World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி German government seeks to prevent parliamentary committee from questioning Edward Snowden எட்வார்ட் ஸ்னோவ்டெனை பாராளுமன்றக்குழு கேள்வி கேட்பதில் இருந்து தடுக்க ஜேர்மனிய அரசாங்கம் முற்படுகிறது
By Sven Heymanns ஜேர்மனிய கூட்டரசாங்கத்தின் கட்சிகள், கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் /கிறிஸ்துவ சமூக யூனியன் (CDU/CSU), மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஆகியவை, ஒரு ஜேர்மனிய பாராளுமன்றக் குழு ஒன்றின் மூலம், NSA ஒற்று வேலையை பற்றி அம்பலப்படுத்திய எட்வார்ட் ஸ்னோவ்டெனை கேள்விக்கு உட்படுத்துவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அது அமெரிக்காவுடன் ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கைகளை ஆபத்திற்கு உட்படுத்திவிடும் என்பதால் அரசாங்க கட்சிகள் ஸ்னோவ்டெனுக்கு மிகவும் எதிராக உள்ளன (அவர் உலக ஜனத்தொகை மீது உளவுத்துறைப் பிரிவுகளின் பரந்த கண்காணிப்பை அம்பலப்படுத்தினார்). முன்னாள் NSA ஒப்பந்தக்காரருடன் பேசுவதற்கு, பசுமைக் கட்சி மற்றும் இடது கட்சிப் பிரதிநிதிகள் வழங்கிய விண்ணப்பம் கடந்த வியாழன் அன்று குழுவின் கூட்டத்தொடரில் முறையாக நிறுத்தி வைக்கப்பட்டது. CDU/CSU/SPD குழு உறுப்பினர்கள் விண்ணப்பம் குறித்து குழுவின் அடுத்த கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என முடிவெடுத்தனர். கூட்டத்திற்கு முன்பு அரசாங்கம் தேவையானால் எந்த அளவிற்கு, ஸ்னோவ்டெனை கேள்வி கேட்பது இயலும் என நிர்ணயிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிடும். குழுவின் அடுத்த அமர்வு மே 8 வரை நடைபெறாது; இது சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுக்கு அவருடைய அமெரிக்க விஜயத்தை உறுதிப்படுத்தும், அவர் அங்கு மே 2 அன்று செல்கிறார். கூட்டணி அரசாங்கம் இதையொட்டி குறைந்தப்பட்சம் தற்காலிகமாகவேனும் ஜேர்மனியின் மிக முக்கியமான வெளியுறவுக் கொள்கை நட்பு நாட்டை அவமதிப்பதை தவிர்க்கலாம். NSA விசாரணைக்குழு அதன் பணியை தொடங்கியதில் இருந்தே, ஜேர்மனிய அரசாங்கம் NSA இன் குற்றம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் ஜேர்மனிய உளவுத்துறைப் பிரிவுகளுடன் அதன் ஒத்துழைப்பு குறித்து வெளியிட அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டது. ஸ்னோவ்டென், சட்டவிரோத இணைய உளவு எப்படி அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறியது என்பதை மகத்தான முறையில் வெளிப்படுத்தியுள்ளார். "உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மின்னஞ்சலும் படிக்கப்படலாம்.... அனைத்து வலைத் தளத்தின் போக்குவரத்தும், ஒவ்வொரு கணனி, மடிக்கணினியும் ஒவ்வொரு இடத்திலும் உலகம் முழுவதும் இலக்கு வைக்கப்படலாம்” என்று ஸ்னோவ்டென் இந்த ஆண்டு தொடக்கத்தில் NDR வானொலி நிலையத்திடம் தெரிவித்தார். ஜேர்மனியின் கூட்டாட்சி உளவுத்துறைப் பிரிவு (BND) NSA இன் தரவு வங்கிகளுக்கு XKey Score Programme மூலம் அணுகமுடியும் என்பதை ஸ்னோவ்டென் தெரிவித்துள்ளார். BND ஜேர்மனிய குடிமக்கள் பற்றிய தரவுகளை அணுகமுடியும் என்று மட்டுமின்றி, அத்தகைய தரவுகளை அதுவே சேகரிக்கிறது என்றும் தெரிவித்தார். ஸ்னோவ்டென் கொடுக்கும் தகவல்களை நன்கு அறிந்தவரும் அதில் இருந்து சில பகுதிகளையும் வெளியிட்டவருமான செய்தியாளர் கிளன் க்ரீன்வால்ட், Frankfurter Allgemeine Zeitung செய்தித்தாளிடம் “ஜேர்மனியில் NSA உடைய ஒற்று வேலையை, இந்த கிரகத்தில் வேறு எவரையும் விட அதைப்பற்றி அதிகம் தெரிந்துள்ள நபரிடம் கேட்காமல் (அதாவது, ஸ்னோவ்டென்)... விசாரிப்பது நம்பமுடியாத அளவிற்குப் பொறுப்பற்றது, இந்த விவரங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்றால் விசாரணையின் முக்கியத்துவம் குறித்து எவரும் பேச முடியாது.” என்றார். ஜேர்மனிய அரசாங்கம் தீவிர விசாரணை ஒன்றில் அக்கறை காட்டவில்லை; அது அதன் குற்றங்களையே அம்பலப்படுத்தும். கூட்டணிக் கட்சிகள் ஸ்னோவ்டெனை சாட்சியாக அனுமதிப்பதை தடுக்க முற்பட்டுள்ளன. விசாரணைக் குழுவில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு தாங்களே சாட்சிகளை தருவிக்க உரிமை உண்டு என்றாலும், ஆரம்பத்தில் இருந்தே அது பற்றிய கடுமையான மோதல்கள் இருந்துள்ளன. கடந்த வாரம் CDU வைச் சேர்ந்த குழுவின் தலைவர் கிளேமென்ஸ் பின்னிங்கர் இராஜிநாமா செய்துவிட்டார். வலதுசாரி NSU பயங்கரவாதக் குழு நடத்திய கொலைகளை விசாரிப்பதில் ஈடுபட்டிருந்த பின்னிங்கர், பசுமைக் கட்சியும் இடது கட்சியும் குழுவைத் தங்கள் “அரசியல் முக அடையாளத்தை” உயர்த்தப் பயன்படுத்துகின்றன, எனவே இராஜிநாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார். இதைத்தவிர, ஸ்னோவ்டெனை அழைப்பதில் ஏதேனும் பொருள் உண்டா என்றும் அவருக்கு சந்தேகங்கள் உண்டு. இங்கு ஸ்னோவ்டென் புதிதாக ஏதேனும் செய்திருக்க முடியுமா என்பது கேள்விக்கு உரியதுதான், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அவருடைய சாட்சியத்தில் அவர் பொதுவான அறிக்கைகளைத்தான் கொடுத்தார். இத்தகைய கூற்றுக்கள் அபத்தமானவை, நேர்மையற்றவை. ஸ்னோவ்டென் ஐரோப்பிய பாராளுமன்ற இடமான ஸ்ட்ராஸ்பேர்க்கில் விரிவாக பேச முடியாத முக்கிய காரணம், ரஷ்யாவில் அவருடைய தஞ்சம், அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு மேலும் சேதம் ஏற்படுத்தக் கூடாது என்பதாகும். ஸ்னோவ்டென் இன்னும் ரஷ்யாவில் தான் உள்ளார். ஆனால் அவருடைய ஓராண்டு தஞ்சக்காலம் ஜூலை இறுதியில் முடிவடைகிறது. அமெரிக்க அரசாங்கம் அவரை தேசத்துரோகி எனக் கருதுகிறது, அவருடைய பாஸ்போர்ட் செல்லத்தக்கது அல்ல என்று கூறிவிட்டது, அவர் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று கோரியுள்ளது. அவர் அமெரிக்காவிற்கு சென்றால், மரண தண்டனையை கூட எதிர்கொள்ள முடியும். ஸ்னோவ்டெனுடைய விதி முற்றிலும் உறுதியற்றது; மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே உள்ளதீவிர அழுத்தங்களில் ஒன்றாகிறது. முன்னாள் NSA ஒப்பந்தக்காரர் ஜேர்மனிய பாராளுமன்ற விசாரணைக்குழுவில் சாட்சி அளிக்கத் தயாராக உள்ளார். அவர் சாட்சியம் அளிக்க “மிகவும் விரும்புகிறார்”; முன்னிபந்தனைகள ஏதும் போடவில்லை என்று வெள்ளியன்று பேர்லினில் அவருடைய வக்கீல் வொல்ஃப்காங் காலெக் தெளிவாக்கியுள்ளார். ஸ்னோவ்டென் கொடுக்கும் விவரம் அவருடைய சாட்சியம் நடக்கும் உருப்படியான நிலைமைகளைப் பொறுத்து இருக்கும் என்று காலேக் விளக்கினார். பின்னிங்கர் குழுத்தலைவர் பதவியை இராஜிநாமா செய்திருப்பது ஸ்னோவ்டென் சாட்சியத்தை எப்படியும் தவிரக்க வேண்டும் என்னும் வலுவான அழுத்தத்தின் விளைவு என்பது தெளிவு. குழுவில் பசுமைக் கட்சியின் பிரதிநிதி கான்ஸ்டான்டின் வான் மோட்ஸ், சான்ஸ்லர் அலுவலகத்தின் நேரடித் தலையீடு, CDU/CSU பிரிவுத் தலைமையின் நேரடித் தலையீடு பற்றி ஊகங்களை வெளியிட்டுள்ளார்; ஆனால் பின்னிங்கர் இதை மறுத்துள்ளார். குழுவின் வேலை, நேரடியாக ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையின் சமீபத்திய மாற்றத்தில் நேரடிச் செல்வாக்கை கொண்டுள்ளது. கூட்டணி அரசாங்கம் உக்ரேனில் ஆட்சி மாற்றம் கொண்டுவர ஒத்துழைத்தபின், ரஷ்யாவுடன் ஆக்கிரோஷ மோதலை அதிகரித்தபின், அட்லான்டிக் கடந்த கூட்டை, தடைக்கு உட்படுத்த எதையும் அனுமதிக்கப்போவதில்லை. உள்துறை மந்திரி தோமஸ் டு மைசியேர் (CDU) சமீபத்தில் இதைத் தெளிவாக்கினர். சமீபத்திய Der Spiegel பதிப்பில் ஒரு பேட்டியில் அவர் அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனிய உளவுத்துறைகளின் ஒத்துழைப்பு மிகவும் அடிப்படையானது என்றார். “இதில் எமது தேசிய நலன்கள் உள்ளது. விசாரணைக் குழுவினால் இதை ஆபத்தில் வைக்க முடியாது.” CDU/CSU பாராளுமன்றப் பிரிவின் உள்துறைச் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் மேயர் விசாரணைக்குழுமுன் உண்மையில் ஸ்னோவ்டென் சாட்சியம் அளித்தால் அதன் விதியைப்பற்றி அப்பட்டமாக குறிப்பிட்டார். “ஜேர்மனிக்கு ஸ்னோவ்டென் வந்தால், எனது கருத்தின்படி, ஜேர்மனிய அரசாங்கம் அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும் என்னும் வேண்டுகோளை நிறைவேற்றும், அது சட்டத்திற்கு உட்பட்டதே.” என்றார் விசாரணைக் குழுவின் புதிய தலைவர் CDU வின் பாட்ரிக் சென்ஸ்பேர்க் வார இறுதியில் ஸ்னோவ்டென் சாட்சியம் ஜேர்மனிய நாட்டில் கிட்டத்தட்ட நினைத்துப்பார்க்க முடியாதது என்றார். Bild am Sonntag செய்தித்தாளிடம் அவர் ஜேர்மனியில் ஸ்னோவ்டென் வருவது “சட்டபூர்வமாக பிரச்சினை ஆகிவிடும்” என்றார். மாறாக வீடியோ மாநாட்டின் மூலம் அல்லது “ஒரு பாதுகாப்பான மூன்றாம் நாடு” மூலம் கருதிப்பார்க்கப்படலாம் என்றார். ஜேர்மனியில் ஸ்னோவ்டெனுக்கு தஞ்சம் கொடுப்பது விசாரணைக் குழுவின் வேலை இல்லை. CDU/CSU, மற்றும் SPD ஆகியவை குழுவிற்கு முன் ஸ்னோவ்டென் நேரடியாக வருவதை எப்படியும் தடுக்க வேண்டும் என கொண்டுள்ள விருப்பம், பெரும் கூட்டணியின் தன்மையைப் பற்றி நிறையவே கூறுகிறது. உளவுத்துறைகளின் சர்வதேச சதித் திட்டங்களை அம்பலப்படுத்துவதற்கு பதிலாக அது இப்பொழுது உள்நாட்டளவில் கண்காணிப்பு நடவடக்கைகளை விரிவுபடுத்த முயல்கிறது, அவை தெளிவாக சட்டத்தை மீறுவதாகும். ஜேர்மனிய அரசாங்கமும் அமெரிக்காவை போன்றே ஜனநாயக விரோத, மக்கள் எதிர்ப்பு உடையது ஆகும்; அதன் பொலிஸ் அரச அமைப்புக்களை விரிவாக்கிக் கொண்டிருக்கிறது. பசுமைவாதிகள் மற்றும் இடது கட்சி என்று குழுவில் இருப்பவற்றின் செயல்கள் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதுடன் எதுவித தொடர்புமற்றவை. இந்த ஏகாதிபத்திய-சார்பு கட்சிகள் அனைத்து மட்டங்களிலும் தங்களை பாதுகாப்புக் கருவிகள், உளவுத்துறை சேவைகளுடன் உறுதியாக ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளன. அரைகுறையாக ஸ்னோவ்டென் சாட்சியப் பிரச்சினையை எழுப்பியபின், அவை ஜேர்மனிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒரு போலி ஜனநாயக அத்தி இலை மறைப்பைக் கொடுக்கின்றன; இதன் மூலம் NSA மூடிமறைத்தலுக்கு குழு தங்கள் பங்கை செய்கின்றது. |
|