World Socialist Web Site www.wsws.org |
ஆகஸ்ட் 4, 1914 இன் படிப்பினைகள்
By
Ulrich Rippert ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், முதலாம் உலக யுத்தம் தொடங்குவதற்கு முன்னதாக கெய்சரின் இராணுவத்திற்கு ஆதரவாக ஒப்புதல் அளிக்க, ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) வாக்களித்திருந்த அந்த முக்கியத்துவம் மிக்க நாளின் நினைவுதினத்தை இன்றைய தினம் குறிக்கிறது. அந்த யுத்தத்தின் நூற்றாண்டு தினத்திற்காக தயாரிக்கப்பட்ட பல பதிப்புகள், ஆவணப்படங்கள், கண்காட்சிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில் இந்த சம்பவம் வழக்கமாக புறக்கணிக்கப்படுகிறது அல்லது ஏதோ கடந்துபோன ஒன்றாக குறிப்பிடப்படுகிறது, ஆனால் அந்த வாக்களிப்பு பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆகஸ்ட் 4, 1914 இல் ஜேர்மன் பேரரசில் யுத்த ஒப்புதல்களுக்கான தீர்மானத்திற்கு ஆதரவாக நடந்த ஒருமனதான வாக்கெடுப்பைத் தொடர்ந்து, SPD தலைவர் ஹூகோ ஹாஸ்ச அறிவிக்கையில், “நமது தந்தைநாட்டுக்கு அவசியமான நேரத்தில் அதை நாங்கள் கைவிட மாட்டோம்," என்று அறிவித்தார். அங்கே கூடியிருந்த பிரதிநிதிகள் உற்சாகத்தில் வீறிட்டனர். ஜேர்மன் சான்சிலர் தியோபால்ட் வொன் பெத்மான்-ஹோல்வேக் மற்றும் பழமைவாத ஜேர்மன் தேசியவாத பிரதிநிதிகளும், அந்த வாக்கெடுப்பில் ஒரு பெரும்பான்மையைப் பெற முடியுமென நம்பியிருந்தனர், ஆனால் அந்த யுத்த கொள்கைக்கு SPDயிடம் இருந்து ஒருமனதான ஆதரவை எதிர்பார்த்திருக்கவில்லை. தொழிலாளர்களின் தரப்பிலிருந்து யுத்தத்திற்கு வரும் எதிர்ப்பைக் குறித்து அந்த பிரதிநிதிகள் நன்கு அறிந்திருந்தார்கள் என்பதோடு, அஞ்சியிருந்தார்கள். அந்த நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு வெகு சில நாட்களுக்கு முன்னதாக, நூறு ஆயிரக் கணக்கானவர்கள் யுத்தத்திற்கு எதிராக பேர்லினில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். SPD அந்த ஆர்ப்பாட்டத்திற்கான அதன் அழைப்பில், ஜூலை 25இல் எழுதுகையில், “மனிதாபிமானம் மற்றும் கலாச்சாரத்தின் பெயரில், ஜேர்மனியின் வர்க்க-நனவூன்றிய பாட்டாளி வர்க்கம் யுத்தவெறியர்களின் குற்றகரமான நடவடிக்கைகளுக்கு அதன் உறுதியான எதிர்ப்பை பிரகடனப்படுத்துகிறது. சமாதானத்தைக் காக்க ஆஸ்திரிய அரசாங்கத்தின் மீதான அதன் செல்வாக்கை பயன்படுத்தவும், இந்த வெட்ககரமான யுத்தத்தை நிறுத்த முடியாவிட்டால், எந்தவொரு வகையான இராணுவ தலையீட்டிலிருந்தும் விலகியிருக்கவும் ஜேர்மன் அரசாங்கத்திற்கு நாங்கள் உடனடியாக அழைப்புவிடுக்கிறோம். ஏகாதிபத்திய இலாப நலன்களுக்காக ஆஸ்திரிய ஆட்சியாளர்களின் அதிகார சதிவேலைகளுக்கு ஒரு ஜேர்மனிய சிப்பாயின் ஒருதுளி இரத்தம் கூட அர்பணிக்கப்படக்கூடாது," என்று முழங்கியது. இந்த முறையீடு உத்தியோகபூர்வ கட்சிப் போக்கோடு முற்றிலுமாக இணைந்திருந்தது. நான்கு தசாப்தங்களுக்கு மேலாக, SPD சர்வதேச ஐக்கியம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பு கோட்பாடுகளின் அடிப்படையில் தொழிலாளர்களை பயிற்றுவித்திருந்தது. நவம்பர் 1912இல், யுத்தத்தை எதிர்க்க ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு மிக பலம்வாய்ந்த ஒரு முறையீட்டை செய்து, பாசல் சர்வதேச சோசலிச மாநாட்டில் அதுவொரு முக்கிய பாத்திரம் வகித்திருந்தது. அனைத்து பிரதான ஐரோப்பிய சோசலிச கட்சிகளால் கையெழுத்திடப்பட்ட அந்த மாநாட்டு அறிக்கை, “இந்த மாநாடு... தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தின் பலத்தோடு முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தை எதிர்க்க அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது," என்று குறிப்பிட்டது. யுத்த சம்பவத்தின் போது புரட்சிகர விளைவுகள் இருக்குமென "எல்லா தேசங்களின் ஆளும் வர்க்கங்களையும்" அந்த அறிக்கை அச்சுறுத்தியது மற்றும் எச்சரித்தது: “ஒரு உலக யுத்தத்தின் அசுரத்தனம் குறித்த வெறும் சிந்தனையே, தொழிலாள வர்க்கத்திற்குள் கோபத்தையும் சீற்றத்தையும் தூண்டிவிடக்கூடும் என்பதை அரசாங்கங்கள் உணராமல் இருப்பது மடத்தனமானதாகும். முதலாளித்துவத்தின் மேலதிக இலாபங்களுக்காகவும் மற்றும் அரசவம்சத்தின் அபிலாசைகளுக்காக, அல்லது இரகசிய இராஜாங்க உடன்படிக்கைகளை மதிப்பதற்காக ஒருவரையொருவர் சுடுவதற்கு அவர்கள் நிர்பந்திக்கப்பட்டால் பாட்டாளி வர்க்கம் அதை குற்றகரமானதாக கருதும்," என்றது. ஆனால் ஆகஸ்ட் 4, 1914இல் இந்த கொள்கைகளில் இருந்து SPD தலைமை உடைத்துக் கொண்டதோடு, சமூக ஜனநாயக இயக்கத்திற்குள் இருந்த தேசிய சந்தர்ப்பவாதத்தின் செல்வாக்கிற்கு நிபந்தனையின்றி சரணடைந்தது. ரோசா லுக்செம்பேர்க் அந்த முடிவை பகிரங்கமாக கண்டித்தார், அவர் எழுதுகையில்: “அரசியல் கட்சிகள் இருப்பு ஆரம்பித்ததிலிருந்து, வர்க்க போராட்டங்களின் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில், தனது பாதையில் ஐம்பது ஆண்டுகள் இடைவிடாத வளர்ச்சிக்குப் பின்னர், அதிகாரத்துவ நிலையில் முதல்இடத்தை எட்டியதற்குப் பின்னர், அதைச் சுற்றி மில்லியன் கணக்கானவர்களை ஒன்றுதிரட்டியதற்குப் பின்னர், சமூக ஜனநாயகத்தை போல, இந்தளவிற்கு இருபத்தி நான்கு மணிநேரத்திற்குள் முற்றிலும் அவமானகரமான ஓர் அரசியல் சக்தியாக மதிப்பிழந்திருக்கவில்லை," என்றார். லுக்செம்பேர்க் முடிக்கையில், “ஆகஸ்ட் 4, 1914 இல் ஜேர்மன் சமூக ஜனநாயகம் அரசியல்ரீதியாக மதிப்பிழந்துவிட்டது, அந்த நேரத்திலேயே சோசலிச அகிலமும் பொறிந்து போனது," என்று முடித்தார். ஐரோப்பிய மக்களின் மனபாவத்தை மிக உன்னிப்பாக கவனித்து வந்த லியோன் ட்ரொட்ஸ்கி, யுத்தம் வெடித்த ஓராண்டுக்குப் பின்னர் எழுதுகையில், “அந்த யுத்தத்தை நிறுத்தக் கூடிய நிலைமையிலோ அல்லது அதன் ஆரம்ப கட்டங்களில் அதிகாரத்திலிருப்பவர்களுக்கு அதற்கான பொறுப்புகூறும் நிலைமையிலோ அவர்கள் இல்லை என்றாலும் கூட, சோசலிச கட்சிகள் ஆரம்பத்திலிருந்தே உலகந்தழுவிய தாக்குதலுக்கான எந்தவொரு பொறுப்பையும் நிராகரித்திருந்தால்—சர்வதேச சோசலிசத்தின் ஆளுமை எந்தளவிற்கு மகத்தானதாக இருந்திருக்கும், இராணுவவாதம் மற்றும் கவலை மற்றும் அதிகரித்துவந்த தேவையால் ஏமாற்றம் அடைந்திருந்த பெருந்திரளானவர்கள், அதை மக்களின் ஒரு உண்மையான காப்பாளனாக கருதி அதை நோக்கி அதிகளவில் திரும்பி இருப்பார்கள்!... நொருங்கிப்போன அகிலத்தின் ஒவ்வொரு பிரிவுகளும் அதன் கொடிக்கம்பத்தின் முனையைப் பிடித்து இரத்த சேற்றினூடாக இப்போது இழுத்துச் செல்லும் ஒவ்வொரு விடுதலைக்கான வேலைத்திட்டமும், ஒரு சக்திவாய்ந்த யதார்த்தமாக பழைய சமூகத்தின் அனைத்து சக்திகளுக்கு எதிராகவும் சோசலிச பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்திற்குரியதாக மாறியிருக்கும்," என்றார். இரண்டாம் அகிலத்தின் பொறிவு குறித்த அவரது ஆழமான பகுப்பாய்வான, யுத்தமும் அகிலமும் (War and the International) ஆய்வில் ட்ரொட்ஸ்கி தேசிய சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சிக்கு இட்டுச்சென்ற அழுத்தங்களை விவரித்தார். பொருளாதார அபிவிருத்தியில் நடந்ததைப் போலவே, தொழிலாளர் இயக்கத்தின் அபிவிருத்தியும் பிரதானமாக தேசிய அரசுகளின் கட்டமைப்புக்குள் நடந்து வந்திருந்தது. எல்லா வேலைதிட்டங்களும், ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கில் அல்லாமல், ஒரு தேசியவாத முன்னோக்கின் அடிப்படையில் இருந்தன. அவையே முதலாம் உலக யுத்தத்தின் வெடிப்போடு முற்றுமுழுதாக உடைந்துபோயின. “இப்போதைய யுத்தம், தேசிய அரசுகளின் பொறிவுக்கு சமிக்ஞை செய்கிறது," என்று எழுதிய ட்ரொட்ஸ்கி, தொடர்கையில்: “இந்த சகாப்தத்தின் சோசலிஸ்ட் கட்சிகள் இப்போது தேசிய கட்சிகளாக முடிவுக்கு வந்துவிட்டன. அவை அவற்றின் அமைப்புகளினது எல்லா வெவ்வேறு கிளைகளோடும், அவற்றின் அனைத்து நடவடிக்கைகளோடும் மற்றும் அவற்றின் மனப்போக்குகளோடும் தேசிய அரசுகளில் பொதிந்து போய்விட்டன. அவற்றின் மாநாடுகளில் அகமார்ந்த பிரகடனங்களோடு, தேசிய மண்ணில் பெரியளவில் வளர்ந்த நிலையில், ஏகாதிபத்தியம் பழமைப்பட்டுபோன தேசிய வரம்புகளை அழிக்க தொடங்குகையில், அவை பழமைவாத அரசமைப்பை பாதுகாக்க எழுகின்றன. மேலும், தேசிய அரசுகளின் வரலாற்றுப் பொறிவானது தேசிய சோசலிச கட்சிகளையும் அதன் பின்னிழுத்து செல்கின்றன," என்று எழுதினார். SPD எதனிடத்தில் நிபந்தனையின்றி சரணடைந்ததோ அந்த தேசிய சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போல்ஷ்விக்குகளின் போராட்டம், 1917இல் ரஷ்யாவில் வெடித்தெழுந்த புரட்சிகர போராட்டங்களுக்கு அரசியல்ரீதியாக அவர்களைத் தயார் செய்திருந்தது. ரஷ்யாவில் சோசலிசப் புரட்சியானது, பாட்டாளி வர்க்கத்தினது ஓர் உலக சோசலிச புரட்சியில் முதல் அடியாகும் என்ற முன்னோக்கின் அடிப்படையில், ரஷ்யாவில் ஒரு வெற்றிகரமான பாட்டாளி வர்க்கப் புரட்சியில் அவர்கள் தொழிலாள வர்க்கத்திற்குத் தலைமை வகித்தார்கள். ஏற்கனவே 1903இல், லெனின் என்ன செய்ய வேண்டும் என்ற நூலில் வலியுறுத்துகையில், சோசலிச நனவு வர்க்க போராட்டத்திலிருந்து தன்னிச்சையாக எழுதுவதில்லை, மாறாக புரட்சிகரக் கட்சியால், அதாவது உடனடி தொழிற்சாலை போராட்டங்களுக்கு அப்பாற்பட்டு, "வெளியிலிருந்து" தொழிலாள வர்க்கத்திற்குள் உள்கொண்டு செல்லப்பட வேண்டும் என்றார். நடைமுறையில் இருக்கும் சமூக நனவு எப்போதும் முதலாளித்துவ நனவாகும் என்று அவர் விளங்கப்படுத்தினார். ஆகவே தொழிலாளர் இயக்கத்திற்குள் முதலாளித்துவ நனவின் வெளிப்பாடாக உள்ள சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கு எதிராகவும், ஒரு உறுதியான, சளைக்காத மற்றும் சமரசப்படாத அரசியல் போராட்டத்தை எடுப்பதே கட்சியின் பணியாகும். கட்சியின் குணாம்சமும், அதன் வேலை மற்றும் முன்னோக்கின் ஒவ்வொரு அம்சமும் இந்த நோக்கத்தை நோக்கி திருப்பிவிடப்பட்டிருக்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை, தேசிய சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான புரட்சிகர சர்வதேசியவாதத்திற்கான உறுதியான போராட்டம் மூலமாக மட்டுமே ஸ்தாபிக்கப்பட முடியும். இன்றோ அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான மோதலும், உலக யுத்தத்திற்கான அபாயமும் அமெரிக்கா மற்றும் நேட்டோவினது உக்ரேன் குறித்த ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலில் இருந்தும், அத்தோடு சீனாவிற்கு எதிராக திருப்பப்பட்ட வாஷிங்டனின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பில்" இருந்தும் விளைகின்றன, இந்த படிப்பினைகள் பாரிய சமகாலத்திய முக்கியத்துவங்களுக்குள் முக்கியத்துவம் பெறுகின்றன. |
|