World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US vice president arrives in Ukraine amid violent provocations

அமெரிக்க துணை ஜனாதிபதி வன்முறை ஆத்திரமூட்டல்களுக்கு மத்தியில் உக்ரேனுக்கு வருகிறார்

By Bill Van Auken 
22 April 2014

Back to screen version

திங்களன்று துணை ஜனாதிபதி ஜோசப் பைடன், நாடு உள்நாட்டுப் போர் விளிம்பில் தடுமாறுகையில் உக்ரேனுக்கு இரு நாள் பயணத்தை தொடங்கினார். நாட்டின் கிழக்குப் பகுதியில் கொலைகள் பற்றிய அழுத்தங்கள் பெருகியுள்ளன; அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் ரஷ்யாவுடன் இணைப்பு அல்லது ஒரு கூட்டாட்சி முறை அரசாங்கம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்; அவர்கள் குறைந்தபட்சம் 10 நகரங்கள், சிறுநகரங்களிலேனும் கட்டுப்பாட்டை கொண்டுள்ளனர்.

பைடனுடைய வருகை, அமெரிக்க ஆதரவைக் கொண்ட ஆட்சிக்கு அடையாளம் எனக் கருதப்படுகிறது; இந்த ஆட்சி கடந்த பெப்ருவரியில் ஒரு பாசிசத் தலைமையிலான வாஷிங்டன் ஏற்பாடு செய்த ஆட்சி சதியால் இருத்தப்பட்டது. அவர் இன்று கியேவின் தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தின் தலைவர்களை சந்திக்க உள்ளார்; அதில் ஜனாதிபதி ஒலெக்சாந்தர் டர்ஷினோவ் மற்றும் பிரதம மந்திரி ஆர்செனி யாட்சென்யுக் ஆகியோர் அடங்குவர்.

இதற்கும் அப்பால் இந்த வருகை, ரஷ்யாவிற்கு எதிரான வாஷிங்டனின் அச்சுறுத்தல்களை அதிகப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது; அதில் பொருளாதாரத் தடைகள் மட்டுமல்லாமல், ரஷ்ய எல்லைகள் வரை அமெரிக்க, நேட்டோ இராணுவ நிலைகளை விரிவாக்கப்படுவதும் உள்ளடங்கும்.

மேற்கில் இருந்து வந்த முறையான போர் முரசு ஒலிகள் திங்களன்று ரஷ்ய வெளியுறவு மந்திரி சேர்ஜீ லாவ்ரோவிடம் இருந்து சீற்றமான விடையிறுப்பை தூண்டியது; அவர் வாஷிங்டனும் அதன் கியேவ் கைப்பாவை அரசாங்கமும் ஜெனிவாவில் கடந்த வாரம் அடையப்பட்ட அமெரிக்க, ரஷ்ய, ஐரோப்பிய ஒன்றிய, கியேவ் ஆட்சிகளுக்கு இடையேயான உடன்பாட்ட்டுக்கு சேதம் விளைவிக்கின்றன என்று குற்றம் சாட்டினார்.  நான்கு நாடுகளின் கூட்டு அறிக்கை உக்ரேனில் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வேண்டும், அழுத்தங்களைக் குறைக்க ஆயுதக்குழுக்கள் ஆயுதங்களைக் களைய வேண்டும், பொது இடங்களை ஆக்கிரமித்துள்ளது கைவிடப்படவேண்டும், மற்றும் உக்ரேனின் சிதைவுற்ற பிராந்தியங்களுடன் உரையாடல் வேண்டும், நாட்டின் அரசியலமைப்பில் மாற்றத்திற்கான தயாரிப்புக்கள் வேண்டும் என்று கூறியுள்ளது.

திங்களன்று மாஸ்கோ எதிர்கொண்ட தன்மை, பெப்ருவரி ஆட்சி சதியை வழிநடத்திய பாசிச கூறுபாடுகள் வார இறுதியில் காட்டிய வன்முறை மற்றும் ரஷ்யாவை தொடர்ந்து மிரட்டும் வாஷிங்டனின் முயற்சிகள் ஆகியவற்றால் உந்துதல் பெற்றுள்ளது.

கியேவ் ஆட்சி, கிழக்கு உக்ரேனிய நகரமான ஸ்லோவ்யான்ஸ்க்கின் (Slovyansk) வெளிப்பகுதியில் எதிர்ப்பாளர்கள் நடத்தும் சோதனைச் சாவடிகளில் முதல் கொலைகளை மேற்கொண்டது. அறிக்கைகளின்படி, நான்கு கார்கள் சோதனைச் சாவடியை அணுகின; அதில் இருந்தவர்கள்  சுடத் தொடங்கி மூன்று குடிமக்களைக் கொன்றனர். வாகனங்களில் ஒன்றில் காணப்பட்ட பொருட்கள் துப்பாக்கிதாரிகள் வலது பிரிவு உறுப்பினர்கள் என்று காட்டின; இந்த அமைப்பு உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை அகற்றி அமெரிக்க கைப்பாவை ஆட்சியை அதிகராத்திற்கு கொண்டுவந்ததில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

திங்களன்று பாசிச வன்முறைக்கு புதிய சான்றுகள் வந்தன; ரஷ்ய சார்பு சுயபாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் இருவரின் சடலங்கள் ஸ்லோவ்யான்ஸ்க்கின் டோனெட்ஸ்க் ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டன. “நான் இன்று பிரேத அறைக்கு சடலங்களை அடையாளம் காணச் சென்றேன்” என்று நகரத்தின் நடைமுறை மேயர் வ்யாஷிஸ்லாவ் போனோமர்யோவ், ரஷ்ய நாளேடான Moskovsky Komsomolets  இடம் கூறினார். இரு பாதிக்கப்பட்டவர்களும் ஆற்றில் தூக்கி எறியப்படுமுன் குத்தப்பட்டனர் என்றார் அவர். சிறுநகரமே பெருகிய முறையில் வலது பிரிவு ஆத்திரமூட்டலாளர்களால் தாக்கப்படுகிறது, உக்ரேனிய இராணுவத்தின் முற்றுகை என்னும் அச்சறுத்தலையும் கொண்டுள்ளது என்றார் அவர்.

ஒரு பாரட்ரூப்பரை கடந்த வாரம் நகரத்துள் அனுப்பும் முயற்சி தோல்வியில் முடிவுற்றது. அப்பொழுது இராணுவத்தினர்கள் கியேவ்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நல்ல முறையில் பழகி, தங்கள் ஆயுதம் நிறைந்த வாகனங்களையும் ஆயுதங்களையும் அவர்களுக்கு கொடுத்தனர். அவர்களுடைய டாங்குகளின் துப்பாக்கிகள் இப்பொழுது உக்ரேனிய இராணுவ ஊடுருவலுக்கு எதிராக ஸ்லோவ்யன்ஸ்க்கில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக்களில் நிலைப்பாடு கொண்டுள்ளன.

வலது பிரிவு உறுப்பினர்கள் அமெரிக்க ஆதரவுடைய ஆட்சிக்குள் முக்கிய பதவிகளைக் கொண்டுள்ளனர்; இதில் அமைப்பின் தலைவர் டிமிட்ரோ யாரோஷும் அடங்குவார்; அவர் தேசியப் பாதுகாப்பின் துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்புப் படைகளை, உக்ரேனிய தேசிய பாதுகாப்புக் குழுவின் புதிய செயலர் ஆண்ட்ரி பருபியுடன் அவர் மேற்பார்வையிடுவார், பிந்தையவர் உக்கிரேனிய சமூக தேசிய கட்சி என்று நேரடியாக ஹிட்லரின் நாஜிகளை மாதிரியாகக் கொண்டது. இந்த அமைப்பு யூத எதிர்ப்பு மற்றும் பாசிச ஸ்வோபோடா கட்சியாக மாறியது; இத்துடன் அமெரிக்க அதிகாரிகள் நெருக்கமாக ஒத்துழைத்துள்ளனர். அத்தகைய நபர்களைக் கொண்டிருக்கையில், தங்களை அதிகாரத்திற்குக் கொண்டுவந்தவர்களின் ஆயுதங்களை கியேவ் ஆட்சி களையும் என எதிர்பார்ப்பது கற்பனையே.

மாஸ்கோவில் திங்களன்று நிருபர்களிடம் பேசிய வெளியுறவு மந்திரி லாவ்ரோவ், கிழக்கு உக்ரேனில் நடந்த கொலைகளை கண்டித்து வாஷிங்டன்தான் வன்முறைக்குப் பொறுப்பு எனக் குற்றம் சாட்டினார்.

“தீவிரவாதிகள் ஆயுதமற்ற குடிமக்களை சுடத் தொடங்கிவிட்டனர் என்பது ஏற்கத்தக்கது அல்ல” என்றார் அவர்.

“உக்ரேனிலுள்ள ஆழ்ந்த நெருக்கடிக்குப் பின் இருக்கும் காரணங்களை ஆராய அதிகாரிகள் ஏதும் செய்யவில்லை, விரலைக்கூட உயர்த்தவில்லை” என்றார் லாவ்ரோவ். மாஸ்கோ, வாஷிங்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உக்ரேன் ஆட்சி கையெழுத்திட்டுள்ள கூட்டு அறிக்கை “நிறைவேற்றப்படவில்லை என்பது மட்டுமல்ல,  கியேவில் அதிகாரத்தை கைப்பற்றியவர்களால் ஜெனிவாவில் அடையப்பட்ட உடன்பாடுகள் தீவிரமாக மீறப்படுகிறது” என்று அவர் குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் எச்சரித்தார்: “வேண்டுமென்றே உள்நாட்டுப்போரை தொடர்பவர்கள், ஒரு பெரிய, தீவிர, குருதி கொட்டும் மோதலைத் தொடக்க முற்படுவோர், குற்றம் சார்ந்த கொள்கையை தொடர்கின்றனர். நாம் இக்கொள்கையை கண்டிப்பதோடு மட்டும் இல்லாமல், அதை நிறுத்தவும் செய்வோம்”.

ரஷ்ய அரசாங்கத்தின் கோபம், வாஷிங்டனின் அச்சுறுத்தல்களால் தூண்டுப்பட்டுள்ளது என்பதை லாவ்ரோவ் தெளிவாக்கினார். இவை, ஜெனிவாவில் அடையப்பட்ட உடன்பாட்டிற்குப்பின் தீவிரமாகியுள்ளன. இந்த அச்சுறுத்தல்கள் பைடன் கியேவிற்கு பறந்து வருகையிலேயே தொடர்ந்தன; பெயரிட விரும்பாத மூத்த அமெரிக்க அதிகாரி நிருபர்களிடம் துணை ஜனாதிபதியின் விமானத்தில் ஜெனிவாவில் அடையப்பட்ட விரிவாக்கம் கூடாது என்று கூறப்படுவது “முடியும் வழிவகை” எனக் கூறமுடியாது என்றார். மாஸ்கோ இதன் கோரிக்கைகளுக்கு இணங்காவிட்டால், வாஷிங்டன் விரைவில் செயல்பட்டு தண்டனை அளிக்கும் தடைகளை விதிக்கும் என்றார்.

“நாங்கள் கோரியவற்றை இரண்டு மூன்று நாட்களுக்குள் பூர்த்தி செய்யாவிட்டால், நமக்கு இறுதி எச்சரிக்கைகள் தடைகளைப் பற்றி கொடுக்குமுன், நம்முடைய அமெரிக்க பங்காளிகளை அவசரமாக அவர்கள் அதிகாரத்தில் இருத்தியவர்கள் குறித்த பொறுப்பு முழுவதையும் ஏற்க வேண்டும் எனக் கோருகிறோம்.” என்றார் லாவ்ரோவ் தன் செய்தியாளர் கூட்டத்தல். ரஷ்யாவை தனிமைப்படுத்தும் முயற்சி தோற்றுவிடும், ஏனெனில் “ரஷ்யா ஒரு பெரிய, சுயாதீன சக்தி, அதற்கு தனக்கு வேண்டியது பற்றி தெரியும்.”

இப்படிப்பட்ட தைரியப் பேச்சு இருந்தாலும், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை ஒட்டி முன்னாள் அரச சொத்துக்களை கொள்ளையடித்தவர்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடைய அரசாங்கம், அமெரிக்க, ஜேர்மனிய ஏகாதிபத்தியங்களுடன் உறவு கொள்ள அவநம்பிக்கையுடன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது; அதுதான் ரஷ்யாவின் மிக அடிப்படைப் பாதுகாப்பு நலன்களைக் காக்க உதவும் என கருதுகிறது.

புட்டினுடைய பிரச்சினை வாஷிங்டனுக்கு அத்தகைய சமரசத்தில் அக்கறை இல்லை என்பதுதான். மாறாக வாஷிங்டன் பொருளாதார, இராணுவ அழுத்தத்தை அதிகரிக்க விரும்புகிறது, இறுதி நோக்கம் அமெரிக்க உலக மேலாதிக்கத்திற்கு ரஷ்யா ஒரு தடை என்பதால் அதை அகற்ற வேண்டும், அதனை சிதைந்த அரைக் காலனித்துவ பகுதியாக மாற்றவேண்டும் என்று உள்ளது.

அந்த இலக்கை அடைய, ஒபாமா நிர்வாகமும், பெருநிறுனச் செய்தி ஊடகமும் வேண்டுமென்றே அதை முக்கிய ஆக்கிரமிப்பாளர் என்று சித்தரித்து, ரஷ்யாவின் நிலைமையை சிதைகின்றன. இது, திங்களன்று நியூயோர்க் டைம்ஸ் லாவ்ரோவ் செய்தியாளர் கூட்டம் பற்றிக் கொடுத்த தகவலில் வெளிப்படையாகியது. அது ரஷ்ய வெளியுறவு மந்திரியின் எதிர்ப்புக்களை, “ஒரு இராணுவத் தலையீட்டிற்கான தளப் பணிக்கு மேலும் தயாரிப்பை” நோக்கம் கொண்ட திட்டமிடப்பட்ட செயல் என்று சித்திரித்துள்ளது.

ஒரு செனட்டராக இருக்கையில் ஆப்கானிஸ்தான், ஈராக் போர்களுக்கு வாக்களித்த பைடனிடம் இருந்தும் இத்தகைய சொற்கள்தான் வரும் என்பதில் ஐயம் இல்லை; இவர் அமெரிக்க இராணுவ வாதத்திற்கு தன் பதவிக்காலம் முழுவதும் உற்சாகமூட்டுபவராக இருந்துள்ளார். இவருடைய வருகை, CIA இயக்குனர் ஜோன் பிரென்னன் உடைய இரகசியப் பயணத்திற்குப்பின் வந்துள்ளது; அது கிழக்கு உக்ரேனில் எதிர்த்தரப்பின் மீது கியேவ் ஆட்சி நடத்திய தாக்குதலுக்கு ஒரு வாரம் முன் நிகழந்துள்ளது.

அமெரிக்க துணை ஜனாதிபதி, கியேவ் ஆட்சிக்கு கணிமான ஆதரவுடன் வருவார் என்பதற்கான அடையாளம் இல்லை; இந்த ஆட்சிக்கு குறைந்தப்பட்சம $30 பில்லியன் கடன் திருப்பிக்கொடுக்க தேவைப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டு 3% குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது; அதன் நாணயம ஹிர்வ்நியா டாலருக்கு எதிராக 35% சரிந்து விட்டது; நாட்டின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9%க்கும் மேல் உயர்ந்துவிட்டது.

அமெரிக்க $1 பில்லியனைத்தான் உதவியாக உறுதியளித்துள்ளது; இந்த அற்ப பணம் எப்படி செலவழிக்கப்பட வேண்டும் என்று பைடன் அமெரிக்க ஆலோகர்களை உக்ரேனுக்கு அனுப்பி விவாதிப்பார்; இதைவிட கொடுப்பதற்கு அவரிடம் ஏதும் இல்லை. கியேவ் எப்படி ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி பெறுவதில் நம்பிக்கையைக் குறைக்கலாம் என்ற தொழில்நுட்ப ஆலோனையும் கொடுப்பார்.

ஜேர்மனிய சர்வதேச பொது வானொலி ஒலிபரப்பு நிலையமான Deutsche Welle பைடன் பயணம் குறித்து மாறுபட்ட பார்வையைக் கொண்டுள்ளது. “அவருடைய உக்ரேன் பயணத்தில் அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜோ பைடன் தெளிவான சொற்களைக் கூறுவார், கியேவிற்குக் மேலதிக நிதிகள் இராது” என்றது.

Deutsche Welle  மேலும் கூறியது: “உள்ளிருப்பவர்களின் கருத்துப்படி, அமெரிக்கா மட்டுமே நேட்டோவின் பாதுகாப்பு வரவு-செல்வுத் திட்டத்தில் 75% ஐ கொடுக்கிறது என்று புகார் கூறுகிறது; அதை அங்கீகரிக்கும் வகையில் அமெரிக்கா அதன் ஐரோப்பியப் பங்காளிகள், குறிப்பாக ஜேர்மனி, உக்ரேனுக்கு அதன் பொருளாதாரத்தை மறுகட்டமைக்க நிதியுதவி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறது.

உக்ரேன் தலையீட்டின் செலவை எவர் கொடுப்பர் என்ற பிரச்சினை இருந்தபோதிலும்கூட, அமெரிக்காவைப் போல் ஜேர்மனியும் உக்ரேனில் இரண்டும் தூண்டிவிட்ட நெருக்கடியைப் பயன்படுத்தி, தன் ஏகாதிபத்திய நலன்களை ரஷ்ய எல்லைகள் அதற்கும் அப்பால் விரிவாக்க உறுதி கொண்டுள்ளது. அவ்வாறு செய்கையில், அமெரிக்க, ஜேர்மனிய ஏகாதிபத்தியங்கள் இரண்டும் உக்ரேனை ஓர் உள்நாட்டுப்போரின் விளிம்பில் தள்ளுகின்றன; அதே நேரத்தில் உலகை அணுவாயுத சக்திகளுக்கு இடையே பேரழிவுகரமான மோதல் என்னும் மிகப் பெரிய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள வைக்கின்றன.