World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Oppose the government crackdown on Sri Lankan Tamils

இலங்கை தமிழர்கள் மீதான அரசாங்கத்தின் வேட்டையாடலை எதிர்ப்பீர்

By the Socialist Equality Party (Sri Lanka)
11 April 2014

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி (சோசக), வெளிநாடுகளில் இயங்கும் 16 இலங்கை தமிழ் குழுக்கள் மற்றும் 424 உறுப்பினர்கள் மீதான கொழும்பு அரசாங்கத்தின் தடையையும் தீவின் வடக்கில் தமிழர்களுக்கு எதிரான அதன் உக்கிரமான அடக்குமுறையையும் எதிர்க்கின்றது. 2009 மே மாதம் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் முடிவின் பின்னர், தமிழர்களுக்கு எதிராக இத்தகைய கொடூர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

தமிழர்களுக்கு எதிராக அதிகரித்துவரும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தீவிரமடையும் தாக்குதல்களுக்கான தயாரிப்பாகும், என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கின்றது. “புலி பயங்கரவாதம் புத்துயிர் பெறுவதுமற்றும்சர்வதேச சதிபற்றிய அதன் பிரச்சாரங்கள், பொலிஸ்-அரச நடவடிக்கைகளுக்கான சாக்குப் போக்குகளை வழங்குகிறது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், எதேச்சதிகாரமான முறையில் மார்ச் 21 திகதியிட்டு, ஏப்பிரல் 4 அன்று ஒரு அசாதாரணமான வர்த்தமானி அறிவித்தல் விடுத்து, 1373 இலக்கை ஐநா தீர்மானத்தின் கீழ் தமிழ் அமைப்புக்களையும் நபர்களையும்பயங்கரவாதிகள்என முத்திரை குத்தியது. இந்த விதிகளின் படி, “தடை செய்யப்பட்ட நபர்கள் அல்லது அமைப்புக்களுக்கு சொந்தமான அல்லது உரிமையான சகல நிதிகள், சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்களும், அவை தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து அகற்றப்படும் வரை முடக்கப்பட்டிருக்கும்.” “உரிய அதிகாரிகளின் அனுமதியின்றி முடக்கப்பட்ட சொத்துக்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதோடு இந்த விதிகளை பின்பற்றத் தவறுகின்றமை கடும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்புக்களோ பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் அல்லது தடயங்களை அரசாங்கம் வழங்கவில்லை. பிரிட்டிஷ் தமிழ் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், உலகத் தமிழ் பேரவை மற்றும் ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் உட்பட தடை செய்யப்பட்ட அமைப்புகள், அவை தளம்கொண்டுள்ள அந்த நாடுகளில் எந்தவொரு சட்ட நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படவில்லை.

இந்த தடை விதிகள் பரந்த உள்ளர்த்தங்களை கொண்டுள்ளன. இந்த தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் ஏனைய குழுக்கள் தொடர்பு வைத்திருக்க முடியுமா என ஊடகங்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த புலனாய்வுத் துறை தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரன, அவர்களால் முடியும் ஆனால் அவர்கள் அரசியலமைப்பை மீறியிருக்காமல் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி சேகரிக்காமல் இருந்தால் மட்டுமே முடியும், என அறிவித்தார். ஹெந்தவிதாரன பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்ட அதிகாரியாகும்.

அரசாங்கம் அரசியல் எதிரிகளையும் எதிர்க் கட்சிகளையும் வேட்டையாடஅரசியலமைப்பு மீறல்மற்றும்பயங்கரவாதிகளுக்குநிதி சேகரித்தல் போன்ற வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தும்.

இந்தத் தடை, தமிழர்களுக்கு எதிரான தீவிரமான ஒடுக்குமுறையை பின்தொடர்ந்து வந்துள்ளது. மார்ச் 12 அன்று, முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரை தங்க வைத்திருந்தார் என்ற போலி குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பாலேந்திரன் ஜெயகுமாரியை கைது செய்ததோடு அவரை கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளது. மேலும் இரு மனித உரிமை செயற்பாட்டாளர்களான ருகி பெர்ணான்டோ மற்றும் கத்தோலிக்க பாதிரியார் பிரவீன் மஹேசனும் மார்ச் 16 கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டபோதும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதும் வெளிநாடுகளுக்கு பயணிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

வீட்டுக்கு வீடு சென்று தேடுதல் நடத்தல், வீதித் தடைகள் மற்றும் வாகன சோதனைகள் உட்பட வடக்கில் ஒரு விசாலமான இராணுவப் பாய்ச்சல் இடம்பெற்று வருகின்றது. இராணுவ நடமாட்டங்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு கடற்கரைப் பிரதேசங்களில் காவல் அரண்கள் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளன. யுத்தகால பாஸ் நடைமுறைகள் மீண்டும் அமுல்படுத்தப்படும் என மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு மாதங்களாக 10 பெண்கள் உட்பட 60 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண ஊடகங்களுக்கு தெரிவித்தார். அவர்கள்கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக எந்தவொரு ஆதரமும் இன்றி அவர் கூறினார்.

இலங்கையின் தமிழ் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதலின் கடைசி மாதங்களில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்து, கடந்த மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க அணுசரனையிலான தீர்மானம் கொண்டுவரப்பட்டதை அடுத்தே தொடங்கின. இந்த காலத்தில் குறைந்த பட்சம் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா நிபுணர்கள் குழுவொன்று மதிப்பிட்டுள்ளது.

தனது ஐரோப்பிய கூட்டாளிகளுடன் சேர்ந்து, புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷ அரசாங்கத்தின் யுத்தத்துக்கு அமெரிக்காவும் ஆதரவளித்தது. ஆனால் இப்போது, சீனாவை இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்தி இராணுவ ரீதியில் சுற்றிவளைப்பதை இலக்காகக் கொண்ட, அமெரிக்காவின்ஆசியாவில் முன்னிலைஎன்ற பரந்த வேலைத் திட்டத்தின் பாகமாக, இராஜபக்ஷ அரசாங்கத்தை பெய்ஜிங்கில் இருந்து தூரவிலகச் செய்ய நெருக்குவதன் பேரில், வாஷிங்டன் இந்த யுத்தக் குற்ற விவகாரத்தை பாசாங்குத்தனமாக பயன்படுத்திக்கொள்கின்றது.

அரசாங்கம் சர்வதேச விசாரணை குறித்து விழிப்புடன் உள்ளது. ஒரு சர்வதேச விசாரணை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன்னால் ஜனாதிபதி இராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ மற்றும் சிரேஷ்ட இராணுவத் தளபதிகளை குற்றவாளிகளாக நிறுத்தக் கூடும்.

இந்த பாய்ச்சல் வெறுமனே தமிழ் கட்சிகளுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டதல்ல. இலங்கை ஆளும் கும்பல், ஒவ்வொரு அரசியல் நெருக்கடியின் போதும் தமிழர்-விரோத இனவாதத்தை நாடி வந்துள்ளது. ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள், தொழிலாள வர்க்கத்தை இனவாத ரீதியில் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தவும், முதலாளித்துவ ஆட்சியை பாதுகாப்பதன் பேரிலும் சிங்கள பேரினவாதத்தை கிளறிவந்துள்ளது. தசாப்தகால தமிழர்-விரோத பாரபட்சங்கள், திட்டமிட்ட படுகொலைகளில் உச்சகட்டத்தை அடைந்து, 1983ல் தீவை உள்நாட்டு யுத்தத்துக்குள் மூழ்கடித்தது.

அரசாங்கம் தொழிலாளர்களின் குவிந்துவரும் எதிர்ப்பையும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்கள் மத்தியில் அமைதியின்மையையும் எதிர்கொண்டுள்ளது. கொழும்பு நகரில் இருந்து பலாத்காரமாக குடும்பங்களை வெளியேற்றுவதற்கு எதிராக வனாத்தமுல்ல பகுதியில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், தொழிற்துறை மாசுபடுத்தல் சம்பந்தமாக அவிஸ்ஸாவளையின் ஹங்வெல்லையில் நடந்த போராட்டம், புகையிரதம், சுகாதாரம் மற்றும் அதிவேக வீதி தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் போன்றவை வெடிக்கக் கூடிய சமூக பதட்டங்களின் அறிகுறிகளாகும்.

அரசாங்கம் இந்தப் போராட்டங்களையும்பயங்கரவாதம்மற்றும்சர்வதேச சதியின்பகுதி என வகைப்படுத்தியது. வேறு வார்த்தைகளில் சொன்னால், இப்போது தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வரும் கொடூரமான நடவடிக்கைகள், எதிர்காலத்தில் அரசாங்கத்தின் தொழிலாள வர்க்க விரோத கொள்கைகள் மீதான எதிர்ப்புகள் அனைத்துக்கும் எதிராக பயன்படுத்தப்படும்.

அரசாங்கம் துரித பொருளாதார வளர்ச்சி பற்றி பெருமைபட்டுக்கொண்ட போதிலும், பொருளாதாரம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெறும் கடன்களிலேயே ஓடிக்கொண்டிருக்கின்றது. சர்வதேச நாணய நிதியமானது பொது சுகாதார மற்றும் கல்விக்கான செலவில் குறைப்பு மற்றும் பொதுத் துறையை ஒட்டு மொத்தமாக மறுசீரமைப்பது உட்பட மேலும் சமூகச் செலவுகளை பெருமளவில் வெட்டித் தள்ளுமாறு வலியுறுத்துகின்றது. வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை 6.2ல் இருந்து 2016ம் ஆண்டில் ஏறத்தாழ பாதியாக 3.8 வரை குறைக்கப்பட வேண்டும் எனவும் நாணய நிதியம் கோருகின்றது. பல தசாப்தங்களுக்கு முன்னர் வெற்றிகொள்ளப்பட்ட, அரசாங்க ஊழியர்கள் ஓய்வுபெறும் போதான ஊக்குவிப்பு கொடுப்பனவை அரசாங்கம் அண்மையில் வெட்டிவிட்டது.

லெஹ்மன் பிரதர்ஸின் பொறிவுடன் 2008ல் தொடங்கிய பூகோள முதலாளித்துவ வீழ்ச்சி, மோசமடைந்து வருவதோடு உலகம் பூராவும் உள்ள அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக ஒரு சமூக எதிர்ப் புரட்சியை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றன. இலங்கையில் நாணய நிதியம் முன்வைக்கும் கோரிக்கைகள் கிரேக்கம், ஏனைய ஐரோப்பிய நாடுகள் மற்றும் உலகம் பூராவும் அது முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு சமாந்தரமானவையாகும். அவை வர்க்கப் போராட்டங்களை பற்ற வைக்கின்றன.

செவ்வாய் கிழமை மத்திய வங்கி ஆண்டறிக்கையை வெளியிட்டு, ஜனாதிபதி இராஜபக்ஷ சமூக அமைதியின்மை பற்றி வெளிப்படையாக எச்சரித்தார். “இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளி மேலும் விரிவடைந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன். இந்த இடைவெளி மேலும் விரிவடைய அனுமதித்தால், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என நான் நம்புகிறேன். சிலர் அராபிய எழுச்சி நெருங்கிவிட்டது எனக் கூறுகின்றனர். சிலர் அராபிய எழுச்சியை மேற்கோள் காட்டி மக்களை விதிக்கு இறங்குமாறு அழைப்பு விடுக்கின்றனர்”, என அவர் அறிவித்தார்.

சமூக வெடிப்பு தொடர்பாக ஆளும் வட்டாரத்துக்குள் வளர்ச்சியடையும் பீதியையே இராஜபக்ஷவின் கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன. இதற்கு அவரது அரசாங்கத்தின் பதிலிறுப்பு, இனவாத பிளவுகளை கிளறிவிடுவதும் பொலிஸ்-அரச வழிமுறைகளை நாடுவதுமே ஆகும்.

ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை பாதுகாப்பதற்கு தொழிலாள வர்க்கம் எதிர்க் கட்சிகள் மீது நம்பிக்கை வைக்க முடியாது. வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியும் (யூஎன்பீ) மக்கள் விடுதலை முன்னணியும் (ஜேவிபீ) தமிழர்கள் மீதான அண்மைய தாக்குதல்களைப் பற்றி மௌனம் காக்கின்றன. புலிகளுக்கு எதிரான யுத்தத்தை யூஎன்பீயே தொடங்கியதோடு ஜேவிபீ அதை தொடர்ந்தும் ஆதரித்த நிலையில், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்த இரு கட்சிகளுமே சிங்கள இனவாதத்தில் மூழ்கியவை.

போலி இடது அமைப்புகளான நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிசக் கட்சியும், ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களை கண்டனம் செய்யவில்லை. யூஎன்பீ உடன் அரசியல் கூட்டணியில் உள்ள இந்த இரு கட்சிகளும், அதை ஜனநாயகத்தின் பாதுகாவலனாக போலியாக முன்னிலைப் படுத்துகின்றன.

தொழிலாளர்களை அல்லது ஒடுக்கப்பட்ட மக்களை அன்றி, தமிழ் முதலாளித்துவக் கும்பலை பிரதிநித்துவம் செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இந்த தடையை நீக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அப்போது அது சர்வதேச புலம்பெயர் அமைப்புகளுடன் தொடர்புகொள்ள முடியும். ஆயினும், வடக்கில் முன்னெடுக்கப்படும் வேட்டையாடலையும்புலி சந்தேக நபர்கள்பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்தையும் பற்றி கூட்டமைப்பு பெருமளவில் அமைதி காக்கின்றது.

அரசாங்கத்தின் தடையை எதிர்க்கின்ற அதேவேளை, சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளுக்கு எந்தவொரு அரசியல் ஆதரவும் கொடுக்கவில்லை. கூட்டமைப்பைப் போலவே, இந்த குழுக்கள் அனைத்தும் தமிழ் பிரிவினைவாதத்தை பிரதிநிதித்துவம் செய்வதோடு தமிழ் முதலாளித்துவத்தின் சொந்த சிறப்புரிமை நிலைமையை தூக்கி நிறுத்துவதற்காக அதன் அபிலாஷைகளையே பிரதிநிதித்துவம் செய்கின்றது. அவர்கள் அனைவரும் சலுகைகளுக்காக கொழும்பு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமும் அதன் பங்காளிகளிடமும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அரசாங்கத்தின் இராணுவ வேட்டையாடலையும் தமிழ் குழுக்கள் மற்றும் உறுப்பினர்கள் மீதான தடையையும் எதிர்க்குமாறு தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. அரசாங்கத்தின் பிற்போக்கு திட்டங்களுக்கு எதிராக, தொழிலாள வர்க்கம் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என்ற இன பேதங்களைக் கடந்து ஐக்கியப்படல் வேண்டும். அவர்களது ஐக்கியத்தை ஸ்தாபிப்பதற்காக, தொழிலாளர்கள் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பாதுகாப்பு படைகளை உடனடியாக வெளியேற்றக் கோருவதோடு இராணுவ ஆக்கிரமிப்புக்கு முடிவுகட்டுமாறும் கோர வேண்டும். தொழிலாள வர்க்கம் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறும் கோர வேண்டும்.

அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்காக தொழிலாளர்கள் தமது சொந்த சுயாதீனமான சோசலிச அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். அத்தகைய ஒரு போராட்டம், தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிசக் குடியரசு ஒன்றியங்களின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற வடிவிலான, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்கான போராட்டத்தை அடித்தளமாகக் கொள்ள வேண்டும்.

இந்த முன்நோக்குக்காக போராடுவது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. எதிர் வரும் போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை மேம்படுத்துவதற்கான ஒரே வழிமுறையான, சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவதற்கு அதில் இணைந்துகொள்ளுமாறு நாம் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.