தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
European leaders use World War I commemoration to press for new wars ஐரோப்பிய தலைவர்கள் முதலாம் உலக யுத்த நினைவுதின நிகழ்வைப் புதிய யுத்தங்களுக்கு அழுத்தம் அளிக்க பயன்படுத்துகின்றனர்
By
Stefan Steinberg Use this version to print| Send feedback ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள், முதலாம் உலக யுத்தம் வெடித்ததன் 100வது நினைவு தினத்தைக் குறிக்கும் நினைவுதின நிகழ்வுகளை புதிய யுத்தங்களுக்கு அழுத்தம் அளிக்க பயன்படுத்தினர். ஜேர்மனி பெல்ஜியத்தின் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து ஜேர்மனி மீது பிரிட்டிஷ் அரசாங்கம் யுத்த பிரகடனம் செய்த தினத்தை ஆகஸ்ட் 4, 1914 குறிக்கிறது. அதே நாளில் தான், சமூக ஜனநாயக கட்சியின் அனைத்து பிரதிநிதிகள் உட்பட, ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டின் யுத்த முயற்சிக்கு நிதி வழங்க யுத்தக் கடனுக்கு ஒருமனதாக வாக்களித்தார்கள். பின்னர் ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே அடுத்தடுத்து தொடர்ந்த யுத்தத்தில் சுமார் 40 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள். பெல்ஜியன் நகரான லியேஜ் இல் திங்கள் மற்றும் செவ்வாயன்று நடந்த இரண்டு நாள் நினைவுதின நிகழ்வுகளில், முதலாம் உலகப் போரில் ஈடுபட்ட பல நாடுகளில் இருந்தும் அரசர்கள், ஜனாதிபதிகள் மற்றும் இராணுவ தலைவர்கள் உட்பட 83 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இராணுவ செயலர் ஜோன் எம். மெக்ஹக் தலைமையிலான ஒரு பிரதிநிதிகள் குழுவோடு அமெரிக்காவும் அதில் கலந்து கொண்டது. லியேஜை சுற்றியிருந்த பிரதேசம், முதலாம் உலக யுத்தத்தின் சில இரத்தந்தோய்ந்த சண்டைகளை கண்டிருந்தது, அந்த கசப்பான பதுங்குகுழி போர்கால ஆண்டுகளில், 4 மில்லியன் சிப்பாய்கள் உயிரிழந்திருந்ததாக மதிப்பிடப்பட்டது. இந்த பின்புலத்திற்கு முரண்பட்ட விதத்தில் திங்களன்று அவரது முதன்மை உரையை வழங்கிய பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலான்ட் அங்கே கூடியிருந்த ஐரோப்பிய மற்றும் சர்வதேச பிரமுகர்களிடையே அறிவிக்கையில், “இன்றைய நடுநிலைமை நீண்டகாலத்திற்கு உரியதல்ல," என்பதே அந்த யுத்தத்திலிருந்து பெற வேண்டிய முக்கிய படிப்பினையாகும் என அறிவித்தார். உக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் நடந்துவரும் மோதல்களை நேரடியாக குறிப்பிட்ட ஹாலான்ட், பிரெஞ்சு ஏகாதிபத்தியம் புதிய இராணுவ மோதல்களில் ஈடுபட தயாரிப்பு செய்து வருவதை வெளிப்படையாக தெளிவுபடுத்தினார். அவருக்காக தயாரிக்கப்பட்ட உரையிலிருந்து அவர் தொடங்கவில்லை என்று கூறப்படும் பேச்சில், ஹாலான்ட் குறிப்பிடுகையில், “ஐரோப்பாவிலிருந்து வெகுதூரத்தில் அல்லாத ஒரு மக்கள் அவர்களின் உரிமைகள் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்காக சண்டையிட்டு வருகையில் நம்மால் எவ்வாறு நடுநிலைமையோடு இருக்க முடியும்? ஒரு பயணிகள் விமானம் வானில் சுட்டு வீழ்த்தப்படும்போது, அப்பாவி மக்கள் ஈராக்கில் படுகொலை செய்யப்பட்டு வருகின்றபோது, சிரியாவில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்பட்டு வருகின்றபோது, நம்மால் எவ்வாறு நடுநிலைமையோடு இருக்க முடியும்?" என்றார். ஹாலான்ட் தொடர்ந்து கூறுகையில், “காசாவில் ஒரு மரணகதியிலான மோதல் மாதக்கணக்கில் நடந்து கொண்டிருக்கும் போது ... நம்மால் நடுநிலைமையோடு இருக்க முடியாது, நாம் செயல்படுவதற்கான ஒரு கடமைப்பாட்டைக் கொண்டுள்ளோம். ஐரோப்பா, ஐ.நா உடன் சேர்ந்து, நடவடிக்கை எடுப்பதற்கான அதன் பொறுப்புறுதியை எடுக்க வேண்டியுள்ளது," என்றார். புதிய இராணுவ தலையீடுகள் மற்றும் யுத்தங்களுக்கு தயாரிப்பு செய்ய வேண்டியுள்ளது என ஹாலான்ட், முதலாம் உலக யுத்தத்தில் மில்லியன் கணக்கானவர்களின் படுகொலையிலிருந்து முடிவுக்கு வந்திருந்தார்: “நாம் வெறுமனே நினைவுச்சடங்காக இதை செய்ய முடியாது, நாம் நமது பொறுப்புறுதிகளை எடுக்க வேண்டியுள்ளது," என்றார். ஐரோப்பிய ஒன்றியத்தை "கூட்டுறவு மற்றும் முன்னேற்றத்தின் ஒரு முன்மாதிரியாக உருவாக்குவதற்கான ஒரு அற்புத யோசனையாக" புகழ்ந்து சென்ற ஹாலான்ட், அதேவேளையில் "தேசிய சுயநலவாதத்தின்" அபாயம் குறித்தும் எச்சரித்தார். பிரதான சக்திகள் பொறுப்புணர்வை எடுக்க வேண்டுமென்ற ஹாலான்டின் முன்னுரை, லிஜேஜில் ஜேர்மன் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க்கினது சொந்த உரையில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. "அரசியல், இன மற்றும் மத நம்பிக்கைகளைக் கருவியாக்கியதன் விளைவாக இன்று மில்லியன் கணக்கான மக்கள் வன்முறை மற்றும் கொடூரத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாக" கௌவ்க் அறிவித்தார். “ஆகவே, பல நாடுகளின் பிரதிநிதிகளாக இன்று ஒன்றுகூடியுள்ள நாம் வெறுமனே நினைவுகூர்வதற்காக மட்டுமல்ல, மாறாக நாம் அனைவரும் உலகத்திற்கான ஒரு கடமைப்பாட்டையும் கொண்டிருக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்," என்றார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சார்பாக பேசிய இளவரசர் வில்லியமும் உக்ரேனிய சம்பவங்களை மேலெழுப்பினார், அது "ஸ்திரமின்மை நமது கண்டத்தை தொடர்ந்து பின்தொடர்கிறது என்ற உண்மையை நிரூபிப்பதாக" தெரிவித்தார். ஐரோப்பா எங்கிலும் ஜனநாயகம், செல்வ வளமை மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பரவலாக்கவும் பலப்படுத்தவும் மற்றும் உலகெங்கிலும் நமது பகிர்ந்து கொள்ளப்பட்ட மதிப்புகளை ஊக்குவிக்கவும் மூன்று தலைமுறைகளாக" ஒன்றுகூடி வேலை செய்து வருகின்ற, அந்த முன்னாள் ஐரோப்பிய விரோதிகளுக்கு இடையிலான கூட்டுறவைப் புகழ்ந்து சென்றார். ஹாலன்ட், கௌவ்க் மற்றும் இளவரசர் வில்லியமின் கருத்துக்கள் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் முற்றுமுதலான திவால்நிலைமையை நிரூபணம் செய்கின்றன. இன்னும் மிகப் பெரிய உலகளாவிய இராணுவ பேரழிவைக் கட்டவிழ்த்துவிட அச்சுறுத்தும் ஆக்ரோஷ கொள்கைகளுக்கு அழுத்தம் அளிப்பதற்காக, அவர்கள் முதலாம் உலக யுத்த பாரிய படுகொலைகளின் நினைவுதின நிகழ்வைக் கைப்பற்றுகிறார்கள். பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் பின்புலத்தோடு, அமெரிக்கா மற்றும் ஜேர்மனி, உக்ரேனில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக கடந்த பெப்ரவரியில் தீவிர வலது மற்றும் தேசியவாத போராளிகள் குழுக்களை முடுக்கி விட்டதோடு, தற்போது ரஷ்யாவுடன் உக்கிரமடைந்துவரும் இராணுவ மோதலையும் தூண்டிவிட்டு வருகின்றன. கடந்த வாரம் தான், ரஷ்யா மீதான கடுமையான பொருளாதார தடைகளைத் திணிப்பதில் அமெரிக்காவோடு ஐரோப்பிய ஒன்றியமும் சேர்ந்து கொண்டது. இதற்கிடையே, ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்குத் தடைவிதித்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓர் உத்தியோகபூர்வ தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த போதினும், உக்ரேனுக்கு அதுபோன்ற ஆயுத உதவி செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்கிறது. மத்திய கிழக்கில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பதவியிலிருந்து கவிழ்க்க, மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள மிக வலதுசாரி இஸ்லாமிய சக்திகளை ஆதரித்துள்ளன. இவ்வாறு செய்ததன் மூலம், அவை அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் குழப்பத்திற்குள் மூழ்கடித்துள்ளன. கடந்த மாதத்தில், அதே சக்திகள் பாலஸ்தீன மக்களை அச்சுறுத்துவதற்கான இஸ்ரேலிய நடவடிக்கைகளில் அந்த அரசாங்கத்திற்கு இருபொருள்படாத வகையில் அவற்றின் ஆதரவை வழங்கி இருக்கின்றன. பிரான்சில் ஹாலான்ட், காசா யுத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதித்துள்ளார், அதேவேளையில் ஜேர்மனியில் கௌவ்க் காசா பகுதியில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலிய படுகொலைகளை எதிர்த்தவர்களை, "யூத-எதிர்ப்புவாதிகளாக" இழிவுபடுத்தும் பிரச்சாரத்திற்கு தலைமை வகித்துள்ளார். ஹாலான்ட் மற்றும் கௌவ்க் லிஜேஜில் உரையாற்றிய அதேநாளில், காசா பகுதியில் யூத-பாதுகாப்புவாத ஆட்சியினது யுத்தத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,800ஐ கடந்து உயர்ந்தது. இப்போது இரத்தத்தில் ஊறிய கரங்களோடு இந்த ஐரோப்பிய தலைவர்கள், அவர்களின் சொந்த நாடுகளில் அதிகளவில் தூற்றப்படும் நிலையில், ஐரோப்பிய சக்திகள் உலகத்திற்கான இன்னும் மேலதிகமான "பொறுப்புணர்வை" ஏற்க வேண்டுமென அச்சுறுத்தும் விதத்தில் அறிவிக்கின்றனர். ஐரோப்பாவிலும் உலகம் முழுவதிலும் உழைக்கும் மக்களின் மீது புதிய இராணுவ பேரழிவுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்பதையே அவர்களின் கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன. முதலாம் உலக யுத்தத்தை பொறுத்த வரையில் ஒரு "நினைவுச்சடங்கை" நிராகரிப்பதற்கு லிஜேஜில் ஹாலாண்டினது முறையீடின் முக்கியத்துவம் இதுவேயாகும். 21ஆம் நூற்றாண்டின் ஏகாதிபத்திய இரத்தக்களரியை அவர்கள் நியாயப்படுத்த முனைந்துள்ள நிலையில், அவர்கள் 20ஆம் நூற்றாண்டின் ஏகாதிபத்திய குற்றங்களின் வரலாற்று நினைவுகளைச் சுத்தமாக அழிப்பதையும் அவர்களது முக்கிய பணியாக காண்கிறார்கள். |
|
|