World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

Kiev pledges to block Russian aid convoy to eastern Ukraine

கிழக்கு உக்ரேனுக்கான ரஷ்ய உதவிப்பொருள் வாகனங்களை அனுமதிக்காதென்பதை கியேவ் உறுதிப்படுத்துகிறது

By Christoph Dreier
13 August 2014

Back to screen version

உக்ரேனிய இராணுவமும் அதனோடு சேர்ந்த பாசிச துணை இராணுவப்படைப் பிரிவுகளும் கிழக்கு உக்ரேனில் ஒரு மனிதாபிமான பேரிடரை உருவாக்கி வருவதோடு, கியேவில் உள்ள அரசாங்கம் அம்மக்களுக்கான நிவாரண உதவிப்பொருட்களையும் தடுத்து வருகிறது.

முற்றுகையிடப்பட்டுள்ள டொனெட்ஸ் மற்றும் லூஹன்ஸ்க் நகரங்களுக்கு உதவிப்பொருள் வாகனங்களை அனுப்பும் ரஷ்யாவின் திட்டங்களின் மீது எழுந்துள்ள மோதலை, அமெரிக்காவும் நேட்டோவும் மாஸ்கோவிற்கு எதிரான புதிய ஆத்திரமூட்டல்களுக்குப் பயன்படுத்தி வருகின்றன.

செவ்வாயன்று, நிவாரண பொருட்கள் ஏற்றிய 280 வெள்ளைநிற லாரிகள் மாஸ்கோவிலிருந்து புறப்பட்டன. குழந்தைகளுக்கான 62 டன் உணவு, 54 டன் மருந்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள், 12,000 படுக்கைகள், மற்றும் 69 மின்சார ஜெனரேட்டர்கள் உட்பட மொத்தம் 2,000 டன் பொருட்களை அந்த லாரிகள் கொண்டு செல்வதாக ரஷ்ய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், கியேவ் ஒப்புக் கொண்ட ஓரிடத்தில் அந்த லாரிகள் உக்ரேனிய எல்லையைக் கடந்து செல்ல திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அந்த உதவிப்பொருள் வாகனங்கள் செஞ்சிலுவை சங்கம் மற்றும் உக்ரேனிய அரசாங்கம் இரண்டினோடும் பேசியதற்குப் பின்னரே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கிளர்ச்சியாளர்களுக்கும் கியேவ் ஆட்சிக்கும் இடையே ஒரு மத்தியஸ்தராக செயல்பட்டு வரும் முன்னாள் உக்ரேனிய ஜனாதிபதி லியோனிட் கூச்மாவும் இதை உறுதிப்படுத்தினார்.

இருந்த போதினும், அசோசியேடெட் பிரஸ்ஸின் செய்திப்படி, ரஷ்ய அவசரகால அமைச்சகத்தின் ஒரு செய்தி தொடர்பாளர், அந்த வாகனங்கள் எப்போது சென்றடையுமென தெளிவாக தெரியவில்லை என்று கூறினார். அந்த வாகனங்கள் ரஷ்யாவிற்கு ஆதரவளிக்கும் பிரிவினைவாதிகளது கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியின் எல்லையைக் கடந்தாக வேண்டும் என்றவர் தெரிவித்தார்.

ரஷ்யாவின் ஈடுபாட்டோடு கிழக்கு உக்ரேனுக்கு சர்வதேச உதவிப்பொருட்களைக் கொண்டு செல்வதை அனுமதிக்க, அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய, உக்ரேனிய மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதிகள் திங்களன்று உடன்பட்டிருந்தார்கள். ரஷ்ய செய்தி நிறுவனம் ரியா நோவோஸ்டியின் தகவலின்படி, இந்த ஏற்பாடு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) ஓர் அறிக்கையாலும் உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது.

அதேநேரத்தில், ICRC அந்த உதவிப்பொருட்களின் மீது மேலதிக தகவல்களைக் கோரியிருந்தது, “அந்த பொருட்களின் தரம் மற்றும் வகைகளைக் குறித்தும், அத்தோடு அவற்றை எங்கே எவ்விதத்தில் வினியோகிக்க வேண்டும் என்பது போன்ற முக்கிய தகவல்களுக்காக இன்னமும் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்," என்று அது அறிவித்தது.

திங்களன்று உடன்பாடு எட்டப்பட்டிருந்த போதினும், உக்ரேனிய அரசாங்கம் அதன் பங்கிற்கு மிக அவசியமான அந்த நிவாரண பொருட்களைக் கொண்டு செல்வதற்கு அது அனுமதிக்க போவதில்லையென உறுதியாக தெளிவுபடுத்தியது. செவ்வாயன்று உக்ரேனிய தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவ கழகத்தின் செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரி லெசென்கோ கூறுகையில், அதன் படைகள் எல்லையிலேயே அந்த வாகனங்களை நிறுத்தி வைக்குமென அறிவித்தார். டொனெட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ்க்கில் நிவாரண பொருட்களின் தேவையைத் தெளிவுபடுத்தி கொள்வதற்கு ஒரு வாரம் வேண்டியிருப்பதாக தெரிவித்த அவர், தொடர்ந்து கூறுகையில், “அதன் பின்னர் தான் அந்த உதவிபொருள்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய முடியும்" என்றார்.

கியேவில் நடந்த ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், லெசென்கோ அந்த வெள்ளைநிற லாரிகள் ரஷ்ய இராணுவ சிப்பாய்களால் பாதுகாக்கப்பட்டிருந்ததை காட்டும் ஒரு காணொளியை எடுத்துக்காட்டியோடு, மாஸ்கோவ் ஒரு இராணுவ நடவடிக்கையை நடத்துவதற்கு ஒரு சூழ்ச்சியாக இந்த உதவிப்பொருட்களின் வாகனங்களைப் பயன்படுத்தி வருவதாக வாதிட்டார்.

செவ்வாயன்று, உக்ரேனிய துணை வெளியுறவுத்துறை மந்திரி டானிலோ லூப்கிவ்ஸ்கி, ரஷ்யா "முற்றிலுமாக ஒரு ஆத்திரமூட்டும் ஆட்டத்தை" விளையாடிக் கொண்டிருப்பதாக அறிவித்தார். உக்ரேனிய ஆக்கிரமிப்பைத் தொடர்வதற்கு இந்த மனிதாபிமான உதவி என்பது ஒரு போலிக்காரணம் மட்டுமேயாகும் என்றவர் வாதிட்டார்.

மற்றொரு அறிக்கையில், உக்ரேனிய ஜனாதிபதி அலுவலகத்தின் துணை தலைவர் வலேரி சாலெ கூறுகையில், எல்லையிலேயே அந்த லாரிகளை நிறுத்தி, அங்கிருந்து செஞ்சிலுவை சங்கத்திற்கு உதவிப்பொருட்களைக் கைமாற்றிவிட முடிவெடுத்திருப்பதாக தெரிவித்தார். அந்த உதவிப்பொருட்களை வழங்குவதை சாத்தியமான அளவிற்கு தாமதிக்க கியேவ் திட்டமிட்டு இருப்பதாக கூறிய அவர், அதற்காக எந்தவொரு கால வரையறையையும் குறிப்பிடவில்லை.

அதேநேரத்தில் நேட்டோ பிரதிநிதிகளோ மாஸ்கோவிடமிருந்து எந்தவொரு நிவாரண வினியோகங்களையும் நிராகரிப்பதாக அச்சுறுத்தினார்கள். பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி லோரண்ட் ஃபாபியுஸ் செவ்வாயன்று கூறுகையில், ரஷ்யா கிழக்கு உக்ரேனில் தன்னைத்தானே நிரந்தரமாக நிறுவிக் கொள்வதற்கு இந்த உதவிபொருள் வாகனங்களைப் பயன்படுத்தக்கூடும் என்றார். “நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்," என்று அந்த மந்திரி தெரிவித்தார்.

திங்களன்று, நேட்டோ பொதுச் செயலாளர் ஆண்டர்ஸ் ஃபோக் ராஸ்முஸ்சென் உக்ரேனில் இப்போது அநேகமாக ஒரு ரஷ்ய இராணுவ தலையீடு "நடக்கக்கூடுமென" ராய்டருக்கு அளித்த ஒரு நேர்காணலில் தெரிவித்தார். ஒரு நிவாரண நடவடிக்கை என்ற வேஷத்தில் ஒரு படையெடுப்பு நடக்கக்கூடும் என்று ராஸ்முஸ்சென் குறிப்பிட்டார்.

அந்த நேர்காணலில், நேட்டோ நாடுகளின் ஒரு சாத்தியமான எதிர்வினையாக புதிய தடைகள் இருக்கக்கூடுமென ராஸ்முஸ்சென் அறிவித்தார். உக்ரேனிய ஆட்சிக்கு இராணுவ உதவிகள் வழங்கப்படுமென கடந்த வாரம் கியேவிற்கான ஒரு விஜயத்தின் போது ராஸ்முஸ்சென் உறுதியளித்தார்.

கிழக்கு உக்ரேனிக்கு மனிதாபிமான வினியோகங்கள் தடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில், உக்ரேனிய இராணுவம் நேட்டோ நாடுகளால் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. வெள்ளியன்று, கனேடிய விமானப்படை 5 மில்லியன் டாலர் மதிப்பிலான 32 டன் இராணுவ உபகரணங்களை உக்ரேனிய எல்லை துருப்புகளுக்கு வழங்கியது. உக்ரேனுடன் ஜூன் மாத இறுதியில் உடன்பாடான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பொலிஸ் திட்டம், கிழக்கு உக்ரேனில் சண்டையிட இராணுவத்திற்குப் பயிற்சி அளிக்கும் வகையில் விரிவாக்கப்படுமென ஜேர்மன் அரசாங்கம் தெரிவித்தது.

உக்ரேனிய ஆட்சியும் பேர்லின், புருசெல்ஸ் மற்றும் வாஷிங்டனில் உள்ள அதன் ஆதரவாளர்களும் தான் ரஷ்யாவிற்கு எதிராக திருப்பிவிடப்பட்ட பல தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களுக்கு பொறுப்பாகிறார்கள். இந்த ஆண்டின் பெப்ரவரியில் உக்ரேனில் ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் ஒரு பாசிச தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடத்தியது, மற்றும் மேற்கிற்கு ஆதரவான ஒரு பிரத்யேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிசபையைக் கொண்டு ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சைப் பிரதியீடு செய்ததற்குப் பின்னரில் இருந்து, மாஸ்கோ தொடர்ச்சியாக அழுத்தத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரலில் கியேவ் ஆட்சி அந்நாட்டின் கிழக்கத்திய நகரங்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது, அங்கே ரஷ்யாவிற்கு ஆதரவான பிரிவினைவாதிகள் நகர வளாகங்களையும், பொதுக்கட்டிடங்களையும் ஆக்கிரமித்திருந்தனர். ஆயிரக் கணக்கான மக்கள், அவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்ற நிலையில், ஏற்கனவே கியேவ் தலைமையிலான தாக்குதலுக்கு பலியாகி இருக்கிறார்கள். நூறு ஆயிரக் கணக்கானவர்கள் தஞ்சம் கோரி அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சமீபத்திய வாரங்களில், கியேவ் டொனெட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ்க் ஆகிய இரண்டு பிரதான கிழக்கு நகரங்களைச் சுற்றி வளைத்து, ஒரு மனிதாபிமான நெருக்கடியைத் திட்டமிட்டு தூண்டிவிட்டுள்ளது. பிரிவினைவாதிகளின் ஒரு செய்தி தொடர்பாளர் அலெக்சாண்டர் காராமன், டொனெட்ஸ்க்கில் "குடிநீர் வினியோக அமைப்பு, துணை நிலையங்கள், மருத்துவ நிலையங்கள், மழையர்கூடங்கள், பள்ளிக்கூடங்கள், தொழிற்துறை ஆலைகள், பாலங்கள், சாலைகள்" என அனைத்தின் மீதும் குண்டுவீசப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

"இன்று, டொனெட்ஸ்க் தோற்றப்பாட்டளவில் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது," என்றவர் தெரிவித்தார். “ஆகவே அங்கே நிவாரண வினியோகப் பொருட்களைக் கொண்டு வருவதற்கு எந்த வழியும் இல்லை. காயமடைந்த மக்களையும், குழந்தைகளையும் வெளியேற்றுவது கூட சாத்தியமில்லை என்பது மற்றொரு பிரச்சினையாகும். பல குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகள் உட்பட 3,500க்கும் மேலான அகதிகள் அந்நகரில் திரண்டுள்ளனர்," என்றவர் தெரிவித்தார்.

உள்ளூர் அதிகாரிகளின் கருத்துப்படி, லூஹன்ஸ்க்கில் மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகம் கடந்த பத்து நாட்களாக கிடையாது என்பதோடு, உணவு மற்றும் மருந்துபொருட்கள் பற்றாக்குறையில் உள்ளன. தொடர்ச்சியான பீரங்கி குண்டுவீச்சுக்கள் மற்றும் ராக்கெட் குண்டுவீச்சுக்கள் நடந்து வருவதாக கோர்லோவ்கா நகரிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நகரில் உள்ள இரசாயன ஆலையின் நிர்வாகம், அவ்வாலையில் மீது குண்டுவீசுவதை நிறுத்துமாறு உக்ரேனிய இராணுவ படைகளுக்கு அழைப்புவிடுத்தது. அந்த ஆலையின் சேமிப்புகிடங்கில் சக்திவாய்ந்த நச்சு பொருட்கள் உள்ளன, அவை 300 கிலோமீட்டர் சுற்றுவட்டத்திற்கு, ரஷ்யாவிற்கும் அத்தோடு உக்ரேனுக்குமே கூட பாதிப்பை ஏற்படுத்தி அப்பிராந்தியம் முழுவதையும் சீரழிக்கக்கூடியதாகும்

அப்பிராந்தியத்திற்கு நிவாரண பொருட்களை அனுப்புவதற்கான ரஷ்யாவின் முயற்சி, இப்போது இன்னும் கூடுதலான ஆத்திரமூட்டல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த நிவாரண பொருட்களை எவ்விதத்தில் தடுப்பதும் மற்றும்/அல்லது உக்ரேனிய படைகளால் அந்த வாகனங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலும், பதட்டங்களை வேகமாக தீவிரப்படுத்துவற்கும் மற்றும் அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பாவையும் வேகமாக உள்ளுக்குள் இழுக்க சாத்தியமான ஒரு யுத்தம் வெடிப்பதற்கும் இட்டுச் செல்லக்கூடும்.