World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

More lies from Obama on Obamacare

ஒபாமாகேர் மீது ஒபாமாவின் மேலதிக பொய்கள்

Kate Randall
19 April 2014

Back to screen version

வியாழக்கிழமை பத்திரிகையாளர் கூட்டத்தில், ஜனாதிபதி பராக் ஒபாமா கட்டுபடியாகிற மருத்துவ காப்பீட்டின் (Affordable Care Act - ACA) சிறப்புக்களைப் புகழ்ந்து பேசினார். மார்ச் 31ஐ இறுதி காலக்கெடுவாக கொண்டிருந்த அந்த சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட HealthCare.gov இணைய தளம் மற்றும் ஏனைய காப்பீட்டு பரிவர்த்தனை மையங்களில் 8 மில்லியன் மக்கள் பதிவு செய்திருப்பதான அரசாங்க மதிப்பீட்டை, மருத்துவ காப்பீட்டு சட்டத்தின் மிகப்பெரும் "வெற்றிக்கான" ஓர் அறிகுறியாக அவர் குறிப்பிட்டு காட்டினார்.

அவர் தெரிவித்தார், “காப்பீடு பெற்றிராத மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் இந்த ஆண்டு காப்பீடு பெற்றுள்ளதாக மொத்த அமைப்புசாரா வல்லுனர்களும் இப்போது மதிப்பிடுகின்றனர்—மில்லியன் கணக்கானவர்கள் அடுத்த ஆண்டும், அதற்கடுத்த ஆண்டும் காப்பீடு பெறவிருக்கிறார்கள்." ஜனாதிபதியால் வர்ணம் பூசப்பட்ட ஒபாமாகேர் திட்டத்தின் பிரகாசமான சித்திரம் அமெரிக்க மக்களின் புத்திஜீவியத்தை அவமதிப்பதாக உள்ளது, அது மருத்துவ காப்பீட்டு சீரமைப்பின் தற்போதைய நிலையைக் குறித்த மிகவும் அடிப்படையான உண்மைகளை புறக்கணிக்கிறது.

அனைத்திற்கும் மேலாக, அதில் பதிவு செய்து வருபவர்கள் மிகவும் விருப்பத்தோடு தன்னிச்சையோடு அவ்வாறு செய்யவில்லை. ACAஇன் முக்கிய உட்கூறான "தனிநபர் மீதான நிபந்தனையின்படி", தொழில் வழங்குனர்களிடம் காப்பீடு பெறாமல் இருந்தாலோ அல்லது அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் (Medicare) அல்லது மருத்துவ உதவிகள் (Medicaid) போன்ற திட்டங்களில் இல்லாமல் இருந்தாலோ கட்டாயம் காப்பீடு பெற்றாக வேண்டும் அல்லது அபராதம் செலுத்தி ஆக வேண்டும். அடிப்படையில், காப்பீடு இல்லாதவர்கள் தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து காப்பீடு பெற மிரட்டப்பட்டு வருகின்றனர்.

இரண்டாவதாக, பரிவர்த்தனை மையங்களின் திட்டங்களில் காப்பீடு செய்யும்போது பரந்த பெரும்பான்மை மக்களுக்கு கட்டுபடியாகிற செலவில் தரமான காப்பீடு கிடைக்கிறதென்ற வாதம் ஒரு மோசடியாகும். மிகக் குறைந்த கட்டணத்திலான பெரும்பாலான "வெண்கல பிரிவு" திட்டங்கள், ஒரு தனிநபருக்கு 5,000 டாலருக்கு மிஞ்சாதளவிற்கு மருத்துவ செலவுகளை ஏற்றுக் கொள்கிறது, அதற்கு அதிகமானால் கையிலிருந்து பணம் செலுத்த வேண்டியதிருக்கும், அதுவும் காப்பீடு தொடங்குவதற்கு முன்னரே அதை செலுத்தியாக வேண்டும், என்பதை காப்பீடுகள் பெற சென்றவர்கள் கண்டறிந்துள்ளனர்.

"அவை தசாப்த காலங்களுக்கானவை என்பதால், காப்பீடு கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து செல்லும்," என்பதை ஒபாமா ஒப்புக் கொள்கிறார், அதேவேளையில் அந்த உயர்வு "நிஜமாக அனுமானிக்கப்பட்டதை விடவும் 15 சதவீதம் குறைவாக" இருக்குமென மதிப்பிடப்பட்டிருப்பதாக கூறினார். "குடும்பங்களால் வணிகம் செய்வதற்கு நிறையப் பணம் செலவழிக்க முடிந்தால், வணிகங்களால் புதிய தொழிலாளர்களை நியமிக்க அதிக பணம் செலவிட முடியும்," என்று அவர் இதை ஏதோவொரு விதத்தில் வினோதமாக அர்த்தப்படுத்துகிறார்.

அமெரிக்க வணிகங்கள் வேலைகளை வெட்டுவதோடு உற்பத்திதிறனை அதிகரித்து வருகின்ற நிலையில், அவை தற்போது 1.5 ட்ரில்லியன் டாலர் என்று மதிப்பிடத்தக்க அளவிற்கு ரொக்கம் பதுக்கப்பட்டிருப்பதன் மீது உட்கார்ந்திருக்கின்றன என்பதும், அதேவேளையில் பெருநிறுவன இலாபங்களும், தலைமை செயலதிகாரிகளின் சம்பளங்களும் உயர்ந்து வருகின்றன என்பதும் ஒபாமாவிற்கு நன்கு தெரியும். ஒபாமாகேர் திட்டம் இந்த போக்கை மாற்றிவிடப் போவதும் இல்லை, அவ்வாறு செய்வதற்கான உத்தேசமும் அதற்கு இல்லை.

அதற்கு முரணாக, அது காப்பீடுகளை ஏகபோகங்களாக்க உதவவும், மருத்துவத்துறை நிறுவனங்களும் பெரிய பெரிய மருத்து காப்பீட்டு நிறுவனங்களும் செலவுகளைக் குறைக்கவும், ஏன் அவை இன்னும் கூடுதலாக பணம் சம்பாதிக்கவும் கூட, உதவுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த திட்டம் மெடிகேர் திட்டதிற்கு இணையான ஒரு உண்மையான சீர்திருத்தம் என்பதும், அது மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் மருத்துவ காப்பீட்டை மேம்படுத்தும் என்பதும் ஒபாமாவிடம் இருந்து வந்த மிகப் பெரிய பொய்களாகும். ஆரம்பத்திலிருந்தே, மருத்துவ காப்பீட்டு சீரமைப்பு என்றது ஏற்கனவே இருக்கும் காப்பீட்டு முறையை விட மருத்துவ காப்பீட்டை மிகவும் பலமாக வர்க்க-அடிப்படையிலான அமைப்புமுறையாக ஸ்தாபிக்கும் நோக்கம் கொண்டிருந்தது, அதில் அரசு மற்றும் தொழில் வழங்குனர்களுக்கு செலவுகள் குறைக்கப்பட்டதோடு, தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கான அரசின் மெடிகேர் திட்டமோ பங்கிட்டு வழங்கப்பட்டது.

"சிகிச்சைக்கான செலவு மருத்துவர்களைப் பாதிக்கும்," என்ற தலைப்பில் வெள்ளியன்று நியூ யோர்க் டைம்ஸில் வெளியான ஒரு முதல்பக்க கட்டுரை, இந்த கண்மூடித்தனமான யதார்த்தம் எவ்வாறு ஒபாமாகேர் திட்டத்தின் கீழ் நடைபெறுகிறது என்பதை குறிப்பிடுகிறது. அந்த கட்டுரை இவ்வாறு தொடங்குகிறது: “மருத்து காப்பீட்டு கட்டணங்கள் உயர்வதை அவர்களால் தவிர்க்கவியலாதென கூறுவதால், மருத்துவர்கள் துல்லியமான சிகிச்சையை மட்டுமல்ல, நோயாளிகளின் நிலை குறித்து அவர்கள் முடிவெடுப்பதால், அவர்கள் செலவுகளையும் சீர்தூக்கி பார்க்க வேண்டுமென நாட்டிலுள்ள மிகவும் செல்வாக்குமிக்க மருத்துவர் குழுக்களில் சில பரிந்துரைக்கின்றன.

"இந்த மாற்றம் ... மருத்துவர்கள் தனிப்பட்ட நோயாளிகள் குறித்து பிரத்யேகமாக கவனம் செலுத்துவதில் இருந்து மருத்துவ காப்பீட்டு டாலர்கள் எவ்வாறு செலவிடப்படுகின்றன என்பதில் கவனம் செலுத்துவதில், அவர்களின் பாத்திரத்தை மறுவரையறை செய்ய தொடங்குகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது," என்று அந்த கட்டுரை குறிப்பிடுகிறது.

American Society of Clinical Oncology, American College of Cardiology, American Heart Association மற்றும் ஏனையவைகளும் உட்பட, செல்வாக்குமிகுந்த மருத்துவ குழுமங்கள், மருந்துகளின் மதிப்பை தீர்மானிப்பதிலும், செலவுகளின் அடிப்படையில் சிகிச்சை அளிப்பதிலும் மருத்துவர்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை எவ்வாறு வகுக்கின்றன என்பதை அந்த கட்டுரை விவரிக்கின்றது. பாரம்பரியமாக இந்த வழிகாட்டி நெறிமுறைகள் "மருத்துவ நடைமுறைகளை பலமாக பாதித்துள்ளன" என்பதோடு, “காப்பீட்டு செலவை ஈடுகட்டுவதில் இவை காப்பீட்டு நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன" என்று டைம்ஸ் விவரிக்கிறது.

இந்த தாக்கங்கள் நீண்ட காலத்திற்குரியவையாக, அபாயகரமானவையாக உள்ளன. அதுபோன்ற வழிகாட்டி நெறிமுறைகள் மருத்துவர்கள் ஒரு மருந்துக்கு பதில் மற்றொரு மருந்தைத் தேர்ந்தெடுக்க சேவை செய்யக்கூடும், அல்லது ஒரு குறிப்பிட்ட சிகிச்சை மிகவும் செலவு பிடிக்கும் என்பதால் அதை நிறுத்தி வைக்குமாறு செய்யக்கூடும். சான்றாக, இதயநோய் மருத்துவர் சமூகங்கள், “செலவுக்கேற்ப ஆயுள்காலத்தை ஈடு செய்யும் தரம், அல்லது QALY" எனும் சிகிச்சைகளுக்கு மதிப்பை நிர்ணயிக்க ஆலோசித்து வருகின்றன. இந்த முறை தற்போது பிரிட்டனிலும், சில மருத்துவ பொருளியல்வாதிகளாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. QALY என்பது இத்தனை ஆயுள் காலத்திற்கு, இன்ன தரத்தில் சிகிச்சை என்பதை அடிப்படையாக கொண்டுள்ளது, அதற்கேற்ப கூடுதலாக செய்ய வேண்டிய மருத்துவ சிகிச்சைகள் பரிந்துக்கப்படும்.

ஒரு சிறிய குறிப்பைப் போல டைம்ஸ் குறிப்பிடுகிறது, “உச்சகட்டமாக, செலவின் அடிப்படையில் சிகிச்சையைத் தேர்ந்தெடுக்க செய்வது ஒருவிதமான பங்கீட்டு வடிவமென சில விமர்சகர்கள் கூறுகின்றனர்.” ஆனால் இது தான் முக்கியமான புள்ளி. வயதானவர்கள் கடுமையாக நோய்வாய்பட்டிருக்கும் போது, வாழ்வின் இறுதிகாலத்தை நெருங்கி கொண்டிருக்கையில், முதலாளித்துவவாதிகளுக்கு எந்த இலாபங்களையும் இனியும் உருவாக்க முடியாதபோது, வெறுமனே ஒரு சில வாரங்களுக்கோ, மாதங்களுக்கோ, அல்லது சில ஆண்டுகளுக்கோ வாழ்க்கையை நீடிக்கக்கூடிய மருந்திற்காக அல்லது சிகிச்சைக்காக எதற்காக செலவு செய்ய வேண்டும்? என்ற அடிப்படையில், மிக தெளிவாக, இதுபோன்று பங்கீட்டு வழங்குவதில் வயதானவர்கள் தான் முக்கிய இலக்கில் இருப்பார்கள்.

முன்பே WSWS குறிப்பிட்டதைப் போல, இதுபோன்ற வாதங்கள் மிக தெளிவாக, “மனரீதியாக குறைபாடுடையவர்களால், அல்லது உடல்ரீதியாக ஊனப்பட்டிருப்பவர்களால் 'சமூகத்திற்குக் கிடைக்கக்கூடிய ஆதாயங்கள்' என்ன? அவர்கள் வாழ்க்கை குறைக்கப்பட்டால் அது சமூகத்திற்கு இன்னும் கூடுதலாக சேவை செய்யுமல்லவா?” என்பது போன்ற ஒரு பாசிச துர்நாற்றத்தைக் கொண்டிருக்கின்றன.

செலவின் அடிப்படையில் மருத்துவ காப்பீட்டை பங்கிட்டு வழங்குவதென்பது (rationing) மில்லியன் கணக்கான மக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் விதத்தில் தகுந்த சிகிச்சைகளையும், மருத்துவ பராமரிப்புகளையும் நிறுத்தி வைப்பதை மட்டுமல்ல, மாறாக தேவையற்ற உயிரிழப்புகளையும் விளைவாக ஏற்படுத்தும் என்று கூறினால் அது மிகையாகாது. உண்மையில், பணத்தால் வாங்கக்கூடிய சிறந்த மருத்துவ காப்பீடுகளை செல்வந்தர்கள் பெறுவார்கள், அவர்களுக்கு இந்த பங்கீடு விதிகள் எதுவும் பொருந்தாது.

பங்கிட்டு கொடுக்கும் உந்துதலுக்கு பின்னால் இருப்பது, அதிகரித்துவரும் மருந்துகள் மற்றும் சிகிச்சை செலவுகளே ஆகுமென டைம்ஸ் தெரிவிக்கிறது. சான்றாக, “அதிகரித்து வரும் புற்றுநோய் மருந்துகளின் விலைகளைக் குறித்தும்", செலவு மற்றும் முக்கிய தேவையின் அடிப்படையில் மருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் முறை அபிவிருத்தி அடைந்து வருவதைக் குறித்தும் புற்றுநோய் மருத்துவர் சமூகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஹெபடிடிஸ் C க்கான Gilead Sciences நிறுவனத்தின் ஒரு புதிய மருந்தான சோவால்டியின் (Sovaldi) ஒரு டப்பா விலை 84,000 டாலர் என்று அந்த கட்டுரை குறிப்பிடுகிறது. உயிர் பறிக்கும் நோய்களோடு போராடி கொண்டிருக்கும் மக்களின் வேதனையிலிருந்து இலாபம் பார்க்கும் மருத்துவ நிறுவனங்களால் விலைகள் உயர்த்தப்படுவதாலேயே, பெரும்பாலும் இதுபோன்ற மோசடி விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்பது ஒருபோதும் குறிப்பிடப்படுவதே இல்லை.

சிகிச்சைகளின் செலவு மற்றும் அதற்குரிய மதிப்பைப் பட்டியலிடும் புதிய கொள்கைகளை எடுத்துக்காட்டும் ஓர் ஆய்வறிக்கையில், நோயாளிகள் முகங்கொடுக்கும் நிதியியல் சுமையை மருத்துவர்கள் கவனத்தில் எடுக்க பார்க்க வேண்டி இருப்பதாக இதயநோய் மருத்துவர் சமூகங்கள் வாதிடுகின்றன: “நிதிச்சுமையிலிருந்து நோயாளிகளைக் காப்பாற்ற, 'இதுவொரு பெரிய பாதிப்பல்ல' என்று போதிப்பது அடிப்படையாக உள்ளது." இது கவனிக்கத்தக்கதாகும்! இந்த காரணத்திற்காக, உயிரைக் காப்பாற்றக்கூடிய சிகிச்சைகளை நிறுத்தி வைத்து மருத்துவர்கள் நோயாளிகளுக்கு உதவி செய்வார்கள்.

நோயாளிகளுக்கு ஏதாவதொன்றில் இருந்து பாதுகாப்பு தேவையென்றால், அது இலாபத்திற்கான மருத்துவ முறையிலிருந்து தான் பாதுகாப்பு கிடைக்க வேண்டும், இந்த மருத்துவ முறையில் ஒரு நடைமுறையின் மதிப்பு அல்லது மருந்தின் மதிப்பானது, நோயாளிக்கு அந்த மருந்து எந்தளவிற்கு தேவைப்படுகிறதென்பதில் இருந்தல்ல, மாறாக சங்கிலி போன்றிருக்கும் பெரிய பெரிய மருத்துவத்துறை நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு பெருநிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் அடிமட்டத்தை அவை எவ்வாறு தாக்குகின்றன என்பதிலிருந்து தீர்மானிக்கப்படுகிறது.

செலவின் அடிப்படையில் மருத்துவ சிகிச்சைகளை பட்டியலிடும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க செயல்படும் செல்வாக்குமிக்க மருத்துவ குழுக்களின் நகர்வுகள் உட்பட, மருத்துவ காப்பீடை பங்கீடு செய்து அளிப்பதென்பது ஒபாமாகேர் திட்டத்தின் கீழ் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாக உள்ளது. இது ஒபாமாவின் முன்னோடியான உள்நாட்டு கொள்கையின் பிற்போக்குத்தனமான குணாம்சத்தை உயர்த்திக் காட்டுகிறது. அதுவொரு சீர்திருத்தம் அல்ல, மாறாக சாமானிய அமெரிக்கர்களுக்கு மருத்துவ காப்பீட்டை வெட்டுவதை மற்றும் பங்கிட்டு வழங்குவதை மட்டுமல்ல, தொழிலாள வர்க்கத்தின் ஆயுள்காலத்தை குறைப்பதை நோக்கமாக கொண்டு மருத்துவ காப்பீட்டில் செய்யப்பட்ட ஓர் எதிர்புரட்சியாகும்.

அமெரிக்க மருத்துவ காப்பீட்டு முறையின் உண்மையான சீர்திருத்தம், கட்டுபடியாகிற காப்பீட்டு சட்டம் போன்ற எதையும் போன்று இருக்க முடியாது. மருத்துவ காப்பீட்டை ஒரு சமூக உரிமையாக பாதுகாக்க வேண்டுமானால், ஒட்டுமொத்த மருத்துவ காப்பீட்டு தொழில்துறையையும் சோசலிச அடித்தளத்தில், பொதுவுடைமையின் கீழ், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டில் நிறுத்துவது அவசியமாகும்.