World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

The most important thing a person can do for a movement of the working class

Worldwide support for International May Day Online Rally

தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கத்திற்கு ஒரு மனிதன் செய்யக் கூடிய மிக முக்கியமான காரியம்

இணையவழி சர்வதேச மே தினப் பேரணிக்கு உலகளவிலான ஆதரவு

By our correspondents 
29 April 2014

Back to screen version

இணையத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தால் மே 4 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சர்வதேச மே தின இணையவழி பேரணியில் பங்கேற்க இதுவரை 55 க்கும் அதிகமான நாடுகளில் இருந்து பதிவு செய்திருக்கின்றனர். 

இந்த வரலாற்று முக்கியத்துவமான இணையவழி நிகழ்வானது மே தினத்தின் புரட்சிகர சோசலிச பாரம்பரியங்களை மீட்டெடுக்கவும் ஏகாதிபத்தியப் போர், அசமத்துவம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தை ஒழுங்கமைக்கவுமாய் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரேன் நெருக்கடி தொடர்பாய் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஜேர்மனி தலைமையிலான பிரச்சாரம் தீவிரமடைவதற்கு மத்தியில் இந்தப் பேரணி நடத்தப்படுகிறது. உக்ரேனில் பிப்ரவரியில் நடந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுடனான ஒரு ஆட்சிக்கவிழ்ப்பினைத் தொடர்ந்து கணக்கிட முடியாத பின்விளைவுகளுடனான அணு வல்லமை படைத்த சக்திகளுக்கு இடையிலான ஒரு போரைத் தூண்ட அச்சுறுத்தும் ஆத்திரமூட்டல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சர்வதேச மே தினப் பேரணிக்கான ஆதரவு உலகெங்கிலும் பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் அரசியல் பிரதிநிதிகளது பொறுப்பற்ற நடவடிக்கைகள் மீது பெருகி வரும் கோபத்தைப் பிரதிபலிக்கிறது என்று அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலரான ஜோசப் கிஷோர் தெரிவித்தார். உலக சோசலிச வலைத் தளத்தின் அத்தனை வாசகர்களையும் அத்துடன் எதிர்த்துப் போராடுவதற்கான வழியை எதிர்பார்க்கின்ற அனைவரையும் இந்த முதன்முதல் உலகளாவிய ஆன்லைன் மே தினப் பேரணியில் பங்கேற்க இன்றே பதிவு செய்யுமாறு நாங்கள் அழைக்கிறோம்.

internationalmayday.org இல் பதிவு செய்திருக்கின்ற பலரும் அவர்கள் ஏன் பங்கேற்கத் திட்டமிடுகின்றனர் என்பதற்கான காரணங்களையும் விட்டுச் சென்றிருக்கின்றனர். இந்த இணையவழி பேரணியில் பங்கேற்பது தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கத்திற்கு ஒரு மனிதர் செய்யக் கூடிய மிக முக்கியமான காரியம் என்று மிசௌரி, கான்சாஸ் நகரத்தைச் சேர்ந்த ஸ்டீவ் எழுதுகிறார். இலங்கையின் கண்டி பகுதியைச் சேர்ந்த அசோகா உலக சோசலிச இயக்கத்திற்கான எனது ஆதரவை அளிக்க விரும்புகிறேன் என்று எழுதியுள்ளார்.

முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வந்து ஜனநாயகத்திற்கு தொடக்கமளிக்க விடுக்கப்படும் அழைப்பில் என்னுடைய குரலையும் சேர்க்கவே நான் பங்குபெறுகிறேன் என்று அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் இருந்து ஆண்ட்ரூ எழுதியிருந்தார்.

நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் நகரைச் சேர்ந்த டெரிக் எழுதினார்: மே தினம் என்பது வெறுமனே தொழிலாளர்களது கொண்டாட்டம் அல்ல. அது தொழிலாள வர்க்கத்தின் நனவின் வெளிப்பாடு ஆகும். சமூக சமத்துவத்திற்காய் போராடுவோம்! ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போம்! போர் முனைப்பை நிறுத்து! தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காய் போராடுவோம்!ஆகிய சுலோகங்களின் கீழ் ஒரு சர்வதேசப் பேரணிக்காக உலக சோசலிச வலைத் தளம் செய்கின்ற பிரச்சாரம் வரவிருக்கும் மாபெரும் வர்க்கப் போராட்டங்களுக்கான தயாரிப்பாக  உலகெங்கிலும் இருக்கின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது நனவினை மேல்நோக்கி உயர்த்துவதற்கான ஒரு போராட்டம் ஆகும்.

அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்கள் மே தினப் பேரணி, தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல், மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான போர் அபாயம் ஆகியவை குறித்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் பேசுவதற்காக வார இறுதியின் போது நாடெங்கிலும் பிரச்சாரம் செய்தனர்.

புரூக்ளினின் East Flatbush அண்டை அருகாமைப் பகுதிகளில் பல தொழிலாளர்கள் நின்று பிரச்சாரக் குழுவுடன் பேசினர். ஜேகோபி என்ற ஒரு ஹோட்டல் தொழிலாளி இந்த மே தினப் பேரணியில் பங்கேற்பதற்கு அவரைத் தூண்டுகின்ற நிலைமைகளைக் குறித்து விளக்கினார். வங்கிகள் தொழிலாளர்களிடம் இருந்து பிடுங்குகின்றன, அந்நிலை மோசமடைந்து செல்கிறது. அரசாங்கத்திற்கு மக்களைக் குறித்த அக்கறையே கிடையாது. நான் ஒபாமாவுக்கு வாக்களித்தேன், ஆனால் அவரோ வங்கிகள் மற்றும் கார் நிறுவனங்களுக்குத் தான் பணத்தைக் கொடுத்தார். அவர் விடயங்களை நல்லபடியாக மாற்றுவார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள், ஆனால் அவரோ விடயங்களை மோசமாக்கி விட்டார்.  

ஐரோப்பாவில் விடயங்கள் போருக்கு அண்மையில் இருப்பதாகத் தோன்றுகிறது. அங்கு அமெரிக்காவிற்கு எந்த வேலையும் கிடையாது. உக்ரேனும் ரஷ்யாவும் சேர்ந்து ஏராளமான விடயங்கள் செய்து வந்திருக்கின்றன. அமெரிக்கா தான் அங்கே பிரச்சினையை உருவாக்கியது, அதனை நிறுத்துவதற்கும் அதற்கு விருப்பமில்லை. சிஐஏ தான் அதனைச் செய்து கொண்டிருக்கிறது.

ஓய்வு பெற்ற ஒரு எந்திரவியல் பொறியாளரான சாமுவேல் மோர்கன் தெரிவித்தார்: எனக்குப் போரில் விருப்பம் கிடையாது. அதில் நம்பிக்கையும் கிடையாது. அனைத்து மக்களும் இனங்களும் ஒன்றுபடுவதின் மீதே எனக்கு நம்பிக்கை. அவர் மேலும் கூறினார்: இப்போது பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது. உணவுக் கூப்பன்களில் எனக்கு 200 டாலர் கிடைத்து வந்தது, இப்போது 189 டாலர் மட்டுமே கிடைக்கிறது. செலவுகளைக் குறைத்துக் கொண்டே செல்ல வேண்டியிருக்கிறது. சாப்பாடைக் குறைத்துச் சாப்பிட வேண்டியதாயிருக்கிறது.

பேரணிக்கு பதிவு செய்திருக்கும் சார்ல்ஸ் என்ற ஒரு இளம் தொழிலாளி கூறினார்: என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனித்துக் கொண்டு வருகிறேன். எனக்கு முழு உண்மை தெரியாது என்றாலும், உண்மை ஒன்று இருக்கிறது என்பது தெரியும். அமெரிக்கா ரஷ்யாவை தாக்கவிருக்கிறது. பணக்காரர்கள் தான் இதனைச் செய்கிறார்கள். வெளிப்படையாகச் சொல்வதென்றால், நான் நினைக்கிறேன் அவர்கள் தான் 9/11 ஐ ஏற்பாடு செய்தார்கள், அதேபோன்ற ஒன்றை திரும்பவும் செய்யப் போகிறார்கள் என்று. தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட்டாக வேண்டும், அதனை நாம் தொடங்கியாக வேண்டும். வெடிச் சத்தங்கள் கிளம்பும் வரை காத்திருக்க வேண்டாம், ஏற்கனவே மிகவும் தாமதமாகி விட்டது.

டெட்ராயிட்டின் கிழக்குச் சந்தையில், கலாச்சாரக் கல்விப் பட்டதாரி மாணவியான மெலிசா கூறினார்: மே தினப் பேரணி என்பது அருமையான யோசனை என்று நினைக்கிறேன். உலகில் அமைதி வேண்டுமென்றால் பல்வேறு நாடுகளில் இருந்தும் நாம் இணைந்து வேலை செய்வது அவசியமாக இருக்கிறது.

நான் முழுமையாக போர்-எதிர்ப்பின் பக்கம். போர் மிகவும் அநாவசியமான விடயம் என்றே நான் நினைக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும் பலருக்கு சோசலிசத்தைப் பற்றி அதிகம் பரிச்சயமில்லை என்பதால் அரசாங்கம் அதனை அனுகூலமாக எடுத்துக் கொண்டு அதனைக் கொண்டு, அதிலும் குறிப்பாக அதனை ரஷ்யாவுடன் தொடர்புபடுத்த முயலுவதன் மூலமாக, அவர்களைப் பயமுறுத்த முயலுகிறது. ஒபாமா, சோசலிஸ்ட் என்பதாகக் கூட அவர்கள் பேசுகிறார்கள். அவருக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லை. சொல்லப் போனால் அவர் பெருநிறுவனங்களுக்குத் தான் மிகவும் சாதகமாகச் செயல்படுகிறார். 

இதைக் குறித்து நானும் என் நண்பர்களும் ஏற்கனவே முன்னர் பேசியிருக்கிறோம். தொழிலாள வர்க்கத்தைக் கொண்டாடுவது உண்மையிலேயே முக்கியமான விடயம் என்றே நான் நினைக்கிறேன். வாகன உற்பத்தித் துறையில் வேலை பார்க்கிற தொழிலாள வர்க்கத்தைக் கொண்டு தான் டெட்ராயிட் உருவானது.

சிக்காகோவில் பிரச்சார குழுவினருடன் பேசுகையில் ஜேம்ஸ் அமெரிக்காவில் சமூக சமத்துவமின்மையின் மிக உயர்ந்த மட்டங்கள் நிலவுவது குறித்து பேசினார்: இந்த சமத்துவமின்மை திட்டமிட்டதாக இருக்கிறது. வழிவகையுடனான மனிதர்கள் உச்சியில் செல்வத்தைக் குவித்ததன் விளைவே இது, இதற்கு எதிரான வழிமுறை தொழிலாளர்களிடம் இல்லாதிருக்கிறது.