World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: New evidence of BJP role, Congress complicity in razing of Babri Masjid

இந்தியா: பாபர் மசூதி இடிக்கப்பட்டத்தில் பிஜேபி பாத்திரம் மற்றும் காங்கிரஸ் உடந்தையாய் இருந்தமைக்கு புதிய ஆதாரங்கள்

By Deepal Jayasekera
18 April 2014

Back to screen version

1992இல் வரலாற்று சிறப்புமிக்க பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) மூத்த தலைவர்களுக்குத் தெரிந்தே, அவர்களின் ஒப்புதலோடு, இந்து மேலாதிக்கவாத அமைப்புகளால் மிக கவனமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என்பதை எடுத்துக்காட்டும் புதிய ஆதாரங்களை, ஓர் இந்திய புலனாய்வு செய்தித்தளமும், தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமுமான கோப்ராபோஸ்ட் (Cobrapost), வழங்கி உள்ளது.

இந்தியாவின் அப்போதைய காங்கிரஸ் கட்சி பிரதம மந்திரி பி. வி. நரசிம்ம ராவ், பாபர் மசூதி இடிக்கப்பட இருந்த சதி குறித்து அறிந்திருந்தும், அதை நடக்க அனுமதித்ததாக கோப்ராபோஸ்ட்டின் விரிவான சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது. பதினாறாம் நூற்றாண்டு மசூதியான அது இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்திரபிரதேசத்தின் அயோத்தியாவில் அமைந்துள்ளது.

நூலாய்வு ஆசிரியராக அடையாளப்படுத்திக் கொள்ளும் கோப்ராபோஸ்டின் இணை பதிப்பாசிரியர் கே. ஆஷிஷ், பாபர் மசூதியை இடித்து விட்டு அவ்விடத்தில் புராண இந்து கடவுளான இராமருக்கு ஓர் இந்து கோயில் கட்டும் இந்து வகுப்புவாத பிரச்சார இயக்கமான, ராம் ஜன்மபூமி (இராமர் பிறப்பிட) இயக்கத்தின் 23 இடைநிலை தலைவர்களை மற்றும் உள்ளூர் தலைவர்களை நேர்காணல் செய்து, டிசம்பர் 6, 1992இல் மசூதி இடிக்கப்பட்டதைக் குறித்த அவர்களின் கருத்துக்களை இரகசியமாக பதிவு செய்தார். ஆஷிஷ் நேர்காணல் செய்தவர்களில் பலர், அந்த இடிப்பு சம்பவத்தில் பங்காற்றியமைக்காக நீதிமன்ற குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருப்பவர்கள் ஆவர் அல்லது பொலிஸ் அறிக்கைகளில் அதை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவராக சேர்க்கப்பட்டிருப்பவர்கள் ஆவர்.

பாபர் மசூதியை இடிக்க முன்கூட்டியே மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டிருந்ததாக ஆஷிஷ்ஷால் நேர்காணல் செய்யப்பட்டவர்கள் விவரித்தனர், அத்தோடு இந்தியாவின் பிரதான இந்து மேலாதிக்கவாத வகுப்புவாத அமைப்புகளின் தலைவர்கள் அந்த சதியில் பங்கு வகித்திருந்ததாகவும் தெரிவித்தனர். சித்தாந்தரீதியில் BJPக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பான, துணை-இராணுவ பாணியிலான ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங் (RSS); விஷ்வ இந்து பரீஷத் (உலக இந்து கவுன்சில் - VHP): அதன் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள்; மஹாராஷ்டிராவை மையமாக கொண்ட ஒரு பாசிச அமைப்பான ஷிவ் சேனா; மற்றும் முடிவுறவுள்ள தேசிய நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிர்கட்சியான BJP ஆகியவை உடந்தையாய் இருந்தவர்களில் உள்ளடங்கி உள்ளன. பிஜேபி தலைவர்கள் எல். கே. அத்வானி, உமா பாரதி, மற்றும் கல்யாண் சிங் உட்பட, பெயர் குறிப்பிடப்பட்டவர்களில் பலர் இந்திய முதலாளித்துவ அரசியலில் தொடர்ந்து முக்கிய பாத்திரம் வகித்து வருகின்றனர்.

முழு கோப்ராபோஸ்ட் அறிக்கையை இங்கே காணலாம்.

அந்த சம்பவத்தை நடத்த ஓய்வூபெற்ற இந்திய இராணுவ அதிகாரிகள் ஆயிரக்கணக்கான இந்து வகுப்புவாத நடவடிக்கையாளர்களுக்கு இராணுவ பாணியிலான பயிற்சி அளித்ததாக அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. மசூதியை இடிக்க கொண்டு வரப்பட்ட பிக்காசி, மண்வெட்டிகள், உளிகள் மற்றும் பெரிய சுத்தியல்கள் "அந்த வேலையை முடிக்க" போதுமானவையாக இல்லாததால், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் டைனமைட்டுகள் மற்றும் இதர வெடிபொருட்களைப் பயன்படுத்த "பிளான் B" திட்டத்தோடு வந்திருந்தனர்.

அந்த துணைக் கண்டத்தை பிரதானமாக இந்துக்களின் இந்தியாவாக, மற்றும் வெளிவேஷத்திற்கு "மதச்சார்பற்ற" இந்தியாவாக, மற்றும் ஒரு "முஸ்லீம்" பாகிஸ்தானாக பிரித்த 1947 வகுப்புவாத பிளவுக்கு பின்னர் நடந்திருந்த, ஐயத்திற்கிடமின்றி, தெற்காசியாவின் மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றாக அந்த பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்திருந்தது. பல மாதங்களாக வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் பெரும் பகுதிகளை அதிர வைத்த கலகங்களோடு ஏற்பட்டிருந்த பிரிவினைக்குப் பின்னர், இந்த இடிப்பு சம்பவமே இந்தியாவில் மிக மோசமான வகுப்புவாத இரத்த ஆறை ஏற்படுத்தி இருந்தது. 3000 க்கும் மேலான மக்கள், அதில் பெரும்பான்மையாக முஸ்லீம்கள், அந்த வகுப்புவாத வன்முறையில் உயிரிழந்தனர்.

இந்து வகுப்புவாதிகள் கூறுவதைப் போல பாபர் மசூதி இடிப்பு சம்பவம் ஒரு "திடீர்" வன்முறை நடவடிக்கை என்பதொரு பொய் என்பது எப்போதுமே தெளிவாக உள்ளது. அதை தகர்த்த ஆயிரக் கணக்கானவர்கள் நன்கு பயிற்சியளிக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டிருந்தனர். அனைத்திற்கும் மேலாக, அந்த சம்பவம் நண்பகலில் நடந்தேறியதோடு, அது படம் பிடிக்கப்பட்டது, ஆயிரக் கணக்கான பாதுகாவலர்களின் கண்களுக்கு முன்னாலேயே அது கட்டவிழ்த்துவிடப்பட்டது, உத்தரபிரதேச மாநில பிஜேபி அரசாங்கமும் சரி, காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கமும் சரி அந்த பாதுகாவலர்களைத் தலையீடு செய்ய உத்தரவிடவில்லை.

பாபர் மசூதி இடிப்பு சம்பவம் மீதான உத்தியோகபூர்வ அரசு விசாரணை, அதாவது லிபெர்ஹன் கமிஷன் (Liberhan Commission), மிகக் கால தாமதமாக அதன் இறுதி அறிக்கையை 2009இல் சமர்ப்பித்த போது, அந்த அறிக்கை, “அந்நடவடிக்கை பெரும் கடினமான தயாரிப்போடும், முன்கூட்டிய திட்டமிடலோடும் நடத்தப்பட்டிருந்தன எனும் முடிவுக்கு இட்டு செல்லும் வகையில் ஆதாரங்கள் ஆணித்தரமாக உள்ளன," என்று முடித்திருந்தது.

இருந்தபோதினும், கோப்ராபோஸ்ட் அம்பலப்படுத்தியிருப்பது இன்னும் பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. முன்னாள் இராணுவ அதிகாரிகளின் பாத்திரம் குறித்த விபரங்கள் அளித்தமை உட்பட, அந்த சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்ததை அதில் பங்குபற்றிய இத்தனை முக்கிய நபர்கள் இதற்கு முன்னர் இவ்விதத்தில் ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை. மேலும் வெவ்வேறு இந்து வகுப்புவாத அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகள், அது பாபர் மசூதி மீது தாக்குதல் நடத்துவதை நேரடியாக ஒழுங்கமைத்தவர்களாகட்டும், அல்லது தூண்டிவிட்டவர்கள் மற்றும் உடந்தையாய் இருந்தவர்களாகட்டும், அவர்கள் வகித்த பாத்திரங்கள் குறித்த விபரங்களைப் பதிவு செய்யவும் அவர்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் அனுமதித்ததில்லை.

இந்தியாவின் பொலிஸ், நீதித்துறை மற்றும் அரசாங்க அணுகுமுறையோ பாபர் மசூதி இடிப்பை கடந்த இரண்டு தசாப்தங்களாக கையாண்டு வந்ததோடு, அந்த அமைப்புகள், கோப்ராபோஸ்ட் அறிக்கையை முன்னுக்குப் பின் முரணானதென்று உதறித் தள்ளியுள்ளன. லிபெர்ஹன் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் கூட எந்தவொரு நடவடிக்கையும் எடுத்திராத காங்கிரஸ் கட்சி தலைமையிலான UPA கூட்டணி அரசாங்கம், சமீபத்திய வெளியீடுகளை ஒரு மரணகதியிலான மவுனத்தோடு வரவேற்றது, அதேவேளையில் இந்தியாவின் முதன்மை அரசு புலனாய்வு முகமையான CBI (மத்திய புலனாய்வு அமைப்பு), அதில் "எந்தவொரு ஆதாரபூர்வ மதிப்பும்" இல்லை என கூறி உடனடியாக உதறித் தள்ளியது.

வகுப்புவாத மற்றும் மூடநம்பிக்கைத்தனமான ராம் ஜன்மபூமி இயக்கத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த BJPக்கு இது தெய்வாதீனமாக இருக்கும் என்பதைக் கூற வேண்டியதே இல்லை, இந்தியாவின் அதிக மக்கள்தொகை நிறைந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் ஜூன் 1991இல் முதல்முறையாக பதவிக்கு வர அந்த இயக்கத்தை BJP பயன்படுத்தியது. அதற்கு முந்தைய ஆண்டு, பிஜேபி தேசிய தலைவர் எல். கே. அத்வானி, ராம் ஜன்மபூமி இயக்கத்திற்கு ஆதரவு திரட்ட, இந்தியாவின் இந்து குணாம்சத்தை எடுத்துக்காட்ட முன்னோடியான பிரச்சாரமென்று கூறி, இந்தியா முழுவதிலும் ஒரு வாரகால ரத யாத்திரை பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோப்ராபோஸ்ட் செய்தியின்படி, அந்த மசூதி இடிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே VHP மற்றும் சிவசேனாவினால் இரகசியமாக அந்த இடிப்பு குழுக்களுக்கு பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நடவடிக்கை நடந்தேறுவதற்கு சற்று முன்னதாக, அயோத்தியாவில் அத்வானி மற்றும் ஏனைய மூத்த பிஜேபி தலைவர்கள் பங்குபெற்ற ஒரு பெரிய கூட்டத்திலேயே அந்த விபரங்கள் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டன.

இந்த இடிப்பு சம்பவத்தை நடத்திய கரசேவகர்களுக்கு (சுய ஆர்வலர்கள்) பயிற்சியளிப்பதில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மற்றும் ஏனைய பிஜேபி குத்தகைதாரர்கள் நேரடியாக பங்குபெறவில்லை என்றபோதினும், பாபர் மசூதி இருந்த இடத்தில் ஒரு கோயில் கட்டுவதில் பங்கெடுக்க பல கரசேவகர்கள் ஒரு மதவாத உறுதிமொழி எடுத்தபோது அவர்கள் அங்கே இருந்தனர்.

பாபர் மசூதியை இடிப்பதற்கான முடிவு பல்வேறு உயர்மட்ட இரகசிய கூட்டங்களினூடாக எடுக்கப்பட்டிருந்தது. VHP தலைவர் அசோக் சிங்ஹாலும், மற்றொரு RSS தலைவரும் மற்றும் அத்வானி, உமா பாரதி மற்றும் வினேய் கதியார் உட்பட மூத்த பிஜேபி தலைவர்களும் உட்பட RSS, VHP மற்றும் பஜ்ரங் தளம் தலைவர்கள் அந்த கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தனர்.

சிவ சேனா நவம்பர் 1992இல் வடக்கு ஆவென்யூவில் அதன் சொந்த இரகசிய கூட்டத்தை நடத்தியது, அதில் ஜய் பகவான் கோயல் மற்றும் மொரேஷ்வர் சேவ் உட்பட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். சிவ சேனாவின் உயர் தலைவரான மறைந்த பால் தாக்கரே அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றபோதினும், இடிப்பதற்கான திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் விவகாரங்களை அவர் மிக நெருக்கமாக மேற்பார்வையிட்டு வந்தார்.

உத்தர பிரதேச பிஜேபி முதல் மந்திரி கல்யாண் சிங்கும், காங்கிரஸ் பிரதம மந்திரி ராவும் பாபர் மசூதி மீதான தாக்குதல் குறித்து முன்கூட்டிய அறிந்திருந்தார்கள் என்பதோடு அது நிகழ அவர்கள் அனுமதித்தார்கள் என்ற உண்மையின் மீது கூடுதல் ஆதாரங்களையும் கோப்ராபோஸ்ட் நேர்காணல்கள் வழங்குகின்றன. உத்தர பிரதேச மாநில அரசாங்கம் பாபர் மசூதியைப் பாதுகாக்க வேண்டுமென்ற உச்ச நீதிமன்ற உத்தரவை வெளிப்படையாக மீறும் விதத்தில், கல்யாண் சிங் மாநில பாதுகாப்பு படைகளை ஒதுங்கி இருக்க உத்தரவிட்டார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கத்திடம் தலையீடு செய்ய போதுமான காரணங்கள் இருந்தும், இந்து மேலாதிக்கவாதிகள் அவர்களின் இடிக்கும் திட்டத்தை நிறைவேற்ற அனுமதித்தது.

மதசார்பற்ற இந்தியாவின் பாதுகாவலனாகவும், பாதுகாப்பு அரணாகவும் காங்கிரஸ் காட்டிக் கொள்கின்ற அதேவேளையில், இந்து வகுப்புவாதத்தை முற்றிலுமாக ஊக்குவிப்பதிலும் மற்றும் அதற்கு உடந்தையாய் இருப்பதிலும், 1947இல் துணைகண்டத்தின் இரத்தந்தோய்ந்த வகுப்புவாத பிரிவினையில் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளோடு ஒத்துழைத்ததில் அது வகித்த பாத்திரம் முதற்கொண்டு, உண்மையில் அது ஒரு நீண்டகால வரலாறைக் கொண்டுள்ளது.

1980களில் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு இந்து வலதிற்கு விட்டுக்கொடுப்புகளை அளித்தது, அதுவரையில் அவை ஒரு வரம்பிற்குட்பட்ட சக்தியாகவே இருந்தன. 1949இல் இந்து மேலாதிக்கவாதிகள் மசூதிக்குள் திருட்டத்தனமாக கொண்டு போய் வைக்கப்பட்டிருந்த இந்து கடவுளான இராமரின் சிலையை இந்து அடிப்படைவாதிகள் வணங்க மற்றும் அந்த கோயிலுக்குள் நுழைய அவர்களை அனுமதிக்கும் வகையில், 1985இல் பிரதம மந்திரி ராஜீவ் காந்தி பாபர் மசூதிக்கு இடப்பட்டிருந்த பூட்டுக்களை நீக்குமாறு உத்தரவிட்டதும் இதில் உள்ளடங்கும்.

குறிப்பாக தேசிய நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார சமயத்தில் கோப்ராபோஸ்டின் வெளியீடுகள் வந்திருப்பதால், அவை BJPஐ ஆத்திரமூட்டி உள்ளன.

மூத்த பிஜேபி தலைவர் ரவி சங்கர் பிரஷாத், “அது கோப்ராபோஸ்ட் அல்ல, அது காங்கிரஸ் போஸ்ட்," என்றார். தேர்தல் விரோதிகளால் தேர்தல் ஆதாயங்களுக்காக "ஊக்குவிக்கப்பட்ட" நயவஞ்சக நடவடிக்கை என்று அவர் அதை குற்றஞ்சாட்டினார்.

பிஜேபி அதன் தேர்தல் அறிக்கையில், “அயோத்தியாவில் ராமர் கோயில் கட்டுவதற்கு உதவும் வகையில் அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் அனைத்து வாய்ப்புகளையும் காண" வாக்குறுதி அளித்ததன் மூலமாக, இராமர் கோயில் கட்டும் அக்கட்சியின் வகுப்புவாத பிரச்சாரத்தை அது மீண்டும் முன் கொண்டு வந்துள்ளது.

BJP'இன் தேர்தல் பிரச்சாரம் குஜராத் முதல் மந்திரியும், சுய-பாணியிலான "இந்துவாத இரும்புமனிதரும்", கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளருமான நரேந்திர மோடியால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குஜராத்தின் 2002 முஸ்லீம்-விரோத படுகொலைகளைத் தூண்டிய முக்கிய தூண்டுதாரியான மோடி போன்ற ஒரு முரட்டு இந்து வகுப்புவாதி, இந்திய அரசியலின் மகுடத்திற்கு உயர்த்தப்பட்டிருப்பது, இந்திய மற்றும் மேற்கத்திய மேற்தட்டு எதை "உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்" என்று துதிபாடுகிறதோ அங்கே நிலவும் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகளின் உண்மையான நிலையை அடுக்கடுக்காக பேசுகிறது.