World Socialist Web Site www.wsws.org |
“A campaign to revive the May Day traditions and socialist consciousness is much
needed” "மே தின பாரம்பரியங்கள் மற்றும் சோசலிச நனவை மீட்டெடுக்கும் ஒரு பிரச்சாரம் அவசிய தேவையாகும்"சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து தொழிலாளர்கள் பேசுகின்றனர்
By our reporters
மே 4இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், உலக சோசலிச வலைத் தளமும் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச இணையவழி மே தின கூட்டத்திற்கு இதுவரை ஆறு கண்டங்களின் 40க்கும் அதிகமான நாடுகளிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. வாரயிறுதி வாக்கில், அமெரிக்க பிரச்சார குழுக்கள் நிகழ்வு குறித்த அறிவிப்பு பிரசுரங்களை வினியோகித்ததோடு, அதன் நோக்கம் குறித்து — அதாவது யுத்தம், சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஒழுங்கமைப்பது குறித்து — தொழிலாளர்களோடும், இளைஞர்களோடும் கலந்துரையாடினர். அதில் கலந்து கொள்ள திட்டமிடுவது ஏன் என்பதை விவரித்து பலர் கருத்து கூறினார்கள். மிசோரியின் ஒரு வாகனத்துறை தொழிலாளரான பிரெய்ன் கூறினார், “ஒரு பூகோளமயப்பட்ட பொருளாதாரத்தில் ஒரே வேலைக்காக சண்டையிட தொழிலாளர்கள் ஒருவருக்கு எதிராக மற்றொருவர் நிலைநிறுத்தப்படுகிறார்கள். இலாபத்தை அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்புமுறையால் வேலைகளைப் பாதுகாக்க முடியாது; நாங்கள் மேலும் மேலும் குறைக்கப்படும் கூலிகளை ஏற்க வேண்டியவர்களாக இருக்கிறோம். முதலாளித்துவவாதிகளுக்கும், தொழிலாளர்களுக்கு எதிராக அவர்கள் நடத்தும் போருக்கு எதிராகவும் தொழிற்சங்கங்கள் போன்ற தேசிய அமைப்புகளைக் கொண்டு நீங்கள் போராட முடியாது. சர்வதேசரீதியில் ஐக்கியப்படுத்துவது மட்டுமே சமத்துவமின்மையை நிறுத்த மற்றும் ஒவ்வொருவருக்கும் செல்வ வளத்தைப் பகிர்ந்தளிக்க ஒரே வழியாகும். பிரெய்ன் தொடர்ந்து கூறுகையில், “யுத்தங்கள் 'சுதந்திரத்திற்காக' நடத்தப்படுவதாக அவர்கள் எங்களுக்கு கூறுகிறார்கள். அதுவொரு பொய். நீங்கள் வரலாற்றில் பாருங்கள், யுத்தங்கள் நடத்தப்படும் போது தொழிலாள வர்க்கம் தான் பாதிக்கப்படுகிறது. முதலாளித்துவமும், இலாபங்கள் மற்றும் மூலப் பொருட்களுக்கான போட்டியும் தான் யுத்தத்தை ஏற்படுத்துகின்றன. அது தான் ஏகாதிபத்தியம். 'நமது' நாட்டிற்காக போராடுவதற்கு பதிலாக, சர்வதேச அளவிலான தொழிலாளர்கள் ஒரு சிறந்த உலகத்திற்காக போராட வேண்டும். இதற்கான விடை உலகளாவிய சோசலிசமாகும், அதன் நோக்கம் இலாப அடிப்படையில் இருப்பதில்லை மாறாக ஒவ்வொருவரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் அடிப்படையில் இருக்கிறது," என்றார். கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட கலை அருங்காட்சியகத்தில் (LACMA) வாயிற் காவலரான வேய்ன் கூறினார், “1970களில் தொழிலாளர்கள் சில கண்ணியமான சலுகைகளை அனுபவித்தார்கள். வேலை ஓய்வூக்குப் பின்னர் உங்களுக்கு பாதுகாப்பும், ஏனைய சலுகைகளும் கிடைக்கும் என்பதை நீங்கள் அறிந்தே நீங்கள் வேலை செய்வீர்கள். ஆனால் இப்போது, குறைவாக இல்லையென்று வைத்து கொண்டாலும், அதே பணத்திற்காக எங்களது வாழ்நாளில் அதிக காலத்திற்கு வேலை செய்யுமாறு அவர்கள் கேட்கிறார்கள். “ஊதியங்களின் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது, நாங்கள் இன்னும் ஒரு காசோலையில் இருந்து மற்ற காசோலையை நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஒபாமாகேர் நடைமுறைக்கு வந்த போது, அது எனக்கு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரவில்லை, ஆனால் இப்போது மில்லியன் கணக்கானவர்கள் மருத்துவ காப்பீட்டிற்காக பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. அது ஏதோ நாடுதழுவிய இலவச மருத்துவ காப்பீடு போன்று காட்டப்பட்டாலும், அது அவ்விதமான ஒன்றல்ல. ஆனால் மருத்துவ காப்பீடு என்பது அனைவருக்குமான ஒரு அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும். "மே தின விடயம் மிகவும் முக்கியமானதென நான் கருதுகிறேன். அதை என்னைப் போன்ற தொழிலாளர்கள் மத்தியில் நனவை வளர்க்க நாம் பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியமானதாகும்," என்றார். லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு மின்சார பணியாளரான ஆலோன்சோ கூறினார், “இப்போதெல்லாம், உத்தியோகபூர்வ அரசியலில் என்னைப் போன்ற தொழிலாளர்களை யாரும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்று நான் உணர்கிறேன். குடியரசு கட்சியினரோ, ஜனநாயக கட்சியினரோ, அவர்கள் யாரும் என்னை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. தேர்தல்கள் சக்தி வாய்ந்தவர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது. அவர்கள் அவர்களின் சொந்த பிரதிநிதிகளை தேர்தலில் நிறுத்துகிறார்கள், பின்னர் அவர்களுக்கு சொந்தமான ஒருவருக்கு வாக்களிக்குமாறு எங்களிடம் கேட்கிறார்கள். பின்னர், யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் எங்களை உதறித் தள்ளிவிடுகிறார்கள். இனியும் வாக்களிக்க விரும்பாத அளவிற்கு நான் மிகவும் ஏமாற்றம் அடைந்திருக்கிறேன்," என்றார். LACMA இல் வேலை செய்து வரும் வின்சென்ட் விவரித்தார், "சமூக சமத்துவமின்மை மீதான பிரச்சினையே மையமாக உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் வாழ்க்கை தரங்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களை நான் பார்த்துள்ளேன். எனக்கு 10 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்; அவளுடைய எதிர்காலம் குறித்து எனக்கு கவலையாக இருக்கிறது. குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் பொதுக்கல்வியை தனியார்மயப்படுத்தி வருவதோடு, எந்தவொரு கண்ணியமான வேலைகளும் இல்லாத நிலையில், அவள் ஒரு குறைந்த ஊதியத்தை பெறுவதற்காக செலவு பிடிக்கும் கல்லூரி படிப்பைத் தொடர்வது மதிப்புடையதாக இருக்குமா என்று கூட நான் சில வேளைகளில் சிந்திப்பதுண்டு." உக்ரேனிய நிலைமைகளைக் குறித்து பேசுகையில், வின்சென்ட் தொடர்ந்து கூறினார், “உக்ரேனைக் குறித்த ஊடகங்களின் செய்திகள் இங்கே மிகவும் குழப்பம் ஏற்படுத்துவதாக உள்ளன. நான் மேற்படி ஆதாரங்களுக்காக பிபிசி பார்க்க விரும்புவதுண்டு, ஆனால் அதுவும் கூட உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதில்லை. சான்றாக, அமெரிக்க ஆதரவிலான புதிய அரசாங்கத்தில் பாசிசவாதிகள் பங்குபற்றியிருப்பது, எனக்கு ஒரு புதிய செய்தியாக இருக்கிறது," என்றார். "சோசலிஸ்டுகள் இங்கே தொழிலாளர்களாகிய எங்களோடு பேசுவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்ட போது, நான் அவரை நம்பினேன். நான் அவரை ஒரு சோசலிஸ்ட்டாக அழைத்தேன், அது குறித்து எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது, அல்லது எனக்கு அவ்வாறு தோன்றியது. ஆனால் அவர் சோசலிசத்திற்கு எதிரானவர் என்பது தான் எதார்த்தமாக உள்ளது. மே தின பாரம்பரியங்களையும், சமூக சமத்துவமின்மை மற்றும் யுத்தத்திற்கு எதிராக சோசலிச நனவையும் மீட்டெடுக்கும் ஒரு பிரச்சாரம் அவசிய தேவையாகும்," என்றார். மத்திய இலினோய் இல் ஒரு சிமெண்ட் பூசுபவரான பாபி கூறுகையில், “உலக தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும். ரஷ்யாவில் உள்ள தொழிலாளருக்கோ அல்லது வேறெங்கும் உள்ள ஒரு தொழிலாளருக்கோ நான் எதிரி அல்ல, எனக்கும் அவர்கள் எதிரி கிடையாது. எங்கே இருக்கின்ற தொழிலாளர்களும் ஒரே விடயங்களைத் தான் விரும்புகின்றனர். அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க விரும்புகிறார்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளை கொல்வதற்கு அனுப்பப்படாதிருக்க விரும்புகிறார்கள். அமைதியோடு, தங்களின் குடும்பத்திற்கு போதிய உணவளிக்க விரும்புகிறார்கள்—இவை சமூக உரிமைகளாகும், அவை உலகெங்கிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒன்றுபோலவே உள்ளன. “சர்வதேச பெருநிறுவனங்களும், வர்த்தக அமைப்புகளும் ஐக்கியப்பட்டுள்ளன. அதேபோல உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கமும் ஐக்கியப்பட்டிருக்க வேண்டும். பண்டங்கள் தேசிய எல்லையைக் கடந்து செல்கின்றன, அதேபோல எங்கெங்கும் இருக்கும் தொழிலாளர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை முன்னெடுக்கும் தொழிலாளர்களுக்கான ஒரு கட்சி நமக்கு அவசியமாகும்," என்றார். உக்ரேன் குறித்துக் கூறுகையில் பாபி கூறினார், “ரஷ்யாவின் உள்ளே ஈராக் போலவே வளமான ஆதார வளங்கள் உள்ளன, ஏகாதிபத்தியவாதிகள் ஏற்கனவே ரஷ்யாவை சுற்றி வளைத்துள்ளனர். இது வியட்நாம் யுத்தத்தின் போது மொஹம்மது அலி கூறியதை எனக்கு நினைவுபடுத்துகிறது—அதாவது அங்கே எனக்கு எந்த எதிரியும் இல்லை. அவர்களோடு எனக்கு எந்த மோதலும் இல்லை," என்றார். மேலதிக விபரங்களுக்கும், சர்வதேச மே தின இணையவழி கூட்டத்தில் பதிவு செய்யவும், பின்வரும் முகவரியைப் பார்க்கவும்: http://www.wsws.org/tamil/category/mayday-2014.html அல்லது internationalmayday.org . |
|