தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா Nokia India workers speak on job threats and low wages வேலையிழப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் மலிவு ஊதியங்கள் குறித்து நோக்கியா இந்தியா நிறுவனத் தொழிலாளர்கள் பேசுகின்றனர்
By Sasi Kumar and Nanda Kumar and Moses Rajkumar Use this version to print| Send feedback நோக்கியா நிறுவனம் இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாட்டில் சென்னையில் இருக்கும் அதன் தொழிற்சாலையை மூடவிருப்பதாக அச்சுறுத்துவதை எதிர்த்து 4,000க்கும் அதிகமான நோக்கியா தொழிலாளர்கள் மார்ச் 31 அன்று ஒருநாள் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றனர். ஆர்ப்பாட்டத்திலும் அதன்பின் தொழிற்சாலை வாயிலிலும் WSWS செய்தியாளர்கள் தொழிலாளர்களுடன் பேசினர். ”ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்கின்ற திட்டத்தை நிறுவனம் கைவிட வேண்டும் என்பதே எங்களது முக்கியமான கோரிக்கை. நிறுவனம் இத்திட்டத்தை கைவிடவில்லை என்றால் தொழிலாளர்கள் மேலதிக போராட்டங்களை தீவிரப்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டியிருக்கும்” என்றார் வெங்கடேசன் என்ற 23 வயது தொழிலாளி. வெங்கடேசன் தொடர்ந்து சொன்னார்: ”நான் நோக்கியாவில் கடந்த ஆறு வருடங்களாக வேலை செய்து வருகிறேன். ஒரு பயிற்சி தொழிலாளியாக நான் பணியமர்த்தப்பட்டபோது எனக்கு மாதம் 4,500 ரூபாய் (75 அமெரிக்க டாலர்) ஊதியம் கிடைத்தது. பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். ஆயினும் என்னுடைய 12 ஆம் வகுப்பு தேர்ச்சியின் அடிப்படையில் தான் வேலையில் சேர்ந்தேன். இப்போது மாதம் 11,000 ரூபாய் (183 அமெரிக்க டாலர்) ஊதியம் பெறுகிறேன். என் சொந்த ஊர் ஜோலார்பேட்டை, அங்கு விவசாயம் தான் அநேக மக்களுக்கு வாழ்வாதாரம். என்னைப் போன்ற படித்த இளைஞர்கள் நகரத்திற்குத் தான் வர வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருக்கும் தொழிலாளிகள் என்னுடன் வேலைபார்க்கிறார்கள். நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்பட்டு இருப்பதால் தங்குமிடம் மலிவாக இருக்கும் இடங்களில் இருந்து தொழிலாளிகள் ஒருமணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை பயணம் செய்து இங்கே வந்து சேர்கிறார்கள்.” "வேலையில் வருங்கால சேமநல நிதி (PF), மருத்துவ வசதிகள் (ESI) மற்றும் உணவக வசதிகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் வேலை உத்தரவாதம் கிடையாது. அநேக ஒப்பந்தத் தொழிலாளர்களை நிர்வாகம் 2013 ஆம் ஆண்டில் நீக்கி விட்டது. இப்போது ஆர்டர்கள் குறைந்து நிறுவனத்தின் வரி தொடர்பான பிரச்சினைகளும் சேர்ந்து விட்டதால் எங்களது வேலைகள் மீண்டும் ஆபத்துக்குள்ளாகி இருக்கின்றன”. நோக்கியாவின் வளாகங்களில் இயங்கிய மூன்று நோக்கியா சப்ளையர் நிறுவனங்கள் - Vintek மற்றும் இரண்டு பிற நிறுவனங்கள் - சமீபத்தில் மூடப்பட்டதையும் வெங்கடேசன் குறிப்பிட்டார். ராஜாமோகன் என்ற 24 வயது தொழிலாளி ஒருவர் பேசும்போது ஒப்பந்தத் தொழிலாளர் முறையில் இருக்கக் கூடிய முதுகொடிக்கும் வேலை நிலைமைகளையும் நிச்சயமற்ற எதிர்காலத்தையும் குறித்துப் பேசினார்: “எங்களில் நிறைய பேர் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெற்றே 18 வயதில் இங்கே வேலை செய்வதற்காக வந்தோம். ஆறு வருடங்கள் வேலை செய்ததற்கு பின்னர் இப்போது வேலை இழப்புகளுக்கு முகம் கொடுக்கின்றோம். நாங்கள் நிரந்தரத் தொழிலாளிகள்; ஒப்பந்தத் தொழிலாளர்களை விடவும் எங்களுக்கு அதிக ஊதியம் தான் என்றாலும் எங்களுடைய நிலைமையும் ஒப்பந்தத் தொழிலாளிகளது அதே நிலையில் தான் இருக்கிறது. மூடப்பட்டு விட்ட Vintek நிறுவனத்தில் எனது நண்பர்கள் எல்லாம் நிரந்தர தொழிலாளிகளாகவே ஆறு வருடங்களாய் வேலை செய்து வந்தார்கள், இப்போது அவர்களின் அந்த வேலை தொலைந்து போனது. இப்போது அவர்களெல்லாம் வெவ்வேறு நிறுவனங்களில் தற்காலிக ஊழியர்கள் அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்களாய் வேலைசெய்கிறார்கள்.” ”நாளை எங்களுக்கும் இதே நிலை தான் வரப் போகிறது. உதாரணமாக, ஹூண்டாயில் 5,000க்கும் அதிகமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள், அவர்களெல்லாம் ஐந்து வருடங்களுக்கும் அதிகமாய் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஐந்து வருடங்களுக்கு பின்னர் இந்த தொழிலாளர்கள் எல்லாம் ‘இடைவேளை’ என்ற பேரில் வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படுகிறார்கள். ஐந்து வருடங்கள் முடிந்ததும் இந்த தொழிலாளர்கள் எல்லாம் தங்கள் வேலைகளை நிரந்தரமாக்கக் கேட்பார்கள் அத்துடன் பிற வசதிகளையும் கேட்பார்கள் என்று நிர்வாகம் பயப்படுகிறது. ஒப்பந்த தொழிலாளி முறையை கைவிடச் செய்வதற்கு தொழிற்சங்கங்கள் போராடுவது கிடையாது.” விநாயகம் என்ற 25 வயது பொறியாளர் கூறினார்: “நோக்கியாவின் இந்த பிரதான ஆலையில் சுமார் 8,000 தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தொழிற்சாலையின் சில பகுதிகளில், குறிப்பாக இடப் பராமரிப்பு மற்றும் தோட்ட பராமரிப்பு வேலைகளில், மிகக் குறைந்த ஊதியங்களுக்காய் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளிகள் அமர்த்தப்படுகின்றனர். 3,000 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டபோது (2012-13 இல் இந்நிறுவனம் உலகமெங்கும் 10,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தபோது அதன் பகுதியாக இங்கு நீக்கப்பட்டவர்கள்) நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுடன் சேர்த்து நிர்வாக ஊழியர்கள் சிலரும் கூட வேலையில் இருந்து கழற்றி விடப்பட்டனர். “மதுரையை அடுத்த ராஜபாளையத்தில் தான் நான் வளர்ந்தேன், அங்கு நூற்பாலை வேலைகளும் விவசாயத் துறை வேலைகளும் கிடைக்கும். நான் பொறியியல் பட்டதாரி என்பதால், நூற்பாலையில் எனக்கு வேலை கிடைக்கும். ஆனால் இங்கே நோக்கியாவில் எனக்கு மாதச் சம்பளம் 20,000 ரூபாய் (333 அமெரிக்க டாலர்) கிடைத்ததால் நான் இங்கே வேலைக்குச் சேர்ந்தேன். இவ்வளவு ஊதியம் எனக்கு நூற்பாலைத் துறையில் கிடைக்காது. என்னுடைய வாடகை மற்றும் உணவுச் செலவுகள் போக, மாதந்தோறும் 15,000 ரூபாயை (250 அமெரிக்க டாலர்) நான் எனது குடும்பத்திற்கு அனுப்புகிறேன்.” ”நோக்கியாவின் ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு மேலதிக வேலைநேர சம்பளத்தையும் சேர்த்து மாதந்தோறும் 5,500 ரூபாயில் இருந்து 8,000 ரூபாய் (133 அமெரிக்க டாலர்) வரை கிடைக்கலாம். அதை ஒப்பிட்டால் மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு அதிகமான சம்பளம் தான் என்றாலும் என்னுடைய வேலை நிச்சயமில்லாததாக இருக்கிறது. இந்த வருடத்தில் இன்னுமொரு 2,000 வேலைகளை ஒழித்துக் கட்ட நிறுவனம் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. ஆர்டர்கள் இல்லை என்று அதற்குக் காரணம் சொல்லப்படுகிறது. இந்த ஆட்குறைப்பில் பல்வேறு வகை தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள், நானும் அதில் ஒருவனாக இருக்கக் கூடும்.” அவர் மேலும் கூறினார்: “2013 இல் ஆட்குறைப்பு செய்யப்பட்ட நிரந்தர தொழிலாளர்களுக்கும் நிர்வாக ஊழியர்களுக்கும் மூன்று மாத சம்பளம் கணக்குமுடிப்பு தொகையாக வழங்கப்பட்டது. ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேல் வேலைபார்த்தவர்களுக்கு கூடுதலான ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு மாத சம்பளம் கூடுதலாய் கணக்குமுடிப்பு தொகையில் சேர்த்துத் தரப்பட்டது. இந்த சமயத்தில் ஒரு நிரந்தரத் தொழிலாளியின் மாதச்சம்பளம் சராசரியாக 10,000 ரூபாயில் (166 அமெரிக்க டாலர்) இருந்து 15,000 ரூபாய்க்குள் (250 அமெரிக்க டாலர்) இருந்தது.” ”ஆயினும் ஒப்பந்தத் தொழிலாளர்களே அதில் பெருவாரியாய் இருந்தனர், சுமார் 2,000 பேர் வேலை இழந்தனர். அவர்களெல்லாம் எந்தவிதமான கணக்குமுடிப்பு தொகையும் இன்றி வெறும் கையுடன் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்களில் பலரும் ஏழ்மையான விவசாயக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு நிறுவனம் மிகச் சொற்பமாய் 4,000 ரூபாயில் (66 அமெரிக்க டாலர்) இருந்து 6,000 ரூபாய் (100 அமெரிக்க டாலர்) வரை மாத ஊதியமாய் அளித்து வந்திருந்தது.” WSWS செய்தியாளர்கள் தொழிற்சங்கங்கள் குறித்து வைத்த விமர்சனத்திற்கு பதிலளித்த கிருஷ்ணராஜ் என்ற 23 வயது தொழிலாளி கூறினார்: “தொழிற்சங்கங்கள் எல்லாம் தொழிலாளர்களுக்காக பாடுபடவில்லை என்கிறீர்கள். ஆனால் அவர்கள் எல்லாம் செங்கொடியைக் கையிலேந்தி தொழிலாளர்களின் பக்கமாய் நின்றார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். அவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதால் தொழிலாளர்களுக்காக பாடுபடுவார்கள், நேர்மையானவர்களாய் இருப்பார்கள் என்று நாங்கள் நினைத்தோம். சிஐடியு தலைவர் ஏ.சௌந்தரராஜன் Comstar தொழிலாளர்களது போராட்டத்தின் போது, ஜெயலலிதா (தமிழ்நாட்டின் இப்போதைய முதலமைச்சர் மற்றும் பிராந்திய ஆளும் கட்சியான அஇஅதிமுகவின் தலைவர்) ஆட்சிக்கு வந்தால் நிலைமை தொழிலாளர்களுக்கு சாதகமாய் திரும்பும்! என்று குறிப்பிட்டிருந்ததை நீங்கள் சுட்டிக் காட்டினீர்கள். அந்த உண்மை எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை, நீங்கள் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன்.” “தமிழ்நாட்டில் அஇஅதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளுமே எங்களது போராட்டங்களுக்கு எதிரானதாகவே இருக்கின்றன. இதனை நாங்கள் ஃபாக்ஸ்கான் மற்றும் BYD தொழிலாளர் போராட்டங்களின் போது கண்டோம். CPM மற்றும் CPI இந்த கட்சிகளுடன் தான் கூட்டணி சேர்கின்றன. இந்த சிவப்பு கொடியை வைத்திருப்பவர்களே இப்படி இருந்தால் எங்களைப்போன்ற தொழிலாளர்களுக்கு என்னதான் மார்க்கம் இருக்கிறது.” நோக்கியாவின் ஒரு பெண் தொழிலாளி WSWS இடம் கூறினார்: “இந்த நிறுவனத்தில் 60 சதவீதம் தொழிலாளிகள் பெண்கள். வேலூர், அரக்கோணம் என வெகுதொலைவில் இருந்து வருகிறார்கள். நிறுவனத்தின் பேருந்தில் சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்து வருகிறார்கள். அதுமாதிரியெல்லாம் வருவது பெண்களுக்கு எளிதான வேலையல்ல. இப்போது ஆட்குறைப்பு செய்வதற்கும் நிறுவனத்தை மூடுவதற்கும் திட்டமிடப்பட்டு வருவதற்கு எதிரான ஒரு போராட்டத்தை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். ”பெரும்பாலான தொழிலாளர்கள் பெண்கள் என்பதால் இந்தப் போராட்டம் வளர்ந்து விடாமல் தடுத்து விடலாம் என்று நிறுவனம் நினைக்கிறது. விண்டெக் நிறுவனம் 2013 இல் மூடப்பட்ட போது அதன் தொழிலாளர்களிடம் இருந்து வந்த எதிர்ப்பை எளிதாகக் கையாள முடிந்தது. விண்டெக்கில் நோக்கியாவை விடவும் அதிகமான விகிதாச்சாரத்தில் பெண்கள் வேலை செய்தனர். மொத்தத் தொழிலாளர்களில் சுமார் 70 சதவீதம் பேர் பெண்கள் தான். எங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க இறுதி வரை போராடுவது என்பதில் நாங்கள் மிகத் தீர்மானமாய் இருக்கிறோம்.” “வேலை இழந்த பெண் தொழிலாளிகள் எல்லாம் ஒன்று தங்கள் கிராமங்களுக்குப் போய் விடுவார்கள் அல்லது சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வேறொரு வேலையைத் தேடுவார்கள். ஆடம்பரமான வாழ்க்கை எதனையும் அவர்கள் எதிர்பார்க்க இயலாது.” |
|
|