World Socialist Web Site www.wsws.org |
The crisis in Ukraine and the return of German militarism உக்ரேனிய நெருக்கடியும், ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவும்
Johannes Stern கிழக்கு உக்ரேனின் அரசாங்க-விரோத போராட்டங்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைக் கண்டித்து கியேவில் உள்ள மேற்கத்திய-சார்பு ஆட்சிக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது, இது பேர்லினில் ரஷ்ய-விரோத யுத்தவெறி பிரச்சாரத்தின் ஒரு புதிய அலையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ரஷ்யாவால் அழைப்பு விடுக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கூட்டத்திற்கு முன்னரே, ஜேர்மன் நிதி மந்திரி வொல்ஃப்காங் ஷொய்பிள, “உக்ரேனில் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு வருவதாக" மாஸ்கோவை குற்றஞ்சாட்டியதோடு, "மேற்கை மிரட்டக்கூடாது என்பதை ரஷ்யா தெரிந்து வைத்திருக்க வேண்டுமென" எச்சரித்தார். சமூக ஜனநாயக கட்சி (SPD) தலைவரும், துணை சேன்சலருமான சிங்மார் காப்ரியல் அதையும் கடந்து சென்றார். அவர் ரஷ்யாவிற்கு எதிரான வெறுப்பிற்குத் தூபமிட பேர்லினின் பிரெஞ்சு தேவாலயத்தில் நடந்த முதலாம் உலக யுத்த நினைவுகூட்டத்தைப் பயன்படுத்தினார். "அடிப்படை அரசியல் நடைமுறைகளை" மாஸ்கோ கேள்விக்குட்படுத்துவதாக அவர், பிரெஞ்சு பிரதம மந்திரி மானுவேல் வால்ஸூடன் சேர்ந்து, குற்றஞ்சாட்டினார். “ஐரோப்பிய எல்லைகளில் டாங்கிகளைச் செலுத்த ரஷ்யா தெளிவாக தயாராகிவிட்டது," என்று கூறியதோடு, அவர் தொடர்ந்து கூறுகையில், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் முதலாம் உலக யுத்தத்திற்கு இட்டு சென்ற "தேசியவாத அதிகார அரசியலின் உத்வேகத்திற்கு மாஸ்கோ திரும்பி உள்ளது," என்றார். யதார்த்தத்தை என்ன ஒரு அபத்தமாக திரித்தல்! உண்மை என்னவென்றால், முதலாம் உலக யுத்தம் தொடங்கி 100 ஆண்டுகளுக்கும், இரண்டாம் உலக யுத்தம் வெடித்ததிலிருந்து 75 ஆண்டுகளுக்கும் பின்னர், ஜேர்மனி தான் ஒரு அணுஆயுத சக்தியான ரஷ்யாவுடன் ஓர் இராணுவ மோதலுக்கான அச்சுறுத்தலோடு ஓர் அக்ரோஷமான வெளியுறவுக் கொள்கைக்கும் மற்றும் மூன்றாம் உலக யுத்தத்திற்கும் திரும்பியுள்ளது. அமெரிக்காவுடன் நெருக்கமாக வேலை செய்துவரும் பேர்லின், உக்ரேனில் மேற்கு-சார்ந்த ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டு வர பாசிச சக்திகள் தலைமையிலான ஓர் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியது, அது உக்ரேனை ஒரு உள்நாட்டு யுத்தத்திற்குள் நகர்த்தி கொண்டிருப்பதோடு, ரஷ்யாவுடன் ஒரு மோதலையும் தூண்டிவிட்டுள்ளது. ஆனால் இப்போது, ஜேர்மன் ஊடகங்களோ மிக உறுதியான பொய் புரட்டுகளை பயன்படுத்திக் கொண்டு, ஒரு வம்புச்சண்டைக்கு இழுக்கும் நாடாக ரஷ்யாவை காட்ட முயன்று வருகின்றன. துல்லியமாக வெறும் ஒரு சில வாரங்களுக்கு முன்னர் கியேவில் மேற்கு என்ன செய்ததோ அதை மாஸ்கோ செய்து வருவதாக ஊடகங்கள் குற்றஞ்சாட்டுகின்றன, அதாவது ரஷ்யா அரசாங்க-விரோத போராட்டங்களை தூண்டிவிட்டு வருவதாக கூறுகின்றன. அரசியலமைப்பின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட யானுகோவிச் அரசாங்கத்திற்கு எதிரான பாசிச ஆட்சிக் கவிழ்ப்பை ஒரு "ஜனநாயக புரட்சியாக" மேற்கத்திய ஊடகங்கள் பெருமைப்படுத்தி வருகின்ற அதேவேளையில், இப்போது, ஆச்சரியத்திற்கிடமின்றி, அவை கிழக்கு உக்ரேனிய போராட்டங்களை குரூரமாக ஒடுக்கவும், ரஷ்யாவிற்கு எதிராக இன்னும் மேலதிக ஆக்ரோஷ போக்கை எடுக்கவும் கோரி வருகின்றன. Süddeutsche Zeitung ஒரு தலையங்கத்தில் ரஷ்யாவை "போர் வெறியர்" என்றும், ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை "சிடுமூஞ்சி தலைவர்" என்றும் ஏளனஞ் செய்கிறது. அது கூறுகிறது, ரஷ்யா வகிக்கும் பாத்திரம் "தெளிவாக" உள்ளது: அதாவது, “எதார்த்தத்திற்கு முரணான சூழலை" உருவாக்கியும், “குழப்பம், அச்சம் மற்றும் தவறான தகவல்களை" பரப்பிவிட்டும், உக்ரேனை மேற்கிடமிருந்து அது பிரிக்க முயல்கிறது. போராட்டங்களை நசுக்க முடியவில்லை என்ற தெளிவான கோபத்தோடு, Süddeutsche வினவுகிறது: “[உக்ரேனிய] உள்துறை மந்திரி எதற்காக 48 மணி நேர காலக்கெடு அளிக்க வேண்டும், டோனெட்ஸ் மற்றும் லுகன்ஸ்கின் முற்றுகைகளுக்கு அவர் செவ்வாயன்று இறுதி எச்சரிக்கை அறிவித்திருந்தார், காலம் கடத்துவதற்காக? கடந்த சில நாட்களாக இராணுவமும், ஆயுதக் குழுக்களும் எங்கே போயின?" திங்களன்று வெளியான அதன் தலையங்கத்தில் Frankfurter Allgemeine Zeitung இன்னும் மேலதிகமாக சென்றது, மாஸ்கோவிற்கு எதிரான தடை ஆணைகள் "போதுமான அளவிற்கு" இல்லை, மேற்கு "முன்பை விட இன்னும் தீர்க்கமாக உக்ரேனை ஆதரிக்க" வேண்டும் என அது எழுதுகிறது. அந்த பத்திரிகை எழுதியது: "நேட்டோவும், ஐரோப்பிய ஒன்றியமும் கிரெம்ளினின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் தீர்மானத்தோடு இருக்கின்றன என்பதை அவை காட்டவில்லையானால்,” “அதற்காக ஏதாவது விலை கொடுக்க நேரிட்டாலும் கூட," அங்கே "அதையும் விட பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் ... கிரெம்ளின் பின்வாங்க விரும்பினால், அது அந்த மூன்று பால்டிக் அரசுகளைத் தாக்க வெறியோடு இருக்கும்." ஜேர்மன் ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்துள் உள்ள ஆக்ரோஷமான யுத்த வெறியை எவ்வாறு புரிந்து கொள்வது? அது ஜேர்மனியில் ஆளும் வட்டாரங்களால் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டமிட்ட இராணுவவாத மீட்டுயிர்பித்தலின் பாகமாக உள்ளது. இரண்டு உலக யுத்தங்களை கட்டவிழ்த்துவிட்ட அதே ஆளும் வட்டாரங்கள், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் தான் அவற்றின் கொடூர குற்றங்களை திரும்பவும் நடத்த முனைந்து வருகின்றன. அதன் ஆரம்ப தாக்குதல் ஜேர்மன் ஜனாதிபதி ஜோஅஹிம் கௌக் இன் அக்டோபர் 3ஆம் தேதி உரையில் வெளிப்படுத்தப்பட்டது. ஜேர்மன் ஐக்கிய தினத்தில், "அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ மோதல்களில் இருந்து" ஒதுங்கியிருக்க, ஜேர்மன் ஒன்றும் "ஒரு தனித்தீவு அல்ல" என்று ஆத்திரமூட்டும் வகையில் அவர் அறிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் முனீச் பாதுகாப்பு மாநாட்டில், அவர், வெளியுறவு மந்திரி பிராங் வால்டர் ஸ்ரைன்மையர் மற்றும் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லையன் ஆகியோருடன் இணைந்து, “இராணுவரீதியில் விலகியிருக்கும் கொள்கை" முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக அறிவித்தார். எதிர்காலத்தில், சர்வதேச நெருக்கடி உள்ள பிராந்தியங்களில் ஜேர்மனி "இன்னும் தீர்க்கமாகவும், முக்கியத்துவத்தோடும் தலையீடு செய்ய" வேண்டியதிருக்கும் என்றார். அப்போதிருந்து, பேர்லினில் உள்ள SPD மற்றும் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளின் மாபெரும் கூட்டணி, ஊடகங்களின் சளைக்காத யுத்தவெறி பிரச்சாரங்களுக்கு இடையே, இந்த கொள்கையை கொடூரமாக நடைமுறைப்படுத்தி உள்ளது. முதல் உலக யுத்தத்தில் கிழக்கு அணி மீது செய்யப்பட்ட ஜேர்மனியின் நடவடிக்கைகளும், இரண்டாம் உலக யுத்தத்தில் ஹிட்லரின் நிர்மூலமாக்கும் யுத்தமும் ஒருபோதும் நடந்திருக்கவே இல்லை என்பதைப் போல, ஜேர்மன் ஏகாதிபத்தியம் "கிழக்கை நோக்கிய" அதன் பாரம்பரிய உந்துதலுக்கு புத்துயிரூட்டி வருகிறது." ஜேர்மனி மற்றும் அதன் பங்காளிகள் ஓர் ஆக்ரோஷமான வெளியுறவு கொள்கைக்கு திரும்புவதற்கும், மீள்ஆயுதமயமாக்கலுக்கும் மேற்கத்திய சக்திகளால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட உக்ரேனிய நெருக்கடி, ஒரு போலிக்காரணமாக பயன்படுத்தப்படுகிறது என்பது தெள்ளத்தெளிவாகி உள்ளது. ரஷ்ய எல்லையோரங்களை ஒட்டி யுத்த கப்பல்கள் மற்றும் விமானங்களை நிலைநிறுத்தி, அங்கே இராணுவ உபாயங்களை நடத்த, ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் இராணுவ ஆயத்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் ஆதரிக்கிறது. அதேவேளையில், ஜேர்மன் இராணுவமும், அரசியல்வாதிகள் மற்றும் முன்னணி இதழியலாளர்களும் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பை மீண்டும் அறிமுகப்படுத்தவும், புதிய டாங்கிகள் மற்றும் தாக்கும் ட்ரோன்களை வாங்கவும் கோரி வருகின்றனர். ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவை ஜேர்மன் நாடாளுமன்றத்தின் (Bundestag) அனைத்து கட்சிகளும் ஆதரிக்கின்றன. ஒரு காலத்தில், தொழிலாள வர்க்கத்தின் நலன்களையோ அல்லது சமரச வேலைத்திட்டத்தையோ பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிவந்த கட்சிகள், இப்போது இந்த கொள்கையை மிக தீவிரமாக வக்காலத்து வாங்குகின்றன. வெளியுறவு மந்திரியாக இருக்கும் பிராங் வால்டர் ஸ்ரைன்மையரோடு பேர்லினின் புதிய வல்லரசு அரசியலுக்கு சவுக்கைச் சுழற்றி கொண்டு, முதலாம் உலக யுத்தத்திற்கு அதன் ஆதரவை வழங்கியதன் 100வது ஆண்டுதினம் SPDக்கு பொருந்துகிறது. பசுமைக் கட்சியினரோ, 1998இல் அரசாங்கத்தினுள் நுழைந்ததில் இருந்து வெளிநாடுகளில் ஜேர்மனின் இராணுவ நடவடிக்கைகளுக்காக ஓயாது தம்பட்டம் அடித்து வந்துள்ளதோடு, கியேவின் பாசிச தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பில் ஆக்கபூர்வமாக பங்கேற்றிருந்தனர். இப்போது அவர்கள் ஜேர்மன் அரசாங்கத்தை வலதிலிருந்து தாக்கி வருகின்றனர். ஐரோப்பிய தேர்தலுக்கான அவர்களின் முன்னணி வேட்பாளர், வேர்னெர் சுல்ஸ் (Werner Schulz) ரஷ்ய ஜனாதிபதியை "குற்றவாளியாக," “வம்பு சண்டைக்காரராக" மற்றும் "யுத்தக்வெறியராக," மாற்றி மாற்றி அவமதிப்பதோடு, இராணுவ நடவடிக்கைக்கும் அழைப்புவிடுக்கிறார். பசுமை கட்சியின் யுத்தபிரியர்களின் சீரழிவை இடது கட்சி மட்டுமே விஞ்சி உள்ளது. ஆளும் மேற்தட்டு அதன் வல்லரசாகும் அபிலாஷைகளை மீட்டுயிர்ப்பித்து வருகின்ற நிலையில், முன்னாள் ஸ்ராலினிஸ்டுகளும், அவர்களின் போலி-இடது ஆதரவாளர்களும் அவர்களின் சமரச பாசாங்குகளைக் கூட கைவிட்டுள்ளனர். கடந்த வாரம், முதல் முறையாக, இடது கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள், ஜேர்மன் இராணுவ படைகளின் (Bundeswehr) ஒரு வெளிநாட்டு இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஜேர்மன் இராணுவவாதத்திற்கு திரும்புவதை எதிர்க்கும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி (Partei für Soziale Gleichheit - PSG) மட்டுமே ஆகும். அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களால் ஊக்குவிக்கப்படும், பரந்த பெரும்பான்மை மக்களால் எதிர்க்கப்படும், யுத்தவெறி பிரச்சாரத்தை PSG கண்டிக்கிறது. PSG, பிரிட்டனில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியோடு இணைந்து, சோசலிச புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் யுத்தத்திற்கு எதிரான போராட்டத்தை அபிவிருத்தி செய்ய ஐரோப்பிய தேர்தல்களில் போட்டியிடுகிறது. யுத்தவெறி பிரச்சாரகர்களுக்கு எதிராக மற்றும் ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவிற்கு எதிராக ஐரோப்பிய தேர்தல்களில் ஒருமுகமாக திரும்ப நாம் தொழிலாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம். யுத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதோடு, யுத்தத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்ட, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் மற்றும் பிரிட்டிஷ் பிரிவுகளான Partei für Soziale Gleichheit மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புங்கள்! |
|