World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா US and Europe push confrontation with Russia toward war அமெரிக்காவும் ஐரோப்பாவும் போரை நோக்கிய மோதலுக்கு ரஷ்யாவை தள்ளுகின்றன
By Stefan Steinberg and Barry Grey அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டுநாடுகளின் தலைவர்கள், வெள்ளிக்கிழமை உக்ரேன் பற்றிய ரஷ்யாவுடனான மோதலை போரின் விளிம்பிற்கு தள்ளினர். மேற்கு ஆதரவு பெற்ற தீவிர தேசியவாத கியேவ் ஆட்சியினது படைகள் பாசிச துணைஇராணுவப்பிரிவுகளுடன் இணைந்து கிழக்கு உக்ரேனில் ரஷ்ய சார்பு எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அணிதிரண்டு நிற்கையிலும், ரஷ்யா அதன் உக்ரைன் எல்லைக்கு அருகே இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்த நிலையில், ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல், பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட், பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் காமெரோன் மற்றும் இத்தாலிய பிரதம மந்திரி மாட்டியோ ரென்ஜி ஆகியோருடன் ஒபாமா ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடைகளைப் பற்றி உடன்பாட்டைப் பெற தொலைபேசி உரையாடல்களை நடத்தினார். பொருளாதாரத் தடைகள் அச்சுறுத்தல் என்பது ரஷ்ய எல்லைகளுக்கு அருகே அமெரிக்க, நேட்டோ இராணுவப் படைகள் இன்னும் அதிகமாக ஈடுபடுத்துவதுடன் இணைந்துள்ளது. அமெரிக்க, நேட்டோ போர் விமானங்கள் பால்டிக் நாடுகளான எஸ்த்தோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியா மீது பறப்பதுடன், அமெரிக்கத் துருப்புக்கள் போலந்திற்கு வந்துள்ளதுடன், மேலதிக அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் கருங்கடலில் நுழைகின்றன. ஒபாமாவும் பிற தலைவர்களும், ஜெனீவாவில் அடையப்பட்ட ஏப்ரல் 17 நான்கு தரப்பு “பதட்ட தணிப்பு” உடன்பாடு குறித்து கியேவ் ஆட்சி “சாதகமான நடவடிக்கைகளை” எடுத்துள்ளது, ஆனால் ரஷ்யா “இதைப் பின்பற்றவில்லை” என்று கூறியுள்ளனர். பிரித்தானியப் பிரதம மந்திரி டேவிட் காமெரோனுடைய அலுவலகம் பின்வருமாறு கூறியது: “இந்த நடைமுறைக்கு ரஷ்யா ஆதரவு கொடுக்காத நிலையில், ஏனைய G7 தலைவர்களுடனும் ஐரோப்பியப் பங்காளிகளுடனும் இணைந்து தற்போதைதைய இலக்கு வைக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் இன்னும் விரிவாக்கத்துடன் செயல்படுத்தப்படவேண்டியதற்கு ஐந்து தலைவர்களும் உடன்பட்டுள்ளனர்.” போலந்தின் ஜனாதிபதி டோனால்ட் ருஸ்க்குடனான கலந்துரையாடலை தொடர்ந்து, ஜேர்மனிய சான்ஸ்லர் மேர்க்கெல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடன் ஒரு தொலைபேசி அழைப்பில் பதட்டங்கள் அதிகரித்தால் இன்னும் பொருளாதார தடைகளை சுமத்த ஜேர்மனி தயார் என்று கூறினார். மேர்க்கெலுடைய செய்தித் தொடர்பாளர்: “எவரும் ஏமாற்றப்பட வேண்டாம். நாங்கள் செயல்படத் தயாராக உள்ளோம்.” எனக்கூறினார். இந்த அறிக்கைகள், வாஷிங்டனும் மற்றும் அதன் ஏகாதிபத்திய நட்பு நாடுகளுடன் ஒழுங்கமைத்த Right Sector இன் இராணுவப்பிரிவின் தலைமையில் ரஷ்யாவுடன் பிணைப்புடைய தேர்ந்தெடுக்கப்பட்ட உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை கடந்த பெப்ருவரி 22 அன்று அகற்றிய பாசிச ஆட்சிசதியினூடாக ரஷ்யாவுடனும் மற்றும் ரஷ்ய சார்பு கிழக்கு உக்ரேனிய மக்கள் மீது மோதலைத் தூண்டுவதில் உள்ள பாசாங்குத்தனம், இழிந்த தன்மை இவற்றைத்தான் எடுத்துக்காட்டுகின்றன. ஆட்சியின் “சாதகமான செயல்களில்” கிழக்கு உக்ரேனில் புதிய ஆட்சியை எதிர்ப்பவர்கள், கட்டிடங்களை ஆக்கிரமிப்பவர்கள், கூடுதல் தன்னாட்சி, சுதந்திரம் அல்லது ரஷ்யக் கூட்டமைப்பில் சேரவேண்டும் எனக்கூறுபவர்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான துருப்புக்கள், கவச வாகனங்கள், தாக்கும் ஹெலிகாப்டர்களை அனுப்பி வைத்துள்ளவை அடங்கும். வியாழன் அன்று ஐந்து எதிர்ப்பாளர்கள் உக்ரேனிய படைகளால் கியேவ் ஆட்சிக்கு எதிர்ப்பினை காட்டும் ஒரு நகரமான ஸ்லாவயனஸ்க்கில் கொல்லப்பட்டனர். இது CIA இன் இயக்குனர் ஜோன் பிரென்னன் அமெரிக்க கைப்பாவை அரசாங்கத்திற்கு ஆலோசனை கூற இரகசியப் பயணத்தை மேற்கொண்டபின் இரு தனித்தனித் தாக்குதல்களில் எதிர்ப்பாளர்கள் குறைந்தப்பட்சம் எட்டு பேராவது கொல்லப்பட்டுள்ளனர் என்பதை காட்டுகிறது. ரஷ்யாவில் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் வெள்ளியன்று கியேவின் கிழக்கில் “பயங்கரவாத எதிர்ப்பு” நடவடிக்கை எனக்கூறப்படுவதை கண்டித்து அங்கு நடக்கும் செயற்பாடுகளை “பெரும் குற்றம்” என்றார். ரஷ்ய சார்பு இராணுவக்குழுக்கள், உக்ரேனிய அரசாங்கம் முதலில் தன் சொந்த தீவிர தேசியவாத எதிர்ப்பாளர்களையும் மற்றும் Right Sector இனரையும் கியேவில் ஆயுதம் களைய வைத்த பின்னர்தான் தங்கள் ஆயுதங்களை கீழே வைப்பதாக கூறியுள்ளனர். ஜெனீவா உடன்பாடு சட்டவிரோத துணை-இராணுவக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும், அவை கலைக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு ஆதரவுடன் கியேவ் Right Sector பாசிசக்குண்டர்களை கிழக்கே உள்ள அரசாங்க எதிர்ப்பு எதிர்பாளர்களுக்கு எதிராக அணிதிரட்டியுள்ளது. வியாழன் அன்று 30 Right Sector ஆதரவாளர்கள், பேஸ்பால் மட்டைகளுடன் மாரிபோல் நகரத்தில் எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியுள்ள கட்டிடங்களை முற்றுகை இட்டனர். Right Sector தலைவர் டிமிட்ரோ யாரோஷ் தான் கிழக்கு உக்ரைனியத் தொழில்நகரமான ட்நெப்ரோபெட்ரோவ்ஸ்க்கிற்கு நகர்ந்துள்ளதாகவும் அங்கு ஆட்சி-எதிர்ப்பு எதிர்ப்பாளர்கள்மீது நேரடித் தாக்குதல்களை நடத்த இருப்பதாகவும் கூறினார். தன்னுடைய படைகளுக்கு அரசாங்க ஆதரவு இருப்பதாகவும் அவர் பெருமை பேசுகிறார், ஜேர்மனிய வெளியீடான Spiegel Online இடம் “எங்கள் படைப்பிரிவுகள் புதிய பிராந்திய பாதுகாப்புப் படைகளின் ஒரு பகுதி ஆகும். உளவுத்துறைப் பிரிவுகள் மற்றும் படைத்தலைமையுடன் நாங்கள் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளோம்” என்றார். எவ்வித விமர்சனமுமின்றி செய்தி ஊடகங்களால் அறிவிக்கப்படும் ஒபாமா நிர்வாகத்தினதும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளினதும் பிரச்சாரங்கள் தற்போதைய நெருக்கடிக்கு ரஷ்ய ஆக்கிரமிப்பும் மற்றும் விரிவாக்கக் கொள்கையும்தான் காரணம் என்று கூறுகின்றன. இது வெள்ளியன்று புதிய உயர்கட்டத்தை அடைந்தது. அப்பொழுது உக்ரேனிய பிரதம மந்திரி ஆர்செனி யாட்சென்யுக் கியேவில் ஒரு அமைச்சரவை கூட்டத்தில் “ரஷ்யா மூன்றாம் உலகப்போரை ஆரம்பிக்க விரும்புகிறது” என்றார். ஆனால் இதற்கான பொறுப்பு முற்றிலும் அமெரிக்காவிடமும் ஜேர்மனியிடமும்தான் உள்ளது. குறிப்பாக வாஷிங்டன் ரஷ்யாவை உக்ரேனில் இராணுவரீதியாக தலையீடு செய்யத் தூண்டுவதில் தீவிரம் காட்டுகிறது. அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ரஷ்ய தன்னலக்குழுக்களின் பாதுகாப்பு நலன்களை பாதுகாக முற்படும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், கிழக்கு உக்ரேனில் கியேவ் அரசாங்கத்தினதும் அதன் பாசிச கூட்டுஅமைப்புக்களின் தாக்குதிலில் இருந்து இனவழி ரஷ்யர்களை பாதுகாக்க தலையிடுவேன் என்று அச்சுறுத்தியுள்ளார். இராணுவ விரிவாக்கத்துடன் கூட, அமெரிக்கா பொருளாதாரப் போரையும் நடத்தி ரஷ்ய பொருளாதாரத்தை வீழ்ச்சியுறச் செய்வதாக அச்சுறுத்துகிறது. வெள்ளியன்று, Standard & Poor’s ரஷ்யாவின் கடன்தர மதிப்பை BBB யில் இருந்து BBB- என மதிப்பற்ற பத்திரத் தகுதிக்கு ஒரு படி மேலே குறைத்துள்ளது. இந்த கடன்தர நிர்ணய நிறுவனம் புதிய பொருளாதாரத் தடைகள் சுமத்தப்பட்டால் தான் ரஷ்யாவை இன்னும் கீழிறக்கும் என்று கூறியுள்ளது. ரஷ்ய மத்திய வங்கி முக்கிய வட்டி விகிதத்தை 7ல் இருந்து 7.5% என உயர்த்தும் கட்டாயத்திற்கு உட்பட்டது. இது ரூபிள் சரிவைத் தடுக்கவும் நாட்டை விட்டு மூலதனம் வெளியேறுவதைத் தடுக்கவுமான முயற்சியாகும். ஏற்கனவே ரூபிள் அமெரிக்க டாலருக்கு எதிராக 9% இதுவரை இந்தாண்டு சரிந்துள்ளதுடன், ரஷ்யப் பங்கு விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன. அமெரிக்க நிதி மந்திரி ஜாக் லூ வெள்ளியன்று மாஸ்கோவிற்கு எதிரான அடுத்த சுற்று பொருளாதாரத் தடைகள் இதுவரை இலக்கு வைத்துச் சுமத்தப்பட்டுள்ள தனிநபர்களுக்கு அப்பால் செல்லும் என்றார். “நம் சர்வதேசப் பங்காளிகளுடன எப்பொழுது அதைச் செய்ய வேண்டும், திறமையுடன் அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று ஒரு வானொலி பேட்டியில் அவர் கூறினார். தளத்தில் ஆட்சி எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து அரசாங்கக் கட்டிடங்களை ஒரு டஜன் நகரங்களில் ஆக்கிரமித்துள்ளனர்; வியாழன் அன்று ஸ்லாவ்யன்ஸ்க் நகரில் அவர்கள் அமைத்துள்ள சோதனைச்சாவடிகள் தாக்குலுக்கு உள்ளாகின. கியேவ் ஆட்சி அது நகரத்தை தடைக்குள்ளாக்கியிருப்பதாக குறிப்பிட்டது. ஒரு உக்ரேனிய இராணுவ ஹெலிகாப்டர் வெள்ளியன்று கிராமடோர்ஸ்க்கிற்கு அருகே உள்ள ஒரு படைத்தளத்தில் வெடித்தது. உக்ரேனிய அதிகாரிகள் ரஷ்ய சார்பு துணைஇராணுவத்தினர்தான் வெடிப்பிற்குக் காரணம் என்று குற்றம் சாட்டினர். பொதுமக்கள் மீதான வன்முறை தென்கிழக்கு உக்ரைனுக்கும் அப்பால் பரவுகின்றதற்கான அடையாளங்கள் உள்ளன. வெள்ளி காலை ஏழு பேர் உக்ரேனிய சார்பு ஒடிசா கருங்கடல் துறைமுகத்திற்கு அருகேயுள்ள சோதனைச்சாவடியில் ஒரு வெடிமருந்துக் கருவி வெடித்தபோது காயமுற்றனர். அங்கு வசிக்கும் மக்கள் மோலோடோவாவின் பிரிந்த பகுதியான டிரான்ஸ்ட்னிஸ்ட்ரியாவிற்கு ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகள் செல்லுவதைத் தடுக்க சோதனைச்சாவடிகளை அமைத்துள்ளனர். அழுத்தங்கள் அதிகரிக்கையில், உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேபோர் பெருகும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ள நிலையில் (அது விரைவாக அமெரிக்கா, நேட்டோவையும் பற்றும்) ரஷ்ய அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்த ஒரு வழியைக் காண முற்படுவது போல் தோன்றுவதுடன், ஏதேனும் ஒரு வகையில் வாஷிங்டனுடன் சமரசமும் காண முற்படுகின்றனர். இன்டர்பாக்ஸ் செய்தி நிறுவனம் வெள்ளியன்று ஒரு தொலைபேசி அழைப்பில் ரஷ்ய ஜெனரல் வாலெரி கெராசிமோவ், கூட்டுப்படைகள் தலைவரான அமெரிக்க தளபதி மார்ட்டின் டெம்ப்சேயை, உக்ரேன் ரஷ்ய எல்லைக்கு அருகே “கணிசமான படைகள் குழுவைக் கொண்டுள்ளது” அவை சதிவேலைகளை செய்வதில் தீவிரமாக உள்ளன என்று எச்சரித்தார். ஆனால், அமெரிக்கப் புறத்தில் இருந்து நெருக்கடியை குறைக்கும் விருப்பத்திற்கான அடையாளம் ஏதும் இல்லை. உக்ரேனிய பிரதம மந்திரி ஆர்செனி யாட்சென்யுக்கினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் ஆகியவை உக்ரேனிய பாதுகாப்புப் படைகள் கட்டமைக்கப்பட நிதிகளைக் கொடுக்கின்றன என்பதை உறுதிப்படுத்தியது. வெள்ளியன்று வாஷிங்டன் போஸ்ட்டில் வந்த பேட்டி ஒன்றில் யான்சென்யுக், “ இராணுவத்தை கட்டமைக்க அமெரிக்கா போதுமான இராணுவ உதவியைக் உங்களுக்கு கொடுக்கிறதா?” என கேட்கப்பட்டதற்கு அவர் பின்வருமாறு விடையிறுத்தார்: “அமெரிக்கா எங்களுக்கு ஆயுதமற்ற ஆதரவை வழங்குகிறது.” இராணுவக் கருவிகளை வாங்க அவருடைய அரசாங்கம் எங்கிருந்து பணம் பெறும்” எனக் கேட்கப்பட்டதற்கு உக்ரேனியப் பிரதம மந்திரி: “அமெரிக்க $1 பில்லியன் கடன் உத்தரவாதம் கொடுத்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் எங்களுக்கு ஆதரவு தருகிறது. ஐரோபிய ஒன்றியத்தில் இருந்தும் நாங்கள் ஆதரவைப் பெறுகிறோம்” என விடையிறுத்தார். அதே பேட்டியில் யாட்சென்யுக் உட்குறிப்பாக அவருடைய அரசாங்கத்திற்கு பரந்த ஆதரவு உள்ளது என்னும் பொருளில் கிழக்கு உக்ரேனில் ஒரு சிறிய பகுதியினர்தான் ரஷ்யாவிறகு ஆதரவு கொடுக்கின்றனர் என்று அறிவித்தார். நேட்டோ கொடுத்துள்ள இரகசிய அறிக்கை முற்றிலும் வேறு கருத்தைக் கூறுகிறது. வெள்ளியன்று Der Spiegel ல் வந்த கட்டுரைப்படி, நேட்டோ அறிக்கை உக்ரேனில் “தோல்வியுற்ற நாடு நிலைமை” ஏற்டலாம், இதனால் அரசாங்கத்தின் “சரிவும்” ஏற்படலாம். இந்த அறிக்கை ஜேர்மனிய வெளியுறவு அலுவலகத்திற்கு கொடுக்கப்பட்டது; உக்ரேன் சிதைவுக்கு கியேவ் ஆட்சிதான் பொறுப்பு என்று கூறுகிறது. அந்த ஆட்சி “வெளிப்படையாக வருங்கால உக்ரேன் அரசாங்க அமைப்பு குறித்த முக்கிய பிரச்சினைகளை தீவிரமாக வெளிப்படுத்த விரும்பவில்லை, அல்லது அதனால் இயலவில்லை.” Spiegel கட்டுரை Inernational Republican Institute மார்ச் இரண்டாம் பகுதியில் நடத்திய ஒரு மதிப்பீடு ஒன்றையும் குறிப்பிடுகிறது. அது, கிழக்கு உக்ரேனிய மக்களில் 48% பேர் அரச தலைவர் அலெக்சாந்தர் ருர்ஷிநோவை “வலுவாக எதிர்க்கின்றனர்”, மூன்று சதவிகித மக்கள்தான் “வலுவான ஆதரவைத் தருகின்றனர்” எனக்கூறுகிறது. மதிப்பீட்டில் கிழக்கு உக்ரேனியர்களில் 59% சதவிகிதத்தினர் ரஷ்யாவிற்கு சாதகமான உணர்வுகளை வெளியிட்டனர், 45% விடையளித்தவர்கள் கியேவ் பாராளுமன்றத்தை நிராகரித்துள்ளனர். |
|