World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா India stages national election amid mounting social crisis பெருகும் சமூக நெருக்கடிக்கு இடையில் இந்தியா நாடாளுமன்ற தேர்தலை நடத்துகிறது
By Keith
Jones இந்தியாவில் ஒன்பது கட்டங்களாக நடைபெறுகின்ற ஐந்து வார பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு இந்த வாரத்தில் தொடங்கியது. இதுவரை மொத்தமிருக்கும் 543 தேர்தல் தொகுதிகளில் 104 இல் - இந்தியாவின் தெற்கில் கேரளாவில், மற்றும் தேசிய தலைநகர் (டெல்லி) பிரதேசத்தில், மற்றும் வடக்கில் ஹரியானாவில், மற்றும் பிற பல பெரிய மாநிலங்களின் பகுதிகளில் - வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அநேக இடங்களில் வாக்குப் பதிவு வீதம் 2009 ஐ விட அதிகம் என்பதாக தேர்தல் அதிகாரிகள் கூறுகின்றனர். மே 16 அன்று நடைபெறவிருக்கும் வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர், எந்த வகையிலான கட்சிகளின் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கின்றபோதும், இந்தியா அரசியல் நெருக்கடிக்கு ஆட்படவிருப்பதுடன் வரவிருக்கும் மாதங்கள் மற்றும் வருடங்களில் தீவிரமடையும் வர்க்கப் போராட்டத்தால் கொந்தளிப்பை காணவிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையும் பணவீக்கமும் கைகோர்த்த ஒரு நிலையில் (stagflation) அமிழ்ந்து கிடக்கிறது. பணவீக்கம் வெகுநாட்களாகவே இரட்டை இலக்கத்திலேயே இருந்து வருகிறது. 2010-2011 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி கூர்மையான வீழ்ச்சி காணத் தொடங்கியது என்பதோடு இரண்டு வருடங்களுக்கும் அதிகமான காலமாய் 5 சதவீதத்திற்கும் குறைவான வீதத்தில் வளர்ச்சி வீதம் கொண்டிருக்கிறது. மேலும், சென்ற கோடையில் ரூபாயின் மதிப்பு துரிதமாக வீழ்ச்சி கண்டபோது நடப்பு கணக்குப் பற்றாக்குறை நெருக்கடி குறித்த அச்சங்கள் பெருகியமையானது, இந்தியா சர்வதேச மூலதனத்தின் பாய்வின் மீது பெருமளவில் சார்ந்திருப்பதையும் அதனால் எளிதில் பாதிக்கப்படும் நிலை இருப்பதையும் அம்பலப்படுத்தியது. இந்தியாவின் ஆளும் உயரடுக்கும் ஒரு மூலோபாய குழப்பத்தின் விளிம்பில் தன்னைக் காண்கிறது. கடந்த தசாப்தத்தில் அது, சீனாவிற்கான மூலோபாய மாற்றுஎடையாக அமெரிக்காவால் ஊக்குவிக்கப்படுவதன் மூலம் ஆதாயமடைய கணக்கிட்டு அமெரிக்காவை நோக்கி சாய்ந்திருந்தது. ஆனால் அமெரிக்கா யூராசியா (Eurasia) மற்றும் மத்திய கிழக்கில் தனது மூலோபாய மேலாதிக்கத்திற்கு வலுவூட்டுவதில் மிகத் தீவிரத்துடன் முனைப்பு காட்டுவதன் காரணத்தால் அது இந்தியா மீது முன்னெப்போதையும் விடப் பெரிய கோரிக்கைகளை வைப்பதற்கும் அதனை தனது மூலோபாயத் திட்டநிரலுக்கு - அதாவது மிகச் சமீபம் வரை இந்தியாவின் மிகப்பெரும் எண்ணெய் விநியோகஸ்தராக இருந்த ஈரானுக்கு எதிராகவும், இந்தியாவின் மிகச் சக்திவாய்ந்த அண்டை நாடும் அதன் பரமஎதிரியான பாகிஸ்தானுக்கு நெருக்கமான நாடுமான சீனாவுக்கு எதிராகவும், இப்போது அதன் மிக முக்கியமான ஆயுத விநியோகஸ்தரும் 1960கள் தொடங்கி அதன் “எல்லா காலநிலைக்குமான” கூட்டாளியாகவும் இருந்து வரக் கூடிய ரஷ்யாவுக்கு எதிராகவும் - இணங்குவதற்கு நெருக்குதலளிக்கவும் இட்டுச்சென்றுள்ளதஉலகப் பொருளாதார நெருக்கடியால் உலுக்கப்பட்டிருக்கும் இந்திய பெருவணிகங்களும் மற்றும் சர்வதேச மூலதனமும் இந்தியாவின் அடுத்துவரவிருக்கும் அரசாங்கம் சமூக வெடிப்பைத் தூண்டும் நடவடிக்கைகளின் ஒரு தொகுப்பை விரைவாக முன் தள்ள வேண்டும் என்று கோருகின்றன. பாரிய சமூகச் செலவின வெட்டுகள், எரிசக்தி மற்றும் உர மானியங்களை கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துக் கொண்டே போய் இறுதியில் முழுவதுமாய் அகற்றி விடுவது, ஆட்குறைப்பு மற்றும் தொழிற்சாலை மூடல்கள் மீதிருக்கும் கட்டுப்பாடுகளை அகற்றுவது, “மூலோபாயம் சாரா” பொதுத் துறை பிரிவுகள் மற்றும் உள்கட்டமைப்பில் ஒரு புதிய சுற்று தனியார்மயமாக்கங்கள்; அத்துடன் அந்நிய முதலீட்டின் மீதான அநேக வரம்புகளை அகற்றுவது ஆகியவை இதில் அடங்கும். இப்போது பதவிக் காலம் முடிந்திருக்கும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கு தொடந்து உறுதி பூண்டது, ஆனாலும் பாரிய வெகுஜன எதிர்ப்புக்கு முகம் கொடுத்த நிலையில் அதனை உடனடியாக முன் தள்ள முடியவில்லை. காங்கிரஸ் மீது நம்பிக்கை இழந்திருக்கக் கூடிய இந்தியப் பெருவணிகத்தின் பெரும்பிரிவுகள் தமது ஆதரவை, நடப்பு நாடாளுமன்றத்தில் உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சியாக இருக்கும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சிக்கும் அதன் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதலமைச்சரும் சுய-பாணி இரும்புமனிதருமான நரேந்திர மோடிக்கும் பின்னால் நிறுத்தியுள்ளன. 2002 இல் நடைபெற்ற குஜராத் முஸ்லீம்-விரோதப் படுகொலையை ஊக்குவித்தவரான மோடி, வரி மற்றும் நிலச் சலுகைகள் தொடர்பாய் வணிகங்களுக்கு ஊட்டி வளர்த்தமைக்காகவும், வெகுஜன எதிர்ப்பை மீறி வளர்ச்சித் திட்டங்களை முன் தள்ளியமைக்காகவும், அத்துடன் ஏறக்குறைய வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக்கி விட்டிருப்பதற்காகவும் இந்தியாவின் பெருநிறுவன உயரடுக்கினால் வியந்து பாராட்டப்படுபவர் ஆவார். காங்கிரஸ் கட்சி UPA இன் பத்து ஆண்டு கால ஆட்சியில் நடந்த பொருளாதார விரிவாக்கம் குறித்துத் தம்பட்டம் அடிக்கிறது, “அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி”க்கான கட்சியாய் தன்னை கூறிக் கொள்கிறது. ஆனால் முதலாளித்துவ வளர்ச்சியின் ஆதாயங்கள் எல்லாம் ஏறக்குறைய ஒட்டுமொத்தமாக அந்நிய முதலீட்டாளர்களாலும் இந்திய உயரடுக்கினாலும் பறித்துக் கொள்ளப்பட்டு விட்டன. சர்வதேச முதலாளித்துவத்திற்கு மலிவு-உழைப்பில் உற்பத்தி மற்றும் சேவைகளை வழங்குவது தவிர, இந்த உயரடுக்கு வரிச் சலுகைகளையும் அத்துடன் தொலைதொடர்பு அலைக்கற்றை முதலாய் நிலக்கரிச் சுரங்கங்கள் வரையிலும் அரசாங்கச் சொத்துகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவதை அல்லது முற்றுமுதல் பரிசாக வழங்கப்படுவதையும் விழுங்கி வந்திருக்கிறது. இந்தியாவில் இப்போது 109 பில்லியனர்கள் இருக்கின்றனர், அத்துடன் மிக உயர்ந்த நிகர சொத்துமதிப்புடைய தனிநபர்களின் எண்ணிக்கையில் 7,730 பேருடன் உலகின் மூன்றாமிடத்தில் இருக்கிறது என Wealth-X UBS அறிக்கை தெரிவிக்கிறது. இதே இந்தியா தான் ஒரு முழுநாளைக்கான வேலையைச் செய்வதற்கு போதுமான கலோரி உணவு கிடைக்காத மக்களாக வரையறுக்கப்படுகின்ற “முற்றுமுதல் வறுமை”யிலான மக்கள் உலகிலேயே மிக அதிகமான அளவில் வாழும் நாடாகவும் இருக்கிறது. ஆனாலும் ஒரு வேலை போனதாலோ, விபத்தாலோ, குடும்ப நோயாலோ அல்லது வேறொரு பேரிடராலோ வறுமை, துன்பம் மற்றும், சமூகப் பாதாளத்திற்குள் அமிழும் அச்சுறுத்தல் இந்நாட்டின் “முற்றுமுதலான வறுமை”யையும் தாண்டி மிகவும் செல்லத்தக்கதாகும். ஏனென்றால் இங்கு எத்தனை சுருங்கிய அல்லது தேய்ந்து போன சமூகப் பாதுகாப்பு பின்னலும் கூட கிடையாது. இந்திய மக்களில் முக்கால்வாசிப் பேர் ஒருநாளைக்கு இரண்டு அமெரிக்க டாலர்களுக்கும் குறைந்த தொகையில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதார மந்தநிலையாலும், உணவுப் பொருட்களின் விலை வருடந்தோறும் 15 சதவீதம் ஏறிக் கொண்டிருக்கும் நிலையிலும், வாழ்க்கைத் தரங்கள் இன்னும் மேலதிகமாய் பிழியப்படுகின்றன. பள்ளிக் கல்வி முடித்தவர்களில் 29 வயது அல்லது அதற்குக் குறைவானவர்களில் 16.3 சதவீதம் பேர் வேலைவாய்ப்பற்று இருக்கின்றனர் என்றும் பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பு முடித்த இளைஞர்களில் இதே வேலைவாய்ப்பு இல்லாதவர் வீதம் சுமார் 30 சதவீதமாக இருக்கிறது என்றும் இந்தியாவின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம் சமீபத்தில் கூறியது. இன்னொரு தனியார் நிறுவன ஆய்வு கூறியதன்படி, சமீபத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதியாகச் சுருங்குவதற்கு மிக முன்னமே கூட, மக்கள்தொகை வளர்ச்சியின் காரணத்தால் வருடந்தோறும் உழைக்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 10 மில்லியன் அதிகரித்துச் சென்ற நிலையில் வருடத்திற்கு இரண்டு மில்லியன் வேலைகள் மட்டுமே அதிகரித்துச் சென்று கொண்டிருந்தது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஆகியவை குறித்த பொதுமக்களின் கோபம் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் முக்கியமான தேர்தல் தோல்வியைக் கொண்டுவரும் என்பதாகவே பல்வேறு கணிப்புகளும் கூறுகின்றன. காங்கிரஸ் முன்கண்டிராத அளவுக்கு மிகக் குறைந்த தொகுதிகளிலேயே வெல்லும் என்பதாக கருத்துக்கணிப்புகள் - இந்தியாவில் பல சமயங்களில் கருத்துக்கணிப்புகள் தவறாகி விட்டிருக்கின்றன என்பது ஒப்புக் கொள்ளப்படுகின்ற போதிலும் - சுட்டிக்காட்டுகின்றன. அது உண்மையாகிறதோ இல்லையோ, ஆனால் அதன் தோல்விக்கான அறிகுறிகள் ஏராளமாய் இருக்கின்றன. காங்கிரஸின் UPA கூட்டாளிகள் பலரும் கூட்டணியைக் காலிசெய்து சென்று விட்டனர். நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி பல காங்கிரஸ் மூத்த தலைவர்களும் தேர்தலில் நிற்க மறுத்து விட்டிருக்கின்றனர். அத்துடன் பல தசாப்தங்களாக காங்கிரஸ் கட்சியை கட்டுப்படுத்தி வந்திருக்கக் கூடிய நேரு-காந்தி வம்சத்தின் வாரிசான ராகுல் காந்தியை கட்சியின் பிரதமருக்கான வேட்பாளராக அறிவிப்பதில்லை என காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. அது காங்கிரஸ் பாரம்பரியத்திற்கு எதிரானது என்பதாய் சமாதானம் சொல்லப்பட்டாலும் கூட, தோற்க அதிகவாய்ப்பிருக்கும் ஒரு சமயத்தில் அவரைத் தலைவராக அறிவிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் உயர் தலைமை கருதியது என்பதே பரவலான கருத்தாக இருக்கிறது. எப்படியிருந்தபோதினும் ராகுல்காந்தியும், அவரது தாயாரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்தியும் தான் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்திற்குத் தலைமை கொடுக்கின்றனர். பொருளாதார சூழல் குறித்த வெகுஜன அதிருப்திக்கு விண்ணப்பம் செய்கின்ற மோடியும் பாரதிய ஜனதா கட்சியும் அவரை “நல்லாட்சி மற்றும் வளர்ச்சி”க்கான வேட்பாளராக முன்நிறுத்துகின்றன. குஜராத் மாதிரியான பொருளாதார வளர்ச்சியை இந்தியாவின் மற்றபகுதிகளுக்கு தன்னால் கொண்டுவர முடியும் என்பது தான் மோடியின் தொடர்ந்த பல்லவியாக இருக்கிறது. மோடியின் கீழ், குஜராத்திற்குள் முதலீடு பாய்ந்திருக்கிறது, அதனால் பல மாநிலங்களை விஞ்சுகின்ற அளவுக்கு ஒரு வளர்ச்சி விகிதத்தை அதற்குக் கொடுத்திருக்கிறது என்கிற போதிலும் சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகல், கல்வியறிவு மற்றும் எழுத்தறிவு ஆகிய அநேக சமூகக் குறியீடுகள் குஜராத்தை கீழ்வரிசையில் காட்டுகின்றன. பாஜகவின் பிரச்சாரம் மோடியைச் சுற்றிச் சுழலுகிறது, இது அது முன்நிறுத்த விரும்புகின்ற ’ஜனநாயகவிரோத இரும்புமனிதர்’ என்பதான பிம்பத்துடன் முழுக்கப் பொருந்தியதாக இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு திங்களன்று பேசிய அவர் சர்வதேச அரங்கில் “பலவீனமாய்” இருந்ததற்காகவும் பயங்கரவாதத்தை மென்மையாக அணுகியதற்காகவும் காங்கிரஸ் அரசாங்கத்தைக் கண்டித்தார். அது இந்தியாவின் பாதுகாப்புப் படைகளுக்கு முறையான வசதிகளை செய்து வரவில்லை என்றார் அவர்: “நாட்டிற்குத் தேவை ஒரு வலிமையான அரசாங்கம், பலவீனமான ஊனமடைந்த ஒன்று அல்ல”. “இந்தியாவிடம் வம்பிழுக்கும் துணிச்சல் யாருக்கும் வரக் கூடாது”. அதிகாரத்தில் அமர்ந்து பெருவணிகத்தின் நவதாராளவாத திட்டநிரலை அமல்படுத்துவதை நோக்கமாய்க் கொண்டு பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பின்மை ஆகியவை குறித்த வெகுஜனக் கோபத்திற்கு சிடுமூஞ்சித்தனமாக விண்ணப்பம் செய்வதையே மோடியின் பிரச்சாரம் மையமாகக் கொண்டிருக்கிறது என்றபோதிலும் கூட, பாஜகவின் இந்து தேசியவாத கட்சித் தொண்டர்களுக்கும் சமிக்கையளிப்பதை அவர் மிகக் கவனமாக மேற்கொண்டு வருகிறார். தனது இந்து தேசியவாத நற்சான்றுகளுக்கு வலுவூட்டும் ஒரு நடவடிக்கையாக தெளிவாகத் தெரியக் கூடிய ஒன்றில், அவர் இந்துக்களின் புனித நகரமான வாரனாசியில் இப்போது பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவரை ஒதுக்கி வைத்து விட்டு அங்கு இவர் ஒரு வேட்பாளராகப் போட்டியிடுகிறார். 1992 இல் பாஜக-ஆர்.எஸ்.எஸ். ஒருங்கிணைத்த இந்து அடிப்படைவாத செயல்பாட்டாளர்களால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி இடத்தில் இந்துக் கடவுளான ராமருக்கு ஒரு கோவில் கட்டுவதற்கு ஆதரவு, இந்தியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரே மாநிலமான ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல்சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது ஆகியவை உட்பட நீண்ட காலமாய் இருந்து வரும் இந்து மேலாதிக்கவாத கோரிக்கைகளையே பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கை மீண்டும் கூறுகிறது. இந்தியாவின் ஆளும் வர்க்கத்தின் பெரும்பிரிவுகள் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தை கொண்டுவர ஆர்வம் காட்டுவதென்பது முதலாளித்துவ நெருக்கடியின் தாக்கத்தின் கீழ் இந்தியாவின் உயரடுக்கானது சமூகப் பிற்போக்குத்தனம் மற்றும் எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பாரதிய ஜனதாக் கட்சி நிறைய பெருநிறுவன ஊடகங்களின் உதவியுடன், மோடிக்கு ஒரு மிகப்பெரும் மக்கள் ஆதரவு அலை இருப்பதான பிம்பத்தைக் கொடுக்க முயற்சி செய்து வருகிறது. உண்மையில் அவருக்கான ஆதரவு, உள்ளபடியே, காங்கிரஸ் மீதான கோபத்தில் இருந்துதான் பெருமளவில் உண்டாகி வந்திருப்பதாகும். அதீத ஆர்வமெல்லாம் உண்மையில் பெருநிறுவனங்களின் இயக்குநர் அறைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகள் ஆகிய மட்டத்திற்குள் மட்டும் தான். முப்பது ஆண்டுகளில் இதுவரை எந்தவொரு கட்சியுமே இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை காண முடியவில்லை. ஏராளமான பிராந்திய மற்றும் சாதி அடிப்படையிலான கட்சிகளின் தலைமையில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியையோ அல்லது 1998 மற்றும் 2004 ஆம் ஆண்டிற்கு இடையில் பாஜக கட்சியையோ கொண்ட பலகட்சிக் கூட்டணிகள் தான் அரசாங்கத்தில் அமர்ந்து வந்திருக்கின்றன. காங்கிரஸ் போலன்றி பாஜக ஏராளமான கூட்டணிக் கட்சிகளை ஈர்க்க முடிந்திருக்கிறது - இறுதியாக இருபத்தைந்து கட்சிகள் என்று அது கூறுகிறது - என்கிற அதேநேரத்தில் மேற்கு வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு, பீகார் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் ஆளும் கட்சிகள் உட்பட முக்கியமான பல பிராந்தியக் கட்சிகள் இரண்டு தேசியக் கட்சிகளில் எது ஒன்றுடனும் கூட்டுச்சேர மறுத்து விட்டிருக்கின்றன. இரட்டை ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (CPM) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI) அதன் இடது முன்னணி மற்றும் இப்போது எந்தக் கூட்டணியிலும் சேராதிருக்கும் பிராந்திய மற்றும் சாதிக் கட்சிகள் பலவற்றையும் கொண்ட ”காங்கிரஸ் அல்லாத”, “பாஜக அல்லாத” ஒரு மூன்றாவது அணி அரசாங்கத்துக்காக பிரச்சாரம் செய்கின்றன. இதுவரையிலும் இந்த அணி ஆரம்பத்திலேயே மக்கர் செய்து கொண்டிருக்கிறது. ஸ்ராலினிஸ்டுகள்’ வாய்ப்புள்ள கூட்டணிக் கட்சிகளாகக் கருதும் கட்சிகள் எல்லாம் தேர்தலுக்குப் பிறகு இரண்டு தேசியக் கட்சிகளுடன் பேரம் பேசுவதற்கு வசதியாக தங்களது கரங்களை சுதந்திரமாக வைத்துக் கொள்ள எண்ணுகின்றன. இவற்றில் அநேக கட்சிகள் முன்னதாக பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணியில் இருந்திருப்பவை என்பதோடு அனைத்துமே பெருவணிகத்தின் நவதாராளவாத “சீர்திருத்த” திட்டநிரலை அமல்படுத்தி வந்திருக்கின்றன. ஸ்ராலினிஸ்டுகள் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதோடு இந்தியாவை உலக முதலாளித்துவத்திற்கான ஒரு மலிவு உழைப்பு உற்பத்தியாளராக உருமாற்றுவதற்கு தொழிலாள வர்க்கம் வெளிப்படுத்துகின்ற எதிர்ப்பை ஒடுக்குவதில் மிக முக்கியமான பாத்திரத்தையும் ஆற்றி வந்திருக்கின்றனர். 2004 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான UPA ஐ அதிகாரத்திற்குக் கொண்டுவந்ததில் அவர்கள் மிக முக்கியமான பாத்திரம் ஆற்றினர். அதற்கு முன்னிருந்த பாஜக தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து அதிக வித்தியாசமில்லாத கொள்கைகளையே UPA அரசாங்கம் நடத்திக் கொண்டிருந்தது என்பதை ஸ்ராலினிஸ்டுகள் ஒப்புக்கொண்டபோதிலும் கூட, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இடது முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தான் UPAவுக்கு அதன் நாடாளுமன்றப் பெரும்பான்மையை வழங்கியது. இறுதியில் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை முன்தள்ளுவதற்காக காங்கிரஸ் கட்சி இடதுமுன்னணியை திறம்பட அரசாங்கத்தில் இருந்து வெளியே தள்ளியது. ஸ்ராலினிஸ்டுகள் அதிகாரத்தில் இருந்து வந்திருந்த மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அவர்களே குறிப்பிடுகின்ற “முதலீட்டாளர் ஆதரவுக் கொள்கைகளேயே” அவை பின்பற்றி வந்திருக்கின்றன. பெரு வணிகங்களைப் பொருத்தவரை இரண்டு முக்கிய பெரும் கட்சிகளில் ஒன்றினால் நங்கூரமிடப்படும் ஒரு அரசாங்கத்தையே விரும்பும். என்றாலும் மூன்றாவது அணி அரசாங்கம் ஒன்றையும் நிராகரித்து விட முடியாது, அந்த அளவுக்கு இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களிடையே பாரதிய ஜனதா கட்சிக்கு வெகுஜன ஏற்பின்மை இருக்கிறது. ஒரு மூன்றாவது அணி அரசாங்கம் பாஜக மற்றும் காங்கிரசுக்கு எந்தவகையிலும் ஒரு மாற்றாக இருக்கப் போவதில்லை என்பது முற்றிலும் நிச்சயமான ஒன்றாகும். அது இந்திய மற்றும் சர்வதேச மூலதனத்திற்கு முகவராக செயல்படும் என்பதோடு இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்களை ஆழப்படுத்தும். அரசியல்ரீதியாக ஸ்ராலினிஸ்டுகளால் தலைமை கொடுக்கப்பட்டு பல பிராந்திய மற்றும் சாதி அடிப்படையிலான கட்சிகளை உள்ளடக்கியிருந்த ஐக்கிய முன்னணி என்பதாகச் சொல்லப்பட்ட இத்தகைய ஒரு அரசாங்கம் 1996 தேர்தலுக்குப் பின்னர் காங்கிரசின் “வெளியிலிருந்தான” ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்தது. அதன் வலதுசாரிக் கொள்கைகள் அடுத்த இரண்டு வருடங்களுக்குள்ளாகவே பாரதிய ஜனதாக் கட்சி ஒரு தேசிய அரசாங்கத்தின் தலைமையில் முதன்முறையாக அதிகாரத்தில் அமர்வதற்கான கதவினைத் திறந்து விட்டது. |
|