தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
NATO’s aggression against Russia and the danger of war in Europe ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ தாக்குதலும், ஐரோப்பாவில் யுத்த அபாயமும்
Chris Marsden and Julie Hyland Use this version to print| Send feedback செல்வந்த மேற்தட்டுகள் மற்றும் பாசிஸ்டுகளின் உதவியோடு பெப்ரவரி 22இல் கியேவில் ஓர் ஆட்சிசதி நடத்தியதிலிருந்து, அமெரிக்காவும் மற்றும் நேட்டோவில் உள்ள அதன் பங்காளிகளும் வரைந்துள்ள ரஷ்யாவிற்கு எதிரான குறிக்கப்பட்ட நடவடிக்கைகள், ஓர் உத்தியோகபூர்வமற்ற யுத்த பிரகடனத்திற்கு சமாந்தரமாக உள்ளன. வெறும் ஆறு வாரகால இடைவெளியில், ஒரு பதவிக் கவிழ்ப்பு நடத்துவதற்கு உதவியதில் தொடங்கி, நேட்டோ அதிகாரங்கள், ரஷ்யாவிற்கு எதிராக தடைகள் விதிப்பது வரையில், பனிப்போருக்கு பின்னர் ஐரோப்பாவில் மிக பரந்த மட்டத்தில் இராணுவ கட்டுமானங்கள் செய்வது வரைக்கும், சென்றுள்ளன. இத்தகைய அபிவிருத்திகளின் வேகமானது, யானுகோவிச்சிற்கு எதிரான அந்த ஆட்சி கவிழ்ப்பு வெளியில் காட்டப்பட்டதைப் போல எதிர்பாராத வினையூக்கி சம்பவமல்ல, மாறாக திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கத்திற்காக நீண்டகால தயாரிப்போடு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆத்திரமூட்டல் என்ற உண்மையை நிரூபிக்கிறது. இது கடந்த வாரம் நேட்டோ வெளியுறவுத் துறை மந்திரிகளின் மாநாட்டில் தெளிவாக்கப்பட்டது. அந்த மாநாடு பரந்துபட்ட யுத்த பயிற்சிகள் மற்றும் சாத்தியமான அளவிற்கு அண்டை நாடுகளுக்குள் துருப்புகளை நிலைநிறுத்துவது உட்பட இராணுவ கூட்டு நடவடிக்கைகளை ரஷ்ய எல்லைகள் வரையில் விஸ்தரிப்பிற்கான திட்டங்களை வெளியிட்டது. வாஷிங்டன், அங்கத்துவ நாடுகளாக்கும் நடவடிக்கை திட்டத்திற்கான (Membership Action Plan - MAP) கோரிக்கைகளை உக்ரேனுக்கு மட்டும் வழங்கவில்லை, மாறாக முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசான பொஸ்னியா, மொண்டெனேகுரோ மற்றும் மசிடோனியா, மற்றும் முன்னாள் ரஷ்ய குடியரசான ஜோர்ஜியாவிற்கும் வழங்கி உள்ளது. 2008இல், ரஷ்யா மற்றும் ஜோர்ஜியாவிற்கு இடையிலான ஐந்து நாள் யுத்தத்தின் போது, ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஜோர்ஜியாவை நேட்டோவிற்குள் கொண்டு வரும் திட்டங்களில் இருந்து பின்வாங்க நிர்பந்திக்கப்பட்டார், பெரும்பாலும் அது ஏனென்றால் அந்த நகர்வு ஜேர்மன் மற்றும் பிரான்சால் எதிர்க்கப்பட்டது. அந்த நடவடிக்கை, ரஷ்யா மற்றும் ஜோர்ஜியாவிற்கு இடையிலான மோதலைத் தீவிரப்படுத்தி, ரஷ்யாவுடன் ஒரு நேரடி யுத்தத்தைக் கொண்டு வருமென அந்த இரண்டு ஐரோப்பிய சக்திகளும் அஞ்சின. ஆனால் இந்த முறை, ஜோர்ஜியா மற்றும் உக்ரேனை உள்ளெடுக்கும் திட்டமானது மாஸ்கோவுடன் மோதலைத் தீவிரப்படுத்தும் ஓர் உந்துதலின் பாகமாக ஐரோப்பிய ஒன்றியத்தாலேயே ஆதரிக்கப்பட்டுள்ளது. நேட்டோ தலைமைச்-செயலர் ஆண்டர்ஸ் போக் ரஸ்முசென், தாக்குதலின் கீழ் அனைத்து அங்கத்துவ நாடுகளும் மற்றொரு அங்கத்துவ நாட்டின் உதவிக்கு வரக்கோரும், நேட்டோ உடன்படிக்கையின் 5ஆம் ஷரத்தை மீண்டும் மீண்டும் மேற்கோளிட்டு காட்டியுள்ளார். ஜோர்ஜிய மற்றும் உக்ரேனிய ஆட்சிகளின் வெறித்தனமான ரஷ்ய-விரோத வலதுசாரி சுபாவங்களுக்கு இடையே, அவையும் அதுபோன்றவொரு போலிக் காரணத்தை வழங்க மிகவும் விருப்பத்தோடு இருக்கக்கூடும். MAP திட்டம் ஜூலையில் விவாதிக்கப்பட உள்ளதோடு, செப்டம்பர் தொடக்கத்திற்குள் அதை நடைமுறைப்படுத்த வேண்டுமென்பது அமெரிக்காவின் விருப்பமாக உள்ளது. இராணுவ ஒத்திகைகள் திட்டமிடப்பட்டுள்ளன அல்லது லாத்வியா, லித்துவேனியா, பல்கேரியா மற்றும் போலாந்து ஆகியவையும், அத்தோடு பால்டிக்கில் மற்றும் காகசஸில் உள்ள ஏனைய அரசுகளும் சம்பந்தப்பட்டுள்ள இராணுவ ஒத்திகைகள் நடந்து வருகின்றன. உக்ரேனிய எல்லையோரத்தில் — அதாவது Rapid Trident மற்றும் Sea Breezeஇல் — நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள இரண்டு ஒத்திகைகள் மிகவும் ஆத்திரமூட்டலுக்கு உரியவையாக உள்ளன. நேட்டோவின் திட்டங்களில் போலாந்து முக்கிய பாத்திரம் வகித்துள்ளதோடு, அமெரிக்காவால் வடிவமைக்கப்பட்ட பல மில்லியன் டாலர் மதிப்பிலான "ஏவுகணை தடுப்பு" அமைப்புமுறையை நிறுவுவதற்கான முந்தைய பரிந்துரைகளை அது மீண்டும் புதுப்பித்து வருகிறது. அந்த அரசாங்கம், 10,000 சிப்பாய்களுக்கு சம அளவிலான ஒரு அமெரிக்க இராணுவ படையை, அதன் மண்ணில் நிறுத்த தற்போது முறையிட்டுள்ளது. பின்லாந்து மற்றும் ஸ்வீடன் அவற்றின் உத்தியோகபூர்வ நடுநிலைமையை முடித்துக் கொள்ள, அந்நாடுகளின் ஆளும் வட்டாரங்களில் விவாதங்கள் நடந்து வருகின்றன, இதை பாதுகாப்பு கொள்கையில் செய்யப்படும் ஒரு "கோட்பாட்டுரீதியிலான மாற்றம்" என்று ஸ்டாக்ஹோம் வர்ணித்துள்ளது. ஓர்வெல்லியன் பாணியில், இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் இந்த நடவடிக்கைகள், உக்ரேனிய எல்லையில் ரஷ்ய படைகள் கட்டயமைக்கப்பட்டு வருகின்றன என்ற ஆதாரமற்ற மற்றும் மிகைப்படுத்தப்பட்ட வாதங்களோடு நியாயப்படுத்தப்படுகின்றன. ஜனாதிபதி பராக் ஒபாமா ரஷ்யாவை ஒரு "பலவீனமான," வெறுமனே ஒரு "பிராந்திய" சக்தி என்று உதறி தள்ளி உள்ள போதினும் கூட, மாஸ்கோவை ஆக்கிரமிப்பாளராக சித்தரிப்பதே இந்த பரப்புரையின் நோக்கமாகும். ஈராக், லிபியா மற்றும் சிரியா விடயங்களைப் போலவே, இதுபோன்ற பொய்கள் ஏகாதிபத்திய மீள்-ஆயுதமயப்படுத்தும் ஒரு நீடித்த திட்டத்தை, அதுவும் குறிப்பாக ஐரோப்பாவில், சட்டபூர்வமாக்குவதற்காக செய்யப்படுகின்றன. ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் சீனா மற்றும் ரஷ்யாவில் எழுச்சி கண்ட முதலாளித்துவ செல்வந்த மேற்தட்டுகளுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான சமரசம் வேகமாக நொருங்கி வருகிறது. நெருக்கடியால் சூழப்பட்டிருக்கும் நிலையில், பிரதான ஏகாதிபத்திய சக்திகள் இனியும் மாஸ்கோவ் மற்றும் பெய்ஜிங்கில் உள்ள முதலாளித்துவம் அனுபவித்து வரும் அதனதன் சுயாட்சியோடு, தங்களைத்தாங்களே சமாதானமாக வைத்துக் கொள்ள தயாராக இல்லை. அவை ரஷ்யா மற்றும் சீனாவின் எல்லையோரங்களில் உள்ள பரந்த ஆதார வளங்கள் மற்றும் சந்தைகளை நேரடியாக அணுகவும், அவ்விரு நாடுகளையும் அரை-காலனித்துவ அந்தஸ்திற்கு குறைக்கவும் முனைந்து வருகின்றன. இந்த பொறுப்பற்ற கொள்கையின் தவிர்க்கவியலா தர்க்கம் யுத்தமாகும். இது வரையில், ஐரோப்பிய அரசாங்கங்கள், அனைத்திற்கும் மேலாக ஜேர்மனி, உச்சக்கட்ட வரம்பிற்கு செல்ல வேண்டுமென வாஷிங்டன் கோரி வருகிறது. “நாம் நம்பகமான நேட்டோ படையை மற்றும் சிறந்த தற்காப்பு படையைக் கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த தேவையான சொத்துக்கள், சிப்பாய்கள் மற்றும் பயிற்சிகளுக்கு நிதி வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்... ஒவ்வொருவரும் பங்கெடுக்க வேண்டியுள்ளது," என்று அறிவித்து, ஒபாமா பிரஸ்செல்ஸில் ஆற்றிய அவரது சமீபத்திய உரையில் நேட்டோ அங்கத்துவ நாடுகளை மிரட்டும் தொனியில் பேசி இருந்தார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை இராணுவத்திற்காக செலவிட வேண்டுமென்ற நேட்டோவின் நிபந்தனையை தற்போது, பிரதான ஐரோப்பிய நாடுகளில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் மட்டுமே பூர்த்தி செய்துள்ளன. 1998இல் இருந்து, ஜேர்மனியில் 50 சதவீத அளவிலான வீழ்ச்சியோடு சேர்ந்து, ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் இராணுவ செலவினங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதுபோன்ற வெட்டுக்களை தலைகீழாக ஆக்க மற்றும் அதிகப்படுத்த, ஏற்கனவே ஆறு ஆண்டுகால சிக்கன நடவடிக்கைகளுக்கு ஐரோப்பா உள்ளாகி உள்ள நிலைமைகளின் கீழ், பொது செலவுகளின் பரந்த பகுதிகளை நீக்குவது அவசியமான தேவையாகிவிடும். இராணுவவாதத்திற்கு திரும்புதல் என்பது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதலை அதிவேகமாக தீவிரப்படுத்த கோருகிறது. வாஷிங்டன், பேர்லின், இலண்டன் மற்றும் பாரீசின் யுத்த திட்டங்களுக்கு அங்கே பெருமளவில் எதிர்ப்பு உள்ளது. கூடுதல் "தியாகங்களைத்" திணிக்க மற்றும் ஒரு புதிய தலைமுறையை ஆயுத படைகளுக்குள் இழுக்க அரசு அதிகாரங்களின் முழு வற்புறுத்தல் தேவைப்படும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள், உக்ரேனில் தீவிர-வலது மற்றும் பாசிச சக்திகளை மிகப் பகிரங்கமாக அரவணைத்ததற்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும். ஐரோப்பிய கண்டம் "மீண்டும் ஒருபோதும்" ஸ்வஸ்திகா ஆட்சியைக் காணாது என்று ஐரோப்பிய அரசாங்கங்கள் பிரகடனம் செய்த பல தசாப்தங்களுக்குப் பின்னர், ஹிட்லரின் உக்ரேனிய கூட்டாளிகளை பெருமைப்படுத்தும் சக்திகளை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்த வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த அபிவிருத்திகள் மே மாத ஐரோப்பிய தேர்தல்களில் பிரிட்டன் மற்றும் ஜேர்மனியில் சோசலிச சமத்துவக் கட்சியின் சரியான நேரத்தில் செய்யப்பட்டிருக்கும் தலையீட்டை அடிக்கோடிடுகின்றன. ஐரோப்பிய தேர்தல்களுக்கான அவற்றின் கூட்டு தேர்தல் அறிக்கையில், “முதலாம் உலக யுத்தம் வெடித்த 100ஆம் ஆண்டில், ஐரோப்பா மீண்டுமொருமுறை பேரழிவின் விளிம்பில் நிற்கிறது," என்று அவை எச்சரிக்கின்றன. “ஒரு பிராந்திய மோதல் ஓர் உலகளாவிய பெரும் மோதலாக திரும்ப, 1914இல் சரஜேவோவில் ஆஸ்திரிய பேரரசசரின் மகன் பெர்ட்ணான்ட்டின் படுகொலை தூண்டுதலாக அமைந்ததைப் போல, ஒரு சிறிய சம்பவமே தூண்டுதலாக போதும் என்றளவிற்கு" ஏகாதிபத்திய சக்திகளின் மேலாதிக்க அபிலாஷைகள் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன என்று அந்த அறிக்கை தொடர்ந்து குறிப்பிட்டது. மனிதகுலத்தை ஒரு அணுஆயுத மூன்றாம் உலக யுத்தத்திற்குள் மூழ்கடிப்பதிலிருந்து ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்களை தடுக்க தொழிலாள வர்க்கம் அதன் ஐக்கியப்பட்ட, சர்வதேச பலத்தை ஒன்று திரட்ட வேண்டும். இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் அரசியலமைப்பில் உள்ள அனைத்து அரசாங்கங்களுக்கு எதிராகவும் சோசலிச கொள்கைகளை அடித்தளமாக கொண்ட ஒரு பாரிய இயக்கத்தை அபிவிருத்தி செய்வது அவசியமாகும். அதாவது முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையையும், உலகை ஒன்றுக்கொன்று விரோதமான, யுத்தத்தின் ஆதாரமான தேசிய அரசுகளாக அது பிளவுபடுத்தி வைத்திருப்பதையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான மற்றும் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை ஸ்தாபிப்பதற்கான ஒரு போராட்டம் என்பதே அதன் அர்த்தமாகும். |
|
|