World Socialist Web Site www.wsws.org |
No to imperialist war! Reclaim the revolutionary traditions of May Day! ஏகாதிபத்திய யுத்தத்தை எதிர்ப்போம்! மே தினத்தின் புரட்சிகர பாரம்பரியங்களை மீட்டெடுப்போம்!
David North 2014 மே தின நிகழ்விற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மே 4 ஞாயிறன்று சர்வதேச இணையவழி பேரணி ஒன்றை நடத்த உள்ளது. உலகெங்கிலும் இருந்து பங்கு பெற வாய்ப்பளிக்கும் இந்த கூட்டத்தின் நோக்கம், சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்திற்கான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தினத்தின் புரட்சிகர சோசலிசப் பாரம்பரியங்களை மீட்டெடுப்பதாகும். தொழிலாள வர்க்கம் அது கடந்து வந்த அனுபவங்களில் இருந்து படிப்பினைகளை பெறவேண்டும், மேலும் இந்த ஆண்டின் மே தினம் வரலாற்றோடு பொருந்திவருகிறது. 1914இல், 100 ஆண்டுகளுக்கு முந்தைய மே தின கொண்டாட்டம், இருபதாம் நூற்றாண்டில் வரவிருந்த பேரழிவுகளுக்கு தொடக்கமாக இருந்த முதலாம் உலக யுத்தம் வெடிப்பதற்கு வெறும் மூன்று மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது. 1914 இல் அந்த நிர்ணயகரமான விடுமுறை நாளில் ஐரோப்பாவின் பிரதான தலைநகரங்கள் எங்கிலும் பேரணிகளில் பங்குபற்றிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ இராணுவவாதத்திற்கு தங்களின் எதிர்ப்பை பிரகடனப்படுத்தினர். முக்கிய முதலாளித்துவ சக்திகள் இடையே காலனிகள் மற்றும் செல்வாக்கு விரிவாக்கம் தொடர்பாக இருந்த விட்டுக்கொடுப்பற்ற போராட்டமும் அதனுடன் சேர்ந்து ஆயுத தளவாடங்களுக்கு முன்னெப்போதையும் விட அதிகமாய் செலவிடப்பட்டதும் போருக்கு இட்டுச் செல்லும் என்று பல ஆண்டுகளாய் அந்நாளின் பாரிய தொழிலாள வர்க்க அமைப்புகள் — அனைத்திற்கும் மேலாக ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியும், பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியும் — எச்சரித்து வந்திருந்தன. அதற்கு வெறும் 18 மாதங்களுக்கு முன்னர், 1912 நவம்பரில், இரண்டாம் அகிலம் — உலகெங்கிலுமான சோசலிச கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சுவிட்சர்லாந்தின் பாசெல் மாநாட்டில் — தொழிலாள வர்க்கத்தின் கட்சிகள் மற்றும் அமைப்புகள் யுத்தத்தை தடுக்க அவற்றின் சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்த ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆயினும் ஒருவேளை யுத்தத்தைத் தடுக்க இயலாமல் போனால், “யுத்தத்தால் தோற்றுவிக்கப்படும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி மக்களுக்கு எழுச்சியூட்டி அதன் மூலமாக முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் வீழ்ச்சியை விரைவுபடுத்த" இரண்டாம் அகிலத்தின் பிரதிநிதிகள் உறுதியெடுத்துக் கொண்டனர். அந்த உறுதிமொழி சோதனைக்கு உள்ளாக நீண்டகாலம் ஆகவில்லை. 1914 கோடையில், பொஸ்னியாவின் சராஜேவோ நகரில், வெளித்தோற்றத்தில் சிறிய அரசியல் சம்பவமாக தோன்றக்கூடிய ஒன்று - ஆஸ்திரிய இளவரசர் ஃபிரான்ஸ் பெர்டினாண்ட் படுகொலை செய்யப்பட்டார் - ஓர் ஐரோப்பா-தழுவிய நெருக்கடியைத் தூண்டி, பின் அது ஒருசில வாரங்களுக்குள் ஒருதரப்பில் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரிக்கும், மறுதரப்பில் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ரஷ்யாவிற்கும் இடையேயான ஒரு யுத்தமாக வெடித்தது. யுத்த எதார்த்தத்தை எதிர்கொண்டிருந்த நிலையில், ஜேர்மன், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஆஸ்திரியாவின் மிகப் பரந்துபட்ட சோசலிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் தமது வேலைத்திட்டங்களை மறுதலித்து, தத்தமது தேசிய ஆளும் வர்க்கங்களின் இராணுவ நடவடிக்கைகளுக்கு தங்களின் ஆதரவை அறிவித்தனர். ஆகஸ்ட் 4, 1914 செவ்வாயன்று முன்நிகழ்ந்திராத ஒரு தொழிலாள வர்க்க அரசியல் காட்டிகொடுப்பாக, ஜேர்மன் குடியரசில் அங்கம்வகித்த சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் யுத்த நிதிக்கு தேவையான நிதியியல் கடன்களுக்கு ஆதரவாக ஒருமனதாக வாக்களித்தனர். அந்தக் காட்டிக்கொடுப்பின் விளைவாக, அதற்கடுத்த நான்காண்டு கால ஏகாதிபத்திய யுத்தத்தில் பத்துமில்லியன்கணக்கான பேர் கொல்லப்பட்டனர். உலகெங்கிலுமான தொழிலாள வர்க்க இளைஞர்கள் என்னும் மலர்கள், உலக மேலாதிக்கத்தை பெறுவதற்கான சக்திவாய்ந்த முதலாளித்துவ நலன்களுக்கு இடையிலான — குறிப்பாக ஜேர்மன், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் 1917இல் யுத்தத்தில் இறங்கிய அமெரிக்காவிற்கு இடையிலான —அந்த மோதல்களின் இரத்த ஆற்றில் அழிக்கப்பட்டனர். அந்த நான்காண்டு யுத்த காலத்தின் போது,Somme, Marne, Ypres, Verdun மற்றும் Gallipoli போன்ற ஆறுகள், நகரங்கள், ஏன் தீபகற்பங்களின் பெயர்களும் கூட பாரிய படுகொலைகளை அர்த்தப்படுத்தும் இணைச்சொற்களாக மாறின. சோசலிஸ்டுகள் அனைவருமே அவர்களின் கோட்பாடுகளைக் கைவிட்டுவிடவில்லை. அந்த சகாப்தத்தின் தலைசிறந்த மார்க்சிஸ்டுகள் இரண்டாம் அகிலத்தின் காட்டிக்கொடுப்பை எதிர்த்து யுத்தத்தை கண்டித்ததோடு மட்டுமல்ல, அதன் அடிப்படைக் காரணங்களையும் விளங்கப்படுத்தினர். யுத்தமானது தவிர்க்கவியலாதபடிக்கு நிதியியல் மூலதனம் மற்றும் மிகப் பெரிய பெருநிறுவன ஏகபோகங்களால் மேலாதிக்கம் செலுத்தப்படும் உலக ஏகாதிபத்திய அமைப்புமுறையின் முரண்பாடுகளில் இருந்து எழுகிறது என்று ரஷ்ய போல்ஷ்விக் கட்சியின் தலைவர் விளாடிமிர் லெனின் விளங்கப்படுத்தினார். 1905 ரஷ்ய புரட்சியின் ஒரு முக்கிய தலைவராக முன்னணிக்கு வந்திருந்த லியோன் ட்ரொட்ஸ்கி, யுத்தமானது உலகப் பொருளாதார அபிவிருத்திக்கும் காலாவதியாகிவிட்ட தேசிய அரசுகளது அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடுகளின் வெடிப்பார்ந்த வெளிப்பாடு என்று விளங்கப்படுத்தினார். ஓர் உலகளாவிய ஏகாதிபத்திய யுத்தம் வெடிப்பதற்கு இழுத்து செல்கின்ற புறநிலை முரண்பாடுகள் உலக சோசலிசப் புரட்சிக்கு இட்டு செல்லும் என்பதை லெனினும், ட்ரொட்ஸ்கியும் முன்கணித்தனர். இந்த முன்னோக்கின் அடிப்படையில் தான் ஒரு புதிய புரட்சிகர அகிலத்தைத் தோற்றுவிக்க அவர்கள் அழைப்பு விடுத்ததுடன் முதல் சோசலிசப் புரட்சியின் — ரஷ்யாவில் நிகழ்ந்த 1917 அக்டோபர் புரட்சியின் — வெற்றிக்கு அரசியல் அடித்தளங்களை அமைத்தனர். அக்டோபர் புரட்சியின் வெற்றியானது ஐரோப்பிய மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்திற்குத் தூண்டுதலளித்தது, அது ஏகாதிபத்திய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர நிர்ப்பந்தித்து. ஆனால் ரஷ்யாவின் போல்ஷ்விக் கட்சியோடு ஒப்பிடத்தக்க அளவிற்கு ஒரு மார்க்சிச தலைமை இல்லாத நிலையில், யுத்தத்திற்கு பிந்தைய புரட்சிகர அலை பின்னுக்கு தள்ளப்பட்டு, ஐரோப்பிய முதலாளித்துவமானது இன்று மேலாதிக்கம் செலுத்துகின்ற அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒத்துழைப்போடு உயிர்பிழைத்தது. சோவியத் ஒன்றியத்திற்குள்ளே பார்த்தோமானால், ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் பெற்ற தோல்விகளால் தனிமைப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், ஸ்ராலின் தலைமையிலான பழமைவாத அதிகாரத்துவம் படிப்படியாக தொழிலாள வர்க்கத்திடமிருந்து அரசியல் அதிகாரத்தை தட்டிப் பறித்து விட்டது. அக்டோபர் புரட்சி எந்த புரட்சிகர சர்வதேசியக் கோட்பாடுகளை அடித்தளமாகக் கொண்டிருந்ததோ அவை ஸ்ராலினின் "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்கிற பிற்போக்குத்தனமான தேசியவாத வேலைத்திட்டத்தைக் கொண்டு மாற்றீடு செய்யப்பட்டன. இவ்வாறு மார்க்சிச சர்வதேசியவாதத்தை நிராகரித்தமையானது, ஒரு தொழிலாளர் அரசாக சோவியத் ஒன்றியத்தின் கதியை அதன் எல்லைகளுக்கு அப்பாலான ஒரு சோசலிசப் புரட்சியின் வெற்றியில் இருந்து பிரித்து வைத்தது. நடைமுறையில், ஸ்ராலினின் வேலைத்திட்டமானது, எல்லாவற்றுக்கும் முதலில் சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக தனது சிறப்புச் சலுகைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் கவலையையே பிரதானமாகக் கொண்டிருந்த சோவியத் அதிகாரத்துவத்தின் குறுகிய தேசியவாத நலன்களுக்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதாக இருந்தது. மூன்றாம் அகிலத்தின் கம்யூனிஸ்ட் கட்சிகள் மூலமாக பெரும் அரசியல் செல்வாக்கை செலுத்தி வந்த ஸ்ராலினிசம் தொழிலாள வர்க்கத்தை நோக்குநிலை தவறச் செய்ததோடு அதனைத் தவறாகவும் வழிநடத்தியது. அதன் விளைவாக பல பெரிய தோல்விகள் வரிசையாக ஏற்பட்டன, அவற்றில் மிகப் பேரழிவைத் தருவதாக அமைந்த தோல்வி 1933 ஜனவரியில் ஜேர்மனியில் ஹிட்லரின் நாஜி கட்சி அதிகாரத்திற்கு வந்தமை ஆகும். 1927இல் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு, பின்னர் 1929இல் சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேற்றப்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கி, ஜேர்மனியில் பாசிசத்தின் வெற்றியானது, முதலாம் உலக யுத்தத்தை விடவும் மிக மிகக் கொடூரமாக இருக்கக்கூடிய ஒரு இரண்டாம் உலக யுத்தத்திற்கு இட்டு செல்லும் என்பதை கண்டுகொண்டார். முதலாளித்துவத்தை தூக்கியெறிவதைத் தவிர வேறு எதனாலும் இந்த யுத்த்தை தடுக்க முடியாது. ஆனால் அந்த கடமையை சாதிக்க வேண்டுமென்றால், மீண்டுமொருமுறை, ஒரு புதிய அகிலத்தை — நான்காம் அகிலத்தை — கட்டியெழுப்புவது அவசியமாக இருந்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு வெறும் ஓராண்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட, நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தில், ட்ரொட்ஸ்கி உலக முதலாளித்துவத்தின் நிலை குறித்து சுருக்கமான மற்றும் மிகத் துல்லியமான சித்திரத்தை வழங்கினார்: "மனிதகுலத்தின் உற்பத்தி சக்திகள் தேக்கமடைகின்றன. ஏற்கனவே புதிய கண்டுபிடிப்புகளும் முன்னேற்றங்களும் பொருளியல் செல்வத்தின் மட்டத்தை உயர்த்துவதற்குத் தவறுகின்றன. ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையில் ஏற்பட்டிருக்கும் சமூக நெருக்கடி நிலைமைகளின் கீழ் ஒன்றுதிரண்டுள்ள நெருக்கடிகள் வெகுஜனங்களின் மீது முன்பில்லாத வகையில் பலமான இழப்புகளையும் மற்றும் அவலங்களையும் திணிக்கின்றன. அதிகரித்துச் செல்லும் வேலைவாய்ப்பின்மை, அதன் பங்கிற்கு, அரசின் நிதியியல் நெருக்கடியை ஆழப்படுத்துவதோடு, ஸ்திரமற்ற செலாவணி அமைப்புமுறைகளுக்கும் குழிபறிக்கிறது. ஜனநாயக ஆட்சிகளும், அத்தோடு பாசிச ஆட்சிகளும், ஒரு திவால்நிலையிலிருந்து மற்றொன்றுக்கு எனத் தடுமாறுகின்றன. முதலாளித்துவமே இதிலிருந்து வெளியேறுவதற்கான வழியைக் காணவியலாமல் உள்ளது. இறுதி துருப்புச்சீட்டாக கருதி ஏற்கனவே பாசிசத்தில் தங்கியிருக்க அது நிர்பந்திக்கப்பட்டிருக்கும் நாடுகளில் கூட, இப்போது அது பொருளாதார மற்றும் இராணுவ பேரழிவுகளை நோக்கி கண்களை மூடிக் கொண்டு சறுக்கிச் சென்று கொண்டிருக்கிறது. வரலாற்றுரீதியில் சிறப்புச் சலுகை பெற்ற நாடுகளில், அதாவது எந்தெந்த நாடுகளில் முதலாளித்துவத்தால் அதன் தேசியத் திரட்சிகளை செலவிட்டு, தன்னைத்தானே ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு ஜனநாயக ஆடம்பரத்தில் இருக்க அனுமதிக்க முடிகிறதோ அந்த நாடுகளில் (பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, இதர பிற) மூலதனத்தின் அனைத்து பாரம்பரிய கட்சிகளும் சிந்தனையோட்டமே ஸ்தம்பித்துப் போகுமளவிற்கு குழப்பமான ஒரு நிலையில் இருக்கின்றன... சர்வதேச உறவுகளிலும் நிலைமை இதைவிடச் சிறப்பானதாக இல்லை. முதலாளித்துவச் சிதைவினால் அதிகரிக்கும் பதட்டங்களின் கீழ், ஏகாதிபத்திய முரண்பாடுகள் முன்னேறிச் செல்ல முடியாத ஒரு நிலையை எட்டும்போது, அதன் உச்சத்தில் தனித்தனியான மோதல்களும் இரத்தந்தோய்ந்த உள்நாட்டு சிக்கல்களும் (எத்தியோப்பியா, ஸ்பெயின், தூர-கிழக்கு, மத்திய ஐரோப்பா) தவிர்க்கவியலாதபடிக்கு உலகளவிலான பரிமாணமுடைத்த ஒரு தீப்பற்றலாக ஒன்றிணைகின்றன. உண்மையில், ஒரு புதிய உலகப் போர் தனது மேலாதிக்கத்திற்கு மரண அபாயத்தைக் குறித்து நிற்பதையும் முதலாளித்துவம் நன்கு அறிந்தே வைத்துள்ளது. ஆனால் அந்த வர்க்கம், யுத்தத்தை தடுப்பதில் 1914 சூழலை விட இப்போது இன்னும் கூடுதலாய் திறனற்றதாய் இருக்கிறது. “ஒரு சோசலிச புரட்சி இல்லையென்றால், அடுத்த வரலாற்று காலக்கட்டத்தில், ஒட்டுமொத்த மனிதகுல கலாச்சாரத்தையும் ஒரு பேரழிவு அச்சுறுத்துகிறது," என்று ட்ரொட்ஸ்கி ஓர் எச்சரிக்கையோடு முதலாளித்துவத்தின் உலக நெருக்கடியைக் குணாம்சப்படுத்துகிறார். இந்த எச்சரிக்கை, அதன் அத்தனை துன்பியலான பரிமாணங்களிலும், ஊர்ஜிதப்படுத்தப்படுள்ளது. எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், செப்டம்பர் 1939 இல், இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது. அது, "ஜனநாயகம்" மற்றும் "பாசிசத்திற்கு" இடையிலான ஒரு மோதலல்ல. முதலாம் உலக யுத்தத்தை போலவே, சாரத்தில் அது புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார மேலாதிக்கத்திற்காக ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே நடந்த ஒரு சண்டையாகும். அதில் ஒவ்வொரு பிரதான போட்டி சக்தியுமே அதற்கு மிக சாதகமான முறையில் உலகளாவிய ஆதாரவளங்களை மறு-பங்கீடு செய்ய முனைந்தது. ஏகாதிபத்தியத்தால் செய்ய முடிந்திருந்த குற்றங்களை மிகக் கொடூரமான வடிவத்தில் வெளிப்படுத்திய விதத்தில் மட்டுமே ஹிட்லர், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் அவரது முதலாளித்துவ விரோதிகளில் இருந்து வேறுபட்டிருந்தார். ஆனால் யுத்தம் முடிந்திருந்த சமயத்தில், ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகள் வீசியதன் மூலம், மிசோரியில் இருந்து வந்த ஒரு சிறுவணிகரான, ஜனநாயக கட்சியின் அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமேன், மொத்தமாக படுகொலை செய்யும் அனைத்து உத்திகளுக்குமான உரிமங்கள் பித்துப்பிடித்த நாஜி சர்வாதிகாரிக்கு மட்டும் இல்லை என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டினார். அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் சொந்த இடத்திற்கு வந்திருந்தது. ஏறக்குறைய அறுபது மில்லியன் உயிர்களை பறித்த இரண்டாம் உலக யுத்தத்தின் மலைப்பூட்டும் பேரழிவுகளுக்குப் பின்னர், உலகப் பொருளாதாரம் விரிவடைந்தது. எப்படிப் பார்த்தாலும், மறு கட்டுமானம் செய்வதற்கு ஏராளமாய் இருந்தது அல்லவா. தொடர்ந்துவந்த மூன்று தசாப்த கால தேசிய அரசு சீர்திருத்தவாதம் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் மட்டுமல்ல சோவியத் ஒன்றியத்திலும் கூட, வாழ்க்கைத் தரங்களில் ஒரு கணிசமான உயர்வைக் கண்டது. சீனப் புரட்சியானது, கொடூரமாக ஒடுக்கப்பட்ட ஒரு நாடான சீனாவில் நேரடி ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. "மூன்றாம் உலகம்" எங்கிலும் பாரிய காலனித்துவ-எதிர்ப்பு போராட்டங்களின் ஓர் அலை வீசியது. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் அடிப்படை வரலாற்று பிரச்சினை தீர்க்கப்படவில்லை. 1914-1945இன் பேரழிவுகரமான முப்பது ஆண்டு நெருக்கடியிலிருந்து முதலாளித்துவத்தால் உயிர்பிழைத்து மீண்டு வர முடிந்திருந்தது. யுத்தத்திற்கு பிந்தைய செழுமையின் ஆண்டுகளில், தொழிலாளர் இயக்கத்திற்குள் இருந்த ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களின் சந்தர்ப்பவாத சீரழிவு முன்னெப்போதையும் விட அதிகரித்துச் சென்றது. யுத்தத்திற்குப் பிந்தைய வளர்ச்சி தணியத் தொடங்கி நெருக்கடியை நோக்கிய போக்கு மீண்டும் தன்னை வலுவாக வெளிக்காட்டத் தொடங்கியபோது — முதலும் முக்கியமுமாக அமெரிக்காவில் —அதிகாரத்துவங்கள் முதலாளித்துவத்திற்கு எதிராகப் போராட திறனோ விருப்பமோ தமக்கு இல்லை என்பதை நிரூபணம் செய்ததுடன் நிற்கவில்லை. அபிவிருத்தி அடைந்துவந்த முதலாளித்துவ நெருக்கடிக்கு ஒரு புரட்சிகர விடையிறுப்பைக் கண்டறிய தொழிலாள வர்க்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒவ்வொரு முயற்சியும் தோற்கடிக்கப்படுவதை உறுதிப்படுத்த அவற்றின் கைவசம் இருந்த ஒவ்வொரு ஆதார வளத்தையும் அவை பயன்படுத்தின. எப்போதும்போல, அதிகாரத்துவங்கள் தங்களை கவனித்துக் கொண்டன. ஆனால் முதலாளித்துவ அமைப்புமுறையில் முன்னொருபோதும் இல்லாத வகையில் உலகளாவிய ஒருங்கிணைப்பு வந்துசேர்ந்து விட்டிருந்ததை குணாம்சமாய்க் கொண்ட ஒரு புதிய காலகட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பழைய பாரிய அமைப்புகளின் — அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் — தேசிய-சீர்திருத்தவாத வேலைத்திட்டங்கள் திவாலாகிப் போனதே அவற்றின் இயலாமையைத் தீர்மானிப்பதில் தீர்க்கமான காரணியாக இருந்தது. தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சிகர அபிவிருத்திகளைப் பயன்படுத்தி, உற்பத்தி முறைகளில் அவை ஏற்படுத்திய பரந்த தாக்கங்களோடு, சர்வதேச ஆளும் வர்க்கம் — அமெரிக்காவின் தலைமையில் — 1970களின் இறுதியில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஓர் இரக்கமற்ற மற்றும் சளைக்காத தாக்குதலைத் தொடங்கியது. தனக்கு கீழிருந்த அனைத்து சகிதமாக சரணாகதியடைந்ததே இந்தத் தாக்குதலுக்கு தொழிலாளர் அதிகாரத்துவங்களின் விடையிறுப்பாக இருந்தது. 1989 மற்றும் 1991க்கு இடையே கிழக்கு ஐரோப்பாவில் மற்றும் சோவியத் ஒன்றியத்திலேயே கூட, ஸ்ராலினிச ஆட்சிகள் கலைக்கப்பட்டமை அந்த நிகழ்வுப்போக்கின் உச்சக்கட்டமாய் இருந்தது. அதே காலகட்டத்தில், ஜூன் 1989இல் தியானென்மென் சதுக்கத்தில் நடத்தப்பட்ட மாணவர் படுகொலையும் அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மூர்க்கமான தொழிலாள வர்க்க விரோத ஒடுக்குமுறையும் சீனாவில் முதலாளித்துவ மீட்சிக்கு எழுந்த பாரிய எதிர்ப்பை ஒடுக்குவதில் அதிமுக்கிய பங்கு வகித்தன. 1980களின் இறுதியில், கோர்பச்சேவின் கீழான சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவம், சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு அது அடித்தளம் தயாரித்துக் கொண்டிருந்த நிலையில், சர்வதேச புவிசார் அரசியல் களத்தில் அதன் "புதிய சிந்தனை" குறித்து தம்பட்டம் அடித்துக் கொண்டது. "ஏகாதிபத்தியம்" பற்றிய குறிப்புகளை அது ஏளனம் செய்தது, அதனை லெனினால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புனைவாக கோர்பச்சேவும் அவரது கூட்டாளிகளும் நிராகரித்தனர். சோவியத் ஒன்றியத்தின் முடிவோடு, உலக அமைதியின் ஒரு புதிய காலகட்டம் தொடங்கவிருந்ததாம். ஆனால் இத்தகைய பரிதாபகரமான மற்றும் அறிவீனமான கற்பனைகள் எதார்த்தத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பிந்தைய 20க்கும் அதிகமான ஆண்டுகள், முடிவில்லாமல் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் உலகளாவிய மோதலால் குறிக்கப்பட்டுள்ளன. ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதற்கு முன்னரே கூட, ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெர்பெர்ட் வால்கர் புஷ், ஈராக் மீதான முதல் ஆக்கிரமிப்பை ஒழுங்கமைத்திருந்த நிலையில், ஒரு "புதிய உலக ஒழுங்கு" பிறக்கிறதென்று பிரகடனம் செய்தார். 2001இல் கட்டவிழ்த்துவிடப்பட்ட, “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்பது உலகின் ஒவ்வொரு பாகத்தையும் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு அடிபணிய செய்வதற்கான ஒரு கடிவாளமற்ற உலகளாவிய இராணுவப் பிரச்சாரமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவிலிருந்து, இந்த நிகழ்வுப்போக்கு முக்கியமாக ஒரு கூர்மையான வடிவத்தை எடுத்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்கா, சீனாவைச் சுற்றி வளைக்கும் நோக்கம் கொண்ட இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது; சிரியா மற்றும் ஈரானுக்கு எதிராய் போர் அச்சுறுத்தலை அளித்தது; அத்துடன் மிக சமீபத்தில், ரஷ்யாவுடன் ஒரு மோதலைத் தூண்டிவிடும் நோக்கில் உக்ரேனில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை ஒழுங்கமைத்தது. இந்த நடவடிக்கையில் அமெரிக்கா மட்டும் தனியாக செயல்படவில்லை. ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும், குறிப்பாக ஜேர்மனியும், ரஷ்யா உடனான இந்த மோதலுக்கு உற்சாகத்தோடு வழிமொழிந்தன. உக்ரேனிய நெருக்கடி அபிவிருத்தி அடைந்து கொண்டிருந்த சமயத்திலேயே, ஜேர்மன் ஜனாதிபதி ஜோஅஹிம் கௌக், ஜேர்மனியின் பொருளாதார சக்திக்கு பொருத்தமான வகையில் உலக விவகாரங்களில் அது ஒரு பாத்திரம் வகிப்பதற்கான காலம் வந்துவிட்டதாக அறிவித்தார். ஜேர்மன் இராணுவ சக்தியை பெருக்குவது மற்றும் இடநிலைகளில் நிறுத்துவது இதில் இடம்பெற்றிருக்கும் என்பதையும் அவர் தெளிவாக்கினார். அப்போதிருந்து, உக்ரேனிய நெருக்கடியுடன் கைகோர்த்து ஜேர்மன் ஊடகங்களில் தீவிரமான ரஷ்ய-விரோத பிரச்சாரமும் நடந்தேறி வருகிறது. இராணுவவாதத்திற்கு எதிராய் ஜேர்மனியின் பரந்த மக்களிடையே ஆழமாக வேரூன்றி உள்ள விரோதத்தை கடுமையாக தாக்குவதும் இந்தப் பிரச்சாரத்தின் தொடர்ச்சியான கருப்பொருளாக இருந்து வருகிறது. உக்ரேன் சம்பந்தமாக ரஷ்யாவுடனான மோதல் ஏகாதிபத்திய சக்திகளின் நோக்குநிலையில் ஒரு புதிய மற்றும் அபாயகரமான திருப்பத்தைக் குறித்து நிற்கிறது. ஏகாதிபத்திய யுத்த தெய்வங்கள் கொடூர வேட்கையோடு உள்ளன! முதலாம் உலக யுத்தம் மற்றும் இரண்டாம் உலக யுத்தத்திற்கு முந்தைய ஆண்டுகளைப் போன்றே, உலகை புதிதாகப் பிரிக்க தயாரிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன. சீனா மற்றும் ரஷ்யாவுடன் ஒரு யுத்தம் சாத்தியமில்லை — பிரதான ஏகாதிபத்திய சக்திகள் அணுஆயுத வல்லமை கொண்ட சக்திகளோடு "யுத்த அபாயத்தை" முன்னெடுக்க மாட்டா — என்று நம்புபவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் வரலாறு, அதன் இரண்டு பேரழிவுகரமான உலக யுத்தங்களைக் கொண்டும் மற்றும் அதன் கணக்கற்ற, இரத்தந்தோய்ந்த "உள்நாட்டு" மோதல்களைக் கொண்டும், ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்கள் முன்னெடுக்கத் தயாராக உள்ள அபாயங்களுக்கு போதிய ஆதாரங்களை வழங்கியிருக்கிறது. உண்மையில், அவை ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மற்றும் ஏன் இந்த பூமியின் தலைவிதியையே கூட அபாயத்திற்கு உட்படுத்தத் தயாராக இருக்கின்றன. முதலாம் உலக யுத்தம் வெடித்து நூறு ஆண்டுகளும், இரண்டாம் உலக யுத்தம் தொடங்கி 75 ஆண்டுகளும் ஆன பின்னர், சர்வதேசத் தொழிலாள வர்க்கம் ஒரு மூன்றாம் ஏகாதிபத்திய பிரளயத்திற்கு எதிரான போராட்டத்தை எதிர்கொண்டுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக புத்துயிரூட்டப்பட்ட போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை உலகம் முழுவதும் ஐக்கியப்படுத்தவும், எச்சரிக்கை ஒலி எழுப்பவும் இந்த மே தின இணையவழி நிகழ்விற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அழைப்பு விடுத்துள்ளது. மே 4 ஞாயிறன்று, எங்களோடு இணையுங்கள்! சர்வதேச அளவிலான வர்க்க ஐக்கியத்திற்கும் மற்றும் உலக சோசலிச போராட்டத்திற்குமான ஒரு தினமாக மே தினத்தை மீட்டெடுப்போம். [இந்த இணையவழி மே தின கூட்டத்தில் பங்குபற்றுவதைப் பதிவு செய்ய, பின்வரும் தளத்தைக் காணவும்: internationalmayday.org .] |
|