருத்துப்படி, அதுபோன்ற யுத்தங்கள் உன்னதமானவை, அவை மனித உரிமைகளுக்கு வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வழுவாத அர்ப்பணிப்பை மட்டுமே எதிரொலிக்கும் முற்றிலும் தாராள மனமுடைய நடவடிக்கைகளாகும்; அந்த விடயத்தில், பெல்கிரேடில் சேர்பிய அரசாங்கத்திடமிருந்து கொசோவோ அல்பானியர்களைப் பாதுகாப்பதற்காக இருந்தது,என்றார்.       

"கொசோவோவில் நேட்டோ தலையீட்டின் போது, அங்கே யாராலும் கேள்வி எழுப்ப முடியாத ஒரு விடயம் இருந்தது: அவர்களின் வான்வழி வேட்டைகள், குண்டுகள், அவை ஒரு சடரீதியிலான நலன்களால் தூண்டிவிடப்பட்டவை அல்ல. அவற்றின் குணாம்சம் பிரத்யேகமாக மனிதாபிமானத்தில் இருக்கிறது: இங்கே கோட்பாடுகள், மனித உரிமைகள் தான் பணயத்தில் இருக்கின்றன. இந்த மனித உரிமைகளுடன் தொடர்புடைய முன்னுரிமை நாட்டின் இறையாண்மையைக் கூட கடந்து செல்கின்றன. இது ஐக்கிய நாடுகளின் கட்டளை இல்லாமலேயே, யூகோஸ்லாவ் கூட்டரசை தாக்குவதை சட்டபூர்வமானதாக ஆக்குவதாக நான் நம்புகிறேன்," என்று ஹாவெல் அறிவித்தார்.

யுத்தத்திற்கு வழங்கப்பட்ட இத்தகைய பிற்போக்குத்தனமான வியாக்கியானங்கள் பெருநிறுவன ஊடகங்கள், முன்னணி கல்வியாளர்கள் மற்றும் அமெரிக்காவில் சர்வதேச சோசலிச அமைப்பு (ISO) மற்றும் பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி போன்ற ஊழல்பீடித்த போலி-இடது குழுக்களால் ஆரதழுவிக் கொள்ளப்பட்டன, அவை லிபிய மற்றும் சிரிய யுத்தங்களை கைதட்டி பாராட்டின. குறிப்பிட்டுக் கூறப்பாடாமல் இருந்தாலும், அவர்களது பிரச்சாரத்தின் முதன்மையான இலக்கு மார்க்சிசமாக இருந்தது. அதுவும் குறிப்பாக, அதுபோன்ற யுத்தங்கள் ஏகாதிபத்திய சக்திகளின் முதலாளித்துவ வர்க்கங்களினது சடரீதியிலான நலன்களைப் பின்தொடர்வதால் தூண்டிவிடப்படுகின்றன என்ற மார்க்கிசத்திற்கு எதிராக அதன் வாதமாக இருந்தது

வர்க்க சக்திகள் தம்மை வெளிப்படுத்தும், இந்த குட்டி-முதலாளித்துவ சகோதரத்துவம் உக்ரேனில் பொருத்தமான கூட்டாளிகளைக் கண்டறிந்துள்ளது. பெப்ரவரி 22 பதவிக்கவிழ்ப்பை நடத்தி, தீவிர வலது அரசாங்கத்தை நிறுவிய கியேவின் மைதானில் இருந்த வலதுசாரி, ஐரோப்பிய ஒன்றிய சார்பிலான போராட்டங்களை அவர்கள் அரவணைத்திருந்தார்கள். இப்போதோ, அவை கிழக்கு உக்ரேனில் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்து வருகின்ற ஏகாதிபத்தியத்தின் அடிமட்ட சிப்பாய்களாக சேவை செய்து வரும், Right Sectorக்குள் இருக்கும் உக்ரேனிய நாஜி ஒத்துழைப்பாளர் ஸ்டீபன் பண்டேராவை பாராட்டுபவர்களோடு, வெள்ளையின பேரினவாத துப்பாக்கிதாரிகள், மற்றும் முன்னாள்-குற்றவாளிகளோடு தங்களைத்தாங்களே இணைத்துக்கொண்டுள்ளதை காண்கின்றனர்.