World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் French government staggered by mounting economic crisis அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடியால் பிரெஞ்சு அரசாங்கம் நிலைகுலைந்து போயுள்ளது
By Kumaran Ira and Alex Lantier வியாழனன்று INSEE தேசிய புள்ளிவிபர ஆணையத்தால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த ஆண்டின் முதல் அரைபகுதியில் பிரெஞ்சு பொருளாதாரத்தின் தேக்கநிலை, ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தைத் தடுமாற செய்துள்ளது. வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை இந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8 சதவீதமாக குறைக்கும் அதன் திட்டங்களைத் தாமதப்படுத்துவது குறித்து ஆலோசிக்க பாரீஸ் நிர்பந்திக்கப்பட்டுள்ளதோடு சேர்ந்து, வரி வருமானங்களும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அந்த அரசாங்கம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சிக்கன முறைமைகளைத் தீவிரப்படுத்த தயாரிப்பு செய்து வருகிறது. அப்பிராந்தியத்தின் முன்னணி பொருளாதாரமான ஜேர்மனி உட்பட யூரோ மண்டல பொருளாதாரம் மந்தநிலைமையை நோக்கி செல்வதோடு சேர்ந்து, பிரான்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பூஜ்ஜிய சதவீத வளர்ச்சியைக் காட்டியிருந்தது. வர்த்தகம், முதலீடு மற்றும் உற்பத்திகள் வீழ்ச்சி அடைந்தன; மற்றும் ஜூலையில் நுகர்வு விலைகளும் 0.3 சதவீதம் சரிந்தன. வேலைவாய்ப்பின்மையும் ஏற்கனவே வரலாற்றில் இல்லாத அளவிற்கு 3 மில்லியனுக்கும் அதிகமான வேலையின்மையோடு அதிகரித்து வருகிறது. பிரெஞ்சு ஏற்றுமதிகள் சரிந்து வருவதோடு சேர்ந்து, வர்த்தக பற்றாக்குறை ஜூனில் மலைப்பூட்டும் அளவிற்கு 30 பில்லியன் யூரோவாக (40.2 பில்லியன் அமெரிக்க டாலராக) அதிகரித்தது. சோசலிஸ்ட் கட்சியாலும் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தாலும் நடைமுறைப்படுத்தப்பட்ட சிக்கன கொள்கைகள் பிரான்சிலும் சரி ஐரோப்பா முழுவதிலும் சரி ஒரு பேரழிவை உருவாக்கி உள்ளன. இந்த ஏப்ரலில் மந்திரிசபை மாற்றத்தின் போது அதிகாரத்திற்கு வந்திருந்த சோசலிஸ்ட் கட்சியின் பிரதம மந்திரி இமானுவேல் வால்ஸ், “தொழிலாளர் செலவுகளை"—அதாவது தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை வெட்டுவதே அவரது கட்சியின் நோக்கமாகும் என்பதை நிதியியல் சந்தைகளுக்கு பகிரங்கமாக வெளிப்படுத்தி இருந்தார். 50 பில்லியன் யூரோ சமூக வெட்டுக்கள், அத்தோடு பெருநிறுவன சம்பள வரிகளில் 40 பில்லியன் யூரோ வெட்டுக்கள் உட்பட ஒரு "பொறுப்புணர்வு ஒப்பந்தம்" மூலமாக அழுத்தம் அளிக்க அது முயற்சி செய்து வருகிறது. பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலைகள் பொறிந்து வருவதானது, முதலாளித்துவத்தின் தோல்வியை மற்றும் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தினது கொள்கைகளின் திவால்நிலையை நிரூபிக்கிறது. கடன்களைப் பெறுவதற்கும், ஐரோப்பா முழுவதிலும் ஒரு பணச்சுருக்க சுழற்சியையும் பொருளாதார பொறிவையும் தவிர்ப்பதற்குமான ஒரு பெரும்பிரயனத்தன முயற்சியில், வங்கிகளுக்கு இன்னும் அதிகமாக பணத்தைக் கையளிக்க ஐரோப்பிய மத்திய வங்கிகளுக்கு அழைப்புவிடுத்ததன் மூலமாக சோசலிஸ்ட் கட்சி விடையிறுப்பு காட்டி இருக்கிறது. Le Mondeஇன் ஒரு தலையங்கத்தில் நிதிமந்திரி மிஷேல் சபான் எழுதுகையில், “அளவுக்கதிகமாக பலவீனமான வளர்ச்சி, அளவுக்கதிகமாக பலவீனமான பணவீக்கம், பற்றாக்குறை குறைப்பு வேகம் குறைவது என இந்த சூழ்நிலை தனித்த பிரெஞ்சு காரணங்களாக இருக்கின்றன, ஆனால் அது ஓர் ஒட்டுமொத்த ஐரோப்பிய எதிர்நடவடிக்கையினால் மட்டுமே ஒரு தீர்வைக் கொண்டு வரக்கூடிய நிலைமைகளைப் பிரதிபலிக்கிறது," என்றார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் நாளிதழ் Le Mondeக்கு ஹோலாண்ட் பின்வருமாறு கூறினார்: “அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்களை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம், ஆனால் பற்றாக்குறையைக் குறைக்கும் முயற்சிகளினது வேகம் வளர்ச்சியையும் சார்ந்துள்ளது. நாங்கள் எந்தவொரு சலுகையையும் வழங்குமாறு ஜேர்மனியிடம் கோரவில்லை, மாறாக நாங்கள் வளர்ச்சிக்கு இன்னும் ஆதரவளிக்குமாறு கேட்கிறோம்," என்றார். ஆனால் ஐரோப்பிய ஒன்றியமும் பேர்லினும் இந்த பரிந்துரைகளை நிராகரித்ததோடு, பாரீஸ் அதன் பற்றாக்குறை இலக்கை எட்டுவதற்கு அதன் சிக்கன நடவடிக்கைகளை மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களைத் தீவிரப்படுத்த வேண்டுமென கோரி வருகிறது. சபானின் கருத்துக்களுக்கு வியாழனன்று விடையிறுக்கையில் ஜேர்மன் மத்திய வங்கி (Bundesbank) தலைவர் ஜென்ஸ் வைட்மான் கூறுகையில், “ஜேர்மனியிடமிருந்து இன்னும் அதிகமான ஆதரவைக் கோருவதை பிரான்ஸ் நிறுத்திக் கொண்டு, அதன் பொருளாதாரத்தை பழுதுபார்ப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்," என்றார். "பிரான்ஸ் அதன் வரவு-செலவு திட்டத்தைக் கொண்டு ஒரு முன்மாதிரியை அமைக்க வேண்டி உள்ளது," என்று வைட்மான் Le Mondeக்கு தெரிவித்தார். “வளர்ச்சியை அதிகரிக்கும் முயற்சிகளை பேர்லினிடம் கோருவதை விடுத்து, பாரீஸ் அதன் சொந்த கட்டமைப்பு சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும்," என்றார். அந்த நெருக்கடி பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டை ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது. ஆகஸ்ட் 10அன்று, சோலிஸ்ட் கட்சி மற்றும் போலி-இடது முதலாளித்து எதிர்ப்பு கட்சி (NPA) இரண்டிற்கும் நெருக்கமான இணையவழி இதழ் Médiapart, பொருளாதாரம் குறித்து ஆகஸ்ட் 1இல் நடந்த ஓர் உயர்மட்ட அரசு அதிகாரிகளின் கூட்டத்தின் உள்ளார்ந்த விபரங்களை அடிப்படையாக வைத்து ஒரு விரிவான அறிக்கையை பிரசுரித்தது. “அரசாங்கம் மீண்டும் பள்ளிக்காலத்திய ஒரு கரும் நாடகக்காட்சியால் அச்சமடைந்துள்ளது," என்ற தலைப்பில் வந்த அந்த கட்டுரை, “பொருளாதார வளர்ச்சி, வேலையின்மை உயர்வை நிறுத்துவது, பற்றாக்குறை அபாயத்தைத் தீர்ப்பது என இவற்றின் மீதிருந்த அனைத்து நம்பிக்கையையும் நிர்மூலமாகிவிட்டன" என்று குறிப்பிட்டது. பிரெஞ்சு கருவூலத்துறை முன்மதிப்பீடுகள் ஐரோப்பா ஒரு பணச்சுருக்க சுழற்சிக்குள் வீழ்ந்து வருவதைக் கண்டிருப்பதாக குறிப்பிட்டுக் காட்டிய அந்த இதழ், பெயர் வெளியிடாத ஒரு அதிகாரியின் கூற்றையும் மேற்கோளிட்டுக் காட்டியது: “பொருளாதார விவாதங்கள் அரசாங்கத்தை சுற்றி வளைத்துள்ளதென்று ஒருவர் கூற முடியாது. உண்மையில், அது சீர்குலைந்துள்ளது." 2010இல் கிரீஸில் நிதியியல் சந்தைகள் செய்ததைப் போல, பிரெஞ்சு கடன்களுக்காக ஊகவணிகங்களினூடாக பிரெஞ்சு பொருளாதாரத்தை வங்கிகள் முடக்கக்கூடுமென்ற நிரந்தரமான அச்சத்தில் ஹோலாண்டும் அவரது ஆலோசகர்களும் வாழ்கின்றனர் என்று அந்த இதழ் வாதிட்டது. எவ்வாறிருந்த போதினும், ஜோர்ஜ் பாப்பன்திரேயோவின் கிரேக்க சமூக-ஜனநாயக அரசாங்கத்தைப் போலவே சோசலிஸ்ட் கட்சியும், அத்தகைய அரசியல்ரீதியில் குற்றகரமான நடவடிக்கையைத் தடுக்க வங்கிகளை தேசியமயமாக்குவதற்கு முற்றிலும் விரோதமாக இருக்கிறது. அதற்கு மாறாக, அவர்கள் மதிப்பிழந்த சமூக சிக்கன கொள்கைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களைத் தொடர்வதை நியாயப்படுத்துவதற்காக, வங்கிகளினது ஊகவியாபார அச்சுறுத்தலைப் பயன்படுத்துகிறார்கள். அந்த கூட்டத்தில் பங்கெடுத்திருந்த ஒருவர் Médiapartக்கு இவ்வாறு கூறினார்: “எப்போதும் போல பிரான்சுவா ஹோலாண்ட் தட்டிக் கழித்து வருகிறார். அந்த அரசாங்க கருத்தரங்கில் இருந்து எந்தவொரு முடிவுக்கும் வரமுடியவில்லை. அவர் மிகவும் வருத்ததோடு தெரிகிறார். பிரெஞ்சு மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் நாம் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும், அந்த போக்கைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்." மற்றொரு அதிகாரி கூறியதாவது: “2008 நெருக்கடியால் உண்டான ஆழமான உடைவை பிரான்சுவா ஹோலாண்ட் கண்டறிந்து கொண்டார் என்று தெரிகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்னால் கற்றறியப்பட்ட பொருளாதாரத் திட்டங்கள் இனியும் வேலை செய்யாதென்பதை அவர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்." பிரான்ஸ் அரசு துறைகளில் நிர்வாகத்தை செயல்படுத்தும் பல உயர் நிர்வாக அதிகாரிகள் ஒரு "பேரழிவுகரமான" இலையுதிர்காலத்தை எச்சரித்துள்ளனர் என்பதையும் Médiapart குறிப்பிட்டது: “பல நிறுவனங்கள், முக்கியமாக கட்டுமானத்துறையில் இருப்பவை, பொதுத்துறையின் கேட்பாணைகள் இல்லாததால் திவால்நிலைமையால் அச்சுறுத்தப்பட்டுள்ளன. நிலுவைத்தொகைகள் திரண்டு வருகின்றன. பாரிய வேலைநீக்கங்கள் மற்றும் வெளியேற்றுவதற்கான பல திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன." ஐரோப்பாவில் தீவிரமடைந்துவரும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பதட்டங்கள், ஆழமான பொருளாதார மந்தநிலைமையால் தூண்டிவிடப்பட்டன என்பதையும் Médiapart அறிக்கை தெளிவுபடுத்தி இருந்தது. பல ஆலைமூடல்களை மேற்பார்வை செய்துள்ள தொழில்துறை மந்திரி அர்நோ மொன்ட்பூர்க்கின் கண்ணோட்டங்களை அது ஊக்குவித்தது, தற்போது அவர் பிரெஞ்சு வங்கிகளுக்கு கூடுதலாக ஐரோப்பிய மத்திய வங்கியின் நிதியைப் பெறுவதற்காக பேர்லினோடு ஒரு கடுமையான மோதலுக்கு அழுத்தம் அளித்து வருகிறார். ஏனைய அதிகாரிகளும் அதேபோன்ற திட்டங்கள்மீது விமர்சனத்தை தெரிவித்தனர்: “ஐரோப்பிய பொருளாதார கொள்கையில் பிரான்ஸ் ஒரு மாற்றத்தைப் பெற விரும்புகிறதென்றால், அதை அது ஜேர்மனியிடமிருந்து பிச்சை கேட்டுப் பெறமுடியாது. 2012இல் [ஹோலாண்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட போது] அது அதன் வாய்ப்பைத் தவறவிட்டது தான் பிரச்சினை. தெற்கு ஐரோப்பா முழுவதும் பிரான்சிற்காக காத்திருந்து அதை பின்தொடர தயாராக இருந்தன. ஆனால் பிரான்சுவா ஹோலாண்ட் விவாதிக்காமலேயே ஸ்திரப்பாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திடவும் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை 3 சதவீதத்திற்குக் குறைக்கவும் முன்னுரிமை எடுத்தார். பிரான்ஸ் அதன் எல்லா செல்வாக்கையும் இழந்தது. அப்போதிருந்து, இத்தாலி அதன் சொந்த வழியில் செல்லத் தொடங்கியது. ஸ்பெயினோ ஜேர்மனியின் பின்னால் சென்றது. யாரும் பிரான்சிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை." இத்தகைய பரிந்துரைகளில் எதுவுமே, பிரெஞ்சு நிதியியல் மூலதனத்தின் நலன்களையும் பிரதிபலிக்காததுடன் மற்றும் பேர்லினாலும் ஐரோப்பிய ஒன்றியத்தாலும் கட்டளையிடப்பட்ட சிக்கன கொள்கைகளுக்கு எந்தவொரு முற்போக்கான மாற்றீட்டையும் வழங்கவில்லை. நவ-பாசிச தேசிய முன்னணியிடமிருந்து (FN) எழுந்த ஒரு முதலாளித்துவ "உதவிப்பொதி" கொள்கைக்கான பலமான குரலே இதற்கு சாட்சியாகும். அது ஒரு பாதுகாப்புவாத, மலிவு-செலாவணி நிலைப்பாட்டை கொண்டுள்ளதும், ஸ்தாபக-கட்சிகளுக்கு விரோதமாக காட்டிக் கொண்டு சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் போலி-இடது ஆதரவாளர்களின் திவால்நிலைமையிலிருந்து ஆதாயமடைந்தது. INSEEஇன் வளர்ச்சி புள்ளிவிபரங்கள் பிரசுரிக்கப்பட்ட பின்னர், FNஇன் தலைவர் மரீன் லு பென் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரக் கொள்கையை ஒரு முற்றிலும் தோல்வியடைந்த ஒன்றாக முத்திரை குத்தி ஓர் அறிக்கையை பிரசுரித்ததோடு, யூரோவிலிருந்து உடைத்துக் கொள்வதற்கும் மற்றும் ஒரு மலிந்த பிரெஞ்சு தேசிய செலாவணிக்கு திரும்புவதற்கும் அழைப்புவிடுத்தார். அவர் கூறுகையில், “யூரோ மண்டலத்தின் பொருளாதார கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது என்பையும், அந்த மாதிரிகளை நாம் மாற்ற வேண்டும் என்பதும் இப்போது மிகவும் தெளிவாகி உள்ளது," என்றார். ஐரோப்பிய ஒன்றிய சார்பிலான கொள்கைகளுக்கு வக்காலத்துவாங்கும் சோசலிஸ்ட் கட்சி மற்றும் வலதுசாரி எதிர்கட்சியான UMP இரண்டையுமே குற்றஞ்சாட்டி லு பென் தொடர்ந்து கூறுகையில், “சிக்கன நடவடிக்கைகள் நெருக்கடியை ஆழப்படுத்துவதோடு, நுகர்வு, முதலீடு மற்றும் உற்பத்தியை வெட்டுகிறது. யூரோவானது சராசரிக்கும் குறைவான வளர்ச்சியோடு மற்றும் தொழில்துறையைக் கலைப்பதோடு நமது நாடுகளைத் தொடர்ந்து புதைக்கிறது. நமது எல்லைகளை ஒட்டுமொத்தமாக திறந்துவிடுவதும் மற்றும் பாதுகாப்புவாதத்தின் எந்தவொரு வடிவத்தையும் நிராகரிப்பதும் நமது தொழில்துறை மறைந்து போவதை வேகப்படுத்துகிறது," என்றார். பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் பொருளாதார கொள்கை மீதான ஒரு தேசிய விவாதத்திற்கு அழைப்புவிடுத்திருந்த சோசலிஸ்ட் கட்சி முதல்-செயலாளர் ஜோன் கிறிஸ்தோப் காம்படெலிஸூக்கு லு பென் விடையிறுக்கையில், “பேரழிவுகரமான சிக்கன நடவடிக்கையை ஆதரிப்பதிலிருந்து பிரான்ஸ் திரும்ப வேண்டும் மற்றும் அதன் தேவைகளுக்கு ஏற்றவொரு தேசிய செலாவணியோடு பரந்த பூகோளமயமாக்கலின் முன்னால் எதிர்த்து நிற்க வேண்டும் என்ற யோசனையை, இந்த விவாதத்தில், நாங்கள் ஆதரிப்போம்," என்றார். உண்மையில் ஹோலாண்ட் நிர்வாகத்தின் ஒட்டுமொத்த ஊதிய மற்றும் சமூக வெட்டுக்களும் மற்றும் FNஆல் பரிந்துரைக்கப்பட்ட செலாவணி மதிப்பு வெட்டுக்களால் உருவாக்கப்படும் மறைமுக கூலி வெட்டுகள் இரண்டுமே தொழிலாள வர்க்கத்தை மேற்கொண்டும் வறிய நிலைக்கு தள்ளும் திட்டங்களையே குறிக்கின்றன. |
|