World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR European Union’s confrontation with Russia raises tensions in Moldova ரஷ்யா உடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் மோதல் மால்டோவாவில் பதட்டங்களை அதிகரிக்கிறது
By
Markus Salzmann ரஷ்யாவை நோக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் மோதல் போக்கு, மால்டோவாவில் சமூக மற்றும் அரசியல் பதட்டங்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. ஜூன் மாத இறுதியில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒரு கூட்டு உடன்படிக்கையில் மால்டோவன் அரசாங்கம் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ரஷ்யா முந்தைய பொருளாதார சலுகைகளை குறைத்துள்ளதோடு, பொருளாதார தடைகளையும் விதித்தது. மாஸ்கோவிற்கு எதிரான அதன் தாக்குதலில் ஐரோப்பிய ஒன்றியம் மால்டோவாவை ஒருங்கிணைத்துக் கொண்டதற்கான விடையிறுப்பில், ரஷ்ய அரசாங்கம் ஜூலை மாத இறுதியில் மால்டோவா குடியரசிலிருந்து ரஷ்ய கூட்டரசுக்கு பழங்களை இறக்குமதி செய்ய தடைவிதித்தது. மேலும், மால்டோவாவின் வைன் மற்றும் தானியங்களுக்கான சுங்க வரிவிலக்குகளை நீக்கவும் ரஷ்யா திட்டமிடுகிறது. அதன் மிக முக்கிய இருதரப்பு வர்த்தக கூட்டாளியாக ரஷ்யா இருக்கின்ற நிலையில், இவ்விதத்தில் அந்த வறிய குடியரசு வருமானத்திற்கான அதன் முக்கிய ஆதாரத்தை இழந்துவிடும். அந்த முன்னாள் சோவியத் குடியரசு மேற்கொண்டு ஐரோப்பாவிற்குள் எந்தவிதத்தில் ஒருங்கிணைந்தாலும் அதற்கு எதிராக பொருளாதாரரீதியில் அது பதிலடி கொடுக்கும் என்பதை ரஷ்யா பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுக் காட்டி இருந்தது. அப்பிராந்தியத்தில் ரஷ்ய செல்வாக்கை பின்னுக்குத் தள்ளுவதற்காக கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்திடுமாறு பல மாதங்களாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மால்டோவாவிற்கு அழுத்தம் அளித்து வந்திருந்தனர். அமெரிக்காவுடன் சேர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனில் இதேபோன்றவொரு கூட்டு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த பாசிசவாதிகள் தலைமையிலான ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு ஒத்து ஊதி இருந்தது. மாஸ்கோவின் பொருளாதார தடைகள் மால்டோவாவிற்கு மரணகதியிலான விளைவுகளைக் கொண்டிருக்கும். இந்த ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட இழப்புகள் மட்டுமே 80 மில்லியன் யூரோவில் நிற்கின்றன. மால்டோவன் பழங்கள் மற்றும் காய்கறிகளின் இறக்குமதி வரம்புகளை ஐரோப்பிய ஒன்றியம் இரட்டிப்பாக்கும் என்ற அதன் ஒரு அறிவிப்பு, இந்த இழப்புகளை இன்னும் சரிகட்ட தொடங்கவே இல்லை. தாராளவாத ஜனநாயகவாதிகளின் தலைவரும் முன்னாள் பிரதம மந்திரியுமான விலாட் பிலாட் அளித்த தகவலின்படி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆப்பிள்களின் ஏற்றுமதி 80,000 டன்களுக்கு உயர்த்தப்பட உள்ளது. ரஷ்யா, அடுத்த கட்ட நடவடிக்கையாக, புலம்பெயர்ந்த மால்டோவன் தொழிலாளர்களை ரஷ்ய கூட்டரசில் இருந்து வெளியேற்றுமென அறிவித்துள்ளது. மால்டோவன் பிரஜைகளுக்கு வேலை அனுமதிகளை நீடிக்க மாஸ்கோவ் ஏற்கனவே மறுத்துள்ளதாக மால்டோவன் புலம்பெயர்ந்தோர் அமைப்பு வெளிப்படுத்தியது. அவ்வமைப்பின் தகவல்படி, 265,000 மால்டோவன் தொழிலாளர்கள் அவர்களது நாட்டிற்கு அனுப்பப்படக்கூடும். அங்கே 500,000இல் இருந்து 700,000 புலம்பெயர்ந்த மால்டோவன் தொழிலாளர்கள் இருப்பதாக ரஷ்ய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மால்டோவாவில் உள்ள தங்களின் உறவினர்களுக்கு அவர்கள் அனுப்பும் பணம் அந்நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. 2013இல், ரஷ்யாவில் இருந்து அனுப்பப்பட்ட பணம் மால்டோவாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19 சதவீதமாகும் அல்லது சுமார் 1 பில்லியன் யூரோவாகும். அனுப்பப்படும் இந்த பணம் இன்னும் மேற்கொண்டு குறைந்தால், அது மால்டோவன் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளில் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும். கூட்டு உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படும் போது இன்னும் மேற்கொண்டு வாழ்க்கை தரங்கள் வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் பாதுகாக்கப்பட்ட தொழில்துறைகளை மால்டோவா வெளிநாட்டு போட்டிக்கு திறந்துவிடவும், எரிசக்தி மற்றும் போக்குவரத்திற்கான மானியங்களை நீக்கவும் அது மால்டோவா குடியரசை நிர்பந்திக்கிறது. உக்ரேனில், அந்த உடன்பாடு எரிவாயு விலைகளின் கூர்மையான அதிகரிப்புக்கு இட்டுச் சென்றுள்ளது. அதற்கும் கூடுதலாக, அந்நாடு பொதுத்துறை சேவையின் அளவைக் குறைக்க உள்ளது, அந்நடவடிக்கை வேலைவாய்ப்பின்மையை மேற்கொண்டும் அதிகரிக்கும். மால்டோவன் அரசாங்கம் மக்களின் மீது சமூக தாக்குதல்களைத் திணிக்கவும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதன் உறவுகளை ஆழப்படுத்தவும் அந்த உடன்படிக்கையைப் பயன்படுத்தி வருகிறது. தற்போதைய மோதலுக்கு ரஷ்யா தான் முற்றிலும் பொறுப்பாகுமென பிரதம மந்திரி ஐர்யூ இலின்கா (Iruie Leanca) அறிவித்தார். அதற்கு நேரெதிர் விதத்தில், அவர் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒருங்கிணைப்பதில் ஜேர்மனி வகித்த முக்கிய பாத்திரத்தை புகழ்ந்துரைத்தார். மால்டோவாவின் நாடாளுமன்ற அவைத்தலைவர் இகோர் கார்மென் கடந்த வெள்ளியன்று ஷிசினாவில், ஐரோப்பிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற கன்னையினது தலைவர் மான்ஃபிரட் வேபரின் தலைமையில் வந்திருந்த ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்தார். அவர்களின் பேச்சுவார்த்தைகளில், நெருக்கமான கூட்டுறவு குறித்தும் மற்றும் ரஷ்யாவை அந்நாடு சார்ந்திருப்பதைக் கடந்து வருவதைக் குறித்தும் பேசிப்பட்டிருந்தது. ரஷ்ய பொருளாதார தடைகளைச் சமாளிப்பதற்காக அந்த முன்னாள் குடியரசுக்கு கூடுதல் ஐரோப்பிய ஒன்றிய உதவியை வழங்க அங்கேலா மேர்க்கெல் வாக்குறுதி அளித்துள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வெளியுறவு விவகாரங்களின் கமிட்டி தலைவர் எல்மார் புரோக், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இன்னும் நெருக்கமாக பிணைவதற்கு ஆதரவாக பேசினார் என்பதோடு, மால்டோவா ஒரு சிறிய நாடாக இருந்தாலும் கூட, அது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மூலோபாயரீதியில் முக்கியத்துவமானது என்பதைக் குறிப்பிட்டார். இவை அமெரிக்காவிற்கும் பொருந்துகின்றன. மால்டோவா உடனான உறவுகளை மேம்படுத்த அமெரிக்க செனட், ஜூலை 23இல், ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்நாட்டுடனான அதன் பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளைப் பலப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு முறையீட்டையும் அந்த தீர்மானம் உள்ளடக்கி இருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கு சொந்தமான பெருநிறுவனங்களுக்கு மால்டோவாவை ஒரு மலிவு தொழிலாளர் ஆதாரவளமாக மாற்றுவதே அவற்றின் நோக்கமாகும். அங்கே சராசரி ஊதியங்கள் இப்போது மாதத்திற்கு வெறும் 100 யூரோவாக உள்ளன. உக்ரேன் மற்றும் ஜோர்ஜியாவில் இருப்பதைப் போல, மக்களில் பிரதி நபருக்கான குறைந்தபட்ச மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு இருக்கும் ஐரோப்பிய நாட்டின் நிலைமைகள் ஒட்டுமொத்த கண்டம் முழுவதிலும் ஊதிய மட்டங்களைக் குறைக்க பயன்படுத்தப்பட உள்ளன. ஆனால் அனைத்திற்கும் மேலாக, ரஷ்ய செல்வாக்கு பின்னுக்கு இழுக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வுபோக்கில், ஏகாதிபத்திய சக்திகள் உக்ரேனைப் போலவே ஓர் உள்நாட்டு யுத்தத்திற்கான சாத்தியக்கூறுகளைக் கணக்கிட்டு வருகின்றன. மால்டோவா மீது ரஷ்யா பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க வேண்டாமெனவும், மால்டோவன் பிராந்தியத்தின் எந்தவொரு பிரிவினைவாத இயக்கத்திற்குமான ஆதரவைத் தவிர்க்குமாறும் ரஷ்யாவிற்கு எதிரான சிறிதும் மறைக்கப்படாத அச்சுறுத்தல்கள் அமெரிக்க செனட் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டு இருந்தன. 1991இல் சுதந்திரம் அடைந்த மால்டோவா, ரோமானியாவுடன் எல்லையைக் கொண்டிருப்பதோடு, அங்கே சுமார் 3 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். 1992இல் இருந்து, டிரான்ஸ்னிஸ்ட்ரியாவின் பிரிவினைவாத கிழக்கு பிராந்தியத்தோடு ஒரு மோதல் நடந்து வருகிறது, அங்கே ரஷ்ய சிப்பாய்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆக்ரோஷ கொள்கைகள் இதையும் மற்றும் அந்நாட்டில் உள்ள ஏனைய இனவாத மோதல்களையும் தீவிரப்படுத்தக்கூடும். உள்நாட்டு அரசியல் பதட்டங்கள் ஏற்கனவே அதிகரித்து வருகின்றன. டிரான்ஸ்னிஸ்ட்ரியா குடியரசு ஒரு இரண்டாவது கிரிமியாவாக மாறக்கூடுமென சமீபத்திய மாதங்களில் ஊடக செய்திகள் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளன. சர்வதேசளவில் அங்கீகரிக்கப்படாத அந்த பிராந்திய அரசாங்கம், ரஷ்ய கூட்டரசிற்குள் ஏற்றுக் கொள்ளப்படுமென நம்பி வருகிறது, ஆனால் இப்போதைக்கு அது சாத்தியமாகாதென்று தெரிகிறது. மால்டோவாவில் நாடாளுமன்ற தேர்தல்கள் நவம்பரில் நடக்க உள்ளன. எதிர்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி பாரம்பரியமாக மாஸ்கோ தரப்பில் நிற்கிறது, கருத்துக்கணிப்புகளின்படி, ஐரோப்பிய ஒன்றிய சார்பிலான கட்சிகளை விட அது பெருமளவிற்கு முன்னணி எடுக்க உள்ளது. முன்னாள் ஜனாதிபதியும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான விளாடிமிர் வோர்னின், ரஷ்யாவிற்கு விரோதமான ஒரு கொள்கையைக் கண்டனம் செய்திருந்ததோடு, “நம்முடைய கூட்டாளியை நாம் இழக்க முடியாது என்பதோடு அபிவிருத்திக்கான நம்முடைய சாத்தியக்கூறுகளையும் தடுத்துக் கொள்ள முடியாது," என்றவர் அறிவித்தார். அந்த சூழ்நிலையைத் தீவிரப்படுத்த கியேவில் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டிரான்ஸ்னிஸ்ட்ரியா உடனான 450 கிலோமீட்டர் எல்லையோரத்தில் மூன்று மீட்டர் அகலத்தில் மற்றும் இரண்டில் இருந்து மூன்று மீட்டர் ஆழத்தில் பதுங்குகுழி தோண்டுவதை உக்ரேன் தொடங்கி உள்ளதாக, உக்ரேனின் எல்லை பாதுகாப்பு சேவையின் பிராந்திய நிர்வாகத்திற்கான செய்தி தொடர்பாளர் அலெக்சாண்டர் யாகோவென்கோ குறிப்பிட்டார். அந்த எல்லை பாதுகாப்பு சேவையின் சிறப்பு சாதனங்கள் ஒரு நாளின் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன என்பதோடு, அவை வாரத்திற்கு சுமார் 2.5 கிமீ வேலைகளை முடித்து வருவதாக அந்த செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மார்ச் 12இல், எந்தவொரு நியாயப்பாடும் இல்லாமல், டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் நிரந்தர குடியிருப்புகளைக் கொண்ட 17இல் இருந்து 65 வயது வரையிலான ரஷ்ய பிரஜைகள் உக்ரேனிய எல்லையைக் கடந்து செல்வதிலிருந்து தடுக்கப்பட்டனர். டிரான்ஸ்னிஸ்ட்ரியாவின் சுமார் 180,000 மக்கள் ரஷ்ய கடவுச்சீட்டுகளைப் பெற்றிருக்கிறார்கள். இணைய இதழான antikrieg.tv சமீபத்தில் அதன் யூ-டியூப் சேனலில் ஒரு வீடியோவைப் பிரசுரித்திருந்தது, அதில் மால்டோவன் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் விக்டோர் ஷெலின் அந்நாட்டில் நடந்துவரும் அமெரிக்க யுத்த தயாரிப்புகள் மீது கவனத்தைக் குவித்திருந்தார். அவரது கருத்துப்படி, மால்டோவன் இராணுவம் இராணுவ ஒத்திகைகளை நடத்தி வருகின்ற போதினும், அந்நாட்டில் அமெரிக்க சிப்பாய்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். |
|