தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை UN body call for international probe into Sri Lankan human rights violations ஐ.நா. அமைப்பு இலங்கை மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக சர்வதேச விசாரணைக்கு அழைப்புவிடுக்கின்றது
By Sampath Perera and K.
Ratnayake Use this version to print| Send feedback ஐ.நா. மனித உரிமைகள் பேரவை (UNHRC), கடந்த வியாழன் அன்று, இலங்கையில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பு அரசாங்கத்தின் யுத்தத்தின் போது இழைத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் அவை சார்ந்த போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை ஒன்றை நடத்தக் கோரி அமெரிக்க ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றியது. வாஷிங்டன் தீவிரமாக முன்தள்ளிய இந்த தீர்மானம், அமெரிக்க கொள்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிராக மிகவும் கடுமையான நிலைப்பாட்டை நோக்கி மாற்றமெடுப்பதை குறிக்கின்றது. இது, அரசாங்கம் சீனாவிடம் இருந்து தூர விலகாவிடில், இராஜபக்ஷவும் மற்றும் ஏனைய சிரேஷ்ட அரசாங்க மற்றும் இராணுவ புள்ளிகளும் தங்களை போர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக காண்பர் என்று அவருக்கு விடுக்கும் ஒரு எச்சரிக்கை ஆகும். 2012 மற்றும் 2013ல் யுஎன்எச்ஆர்சியில் இலங்கை மீது முன்னர் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க தீர்மானங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்ளக விசாரணைக்கு மட்டுமே அழைப்பு விடுத்தது. அமெரிக்க ஆதரவுடைய தீர்மானம், வாஷிங்டன் இராஜதந்திரமாக சீனாவை தனிமைப்படுத்தி இராணுவரீதியில் சூழ்ந்து கொள்வதை இலக்காகக் கொண்ட அதன் "ஆசியாவில் முன்னிலை" என்ற கொள்கையை தீவிரமாக்கி வருகின்றது என்ற செய்தியையும் பெய்ஜிங்கிற்கு அனுப்புகிறது. கடந்த மாதம், ஒரு உத்தியோகபூர்வ சீன நட்பு நாடான வட கொரியவின் ஆட்சி பற்றிய விசாரணைக்கான ஐ.நா. ஆணையம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அதன் தலைவர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சாட்ட வேண்டும் என்று பரிந்துரைத்தது. மனித உரிமை கூட்டத்தொடரில் அமெரிக்க தீர்மானத்துக்கு சீனா மற்றும் ரஷ்யா உட்பட 12 நாடுகள் எதிர்த்து வாக்களித்த அதே நேரம், 23 வாக்குகளை ஆதரவாகப் பெற்றது. பன்னிரண்டு நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. அவற்றில் முந்தைய இரண்டு தீர்மானங்களை ஆதரித்த இந்தியாவும் இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த தீர்மானம் "மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் பற்றி ஒரு விரிவான விசாரணையை மேற்கொள்ளுமாறு" மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்துக்கு (OHCHR) “வேண்டுகோள்” விடுத்துள்ளது. முன்மொழியப்பட்ட விசாரணை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) எடுத்துக்கொண்ட அளவு, காலகட்டத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நல்லிணக்க ஆணைக்குழுவானது புலிகளுடனான சமாதான பேச்சுவார்த்தைகள் மற்றும் அதன் இராணுவ தோல்விக்கும் இடையேயான 2002- 2009 மே வரையான காலத்தில் இராணுவத்தின் யுத்த குற்றங்களை மூடிமறைக்க இராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டது. இந்த காலத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம், தீர்மானம் குறிப்பாக 2006 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இராஜபக்ஷ அரசாங்கத்தையே குறிவைக்கின்றது, முந்தைய அரசாங்கங்களை குறிவைக்கவில்லை. தீர்மானம், "தண்டனைகளிலிருந்து விலக்களிப்பு பெறும் நோக்குடன் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் மீறல்கள் எனக் கூறப்படுபவற்றின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை ஸ்தாபிப்பதோடு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறும்” இந்த விசாரணைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த யுஎன்எச்ஆர்சி தீர்மானம், கடந்த ஆகஸ்ட் மாதம் “வெலிவேரிய பிரதேசத்தில் நிராயுதபாணிகளான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்" உட்பட, போருக்கு பிந்தைய ஒரு தொகை மீறல்களையும் சுட்டிக்காட்டிய போதிலும், இவற்றை விசாரணை செய்ய வேண்டும் என்று கோரவில்லை. 2011ல் ஐநா நிபுணர் குழுவொன்று, சுமார் 40,000 பொது மக்கள் போரின் இறுதி மாதங்களில் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டுள்ளதுடன் மற்றும் கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் காணாமல் போன சம்பவங்கள் உட்பட ஏனைய வன்முறைகளையும் பட்டியலிட்டுள்ளது. இந்த அறிக்கை, ஜனாதிபதி இராஜபக்ஷ, அவரது சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய இராஜபக்ஷ மற்றும் உயர்மட்ட தளபதிகள் உட்பட, உயர் அரசாங்க அதிகாரிகளும் போர் குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டது. ஆயினும்கூட, அரசாங்கம் இராணுவம் எந்தவொரு அட்டூழியத்தையோ அல்லது மனித உரிமை மீறல்களையோ செய்யவில்லை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கொழும்பு அரசாங்கம் நிச்சயமாக போர் குற்றங்களை செய்துள்ளதோடு சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை தொடர்கின்றது. ஆனால், இலங்கையில் மனித உரிமை மீறல்களை எதிர்ப்பவர்களாக அமெரிக்கவும் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற அதன் நட்பு நாடுகளும் தங்களை சித்தரித்துக்கொள்வது ஒரு பெரும் மோசடியாகும். அவர்கள் அனைவரும் 2006ல் இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை ஆதரித்ததுடன் தங்கள் சொந்த போர் குற்றங்களின் ஒரு நீண்ட பட்டியலுக்கு பொறுப்பாளிகள். அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும், புலிகள் தோல்வியை நோக்கி செல்கிறனர் என்று தெளிவான போதே, யுத்தத்தின் இறுதி மாதங்களில் மனித உரிமை பிரச்சினைகளை எழுப்பத் தொடங்கின. இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட சீன இராணுவ மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் விளைவாக கொழும்பில் விரிவடைந்தது வரும் பெய்ஜிங்கின் செல்வாக்கை கீழறுப்பதில் ஒபாமா நிர்வாகம் உறுதியாக இருக்கின்றது. இப்போது அமெரிக்கா, ஒரு பாசிச தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பு சதியை உருவாக்க உக்ரேனில் தீவிரமாக தலையீடு செய்துள்ள நிலையில், அதன் "ஆசியாவில் முன்னிலை" கொள்கையுடன் அணிதிரளாத இலங்கை போன்ற நாடுகளின் மீது அழுத்தத்தை தீவிரப்படுத்துகின்றது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராஜதந்திர நடவடிக்கைகளின் பகுதியாக ஏப்ரலில் ஜப்பான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா மற்றும் மலேஷியாவுக்கும் பயணமாக உள்ளார். அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி, “நியாயம் மற்றும் பொறுப்புடைமைக்காக காத்திருக்க முடியாது” என உடனடியாக அறிவிக்க, இந்த யுஎன்எச்ஆர்சி தீர்மானத்தை பற்றிக்கொண்டார். வேறுவிதமாக கூறினால், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் காத்திருந்த வாஷிங்டன், சீனாவில் இருந்து இராஜபக்ஷவை தூர நகர்த்த இனியும் காத்திருக்கத் தயாராக இல்லை. செய்தி எளிமையானது: இப்போது மாற்றமடைய வேண்டும், அல்லது போர் குற்றங்கள் மற்றும் சாத்தியமான தடைகளையும் எதிர்நோக்க நேரும். சீனா, இலங்கைக்கு ஆதரவளிக்கும் அடையாளமாக மட்டும் அன்றி, ரஷ்யாவில் போன்று, அமெரிக்க தனது எல்லைக்குள் தலையிட ஒரு போலி மனித உரிமைகள் பிரச்சாரத்தினை பயன்படுத்தக் கூடும் என்று ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதனாலும் தீர்மானத்தை எதிர்த்தது. வாஷிங்டனானது திபெத்திய மற்றும் உய்குர் பிரிவினைவாத அமைப்புகளுடன் நீண்ட காலமாக உறவுகளை கொண்டுள்ளது. ஜெனீவாவில் உள்ள இந்திய தூதர் திலிப் சின்ஹா, தனது நாட்டின் பகிஷ்கரிப்பை நியாயப்படுத்தினார். "தேசிய இறைமை மற்றும் நிறுவனங்களை கீழறுக்கும் ஒரு குறுக்கீடு அணுகுமுறை, எதிர்வினைகளை ஏற்படுத்திவிடும் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது” என்று அவர் அறிவித்தார். இலங்கை தன்னுடைய செல்வாக்கு பிராந்திய பகுதியின் ஒரு அங்கமாக கருதும் இந்தியா, கொழும்புடனான சீனாவின் நெருக்கமான உறவை வெறுக்கின்றது. இராஜபக்ஷ அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை வைக்க முற்படும் அதேவேளை, புது டெல்லி, இலங்கை தமிழர்கள் மீதான வன்முறைகள் சம்பந்தமாக கோபம் கொண்டுள்ள தென்னிந்திய மாநிலமான தமிழ்நாடு வாக்காளர்களின் சீற்றத்தை தணிப்பதையிட்டும் கவலை கொண்டுள்ளது. இந்தியா முந்தைய அமெரிக்க தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தாலும், கொழும்பை நெருக்கமாக வைத்திருக்கும் ஒரு வழிமுறையாக, அதன் காத்திரம் குறைக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தது. அது இந்த சமநிலைப்படுத்தும் முயற்சியை வாக்களிப்பில் இருந்து விலகியிருப்பதன் மூலம் தொடர்ந்துள்ளது. அது தீர்மானத்துக்கு வாக்களிப்பதன் மூலம் இலங்கை அரசாங்கத்தை அந்நியப்படுத்த விரும்பாத அதேவேளை, அதற்கு எதிராக வாக்களிப்பதன் மூலம், அதன் மூலோபாய பங்காளிகளான அமெரிக்கா, மற்றும் இந்தியாவில் உள்ள தமிழர்களில் இருந்தும் தனிமைப்பட விரும்பவில்லை. "தேசிய இறைமையை கீழறுக்கும் ஒரு குறுக்கீடு அணுகுமுறை" என்ற இந்திய எதிர்ப்பு, இந்த தீர்மானம் எதிர்காலத்தில் இந்தியா அல்லது இந்திய நலன்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதற்கு முன்னோடியாக இருக்கக் கூடும் என்ற அச்சத்தை பிரதிபலிக்கின்றது. யுஎன்எச்ஆர்சியில் உத்தியோகபூர்வமாக தீர்மானத்தை நிராகரித்ததை தவிர, இராஜபக்ஷ அரசாங்கம் ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. அவசரமாக அழைக்கப்பட்ட ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில், வெளி விவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தீர்மானத்தை கண்டனம் செய்த பின்னர், 12 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டதையும் 12 பேர் வாக்களிப்பை புறக்கணித்ததையும் சுட்டிக் காட்டி, இது நாட்டுக்கு வெற்றியை அர்த்தப்படுத்துவதாக அபத்தமான முறையில் கூறிக்கொண்டார். சமீப வாரங்களில், இலங்கையினுள் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வரும் அரசாங்கம், நாடு "ஒரு சர்வதேச சதியில்” பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. வாஷிங்டனிடம் இருந்து அந்நியப்படுவதை விரும்பாத இராஜபக்ஷவும் அவரது அமைச்சர்களும், சதிகாரர்களின் பெயரை குறிப்பிடவில்லை. எவ்வாறெனினும், ஒரு சர்வதேச விசாரணைக்கான வாக்கெடுப்பு, ஆளும் வட்டாரங்களில் கவலையை தூண்டிவிட்டுள்ளது. சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், தீர்மானத்தை அலட்சியம் செய்தவர்களை, "சொர்க்கத்தில் வாழும் முட்டாள்கள்” என்று விமர்சித்துள்ளது. “கடினமான, மெய்சிலிர்க்கும் உண்மை எதுவெனில், யுஎன்எச்ஆர்சியில் இலங்கையில் போர் குற்றங்களை பற்றிய விசாரணையை தொடங்க வாக்களிக்கப்பட்டுள்ளதாகும். இது நாட்டை ஒரு இராஜதந்திர பொறிக்குள் சிக்கவைத்துள்ளது. அதில் நாட்டின் அரசியல் தலைவர்கள் கட்டிப்போடப்படுவார்கள். இது இலங்கையின் சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் இடம்பெற்றிராத ஒன்று”, என்று அந்த ஆசிரியர் தலையங்கம் மேலும் தெரிவித்துள்ளது. தொழிலாள வர்க்கம் கொழும்பில் உள்ள போர் குற்றவாளிகளையோ அல்லது லிபியா மீது போர் தொடுத்த, சிரியாவில் உள்நாட்டு போருக்கு ஊக்கமளித்த மற்றும் இப்போது சீனாவிற்கு எதிராக ஒரு இராணுவ சுற்றிவளைப்பை கட்டமைப்பதில் ஈடுபட்டு வருகின்ற வாஷிங்டனில் உள்ள போர் குற்றவாளிகளையோ ஆதரிக்கக் கூடாது. போருக்கான அமெரிக்காவின் உந்துதலை நிறுத்த, இந்த மோதல்களின் தோற்றுவாயான முதலாளித்துவ அமைப்பினை ஒழிக்கும் சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் தெற்காசியாவிலும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்பட வேண்டும். |
|
|