World Socialist Web Site www.wsws.org |
Gaza, Ukraine and the fraud of “human rights” imperialism காசாவும், உக்ரேனும் மற்றும் "மனித உரிமைகள்" ஏகாதிபத்தியத்தின் மோசடியும்
Bill
Van Auken புதனன்று காசாவில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட அட்டூழியங்கள் கண்களால் பார்க்கக்கூடிய எவருக்குமே, இஸ்ரேல் பொதுமக்களுக்கு எதிராக ஒரு படுபயங்கர தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தி இருந்தது. குழந்தைகளைக் கொன்றும், வீடுகளை நாசமாக்கியும், அந்தவொரு ஒட்டுமொத்த மக்களையும் பழைய கற்கால நிலைமைகளுக்குத் திரும்ப விரட்டுவதன் மூலமாக பாலஸ்தீனிய மக்களின் மனஉறுதியை உடைப்பதே அதன் நோக்கமாகும். இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் (IDF) முதலில் ஐ.நா சபையால் நடத்தப்படும் ஜபாலியா அகதிகள் முகாமைத் தாக்கியது, அங்கே தங்களின் வீடுகளை விட்டு விரட்டப்பட்டு தஞ்சமடைந்திருந்த சுமார் 3,000 மக்களில், குறைந்தபட்சம் 16 பேர் கொல்லப்பட்டதோடு, 125க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். பின்னர், IDFஆல் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தத்தின் இடையிலேயே, ஷிஜையாவின் மக்கள் கூட்டம் நிறைந்த சந்தையில் குண்டுமழை பொழியப்பட்டது, அதில் 17பேர் கொல்லப்பட்டதோடு 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். காசாவிலிருந்து இத்தகைய படுகொலைகளின் கொடூரமான படங்கள் வெளியாகி கொண்டிருந்த போது, செய்தியிதழ்கள் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க ஒபாமா நிர்வாகம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்பட்டது என்ற செய்தியை வெளியிட்டன—ஆனால் அவை இஸ்ரேலுக்கு எதிராக அல்ல, மாறாக ரஷ்யாவிற்கு எதிராக ஆகும். கிழக்கு உக்ரேனில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH17இன் வெடிப்புக்கும், அதிலிருந்து 298 பயணிகள் மற்றும் விமானக்குழுவினரின் மரணங்களுக்கும், மாஸ்கோவையும் தனிப்பட்ட விதத்தில் ஜனாதிபதி விளாடிமீர் புட்டினையும் குற்றஞ்சாட்டி ஓர் ஆத்திரமூட்டும் உலகளாவிய பிரச்சார இயக்கம் நிலவுகின்ற சூழலில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அந்த தண்டனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. புட்டினையும் மற்றும் கிழக்கு உக்ரேனில் உள்ள கியேவ் விரோத போராளிகள் குழுக்களையும் பாரிய படுகொலைகாரர்களாக குற்றஞ்சாட்டுகின்ற அதேவேளையில், கடந்த பெப்ரவரியில் ஒரு பாசிச-தலைமையிலான ஆட்சிகவிழ்ப்பு சதியின் மூலமாக அவர்களால் நிறுவப்பட்ட உக்ரேனிய ஆட்சி அண்டையில் குடியிருப்போர் மீது பீரங்கி குண்டுகளையும் மற்றும் ராக்கெட் குண்டுகளையும் தொடர்ந்து கட்டவிழ்த்துவிட்டு வருகின்ற நிலையில், அப்பிராந்தியத்தில் 1,000த்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதைக் குறித்து வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் ஓர் இறுக்கமான மவுனத்தைக் கடைபிடிக்கிறார்கள். மேற்கத்திய தடைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு இடையே, வாஷிங்டனோ அந்த MH17 விமானம் கியேவ்-விரோத படைகளால் செலுத்தப்பட்ட ஒரு ஏவுகணையால் அல்லது மாஸ்கோவினால் வினியோகிக்கப்பட்ட ஒரு ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதற்கு ஒரு ஆதார துணுக்கையும் வழங்கி இருக்கவில்லை. அதற்கு பதிலாக, அது உக்ரேனிய உளவுத்துறை அமைப்பால் யூ-டியூபில் வெளியிடப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது, அவை ரஷ்யாவிற்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை ஜோடிப்பதற்காக இகழத்தக்கவையாக இருக்கின்றன. மிகப் பரந்த அமெரிக்க உளவுத்துறை எந்திரமோ புட்டின் அரசாங்கத்திற்கு எதிராக குற்றஞ்சாட்ட, எந்தவொரு செயற்கைகோள் புகைபடங்களையோ, இடைமறித்துப் பெறப்பட்ட தகவல் தொடர்புகளையோ அல்லது வேறெதையோ சமர்ப்பிக்கவில்லை. மறுபுறம், ரஷ்ய இராணுவம் வெளியிட்டுள்ள ராடார் மற்றும் ஏனைய உளவுத்துறை தரவுகள் மேற்கத்திய வனப்புரையின் மீது முக்கிய கேள்விகளை எழுப்புகின்றன. கியேவ்-சார்பிலான படைகள் அந்த விமான வெடிப்பு நடந்த அன்றைய தினம் குறைந்தபட்சம் மூன்று விமானம்-தாக்கும் குண்டுவீசிகளை அப்பகுதியில் நிறுத்தி இருந்ததாக அவை எடுத்துக்காட்டுகின்றன, மேலும் வானிலிருந்து வானில் இருப்பதைத் தாக்கும் ஏவுகணைகளை ஏந்திய உக்ரேனிய போர் விமானம் ஒன்றும் அந்த விமான வெடிப்பு நடப்பதற்கு சற்று முன்னதாக, மலேசிய விமானத்தைத் தாக்கக்கூடிய தூரத்தில் பின்தொடர்ந்து பறந்திருந்தது. இந்த பலமான ஆதாரங்களும்—மற்றும் ஒரு பாரபட்சமற்ற விசாரணைக்கு ரஷ்யா அழைப்புவிடுப்பதும்—பெருமளவிற்கு மேற்கத்திய பத்திரிகைகளில் குறிப்பிடப்படாமலேயே போயுள்ளன அல்லது "பிரச்சாரமாக" மற்றும் "சதி திட்ட கோட்பாடுகளாக" புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. போயிங் 777 வெடிப்பு மீதான தெளிவான சூழ்நிலைகள் இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் கூட, இரண்டு விடயங்கள் தெளிவாகின்றன. முதலாவது, அது எந்த பகுதியின் மீது பறந்து சென்றதோ அந்த பகுதி ஒரு யுத்த மண்டலமாக மாற்றப்பட்டது, இதற்காக உக்ரேனின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைப் பதவியிலிருந்து இறக்கிய அமெரிக்க மற்றும் ஜேர்மனிய தலையீடுகளுக்குத் தான் நன்றி கூற வேண்டும். இரண்டாவது, இந்த துயரகரமான சம்பவத்திலிருந்து மாஸ்கோவோ அல்லது பிரிவினைவாதிகள் என்று அழைக்கப்படுபவர்களோ எந்தவித ஆதாயமும் பெறப்போவதில்லை என்ற நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக ஆத்திரமூட்டும் மற்றும் அதிகளவில் அபாயகரமான பிரச்சாரத்திற்கு முன்னர் தயங்கியிருந்த மேற்கத்திய ஐரோப்பிய சக்திகளை அணித்திரட்ட வாஷிங்டனுக்கும் மற்றும் கியேவில் உள்ள அதன் கைப்பாவைகளுக்கும் அது வழிவகைகளை வழங்கியுள்ளது. கிழக்கு உக்ரேனிய சம்பவங்கள் குறித்து அங்கே என்னவெல்லாம் சந்தேகங்கள் இருந்தாலும், காசா மனிதப்படுகொலைகளில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை மட்டுமே MH17 சம்பவத்தில் மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கின்ற நிலையில், அதற்கு பொறுப்பானவர்கள் குறித்து அங்கே ஒன்றுமே பேசப்படுவதில்லை. இஸ்ரேலின் யூத-பாதுகாப்புவாத தலைமை, வீரம் செறிந்த பாலஸ்தீன எதிர்ப்பை ஒடுக்க தவறியுள்ள நிலையில், அது அறநெறிபிறழ்ந்த ஆக்ரோஷத்தோடு, ஒட்டுமொத்த அண்டைஅயலார்களை அழித்தும், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது குண்டுவீசியும், சுமார் 1,400 பேரைக் கொன்றும் (இவர்களில் 90 சதவீதம் பேர் அப்பாவி பொதுமக்கள் ஆவார்கள்) எதிர்வினை காட்டியுள்ளது. இருந்தபோதினும் இந்த விடயத்தில், இதற்காக யாரையும் பொறுப்பாக்க முடியாது என்றும், சமரசத்திற்கு வர மறுக்கும் பாலஸ்தீனியர்களைக் காப்பாற்ற முடியாது என்றும் ஒபாமா நிர்வாகம் வலியுறுத்துகிறது. வெறுப்பூட்டும் விதமாக காசா படுகொலைகளுக்கு ஒபாமா வருத்தங்களைத் தெரிவிக்கின்ற அதேவேளையில், தடையின்றி அந்த படுகொலைகள் தொடர்வதை உறுதிப்படுத்த இஸ்ரேலுக்கு அவசரகால ஆயுத உதவிகளுக்காக கூடுதலாக 100 மில்லியன் டாலர்களை வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்க வாஷிங்டன் வேகமாக நகர்ந்து வருகிறது. இந்த குற்றகரமான மோசடி கொள்கையின் முக்கிய வடிவமைப்பாளர்களில் ஒருவராக ஐ.நா.விற்கான அமெரிக்க தூதர் சமந்தா பாவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் காசா மீதான இஸ்ரேலிய நடவடிக்கைகளைப் புலனாய்வு செய்யவதற்கு ஒரு ஐநா கமிஷனை ஸ்தாபிப்பதை எதிர்த்து வாஷிங்டனின் ஒரேயொரு வாக்கு பதிவு செய்யப்பட்டதை மேற்பார்வையிட்டார். அவர் ஒரு போர்நிறுத்தத்தைத் திணிக்கும் எந்தவொரு கட்டுப்பாட்டு தீர்மானமும் பாதுகாப்பு அவையில் கொண்டு வருவதைத் தடுக்க அயராது உழைத்துள்ளார். மேலும் காசா மீதான கட்டுப்பாடற்ற அறிக்கைகளிலும் கூட, இஸ்ரேல் மீது குற்றம் சாட்டுவது வாஷிங்டனுக்கான ஒரு "சிவப்பு கோடாகும்" என்று ஏனைய கவுன்சில் உறுப்பினர்களை எச்சரித்துள்ளார். "மனிதாபிமான" தலையீடுகளுக்கான அஸ்திவாரமாக, பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு பொறுப்பேற்கும் கொள்கை (R2P) என்றழைக்கப்பட்டதற்கு, ஒபாமா நிர்வாகத்திற்குள் முன்னணி ஆலோசகராக மாறியிருந்த அதே நபர் தான் இந்த திருமதி. பாவர் என்பதை நினைவுகூர வேண்டும். ஏகாதிபத்திய யுத்தத்திற்கான எல்லா நியாயப்பாடுகளுக்கும் பெரும் பாசாங்குத்தனமாக விளங்கும், அந்த “மனித உரிமைகளின்" கொடியை அசைத்துக் கொண்டு, லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க-நேட்டோ யுத்தத்தின் ஒரு முன்னணி ஆலோசகராக பாவர் இருந்தார், அந்த யுத்தம் மௌம்மர் கடாபியை பதவியிலிருந்து இறக்கி படுகொலை செய்து, மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அந்நாட்டை வன்முறையிலும், குழப்பங்களிலும் நிரப்பி விட்டுள்ளது. அதேபோல அவர் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க பினாமி யுத்தத்தின் ஒரு முக்கிய ஊக்குவிப்பாளராகவும் இருந்துள்ளார், அங்கே அவர் 100,000த்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ள ஒரு குறுங்குழுவாத உள்நாட்டு யுத்தத்தைத் தூண்டிவிட உதவியோடு, பின்னர் ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட அந்த பேரழிவை மேலதிக நேரடி தலையீட்டை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்தினார். கடந்த பெப்ரவரியில், நேரடி அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஒரு போலி-சட்டபூர்வ மூடிமறைப்பை வழங்குவதற்காக, பாதுகாப்பு அவையில் “களத்தில் அர்த்தமுள்ள விளைவுகளுக்கான" ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான அவரது கோரிக்கையை ஆதரிக்க செய்ய, அவர் சிரியாவில் "இறந்த மற்றும் இறந்து கொண்டிருக்கும் குழந்தைகளின்" படங்களைக் கையிலெடுத்தார். ஆனால், காசாவில் "இறந்த மற்றும் இறந்து கொண்டிருக்கும் குழந்தைகளின்" படங்கள் அதுபோன்ற விடையிறுப்பைத் தூண்டவில்லை, அனைத்து அறநெறிகளும் வர்க்க அறிநெறிகளாகும் என்பதை மீண்டுமொரு நிரூபித்து, சமாந்தா பாவர் போன்ற ஏகாதிபத்திய நடவடிக்கையாளர்களின் கண்ணீர் நாளங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் சூறையாடலை நியாயப்படுத்தவும், அமெரிக்க நிதியியல் செல்வந்த மேற்தட்டுக்களின் நலன்களை முன்னெடுக்கவும் மட்டுமே செயல்படத் தொடங்குகின்றன. மனித உரிமைகள் என்பதன் வரலாறு பதிவு செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், இன்றைய மனித உரிமைகள் ஏகாதிபத்தியமோ ஒப்பீட்டின் அடிப்படையில் ஒரு புனித காரணத்திற்காக என்பதைப் போல காலனித்துவம் செல்வாக்கு பெற்றிருந்த அந்த காலத்தின் பழைய "வெள்ளையர்களின் பொறுப்பையே" செய்கிறது. இந்தளவிற்கு மிக வேகமாக எதுவும் மதிப்பிழந்திருக்க முடியாது. வாஷிங்டன் அதை பரப்ப முயற்சிக்கின்ற போது, உலக மக்கள் அனைவரும் அதைக் குப்பைத்தொட்டிக்கு உரியதாக உணர்கிறார்கள். எப்படி இருந்தாலும், இது ஓர் ஒட்டுமொத்த போலி-இடது அடுக்கையும் இரத்தத்தில் நனைந்த R2P ஊர்வலத்திற்குள் குதிப்பதிலிருந்து தடுத்துவிடவில்லை. அங்கே பாவர் போன்ற உட்கூறுகளுக்கும் மற்றும் சர்வதேச சோசலிச அமைப்பு போன்ற குழுக்கள் அல்லது மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜூவான் கோல் போன்ற கல்வியாளர்களுக்கும் இடையே நூலிழை அளவிற்கான வேறுபாடே இருக்கிறது, அந்த பேராசியர் அமெரிக்க ஆக்கிரமிப்பை "மனித உரிமைகளைப்" பாதுகாப்பதற்காக என்று விற்பனை செய்ய உதவியதோடு, லிபியா மற்றும் சிரியாவில் சிஐஏ-ஆதரவிலான இஸ்லாமியவாதிகளால் நடத்தப்பட்ட உள்நாட்டு யுத்தங்களையும், அத்தோடு உக்ரேனில் பாசிசவாத-முன்னெடுப்பு ஆட்சிக் கவிழ்ப்பு சதியையும் "புரட்சிகளாக" சித்தரித்தார். காசா மற்றும் உக்ரேன் இரண்டினது சம்பவங்களும் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு மிக அவசரமாக எதை முன்னிறுத்துகிறதோ அந்த யுத்தத்திற்கு எதிரான போராட்டமானது, இத்தகைய சக்திகளின் செல்வாக்கிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான ஒரு போராட்டத்தில் மட்டுமே நடத்தப்பட முடியும், இந்த சக்திகள் ஏகாதிபத்திய நலன்களோடு யாருடைய தனிச்சலுகைகள் பிணைந்துள்ளதோ அந்த ஒரு மேல்மட்ட-மத்தியதட்டு வர்க்க அடுக்கின் அரசியலைப் பிரதிபலிக்கின்றன. |
|