World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Gaza, Ukraine and US preparations for urban warfare

காசா, உக்ரேன் மற்றும் நகரப்புற யுத்தத்திற்கான அமெரிக்க தயாரிப்புகள்

Bill Van Auken
14 August 2014

Back to screen version

காசாவில் சிக்கியுள்ள மக்களுக்கு எதிராக பத்தாயிரக் கணக்கான துருப்புகளை நிலைநிறுத்தியதையும், மக்கள் நெருக்கம் மிகுந்த அந்த வறிய காசா பிராந்தியத்தை குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளைக் கொண்டு இஸ்ரேலிய இராணுவம் தகர்த்துள்ளதையும், ஒரு மாதத்திற்கும் மேலாக உலகம் திகிலோடு பார்த்து வந்திருக்கிறது. இந்த தொடர் தாக்குதலில் சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; 10,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள்; வீடுகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகள் பாரியளவில் அழிக்கப்பட்டதால் சுமார் ஒரு அரை மில்லியன் மக்கள் இடம் பெயர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து ஊடகங்களில் வெகு குறைவான செய்திகளே வெளியாகி வருகின்ற நிலையில், இதேபோன்ற அட்டூழியங்கள் கிழக்கு உக்ரேனிலும் கட்டவிழ்ந்து வருகின்றன, அங்கே பிரதான நகரங்களான டொனெட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ்க் மீதான கடுமையான முற்றுகையில் அமெரிக்க ஆதரவிலான கியேவ் ஆட்சி, சுயஅதிகாரம் கொண்ட பாசிச போராளிகள் குழுக்களின் முக்கிய ஆதரவோடு, அதன் இராணுவ தாக்குதலைத் தொடங்கி இருந்தது. கடந்த இரண்டு வாரங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளதோடு, புதனன்று ஐக்கிய நாடுகள் சபையின் மிகவும் மிதமான ஒரு மதிப்பீட்டின்படி 2,086 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள்; குறைந்தபட்சம் 5,000க்கும் அதிகமானவர்கள் உறுதியாக காயமடைந்திருந்தார்கள்.

இங்கேயும் நூறு ஆயிரக் கணக்கானவர்கள் அவர்களின் வீட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறார்கள், இது கியேவில் உள்ள வலதுசாரி தேசியவாதிகளால் ஒரு திட்டமிட்ட இன சுத்திகரிப்பு பிரச்சாரமாக உருவெடுத்து வருகிறது. மேலும், காசாவைப் போலவே, இங்கேயும் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் மீது குண்டுவீசப்பட்டு இருக்கின்றன, அதில் நோயாளிகளும், குழந்தைகளும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

காசா மற்றும் உக்ரேன் இரண்டு இடங்களிலிருந்தும் கிடைக்கும் குழந்தைகளின், வயதானவர்களின் உயிரற்ற மற்றும் ஊனமுற்ற உடல்களைக் காட்டும் படங்களும், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் இடிபாடுகளுக்கு பின்னாலிருந்து அழுது கொண்டிருக்கும் பெண்களின் படங்களும், மற்றும் தங்களின் வீட்டை விட்டு வெளியே வந்த போதோ அல்லது அவர்களின் குடும்பங்களுக்காக உணவோ அல்லது குடிநீரோ பெற சென்ற போதோ குண்டுகளின் கூர்மையான உலோகங்களால் வெட்டப்பட்ட அப்பாவி ஆண்கள் மற்றும் பெண்களின் படங்களும், உலகெங்கிலும் உள்ள அனைத்து உழைக்கும் மக்களை அதிர்ச்சியும் திகைப்பும் அடைய செய்திருக்கிறது.

எவ்வாறிருந்த போதினும், இதர வட்டாரங்களில், இந்த சம்பவங்கள் விறுப்புவெறுப்பின்றி தொழில்ரீதியான நலன்களோடு உன்னிப்பாக பார்க்கப்பட்டு வருகின்றன.

இது தான் பேர்லின் மற்றும் இதர ஐரோப்பிய தலைநகரங்களின் மூத்த அரசியல் மற்றும் இராணுவ பிரமுகர்களின் அலுவலகங்களில் நடக்கும் விடயமாக உள்ளது, அவை கிழக்கு உக்ரேனிய மக்களுக்கு எதிரான கியேவ் ஆட்சியினது "பயங்கரவாதத்திற்கு எதிரான" பிரச்சாரத்தை ஆதரித்துள்ளன.

இந்த ஒடுக்குமுறை யுத்தத்தில் ஒட்டுமொத்த தரைப்படை தாக்குதலும் தோற்றப்பாட்டளவில் தீவிர வலது மற்றும் நவ-நாஜி போராளிகள் குழுக்களால் நடத்தப்பட்டு வருகின்றன என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஊடகங்கள் தள்ளப்பட்டுள்ள நிலையிலும், ஐரோப்பிய அரசாங்கங்களோ தொடர்ந்து மவுனமாக இருக்கின்றன. அவற்றில் அஜோவ் இராணுவபிரிவும் (Azov Battalion) உள்ளடங்கும், அது, லண்டனின் Sunday Times குறிப்பிடுவதைப் போல, "நாஜி அதிரடி துருப்புகளால் பயன்படுத்தப்பட்டதும் தற்போது ஜேர்மனியில் தடை செய்யப்பட்டுள்ளதுமான ஓநாயின் கொக்கியை அதன் முத்திரையாக பயன்படுத்துகிறது."

அவர்களே ஒப்புக்கொண்ட விதத்தில், இந்த பாசிச போராளிகள் குழுக்கள் ஸ்வீடன், இத்தாலி, பிரான்ஸ், கனடா மற்றும் கிரீஸ் உட்பட வேறு பல நாடுகளின் நவ-நாஜிக்களையும் மற்றும் வெள்ளையின மேலாதிக்கவாதிகளின் நியமனங்களையும் உள்ளெடுத்துக் கொண்டிருக்கிறது. சிரியாவில் சண்டையிட சென்று பின்னர் ஐரோப்பாவிற்குத் திரும்பும் ஐரோப்பிய இஸ்லாமியவாதிகளின் அபாயங்கள் குறித்த கூக்குரல்களும், சாடைமாடையான பேச்சுக்களும் அங்கே நிரம்பி இருக்கின்ற போதினும், கிழக்கு உக்ரேனில் சண்டையிட்டு பயிற்சியைப் பெற்றுவரும் அவர்களைக் குறித்து அங்கே எந்தவொரு பேச்சுக்களும் எழுப்பப்படவில்லை. அக்கண்டத்தில் அதிகரித்துவரும் சமூக பதட்டங்களின் நிலைமைகளின் கீழ், பாசிச குண்டர்களை உள்ளடக்கிய சண்டை வெகு அருகாமையிலான எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்குமென ஐரோப்பிய ஆளும் மேற்தட்டின் சில அடுக்குகளிடையே சந்தேகத்திற்கிடமின்றி ஒரு உணர்வு நிலவுகிறது.

காசா மற்றும் உக்ரேன் சம்பவங்கள் மீது பெண்டகன் மிக நெருக்கமாக கவனம் செலுத்தி வருகிறது, இந்த இரண்டு யுத்தங்களிலுமே அதன் முழங்கை வரையில் இரத்தம் தோய்ந்திருக்கிறது. அமெரிக்க இராணுவம் இஸ்ரேலிய இராணுவ படைகளுடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டுடிருப்பதுடன், வாஷிங்டன் அதற்கு ஆண்டுக்கு 3 பில்லியன் டாலர் அளவிற்கு நிதியுதவி வழங்குகிறது.

உக்ரேனிய தேசிய பாதுகாப்பு பிரிவுகளைப் பலப்படுத்தவும் பயிற்சியளிக்கவும்—ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 23 மில்லியன் டாலருக்கு மேலதிகமாகஇன்னொரு 19 மில்லியன் டாலரை பெண்டகன் சமீபத்தில் காங்கிரஸிடம் கோரியது. அந்நாட்டின் கிழக்கில் நடக்கும் "பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதலுக்கு" மத்தியில், இந்த இரத்தந்தோய்ந்த நடவடிக்கையை மதிப்பீடு செய்ய அமெரிக்க இராணுவம் "மூலோபாயம் மற்றும் கொள்கைகளுக்கான" ஒரு நிபுணர்கள் குழுவை கடந்த மாதம் கியேவிற்கு அனுப்பியது.

இந்த இரண்டு மோதல்களுமே எதற்காக பெண்டகனுக்கு அதிகளவில் மிக முன்னுரிமையாக உள்ளனவோ அதற்கானஅதாவது நகர்புற யுத்தத்திற்கான அமெரிக்க படைகளை தயாரிப்பதற்கான—நிஜ-வாழ்வு ஆய்வுக்கூடங்களை வழங்குகின்றன.

இஸ்ரேலைப் பொறுத்த வரையில், இதுவொன்றும் புதியதல்ல. 2001இல் அமெரிக்கா இஸ்ரேலிய இராணுவ படைகளுக்கு 266 மில்லியன் டாலர் செலவில் நெகெவ் பாலைவனத்தில் ஒரு நகர்புற யுத்த பயிற்சி மையத்தைக் கட்டமைத்தது. 7.4 சதுரமைலில் அமைக்கப்பட்ட அந்நகரம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க சிறப்பு படைப் பிரிவுகளின் கூட்டு பயிற்சி ஒத்திகைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது, முறையே காசா, மேற்கு கரை மற்றும் லெபனானில், மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அவை கற்றறிந்துள்ள நுட்பங்களைப் பகிர்ந்து கொள்கின்றன.

டொனெட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ்கில், பெண்டகன் இன்னும் பெரும் ஆர்வத்தோடு பார்த்துவரும் ஏதோவொன்றை—அதாவது ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழில்துறைசார் தொழிலாள வர்க்கத்தின் மையமாக விளங்கும் ஒரு நகரத்தினது ஒரு முழு அளவிலான முற்றுகையை—அது மேற்பார்வையிட்டு வருகிறது.

பெரு நகரங்களில் நடக்கும் சண்டை, அமெரிக்க இராணுவ படைகளால் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்ற இராணுவ கோட்பாடுகளுக்கு மைய ஸ்தானத்தில் உள்ளது. இது "பெருநகரங்களும் அமெரிக்க இராணுவமும்: ஒரு சிக்கலான மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்திற்கான தயாரிப்பு" என்ற தலைப்பிலான ஒரு ஆவணத்தில் கூறப்பட்டிருப்பதோடு, அந்த ஆவணம் இராணுவத்தின் மூலோபாய ஆய்வு குழுவால் ஜூனில் வெளியிடப்பட்டு இராணுவ படையின் தலைமை தளபதி ஜெனரல் ரேமாண்ட் ஓடெய்ர்னோவால் ஒப்புதல் வழங்கப்பட்டதாகும்.

“10 மில்லியனுக்கு அதிகமான மக்கள்தொகையுடன் இருக்கும் பெருமகாநகரங்களாக வர்ணிக்கப்படும் பெரிய நகரங்கள், பெரிதும் அநேகமாக, அமெரிக்க இராணுவ தலையீடு அவசியப்படும் எந்தவொரு எதிர்கால நெருக்கடியிலும் முக்கிய மூலோபாய பகுதியாக விளங்கும்," என்று அனுமானித்து, அந்த அறிக்கை, டாகா, பங்களதேஷ்; லாகோஸ், நைஜீரியா; பாங்காங், தாய்லாந்து; மெக்சிகோ நகரம், மெக்சிகோ, ரியோ டி ஜெனிரோ மற்றும் சா பாவ்லோ, பிரேசில் ... நியூ யோர்க் நகரம் ஆகியவற்றில் அதுபோன்ற தலையீடுகளுக்கான தயாரிப்பில் பெண்டகன் "முன்னாய்வுகளையும்" மற்றும் "களப்பணிகளையும்" நடத்தியுள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது.

அமெரிக்க இராணுவ தலையீடுகள் அவசியப்படுமென அது அனுமானிக்கின்ற நிலைமைகளை வர்ணித்து அந்த அறிக்கை பின்வருமாறு எச்சரிக்கிறது: “பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மை அதிகரிக்கையில் ... தேக்கநிலை முன்னொருபோதும் இல்லாத அளவிலான அபிவிருத்தியுடன் அதனோடு இணையும், அதேவேளையில் சேரிகளும் குடிசை நகரங்களும் நவீன உயர்தர வளர்ச்சிகளுக்கு அருகாமையிலேயே வேகமாக விரிவடைகின்றன. இதுவே நகர்புறத்தின் எதிர்காலமாகும்," என்று குறிப்பிடுகிறது.

இத்தகைய தூரதூரத்து நகர்புற பகுதிகளில் மிகமுக்கிய "ஸ்திரமின்மைக்கான உந்துசக்தியாக" “தீவிர வருவாய் ஏற்றத்தாழ்வு" கூடுதலாக வர்ணிக்கப்படுகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உலக முதலாளித்துவ நெருக்கடியால் உருவாக்கப்பட்ட முன்னொருபோதும் இல்லாத சமூக சமத்துவமின்மையின் தவிர்க்கவியலாத விளைவுகளாக அவர்கள் எதை பார்க்கிறார்களோ அந்த மக்கள் கிளர்ச்சிகளை அடக்குவதை நோக்கமாக கொண்ட நேரடியான எதிர்புரட்சிகர தலையீடுகளுக்காக அமெரிக்க இராணுவத்தைத் தயாரிப்பு செய்ய பெண்டகனின் மேலதிகாரிகள் முனைந்து வருகிறார்கள்.

அதன் "முன்னாய்வுகளில்" நியூ யோர்க் நகரை உள்ளடங்கி இருப்பதென்பது, இந்த தயாரிப்புகள் ஏதோ ஆபிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு அல்லது இலத்தீன் அமெரிக்காவின் புரட்சிகர அபிவிருத்திகளை நோக்கி மட்டுமே திருப்பிவிடப்படவில்லை, மாறாக அமெரிக்காவிற்குள்ளேயே ஏற்படும் மிக இக்கட்டான சூழ்நிலைகளை நோக்கியும் திருப்பிவிடப்படுகின்றன என்பதை வெளிப்படையாக எடுத்துக்காட்ட உதவுகிறது.

அமெரிக்காவிற்குள் மக்கள் கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கு அமெரிக்க இராணுவத்தை தயார்செய்யும் இந்த நோக்கம், சமீபத்திய ஆண்டுகளில் பிரதான அமெரிக்க நகரங்களில் நடத்தப்பட்ட ஒரு தொடர்ச்சியான ஆக்ரோஷமான "நகர்புற யுத்த பயிற்சி" ஒத்திகைகளுடனும் பின்தொடரப்பட்டு வந்துள்ளது. அலுவலக கட்டிடங்கள், ஒரு தேவாலயம், ஒரு விளையாட்டு மைதானம், ஒரு சுரங்கவழி நிறுத்தம் மற்றும் ஒரு ரயில் நிலையம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு போலி அமெரிக்க நகரத்துடன், ஒரு அமெரிக்க இராணுவ சமச்சீரற்ற யுத்த குழு பயிற்சி மையமும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அங்கே வெர்ஜீனியாவில் தொடங்கி வைக்கப்பட்டது. “வளாக நடவடிக்கை சூழ்நிலைகளை நிஜமான விதத்தில் அதேமாதிரியாக தருவிக்க மற்றும் தீர்வுகளை அபிவிருத்தி செய்வதற்காக" அந்த 96 மில்லியன் டாலர் மதிப்பிலான மையம் வடிவமைக்கப்பட்டிருந்ததாக இராணுவம் தெரிவித்தது.

பெண்டகனின் தயாரிப்புகள், மக்கள் சேவைக்கான பொலிஸ் படைகள் என்று கூறப்படுவதை இராணுவமயமாக்குவதோடு கை கோர்த்து செல்கின்றன, இந்த படைகள் மைக்கேல் பிரௌனின் பொலிஸ் படுகொலையை எதிர்த்த புனித லூயிஸ் குடியிருப்பு மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதைப் போன்ற நவீன யுத்தமுறையின் கோரப்பற்களோடு ஆயுதபாணியாக்கப்பட்ட SWAT (சிறப்பு ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாயங்கள்) அதிரடி படைகளோடு ஏறத்தாழ உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கின்றன.

காசா மற்றும் உக்ரேனிய தாக்குதல்கள், அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு எச்சரிக்கையை பிரதிநிதித்துவம் செய்கிறது. இந்த யுத்தங்களை ஆதரிக்கின்ற அதே நிதியியல் மற்றும் பெருநிறுவன செல்வந்த மேற்தட்டுக்கள், தொழிலாள வர்க்கத்திடமிருந்து வரும் ஒரு புரட்சிகர சவாலுக்கு எதிராக அதன் அமைப்புமுறையை பாதுகாப்பதற்காக படுபயங்கரமான வன்முறையைப் பயன்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றன.

அதுபோன்றவொரு தவிர்க்க முடியாத நிலைமைக்கு ஆளும் வர்க்கமும் அதன் அதிகாரிகளும் தயாராகி வருகிறார்கள் என்பது தெளிவாக இருக்கிறது. தொழிலாள வர்க்கமும் அதற்கேற்ப தன்னைத்தானே தயாரிப்பு செய்து கொள்ள வேண்டும்.