World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian Stalinists promote fraud of “secular,” “pro-people” Third Front

இந்திய ஸ்ராலினிஸ்டுகள் "மதசார்பற்ற," “மக்கள்-சார்பு" மூன்றாம் முன்னணி என்ற மோசடியை ஊக்குவிக்கின்றனர்

By Deepal Jayasekera and Keith Jones
5 April 2014

Back to screen version

இந்தியாவின் ஒன்பது கட்ட பொது தேர்தலின் வாக்கெடுப்பு தொடங்க இருக்கின்ற நிலையில், இந்தியாவின் ஸ்ராலினிச நாடாளுமன்ற இரட்டை கட்சிகளான சிபிஎம் [இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி] மற்றும் சிபிஐ [இந்திய கம்யூனிஸ்ட் கட்சி], பல்வேறு வலதுசாரி பிராந்திய மற்றும் ஜாதிய அடிப்படையிலான கட்சிகள் உள்ளடங்கிய ஒரு மூன்றாம் முன்னணியை உருவாக்க அவர்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்கி உள்ளன.

கடந்த வாரம் சிபிஎம் அரசியற்குழு அங்கத்தவர் சீதாராம் யெச்சூரி, "காங்கிரஸ்-அல்லாத, பிஜேபி-அல்லாத யாருடனும் நாங்கள் இணையத் தயாராக உள்ளோம்" என்று அறிவித்தார். இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியுடன் (பிஜேபி) முன்னர் கூட்டணி வைத்திருந்த அஇஅதிமுக, ஒருங்கிணைந்த ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் (BJP) ஆகிய மூன்று கட்சிகளின் தலைவர்களையும் தான் அப்போது யெச்சூரி ஒரு முக்கிய கூட்டாளிகளாக அடையாளம் கண்டார், இப்போது அவை வலதுசாரி மாநில அரசாங்கங்களுக்கு தலைமை வகித்து வருகின்றன.

ஸ்ராலினிஸ்டுகளின் வருங்கால கூட்டணி பங்காளிகளாக எதிர்பார்க்கப்படுபவர்கள் பெரும்பாலும் அவர்களின் நிலையற்ற நிலைப்பாட்டினால் ஏளனமாக புறக்கணிக்கப்பட்டு நிற்கின்றனர். அவர்கள், இந்தியாவின் தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்க ஒரு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி உடனோ அல்லது/மற்றும் வரவிருக்கும் தேர்தலில் முன்னணியில் உள்ள பிஜேபி உடனோ, தேர்தலுக்குப் பின்னர் பேரம்பேசுவதற்காக அவர்கள் தமது நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றனர்.

எவ்வாறிருந்த போதினும், தேர்தல் அட்டவணையின்படி மே மாத மத்தியில் வரவிருக்கின்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் மூன்றாம் முன்னணி அமையுமென்றும், அது காங்கிரஸ் மற்றும் பிஜேபி-தலைமையிலான தேர்தல் கூட்டணிக்குப் போட்டியாக ஒரு "மதசார்பற்ற", “ஜனநாயக," “மக்கள்நல" மாற்று அரசாங்கத்தை அமைக்குமென சிபிஎம் மற்றும் சிபிஐ வலியுறுத்தி வருகின்றன.

இதுவொரு வெட்கக்கேடான மோசடியாகும்: ஸ்ராலினிசஸ்டுகளின் கூட்டாளிகளாக ஆக இருப்பவர்கள், பிற்போக்குதனமான இனவாத-மொழிவாத, வகுப்புவாத மற்றும் ஜாதிய முறையீடுகள் செய்பவர்கள், உண்மையில் அவர்கள் அவற்றையே அடித்தளமாக கொண்டிருக்கின்றனர். நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைந்த வருவாயில் உயிர் வாழ போராடும் மொத்த மக்கள்தொகையின் மூன்று கால் பங்கு மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் சமூகரீதியில் மேலதிக வறுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மையைக் கிளறி விட்டிருக்கிற "சந்தை-சார்பு", "முதலீடு-சார்பு" கொள்கைகளை அந்த கட்சிகள் அனைத்தும் அவர்களோடு ஸ்ராலினிஸ்டுகளையும் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும் நடைமுறைப்படுத்தி உள்ளன.

சிபிஐ மற்றும் சிபிஎம் இரண்டும் "நிலப்பிரபுத்துவ-ஏகாதிபத்தியத்தின் பிற்போக்குத்தனத்தை" எதிர்க்கிறோம் என்றும், மிக சமீபத்தில் வகுப்புவாத BJPஐ எதிர்க்கிறோம் என்ற பெயரிலும், தொழிலாளர் வர்க்கத்தை திட்டமிட்டு காங்கிரஸிற்கோ அல்லது ஏனைய முதலாளித்துவ கட்சிகளுக்கோ அடிபணிய செய்வதில், பல தசாப்தங்களாக, முதலாளித்துவ ஆட்சியின் முக்கிய தூண்களாக சேவை செய்துள்ளன.

இந்திய முதலாளித்துவ அரசாங்கத்தின் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சி, உலக முதலாளித்துவத்திற்கு ஒரு மலிவுகூலி உற்பத்தியாளராக இந்தியாவை மாற்றும் அதன் உந்துதலை முன்னெடுத்துள்ளதோடு, அதை ஸ்ராலினிஸ்டுகளின் ஒத்துழைப்போடு செய்தும் உள்ளது. அரசாங்கத்தின் வழிநடத்தலில் இருந்து திசைமாற்றி தனியார்மயமாக்கல், கட்டுப்பாடுகளை தளர்த்தல், சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி செல்லவும் மற்றும் அமெரிக்க தலைமையிலான முதலாளித்துவ ஒழுங்கமைப்பிற்குள் இந்தியாவை முழுமையாக ஒருங்கிணைக்க இந்திய முதலாளித்துவத்தின் மைய நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்திய நரசிம்ம ராவ்வின் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு, 1990களின் தொடக்கத்தில் சிபிஎம் மற்றும் அதன் இடது முன்னணி முட்டு கொடுத்தன.

2004 தேர்தல்களுக்குப் பின்னர், இதே சிபிஎம் தான் காங்கிரஸ் தலைமையிலான UPAக்குள் பல்வேறு பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைத்தது. UPAஇன் பகட்டான "குறைந்தபட்ச பொதுத்திட்டம்," (Common Minimum Programme) என்பதை எழுதியதும் அதில் உள்ளடங்கும். அத்திட்டம் இந்தியாவின் "தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் தேவைகளுக்கேற்ப நவ-தாராளவாத மறுசீரமைப்பு செய்ய முடியுமென்று, அதாவது "மனிதாபிமானத்துடனான சீர்திருத்தம்" செய்ய முடியுமென, பொய்யுரைத்தது. அதற்கடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, ஸ்ராலினிஸ்டுகள் அவர்களின் நாடாளுமன்ற பெரும்பான்மையோடு UPAக்கு ஆதரவளித்ததோடு, அந்த கூட்டிணி அரசாங்கம் ஒரு பெரு வியாபாரம் சார்ந்த சமூக-பொருளாதார திட்டத்தை மற்றும் அதற்கு முந்தைய பிஜேபி தலைமையிலான அரசாங்கத்திலிருந்து சற்றே வேறுபட்ட ஒரு அமெரிக்க சார்பிலான வெளியுறவு கொள்கையை நடைமுறைப்படுத்தி வந்த போதும் கூட, அது பதவியில் நிலைத்திருக்க வாக்களித்தது.

இறுதியாக, ஜூலை 2008இல், இந்தோ-அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக மற்றும் அதன்மூலமாக இந்திய முதலாளித்துவத்திற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான ஒரு "உலகளாவிய மூலோபாய கூட்டணியை" ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் ஸ்ராலினிஸ்டுகளை அரசாங்கத்திலிருந்து முடிவாக வெளியேற்ற முடிவு செய்தது.

ஸ்ராலினிஸ்டுகளின் மூன்றாம் முன்னணி உபாயமானது, உலக பொருளாதார நெருக்கடி இந்திய முதலாளித்துவத்தின் "எழுச்சியை" காலை வாரி விட்டிருக்கும் நிலைமைகளின் கீழ் மற்றும் வர்க்க போராட்டம் வேகமாக தீவிரமடைந்து வரும் நிலைமைகளின் கீழ், அரசியல்ரீதியாக தொழிலாளர் வர்க்கத்தை ஒடுக்குவதை நோக்கமாக கொண்டதாகும்.

பொதுவாக தசாப்த-கால பழமையான காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம், விலை உயர்வுகள், நிலவும் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொதுச் சொத்துக்களை பெரு வியாபாரங்களுக்கு அன்பளிப்பாக வாரி கொடுத்தமை ஆகியவற்றோடு அடையாளம் காணப்படுகிறது.

இதற்கிடையில், பெருநிறுவன இந்தியாவோ குஜராத் முதல் மந்திரியும் சுய-பாணியிலான "இந்துத்துவ பலமானமனிதன்" நரேந்திர மோடி, பிற்போக்குத்தனமான பெரும் "சந்தை-சார்" முறைமைகளை மக்கள் எதிர்ப்பிற்கு முன்னால் கொண்டு செல்வார் என்ற எதிர்பார்ப்போடு, அவர் தலைமையிலான BJPக்கு பின்னால் பெரிதும் தொங்கி கொண்டிருக்கிறது. அந்த முறைமைகளில், எண்ணெய் மற்றும் ஏனைய விலை மானியங்களை நீக்குதல், வேலைநீக்கங்கள் மற்றும் ஆலை மூடல்களுக்கான கட்டுப்பாடுகளைக் குறைத்தல்; பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கு தேசியளவிலான வரிவிதிப்பு; ஒட்டுமொத்த விற்பனையைத் தனியார்மயமாக்கல் மற்றும் அன்னிய முதலீட்டின் மீது எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச கட்டுப்பாடுகளையும் நீக்குதல் ஆகியவையும் உள்ளடங்கும்.

முதலாளித்துவம் உத்வேகங்களோடு மோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளதோடு, பிற்போக்குத்தனம் மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு அது திரும்பி வருகின்ற நிலைமைகளின் கீழ், இந்திய முதலாளித்துவத்தின் சிறிய, பிராந்திய கட்சிகளை உள்ளடக்கிய "பிஜேபி-அல்லாத," “காங்கிரஸ்-அல்லாத" ஒரு நாடாளுமன்ற அணி என்ற அவர்களின் பிரச்சாரத்தோடு, ஸ்ராலினிஸ்டுகள் அரசியல்ரீதியாக தொழிலாளர் வர்க்கத்தை மூச்சடைக்க வைக்க முனைந்து வருகின்றன. ஸ்ராலினிஸ்டுகளின் கூட்டாளிகளாக ஆக இருப்பவர்கள் அந்த இரண்டு "தேசிய கட்சிகளைப்" போன்றே பெரு வியாபாரத்தின் சேவர்களாக தங்களை அர்பணித்துள்ளவை ஆகும் அல்லது அதனதன் பிராந்தியரீதியிலான முதலாளித்துவ கன்னைகளின் பொருளாதார நலன்களைக் கணக்கிட்டு அவை காங்கிரஸ் உடனோ அல்லது பிஜேபி உடனோ ஓர் உடனடி கூட்டுக்கு செல்லும்.

இடது முன்னணியில் உள்ளடங்கியுள்ள நான்கு கட்சிகள் மற்றும் ஏழு பிராந்திய கட்சிகள் உட்பட பதினொரு கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து, "காங்கிரஸ் மற்றும் BJPக்கு ஒரு மாற்றை" உருவாக்க உடன்பட்டுள்ளதாக," பெப்ரவரி 25இல், சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அறிவித்தார். இந்த மாற்றீடு ஒரு "மக்களுக்கான முன்னேற்ற பாதைக்கு" பொறுப்பெடுத்துள்ளதாக காரத் மேற்கொண்டு அறிவித்தார். ஆனால் அந்த பதினொரு கட்சிகளால் கையெழுத்திடப்பட்ட அந்த சுருக்கமான அறிக்கையில், “மிக சுலபமாக காங்கிரஸ் அல்லது பிஜேபி தேர்தல் அறிக்கையிலேயே காணப்படும் சமத்துவமின்மை, சமூக நீதி, விவசாயிகளின் நலன்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் உரிமைகள்" குறித்த கவனம்செலுத்துவதாக ஒரு வாக்குறுதிக்கு அப்பாற்பட்டு அந்த நிகழ்ச்சிநிரலில் உண்மையான நோக்கம் என்பது குறித்த ஒரு வார்த்தை கூட இல்லை.

பிரகாஷ் அறிவித்ததற்கு சில மணி நேரங்களுக்குள், அந்த "மாற்றீடு" சிதறத் தொடங்கியது. முதலில், அசாம் கன பரிஷத் தலைவர் ஒரு பிஜேபி தலைமையிலான அரசாங்கத்தில் சேரும் சாத்தியக்கூறு தவிர்க்கப்படவில்லை என தெரிவித்தார். பின்னர் கையெழுத்திட்டிருந்த மற்றொரு கட்சியான சமாஜ்வாதி கட்சி (SP), பிஜேபி அதிகாரத்திற்கு வராமல் தடுக்க மற்றொரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை அது ஆதரிக்குமென குறிப்பிட்டு காட்டியது. இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் ஆளும் கட்சியான சமாஜ்வாதி கட்சி, உண்மையில், கடந்த ஆறு ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் மீண்டும் தக்க வைக்க ஒத்துழைத்துள்ளது ஜூலை 2008இல் இந்தோ-அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கை மீதான வாக்கெடுப்பில் அது மிக பிரபலமாக இருந்தது.

ஒடிசா தலைமை மந்திரியும், BJD தலைவருமான நவீன் பட்நாயக்கின் கட்சி சிபிஎம்-இடது முன்னணியின் "மாற்றீடுக்கு" ஒரு ஆதரவாளராக அறிவித்திருந்த போதினும், அவர் பெப்ரவரி 25 கூட்டத்தைத் தவிர்த்து கொண்டார். அதற்கு பின்னர் வெகு விரைவிலேயே, ஸ்ராலினிஸ்டுகளை பீதியடைய செய்யும் விதத்தில், பட்நாயக் அவரது கட்சி ஒருங்கிணைந்து நடத்தப்பட உள்ள தேசிய மற்றும் ஒடிசா மாநில தேர்தல்களில் தனித்து போட்டியிடும் என அறிவித்தார். பட்நாயக்கின் BJD, 2009இல், பிஜேபி உடன் ஒரு தேர்தல் இட ஒதுக்கீடு சம்பந்தமான மோதலில் பதினொரு ஆண்டுகால கூட்டணியை உடைத்துக் கொண்ட பின்னர், ஏறத்தாழ உடனடியாக, சிபிஎம் மற்றும் சிபிஐ உடன் ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கியது.

தமிழ்நாடு முதல் மந்திரியும், அஇஅதிமுக தலைவியுமான ஜெயலலிதா, அவரது கட்சி சிபிஐ மற்றும் சிபிஎம் உடன் தேர்தல் இட ஒதுக்கீடு செய்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தமை ஸ்ராலினிஸ்டுகளுக்கு இன்னும் பெரிய அடியாக இருந்தது. ஸ்ராலினிஸ்டுகள் ஜெயலலிதாவை மூன்றாம் அணிக்கான பிரதம மந்திரி வேட்பாளராக்கும் சாத்தியக்கூறை ஊக்குவித்து வந்திருந்தனர். ஒரு இழிபெயர் பெற்ற வலதுசாரியான ஜெயலலிதா, மாநில தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடைக்க 2003இல் பாரிய சிறையடைப்பு மற்றும் வேலை நீக்கங்களைப் பயன்படுத்தினார், அத்தோடு அவர் தொடர்ந்து பிஜேபி மற்றும் அதன் பங்காளிகளின் இந்து மேலாதிக்கவாத பிரச்சாரங்களுக்கு ஆதரவளித்துள்ளதோடு மோடியின் தனிப்பட்ட நண்பர் என்றும் குறிப்பிடப்படுகிறார். ஜெயலலிதா மற்றும் அவரது அஇஅதிமுக உடன் விடயங்களைக் கோர்க்க முடியுமென்ற தெளிவான நம்பிக்கையில் சிபிஎம், அவர் பிஜேபி உடனோ அல்லது அதன் தேசிய ஜனநாயக கூட்டணி உடனோ தேர்தலுக்குப் பிந்தைய ஒரு உடன்பாட்டை எட்ட தயாரிப்பு செய்து வருகிறாரா என்பதைத் தெளிவுபடுத்துமாறு கோரிய ஒரு அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர் சுமார் இரண்டு வாரங்கள் காத்திருந்தது.

அதன் மூன்றாம் முன்னணி சிதறிக் கொண்டிருக்கின்ற நிலையிலும், ஸ்ராலினிஸ்டுகள் இந்த வெற்று கூட்டை இறுக பிடித்துக் கொண்டு, அது தேர்தலுக்குப் பின்னர் வடிவமெடுக்கும் என்று தற்போது வலியுறுத்திக் கொண்டு, அஇஅதிமுக, BJD, மற்றும் இதர கட்சிகள் "முற்போக்காக" உள்ளடக்கங்களை கொண்டிருப்பதாக தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. அதேவேளையில் அந்த கட்சிகளோ பிஜேபி அல்லது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்குள் நுழைய வெளிப்படையாக தயாரிப்பு செய்து வருகின்றன.

சிபிஎம் தலைவர் காரத் சென்ற வாரயிறுதியில் Hindu நாளிதழுக்கு கூறுகையில், “பெப்ரவரி 25இல் நாங்கள் என்ன அறிவித்தோம் என்றால், காங்கிரஸ் மற்றும் BJPக்கு எதிராக ஒன்றிணைவதற்கான எங்களின் ஒருமித்த விருப்பத்தை வெளியிட்டோம், தேர்தல்களுக்குப் பின்னர், அந்த மாற்றீட்டிற்கு நாங்கள் வடிவம் அளிப்போம்," என்றார்.

சிபிஎம் அதன் கூட்டணி பங்காளிகளாக ஆகக்கூடியவர்களை ஒருங்கிணைக்க இன்னும் மேலதிகமாக வலதிற்கு நகர தயாராக இருப்பதை அடிக்கோடிடும் விதத்தில், காரத் Hinduக்கு கூறுகையில், ஒரு மூன்றாம் அணி அரசாங்கத்திற்குள் நுழைய இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே தயாராக இருப்பதாக தெரிவித்தார். 1996இல், பல்வேறு பிராந்திய கட்சிகளை அடிப்படையாக கொண்டு சிபிஎம் ஒரு "ஐக்கிய முன்னணி" அரசாங்கம் ஆட்சி அமைக்க சேவையாற்றியது, ஆனால் மேற்கு வங்காள சிபிஎம் முதல் மந்திரி ஜோதி பாசுவிற்கு பிரதம மந்திரி பதவி வழங்கப்படும் என்ற போதும் கூட அந்த அரசாங்கத்திற்குள் நுழைய அது மறுத்துவிட்டது. வெளியிலிருந்து ஆதரவளித்த CPMஇன் ஆதரவோடு, சில ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்திருந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் இந்திய முதலாளிகளின் நவ-தாராளவாத சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை பின்தொடர்ந்ததோடு, அதற்கடுத்த தேர்தல்களில் பிஜேபி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற பாதை அமைத்து கொடுத்தது.

அவர்களின் மூன்றாம் அணி மோசடிக்கு அழுத்தம் அளித்து வருகின்றன அதேவேளையில், ஸ்ராலினிஸ்டுகளும் சிபிஎம் தலைமையிலான இடது முன்னணியில் உள்ள அவர்களின் துணைக்கூட்டாளிகளும் ஒரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு மீண்டுமொருமுறை முட்டு கொடுக்க அவர்கள் தயாராக இருப்பதற்கு சமிக்ஞை கொடுத்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை இடது முன்னணி ஆதரிக்கக்கூடும் என்பதை விலக்கி வைக்க முடியாது, ஆனால் "2004இல் ஏற்பட்டது போன்ற ஒரு நிலைமை ஏற்பட்டால் மட்டுமே அவ்வாறு நடக்கும் ... அப்போது வகுப்புவாத BJPஐ தடுப்பதற்காக காங்கிரஸ் தரப்பிற்கு செல்ல வேண்டி இருந்தது," என்று கடந்த மாதம் சிபிஎம் அரசியல்குழு அங்கத்தவரும், முன்னாள் மேற்கு வங்காள முதல் மந்திரியுமான புத்ததேவ் பட்டாச்சாரியா தெரிவித்தார்.

விரைவிலேயே ஒரு தனி மாநிலமாக ஆக உள்ள ஆந்திர பிரதேசத்தின் ஒரு பகுதியான தெலுங்கானாவின் சட்டமன்ற மற்றும் மக்களவை (தேசிய நாடாளுமன்ற) தேர்தல்களில் சிபிஐ, அதன் பங்கிற்கு, இங்கு இது "தனிச்சிறப்பான ஒரு விடயம்" என்று கூறி, காங்கிரஸூடன் ஒரு தேர்தல் கூட்டணி உருவாக்கி வைத்துள்ளது.

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (RSP) கேரள காங்கிரஸின் ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் சேர்வதற்காக, கடந்த மாதம் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியிலிருந்து வெளியேறியது. தேசிய தேர்தலுக்குப் பின்னர் அதிகாரத்தைத் தக்க வைக்கும் காங்கிரஸின் முயற்சிக்கு ஆதரவளிக்கும் பட்சத்திலேயே கேரள மாநில அரசாங்கத்திற்குள் RSPஐ சேர்த்துக் கொள்வதை காங்கிரஸ் நிபந்தனையாக வைத்துள்ளது. இவ்வாறிருக்கின்ற போதினும், RSP தேசியளவில் ஸ்ராலினிஸ்டுகளின் இடது முன்னணியில், அத்தோடு அவர்களின் பகட்டான காங்கிரஸ்-விரோத "ஜனநாயக மற்றும் மதசார்பற்ற மாற்றீடு" என்பதில் ஓர் அங்கத்துவ கட்சியாக தங்கி உள்ளது.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்: