தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் Partei für Soziale Gleichheit greetings to SEP (Australia) Second National Congress SEP (ஆஸ்திரேலியா) இரண்டாவது தேசிய காங்கிரசுக்கு Partei für Soziale Gleichheit சார்பான வாழ்த்து
By Peter
Schwarz Use this version to print| Send feedback சிட்னியில் 2014 ஏப்ரல் 18 முதல் 21 ஆம் தேதி வரை நடந்த ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் இரண்டாவது தேசிய காங்கிரசுக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலரும் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Partei für Soziale Gleichheit) தேசிய கமிட்டி உறுப்பினருமான பீட்டர் சுவார்ட்ஸ் பின்வரும் வாழ்த்தை அனுப்பியிருந்தார். அன்பான தோழர்களே, உங்களது இரண்டாவது தேசிய காங்கிரசுக்கு Partei für Soziale Gleichheit இன் சார்பாக எனது தோழமை நிறைந்த புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2008 ஆம் ஆண்டிலான உலகளாவிய நிதிப் பொறிவு ஒரு வரலாற்று திருப்புமுனைப் புள்ளியை குறித்து நின்றது என்பதை நாம் வலியுறுத்தினோம். ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர் அது முழுமையான ஊர்ஜிதத்தைப் பெற்றிருக்கிறது. தீர்க்கமுடியாத பொருளாதார முரண்பாடுகளுக்கும் கூர்மையடையும் வர்க்கப் பதட்டங்களுக்கும் முகம் கொடுக்கும் நிலையில், உலகெங்கிலும் ஆளும் வர்க்கம் இராணுவவாதம் மற்றும் எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறது. உங்களது வரைவுத் தீர்மானத்தில் ஆய்வு செய்யப்பட்ட அமெரிக்காவின் “ஆசியா நோக்கிய திருப்பம்” ஒட்டுமொத்த பசிபிக் பிராந்தியத்தையும் ஒரு இராணுவ தீ பிளம்புக்குள் இழுத்து விட அச்சுறுத்துகிறது. இங்கே ஐரோப்பாவிலும் அதே போக்கானது தனது மிகக் கூர்மையான வடிவத்தை ஜேர்மன் இராணுவவாதம் புதுப்பிக்கப்படுவதில் காண்கிறது. ஜனவரியில் உங்களது கோடைப்பள்ளியில் நான் கலந்து கொண்ட சமயத்தில், முதலாம் உலகப் போரின் படுகொலையையும் Gallipoli படுகொலையையும் கொண்டாட்டத்திற்கான ஒரு நினைவாக ஆஸ்திரேலிய முதலாளித்துவ வர்க்கத்தால் எப்படி மாற்ற முடிந்திருந்தது என்பதைப் புரிந்து கொள்ள எனக்குச் சிரமமாயிருந்தது. மூன்று மாதங்களுக்குப் பின்னர் இங்கே ஜேர்மனியில் அதேபோன்றதொரு அபிவிருத்தியை எங்களால் காண முடிந்தது. உக்ரேன் நெருக்கடி அதிகரித்துச் செல்லும் நிலையில் ஊடகங்கள் முழுவீச்சில் போர் பிரச்சாரத்திற்கு நகர்ந்திருந்தன. அவை முதலாம் உலகப் போரின் நன்மையான அம்சங்களை கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றன. 1968 இல் ஜோஸ்கா பிஷ்சரின் அராஜகவாத ”புரட்சிகரப் போராட்ட” குழுவின் சக ஸ்தாபகரும் இப்போது பழமைவாத தினசரியான Die Welt இன் ஆசிரியருமான தோமாஸ் ஷிமித்தின் ஒரு கட்டுரை இதன் மிகச்சிறந்த உதாரணம். முதலாம் உலகப் போர் “ஐரோப்பிய மக்களை ஒன்றுபடுத்திய ஒரு அனுபவம்” ஏனென்றால் “அது அனுபவத்தின் ஒரு பொதுவான தொடுஎல்லையை படைத்துறை வலிமையைக் கொண்டு உருவாக்கியது” என்று அவர் வலியுறுத்துகிறார். ஷிமித் சிடுமூஞ்சித்தனமாய் எழுதுகிறார், “அகழிகளில், பின்னிய கம்பிகளின் இருபக்கத்தில் இருந்த படைவீரர்களுமே ஒரே அனுபவங்களையே உருவாக்கினர்.” ஐரோப்பாவை பொருளாதாரரீதியாக ஒரு முதலாளித்துவ அடிப்படையில் ஐக்கியப்படுத்துவது பரிதாபகரமாக தோல்வி கண்டிருக்கின்ற நிலையில், இப்போது இராணுவவாதமும் போரும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான புதிய நியாயமாக சேவை செய்வதற்கு அவசியப்படுகின்றன. அத்துடன் நாஜிக்களின் குற்றங்களுக்கு மறுநிவாரணமளிக்கவும் அவர்கள் முயற்சி செய்கின்றனர். நாஜி ஆட்சியையும் சோவியத் ஒன்றியத்தின் மீதான அதன் தாக்குதலையும் ஸ்ராலினிசத்தின் குற்றங்களுக்கான ஒரு நியாயமான பதிலிறுப்பாக கூறி நியாயப்படுத்துவதற்கு ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியரான ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி மேற்கொண்ட பிரச்சாரம் இந்த முயற்சியில் ஒரு மையமான பாத்திரத்தை ஆற்றியது. இந்த வரலாற்று கேலிக்கூத்தை பாதுகாக்கும் பொருட்டு, பார்பெரோவ்ஸ்கிக்கு அக்டோபர் புரட்சியை ஸ்ராலினிசத்துடன் அடையாளப்படுத்தவும் லியோன் ட்ரொட்ஸ்கியை கண்டனம் செய்யவும் அவசியமாயிருந்தது. இந்தக் காரணத்திற்காக தான் அவர் ரோபர்ட் சேர்விஸை ஹம்போல்ட் பல்கலைக்கழகத்திற்கு அழைத்தார். நாம் மட்டுமே அவரது பிரச்சாரத்தை சவால் செய்து வெற்றிகரமாக மறுதலித்திருந்தோம். பார்பெரோவ்ஸ்கியின் வரலாற்றுப் பொய்மைப்படுத்தல்கள் ஜேர்மன் இராணுவவாதத்தின் மறுமலர்ச்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகும். உக்ரேன் நெருக்கடி என்பது ஒரு நன்குணர்ந்து செய்த ஆத்திரமூட்டல் ஒன்றின் விளைபொருள் என்பது முன்னெப்போதையும் விட வெளிப்பட்டதாக ஆகி வருகிறது. ஐந்தாண்டு கால தாட்சண்யமற்ற சிக்கன நடவடிக்கைகளுக்கு பின்னர், ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கமானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிதறல் காத்திருப்புக்கும் பெருகிச் செல்லும் வர்க்கப் பதட்டங்களுக்கும் முகம் கொடுக்கின்ற நிலையில், ஐரோப்பா மீதான தனது மேலாதிக்கத்தை திட்டவட்டமாக வெளிப்படுத்துகின்ற பொருட்டு ரஷ்யாவுடனான ஒரு மோதலில் இறங்கிக் கொண்டிருக்கிறது. 1914 மற்றும் 1941 இல் போன்ற அதே வகையில் ஒரு மூர்க்கமான ஏகாதிபத்திய விரிவாக்க பாதையை அது பின்பற்றிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு செய்கையில், அது நாஜி ஒத்துழைப்பாளர்களின் பாரம்பரியங்களைத் தொழுகின்ற வலது-சாரி மற்றும் பாசிச சக்திகளுடன் சேர்ந்து வேலைசெய்கிறது. இந்தப் பிரச்சாரத்துடன் கைகோர்த்து ஊடகங்களும் எந்த விமர்சனரீதியான குரல்களையும் அச்சுறுத்துவதற்கான ஒரு காதைச் செவிடாக்கும் பிரச்சாரத்தை நடத்துகின்றன. ஹிட்லரின் பிரச்சார அமைச்சரான ஜோசப் கோயபல்ஸின் தந்திரங்களை நினைவுபடுத்துகின்ற வகையான பொய்களையும் திரிப்புகளையும் அவை பயன்படுத்துகின்றன. அதற்குக் கிடைக்கும் ஆதரவு எந்த அளவு குறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு இன்னும் வெறி கொண்டதாக அவை எழுதுகின்றன. தவறாக வழிநடத்தும் செய்திகளை அவை தொடர்ந்து தந்து கொண்டிருந்தாலும் கூட, மக்கள் கருத்தானது உறுதிபட இராணுவவாதத்திற்கும் போருக்கும் எதிரானதாகவே இருக்கிறது. ஜேர்மன் அரசாங்கம் எந்த இடையூறுமின்றி தனது போர்த் தயாரிப்புகளை முன்னெடுக்க முடிகிறதென்றால் அதற்கு ஒரேயொரு காரணம் பசுமைக் கட்சி மற்றும் இடது கட்சி உள்ளிட அத்தனை அரசியல் கட்சிகளது முழு ஆதரவும் அதற்கு இருக்கிறது என்பதே ஆகும். நடப்பு அரசாங்கத்தின் இளைய பங்காளியான சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆர்ப்பரித்து உற்சாகமூட்டுபவர்களின் பாத்திரத்தை ஏற்றுள்ளனர். ரஷ்யாவுக்கு எதிராக அவலட்சணமான போர்வெறிக் கூச்சலைக் கொட்டுவதன் மூலமாக முதலாம் உலகப் போருக்கு அவர்கள் ஆதரவளித்ததன் 100வது ஆண்டுதினத்தை அனுசரித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘68 மாணவர் ஆர்ப்பாட்டக்காரர்களாக இருந்து உயர் நடுத்தர வர்க்கத்தின் வசதியான அங்கத்தவர்களாக மாறியிருப்பவர்களின் கட்சியான பசுமைக் கட்சி, ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு முழுமையான ஆதரவை அளிக்கிறது. “மனித உரிமைகள்” மற்றும் “மனிதாபிமானவாதம்” என்ற பேரில் அவர்கள் போர் முரசு கொட்டுகின்றனர், அத்துடன் கியேவில் நடந்த பாசிச ஆட்சிக்கவிழ்ப்பையும் செயலூக்கத்துடன் ஆதரித்திருக்கின்றனர். இடது கட்சியோ ஜேர்மன் இராணுவவாதம் உலக அரங்கில் மீண்டும் தலைதூக்க தயாரிப்பு செய்து கொண்டிருக்கும் சரியான நேரத்தில் தனது சமாதானவாத அங்கியை கழற்றிப் போட்டு விட்டிருக்கிறது. சென்ற வாரத்தில், இடது கட்சியின் நாடாளுமன்றவாத பிரதிநிதிகள், முதன்முறையாக, ஜேர்மன் இராணுவத்தினை வெளிநாட்டு நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். “அரச முதலாளித்துவ” மார்க்ஸ் 21 போக்கு போன்ற இடது கட்சிக்குள்ளாக இருக்கின்ற போலி-இடது நீரோட்டங்கள் எல்லாம், உக்ரேனிலான பாசிசத் தலைமையிலான கவிழ்ப்பை “ஜனநாயக மக்கள் எழுச்சி”யாகப் போற்றுவதன் மூலமாக இதே நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்கின்றன. இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தை, நாங்கள் பிரிட்டிஷ் SEP உடன் இணைந்து நடத்தி வருகின்ற ஐரோப்பிய தேர்தலுக்கான எங்களது பிரச்சாரத்தில், மையப்பொருளாக வைப்பதற்கு நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். ICFI 1953 இல் அது உருவாக்கப்பட்டது முதலாகவே குட்டி முதலாளித்துவ போக்குகளின் அழிவுகரமான செல்வாக்கிற்கு எதிராகப் போராடி வந்திருக்கிறது. ஆனால் எங்களது இயக்கத்திற்கும் பல்வேறு வகையான போலி-இடது குட்டி-முதலாளித்துவ போக்குகளுக்கும் இடையிலான பிளவு என்பது இத்தனை ஆழமாக, இத்தனை வெளிப்பட்டதாக மற்றும் இத்தனை சமரசமற்றதாக இப்போதிருப்பதைப் போல இதற்கு முன் ஒருபோதும் இருந்ததில்லை. எங்களது அரசியல் எதிரிகள் அனைவரும் ஏகாதிபத்திய முகாமிற்குள் முழுமையாக ஒருங்கிணைந்து விட்டிருக்கின்ற வேளையில், உலகில் நாங்கள் மட்டுமே ஒரு சோசலிச முன்னோக்கிற்காகவும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்காகவும் போராடுகிற ஒரேயொரு போக்காய் இருக்கிறோம். இது எங்கள் பிரிவுகளுக்கு முன்னால் பெரும் வாய்ப்புகளையும் பொறுப்புகளையும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. உங்களது காங்கிரஸ் நமது உலக இயக்கத்தின் அபிவிருத்தியில் மேலுமொரு மைல்கல்லாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், இது முழுவெற்றி காண உங்களை வாழ்த்துகிறேன். Partei für Soziale Gleichheit க்காக பீட்டர் சுவார்ட்ஸ் |
|
|