தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா : உக்ரேன் The Ukraine crisis and the political lies of the media உக்ரேன் நெருக்கடியும் ஊடகங்களின் அரசியல் பொய்களும்
By Alex
Lantier Use this version to print| Send feedback உக்ரேன் நெருக்கடி தொடர்பாக ஒபாமா நிர்வாகமும் ஐரோப்பாவில் இருக்கும் அதன் கூட்டாளிகளும் ரஷ்யாவுக்கு எதிரான அவர்களது மிரட்டல்களை அதிகரித்துச் செல்கின்ற வேளையில், அமெரிக்க ஊடகங்கள் பிரச்சார ஊதுகுழலாக தமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை செவ்வனே செய்து வருகின்றன. வெகுஜன ஊடகங்கள் என்றழைக்கப்படுவனவற்றில் ஒரேயொரு விமர்சனரீதியான குரலையும் கூட காண முடியவில்லை. செய்தித்தாள்களும் மற்றும் தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிகளும் பொய்களாலும், ரஷ்ய-விரோதப் பிரச்சாரங்களாலும், மற்றும் நெருக்கடி கட்டுப்பாடு கடந்து செல்லும் சாத்தியத்திற்கு முன்தயாரிக்கின்ற விதமாய் போருக்கான வக்காலத்துகளாலும் நிரம்பியிருக்கின்றன. “ஆவணத்திற்கான செய்தித்தாளான” நியூயோர்க் டைம்ஸ் தான் ஒட்டுமொத்தமாக ஊடகங்களின் பொதுவான தொனியை அமைத்துக் கொடுக்கிறது. உக்ரேனில் 12 செய்தியாளர்கள் இருப்பதாக டைம்ஸ் பெருமையடிக்கிறது, ஆனால் அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கான மிக முக்கியத்துவமான செய்திகள் வழங்கப்படுகின்றதா என்றால் கிடையாது. உலக வரலாற்றில் அணு சக்திகளுக்கு இடையிலான முதல் போராக துரிதமாக வளர்ச்சி காணத்தக்க ஒரு பெரும் மோதல் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் உருவாகியிருப்பதன் அசாதாரண தாக்கங்களை கொண்டு பார்த்தால் இந்த நடத்தை இன்னும் கூடுதல் முக்கியத்துவமானதாக ஆகிறது. கடந்த இரண்டு வாரங்களில், டைம்ஸ் தொடர்ச்சியான இட்டுக்கட்டல்களில் பிடிபட்டிருக்கிறது. சென்ற வாரத்தில், ரஷ்ய சிறப்புப் படைகள் தான் கிழக்கு உக்ரேனில் ஆர்ப்பாட்டங்களுக்கு வழிகாட்டுகின்றன என்பதாகச் சித்தரிக்கிற நோக்கத்துடன் அமெரிக்க வெளியுறவுத் துறையாலும் அமெரிக்க ஆதரவு உக்ரேன் அரசாங்கத்தாலும் இதற்கு கையளிக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் நிரம்பிய ஒரு முகப்புப் பக்க பெரும் கட்டுரை இச்செய்தித்தாளில் இடம்பிடித்திருந்தது. டைம்ஸ் இதழின் இச்செய்தி ஒரு மோசடி என்பது உலக சோசலிச வலைத் தளம் உள்ளிட்ட பல மூலங்களில் விரைவாக அம்பலமாக்கப்பட்டது. ஆதாரங்களாய் காட்டப்பட்ட புகைப்படங்கள் இட்டுக்கட்டப்பட்டவையாகவோ அல்லது புனையப்பட்டவையாகவோ இருந்தன என்பதை அம்பலப்படுத்த இணையத்தில் விரைவுத் தேடலைப் பயன்படுத்துவதே போதுமானதாய் இருந்தது. புகைப்படங்கள் குறித்த “சர்ச்சை” குறித்த அடுத்துவந்த ஒப்புதல்கள் எல்லாம் - சேதாரத்தைக் கட்டுப்படுத்தவும் பூசி மெழுகவும் செய்யப்பட்ட நடவடிக்கைகள் - செய்தித்தாளின் உள் பக்கங்களில் புதைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அம்பலப்படுத்தல்களால் நேர்படுத்தப்படுவதற்கெல்லாம் வாய்ப்புவகையே இல்லை என்பதைப் போல, டைம்ஸ் நாளிதழ் வெளியுறவுத் துறை தனக்கு அளித்த அடுத்த வேலைக்கு விரைவாக நகர்ந்து விட்டது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு இரகசியமாக 40 பில்லியன் டாலர் முதல் 70 பில்லியன் டாலர் வரையான சொத்து இருக்கிறது என்று நேற்று வெளியான முதல்-பக்க கட்டுரை குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகள் “வதந்திகளும் ஊகமும்” கொண்டவை “உறுதியான ஆதாரம் என்று இருப்பவை மிகக் குறைவே” என்பதை ‘டைம்ஸ்’ தனது சொந்தக் கட்டுரையிலேயே ஒப்புக் கொள்கிறது. ஆயினும் கூட ஒரு கிசுகிசுவை பிரதானமான ஒரு “செய்தி”யின் அந்தஸ்துக்கு உயர்த்த முனைவதை அதனால் விட முடியவில்லை. செய்தித்தாளின் பின் பக்கங்களில் வருகின்ற பல்வேறு வருணனையாளர்களின் பத்திகளும் கூட அரச எந்திரத்தின் ஏதேனுமொரு கன்னையின் பொதுவாக மடத்தனமான சிந்தனையோட்டத்தை பிரதிபலிப்பனவாக இருக்கின்றன. ஞாயிறன்று தோமஸ் ஃப்ரீட்மனின் முறை வந்திருந்தது. இவர் அமெரிக்காவின் 2003 ஈராக் போரை ஆதரித்து இழிபுகழ் பெற்றவர் என்பதோடு “எண்ணெய்க்காக ஒரு போர் நடப்பதில்” தனக்கு எந்தப் பிரச்சினையும் தோன்றவில்லை என்று தம்பட்டமடித்தவர். உக்ரேன் நெருக்கடியை டைம்ஸ் வாசகர்களுக்கு விளக்கும் நோக்கத்துடன் ஃப்ரீட்மன் எழுதுகிறார்: “எளிமையாகச் சொன்னால், பெரும்பான்மையான உக்ரேன்வாசிகள் தங்கள் மீது திணிக்கப்பட்ட ஆட்டத்தைக் கண்டு வெறியான கோபம் கொண்டனர், ரஷ்யா ஒரு பெரும் சக்தியாக தொடர்ந்து உணர்வதற்கு வழி செய்யும் வகையில் புட்டினின் செல்வாக்கு வட்டத்தில் இவர்களும் ஒரு துக்கடா பாத்திரங்களாக சேவை செய்ய வேண்டியிருந்தது: மைதான் சதுக்கத்தில் நடந்த கீழிருந்தான ஒரு புரட்சிக்குப் பிறகு உக்ரேனியர்கள் தமது சொந்த செல்வாக்கு வட்டத்தை, ஐரோப்பிய ஒன்றியத்தின் பாகமாவதற்கான விருப்பத்தை, திட்டவட்டமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்”. தனிமனித சுதந்திரத்திற்கான போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதாக ஃப்ரீட்மன் போற்றுகின்ற கியேவில் இருக்கும் ஒரு அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படாத கைப்பாவை ஆட்சி என்பதையோ, அவர் கூறும் “கீழிருந்தான புரட்சி”க்கு அமெரிக்கா மற்றும் ஜேர்மனியுடன் சேர்ந்து வேலை செய்த பாசிஸ்டுகள் தான் தலைமை கொடுத்தனர் என்பதையோ அவர் குறிப்பிடவில்லை. அமெரிக்காவினதில் தொடங்கி வரலாறு, சமூக மற்றும் அரசியல் சக்திகள், புவியரசியல் நிகழ்ச்சிநிரல்கள் ஆகியவை குறித்த ஒரு சின்ன குறிப்பும் கூட இல்லை. அதற்குப் பதிலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் அழிக்கப்படுவதற்கு குறிபார்க்கப்படுகின்ற இன்னுமொரு வெளிநாட்டுத் தலைவர் சாத்தானின் மறுஅவதாரமாக சித்தரிக்கப்படுவதையே ஒருவர் பார்க்க முடிகிறது. ஜாரிசத்தைத் தூக்கியெறிந்து ஒடுக்கப்பட்ட பரந்த மக்களின் விடுதலைக்கான கதவைத் திறந்த 1917 போல்ஷிவிக் புரட்சியில் இருந்து எழுந்த ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான சக்திவாய்ந்த பிணைப்பு; இரண்டாம் உலகப் போரில் ஜேர்மன் பாசிசத்தின் மரணப் பிடியில் இருந்து உக்ரேனை விடுவிப்பதற்கு செம்படை நடத்திய தீரமிக்க போராட்டம்; அக்டோபர் புரட்சியின் ஸ்ராலினிச காட்டிக்கொடுப்பில் உச்சகட்ட நடவடிக்கையாக இருந்த சோவியத் ஒன்றியக் கலைப்பின் பேரழிவான பின்விளைவுகள் - இந்தப் பிரச்சினைகள் எல்லாம் இந்த அறியாமை கொண்ட, மெத்தனமான, ஆனால் அமெரிக்க ஆளும் வர்க்கத்திடம் பெரும் ஊதியம் பெறுகின்ற எடுபிடியைப் பொறுத்தவரை முடிந்துபோன கதையாக இருக்கின்றன. டைம்ஸ் நிர்ணயம் தான் அத்தனை பெரிய செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் பின்பற்றப்படுகிறது. அமெரிக்க ஊடகங்களில் வரும் செய்தியைப் பின்பற்றி வரும் ஒருவருக்கு கியேவின் புதிய அரசாங்கம் 2012 இல் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் கண்டனத்திற்கு ஆளான யூத-விரோத Svoboda கட்சியைச் சேர்ந்த மனிதர்களால் நிரப்பப்பட்டிருக்கிறது என்பது தெரியாமலேயே போய்விட வாய்ப்புண்டு. அதேபோல நாஜி ஒத்துழைப்பாளரான ஸ்டீபன் பன்டேராவை (இவரது உக்ரேனிய தேசியவாதிகள் அமைப்பு (Organization of Ukrainian Nationalists) உக்ரேனிய யூதப் படுகொலையில் பங்குபெற்றது) Right Sector ஆயுதக்குழுவும் Svoboda கட்சியும் போற்றிப் பாராட்டுகின்றன என்பதும் ஒருவருக்குத் தெரியாமல் போய்விடும். கிழக்கு உக்ரேனிலான ஒடுக்குமுறையை அமெரிக்கா மூர்க்கமாக ஆதரிக்கிறது - சிஐஏ இயக்குநரான ஜோன் பிரென்னனை கியேவுக்கு அனுப்புவது உட்பட - என்ற உண்மையானது மறைக்கப்படுகிறது. ஆட்சிக்கவிழ்ப்புக்கு முன்னதாக உக்ரேனின் பிரதமராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரியான விக்டோரியா நியூலண்டும் உக்ரேனுக்கான அமெரிக்கத் தூதரான ஜெஃப்ரி பியாட்டுக்கும் இடையில் நடந்த தொலைபேசி அழைப்பு குறித்து ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை. உக்ரேன் நெருக்கடி குறித்த உத்தியோகபூர்வ சித்தரிப்பில் இருக்கும் மாபெரும் முரண்பாடுகளை ஊடகங்கள் மறைக்கின்றன. அமெரிக்காவின் 2003 ஈராக் போருக்கு முன்பாக அமெரிக்கா, ஈராக்கிய அதிபர் சதாம் உசேன் “தனது சொந்த மக்களை கொல்வதற்காக” அவரைக் கண்டனம் செய்தது. 2011 இல் லிபியாவில் கிளர்ச்சி நகரமான பெங்காசியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடாபி நடத்தவிருந்த ஒரு அடக்குமுறையைத் தடுத்து நிறுத்த வேண்டியிருந்ததாகக் கூறி அமெரிக்க ஏகாதிபத்தியம் லிபியா மீது தாக்குதல் நடத்தியது. சிரிய ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத் தனது போலிஸ் மற்றும் இராணுவத்தை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டதால் அவருக்கு ஆட்சி செய்யத் தகுதியில்லை என்று ஒபாமா நிர்வாகம் அறிவித்தது. மைதான் சதுக்க ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் உக்ரேனின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான விக்டர் யானுகோவிச்சின் அரசாங்கம் தனது அங்கீகாரத்தை இழந்து விட்டது என்பதே அவருக்கு எதிராக நடத்தப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஆதரவளித்ததற்கு உத்தியோகபூர்வமான காரணமாய் கூறப்பட்டது. ஆனால் இப்போது அமெரிக்கா, கியேவில் இருக்கும் தனது கைப்பாவைகள் கிழக்கில் நடக்கும் கிளர்ச்சியை இரத்தத்தில் மூழ்கடிக்கின்ற வேலையைச் செய்து முடிக்கக் கோரி சவுக்கை வீசிக் கொண்டிருக்கிறது. அதேசமயத்தில், அரச வன்முறையில் இருந்து ரஷ்ய மொழி பேசும் உக்ரேனியர்களை பாதுகாக்க தலையிடப் போவதாக கூறும் ரஷ்ய அச்சுறுத்தல்களை அது நாகரிகத்திற்கு எதிரான ஒரு குற்றமாக அழைக்கிறது. அமெரிக்காவில் ஊடகங்கள் ஒரு நெடிய சீரழிவுக்கு உட்பட்டிருக்கின்றன. வியட்நாம் போரின் காலகட்டத்தில் போரின் மிருகத்தனமான நிதர்சனத்தை அமெரிக்க மக்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதில் ஊடகத்திற்குள் இருந்த விமர்சனரீதியான குரல்கள் ஒரு பாத்திரம் வகித்தன. 1971 இல், பென்டகன் ஆவணங்களை டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டமை அமெரிக்க மக்களை தென்கிழக்கு ஆசியாவில் போருக்குள் தள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொய்களை அம்பலப்படுத்த உதவியது. அது ஒருபோதும் மீண்டும் நடவாமல் பார்த்துக் கொள்ள ஆளும் வர்க்கம் தீர்மானித்தது. இராணுவமும் உளவு எந்திரமும் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலான ஊடகங்களை துரிதமாய் கையிலெடுத்தன. அரசிடம் இருந்து சுதந்திரமாய் செயல்படுவதான நடிப்பும் கூட கைவிடப்பட்டு விட்டது. முதல் ஈராக் போர், யூகோஸ்லேவியாவின் பிரிப்பு, சேர்பியாவுக்கு எதிரான “மனிதாபிமான” வான் போர் என ஒவ்வொரு அடுத்தடுத்த இராணுவத் தலையீட்டிலும் ஊடகமானது நாளுக்குநாள் அதிகரித்துச் சென்ற ஒரு வெட்கமற்ற பாத்திரத்தை ஆற்றி வந்திருக்கிறது. சுதந்திரமான ஊடகம் என்பதற்கான அடையாளமாக கொஞ்சநஞ்சம் எஞ்சியிருந்ததும் 9/11 மற்றும் “பயங்கரவாதத்தின் மீதான போர்”இவற்றுடன் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது என்பதை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆக்கிரமிப்புகளில் ஊடகங்கள் ஆற்றிய “உடன்செல்லும்” (embedded) பாத்திரமும் லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சிமாற்றத்திற்கான போர்களை ஆதரிப்பதில் அவை மேற்கொண்ட வெட்கமற்ற பிரச்சாரமும் விளங்கப்படுத்தின. கட்டுரைகளை வெளியிடும் முன் அரசாங்கப் பார்வைக்கு அனுப்புவதை - வேறொரு பொருளில் இந்த நடைமுறை தான் அரசுத் தணிக்கை என அழைக்கப்படுகின்றது - பெரும் செய்தித்தாள்கள் இன்று ஒப்புக்கொள்கின்றன. எட்வார்ட் ஸ்னோவ்டென் மற்றும் ஜூலியான் அசாஞ் போன்ற விழிப்பூட்டிகளை(whistleblowers)வேட்டையாடுவதில் உதவுவதை ஊடகங்களின் விவாதத் தலைமை நடத்துநர்களும் மற்றும் பத்தியாளர்களும் தங்கள் தொழிலாகவே செய்து வருகின்றனர். பெருநிறுவன-நிதிய உயரடுக்கின் ஒட்டுமொத்த வெளியுறவுக் கொள்கையும் பொய்களின் அடிப்படையில் எழுப்பப்படுகின்றது, சிறு விமர்சனரீதியான ஆய்வுக்கும் கூட அதனால் தாக்குப்பிடிக்க இயலாது என்ற உண்மையானது பலத்தின் அறிகுறியன்று, பலவீனத்தின் அறிகுறியே. தொழிலாள வர்க்கத்திற்கும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தில் இருக்கும் போர் வெறியர்கள் மற்றும் ஊடகங்களில் இருக்கும் அவர்களது எடுபிடிகளுக்கும் இடையில் ஒரு பரந்த பிளவு பிரித்து நிற்கிறது. எதிர்ப்பானது இந்த ஒட்டுமொத்தமான ஊழலடைந்த கட்டமைப்பிற்கு வெளியிலிருந்தே வரமுடியும். அது தொழிலாள வர்க்கத்தில் மையம் கொள்ளும். ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகின்ற போர்ப் பிரச்சாரகர்களை அவர்களின் செயலுக்காய் பொறுப்பாக்குவதென்பது போருக்கு எதிரான ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க இயக்கத்தின் ஒரு முக்கியமான கடமையாக இருக்கும். |
|
|