World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி German economy contracts as Europe slides closer to recession ஐரோப்பா மந்தநிலைமையை நெருங்கிச்செல்கையில், ஜேர்மன் பொருளாதாரம் சுருங்குகிறது
By Stefan Steinberg ஐரோப்பா ஒரு முற்றுமுதலான மந்தநிலைமையை நெருங்கி வருவதை யூரோஸ்டட் புள்ளிவிபர கழகத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துகின்றன. வியாழனன்று வெளியிடப்பட்ட யூரோஸ்டட் அறிக்கையின்படி, இந்த ஆண்டின் மே மற்றும் ஜூன் மாத தொழில்துறை உற்பத்தி யூரோ மண்டலத்தில் 0.3 சதவீத அளவிற்கும், 28 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில்(EU) 0.1 சதவீத அளவிற்கும் வீழ்ச்சி அடைந்தது. இந்த வீழ்ச்சியின் பிரதான காரணியாக இருப்பது, ஜேர்மன் தொழில்துறை உற்பத்தியில் ஏற்பட்ட சுருக்கமாகும். ஐரோப்பாவின் பிரதான பொருளாதாரமாக விளங்கும் ஜேர்மனி, யூரோ மண்டலத்தில் கால்பங்கிற்கும் அதிகமான உற்பத்தியை செய்கின்து. ஜேர்மன் ஏற்றுமதிகளுக்கான தேவை பலவீனப்பட்டு வருவதோடு முதலீடுகளும் குறைந்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே அதன் பொருளாதாரம் 0.2 சதவீதம் சுருங்கியது. ஜேர்மன் ஏற்றுமதியின் வீழ்ச்சி, அதன் பிரதான சந்தைகளான குறிப்பாக ஐரோப்பா மற்றும் ஆசியாவில் தேவைகள் குறைந்து வருவதைப் பிரதிபலிக்கிறது. 2012இன் இறுதியில் இருந்து, ஜேர்மன் பொருளாதாரம் முதல்முறையாக சுருங்கியுள்ளது. ஐரோப்பிய மீட்சிக்கு இட்டுச் செல்லக்கூடிய முக்கிய உந்துசக்தியாக, சமீபத்திய ஆண்டுகளில் ஜேர்மனி பரவலாக வர்ணிக்கப்பட்டு வந்திருந்தது. இப்போது அந்த உந்துசக்தி நின்று போகுமளவிற்கு ஸ்தம்பித்துள்ளது. ஜேர்மன் பொருளாதாரத்தின் நலிந்த நிலை, அந்நாட்டின் பிரதான Dax குறியீட்டின் வீழ்ச்சியில் பெரிதும் நேரடியாக பிரதிபலித்துள்ளது, அது கடந்த மாதத்தில் அண்ணளவாக 1,000 புள்ளிகளை (அதாவது 9 சதவீதத்தை) இழந்தது. ஏனைய ஐரோப்பிய பொருளாதாரங்களின் நிலைமையும் சிறப்பாக இல்லை அல்லது மோசமாக உள்ளது. யூரோ மண்டலத்தின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமும் ஜேர்மனின் மிகப் பெரிய ஏற்றுமதி சந்தையுமான பிரான்ஸ், ஏப்ரல் மற்றும் ஜூனுக்கு இடையே பூஜ்ஜிய வளர்ச்சியை பதிவு செய்து தேக்கமடைந்தது. சமீபத்திய புள்ளிவிபரங்களுக்கான விடையிறுப்பில், பிரெஞ்சு அரசாங்கம் 2014க்கான அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டை வெறும் 0.5 சதவீதத்திற்கு பாதியாக குறைத்து அறிவித்தது. அதன் வரவு-செலவு திட்ட பற்றாக்குறை இலக்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8 சதவீதமாக வைப்பதில் அது தோல்வியடையக்கூடும் என்பதை பாரீஸ் அறிவித்திருந்தது, அதற்காக அது ஏற்கனவே அதன் பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருப்பதால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீள்பேரங்களையும் நடத்தியுள்ளது. யூரோ மண்டலத்தின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமான இத்தாலியும் பின்னடைவுக்குள் திரும்பி இருக்கிறது. இத்தாலிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் Istat தகவலின்படி, இரண்டாவது காலாண்டில் பொருளாதார செயல்திறன் 0.2 சதவீதம் அளவிற்கு சரிந்தது. இந்த சரிவு முதல் காலாண்டின் 0.1 சதவீத வீழ்ச்சியைத் தொடர்ந்திருப்பதோடு, இத்தாலி உத்தியோகபூர்வமாக மந்தநிலைமைக்குள் இருக்கிறதென்பதற்கு இது சமிக்ஞை காட்டுகிறது. நான்காவது மிகப் பெரிய யூரோ மண்டல பொருளாதாரமான ஸ்பெயின், தொழில்துறை உற்பத்தியில் 0.8 சதவீத வீழ்ச்சியோடு அந்த முகாமில் மிகவும் பாதிக்கப்பட்ட ஒன்றாக நிற்கிறது. எதிர்காலம் குறித்த பொருளாதார புள்ளிவிபரங்களோ இன்னும் மேலதிகமான வீழ்ச்சியை குறிப்பிடுகின்றன. வணிக நம்பிக்கை மீதான மதிப்பீடுகள் அந்த கண்டம் முழுவதும், அதுவும் மிகக் குறிப்பாக ஜேர்மனியில், குறைந்து வருகின்றன. 2008 நிதியியல் நெருக்கடி ஏற்பட்டு ஆறு ஆண்டுகளில், வேலைவாய்ப்பின்மை மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பின்மை ஐரோப்பா முழுவதிலும் உயர்ந்த மட்டத்தில் இருக்கின்றன, பணவீக்கமோ தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது, அதேவேளையில் ஆழமடைந்து வரும் பொருளாதார அவநம்பிக்கைக்கு இடையே விலைகளோ தேக்கமடைந்திருக்கின்றன. வரலாறு காணாத விகிதமாக ஏறக்குறைய 25 சதவீத அளவிற்கு உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மையில் இருக்கும் ஸ்பெயினில், நுகர்வோர்களின் பணப்பைகள் காலியாகி விட்டன. அது பெரிதும் அசாதாரணமாக பூஜ்ஜிய பணவீக்க விகிதத்தில் வெளிப்படுகிறது. அந்த கண்டத்தின் ஒரு புதிய பொருளாதார பேரழிவுக்கான மிக முக்கிய குறியீடாக இருப்பது, பெருநிறுவன முதலீட்டில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் தேக்கநிலையாகும். அது தொடர்ந்து 10 காலாண்டுகளாக எதிர்மறை வளர்ச்சியின் அடையாளத்தை காட்டி, யூரோ மண்டலம் முழுவதும் 0.8 சதவீதம் சுருங்கியது. வீட்டுத்துறை முதலீடுகள் இன்னும் மேலதிகமாக வேகமாக 2.4 சதவீத அளவிற்கு குறைந்துவிட்டன. ஒரு முன்னணி பிரெஞ்சு பொருளியல்வாதி இந்த முதலீட்டு புள்ளிவிபரங்களைக் குறித்து கூறுகையில், “வியாபாரம் சார்ந்தும் சரி, குடும்பங்கள் சார்ந்தும் சரி இரண்டு தரப்பிலுமே இன்று முற்றிலுமாக நம்பிக்கை வைக்க முடியாதிருக்கிறது. இது அண்மித்த எதிர்காலத்தில் எதுவும் மாறுமென்றும் என்னால் காண முடியவில்லை," என்றார். 2008 நெருக்கடி வெடித்ததில் இருந்து ஐரோப்பிய பொருளாதாரம் சுருங்குவதும் மற்றும் மில்லியன் கணக்கான வேலைகள் வெட்டப்படுவதும், பேர்லினால், புருசெல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவத்தால், மற்றும் ஐரோப்பா எங்கிலும் உள்ள அரசாங்கங்களால் ஐரோப்பா மீது திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளின் ஒரு நேரடி விளைவுகளாகும். ஆனால், அதேநேரத்தில், மிகக் குறிப்பிடத்தக்க விதத்தில் ரஷ்யாவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக தடைகள், மேலும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய மோதல்கள் என இந்த புதிய அரசியல் காரணிகள், ஐரோப்பிய நெருக்கடிக்கு எண்ணெய் வார்த்து வருகின்றன. ரஷ்யா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள் மற்றும் அதற்கு பழிவாங்கும் விதத்தில் மாஸ்கோவின் தடைகள் என இவற்றின் விளைவைக் குறைத்துக் காட்டும் நிதியியல் பத்திரிகைகளினதும் மற்றும் முன்னணி ஐரோப்பிய அரசாங்கங்களின் முயற்சிகளுக்கு இடையே, ஏற்கனவே அங்கே ரஷ்ய பொருளாதாரமும் சரி அதன் ஐரோப்பிய வர்த்தக கூட்டாளிகளும் கூட பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய-அமெரிக்க வர்த்தக போரின் பிரதானமாக பாதிக்கப்பட்டவைகளில் ஒன்று அநேகமாக ரஷ்யாவிற்கான ஐரோப்பிய ஒன்றிய வேளாண்துறை ஏற்றுமதிகளாகும், அது 2013இல் ஒட்டுமொத்தமாக 15.8 பில்லியன் டாலராக இருந்தது. International Business Times இன் தகவல்படி, ரஷ்யாவின் உணவு இறக்குமதி தடையால் போலாந்து, நோர்வே மற்றும் நெதர்லாந்து ஆகியவை ஏற்கனவே “கடுமையாக பாதிக்கப்பட்ட" நாடுகளில் உள்ளடங்கி உள்ளன. புளூம்பேர்க் ஆய்வின்படி, ஜனவரியில் இருந்து மார்ச் வரையிலான காலத்தோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் போலாந்து பொருளாதார வளர்ச்சி பாதியளவிற்கு குறைந்ததோடு, போலாந்தின் செலாவணி சுலொட்டி (zloty) செலாவணி சந்தைகளில் வீழ்ச்சியும் அடைந்தது. ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்புகள் கொண்டிருக்கும் ஏனைய ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக செக் குரோனா மற்றும் ஹங்கேரிய போரின்ட் ஆகிய செலவாணிகளும் கடந்த மாதத்தில் கணிசமானளவிற்கு சரிந்துள்ளன. "ஒரு நீடித்த, குறிப்பாக மேற்கொண்டு தீவிரமடையும் ஒரு மோதலால்" கிழக்கு ஐரோப்பா "கடுமையாக பாதிப்படையும்" என்று எச்சரித்து, திங்களன்று, மோர்கன் ஸ்டான்லி ஹங்கேரிய மற்றும் ரோமானிய கடன்கள் மீதான அதன் முன்மதிப்பீட்டை மதிப்பிறக்கிக்காட்டி ஓர் அறிக்கை அனுப்பியது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே அதிகரித்துவரும் பதட்டங்களை எடுத்துக்காட்டி, அந்த அறிக்கை தொடர்கையில், “இத்தகைய அபிவிருத்திகள் வளர்ச்சியைச் சுற்றியுள்ள அபாயங்களை இன்னும் கீழ்நோக்கி நகர்த்துகின்றன," என்று குறிப்பிட்டது. பல மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளுக்கு, மிகவும் முக்கியமாக ஜேர்மனிக்கு, கிழக்கு ஐரோப்பா ஒரு பிரதான சந்தையாகும். அந்த பிராந்தியத்தில் ஏற்படும் ஒரு பொருளாதார வீழ்ச்சி, அதையடுத்து, யூரோ மண்டல நெருக்கடியைத் தீவிரப்படுத்தும். ஐரோப்பிய ஒன்றிய தடைகளுக்கான ரஷ்ய விடையிறுப்பு அநேகமாக நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு ஐரோப்பிய நாடான கிரீஸில், மீட்சிக்கான எந்தவொரு நம்பிக்கையையும் இல்லாமல் செய்து விடுகிறது. பெரிதும் எரிவாயு மற்றும் எண்ணெய் ஏற்றுமதிகளின் காரணமாக ரஷ்யா கிரீஸின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளியாக இருக்கிறது. அவ்விரு நாடுகளுக்கு இடையிலான மொத்த வர்த்தகம், கிரீஸிற்கும் ஜேர்மனிக்கு இடையிலான மொத்த வர்த்தகத்தைக் கடந்து, 2013இல் 9.3 பில்லியன் யூரோவை (அதாவது 12.5 பில்லியன் டாலரை) எட்டியது. ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பு கொண்டுள்ள முதலீட்டாளர்களும் வியாபாரிகளும், இந்த தடைவிதிப்பு போர் (sanctions war) அடுத்த கட்டத்திற்கு அதிகரிக்கப்படக்கூடுமென கவலை அடைந்துள்ளனர். ரஷ்யாவிற்கு எதிரான இன்னும் மேலதிக தடைகளைப் பரிசீலிப்பதற்கான சாத்தியக்கூறு உட்பட, உக்ரேன் மற்றும் ஈராக் நெருக்கடியைக் குறித்து விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் வெள்ளியன்று புருசெல்ஸில் ஒன்று கூட இருக்கிறார்கள். அதன் பிராந்தியங்கள் வழியாக ஐரோப்பாவிற்கு செல்லும் ரஷ்ய எரிசக்தி வினியோகங்களை நிறுத்துவது உட்பட, கியேவில் உள்ள நாடாளுமன்றம் ரஷ்யாவிற்கு எதிராக அதன் சொந்த தடைகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது, அது ஐரோப்பிய நாடுகளுக்கு பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருக்கும். ஐரோப்பிய பொருளாதாரம் தட்டுத்தடுமாறுகையில் பிரதான முதலீட்டாளர்களோ குதூகலத்தோடு கைகளை சூடாக்கிக்கொண்டிருக்கின்றார்கள். ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) அதன் பூஜ்ஜியத்திற்கு அண்மித்த வட்டிவிகித கொள்கையிலிருந்து அதிக பணத்தைப் புழக்கத்தில் விடும் கொள்கைக்கு (QE) மாற தயாராகி வருவதென்பது ஐரோப்பிய பொருளாதார வாய்ப்புவளங்களை மோசமடைய செய்யுமென ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ திராஹி கடந்த வாரம் சுட்டிக்காட்டினார். ஐரோப்பிய மத்திய வங்கியால் கொண்டு வரப்பட்ட எல்லா கொள்கைகளுமே அவ்வாறு தான் இருந்துள்ளது என்ற நிலையில், QEக்கு மாறுவதென்பது—அதாவது சந்தைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான யூரோக்களைச் செலுத்துவதென்பது—முதலீட்டாளர்கள் மற்றும் நிதியியல் திமிங்கிலங்களுக்கு ஒரு புதிய வெகுமதிகளை வழங்குமே ஒழிய, அது தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்களை உயர்த்துவதில் ஒன்றும் செய்யப் போவதில்லை. |
|