World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

IMF report: No end to economic breakdown

சர்வதேச நாணய நிதிய அறிக்கை: பொருளாதார முறிவுக்கு முடிவு இல்லை

Nick Beams
8 April 2014

Back to screen version

உலகளாவிய நிதியியல் நெருக்கடி வெடித்து ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், செப்டம்பர் 2008க்கு முந்தைய பொருளாதார வளர்ச்சி விகிதங்களுக்கு மீண்டும் திரும்புவதற்கான எந்தவொரு சாத்தியக்கூறையும் சர்வதேச நாணய நிதியம் (IMF) முற்றிலுமாக நிராகரித்தது.

இந்த வார இறுதியில் வாஷிங்டனில் நடக்கவுள்ள வசந்தகால கூட்டங்களுக்காக பிரசுரிக்கப்பட்ட, சர்வதேச நாணய நிதியத்தின் உலக பொருளாதார ஆய்வறிக்கையின் இரண்டு பிரதான அத்தியாயங்கள், உலக பொருளாதார நிலையின் ஓர் இருண்ட மதிப்பீட்டை வழங்குகின்றன. முன்னேறிய நாடுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) விகிதத்திற்கேற்ப முதலீடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது, அதேவேளையில் "எழுச்சியடைந்து வரும் சந்தைகளில்," வளர்ச்சி விகிதங்கள் 2007க்கு முந்தைய அளவுகளுக்கு திரும்புவதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை.

1980களில் இருந்து நிஜமான வட்டி விகிதங்கள் வீழ்ச்சி அடைந்து வந்துள்ளதாக, அவை "தற்போது சற்றே எதிர்மறை பகுதிக்குள்" இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடுகிறது. ஆனால் இது உற்பத்தி முதலீட்டை ஊக்குவிக்கவில்லை. அதற்கு முரண்பட்ட விதத்தில், உலக நிதியியல் நெருக்கடியால் ஏற்பட்ட "தழும்புகள்" என்று அது எதை குறிப்பிடுகிறதோ, அது "முன்னேறிய நாடுகளின் முதலீடுகளில் ஒரு கூர்மையான மற்றும் நிலையான வீழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. 2008 மற்றும் 2013ஆம் ஆண்டுகளுக்குள், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகித அடிப்படையில் அந்த நாடுகளில் முதலீடுகளில் ஒரு இரண்டரை சதவீத புள்ளி வீழ்ச்சி இருந்தது. பல முன்னேறிய பொருளாதாரங்களின் விகிதங்கள், நெருக்கடிக்கு முந்தைய அளவுகளுக்கு மீள்வதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை, என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

முதலாளித்துவ பொருளாதாரத்தின் செயற்பாடுகளில் முதலீடு பிரதான பங்கு வகிப்பதால், இந்த முடிவு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சாதாரண" நிலைமைகள் என்று கூறப்படுபவைகளில், உற்பத்தியை விரிவாக்குவதற்கான ஆற்றலாக விளங்கும் முதலீடு, முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாகும். எதிர்கால இலாபங்களைக் கருத்தில் கொண்டு, முதலீடானது தொழிலாளர் சந்தைகளில் புதிய தேவைகளை உருவாக்குவதோடு, பொதுவாக எந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திக் கருவிகளுக்கான சந்தைகளையும் தோற்றுவிக்கிறது. அதன் விளைவாய், இது மேலதிக தேவை மற்றும் இலாபத்திற்கான வாய்ப்புவளங்களை உருவாக்குவதோடு, கூடுதல் முதலீட்டையும் ஊக்குவிக்கிறது. இவ்விதத்தில் ஒரு காத்திரமான பொருளாதார சுழற்சி இயங்கச்செய்யப்படுகிறது.

ஆனால் முதலீடு மந்தப்பட்டாலோ அல்லது வீழ்ச்சி அடைந்தாலோ, அந்த சுழற்சி வக்கிரமாக திரும்புகிறது. இது தான் இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பதாகும்.

அதை சர்வதேச நாணய நிதியம் இவ்வாறு குறிப்பிடுகிறது: முன்னேறிய நாடுகளில், அதுவும் குறிப்பாக இந்த பொருளாதாரங்களில் புதிய அதிர்வுகள் தாக்கினாலோ அல்லது கொள்கைகள் எதிர்பார்த்தபடி நெருக்கடி விளைவுகளை தீர்க்க தவறினாலோ, நீண்ட காலத்திற்கு மிக குறைந்த வளர்ச்சி ('நீடித்த மந்தநிலைமை') இருக்கக்கூடிய சாத்தியக்கூறு தான் ஒரு பெருங்கவலையாக உள்ளது.

"ஆதாரங்கள் ... முன்னேறிய நாடுகளில் முதலீடு குறைவதை நோக்கிய ஒரு முழு திருப்பம் ஏற்படக் கூடாது என்று அறிவுறுத்துகின்றன" என்று சர்வதேச நாணய நிதியம் கவலையோடு எழுதுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அனுமானிக்கக்கூடிய எதிர்காலம் வரையில் எந்தவொரு காலகட்டத்திலும் ஒரு நிஜமான பொருளாதார மீட்சிக்கான சாத்தியக்கூறு அங்கே இல்லை.

அந்த நிலைமை, ஒரு சமயத்தில் உலகளாவிய முதலாளித்துவ விரிவாக்கத்தின் புதிய அடித்தளங்கள் என்று புகழப்பட்ட "எழுச்சியடையும் சந்தைகளில்" இன்னும் மோசமாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின்  கருத்துப்படி: எழுச்சியுறும் சந்தையிலும், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலும் ஏற்பட்டுள்ள சமீபத்திய மந்தநிலைமையானது கொள்கை வகுக்கும் வட்டாரங்களில் பெரும் கலக்கத்தை உண்டாக்கி உள்ளது," என்று குறிப்பிட்டது.

இந்த நாடுகள் 2009-2010இல் முன்னேறிய நாடுகளை விட மிகமிக பலமாக மீளுயர்வு பெற்ற போதினும், அதன் பின்னர் அவற்றின் வளர்ச்சி வேகமாக குறையத் தொடங்கியது, அவை "உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்கு முன் இருந்த வளர்ச்சியை விட தற்போது குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்து போயுள்ளன."

மீளுயர்வு பெற்ற காலக்கட்டத்தில், அவை நெருக்கடியில் தொடர்பற்று இருப்பதாக" (decoupling) கூறுவது நடைமுறை வழக்கமாக இருந்தது. ஆனால் எழுச்சியடைந்துவரும் சந்தைகளும், அபிவிருத்தி அடைந்துவரும் பொருளாதாரங்களும் உலகின் ஏனைய பொருளாதார போக்குகளுக்கேற்ப அதிகளவில் பாதிக்கப்படக் கூடியவை என்பது நிரூபணமாகி உள்ளது.

2012க்கு பின்னர், எழுச்சியுற்றுவரும் சந்தைகளின் வளர்ச்சி விகிதங்களில் இரண்டு சதவீத புள்ளி வீழ்ச்சி அடைந்திருப்பதை சர்வதேச நாணய நிதியம் கண்டறிந்தது, இதில் சீனா அரை சதவீத புள்ளி, ஏனைய வெளிக் காரணிகள் ஒன்றேகால் சதவீத புள்ளிகள், மற்றும் இதர, முக்கியமாக உள்ளார்ந்த, காரணிகள் கால் சதவீத புள்ளி மட்டும் என்ற கணக்கில் வருகின்றன.

"அநேகமாக, பெரும்பாலான வெளிக் காரணிகள் அதுபோன்ற வீழ்ச்சி அதிகரிப்புக்கு சாதகமாக இருக்கும்போது, உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்கு முந்தைய காலக்கட்டத்தை விட மிகவும் சிக்கலான மற்றும் சவாலான வளர்ச்சி சூழலை இந்த நாடுகள் முகங்கொடுக்கக் கூடும், என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயர்ந்தால், ஒரு சிறிய அளவில் உயர்ந்தாலும் கூட, 2013 கோடைகாலத்தில் ஏற்பட்ட நிதியியல் கொந்தளிப்பு போன்று மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிப்பட்டதைப் போல, எழுச்சியடையும் சந்தைகள் பாதிக்கப்படும்." அவை சீனாவின் ஒரு மந்தமான வளர்ச்சியாலும் படுமோசமாக பாதிக்கப்படக்கூடும்.

இந்த வாரத்தின் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டங்களில், அந்த அமைப்பின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்ட்டின் எச்சரிக்கைகள் முன்னுக்கு வந்தன, அதாவது நாடுகள் "சரியான விதத்தில் கொள்கை முறைமைகளை" ஒன்று கூடி எடுத்தால் ஒழிய, உலகம் "பல ஆண்டுகளுக்கு குறைந்த மற்றும் வரையறுக்கப்பட்டதையும் விட குறைவான வளர்ச்சியை" முகங்கொடுக்கும் என்று அவர் தெரிவித்தார். ஆனால் உலகளாவிய பொறிவிற்குள் ஆறு ஆண்டுகள் இருந்த பின்னரும், தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகள் மீதான மற்றும் சமூக உரிமைகள் மீதான ஆழ்ந்த தாக்குதல்களுக்கு அப்பாற்பட்டு அந்த "சரியான கொள்கைகள்" என்னவென்பதற்கான எந்த தெளிவான அறிகுறியும் காணக் கூடியதாக இல்லை.

அமெரிக்காவில், வேலைகள் உருவாக்குவதற்கான "சாத்தியங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படவில்லை" என்று லகார்ட் குறிப்பிட்டார். மார்ச்சில் வெறும் 192,000 என்றளவிற்கு மட்டுமே அமெரிக்காவில் வேலையிடங்கள் ஏற்பட்டுள்ளதை எடுத்துக்காட்டும் சமீபத்திய புள்ளிவிபரங்களோடு, அந்த எண்ணிக்கைகள் "அதிகமாக இருந்திருக்கலாம், அவை அதிகமாக இருந்திருக்க வேண்டும்," என்று லகார்ட் தெரிவித்தார். நிச்சயமற்றதன்மை, நம்பிக்கையின்மையின் காரணமாக அவை அவ்வாறு இல்லை, உண்மையில் கூடுதலான நிறுவனங்கள் அவற்றின் திறனை அதிகரிப்பதில் மற்றும் வேலைகளை உருவாக்குவதில் முதலீடு செய்வதை விட, அவை தங்களுக்குள்ளேயே முதலீடு செய்து வருகின்றன," என்றார்.

பிரதான அமெரிக்க நிறுவனங்கள் அவற்றின் இலாபங்களை, உற்பத்தித் திறனை அதிகரிப்பதில் முதலீடு செய்யாமல், மாறாக அவை நிதியியல் மேற்தட்டின் சொத்துக்களை உயர்த்த பங்குகளை வாங்கி விற்பதற்கும், பங்கு விலைகளை ஊதி பெருக்க செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றன என்ற உண்மையை லகார்ட் குறிப்பிடுகிறார்.

அமெரிக்க பெருநிறுவன இலாபங்கள், குறைந்தபட்சம் 85 ஆண்டுகளில் இல்லாதளவிற்கு அவற்றின் அதிகபட்ச மட்டங்களில் இருப்பதாகவும், அதேவேளையில் பணியாளர்களின் ஊதியங்கள் சரிந்து வருவதாகவும் வர்த்தகத்துறை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 2013இல், ஊதியங்களுக்கான செலவுகள் பொருளாதாரத்தில் 42.5 சதவீதமாக இருந்தன, அது 2012இல் இருந்த 42.6 சதவீதத்தை விட குறைவு என்பதோடு அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட அளவுகளை விட மிக குறைவாகும் என்று வர்த்தகத்துறை குறிப்பிட்டது.

2013 நிலைமையை 2006இல் இருந்த நிலையோடு ஒப்பிட்டு, நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிடுகையில், பணவீக்கத்திற்கேற்ப மதிப்பிட்டால், பெருநிறுவனங்களின் வரிக்கு முந்தைய இலாபங்கள் 28 சதவீத அளவிற்கு உயர்ந்திருந்ததாக குறிப்பிட்டது. ஆனால் வரிகள் 21 சதவீத அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதால், பெருநிறுவனங்களின் வரிக்குப் பிந்தைய இலாபங்கள் கடந்த ஏழு ஆண்டுகளில் 36 சதவீத அளவிற்கு உயர்ந்தன. இருந்த போதினும், சர்வதேச நாணய நிதியத்தின் புள்ளிவிபரங்கள் காட்டுவதைப் போல, இந்த பணம் பொருளாதார விரிவாக்கத்திற்கு செலவிடும் நிதியாக பயன்படுத்தப்படவில்லை, மாறாக பெரும் செல்வந்தர்களின் வருவாய்களை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நிதியியல் மேற்தட்டுக்களுக்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்களைக் கிடைக்கச் செய்துள்ள பெடரல் ரிசர்வின் பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விடும் திட்டத்தோடு (quantitative easing ) சேர்ந்து, அமெரிக்க பொருளாதாரத்தின் அதிகளவிலான ஒட்டுண்ணித்தனமான சுபாவம் அமெரிக்க மற்றும் உலகளாவிய பங்குச் சந்தைகளை ஊக்குவித்துள்ளது.

கடந்த வாரம், அமெரிக்க S&P 500 குறியீடு முன்னொருபோதும் இல்லாத உயரத்தை எட்டியது, அதேபோல பைனான்சியல் டைம்ஸால் தொகுக்கப்பட்ட ஈக்விட்டி சந்தைகளுக்கான அனைத்து உலக குறியீடு, 2007 இறுதிக்குப் பின்னர், அதன் அதிகபட்ச உயர்வை எட்டியது.

பொதுவாக அமெரிக்க நிதியியல் மூலதனத்தின் கண்ணோட்டங்களை பிரதிபலிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர், பணத்தை புழக்கத்தில் விடும் திட்டம் (வங்கிகளிடமிருந்து பத்திரங்களை வாங்க மத்திய வங்கிகளால் பணம் அச்சடிப்படுவதை) ஐரோப்பாவிற்கும் நீடிக்க வேண்டுமென விரும்புகிறார். கடந்த வாரம், ஐரோப்பிய மத்திய வங்கியின் ஒரு கொள்கை விளக்க கூட்டத்திற்கு முந்தைய தினம், அப்பெண்மணி பணச்சுருக்க (deflation) அச்சுறுத்தலைத் தவிர்க்க, ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) மேலதிகமான கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுத்தார்.

உண்மையில் ஸ்பெயினில் 0.2 சதவீத அளவிற்கு விலைகள் வீழ்ச்சி கண்டு வருவதோடு சேர்ந்து, ஐரோப்பிய விலைகளின் ஆண்டு விகிதம் மார்ச்சில் வெறும் 0.5 சதவீதம் உயர்ந்ததை எடுத்துக்காட்டும் புள்ளிவிபரங்கள் வெளி வந்திருப்பதை ஒட்டி லகார்ட்டின் அழைப்பு வந்தது. இது 2 சதவீத பணவீக்க விகிதம் என்ற ஐரோப்பிய மத்திய வங்கியின் இலக்கை விட மிக குறைவாகும். பணச்சுருக்க அசுரன்" என்று லகார்ட் எதை குறிப்பிடுகின்றாரோ அதன் மீதான கவலையானது, ஜப்பானில் அனுபவப்பட்டதைப் போல, வங்கிகள் மற்றும் ஏனைய நிதியியல் அமைப்புகளின் நிஜமான கடன் சுமையை அதிகரித்து, ஒரு பணச்சுருக்கம் சுழற்சியின் சாத்தியப்பாட்டிலிருந்து எழுந்து வருகின்றது.

ஐரோப்பிய மத்திய வங்கியின் கூட்டத்தை தொடர்ந்து, மத்திய வங்கியின் தலைவர் மரியோ திராஹி கூறுகையில், நிதியியல் சொத்துக்கள் வாங்குவது உட்பட புதிய கொள்கை முனைவுகளைக் கண்டறியும் அதன் பொறுப்புணர்வில் வங்கியின் நிர்வாக கவுன்சில் "ஒருமனதாக" உள்ளதாக தெரிவித்தார். பணத்தை புழக்கத்தில் விடும் திட்டம் [QE- quantitative easing] மீதான விவாதங்களும் அங்கே உள்ளன, அது கைவிடப்படவில்லை," என்று அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.

ஆனால் நெறிமுறை கொள்கை குறித்து, பெடரலுக்கு பரிந்துரை வழங்கியதை விட அதிகமாக, அவருக்கு "அதீத பெருந்தன்மையோடு சர்வதேச நாணய நிதியம் அதன் ஆலோசனைகளை" வழங்குவதற்கு, ஒருபுறம் பழிக்கும் சாயலில், அவர் நன்றி தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம் பெடரலுக்கும் பரிந்துரைகளைச் செய்திருப்பதாக லகார்ட் திருப்பி தாக்கினார். எதை கூறுவதற்குரியதென நாங்கள் கருதுகிறோமோ அதை கூறியே ஆக வேண்டுமானால் நாங்கள் கூறி விடுகிறோம்," என்று அவர் தெரிவித்தார். ஐரோப்பிய மத்திய வங்கி பணவீக்க பிரச்சினைக்கு கவனம்செலுத்த வேண்டுமென்ற கண்ணோட்டத்தை சர்வதேச நாணய நிதியம் நீண்டகாலமாக கொண்டிருக்கிறது," என்றும் அவர் தெரிவித்தார்.

முதலாளித்துவ பொறிவு தொடர்ந்து கொண்டிருக்கையில், அத்திலாந்திற்கிடையே வார்த்தை யுத்தம் நடந்து கொண்டிருப்பது பிரதான பொருளாதார கூட்டுகளுக்கு இடையில் பதட்டங்கள் அதிகரிப்பதை எடுத்துக்காட்டுகின்றது. எவ்வாறிருந்த போதினும், நிலவும் பல பொருளாதார பிரச்சினைகளுக்கு எந்தவொரு தீர்வையும் முன்னெடுக்க முடியாமல், ஆளும் மேற்தட்டுக்கள், என்ன விலை கொடுத்தாயினும், வங்கிகள் மற்றும் நிதியியல் செல்வந்த மேற்தட்டின் நலன்களைப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில், மற்றும் அவர்களின் நடவடிக்கைகளால் தூண்டிவிடப்பட்ட நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க வேண்டுமென்ற அடிப்படை விடயங்களில் உடன்பட்டு நிற்கின்றன.