World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி German chancellor visits Greece to prop up right-wing regime ஜேர்மன் சான்ஸ்லர் வலதுசாரி ஆட்சிக்கு முட்டுக்கொடுக்க கிரேக்கத்திற்கு விஜயம் செய்கிறார்
By Stefan Steinberg வெள்ளியன்று ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் எதிர்வரவிருக்கும் ஐரோப்பிய தேர்தல்களில் அன்டோனிஸ் சமரசின் வலதுசாரி அரசாங்கத்திற்கு ஊக்கம் கொடுப்பதற்கு ஏதென்ஸிற்கு பறந்து சென்றார். முக்கிய பிராந்திய மற்றும் நகரசபை தேர்தல்களும் அதே வாரம் கிரேக்கத்தில் நடக்கவுள்ளன. உக்ரேனிய இடைக்கால அரசாங்கத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் தீவிர-தேசியவாதிகள் மற்றும் பாசிஸ்ட்டுக்களுக்கு கொடுக்கும் ஆதரவை தொடர்ந்து, மேர்க்கெல் இப்பொழுது கிரேக்கத்தில் அதேபோன்ற சக்திகளுடன் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ள சமரசின் ஆட்சிக்கு முட்டுக்கொடுக்க முற்படுகிறார். சமரசின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவரான பானாகியோடிஸ் பால்டக்கோஸுக்கும் பாசிச கோல்டன் டவுன் (Golden Dawn) கட்சிக்கும் இடையேயான நெருக்கமான பிணைப்புக்களை வெளிப்படுத்திய ஒளிப்பதிவு காட்சி ஒன்று வெளிவந்தபின் கிரேக்க அரசாங்கம் கடந்த சில வாரங்களாக குழப்பத்தில் உள்ளது. இந்த ஒளிப்பதிவு பால்டக்கோஸ் கோல்டன் டோனுடைய செய்தித் தொடர்பாளர் இலியாஸ் காசிடயரிஸ் உடனான நட்புரீதியான உரையாடலை பதிவு செய்துள்ளது. காசிடயரிஸ் இப்பொழுது ஒரு குற்றமிக்க அமைப்பில் உறுப்பினர் என்ற குற்றச்சாட்டுக்களில் விசாரணையை எதிர்கொள்கிறார். பால்டக்கோஸ் கடந்த 1990களில் சமரஸ் புதிய ஜனநாயக கட்சியை நிறுவியதிலிருந்து 20 ஆண்டுகளாக அவரின் சட்ட மற்றும் அரசியல் ஆலோசகராக உள்ளார். இந்நிகழ்வு சமரசும் பிற அரசாங்க செய்தித் தொடர்பாளர்களும் அவர்கள் கோல்டன் டோனையும் அதன் இனவெறிக் கொள்கைகளையும் எதிர்க்கின்றனர் என்று கூறும் கருத்துக்கள் வெற்றுத்தனமானது என்பதை காட்டுகின்றது. சமரஸ் பின்னர் அவருடைய நீண்டகால அரசியல் நண்பரின் இராஜிநாமாவை ஏற்கும் கட்டாயத்திற்கு உட்பட்டார். இந்த ஊழலின் உடனடி விளைகளில் ஒன்றாக சமரசின் புதிய ஜனநாயக கட்சி (New Democracy party) கருத்துக் கணிப்பில் இன்னும் கீழ்நோக்கி வீழ்ச்சியடைந்தது. இது கிரேக்க பாராளுமன்றத்தில் மிக குறைந்த பெரும்பான்மையான ஒரு பிரதிநிதியின் வாக்கைத்தான் கொண்டுள்ளது. சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள் ஒன்றின்படி புதிய ஜனநாயக கட்சி இப்பொழுது எதிர்க்கட்சி சிரிசாவை விட மூன்று புள்ளிகள் பின்தங்கியுள்ளது. ஜேர்மனிய சான்ஸ்லரில் வருகையை ஒட்டி கிரேக்க பாதுகாப்புப் படைகள் பெரும் எச்சரிக்கையுடன் நிலையில் இருத்தப்பட்டன. பொலிசார் ஏதென்ஸ் நகரத்தின் பெரும் பகுதிகளில் காலை 11.30 முதல் இரவு 21.30 வரை ஊர்வலங்களை தடைக்கு உட்படுத்தினர். 5,000 அதிக ஆயுதம் கொண்ட கலகப்பிரிவுப் பொலிசார் ஆர்ப்பாட்டங்கள் எதையும் அடக்க நிறுத்தப்பட்டுள்ளனர். மேர்க்கெலின் தற்போதைய வருகை கிரேக்கத்திற்கு அவர் கடைசியாக 2012 வந்த இரண்டு ஆண்டுகளுக்குப்பின் வந்துள்ளது. அப்பொழுது அவருடைய வருகையின்போது நிறைய ஆர்ப்பாட்டங்கள் ஐரோப்பிய தலைவருக்கு எதிராக நடந்தன. இவரைப் பெரும்பாலான கிரேக்கர்கள் சிக்கன நடவடிக்கைகளை முக்கியமாக இயக்குபவர் எனக்கருதினர். இச்சிக்கன நடவடிக்கைகள்தான் மில்லியன் கணக்கான தொழிலாளர்களினதும், அவர்களுடைய குடும்பங்களினதும் வாழக்கையில் அழிவை ஏற்படுத்தின. 2012ல் ஆரப்பாட்டக்காரர்கள் மேர்க்கெலை கேலி செய்யும் வகையில் அவரை நாஜிச் சீருடை அணிந்தவராகச் சித்தரித்தனர். இக்கேலிச்சித்திரம் இரண்டாம் உலகப் போரின்போது ஜேர்மனி கிரேக்கத்தின்மீது படையெடுத்ததின் விபரீத விளைவுகளை நினைவு கூரும்வகையில் இருந்தது. இம்முறை மேர்க்கெல் பாசிஸ்ட்டுக்களுடன் உள்ள பிணைப்புக்கள் நிரூபிக்கப்பட்ட ஒரு அரசாங்கத்திற்கு பகிரங்கமாக ஆதரவு கொடுப்பவராக திரும்பிவந்துள்ளார். பொலிஸ் செய்தித் தொடர்பாளர் நகரத்தில் பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்த வியாழன் அன்று வெடித்த கார் குண்டை பயன்படுத்தினர். இக்குண்டு கிரேக்கத்தின் மத்திய ஏதென்ஸில் கிரேக்க மத்திய வங்கிக்கு முன் வெடித்து, சில பொருட்களின் சேதத்தை ஏற்படுத்தியபோதும் இறப்புக்கள் ஏதும் இல்லை. இந்த குண்டுத்தாக்குதல் பாசிசவாதிகளுடன் அரசாங்கத்திற்கு இருக்கும் தொடர்பிலிருந்து கவனத்தை திருப்பும் ஒரு அரசாங்க ஆத்திரமூட்டலுக்கான அனைத்து அடையாளங்களையும் கொண்டிருந்ததுடன், அரச மற்றும் பாதுகாப்புப் படைகளின் பலப்படுத்தலை நியாயப்படுத்தியது. தங்கள் பங்கிற்கு கிரேக்க தொழிற்சங்க இயக்கம் மேர்க்கெலின் வருகையை ஒட்டிய எதிர்ப்பைக் குறைக்கும் வகையில் புதனன்று அன்று பெயரளவிலான சிறிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. மேர்க்கெலின் விஜயத்தைத் தொடர்ந்து ஐரோப்பிய செய்தி ஊடகத்தில், பல ஆண்டுகள் சிக்கன நடவடிக்கைகளுக்கு பின் கிரேக்கத்தின் பொருளாதார உற்பத்தியை கால் பகுதியாக குறைத்தபின், கிரேக்கப் பொருளாதாரமும் மற்றும் யூரோப் பகுதிகள் இறுதியாக திருப்பத்தை கண்டுவிட்டன என நிறைய பிரச்சாரங்கள் இருந்தன. வியாழன் அன்று கிரேக்க அரசாங்கம் அதன் பத்திரச் சந்தைகளில் மீண்டும் நுழைந்த முயற்சி வெற்றி என அறிவித்தது. இந்த கிரேக்க அரசாங்கத்தின் பத்திரங்கள் விற்பனை ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியமும் நாட்டின் பொருளாதாரக் கட்டுப்பாட்டை 2010இல் ஏற்றபின் முதல் தடவையாக நடந்துள்ளது. கிரேக்கப் பத்திரங்களுடைய விற்பனைக்கு முன் ஜேர்மனிய Der Spiegel இதழ் கிரேக்கம் சந்தைக்குத் திரும்பியுள்ளதை “உண்மையான அற்புதம்” என்று பாராட்டியுள்ளது. கிரேக்க நிதியச் செய்தித்தாள் Imerisia “பெரும் திருப்பம்” என்று தலைப்பு கொடுத்த பின், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டைன் லாகார்ட் பத்திர விற்பனை “கிரேக்கம் சரியான திசையில் செல்லுகிறது என்பதற்கான அடையாளம் ஆகும்” என்றார். உண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியமும் கடந்த ஐந்து ஆண்டுகளில் கிரேக்கத்தில் சுமத்திய அனைத்து நிதிய நடவடிக்கைகளிலும் உள்ளது போல், வியாழன் பத்திர விற்பனையும் மேற்குவங்கிகளுக்கு மற்றொரு களிப்பான நிகழ்வாகும். விற்பனை பற்றிய தகவல்கள் தனியார்முதலீட்டு நிதிகளும் பிற முக்கிய நிதிய நிறுவனங்களும் பத்திரங்கள் வாங்க வரிசையில் நின்றன எனக் கூறுகின்றன. கிரேக்க அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் கருத்துப்படி எட்டு தடவை அதிகம் வாங்கப்பட்டன. கிரேக்க பத்திரங்களில் உள்ள 4.75% வட்டி என்பது யூரோ ஆதிக்கம் கொண்ட அரசாங்க பத்திர விற்பனைகளில் மிகவும் உயர்ந்தது ஆகும். அத்துடன் தற்பொழுது அதன் உத்தியோகப்பூர்வ கடன்கொடுத்தோருக்குக் கொடுக்கும் கிட்டத்தட்ட 2% வட்டியை விட இரு மடங்குக்கும் அதிகம் ஆகும். முதலீட்டாளர்கள் ஐந்து ஆண்டுப்பத்திரங்களைத் தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டினர். ஏனெனில் அவற்றின் கடன்தர மதிப்புக்கள இருக்கும் யூரோப்பகுதி நிதிய பொறிமுறையால் உத்தரவாதம் வழங்கபட்டன. கிரேக்க அரசாங்கம் விற்பனை மூலம் பெற்ற 3 பில்லியன் யூரோக்கள் EU-IMF பிணை எடுப்புக்களைத் தொடர்ந்து மேற்கு வங்கிகளுக்கு கிரேக்கம் கொடுக்க வேண்டிய கடனான 240 பில்லியன் யூரோக்களில் ஒரு துளிதான். ஐரோப்பிய மத்திய வங்கி கிரேக்க வங்கிகளை விற்பனையில் பங்கு பெறக்கூடாது என்று தடுத்த பின் முக்கிய நலன் பெற்றவை ஜேர்மனிய மற்றும் பிரெஞ்சு வங்கிகள் ஆகும். மீண்டும் ஒருதடவை கிரேக்க மக்கள்தான் வட்டி திருப்பிக்கொடுத்தல் என்னும் வடிவத்தில் விற்பனையின் செலவை ஏற்பர். இது 125இற்கும் 150 மில்லியன் யூரோக்களுக்கும் இடையில் மிகவிரைவில் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. தன்னுடைய பங்கிற்கு ஜேர்மனிய சான்ஸ்லர் சிக்கன நடவடிக்கைகளில் குறைப்பு ஏதும் இராது என்பதைத் தெளிவுபடுத்தினார். வெள்ளியன்று சிறு வணிகர்கள் கூட்டம் ஒன்றில் பேசிய அவர் “வளர்ச்சி நிறுவனம்” என அழைக்கப்படுவதற்கு ஜேர்மனியின் சிறு பங்களிப்பை உறுதிப்படுத்தினார். ஆனால் கிரேக்கத்திற்கு வெளிக்கிடுவதற்கு முன் அவர் அறிவித்தார்: “கடன் நெருக்கடி என வரும்போது நமக்குப் பின்னே சில கடின ஆண்டுகள் சென்றுவிட்டன. ஆனால் நாம் முதல் வெற்றிகளைக் காண முடிகிறது. சாலையின் முடிவிற்கு நாம் இன்னும் வரவில்லை என்றாலும்கூட இந்த வெற்றிகளை நாம் அற்பமாக கருதக்கூடாது” என்றார். மேர்க்கெல் “வெற்றிகள்” என விபரிப்பது கிரேக்கப் பொருளாதாரத்தை பேரழிவிற்கு உட்படுத்தி விட்ட நடவடிக்கைகள் ஆகும். தொழிலாளர் பிரிவின் கால் பகுதிக்கு மேல் வேலையற்று உள்ளனர். இளைஞர் வேலையின்மை 60%க்கும் மேல் உள்ளது. நாட்டின் கடன் சுமை வரலாற்று உயர்மட்டமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 175% ஐ எட்டியுள்ளது. ஆண்டுக்கணக்கில் நுகர்வோர் விலைகளில 1.5% சரிவு உள்ளது. இது பொருளாதாரம் தேக்க நிலையில் உள்ளது, நேரடி பணவீக்கத்தை முகங்கொடுக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. கிரேக்கம் பற்றிய அதன் சமீபத்திய பொருளாதார அறிக்கையில் (ஏப்ரல் 8) Citigroup Inc. முடிவுரையாகக் கூறியது: “பொருளாதாரத்தின் தோல்வி மீட்பின் மற்றைய அடையாளங்கள் மீண்டும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு ஊக்கம் தரும் என்பதை காட்டுகின்றன, இதுதான் முதலீட்டாளர்களுக்கு முக்கிய “ஆபத்தின்” ஊற்றாகும்.” மேர்க்கெல் சிரிசா கூட்டணித் தலைவரைச் சந்திக்க மறுத்துவிட்டார். தன்னுடைய பங்கிற்கு சிரிசா தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ் தன் உள்ளூர் ஆதரவாளர்களுக்கு அழைப்புவிட ஜேர்மனிய சான்ஸ்லர் வருகையையும் ஐரோப்பிய ஒன்றிய கொள்கையையும் குறைகூறினார். ஆனால் தன்னுடைய சர்வதேச ஆதரவாளர்களுக்கு சிப்ரஸ் வேறுவிதமான குரலை காட்டுகின்றார். மார்ச் இறுதியில் Hellenic Foundation for European and Foreign Policy இன் ஒரு ஆராய்ச்சியாளரான ஜோர்ஜ் ஜோகோபௌலோஸ் பின்வருமாறு கூறினார்: “கிரேக்கத்தில் சிரிசாதான் பிணையெடுப்பை வெளிப்படையான அரசியல் காரணங்களுக்காகக் கண்டிக்கிறது. ஆனால் ஐரோப்பாவில் அது ஐரோப்பியப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு “இன்னும் நட்புத்தன்மையை” காட்டுகிறது.” ஐரோப்பியக் கொள்கைகளைப் பொருத்தவரை சிரிசா இப்பொழுது பேச்சுவார்த்தைகளை நடத்தத்தயார் என்றும் அது உள்நாட்டில் வெளிப்படையாக கண்டிக்கும் இதே பிணையெடுப்பு விதிகளை நடைமுறைப்படுத்தவும் தயாராக இருப்பதையும் ஜோகோபௌலோஸ் மேலும் எடுத்துக்காட்டினார். |
|