World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Alarm bells sound louder over danger of financial collapse

நிதியியல் பொறிவின் அபாயம் குறித்து எச்சரிக்கை மணி உரக்க ஒலிக்கிறது

Nick Beams
8 August 2014

Back to screen version

அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் ஏனைய மத்திய வங்கிகளிடம் இருந்து வங்கிகளுக்கும் மற்றும் ஊகவணிகர்களுக்கும்  வெள்ளமென பாய்ச்சப்பட்ட தோற்றப்பாட்டளவில் வட்டியற்ற பணத்தின் விளைவாக உலகளாவிய நிதியியல் அமைப்புமுறை மற்றொரு பேரிடரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற எச்சரிக்கைகள் சர்வதேச அளவில் அதிகரித்து வருகின்றன.

செவ்வாயன்று, "உலகளாவிய பொருளாதாரம் மற்றொரு நெருக்கடிக்கு மிக அருகில் இருக்கிறது" என்ற தலைப்பில் பிரிட்டிஷ் தினசரி Telegraph ஒரு கட்டுரையைப் பிரசுரித்திருந்தது. சந்தைகளின் தற்போதைய அமைதி, உலகளாவிய நிதியியல் அமைப்புமுறையில் கட்டமைந்துவரும் அபாயங்களை மறைத்து வருகிறது என்ற பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் முன்னாள் பொருளியல்வாதிகளால் நடத்தப்படும் நிதியியல் நிறுவனமான Fathom Consulting இன் குறிப்புகளை அக்கட்டுரை மேற்கோளிட்டுக் காட்டியது.

Fathom இன் இயக்குனர் அப்பத்திரிகைக்கு கூறுகையில், ஆபத்து வருமானால் சீனாமுதலில் வெளியேறுவதாக" இருப்பதுடன் அதனது பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் குறைந்துவிட்டால்”, ஏற்கனவே பெருமளவிற்கு முடங்கியிருக்கும் திரும்பிவாராக் கடன்கள் அதிகரிக்கும் என்றார். அவர் இன்றைய சீனாவிற்கும், 2006இல் அமெரிக்காவில் வீட்டுச்சந்தை சரியத் தொடங்கிய போது அதன் நிலைமைக்கும் இடையிலான சமாந்தரங்களை வரைந்தார்

Fathom அளிக்கும் தகவல்படி, சீனப் பொருளாதாரத்தின் திரும்பிவாராக் கடன்கள் இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 சதவீதமாக உள்ளது. அதேவேளையில் சீனப் பொருளாதாரம் "மிதமாக வேகம் குறையுமென்று" அனுமானிக்கும் அந்நிறுவனம், ஆணையங்களால் ஒரு நெருக்கடியைத் தவிர்க்கவியலாதபடிக்கு ஒரு "பெரும் அபாயம்" அங்கே நிலவுகிறது என்று எச்சரித்ததோடு, “அங்கே நிறைய பணம் திரும்புவரமுடியா நிலையில் சுற்றிலும் சிக்கலுக்குள் சிக்கியுள்ளது" என்று குறிப்பிட்டது.   

சீனாவோ, அல்லது வேறு ஏதாவதொரு சந்தையோ, ஒரு புதிய உலகளாவிய நெருக்கடியை எது தூண்டிவிட்டாலும் சரி, கடந்த ஆறு ஆண்டுகளாக பெடரலால் பின்பற்றப்பட்ட கொள்கைகளையே அதற்கு மூலகாரணமாக இருக்கும். செப்டம்பர் 2008இல் லெஹ்மென் பிரதர்ஸ் பொறிவிலிருந்து, நிதியியல் சந்தைகளுக்குள் பெடரல் ஏறக்குறைய 4 ட்ரில்லியன் டாலரைப் பாய்ச்சி, பங்கு மதிப்புகளிலும் ஏனைய நிதியியல் சொத்துக்களிலும் ஒரு குமிழியைக் கொண்டு வந்துள்ளது.

செவ்வாயன்று அமெரிக்க நிதியியல் செய்தி சேனல் CNBC, 25 பில்லியன் டாலர் மதிப்பிலான தனியார் மூலதன நிதிய நிறுவனமான (hedge fund) எலியாட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பண நிர்வாகிகளால் வெளியிடப்பட்ட ஒரு முதலீட்டாளர்களுக்கான கடிதத்திலிருந்து குறிப்புகளை மேற்கோளிட்டுக் காட்டியது. “நிதியியல் சொத்து விலைகள் செயற்கையானவை, சமநிலைமை என்பது தற்காலிகமானது, கொந்தளிப்பு இல்லாமல் இருப்பதென்பது ஒரு வலைப்பொறி போன்றது, ஒட்டுமொத்தமும் வெடிக்கும் போது, அங்கே உண்மையில் இறுதி முடிவு வந்துவிடும்," என்று அந்த கடிதம் குறிப்பிட்டது.   

"பணத்தைப் புழக்கத்தில் விடும்" பெடரலின் கொள்கை, அதாவது பாரியளவில் பணத்தை அச்சடிப்பதும் மற்றும் வெறும் 0.25 சதவீத வட்டி விகிதத்தை அளவுகோலாக அது கொண்டிருப்பதும், இலாபத்திற்கான தேடலில் பணத்தை நிதியியல் சந்தைகளுக்குள் வெள்ளமென பாய்ச்சியுள்ளதோடு, அது சொத்து விலைகளின் ஓர் உயர்விற்கும் மற்றும் பத்திரங்களில் இலாபங்கள் குறைவதற்கும் இட்டுச் சென்றுள்ளது. இவற்றின் விளைவாக, எலியாட் மேனேஜ்மென்ட் குறிப்பிட்டதைப் போல: முதலீட்டாளர்கள் இப்போது குறைந்த மற்றும் மிகக் குறைந்த அளவிலான சொத்துக்களில் நிலவும் இலாபங்களை பெறமுயன்று, அதிக, மிகஅதிகமான அந்நிய கடன்களை கொண்டு அதனை ஈடுகட்டுவதற்காக மிகமிக குறைவான இலாபங்களை பெற்று வருகிறார்கள்."

சந்தை கட்டவிழ தொடங்கிய உடனேயே, அபாயகரமான சொத்துக்களில் தங்கள் பணத்தைப் முதலிட்டிருக்கும் ஊகவணிகர்கள் அவர்களின் நடவடிக்கைகைகளுக்கு தேவையான நிதிக்காக வாங்கிய கடன்களைத் திரும்ப செலுத்த அவற்றை விற்க வேண்டியதிருக்கும் என்பது ஆபத்தாக உள்ளது. அதுபோன்றவொரு விற்பனை பரந்தளவில் இருந்தால், அது குறைந்த அபாயத்தைக் கொண்ட ஏனைய சொத்துக்களையும் இன்னும் அதிகமாக விற்பனை செய்ய தூண்டிவிட்டு, சந்தையைப் பீதியூட்ட இட்டுச் செல்லும்.

தனியார் முதலீட்டு நிதிய நிர்வாகிகள் மற்றும் ஏனைய நிதியியல் சந்தை பங்குதாரர்களோடு இந்த கவலைகள் மட்டுப்பட்டுவிடவில்லை. கடந்த மாதம் பெடரல் ரிசர்வ் வங்கியின் டல்லாஸிற்கான தலைவர் ரிச்சார்ட் பிஷ்ஷர் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகையில், மீண்டும் பெடரலின் கட்டுப்பாட்டு கொள்கையைக் குறித்து கவலைகளை வெளிப்படுத்தினார்.

அவரது பல கருத்துக்கள் ஜூன் மாத இறுதியில் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கான வங்கியால் அதன் ஆண்டறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டதை எதிரொலித்தன, அந்த அறிக்கையில் அவ்வங்கி பொருளாதாரத்திற்கு அடியிலிருக்கும் கூறுகளில் இருந்து சொத்து விலைகள் விலகியிருப்பதைக் குறித்து எச்சரித்திருந்தது. BISஇன் அந்த எச்சரிக்கை, மத்திய வங்கியினது கட்டுப்பாட்டு கொள்கைகளை இறுக்குவதற்கு அழுத்தம் அளிப்பதன் ஒரு பாகமாக இருந்தது.

அதற்கு ஒருசில நாட்களுக்குப் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு கூட்டு விவாத கூட்டத்தில் பெடரல் பெண் தலைவர் ஜெனெட் யெலென் அவர் வழங்கிய ஓர் உரையில் விடையிறுப்பு காட்டினார், அதில் அவர் வட்டிவிகிதத்தை இறுக்குவதானது பெரிதும் வேலைவாய்ப்பின்மைக்கு இட்டுச் செல்லக்கூடும் என்பதால், அதற்கு பதிலாக "விவேகமான பரந்த" நெறிமுறைகளை, அதாவது பெடரலின் நேரடி கண்காணிப்பைக் கொண்டு வருவது நிதியியல் அபாயத்தைக் கையாள்வதற்கு உரிய கருவியாக இருக்குமென வாதிட்டார்.

யெலெனை நேரடியாக விமர்சிக்காத போதினும் பிஷ்ஷர், தடுப்பதற்கு எளிமையான வழி என்று நிரூபணமானதும், ஒரு ஜேர்மன் படையெடுப்பைத் தடுப்பதற்காக என்று கூறப்பட்டதுமான, 1930களில் அபிவிருத்தி செய்யப்பட்ட இழிவார்ந்த பிரெஞ்சு மாஜினோ போக்கை (French Maginot Line), இந்த முழு உடைவையும் தடுப்பதற்கான பரந்த நெறிமுறை கண்காணிப்போடு தொடர்புபடுத்தினார்.  

முன்னொருபோதும் இல்லாதளவிற்கு பெடரலிடம் குவிந்திருக்கும் நிதியியல் சொத்துக்களையும் பிஷ்ஷர் குறிப்பிட்டுக் காட்டினார். அது இப்போது அமெரிக்க கருவூல பத்திரங்களின் பங்குகளில் 40 சதவீதத்தைக் கொண்டிருப்பதோடு, அதேயளவிற்கு அடமானக்கடன் பத்திரங்களையும் (MBS) கொண்டிருக்கிறது, அவை தான் 2008இன் பொறிவின் போது மையத்தில் இருந்தவை.

பெடரல் கொள்கையின் உலகளாவிய தாக்கங்களைச் சுட்டிக்காட்டி பிஷ்ஷர் கூறுகையில், “உலகளாவிய நிதியியல் அமைப்புமுறைக்கான பாதுகாவலரின் நிலைமையைப் பொறுத்த வரையில், இது முன்னொருபோதும் இல்லாத நிலைமையாகும்," என்றார்

பெடரலின் பங்குடைமையில் இருக்கும் பத்திரங்கள் மற்றும் MBSஇன் அதிகரிப்பு எதை குறிக்கிறதென்றால், 2008இல் அதனால் பெருமளவிற்கு செய்ய முடிந்ததைப் போல, எந்தவொரு நிதியியல் நெருக்கடியிலிருந்தும் அது விலகி இருக்க முடியும் என்பதை அல்ல, மாறாக மீண்டும் தலைதூக்கும் எந்தவொரு நெருக்கடியும், மத்திய வங்கியின் அதன் சொந்த நிலைக்கும் தன்மையின் மீதே கேள்வியெழுப்பி, அதுவே ஆழமாக அந்த நெருக்கடிக்கு உடந்தையாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது.

ஒரு புதிய நிதியியல் நெருக்கடியின் அபிவிருத்தியானது நீண்டகால பொருளாதார தாக்கங்களைக் கொண்டிருக்கும். அதேவேளையில் அது எழுப்பக்கூடிய அரசியல் பிரச்சினைகளும் குறைந்த முக்கியத்துவமானவையாக இருக்காது.

2008இன் தொடக்கத்தில், பெடரலும் இதர மத்திய வங்கிகளும், ஆளும் நிதியியல் மேற்தட்டுக்களின் சார்பாக செயல்பட்டு, ட்ரில்லியன் கணக்கான டாலர்களை நிதியியல் அமைப்புகளுக்கும் ஊகவணிகர்களுக்கும் பிணையெடுப்பாக அளித்தன. அவை அப்போதிருந்து தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்களைக் கூர்மையாக குறைத்தும் சமூக சேவைகளை வெட்டியும் அரசு நிதியின் பாரிய செலவுகளுக்கு தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க செய்து வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமாவைக் கொண்டு வருவதை ஆதரித்ததன் மூலமாக அமெரிக்க முதலாளித்துவம் கால அவகாசத்தைப் பெற முனைந்தது, ஆனால் அவை கையாளும் நிதியியல் முறைமைகள் இலாப அமைப்புமுறையின் அடியிலுள்ள நெருக்கடியைத் தீர்க்கப் போவதில்லை என்பதை ஆளும் வர்க்கங்கள் எப்போதுமே அறிந்து வைத்துள்ளன. அடுத்த எந்தவொரு சம்பவத்திலும், கடந்த ஆறு ஆண்டுகளில் கையாளப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் கையாள முடியாது. ஒரு புதிய நெருக்கடி ஆழ்ந்த சமூக மற்றும் வர்க்க போராட்டங்களைக் கொண்டு வரும்.

அதனால் தான் நிதியியல் மேற்தட்டுக்களுக்கு கட்டுப்பாடில்லாத பணத்தை வாரி வழங்கிய நடவடிக்கையோடு பாரிய அரசு ஒடுக்குமுறைக்கான தயாரிப்புகளும் உடன் இணைக்கப்பட்டிருந்தது. NSAஇன் உளவுவேலை மற்றும் உலகெங்கிலும் உள்ள உளவுத்துறை அமைப்புகளோடு இணைந்த நடவடிக்கைகளைக் குறித்த வெளியீடுகள் தெளிவுபடுத்தி இருப்பதைப் போல, அமெரிக்காவிலும் மற்றும் வேறெங்கெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் "அவர்களுக்குள் இருக்கும் எதிரிகளாக" உழைக்கும் மக்களையே கருதுகின்றன.     

அவை தயாரித்து வருகின்ற விடையிறுப்பு வடிவம், 2013இன் பாஸ்டன் தொடர்ஓட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அந்த ஒரு ஒட்டுமொத்த நகரமும் பொலிஸ்-இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததில் சித்திரத்தைப் போல வெளிப்பட்டது. அது மற்றொரு நிதியியல் உருகுதலின் போது தொழிலாள வர்க்கத்தின் விடையிறுப்பைக் கையாளும் முறைமைகளுக்கான ஒரு வெள்ளோட்டமாக இருந்தது.

உள்நாட்டில் அதிகரித்துவரும் அரசு ஒடுக்குமுறை, தீவிரமாக்கப்பட்டு வரும் யுத்த உந்துதலோடு உடன் இணைந்துள்ளது. ஆகஸ்ட் 4இன் WSWS முன்னோக்கு குறிப்பிட்டுக் காட்டியதைப் போல, “இன்று காசாவில் நடத்தப்பட்டு வருகின்ற யுத்த குற்றங்களும், மற்றும் அவை அனைத்து பிரதான சக்திகளாலும் ஆதரிக்கப்பட்டு வருகின்றன என்ற உண்மையும், ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக என்ன தயாரிக்கப்பட்டு வருகிறதோ அதற்கு ஒரு முன்னெச்சரிக்கையாகும்."

மற்றொரு போரில் இருந்தோ அல்லது ஒரு புதிய நிதியியல் பொறிவிலிருந்தோ எழக்கூடிய வர்க்க போராட்டங்களுக்காக ஆளும் மேற்தட்டுக்கள் தங்களைத்தாங்களே தயாரிப்பு செய்து வருவதைப் போலவே, தொழிலாள வர்க்கமும் செய்ய வேண்டும்.

யுத்தம் மற்றும் அரசு ஒடுக்குமுறையின் ஆளும் வர்க்க வேலைத்திட்டத்திற்கு ஒரே பதிலாக, சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர தலைமையாக அனைத்துலகக் குழு மற்றும் அதன் பிரிவுகளைக் கட்டியெழுப்புவதே இத்தகைய தயாரிப்புகளுக்கான மைய அச்சாகும்.