தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Does Washington want war with Russia? வாஷிங்டன் ரஷ்யாவுடன் யுத்தத்தை விரும்புகிறதா?
Bill Van Auken Use this version to print| Send feedback வாஷிங்டன் ரஷ்யாவுடன் ஒரு யுத்தத்தை விரும்புகிறதா? உக்ரேனிய நெருக்கடியைச் சுற்றிய சமீபத்திய அமெரிக்க நடவடிக்கைகள் மீதான ஒரு மீளாய்வு, முன்னர் எந்தவொரு கேள்வி சிந்திக்க முடியாததாக கருதப்பட்டதோ அதை தெளிவாக முன்னுக்கு கொண்டு வருகிறது. ஒபாமா நிர்வாகம் ஓர் மிகவும் அபாயகரமான சூதாட்ட விளையாட்டை (Russian Roulette) ரஷ்யாவுடன் விளையாடி வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில், ரஷ்ய எல்லையோரங்களுக்கு அமெரிக்க துருப்புகளை நகர்த்தும் வகையில், போலாந்திலும், சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் பால்டிக் குடியரசுகளான எஸ்தோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியாவிலும் அமெரிக்க துணை-இராணுவ துருப்புகளை நிலைநிறுத்துவதை பெண்டகன் அறிவித்துள்ளது. மற்றொரு அமெரிக்க யுத்தக்கப்பலும் கருங்கடலுக்கு அனுப்பப்பட்டுள்ளது, அத்தோடு முத்தரப்பு விரைவு நடவடிக்கை (Operation Rapid Trident) என்றறியப்படும் ஒரு பயிற்சியின் கீழ் இந்த கோடையில் மேலதிக அமெரிக்க படைகளை உக்ரேனிலேயே நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உக்ரேனுக்குள் நிலவும் ஒரு கூர்மையான நெருக்கடி சூழலில் — இதற்காக வாஷிங்டனின் மற்றும் அதன் கைப்பாவைகளின் சூழ்ச்சிகளுக்குத் தான் நன்றி கூற வேண்டும் — வாஷிங்டனின் இந்த இராணுவ நகர்வுகள் கட்டவிழ்த்து விடப்பட்டு வருவது, முழு வீச்சிலான உள்நாட்டு யுத்த வெடிப்பிற்கு அச்சுறுத்துகிறது. உக்ரேனில் அனைத்து வன்முறைகளையும் முடிவுக்கு வருவதற்கும் மற்றும் சட்டவிரோத குழுக்களை நிராயுதபாணி ஆக்குவதற்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், ஜெனிவாவில் ரஷ்யாவுடன் ஒரு கூட்டறிக்கையில் கையெழுத்திட்ட ஒரு வாரத்திற்கும் குறைந்த காலத்திற்குள், கியேவில் உள்ள அமெரிக்க கைப்பாவை ஆட்சி அந்நாட்டின் தென்கிழக்கு தொழில்துறை பகுதியில் கிளர்ச்சியில் இறங்கிய ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கு எதிராக ஒரு "பயங்கரவாத தடுப்பு" ஒடுக்குமுறையை நடத்த அதன் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அதற்காக அது துருப்புகள், டாங்கிகள் மற்றும் யுத்த விமானங்களை மட்டும் அனுப்பவில்லை, மாறாக நவ-பாசிச வலது பிரிவு (Right Sector) இன் குண்டர்களையும் ஆயுத பாணிகளாக்கி உள்ளது. பெரும் பிரயத்தனத்தோடு வாஷிங்டனுடன் இணக்கம் காணமுனைந்த மாஸ்கோவின் புட்டின் அரசாங்கம், நிலைமையின் கடும் தீவிரத்தால் விழித்து கொண்டதாக தெரிகிறது. உக்ரேனில் உள்ள ரஷ்ய பிரஜைகள் மீதான ஒரு தாக்குதலை அவரது அரசாங்கம் ரஷ்யா மீதான ஒரு தாக்குதலாக கருதும் என ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரொவ் புதனன்று அரசு தொலைக்காட்சியான RT சேனலுக்கு அளித்த ஆங்கில-மொழி நேர்காணலில் எச்சரித்தார். அவர் தெற்கு ஓசேஷியாவில் ரஷ்யர்கள் மீது ஜோர்ஜிய அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ஆகஸ்ட் 2008 தாக்குதலை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்காட்டினார். அப்போது ஜோர்ஜிய படைகளை எதிர்க்க ரஷ்யா இராணுவரீதியில் தலையீடு செய்து விடையிறுப்பு காட்டியது. டோன்பாஸ் (Donbas) பகுதியில் ரஷ்ய-மொழி பேசும் மக்களை உக்ரேனிய துருப்புகள் தாக்குவதைத் தடுக்க ரஷ்ய அரசாங்கம் அதே போன்றவொரு தலையீட்டை நடத்தினால் அதன் தாக்கங்கள் அதி-தீவிரத்தோடு கையாளப்படும். கியேவ் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மேற்கோள் காட்டி, லாவ்ரொவ் நேர்காணலில் கூறுகையில், “அமெரிக்கர்கள் மிக மிக நெருக்கமாக நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்," என்று அவதானித்தார். இது மறுக்க முடியாததாகும். உக்ரேனிய ஆட்சியே, அந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்களுக்குள் ஒரு நீடித்த அமெரிக்க தலையீட்டின் விளைபொருளாகும், 1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து உக்ரேனுக்குள் "ஜனநாயகத்தை ஊக்குவிக்குவிப்பதற்கான" நிதியுதவி என்று கூறி சுமார் 5 பில்லியன் டாலர் பாய்ச்சப்பட்டுள்ளது. அத்தகைய முயற்சிகள், ரஷ்யாவை சார்ந்திருந்த ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் அரசாங்கத்தை வீதி வன்முறைகள் மூலமாக நிலைகுலைக்க ஒரு வலதுசாரி எதிர்ப்பு இயக்கத்திற்கு ஊக்கமளிப்பதில் போய் முடிந்தது. எதிர்ப்பாளர்களுக்கும் யானுகோவிச்சுக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை பேரம் பேசப்பட்ட போதே, அதை சீர்குலைப்பதிலும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை பாசிச துணை-இராணுவப் படைகளைக் கொண்டு தூக்கி வீசுவதிலும் வாஷிங்டன் உறுதியாக இருந்தது. பாசிச தலைமையிலான பெப்ரவரி 22 ஆட்சி சதியால் அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்ட ஆட்சியின் பிரதம மந்திரி, அர்செனி யாட்சென்யுக், அமெரிக்க அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். அவரை அவர்கள் செல்லமாக "யாட்ஸ்" (செல்ல நாய்க்குட்டி) என்று குறிப்பிட்டனர். துணை ஜனாதிபதி டிக் சென்னியின் ஒரு முன்னாள் தலைமை பாதுகாப்பு ஆலோசகரும், புதிய அமெரிக்க நூற்றாண்டு திட்டத்தின் (Project for a New American Century) ஸ்தாபக தலைவருமான ரொபேர்ட் காகனின் மனைவியுமான, யுரேஷிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை வெளியுறவு விவகார செயலர் விக்டோரியா நூலாந்து, இந்த நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க நபராக இருந்துள்ளார். அந்த பெண்மணி 2003 ஈராக் ஆக்கிரமிப்பில் நடைமுறைப்படுத்திய அதே ஆக்ரோஷ யுத்த கொள்கையை உக்ரேனுக்கு, ரஷ்யாவிற்குமே கூட கொண்டு வந்துள்ளார். CIA இயக்குனர் ஜோன் பிரென்னெனின் கியேவிற்கான ஒரு இரகசிய பயணம், மற்றும் அதற்கடுத்து தொடர்ச்சியாக துணை ஜனாதிபதி ஜோசப் பைடனின் இந்த வார விஜயத்திற்கு பின்னர் உடனடியாக, டோன்பாஸில் முறியடிக்கப்பட்ட முதல் "பயங்கரவாத எதிர்ப்பு" நடவடிக்கையை தொடங்கியதிலிருந்து, விடயங்களை வாஷிங்டன் எவ்வாறு அழைக்கிறதென்பது, இன்னும் மேலதிகமாக கொடிய பாணியில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. தொடக்கத்திலிருந்து இதுவரையில், உக்ரேனிய நெருக்கடி அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தூண்டிவிடப்பட்டுள்ளது. வாஷிங்டனால் எடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நடவடிக்கையும் இந்த நெருக்கடியைத் தூண்டிவிடுவதை, தீவிரப்படுத்துவதை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது. எந்தளவிற்கு இந்த நெருக்கடி நீண்டு செல்கிறதோ, அந்தளவிற்கு அமெரிக்க கொள்கை உக்ரேனை நோக்கி அல்ல, ரஷ்யாவை நோக்கியே திரும்பியுள்ளதென்பது தெளிவாகி வருகிறது. உக்ரேன், அது காணக்கூடிய விதத்தில், வெறுமனே ரஷ்யாவுடனான போருக்கு ஒரு போலிக்காரணத்தை வழங்குவதற்காக உள்ளது. ஒரு விதத்தில், அது மாஸ்கோவை ஒரு அவமானகரமான சரணடைவுக்கு நிர்பந்திக்க பயன்படுத்தப்படும், அந்நிலைமை ரஷ்யாவை சிதைக்கவும் மற்றும் ஒரு சக்தியற்ற அரை-காலனித்துவமாக மாற்றவும் நோக்கம் கொண்ட இரட்டிப்பாக்கப்பட்ட தாக்குதலுக்கு மட்டுமே களம் அமைக்கும். ஊகிக்கிக்க கூடிய வகையில், வெள்ளை மாளிகையிலும் பெண்டகனிலும் உள்ளவர்கள் இத்தகையதொரு மோதல் ஒரு அணுஆயுத யுத்தம் வரை செல்லாது என நம்புகிறார்கள், ஆனால் யாருக்குத் தெரியும்? ரஷ்யா மீதான ஓர் அமெரிக்க யுத்த அச்சுறுத்தல், பொதுமக்களிடையே கட்டவிழ்த்து விடப்படும் யுத்த பிரச்சார வெள்ளத்திலும் வெளிப்படையாக உள்ளது. முன்னர் சதாம் ஹூசைனுக்கும், மௌம்மர் கடாபிக்கும் சித்தரிக்கப்பட்டதைப் போல அதே விதமாக அரக்கத்தன்மை விளாடிமீர் புட்டின் மீது சித்தரிக்கப்பட்டு வருகிறது, அதேவேளையில் அரசுத்துறையும், நியூ யோர்க் டைம்ஸில் உள்ள அதன் உண்மையான பரோபகாரிகளும், ஈராக்கின் "பேரழிவுகரமான ஆயுதங்களுக்கு" “ஆதாரங்கள்" வழங்கியதைப் போல அதே பாணியில் நம்பகத்தன்மையை வழங்க, உக்ரேனில் உள்ள ரஷ்ய துருப்புகளின் "புகைப்பட சாட்சிகளாக" சேவை செய்கின்றன. அமெரிக்க யுத்த உந்துதலை எது அடிக்கோடிடுகிறது? உக்ரேனிய நெருக்கடிக்கு முன்னதாக, சிரியா மற்றும் ஈரான் இரண்டுக்கும் எதிராக அமெரிக்க யுத்த திட்டங்களைத் தடுப்பதில் மாஸ்கோ ஆற்றிய பாத்திரத்தால், வாஷிங்டன் அதிகளவில் ஆத்திரமடைந்திருந்தது — NSA இரகசியங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு புட்டின் தஞ்சம் வழங்கியமை குறித்து கூற வேண்டியதே இல்லை. முன்னதாக, தெற்கு ஒசேஷியாவிற்கு எதிராக அமெரிக்க பின்புலத்தோடு ஜோர்ஜியாவினால் தொடங்கப்பட்ட 2008 யுத்தத்தில் மாஸ்கோவை கையாள்வதில் வாஷிங்டன் படுதோல்வி அடைந்தது. மத்திய கிழக்கு மற்றும், இன்னும் பரந்தளவில், யுரேஷியா நிலப்பரப்பு எங்கிலும் மேலாதிக்கத்தை தக்க வைக்கும் அதன் உந்துதலுக்கு ரஷ்யா ஒரு தடையாக இருப்பதை நீக்க, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு மூலோபாயத்தைத் தொடங்கி உள்ளது என்பதையே உக்ரேனிய சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. உள்ள உள்நாட்டு காரணிகளும் வாஷிங்டனை யுத்தத்திற்குள் உந்திச் செல்கிறது. அமெரிக்காவிற்குள் நிலவும் சமூக முரண்பாடுகள் ஓர் அபாயகரமான ஆழத்தை எட்டியுள்ளன. வோல் ஸ்ட்ரீட் அதன் 2008 பொறிவில் ஏற்பட்ட அதன் இழப்புகளை மீளமைத்து வருவதோடு, பணக்காரர்களை அது முன்னரை விட அதிகமாக வளப்படுத்தி வருகின்ற நிலையில், பாரிய உழைக்கும் மக்களோ முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் கூர்மையை தொடர்ந்து தாங்கி வருகின்றனர். அமெரிக்காவில் நிலவும் முன்னுதாரணமற்ற சமூக சமத்துவமின்மைக்கு மற்றும் வறுமைக்கு பொறுப்பான கட்சியாக, பெரும் பணக்காரர்களை அதிகளவிலான விரல்கள் சுட்டிக்காட்டி வருகின்றன. கடந்த காலங்களில் பலதடவை நிகழ்ந்ததுபோல், யுத்தமானது உள்நாட்டு சமூக அழுத்தங்களுக்கும், உள்நாட்டு அதிருப்தியின் அபாயத்திற்கும் ஒரு வெளிப்புற வடிகாலை வழங்குகிறது. இராணுவ தலையீட்டிற்கு மக்கள் விரோதம் அதிகரித்து வருகின்ற நிலைமைகளின் கீழ், ஒரு விடயம் நிச்சயமாக உள்ளது: அதாவது, ரஷ்யா உடனான ஒரு யுத்தமானது வேகவேகமாக, அரசியலமைப்பை சிதறடிக்க, ஜனநாயக உரிமைகளின் வழக்கொழிக்க, அரசியல் எதிர்ப்பிற்கு தடை விதிக்க மற்றும் பொலிஸ் அரசு முறைமைகளைப் பாரியளவில் தீவிரப்படுத்த இட்டுச் செல்லும். யுத்த அச்சுறுத்தலை குறை மதிப்பீடு செய்வதே மிகப் பெரிய ஆபத்தாக இருக்கும். அது இந்த உடனடி சம்பவத்தில் தவிர்க்கப்பட்டாலோ அல்லது ஒத்தி வைக்கப்பட்டாலோ கூட, ஏகாதிபத்திய அமைப்புமுறையின் ஆழ்ந்த முரண்பாடுகள் ஒரு அணுஆயுத மூன்றாம் உலக யுத்த பேரழிவை வெறுமனே ஒரு அபாயமாக உருவாக்குவதில்லை, மாறாக தவிர்க்கவியலாமையாக உருவாக்குகிறது, அதற்கு வெளியே முதலாளித்துவத்திற்கு முடிவு கட்ட ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில் சர்வதேசரீதியில் தொழிலாள வர்க்க பலத்தை ஒன்றுதிரட்டுகிறது. அதுபோன்றவொரு போராட்டத்திற்கு தயாரிப்பு செய்ய, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், உலக சோசலிச வலைத் தளமும் மே 4இல் ஒரு சர்வதேச மே தின இணையவழி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்த பொது அரங்கில் இணையவும், மிக மிக அவசர தேவையாக உள்ள சர்வதேச புரட்சிகர சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மீது விவாதிக்கவும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இன்றே internationalmayday.org அல்லது http://www.wsws.org/tamil/category/mayday-2014.html முகவரியில் பதிவு செய்யுங்கள். |
|
|