World Socialist Web Site www.wsws.org |
அமெரிக்காவில் பொலிஸ் படுகொலை
Andre Damon and Barry Grey நியூ மெக்சிகோவின் அல்புகெர்கி பொலிஸ், நகருக்கு வெளியே மலையடிவாரத்தில் முகாமிட்டு தங்கியிருந்த வீடற்ற ஒருவரான ஜேம்ஸ் பாய்டை, கடந்த மாதம் சுட்டு கொன்றது. நூறு ஆயிரம் முறை பார்க்கப்பட்டுள்ள அந்த சம்பவத்தின் ஒரு வீடியோ காட்சி, அந்நகரிற்கு வெளியிலும், தேசியளவிலும் மக்களிடையே கண்டனங்களை தூண்டிவிட்டுள்ளது. 2010இல் இருந்து, அங்கே அல்புகெர்கியில் மட்டும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய 23 பொலிஸ் துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டுள்ளன. இராணுவ யுத்த உடை மற்றும் தலைகவசத்துடன் அதிநவீன துப்பாக்கிகள் ஏந்திய பொலிஸ் வீடற்ற தனிநபர் ஒருவரை எதிர்கொள்வதை அந்த வீடியோ படம் காட்டுகிறது. அதிகாரிகள் பாய்டை நோக்கி ஒரு வெடிகுண்டை வீசுகின்றனர், அவர் மீது ஒரு வேட்டை நாயை ஏவுகின்றனர், பின்னர் அசைவற்று கிடக்கும் அவரது உடலை சுடுவதற்கு முன்னர் அவரது பின்பகுதியில் உயிரிழக்கும் வகையில் எட்டு குண்டுகளைச் சுடுகின்றனர், அதன் பின்னர் அசைவற்று கிடக்கும் அவரது உடலில் வேட்டைத் துப்பாக்கி குண்டுகளால் சுட்டு, மீண்டுமொரு முறை அவர் மீது நாயை ஏவிவிடுகின்றனர். இந்த வீடியோ வெளியானதும், நூற்றுக்கணக்கான அந்நகர மக்களிடையே எதிர்ப்புகள் வெடித்தன, அவை கலகம் ஒடுக்கும் பொலிஸால் கண்ணீர் புகை குண்டு வீசி கலைக்கப்பட்டன. அல்புகெர்கி பொலிஸ் 30 வயதுடைய ஆல்பிரட் லியோனல் ரெட்வைன் எனும் மற்றொரு நபரை, ஒரு அடுக்குமாடி வளாகத்திற்கு வெளியே சில நாட்களுக்கு முன்னர் தான் கொன்றனர். "பொலிஸ் அதிகாரிகள் அவரை சுட்டு கொன்ற போது, ரெட்வைன் அவரது உள்ளங்கை வெளிப்புறமாக திருப்பி காட்டியபடி, கைகளைக் கீழே போட்டிருந்தார்,” என்று அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸிற்கு தெரிவித்தனர். அல்புகெர்கி துப்பாக்கிசூடு இந்த ஆண்டு நடத்தப்பட்டுள்ள தேசியளவிலான பல பொலிஸ் படுகொலைகளில் சமீபத்திய ஒன்று மட்டுமேயாகும். · ரெட்வைன் கொல்லப்பட்டதற்கு அடுத்த நாள், வாஷிங்டனின் ஸ்போகேனில் 30 வயதுடைய ஸ்டீவன் சி. கோர்டெரி என்பவரை, அவர் பொலிஸ் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு வீட்டிலிருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்தபோது சுட்டு கொன்றனர். · ஜனவரி 14இல் அரிஜோனாவின் போனிக்ஸில் மானுவேல் ஓரொஸ்கோ லங்கோரியா என்பவர் ஒரு போக்குவரத்தில் நிறுத்தப்பட்டதும் தமது கைகளை உயர தூக்கி இருந்தபோது பொலிஸால் பின்புறமிருந்து சுட்டு கொல்லப்பட்டார். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மகாநகரமான போனிக்ஸில் சுமார் ஒரு டஜன் பொலிஸ் துப்பாக்கி சூடுகள் நடந்துள்ளன. · பெப்ரவரி 14 ம் தேதி, 44 வயதான லூயிஸ் ரொட்றிகஸ் அவரது மனைவி மற்றும் மகளுடனான சண்டையால் அழைக்கப்பட்ட பொலிஸால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த ஒவ்வொரு சம்பவத்திலும், அதற்கு பொறுப்பான அந்த அதிகாரிகள் அவர்களின் கரங்களில் ஊதியத்துடன் கூடிய தற்காலிக பணிநீக்க வடிவத்தில் ஒழுங்கு நடவடிக்கை என்பதைத் தவிர வேறொன்றையும் பெறவில்லை. இந்த பொலிஸ் படுகொலைகளை உள்ளூர் ஊடகங்கள் விமர்சனமற்ற முறையில் செய்தியாக்கின, தேசிய ஊடகங்களோ பெரிதும் கண்மூடி கொண்டன. அமெரிக்கா முழுவதிலும் உள்ள பொலிஸ் துறைகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஏறத்தாழ வழக்கமாகி உள்ள வன்முறை, பெரும்பாலும் படுகொலைகளாக இருப்பவை, அமெரிக்க சமூகத்தில் ஆழ்ந்த புறநிலை வேர்களைக் கொண்டுள்ளன. அது வர்க்கப் பதட்டங்கள் உடையும் நிலைக்கு நீண்டிருக்கும் ஒரு சமூகத்தை பிரதிபலிப்பதோடு, ஆளும் வர்க்கம் அதன் அரசு எந்திரங்கள் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒடுக்குமுறை ஆட்சியை நடத்துகிறது என்பதையும் பிரதிபலிக்கிறது. நாட்டில் எங்காவதொரு இடத்தில் பொலிஸால் அடாவடித்தனமாக கொல்லப்படும் ஒரு கொலையைக் காட்டும் வீடியோ இல்லாமல் ஒரு வாரம் கழிவதில்லை. அமெரிக்காவில் உள்ள "நீதி" அமைப்புமுறை என்று அழைக்கப்படுவது, தொழிலாளர்கள் மற்றும் அதன் வலையில் மாட்டிக் கொண்டுள்ள இளைஞர்களை அது கண்மூடித்தனமாக கையாளும் விதம் குறித்து இழிவார்ந்து உள்ளது. உலக மக்கள் தொகையில் வெறும் ஐந்து சதவீதத்தைக் கொண்டிருக்கின்ற அமெரிக்கா, உலகளவில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. சுமார் 2.2 மில்லியன் அமெரிக்கர்கள் சிறையில் உள்ளனர், மற்றும் 4.8 மில்லியன் பேர் நன்னடத்தை காலத்தில் அல்லது ஜாமினில் வெளியே உள்ளனர். அத்தோடு காட்டுமிராண்டித்தனமான மரண தண்டனையை நடைமுறையில் கொண்டுள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய அபிவிருத்தி அடைந்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாக உள்ளது. அமெரிக்காவில் முதலாளித்துவ ஆட்சி எப்போதும் வன்முறையாக நடத்தப்பட்டுள்ளது, ஆனால் பொலிஸின் பிரசன்னம், ஆயுதமேந்திய காவலர்கள் மற்றும் தினசரி வாழ்வில் இராணுவம் ஆகியவை 2008 நிதியியல் முறிவுக்குப் பின்னர் வேகமாக அதிகரித்துள்ளன. அதன் வளர்ச்சி ஏற்கனவே சமூக சமத்துவமின்மையின் மலைப்பூட்டும் அளவுகளுக்கு ஏற்பட்டுள்ள உயர்வுகளுக்கு சமாந்தரமாக உள்ளது. தொழிலாள வர்க்கத்தின் கடந்தகால சமூக வெற்றிகளில் எஞ்சி இருப்பவைகள் மீது ஒரு மூர்க்கமான தாக்குதலை தொடுப்பதன் மூலமாக, மற்றும் அத்தோடு சமூகத்தின் ஆதாரவளங்களை சூறையாடுவதோடு மற்றும் வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாத அளவிற்கு செல்வ வளத்தை நிதியியல்-பெருநிறுவன மேற்தட்டுக்கு மாற்றுவதோடு சேர்ந்து, இந்த உலகளாவிய பொருளாதார முறிவுக்கு ஆளும் வர்க்கம் விடையிறுப்புக் காட்டி உள்ளது. அமெரிக்க பில்லியனர்களின் செல்வ வளம் 2009இல் இருந்து இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, அதேவேளையில் ஒரு சராசரி குடும்பத்தின் வருவாய் 5,000 டாலருக்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிரந்தர பொருளாதார பாதுகாப்பின்மை, வீழ்ச்சி அடைந்துவரும் வாழ்க்கை தரங்கள் மற்றும் அதிகரித்து வரும் வறுமை, பசி மற்றும் வீடற்ற நிலைமை ஆகியவற்றை முகங்கொடுத்துள்ள மக்களுக்கு வழங்க ஆளும் வர்க்கத்திடம் எதுவும் இல்லை. அதன் பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புமுறைக்கு எதிரான பாரிய சமூக எதிர்ப்பு எழுந்துவிடும் என்ற ஒரு பேரச்சத்தில் அது வாழ்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக நிகழ்வுபோக்குகளோடு பின்னி பிணைந்திருந்த அதன் நடவடிக்கைகள் மீதிருந்த கட்டுப்பாடுகளை ஆளும் வர்க்கம் தூக்கி எறிந்து, ஜனநாயக உரிமைகளைத் தாக்குவதில் மற்றும் பாரிய ஒடுக்குமுறை மற்றும் சர்வாதிகாரத்தைக் கொண்டு சமூக எதிர்ப்பை சமாளிக்க அது தயாராகி வருவதன் மூலமாக அதன் விடையிறுப்பைக் காட்டி உள்ளது. வெளிநாடுகளில் — ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியாவில் — அமெரிக்காவின் படுமோசமான நவகாலனித்துவ யுத்தங்களில் பயன்படுத்தப்பட்ட பாரிய வன்முறையின் "கிளர்ச்சி தடுப்பு" முறைகள், உள்நாட்டிலும் பயன்படுத்தபட்டு வருகின்றன. நாடெங்கிலும் உள்ள பொலிஸ் துறைகள் இராணுவமயப்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய கிழக்கின் யுத்த வேலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள சுமார் 500 ஆயுத போர் வாகனங்கள் அமெரிக்க பொலிஸ் துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. தானியங்கி குண்டுவீசிகள் மற்றும் 0.50 கலிபர் இயந்திர துப்பாக்கிகளை ஏந்தக்கூடிய அந்த வாகனங்கள், நகர்புற SWAT குழுக்கள் பயன்படுத்துவதற்காக அவற்றிற்குள் சேர்க்கப்பட்டுள்ளன. போஸ்டன் நெடுந்தூர ஓட்டப்போட்டி குண்டுவீச்சுக்கு விடையிறுப்பாக போஸ்டனில் இராணுவ நடைமுறை சட்டம் கொண்டு வரப்பட்டு ஓராண்டு ஆனதை ஏப்ரல் 15 குறிக்கிறது. இந்த தாக்குதலுக்குப் பின்னர், உடலில் ஆயுதந்தாங்கிய தாக்கும் துப்பாக்கிகளோடு உத்தரவாணை இல்லாமல் பொலிஸ் சோதனை வீடு வீடாக தேடுதல்களை நடத்திய போது, இயந்திர துப்பாக்கி ஏந்திய வாகனங்கள் வீதிகளில் வலம் வந்த அதேவேளையில் பொலிஸ் ஹெலிகாப்டர்கள் வானத்தில் வட்டமடித்து கொண்டிருக்கையில், குடியிருப்போர் எவரும் "வசிப்பிடத்திலிருந்து" வெளியே வர வேண்டாமென கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இது அமெரிக்காவில் சர்வாதிகாரத்திற்கான ஒரு வெள்ளோட்டமாகும். இது அண்மித்தளவிற்கு உலகளாவிய அளவில் அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்போடு நடத்தப்பட்டது. எதிரெதிர் விரோத வர்க்கங்களின் மோதலை கடந்த காலத்தில் சாந்தப்படுத்தி இருந்த சமூக மற்றும் அரசியல் இடைத்தடைகள், பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக துருவமுனைப்பாட்டின் அழுத்தங்களின் கீழ் சிதைந்து வருகின்றன. வர்க்கம் யுத்தம் இதுவரையில் ஒரு தரப்பாகவே இருந்து வருகிறது. அமெரிக்க தொழிலாள வர்க்கம் இதுவரையில் ஒரு பாரிய வழியில் விடையிறுப்பு காட்டவில்லை. ஆனால் அது பலர் சிந்தித்திருப்பதை விட வேகமாக வரவிருக்கிறது. தொழிலாள வர்க்கப் போராட்டங்களுக்கு ஒரு நனவுபூர்வமான, சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை புகட்டுவதற்கு அவசியமான அந்த புதிய, புரட்சிகர தலைமையை தயார்படுத்துவது தான் இப்போதைய பிரதான கேள்வியாக உள்ளது. இந்த தலைமையை கட்டியெழுப்புவது மட்டும் தான் உழைக்கும் மக்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கான மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய ஆளும் வர்க்கத்தின் உந்துதலை தடுப்பதற்கான ஒரே வழிமுறையாக உள்ளது. |
|