World Socialist Web Site www.wsws.org |
Political crisis grips Baghdad as US escalates intervention அமெரிக்கா தலையீட்டைத் தீவிரப்படுத்துகையில் பாக்தாத்தில் அரசியல் நெருக்கடி சூழ்கிறது
By Bill
Van Auken சுன்னி இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அதன் வான்வழி தாக்குதல் நடவடிக்கையில் குர்திஷ் பெஷ்மெர்கா போராளிகள் குழுவை ஆயுதபாணியாக்குவதோடு சேர்த்து, ஈராக்கில் ஒபாமா நிர்வாகம் அதன் இராணுவ தலையீட்டை ஆழப்படுத்தி வருவதாக அறிவித்துள்ள நிலையில், ஈராக்கிய தலைநகர் பாக்தாத்தில் பெரிதும் வாஷிங்டனால் உருவாக்கப்பட்ட ஓர் அரசியல் நெருக்கடி சூழ்ந்துவிட்டது. பிரதம மந்திரி நௌரி அல்-மலிக்கி, ஈராக்கிய அரசியலமைப்பின் இறுதிக்கெடுவிற்குள் அவரின் பெயரை பிரதம மந்திரியாக அறிவிக்க தவறியதற்காக குர்திஷ் அரசியல்வாதியான ஈராக்கிய ஜனாதிபதி ஃபவ்ட் மாசும் (Fuad Masum) மீது குற்றஞ்சாட்ட ஞாயிறன்று அண்ணளவாக நள்ளிரவில் ஈராக்கிய அரசு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவர் இதை "அரசியலமைப்பு மற்றும் அரசியல் நிகழ்முறைக்கு எதிரான ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி" என்றுரைத்தார். ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியும், மற்றும் நாடாளுமன்றம் அத்தோடு வெளிநாட்டு தூதரகங்கள் உட்பட பெரும்பாலான அரசு அலுவலகங்கள் இருக்கும் பசுமை மண்டலத்தைச் (Green Zone) சுற்றியும் பலமான பாதுகாப்பு செய்யப்பட்டிருந்த போதினும், அவர் பேசும் போதே கூட, மலிக்கிக்கு விசுவாசமான சிறப்புப்படை பிரிவுகள் பாக்தாத்தில் உள்ள முக்கிய பாலங்களிலும் மற்றும் சாலைசந்திப்புகளிலும் நிறுத்தப்பட்டிருந்தன. ஒரு புதிய பிரதம மந்திரியைத் தேர்ந்தெடுப்பதன் மீதான பேச்சுவார்த்தைகளில் சம்பந்தப்பட்டிருந்த ஒரு முன்னாள் மூத்த குர்திஷ் அதிகாரி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்குத் தெரிவிக்கையில், “படைகள் மற்றும் டாங்கிகளை ஆங்காங்கே நிறுத்துவது போன்ற சந்தேகத்திற்கிடமான பாதுகாப்பு நடவடிக்கைகளை பாக்தாத்தில் நாங்கள் கவனித்தோம், அது தொடர்ந்தால் அதையொரு ஆட்சி கவிழ்ப்பு சதியாக கருத முடியும்," என்றார். “இதுவரையில், நாங்கள் அந்தளவிற்கு செல்லவில்லை. மலிக்கி மட்டும் தான் முறுக்கிக் கொண்டிருக்கிறார்," என்றார். இதற்கு சில மணி நேரங்களிலேயே, நாடாளுமன்றத்தின் இரண்டு துணை சபாநாயகர்களில் ஒருவரும், மலிக்கியின் இஸ்லாமிக் தாவா கட்சியிக்குள் இருந்து வெளியேறிய ஒரு போட்டியாளருமான ஹைதர் அல்-அபாடியை பிரதம மந்திரியாக ஈராக்கிய ஜனாதிபதி தேர்ந்தெடுத்ததோடு, ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்க அவருக்கு 30 நாட்கள் அவகாசமும் அளித்துள்ளார். அந்நடவடிக்கை அமெரிக்க அதிகாரிகளால் வரவேற்கப்பட்டது. மாசசூசெட்ஸின் மார்தாவில் உள்ள வைன்யார்டில் விடுமுறையில் இருக்கும் ஜனாதிபதி பராக் ஒபாமா, அதை ஒரு "நம்பிக்கைக்குரிய முன்னோக்கிய படியாக" குறிப்பிட்டார். ஈராக்கிய அரசிற்குள் அதிகார சண்டை தீர்க்க முடியாத நிலையில் இருக்கின்ற போதினும், ஒபாமா, அவரும் துணை ஜனாதிபதி ஜோ பைடனும் அபாடியை வாழ்த்துவதற்காக மற்றும் அவருக்கு "ஆதரவை உறுதிப்படுத்துவதற்காக" அவரை தொலைபேசியில் அழைத்திருந்ததாக, திங்களன்று மதியம் வெள்ளை மாளிகையைச் சூழ்ந்திருந்த பத்திரிகையாளர் படைக்கு அளித்த ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்தார். “எந்தளவிற்கு விரைவாக முடியுமோ அந்தளவிற்கு விரைவாக உடனடியாக ஒரு புதிய மந்திரிசபையை அமைக்குமாறு" வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார். அல் கொய்தாவின் ஒரு துணை அமைப்பான ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசுக்கு (ISIS) எதிராக கடந்த மூன்று நாட்களாக நடத்தப்பட்ட, ஈராக்கில் வாஷிங்டனின் "மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகள்" என்று அவர் எதை குறிப்பிட்டாரோ அந்த அமெரிக்க வான்வழி தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 2011இன் இறுதியில் அந்நாட்டிலிருந்து அமெரிக்க துருப்புகள் திரும்ப பெறப்பட்டதற்குப் பின்னர் அங்கே இந்த முதல் நேரடி அமெரிக்க இராணுவ தலையீட்டிற்கு அவர் உத்தரவிட்டிருந்தார். இந்த நடவடிக்கைகள் ஈராக்கிய குர்திஷ்தான் தலைநகர் இர்பிலில் உள்ள அமெரிக்க பிரஜைகளைப் பாதுகாப்பதோடு மட்டுப்பட்டு இருக்குமென அவர் குறிப்பிட்டார், அது ஈராக்கிய இராணுவத்திற்கு உதவுவதோடு, ISIS வன்முறையால் வெளியேற நிர்பந்திக்கப்பட்ட பத்தாயிரக் கணக்கான யாசீடி மத சிறுபான்மை உறுப்பினர்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்குகிறது என்றார். சிரியாவில் பஷர் அல்-அசாத்தின் ஆட்சிக்கு எதிரான அமெரிக்க ஆதரவிலான குறுங்குழுவாத யுத்தத்தில் சண்டையிடுவதில் பிரதான சக்தியாக இருந்துவரும் ISIS அமைப்பு ஈராக்கிய பிராந்தியத்தின் ஒரு கால்பகுதிக்கும் அதிகமான பகுதியை கைப்பற்றிய போதிருந்து, குறைந்தபட்சம் ஜூன் மாதத்திலிருந்து, வாஷிங்டன் மலிக்கியை வெளியேற்ற அழுத்தம் அளித்து வந்திருக்கிறது. ஒபாமா நிர்வாக அதிகாரிகளும் மற்றும் அமெரிக்க பெருநிறுவன ஊடகங்களும் தயவுதாட்சண்யமின்றி மலிக்கியையும், ஒரு சமூக உடைவை ஏற்படுத்திய ஈராக்கிய சுன்னி சிறுபான்மையினருக்கு எதிரான அவரது குறுங்குழுவாத கொள்கைகளையும் பலிக்கடாவாக்கி உள்ளன, ஆனால் அந்த சமூக உடைவு சுமார் ஒரு மில்லியன் ஈராக்கிய மக்களின் உயிர்களைப் பறித்த அமெரிக்க யுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பின் எட்டுக்கு அதிகமான ஆண்டுகால நேரடி விளைபொருளாகும். அந்த ஆக்கிரமிப்பின் போது, 2006இல், அப்போதைய அமெரிக்க தூதர் சல்மேய் கலில்ஜாத் அவரை பிரதம மந்திரி பதவிக்கு விசேடமாக முன்மொழிந்த பின்னர், வாஷிங்டனும் மலிக்கியைப் பிரதம மந்திரியாக நியமித்தது—அப்போது அவர் முன்னர் தேசபிரஷ்டம் செய்யப்பட்டு சிறியளவே அறியப்பட்டிருந்ததோடு, தாவா கட்சியில் இளநிலை நிர்வாகியாக இருந்தார். 2010இல், மலிக்கி அரசு மற்றும் நீதித்துறை மீதிருந்த அவரது கட்டுப்பாட்டை முக்கியமாக அவரது எதிர்ப்பாளர் அயாத் அலாவியிடமிருந்து அத்தேர்தலைக் களவாத பயன்படுத்திய போதும் கூட, அமெரிக்க தூதரகம் அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்தது. அயாத் அலாவியின் ஈராக்கியா குழு அப்போது நாடாளுமன்றத்தின் பெரும் இடங்களை வென்றிருந்தது. கடந்த ஏப்ரலில் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தல்களில் மலிக்கியினது சட்டத்தின் ஆட்சி கூட்டணி முதலிடத்தில் வந்திருந்த நிலையில், ஈராக்கிய அரசியலமைப்பின் பாதுகாவலர்களாக காட்டிக்கொள்ளும் அமெரிக்க அதிகாரிகளோ இப்போது மலிக்கிக்கு எதிராக அதேபோன்றவொரு நடவடிக்கையை ஆதரித்து வருகிறார்கள். அப்போதிருந்து, அந்நாட்டின் சீரழிவோடு அதிகரித்துவரும் அமெரிக்க அழுத்தத்தின் கீழ், மலிக்கியின் சொந்த கட்சி மற்றும் அமைப்புகளின் உறுப்பினர்கள் அவரை விட்டோடிவிட்டனர். ஆனால் 2010இல் அவர் எடுத்த நிலைப்பாட்டுக்கு அப்படியே முற்றிலும் எதிர்தரப்பில் இருந்து கொண்டு, நாடாளுமன்றத்தில் நிறைய இடங்களைப் பெற்றுள்ள ஒரு கட்சியின் தலைவராக, ஒரு அரசாங்கத்தை அமைக்க முயற்சிப்பதற்கும் மற்றும் தன்னைத்தானே மூன்றாவது முறையாக அதிகாரத்தில் இருத்திக் கொள்வதற்கும் அவருக்கு உரிமை இருப்பதாக இன்னமும் அவரால் ஒரு அரசியலமைப்பு வாதத்தை செய்ய முடிகிறது. வரவிருக்கின்ற ஒரு அரசாங்கம் "ஈராக்கின் வெவ்வேறு சமூகங்களை ஒற்றுமைப்படுத்தும்" அல்லது "அனைத்து ஈராக்கிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்பதற்கு அபாடியின் நியமனம்—தெளிவாக இது வாஷிங்டனால் ஊக்குவிக்கப்பட்டுள்ளது—சமிக்ஞை காட்டுமென்ற ஒபாமாவின் வாதங்களின் மீது நம்பிக்கை வைக்க அங்கே வெகு குறைந்த காரணங்களே இருக்கின்றன. வரலாற்றுரீதியில் ஈரானுடன் பிணைந்துள்ளதும், 2003இன் அமெரிக்க படையெடுப்பை முழுமையாக ஆதரித்ததும், ஒரு ஷியைட் மத அடிப்படையிலான உருவாக்கமான தாவா கட்சிக்குள் இருக்கும் இடங்களின் மீது அவர்களின் கருத்து வேறுபாடுகளுக்கு வெளியே மலிக்கிக்கும் அவருக்கும் இடையே தோற்றப்பாட்டளவில் அங்கே எந்த வித்தியாசமும் இல்லை. மூன்றாவது முறையாக பதவிக்கு வருவதற்கான மலிக்கியின் முயற்சியை வெளிப்படையாக சுன்னி மற்றும் குர்திஷ் கன்னைகள் மட்டுமே எதிர்க்கவில்லை, மாறாக நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஷியைட் உறுப்பினர்களாலும் எதிர்க்கப்படுகின்ற நிலையில், அவர் களத்தில் இறங்குவது ஒரு நிறைவேறக்கூடிய சாதனையாக இருக்கப்போவதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் ஈராக்கின் இராணுவம், உளவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகங்களின் நேரடி கட்டுப்பாட்டை ஏற்றிருந்த அவர், நாட்டின் பெரும்பகுதியை ISIS கைப்பற்றி இருக்கும் நிலையில், சாத்தியமான அளவிற்கு ஒரு புதிய ஆயுதமேந்திய மோதலைக் கட்டவிழ்த்துவிட்டு, படைகளின் மூலமாக அவரது ஆட்சியை நீட்டிக்க முயற்சிக்கக்கூடும். ஞாயிறன்று அவரது உரையில், மலிக்கி "அரசியலமைப்பை பாதுகாக்குமாறு" நேரடியாக ஈராக்கிய இராணுவத்திற்கு முறையிட்டார். தற்போதைய அமெரிக்க தலையீடு அமெரிக்க பிரஜைகளையும், மற்றும் ஈராக்கிய பாலைவன மணல்குன்றுகளிலிருந்து முற்றுகையிடப்பட்ட யாஜிதிகளையும் காப்பாற்றுவதை நோக்கி திருப்பிவிடப்பட்டிருப்பதாக கூறப்படும் போலி வாதங்களுக்குப் பின்னால், அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த இப்போதைய நெருக்கடியை ஈராக்கில் அதன் கட்டுப்பாட்டை மீண்டும் பலப்படுத்தவும் மற்றும் அதன் சொந்த நலன்களுக்கு பொருந்தும் வகையில் மத்திய கிழக்கின் வரைபடத்தை மாற்றி வரையவும் ஒரு வழிவகையாக சுரண்ட தீர்மானமாக உள்ளது. ஏறக்குறைய 30,000 யாஜிதிகள் சிரியாவிலிருந்து ஈராக்கிய குர்திஸ்தானுக்குள் கடந்து சென்றிருக்கிறார்கள், மற்றும் ஏனையவர்கள் இறக்க விடப்பட்டிருக்கிறார்கள் என்ற நிலையில், அமெரிக்க "மனிதாபிமான" தலையீட்டின் தாக்கம் இன்னும் அதிகமாகவே தெளிவாக தெரிகிறது. ஒரு செய்தியின்படி அவரது 10 குழந்தைகளோடு சின்ஜார் மலையில் சிக்கியிருக்கும் ஒரு யாஜிதியான 55 நிரம்பிய கஹைரி நய்ஃப்புடன் பிரிட்டிஷ் தினசரி கார்டியன் தொலைபேசியில் உரையாடியது. “கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் விமானங்களில் இருந்து எங்களுக்கு மனிதாபிமான உதவிகள் கொடுக்கப்பட்டிருப்பதாக நாங்கள் கேள்விப்படுகிறோம், ஆனால் இந்த கணம் வரையில் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை," என்றார். “எல்லா சர்வதேச வாக்குறுதிகளும் வெறும் பொய்கள், எங்கள் மீதான பேரழிவு குறித்து யாரும் கவலைப்படவில்லை என்று நான் நம்புகிறேன்," என்றார். அமெரிக்க ஏகாதிபத்தியம் மனிதாபிமானத்தைக் கருத்தில் கொண்டுள்ளது என்ற வாதங்கள், ஈராக் மீதான அமெரிக்க யுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பின் போது பதிவு செய்யப்பட்டிருப்பவைகளால் பொய்யாக்கப்படுகிறது, அவற்றில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு பிரித்தாளும் கொள்கை ஒரு குறுங்குழுவாத இரத்த ஆறை ஏற்படுத்தியதோடு, மில்லியன் கணக்கான ஈராக்கியர்கள் இடம் பெயர்வதற்கும் இட்டு சென்றது. இதற்கிடையே, குர்திஷ் பெஷ்மெர்கா போராளிகள் குழுவை வாஷிங்டன் ஆயுதபாணியாக்க தொடங்கி இருப்பதை திங்களன்று அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தினார்கள், எர்பிலுக்கு அருகில் ISIS உடனான அவர்கள் சண்டையில் அவற்றின் துருப்புகளுக்கு அமெரிக்காவின் விமானப்படை நெருக்கமான ஆதரவை வழங்கி வருகிறது. அமெரிக்க அதிகாரிகளின் தகவல்படி, CIAஆல் பெஷ்மெர்காவிற்கு கொண்டு செல்லப்படும் அந்த ஆயுதங்களில் ஏகே-47 தாக்குதல் துப்பாக்கிகளும், ஏனைய படைத்தளவாடங்களும் உள்ளடங்கும். தற்போதைய நெருக்கடியில், பாக்தாத்தில் ஒரு தேச ஒற்றுமைக்கான அரசாங்கத்தை ஊக்குவித்து வருவதாக அமெரிக்கா வாதிடும் அந்த மத்திய அரசாங்கத்தினது முன்னர் கட்டுப்பாட்டில் இருந்த, முக்கிய எண்ணெய் நகரமான கிர்குக் நகரம் உட்பட அப்பிராந்தியத்தையே கைப்பற்றியுள்ள ஒரு பிரிவினைவாத இராணுவ படையைப் பலப்படுத்தி வரும், இந்த கொள்கையை முடிவுக்குக் கொண்டு வர ஒபாமா நிர்வாகத்திடமிருந்து அங்கே எந்தவொரு முயற்சியும் இல்லை. ஈராக்கிய குர்திஷ்தான் தலைநகரான எர்பில் மீதான அமெரிக்காவின் கவலைகள் வெறுமனே அமெரிக்க பிரஜைகளின் கதியைக் குறித்ததல்ல, மாறாக அங்கே எண்ணெய்துறை செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் ExxonMobil, Chevron மற்றும் சிறிய நிறுவனங்கள் உட்பட அமெரிக்க எண்ணெய்துறை பெரு நிறுவனங்களின் இலாப நலன்களைக் குறித்ததாகும். இந்த நடவடிக்கைகள், வெளிநாட்டு பெரு நிறுவனங்களோடு அது மட்டுமே எண்ணைய் பேரங்களை முடிவு செய்யுமென வலியுறுத்துகிற பாக்தாத்தில் உள்ள மத்திய அரசாங்கத்தின் எதிர்ப்போடு நடத்தப்பட்டுள்ளன. தற்போது புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரதம மந்திரி அபாடி, ஜூனில், ISISக்கு எதிரான அமெரிக்க வான்வழி தாக்குதல்களைக் கோரி அறிக்கைகளை வெளியிட்டிருந்தார், அதேவேளையில் அதற்கு வாஷிங்டன் முன்வரவில்லை என்றால் ஈராக்கிய அரசாங்கம் ஒரு ஈரானிய தலையீட்டைக் கோருமென எச்சரித்திருந்தார். அதேநேரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரியோ அந்நாட்டிற்குள் கூர்மையான குறுங்குழுவாத பிளவுகள் நிலவுகின்ற நிலையில் அமெரிக்கா அதுபோன்றவொரு தாக்குதல்களைத் தொடங்குவது "முற்றிலும் மற்றும் முழுவதுமான பொறுப்பற்ற ஒரு நடவடிக்கையாக" இருக்குமென அறிவித்திருந்தார். கடந்த சில நாட்களில் நடத்தப்பட்ட சுமார் 20 தனித்தனி அமெரிக்க விமான தாக்குதல்கள் அந்த மண்ணில் நிலைமையை மாற்றியுள்ளன என்பது மிகத் தெளிவாக உள்ளது. ISIS போராளிகளிடமிருந்து வடக்கிலிருக்கும் க்வெர் மற்றும் மாக்முர் நகரங்களை மீண்டும் கைப்பற்றிவிட்டதாக பெஷ்மெர்கா கூறுகின்ற போதினும், ISIS போராளிகள் பாக்தாத்தின் வடகிழக்கில் உள்ள ஜலாவ்லா நகரை குர்திஷ் போராளிகளிடமிருந்து கைப்பற்றி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. |
|