சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

The crisis in Ukraine and the sea change in German foreign policy

உக்ரேன் நெருக்கடியும் ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றமும்

By Peter Schwarz 
3 April 2014

Use this version to printSend feedback

கீழ்க்கண்ட கட்டுரை உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினரான பீட்டர் சுவார்ட்ஸ் பேர்லினில் மார்ச் 22 அன்று ஜேர்மனிய சோசலிச சமத்துவக் கட்சியின் (Partei fur Soziale Glechheit PSG) ஒரு கூட்டத்தில் வழங்கிய அறிக்கையை அடித்தளமாக கொண்டது.

உக்ரேனிய நெருக்கடி, சர்வதேச அரசியலில் ஓர் அடிப்படையான திருப்புமுனையைக் குறித்து நிற்கிறது. தாமே தூண்டிவிட்ட இந்த நெருக்கடியை அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் கிழக்கு ஐரோப்பாவில் ஏகாதிபத்திய  செல்வாக்கை மேலும் அதிகரிக்க சாதகமாக பயன்படுத்தியுள்ளதுடன், ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோவை நிரந்தரமான போர்நிலைப்பாட்டில் இருத்தியுள்ளன. அவற்றின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் 52 ஆண்டுகளுக்கு முன் கியூப ஏவுகணை நெருக்கடிக்குப்பின் ஒருபோதும் இல்லாதவாறு மனிதகுலத்தை ஒரு அணுவாயுதப் போருக்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. மேலும் இந்த ஆபத்து இன்னமும் எவ்வகையிலும் தவிர்க்கப்படவில்லை.

இந்த அரசியல் மாற்றத்தின் கூர்மையான வெளிப்பாட்டை ஜேர்மனியில் காணலாம். இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற இரு தசாப்தங்களாக, ஜேர்மனியின் வெளியுறவுக் கொள்கை மேற்கின் சார்பாக இருந்ததுடன், பொண் (Bonn) இல் இருந்த அரசாங்கம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளைக் கூட கொண்டிருக்கவில்லை. ஜேர்மனிய முதலாளித்துவம் பின்னர் 1960களின் கடைசிப் பகுதி உலகப் பொருளாதார நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில் அதன் மரபார்ந்த விரிவாக்கத் திசையான கிழக்கை நோக்கித் திரும்பியது. இதுதான் சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) சான்ஸ்லர் வில்லி பிராண்ட்டின் சமரசக் கொள்கையின் முக்கியத்துவம் ஆகும்.

அப்பொழுது முதல் சோவியத் ஒன்றியத்திற்கும் பின்னர் ரஷ்யாவிற்கும் இடையே வணிகம் மற்றும் முதலீடு தொடர்ந்து பெருகியது. இன்று இது ஆண்டுக்கு 80 பில்லியன் டாலருக்கும் மேலாக உள்ளதுடன், சீனாவை அடுத்து ரஷ்யாவின் இரண்டாம் பெரிய வணிகப் பங்காளியாக ஜேர்மனி உள்ளது. கடந்த காலத்தில், உதாரணமாக 1980 களில் அமெரிக்கா அணுவாயுத Pershing II ராக்கெட்டுக்களை ஜேர்மனியில் நிலைநிறுத்தியபோது போன்ற பல நெருக்கடிகள் இருந்துள்ளன. ஆனால் பொதுவாக இக்கொள்கை கிரெம்ளினில் இருந்த ஆட்சியாளர்களுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன்தான் முன்னெடுக்கப்பட்டது. பிராண்ட்டிற்கும் பிரெஷ்னெவிற்கும், ஹோலுக்கும் கோர்ப்பச்சேவிற்கும், ஹோலுக்கும் ஜெல்ட்சினுக்கும் மற்றும் ஷ்ரோடருக்கும் புட்டினுக்கும் இடையே இருந்த தனிப்பட்ட நட்புகள் பிரசித்தமானவை.

இப்பொழுது, ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கை ரஷ்யாவுடன் மோதல் என்ற நிலைக்கு மாறியுள்ளது. பேர்லின் 1914, 1941ல் கொண்டிருந்தது போன்ற ஆக்கிரோஷமான ஏகாதிபத்திய விரிவாக்க போக்கைத்தான் தொடர்கிறது. இவ்வாறு செய்கையில் அது வலதுசாரி மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்களுடன் ஒத்துழைத்த இயக்கம் என்ற மரபைக் கொண்ட பாசிச சக்திகளை ஆதரவிற்கான அடித்தளமாக கொண்டுள்ளது.

கியேவில் ஆரம்பத்தில் இருந்தே மேற்கின் கட்டுப்பாட்டில் இருந்த யூரோமைதான் (Euromaidan) ஜேர்மனிய அரசியல் கட்சிகளாலும் செய்தி ஊடகத்தாலும்ஜனநாயகப் புரட்சிஎன்று கொண்டாடப்பட்டுள்ளது. இதில் ஆரம்பத்தில் ஒரு சில ஆயிரம் மக்களே பங்கு பெற்றனர். மிருகத்தன பொலிஸ் தாக்குதல்களுக்கு பின்தான் பங்கு பெற்றவர்களின் எண்ணிக்கை 100,000 விட உயர்ந்தது, ஆனால் விரைவில் மறுபடியும் வீழ்ச்சியடைந்தது. யூரோமைதான் இயக்கத்தின் மூன்று பேச்சாளர்களில் ஒருவரான ஆர்செனிய் யாட்சென்யுக் அமெரிக்க அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்ததுடன், 2004 ஆரஞ்சுப் புரட்சியில் முக்கிய நபரருமாவர். இரண்டாமவர் விட்டாலி கிளிட்ஷ்கோ, இவர் ஜேர்மனியின் கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் கொன்ராட் அடினவர் அறக்கட்டளையின் உருவாக்கம் ஆவார். மூன்றாவது நபரான ஓலே டியனிபோக் ஒரு பாசிசவாதி ஆவார்.

ஜேர்மனிய சார்பு (அல்லது ஐரோப்பிய-சார்பு) எழுச்சியை கியேவில் அமைப்பது குறித்த சிந்தனை, விஷேடமாக புதியதான ஒன்றல்ல. நூறு ஆண்டுகளுக்கு முன்பு அப்பொழுது ஜேர்மனிய சான்ஸ்லராக இருந்த தியோபோல்ட் வொன் பேத்மான் ஹோல்வேக் ஏற்கனவே இதே கருத்தைக் கொண்டிருந்தார். ஆகஸ்ட் 11, 1914ல், முதல் உலகப்போர் வெடித்த சில நாட்களுக்குள் அவர் வியன்னாவில் இருந்த ஜேர்மனிய தூதருக்கு ஓர் ஆணை மூலம் பின்வரும் உத்தரவை கொடுத்தார்:

போலந்தில் மட்டும் இல்லாமல் உக்ரேனிலும் ஒரு ஜேர்மனிய சார்பு எழுச்சிக்கு ஊக்கம் கொடுப்பது நமக்கு மிகவும் முக்கியம் எனத் தோன்றுகிறது: 1) ரஷ்யாவிற்கு எதிராக ஓர் ஆயுதமாக; 2) போர் வெற்றிகரமாக முடிவடையும் பட்சத்தில், ரஷ்யாவிற்கும் ஜேர்மனிக்கும் அல்லது ஆஸ்திரியா-ஹங்கேரிக்கும் இடையே சில இடைத்தடை நாடுகளைத் தோற்றுவிப்பது தேவையாகும். அதுதான் மேற்கு ஐரோப்பா மீதான ரஷ்ய பெரும் நாட்டின் அழுத்தத்தைக் குறைக்கவும், ரஷ்யாவை கிழக்கே பின்வாங்கவும் செய்யும்...’

இதன்பின் ஜேர்மனி பிரெஸ்ட்-லித்தோவ்ஸ்க் (Brest-Litovsk) சமாதான உடன்படிக்கை வரை நான்கு ஆண்டுகள் தன் திட்டத்தை செயல்படுத்தக் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் பின்னர் அது மிகவும் உறுதியானமுறையில் இயங்கத் தொடங்கியது. முதலில் அது விவசாயத்தையும், இரயில்வேக்களையும் வங்கிகளையும் ஜேர்மனிய ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்றவாறு மறுசீரமைக்க உக்ரேனிய ராடா கைப்பாவை ஆட்சிக்கு ஆதரவளித்தது. ராடாவுடன் வேறுபாடுகள் எழுந்தவுடன் குடியரசு இராணுவம் (ஜேர்மனிய இராணுவம்) ஒரு ஆட்சிசதிக்கு ஏற்பாடு செய்து முன்னாள் ஜாரிச பாதுகாப்புப் படைகள் அதிகாரியும் நிலப்பிரவுமான பாவ்லோ ஸ்கோரோபட்ஸ்கி (Pavlo Skoropadskyi) ஐ உக்ரேனின்தலைமை தளபதியாகபதவியில் இருத்தியது. மேற்கு போர்முனையில் ஜேர்மானியின் தோல்வியும், ஜேர்மனியில் நவம்பர் புரட்சியும் இந்த ஆவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தன.

இரண்டாம் உலகப் போரில் நாஜிகளின் ஆக்கிரமிக்கும் கொள்கை, முதல் உலகப் போரின் ஜேர்மனியின் போர் நோக்கத்துடன் இணைத்தது. மீண்டும், இப்பொழுது சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியான உக்ரேன் ரஷ்ய மத்தியபகுதிக்கு எதிரான ஒரு அரங்காக உதவியது. மீண்டும் ஜேர்மனி, உக்ரேனின் பரந்த விவசாய நிலங்கள், இயற்கை வளங்களை தன் போர் பொருளாதாரத்திற்கு பயன்படுத்த முற்பட்டது. மீண்டும் அது உள்ளூர் ஒத்துழைப்பாளர்களின் ஆதரவில் தங்கியிருந்தது.

ஸ்ரீபன் பண்டேராவின் உக்ரேனிய தேசியவாதிகள் அமைப்பு (Organization of Ukrainian Nationalists -OUN) இதில் மத்திய பங்கை கொண்டிருந்தது. இன்று அவர் ஸ்வோபோடா கட்சியால் போற்றப்படுகிறார். தந்தைநாட்டு கட்சியின் யான்சென்யுக்கினாலும் ஒரு முன்மாதிரி, மாவீர்ராக மதிக்கப்படுகிறார். பண்டேராவிற்கும் நாஜிக்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பு வெறும் தந்திரோபாய ரீதியானதல்ல, மாறாக அது ஹோலோகாஸ்ட் (Holocaust) வரையும் தொடர்ந்தது. உதாரணமாக ஜூன் 30, 1941ல்  வழமையான ஜேர்மன் துருப்புக்கள் படையெடுப்பதற்கு முன் OUN உடைய ஒரு பிரிவு பண்டேராவின் தலைமையில் எல்விவ் நகரத்தில் படுகொலை ஒன்றை நிகழ்த்தியது. இதில் கிட்டத்தட்ட 7,000 கம்யூனிஸ்ட்டுக்களும் யூதர்களும் கொல்லப்பட்டனர்.

வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்திற்குக் காரணங்கள்

ரஷ்யாவுடன் கிட்டத்தட்ட 45 ஆண்டுகால நெருக்கமான ஒத்துழைப்புக் கொள்கைக்கு பின் இன்று ஜேர்மனி ஒரு மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதற்கு ஆழ்ந்த பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வேர்கள் இருக்கின்றன. இது சர்வதேச மற்றும் வர்க்க உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பிரதிபலிக்கிறது. இந்தப் பாதை மாறுதலை எவ்வாறு விளங்கப்படுத்தப்பட முடியும்?

இதனை ஜேர்மனியின் பெருவணிகத்தின் குறுகியகால நலன்களின் அடிப்படையில் விளக்க முடியாது. ஜேர்மனிய-ரஷ்ய வணிக மொத்தம் 800 பில்லியன் டாலர்கள் என்றும், 6,200 ஜேர்மனிய நிறுவனங்கள் ரஷ்யாவில் இயங்கிக்கொண்டிருக்கையில், மோதல் தீவிரமடைந்து பொருளாதாரத் தடைகள் வந்தால் கணிசமான சேதம் இருக்கும் என முக்கிய வணிகச் சங்கங்கள் அஞ்சுகின்றன.

Handelsblatt வணிக ஏட்டில், ஜேர்மன் வணிகத்தின் கிழக்குக் குழுவின் தலைவர் எக்கார்ட் கோர்டர்ஸ் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக வலுவான எச்சரிக்கையை கொடுத்துள்ளார். கடுமையான பொருளாதாரத் தடைகள், ஒரு சுருள் போன்ற தடைகளை விளைவிக்கும் என்றும், அதில் இருந்து வெளியேறும் வழியை நான் காணவில்லை என்றும் அவர் கூறினார். அந்நாட்டை தனிமைப்படுத்தி ஒதுக்குவது பெரும் தவறாகும் என்ற அவர், மேலும்: ரஷ்யா உலகத்தில் எட்டாவது மிகப்பெரிய பொருளாதாரம். அதற்கு அதிகமான முதலீடு தேவை, இதற்கான பெரும் சாத்தியத்தை கொண்டுள்ளதுஎனக் கூறினார்.

வெளியுறவுக் கொள்கையில் இந்த மாற்றத்தை, ஒரு பரந்த வரலாற்று, சர்வதேச உள்ளடக்கத்தில் பார்க்கப்படவேண்டும். எனது கருத்தின்படி மூன்று காரணிகள் முக்கியமானவை: முதலாவது, உலக ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியும், மூலோபாய செல்வாக்கு, மூலப் பொருட்கள் மற்றும் சந்தைகளுக்காக தீவிரமான உலகளாவிய போராட்டம். இரண்டாவது, யூரோ நெருக்கடியும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளே மத்தியிலிருந்து விலகிச்செல்லும் போக்குகளும். இந்தப் போக்குகள் ஜேர்மனியின் தலைமையின் கீழ், ரஷ்யாவிற்கு எதிரான மோதல் போக்கிற்கு ஒருங்கிணைக்கப்பட வேண்டும். மற்றும் மூன்றாவதாக, ஜேர்மனியிலும், ஐரோப்பா முழுவதும் தீவிரமடையும் வர்க்க முரண்பாடுகள்.

முதல் காரணி, உக்ரேனில் ஏகாதிபத்திய தாக்குதலின் புவி-மூலோபாய முக்கியத்துவம் உலக சோசலிச வலைத் தளத்தில் பல முன்னோக்குகளில் ஆராயப்பட்டுள்ளது. மார்ச் 8ம் திகதிஉக்ரேனிய நெருக்கடியும், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் வரலாற்றுரீதியிலான விளைவுகளும்என்ற தலைப்பில் நாம் பின்வருமாறு எழுதினோம்:

ரஷ்யவிரிவாக்கவாதம்குறித்த மேற்கத்திய ஊடகங்களின் ஆத்திரமூட்டும் பிரச்சாரம் முற்றிலும் அர்த்தமற்றதாகும். சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் (USSR) உடைந்ததில் இருந்து, முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பாரிய பகுதிகளும் மற்றும் அதன் கிழக்கு பிராந்திய பங்காளிகள் அனைவரும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் சுற்றுவட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதானது சோவியத்திற்கு-பிந்தைய ரஷ்யாவை மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் ஒரு வறிய, கொடுங்கோன்மை மிக்க அரை-காலனித்துவமாக மாற்றுவதில் போய் முடியும் என்ற ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் எச்சரிக்கையை ரஷ்யாவின் தலைவிதி உறுதிப்படுத்தி உள்ளது.

ஆனால் ஏகாதிபத்தியம் ஒரு கட்டுக்கதை அல்ல. ஆனால் அதுவொரு மூர்க்கமான எதார்த்தமாகும், மற்றும் அதன் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்கள், ரஷ்யாவுடன் அமைதியாக இணங்கி இருப்பதை நிராகரித்தது. சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அமெரிக்காவின் எதிர்ப்பு, USSRஇன் முதலாளித்துவம்-அல்லாத கட்டமைப்பை மட்டும் அடித்தளமாக கொண்டிருக்கவில்லை. அக்டோபர் புரட்சியால் உருவாக்கப்பட்ட சோவியத் ஒன்றியம், அதுபோன்றவொரு பெரிய நாட்டின் பாரிய இயற்கை மற்றும் மனிதவளங்கள் மீதான அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டை இழக்கச் செய்தது என்ற உண்மையோடு அமெரிக்காவால் ஒருபோதும் தன்னைத்தானே சமரசம் செய்து கொள்ள முடியவில்லை. இப்போது சோவியத் ஒன்றியம் இல்லையென்றாலும் கூட, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அந்த விருப்பங்கள் இன்னமும் இருக்கின்றன.

மாற்றத்திற்கு இரண்டாவது காரணம் வெளியுறவுக் கொள்கை, யூரோ நெருக்கடி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடி ஆகியவை 2008ம் ஆண்டு சர்வதேச நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடியுடன் நெருக்கமாக பிணைந்துள்ளன. இந்த நெருக்கடி ஒரேயடியில் ஐரோப்பாவை அதன் பொருளாதார வலிமையின் அடிப்படையில் அமெரிக்காவிற்கு சமமான அதிகாரம் கொண்டதாக அபிவிருத்திசெய்யும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இக்கருத்தாய்வுதான் மாஸ்ட்ரிச்  உடன்படிக்கைக்கும், ஐரோப்பய சமூகம் ஐரோப்பிய ஒன்றியமாக 1990களில் மாறியதற்கான அடித்தளமும் ஆகும்.

நிதிய நெருக்கடி ஆரம்பத்தில் அமெரிக்காவில் தோன்றினாலும், ஐரோப்பா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. அமெரிக்கா டாலர் ஒரு உலக நாணயம் என்ற பங்கில் நம்பியிருக்கமுடியும், மேலும் அமெரிக்கா ஒரு மத்திய அரசாங்கத்தால் கட்டுப்பட்டுத்தப்படுகின்றது என்னும் உண்மை, வங்கிகளை மறுகட்டமைத்தல், அவற்றிற்கு நிதியளித்தல் ஆகியவற்றை தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் பணத்தை அச்சடிப்பதின் (சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பது) மூலம்செய்ய முடிந்தது.

ஐரோப்பிய ஒன்றியமும் யூரோப்பகுதி அங்கத்துவ நாடுகளும் அதே வழியில் நடக்க முடியவில்லை. ஐக்கியப்பட்ட பொருளாதார, நிதியக் கொள்கை இல்லாமல் போனமை, தனி அங்கத்துவ நாடுகளுக்கு இடையேயான பெரும் கட்டுமான மற்றும் பொருளாதார வேறுபாடுகளும் மற்றும் அவற்றின் மாறுபட்ட நலன்கள் ஆகியவை ஒரு ஐக்கியப்பட்ட விடையிறுப்பை தடுத்துவிட்டன.

ஜேர்மனிய அரசாங்கம், பொருளாதாரத்தில் பலமற்ற நாடுகளுக்கு பொறுப்பெடுக்க கடுமையாக மறுத்துவிட்டது. மாறாக பேர்லின் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் போக்கை வலியுறுத்தியது. அது தொழிலாள வர்க்கத்திற்கு கொடூர விளைவுகளை கொடுத்தது மட்டும் இல்லாமல், நிதிய, பொருளாதார நெருக்கடியைத் தீவிரப்படுத்தியது. இது யூரோவை குறைமதிப்பிற்கு உட்படுத்தி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் மத்தியிலிருந்து விலகிச்செல்லும் சக்திகள், அழுத்தங்கள் மற்றும் முரண்பாடுகளை தீவிரமடைய செய்தது.

நாம் பலமுறை கடந்த ஆண்டு இதைப்பற்றி பகுப்பாராய்ந்தோம். பேர்லினில் செப்டம்பர் 22, 2013 அன்று சோசலிச சமத்துவக் கட்சியின் ஐரோப்பியத் தொழிலாளர் மாநாட்டில் நான் பின்வருமாறு கூறினேன்:

ஜேர்மனிய மற்றும் ஐரோப்பிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் குறுகிய காலத்தில் சிக்கன நடவடிக்கைகளால் இலாபம் அடைந்தாலும், நீண்டகாலப்போக்கில் அவை இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பின் ஐரோப்பிய முதலாளித்துவம் தங்கியிருந்த ஒப்புமையிலான ஸ்திரப்பாட்டை அழித்துவிட்டன. வெட்டுக்கள் கடன் நெருக்கடியை தீர்க்கவில்லை, மாறாக அவற்றைத் தீவிரப்படுத்தின.... சிக்கன நடவடிக்கைகள் குறித்த முரண்பாடுகள் மற்றும் சுருங்கும் சந்தைகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அழுத்தங்களை பெருக்கின. ... பல ஐரோப்பிய நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியம் கலைக்கப்பட்டு வலுவான தேசிய அரச முறைக்கு திரும்ப வேண்டும் என அழைப்பு விடும் பிரித்தானியாவில் UKIP, ஹங்கேரியில் Fidesz, பிரான்சில் தேசிய முன்னணி (FN) போன்ற வலதுசாரிக் கட்சிகள் வளர்ச்சியடைந்தன.

ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தை மீண்டும் ஒன்றாக உறுதிப்படுத்த இன்னும் ஆக்கிரோஷ வெளியுறவுக் கொள்கைக்கான அழைப்புக் குரல்கள் வந்திருந்தன. அப்பொழுது அவை உக்ரேனை நோக்கியிருக்கவில்லை, ஆனால் சிரியாவில் இராணுவத் தலையீட்டிற்காக அழைப்புவிடப்பட்டன. அதே அறிக்கையில், நான் பின்வருமாறு கூறினேன்:

சிரியா மீது குண்டுத்தாக்குதல் அச்சுறுத்தல்களை ஜனாதிபதி ஒபாமா கொடுத்தபின் இங்கு ஜேர்மனியில் taz முதல் Süddeutsche, Die Zeit, Die Welt வரையிலான செய்தித்தாட்கள் தீவிர போர் ஆதரவுப் பிரச்சாரத்தை நடத்துகின்றன. இத்தகைய போர்வெறித்தனம் மூன்றாம் குடியரசுக்காலத்திற்கு பின்னர் ஜேர்மனியில் காணப்படாத ஒன்றாகும்.

ஓர் ஆக்கிரோஷ, இராணுவத்தை அடித்தளம் கொண்ட வெளியுறவுக் கொள்கை பேர்லினில் ஒரு புதிய கூட்டணி அரசாங்கம் பற்றிய பேச்சுவார்த்தைகளின் முக்கிய இடத்தில் இருந்தது. இது மத்திய தேர்தல்களுக்குப்பின் இரண்டு மாதங்களுக்கு நீடித்தது. ஆனால் இது பொதுமக்களுக்குக் கூறப்படவில்லை. இக்கருத்து பற்றி அந்த நேரத்தில் நாம் இரண்டு விளக்கவுரைகளை வெளியிட்டிருந்தோம்.

ஒன்றில் நாம் எழுதினோம்: தாராளவாத ஜனநாயக கட்சி (FDP) முடிந்தபின் ஒரு புதிய கூட்டணிப் பங்காளி தேவைப்படும் மேர்க்கெல், சமூக ஜனநாயக கட்சியுடன் (SPD) கூட்டணிக்கு உடன்படுவார் என்றால், அது இன்னும் ஆக்கிரோஷ ஜேர்மனிய இராணுவ நிலைப்பாட்டிற்கு தெளிவான அடையாளமாகும்.

மற்றொன்றில் நாம் கூறினோம்: ஆனால், வருங்கால அரசாங்கத்தை அமைப்பதில் உள்ள முரண்பாடுகளுக்கும் அழுத்தங்களுக்கும் உண்மையான காரணம் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகளிடமிருந்துவரும் எதிர்ப்பு பற்றிய அச்சங்கள், அதாவது CDU-CSU கூட்டணியில் அவை நசுக்கப்பட்டுவிடும் என்பதால் அல்ல. மாறாக, அனைத்துக் கட்சிகளும் செல்வாக்கற்ற நடவடிக்கைகளை ஆளும்வர்க்கத்தின் சார்பாக பெருகும் எதிர்ப்பிற்கு இடையே நடைமுறைப்படுத்த ஒரு உறுதியான ஆளும் கூட்டணியை உருவாக்க முற்படுவதுதான். வெளியுறவுக் கொள்கைகள் அவற்றின் நிகழ்ச்சி நிரலில் மேற்படியில் உள்ளன.

பெப்ருவரி 2012 ல், கூட்டாட்சி தேர்தல்களுக்கு 18 மாதங்கள் முன்பு, ஜனாதிபதி கிறிஸ்டியான் வொல்ஃப் ஒரு தயாரிக்கப்பட்ட ஊழலில் இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டு, அவருக்குப் பதிலாக ஜோஹாயிம் கௌவ்க் பதவிக்கு வந்தார். இந்த விவகாரத்தில் முக்கிய பங்கு, பரபரப்பு நாளேடான Bild ஆல் மேற்கொள்ளப்பட்டது. சமீபத்திய உக்ரேன் நிகழ்வுகளிலும் அது முக்கிய பங்கை கொண்டிருந்தது. விட்டாலி கிளிட்ஷ்கோ இந்த ஏட்டில் நாளாந்தம் கட்டுரைகளை எழுதிவருகின்றார்.

கூட்டாட்சி தேர்தலுக்குப்பின், ஏன் வொல்ஃபிற்கு பதிலாக கௌவ்க் வந்தார் என்பது தெளிவாயிற்று. அக்டோபர் 3ம் திகதி, ஒரு புதிய கூட்டாட்சி அரசாங்கம் அமைப்பதற்கான பேச்சுக்களுக்கு இடையே கௌவ்க் ஜேர்மனிய மறுஐக்கிய தின கொண்டாட்டத்தில், ஜேர்மனி ஒரு வலுவான வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டை கொள்ள வேண்டும், அதற்கு இணையான இராணுவ பங்கையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலுவாக வாதிட்டார்.

அவருடைய உரையின் கவனம், ஜேர்மனி மீண்டும்ஐரோப்பாவிலும் உலகிலும்அதன் அளவு, செல்வாக்கிற்கு ஏற்ப உண்மையில் மீண்டும் அதிக பங்கை வகிக்கவேண்டும் என்னும் கோரிக்கைதான்.

உண்மையில் எம்முன்னே எழுப்பப்படும் வினா: நம்முடைய தலையீடு நம் நாட்டின் முக்கியத்துவத்திற்கு பொருத்தமாக உள்ளதா? என்று கௌவ்க் கேட்டார். நம் நாடு ஒன்றும் ஒரு தீவு அல்ல. அவற்றின் தீர்வில் நாம் பங்கு பெறவில்லை என்றால் நாம் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ மோதல்களில் இருந்து பாதிக்கப்படாது இருப்போம் என்று நாம் நம்மை ஏமாற்றிக் கொள்ளக்கூடாது. எனவே இவ்வாறு கேட்பது சரிதான். ஜேர்மனி போதுமானளவிற்கு கிழக்கே உள்ள அதன் அண்டை நாடுகளின் பொறுப்புக்களிலும், அதேபோல் மத்திய கிழக்கு மற்றும் தெற்கு மத்தியதரைக்கடல் நாடுகளின் பொறுப்புக்களில் பங்கு கொண்டுள்ளதா?

புதிய அரசாங்கம் பதவி ஏற்றவுடன், கௌவ்க், வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் மற்றும் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வான் டெர் லையன் ஆகியோர் பெப்ருவரி ஆரம்பத்தில் இராணுவ கட்டுப்பாட்டுநிலை முடிவுற்றதுஎன அறிவித்தனர்.

பல செய்தித்தாட்களால் உக்ரேன் நெருக்கடிஇராணுவ கட்டுப்பாட்டு நிலையைகைவிட அரசாங்கம் தயாராக உள்ளதா என்பதற்கு ஒரு பரிசோதனை என்று கருதப்படுகிறது. Spiegel Online: அரசாங்கமும் ஜனாதிபதியும் இன்னும் உறுதியான வெளியுறவுக் கொள்கையை அறிவித்துள்ளனர். இப்பொழுது இது நடைபெறுமா என பார்க்கவேண்டும்: பேர்லின் உண்மையிலேயே மிக அதிக விலை கொடுக்க வேண்டிய பொருளாதாரத் தடைகளை சுமத்தத்தயாரா? ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகள்ஒரு சமிக்ஞை விளைவைக் கொடுக்கும். அவை கிரெம்ளினுக்கும் மற்றும் உலகின் ஏனைய பகுதிகளுக்கும் பேர்லின் அதன் புதிய வெளியுறவுக் கொள்கையில் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதைக் காட்டும்என எழுதியது.

அரசியல் கட்சிகளும் செய்தி ஊடகமும் புதிய ஆக்கிரோஷ வெளியுறவுக் கொள்கை வெளிப்படையாக ஐரோப்பிய ஒன்றியத்தை ஒன்றாகப் பிணைக்கும் வழிவகை என்றும் ஜேர்மனியின் தலைமைப் பங்கை உறுதிப்படுத்துவதாகவும் கண்டன. உதாரணமாக CDUவின் முக்கிய வெளியுறவு நபர்களில் ஒருவரான நோர்பேர்ட் றொட்கென் பைனான்சியல் டைம்ஸில்ஜேர்மனி உலக அரங்கில் ஒரு தலைமையாக இருக்க வேண்டும்என்று எழுதினார்.

ஆம். நிலைமை நம்மை கடினமான, செல்வாக்கற்ற முடிவுகளை எடுக்கச் செய்யும்.... ஆனால் இந்த மோதல் கிரிமியா அல்லது உக்ரேன் பற்றி மட்டும் அல்ல.... கடந்த காலத்தில் நாம் ஒரே குரலில் பேச பலமுறை திணறினோம். ரஷ்யாவுடனான மோதல் ஐரோப்பியர்களை அவர்களுடைய வேறுபாடுகளை மறக்கச் செய்துள்ளது. இது ஒரு பொது வெளியுறவு, பாதுகாப்புக் கொள்கைக்கு கிரியா ஊக்கி ஆகலாம். நம் பொறுப்பைச் செயல்படுத்த நிதிய, பொருளாதாரக் கொள்கை எல்லைகளுக்கு அப்பால் நாம் ஐரோப்பியர்கள் என்று நம்மை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.

Spiegel Online உக்ரேன் நெருக்கடியை, வியாழன் அன்று ஒரு கட்டுரையின் தலைப்பில் இருப்பது போல் ஐரோப்பாவின் பெரிய சந்தர்ப்பம்என்று காண்கிறது.புட்டினின் அரசியல் அதிகாரம் ஐரோப்பாவை பிரிக்குமா? Spiegel Online கேட்கிறது.  “மாறாகத்தான் நிலைமை இருக்கும். ஐரோப்பியர்கள் முன்னொருபோதும் இல்லதவாறு இப்பொழுது ஒன்றாகவுள்ளனர். இப்பொழுது ஒரு பெரிய சந்தர்ப்பம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு பொது மூலோபாய வெளியுறவுக்கொள்கையை அபிவிருத்திசெய்யலாம். கிரிமிய நெருக்கடி எவ்வளவு துன்பகரமாக இருந்தாலும், பல விடயங்களில் அது ஒரு வரலாற்றுத் தன்மை உடைய சந்தர்ப்பத்தையும் கொடுக்கிறது: ஐரோப்பாவை இன்னும் வலுவாக ஐக்கியப்படுத்த வேண்டும் என்பதே அது.

ஐரோப்பாவில் சமூகப் பிளவு

செய்தி ஊடகத்தினரும் அரசியல்வாதிகளும் ஓர் ஆக்கிரோஷ, சீற்றம் நிறைந்த வெளியுறவுக் கொள்கை மூலம் ஐரோப்பாவைஐக்கியப்படுத்துவதுகுறித்துப் பேசுகையில் அவர்கள் பல ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு இடையே உள்ள அழுத்தங்களை அகற்றும் நோக்கத்தை மட்டுமல்லாது, அத்துடன் எல்லாவற்றிற்கும் மேலாக வர்க்கப் போராட்டத்தை நசுக்கவும் முயல்கின்றனர். அப்பட்டமான சமூக சமத்துவமின்மை, ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் உள்ள தீவிர சமூக முரண்பாடுகள், ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையை போரை நோக்கிய ஆக்கிரோஷ போக்குகள் பக்கம் இழுத்துச் செல்லும் காரணிகளில் முக்கியமானதாகும்.

ரஷ்யா மற்றும் அதன் ஜனாதிபதி புட்டினுக்கு எதிரான வெறித்தன பிரச்சாரம் இதே நோக்கத்திற்குத்தான் உதவுகிறது. அதாவது உள்நாட்டு அழுத்தங்களை வெளிநாட்டுப் பிரச்சினைகளை நோக்கி திசைதிருப்பவாகும். அதே நேரத்தில் இது ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் மீதான புதியசுற்று மோசமான தாக்குதல்களுக்கு முன்னிகழ்வாகவும் உள்ளது. முதலாளித்துவம் இதை, கியேவில் செயல்படுத்தப்பட்டது போன்று, பாசிச குண்டர்களுக்கு ஆதரவு கொடுத்து, வெட்கம் கெட்டதனமாக ஆத்திரமூட்டல், அச்சுறுத்தல் மற்றும் பொய்களை கூறுதல் ஆகிய மிருகத்தனமான வழிவகைகளில் தொடரும்.

முதலாளித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சமூக நிலை குறிப்பிடத்தக்க வகையில் பேரழிவுகரமான நிலையில் உள்ளது. இப்பொழுது இந்த சமூக அதிருப்தி ஒரு ரஷ்ய படையெடுப்பு பற்றிய அச்சுறுதல்களை தோற்றுவித்து நசுக்கப்படுகிறது. இத் தந்திரோபாயம் தொழிலாள வர்க்கத்திடம் அதிக ஆதரவை பெறாது, ஆனால் மத்தியதர, உயர் வகுப்புக்களில் ஒரு ஆதரவை பெறக்கூடும். இத்தட்டினர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து சிறந்த வேலை வாய்ப்புக்களையும் தங்கள் சொத்துக்களுக்கு பாதுகாப்பையும் எதிர்பார்க்கின்றனர்.

இதுதான் உக்ரேன் நிகழ்வுகளால் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றது. ஐரோப்பிய மக்கள் தொகையில் பெரும் பிரிவினர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தமது விருப்பமின்மையை காட்டும் நேரத்தில், மைதான் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையவேண்டும் என்ற கோரிக்கைவிடுவது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இணையவேண்டும் என்ற இந்த கியேவ் எதிர்ப்புக்கள், எந்த வகையிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயக மற்றும் முற்போக்கான தன்மைக்கு சான்றாகாது. மாறாக, மைதான் எதிர்ப்பாளர்களிடையே தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அரசியல் நோக்குநிலை இருப்பதைத்தான் வெளிப்படுத்துகின்றன.

ஐரோப்பிய ஒன்றிய ஒன்றிணைப்பு உடன்பாடு என்றால் என்னவென்பது உக்ரேனிய மக்களில் பெரும்பாலானோருக்கு ஒரு இரகசியமாக இருந்ததில்லை. இது சர்வதேச நாணய நிதியத்தின்(IMF), சிக்கன ஆணையைச் செயல்படுத்துவதை முன்னிபந்தனையாகக் கொண்டது. இதில் அதிக ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் சமூகநலச் செலவு வெட்டுக்கள் இருப்பதுடன் வீட்டு எரிபொருள் விலைகளும் அதிகமாகும். ஒன்றிணைப்பு உடன்பாடு ரஷ்யாவுடன் ஒரேநேரத்தில் சுங்கத்தீர்வு ஒன்றியத்தை தவிர்க்கிறது. கிழக்கு உக்ரேனிய கனரகத் தொழில்துறையின் பரந்த பிரிவிற்கு இதன் அர்த்தம் ஆலைகள் மூடல் மற்றும் நூறாயிரக்கணக்கான பணிநீக்கங்கள் ஆகும்.

எனவே பாசிசவாதிகள் மைதான் சதுக்கத்தில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. அத்தகைய ஒரு வெட்டுத்திட்டத்தின் இலக்குகள் ஜனநாயக வழிவகைகளில் சாதிக்கப்பட முடியாது. அவை தொழிலாள வர்க்கத்தை மிரட்டல், அச்சுறுத்தல் ஆகியவற்றின் மூலம்தான் சாதிக்கப்பட முடியும். இந்த துல்லிய நோக்கத்திற்குத்தான் Right Sector, ஸ்வோபோடா மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான போர் வெறி ஆகியவை உதவுகின்றன.

ஸ்வோபோடாவின் பாசிச குணாம்சத்தை மறுக்க முடியாது. இக்கட்சி போர்க் குற்றவாளி ஸ்ரீபன் பண்டேராவை பெரிதும் மதிக்கிறது. இதன் தலைவர் ஓலே தியாக்னிபோக்கின் ரஷ்யப் பன்றிகள் மற்றும்யூதப் பன்றிகளுக்கு எதிராக தீய தாக்குதல்களை நடத்துவது ஒளிப்பதிவுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் தீவிர வலதுசாரி ஜேர்மனியின் தேசிய ஜனநாயகக் கட்சி (NPD) உத்தியோகபூர்வ வரவேற்பை ஸ்வோபோடா பிரதிநிதிகள் குழுவிற்கு சாக்சனி மாநிலப் பாராளுமன்றத்தில் வழங்கியது. பின்னர் இந்நிகழ்வு பற்றி புகைப்படங்களையும் ஆர்வம் நிறைந்த அறிக்கையையும் பேஸ்புக்கில் வெளியிட்டது.

கடந்த வாரம் ஸ்வோபோடா பிரதிநிதி ஐகோர் மைரோஷ்னிசெங்கோ தலைமையிலான ஒரு துணை இராணுவக்குழு உக்ரேனிய அரசாங்க தொலைக்காட்சி தலைவரை இராஜிநாமா செய்ய வலியுறுத்தியது. இந்த மிருகத்தன தாக்குதலில் இருந்து காட்சிகள் ஒளிப்பதிவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவை எப்படி இச்சக்திகள் அனைத்து எதிர்ப்பையும் அச்சுறுத்த, அவற்றை மௌனப்படுத்தப்படுத்த, ஆத்திரமூட்ட பயன்படுத்தப்படுகின்றன என்பதை நிரூபிக்கின்றன.

ஜேர்மனிய அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரேனில் நேரடி பாசிசவாதிகளுடன் ஒத்துழைப்பது ஓர் எச்சரிக்கையாகும். ஐரோப்பிய முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்தை நசுக்குவத்காக பாசிசவாதிகளை பிற ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களுள் கொண்டுவரத் தயாராகிறது. உதாரணம்: பிரான்ஸ்.

ஆனால் ஐரோப்பாவில் சமூக சமத்துவமின்மை பிரச்சினைக்கு திரும்புவோம். பல புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன, ஆனால் நேரம் காரணமாக நான் இரு உதாரணங்களை மட்டும் கொடுக்கிறேன். முதலாவது ஐரோப்பாவிலுள்ள ஊதிய இடைவெளியை பற்றியது. வேறு எந்த ஒருங்கிணைந்த பொருளாதார பிராந்தியத்திலும் ஊதியங்கள், வாழ்க்கைத் தரங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதுபோல் வேறுபாடுள்ளதாக இருக்கவில்லை.

ஜேர்மனிய பொருளாதாரம் அதன் வாசலிலேயே, சீனாவிலும் ஊதியங்கள் சற்றே உயர்வாக ஏன் சில சந்தர்ப்பகளில் குறைவாகக் கூட இருக்கும் நிலைமையில் தனது இலாபத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த நிலைமையை அது பயன்படுத்தி ஐரோப்பா முழுவதும் ஊதியங்களை குறைக்க உற்பத்தியை கிழக்கு ஐரோப்பாவின் பிரிவுகளுக்கு அனுப்புவதன் மூலம் அல்லது கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்களை தற்காலிகமாக வேலைக்கு நியமிப்பதின் மூலம், அல்லது பட்டினி ஊதியங்களில் தொழிலாளர்களை ஜேர்மனியில் ஒப்பந்தம் செய்யவும் முனைகின்றது.

ஜேர்மனிய தொழில்துறைக் கூட்டமைப்பு (BDI) உற்பத்தித் துறையில் மணித்தியால தொழிலாளர்கள் செலவினங்களின் சர்வதேச ஒப்பீட்டை செய்துள்ளது. இந்த ஆய்வு சராசரி ஊதியங்களோடு தொடர்பற்றது, ஆனால் செலவினங்கள், அதாவது துணை தொழிலாளர் துறை செலவுகளை அடங்கியது. அதாவது ஒரு நிறுவனம் ஒரு மணி நேர வேலைக்கு செலுத்தும் செலவு பற்றியது.

மேற்கு ஜேர்மனி ஒரு மணி நேரத்திற்கு 38.90 யூரோக்கள் என்ற உயர்நிலையில் உள்ளது, கிழக்கு ஜேர்மனியில் தொழிலாளர் செலவினங்கள் கணிசமாக 23.60 யூரோக்கள் என்று குறைவாகும். பிரான்சிலும் ஜேர்மனியைப்போல் 36.80 ஆகவுள்ளது. இதற்கு மாறாக அமெரிக்காவில் தொழிலாளர் செலவினங்கள் 25.90 யூரோக்களும் ஐக்கிய இராச்சியத்தில் 25.10 யூரோக்களும் மிகவும் குறைவு, ஏனெனில் துணை ஊதியச் செலவுகள் முதலாளிகளுக்கு குறைவாகும். பேர்லினில் இருந்து 90 கி.மீ. கிழக்கே போலந்திற்குப் பயணித்தால் தொழிலாளர் செலவினங்கள் மேற்கு ஜேர்மனிய தரத்தில் ஆறில் ஒரு பங்கு என்று 6.65 யூரோக்கள் மட்டும்தான் எனக் காணலாம்.

BDI கருத்துப்படி தற்பொழுது உக்ரேனில் ஒரு மணி நேர வேலை 3 யூரோக்கள் என்று உள்ளது. இது ஐரோப்பாவில் கடைசியாக உள்ள பல்கேரியாவைவிட (2.90 யூரோக்கள்) சற்றே உயர்வானது, ஆனால் ரஷ்யா (5.90 யூரோக்கள்) மற்றும் சீனாவை விட (4.00 யூரோக்கள்) கணிசமாக குறைவானதாகும். உக்ரேனில் தொழிலாளர் செலவுகள் இப்பொழுது இன்னும் அதிகமாக சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் கீழ் குறைக்கப்படும்.

ஐரோப்பா முழுவதும் சமூக நிலைமை மிகவும் வெடிப்புத் தன்மை உடையது. இது ஏனையவற்றுடன் சேர்த்து யூரோப்பகுதியில் வேலையின்மை விகிதம் மூலம் எடுத்துக்காட்டப்படுகின்றது. இது 2008 நிதிய நெருக்கடியில் இருந்து விரைவாகப் பெருகியுள்ளது. 2008ல் வேலையின்மையில் கிட்டத்தட்ட 7.5% ஜனவரி இருந்த நிலையில், இப்பொழுது இது 12%க்கும் அதிகமாக உள்ளது. இந்த உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் பெரும்பாலும் தீயதற்றதாக காட்டப்படுவதுடன் பெரிதும் குறைத்து மதிப்பிடப்படுபவையுமாகும்.

கிரேக்கம், போர்த்துக்கல், ஸ்பெயின் மற்றும் அயர்லாந்தில் நிலைமை குறிப்பாக பேரழிவுத் தன்மையில் உள்ளது. இவை ஐரோப்பிய ஒன்றியத்தைத்தான் பிணையெடுப்புப் பொதிகளுக்கு நம்பியுள்ளன. அதற்கேற்ற சிக்கன நடவடிக்கைகள் சமீப ஆண்டுகளில் எடுக்கப்பட்டுள்ளன. வேலையின்மை, குறிப்பாக இளைஞர் வேலையின்மை இந்நாடுகளில் மிகவும் அதிகம். மக்களில் பெரும் பகுதிகளுக்கு சமூக சேவைகள், சுகாதார பாதுகாப்பு ஆகியவை முற்றிலும் மறுக்கப்பட்ட நிலையில் உள்ளன.

இத்தாலியும் பிரான்ஸும் கூட சமூக வெடிப்பு விளிம்பில் உள்ளன. ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டும் அவருடைய சோசலிஸ்ட் கட்சி அரசாங்கமும் பிரான்சில் பொருளாதார நிலைமையைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதில் தோல்வியைக் கண்டுள்ளனர். வேலையின்மை புதியமட்டத்தை எட்டி, நாடு பொருளாதாரரீதியாக ஜேர்மனிக்கு மிகவும் பின்னே போய்விட்டது. எனவேதான் ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள் மரி லு பென் மற்றும் அவருடைய தீவிர வலதுசாரிக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வருவது குறித்து தீவிரமாக பரிசீலிக்கின்றன.

இத்தாலியில் ஆளும் உயரடுக்கின் பெரும்பிரிவு, புதிய அரசாங்கத் தலைவர் மாட்டியோ ரென்சி வெற்றுவார்த்தைஜாலக்காரர் எனக் கருதுகிறது. அவர் பொருளாதார, சமூக அமைப்புமுறைகளுக்கு தாமதமின்றி புத்துயுர் கொடுப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால் 39 வயது ஆன இவருக்கு தொழிலாள வர்க்க மோதல்கள் பற்றிய அனுபவம் ஏதும் கிடையாது. இவருக்கு முன்பு இருந்தவர்களுக்குப் பெரிதும் உதவிய தொழிற்சங்கங்கள் பரந்தளவில் மதிப்பிழந்து போயுள்ளன.

மேம்போக்காக பார்க்கையில், ஜேர்மனியின் பொருளாதார நிலைமை சிறந்தது போல் தோன்றும். ஆனால் சமுக சமத்துவமின்மை மற்றும் அழுத்தங்களின் பரப்பு பாரியளவிலானது. சில ஆய்வுகளின்படி, இது ஐரோப்பாவிலேயே மிகவும் அதிகமாகும். மில்லியன் கணக்கானவர்கள் மோசமான அல்லது மிக குறைவான ஊதியங்களில் வேலை செய்கின்றனர். மூன்று மில்லியன் பேர்கள் இரண்டாவது வேலை செய்கின்றனர், அவர்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்த எந்தக் கட்சியும் இல்லை.

ஜேர்மனிய செயதி ஊடகத்தின் தடையற்ற போர்வெறியை இப்பின்னணியில் நோக்கப்பட வேண்டும். ஹிட்லரின பிரச்சார அமைச்சரகத்திற்கு ஜோசப் கோயெபெல்ஸ் தலைமை வகித்த காலத்திற்கு பின்னர், இப்பொழுது நாட்டின் செய்தி ஊடகம், வானொலி, தொலைக்காட்சி முரசடிப்பது போல் ஜேர்மனியில் எவரும் இத்தனை பொய்கள், திரிக்கப்பட்ட காரணங்கள், ஜனரஞ்சக புலம்பல்கள் என்று கேட்கவில்லை. இது மரபார்ந்த வலதுசாரி செய்தி ஊடகத்திற்கு மட்டும் இல்லாமல் taz, Frankfurter Rundschau, Die Zeit, Süddeutsche Zeitung மற்றும் அரச தொலைக்காட்சி ஒளிபரப்புக்களுக்கும் பொருந்தும்.

வெளியிடப்படும் கருத்துக்களில், இத்தகைய துருவப்படுத்தலே, பெருகும் வர்க்க அழுத்தங்களின் வெளிப்பாடு ஆகும். இது இந்நாட்டில் வெளிப்படையாக வர்க்க மோதல் வெடிக்கும்போது நமக்கு முன் என்ன உள்ளது என்பதை நிரூபிக்கிறது.

புட்டினுடைய கொள்கைகள்

ஜேர்மனிய, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எமது எதிர்ப்பு என்பது, நாம் புட்டினையும் அவர் கொள்கைகளையும் ஆதரிக்கிறோம் என்ற பொருளை தந்துவிடாது. அவை ஒவ்வொரு வகையிலும் பிற்போக்கானவை. அக்டோபர் புரட்சியின் வெற்றிகளை அழித்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் மரபை புட்டின் உருவகப்படுத்தியுள்ளார். சமூக சொத்துக்களை கொள்ளையடித்து, தொழிலாள வர்க்கத்தை வறிய நிலையில் தள்ளிய ரஷ்ய தன்னலக் குழுவினரை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

அவருடைய கொள்கைகள் ரஷ்ய தேசியவாதத்தை தூண்டுதல், இராணுவத்தை கட்டவிழ்த்தல் என்பவற்றுடன் மட்டுப்படுத்தப்படுகின்றன. சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்புவிடும் தகுதி முற்றிலும் இவருக்குக் கிடையாது. ஏகாதிபத்திய முதலாளிகள் அதற்கு அச்சப்படுவது போலவே இவரும் அச்சப்படுகின்றார். ஏகாதிபத்தியவாதிகளுடன் வாடிக்கையான வணிகத்திற்கு, குறிப்பாக ஜேர்மனியுடன், திரும்ப இவர் தீவிரமாக முயல்கின்றார்.

ஆனால் இதன் பொருள், ஜேர்மனிய சோசலிஸ்ட் மாற்றீடு (SAV) செய்வதுபோல் தற்போதைய மோதல் குறித்து நாம் பொருட்படுத்தவில்லை என்றோ அதை இரு ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையேயான மோதல் என்றோ கருதுகிறோம் என்பது அல்ல. ரஷ்யா ஒரு ஏகாதிபத்திய நாடு அல்ல.

இதன் வரலாற்று கட்டமைப்பிற்குள் இதன் தற்பொழுதைய நிகழ்வுகளை விளங்கிக்கொள்வது அவசியமாகும். 1917ல் ரஷ்யா ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு அரைக்காலனித்துவமாக வருவதா அல்லது முதலாளித்துவத்தை அகற்றுவதா என்ற மாற்றீடுகளை எதிர்கொண்டது. நாடுகளின் சுயநிர்ணய உரிமைகளை உத்தரவாதம் செய்த முறையில் போல்ஷிவிக்குகள் ஜாரிச பேரரசின் தனித்தனிப் பிரிவுகளை சோவியத் ஒன்றியத்தினுள் தேசிய சமத்துவம் என்னும் அடித்தளத்தில் ஐக்கியப்படுத்த  முடிந்தது.

ஸ்கோரோபட்ஸ்க்கி (Skoropadskyi) யின் சர்வாதிகாரம் வீழ்ந்தபின் நிறுவப்பட்ட சோவியத் உக்ரேன் அந்த நேரத்தில் உக்ரேனிய விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் மிக ஈர்ப்புமிக்க ஒன்றாக இருந்தது. அவர்கள் அப்போது போலந்து அல்லது வெளிநாட்டு ஆதிக்கத்தை காலிசியா அல்லது தற்பொழுதைய உக்ரேனில் பிற பகுதிகளில் கொண்டிருந்தனர். ஸ்ராலின், பெரும் ரஷ்ய பெரும்தேசியவாத கொள்கை மற்றும் அவருடைய அழிவுமிக்க கூட்டுப் பண்ணைக் கொள்கைக்கு திரும்பிய பின்னரே இந்த அனுதாபங்கள் அழிக்கப்பட்டு சோவியத் எதிர்ப்பு தேசிய இயக்கங்களுக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டது.

1991ல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு என்பது ரஷ்யா, உக்ரேன் இரண்டிலும் தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவு ஆகும். ஏகாதிபத்திய சக்திகள் உக்ரேனையும் ரஷ்யாவையும் ஒருவித அரைக்காலனித்துவ நிலைக்கு தாழ்த்த முடிந்தால் தற்போதைய தாக்குதலின் நோக்கம் அதுதான்ரஷ்ய மக்கள்மீது அது பேரழிவு தரும் பாதிப்பைக் கொடுக்கும். ஆனால் அத்தகைய போக்கை எதிர்த்து நாம் போரிடும் வழிவகைகள் முற்றிலும் புட்டினுடையவற்றிற்கு மாறானவை. நாம் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முன்மொழிகின்றோம். ரஷ்ய தேசியவாதத்தை பலப்படுத்துவதற்கு அல்ல.

சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகள்

அரசியல் நிலைமையும் அது முன்வைக்கும் பணிகளும் நம் சொந்த இயக்கத்தின் அனுபவத்தை மதிப்பீடுசெய்யாது அறிந்து கொள்ள முடியாது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பிரித்தானிய தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான உடைவில் இருந்து முக்கிய அபிவிருத்தியை கண்டுள்ளது. இன்று நாம் முற்றிலும் ஒருகாலத்தில் தம்மைஇடதுஎன்று விவரித்துக் கொண்டவர்களுக்கு எதிராக நிற்கின்றோம். அவர்களை நாம் சரியாகவேபோலி இடதுகள்என அழைக்கிறோம். போலிஎன்பதை வலியுறுத்துகிறோம், ஏனென்றால் அவர்கள் உண்மையில் வலதுசாரிகளின் சக்திகளாகும்.

மீண்டும் மீண்டும் நம் எதிரிகள் நம்மைகுறுங்குழுவாதிகள், தொழிலாள வர்க்கத்திற்குள் போராடுவதற்குப் பதிலாக இணைய தள ஆசிரியர் பணியில் மட்டும் ஈடுபடுத்திக் கொள்ளுகிறோம் மற்றும் அதுபோன்று வேறுபலவற்றை கூறுகின்றனர். (பிந்தையது அவதூறானது, ஏனெனில் நாம் எப்பொழுதும் நம் அரசியல் முன்னோக்கை தொழிலாள வர்க்கத்திற்கு திட்டமிட்டபடி கொண்டுசெல்கின்றோம், இதை தொடர்ந்தும் செய்வோம்). ஆனால் நம் அரசியல் விரோதிகள்போல் இல்லாமல் நாம் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச கட்சியை நிறுவுவதற்கு நன்கு திட்டமிடப்பட்ட மார்க்சிச வேலைத்திட்டம் தேவை என்று வலியுறுத்துகிறோம். இதேவேளை தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவதற்கு, புரட்சிகர இயக்கத்தின் மீது முதலாளித்துவத்தாலும் மற்றும் குட்டி முதலாளித்துவ போக்குகளாலும் பிரயோகிக்கப்படும் அரசியல் மற்றும் சித்தாந்த அழுத்தங்களுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டம் தேவை.

இந்த விதத்தில் நாம் கடந்த ஆண்டில் முக்கியமான முன்னேற்றத்தை செய்துள்ளோம். இது நம்மை தொழிலாள வர்க்கத்துடன நெருக்கமான உறவிற்கு கொண்டுவந்துள்ளது. அதே நேரத்தில் மத்தியதர வகுப்பு மற்றும் போலி இடது அமைப்புக்கள் ஏகாதிபத்திய முகாமினுள் நகர்ந்துவிட்டன. இந்த மாற்றம் தற்போதைய அரசியல் நிலையின் மிக முக்கியமான கூறுபாடுகளில் ஒன்றாகும்.

கூட்டாட்சி அரசாங்கத்தில் பங்கு பெற்று, கொசோவோ போருக்கு ஆதரவு கொடுத்த வகையில், பசுமைவாதிகள் தங்களை அமைதிவாத நிலையில் இருந்து ஏகாதிபத்திய போர்கட்சி என்று 1999லேயே மாற்றிக் கொண்டுவிட்டது. இப்பொழுது அவர்கள் மோசமான போர் வெறியர்களாக உள்ளனர்.

Heinrich Boll Foundation அமைப்பின் ஒரு சமீபத்திய கூட்டத்தில், ஜொஷ்கா பிஷ்ஸர் ஊகவணிகர் ஜோர்ஜ் சோரோஸைச் சந்தித்தார். அவர் உக்ரேனில் 2004ம் ஆண்டு ஆரஞ்சு புரட்சிக்கு நிதியளித்தவராவார். இருவரும் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கல் உடைய கொள்கைகள் பற்றிய பாராட்டுதலில் ஒரே கருத்தை கொண்டிருந்தனர். ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பசுமைவாதிகளின் தலைவரான ரெபெக்கா ஹார்ம்ஸ், கியேவில் மைதான் ஆர்ப்பாட்டங்களில் வாடிக்கையாக CDU இன் கிளர்ச்சிக்காரர் எல்மார் புரோக் உடன் பங்கு பெற்றார்.

பசுமைக் கட்சி அரசியல் வாதியும் முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் குடியுரிமைப் பிரச்சாரகருமான வெர்னர் ஷூல்ஸ், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினைகுற்றவாளி, படையெடுப்பாளர், போர் வெறியர், மன உளைச்சலற்ற அதிகாரம் விரும்பும் அரசியல்வாதி என்று கண்டித்தார். அவர் Federation of Expellees (BdV), உடைய தலைவர் எரிக்கா ஸ்டீன்பாக்குடன் ஒரு செல்வாக்கான தொலைக்காட்சி பேச்சு நிகழ்வில் சேர்ந்து, தீவிர வலதுசாரி CDU அரசியல்வாதியுடன் ஒவ்வொரு விடயத்திலும் உடன்பட்டார்.

இதே போக்கு இப்பொழுது போலி இடது முகாமிலும் காணப்படலாம். L’Hebdo Anticapitaliste என்னும் பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் (NPA) வாராந்திர செய்தித்தாள் கடந்த வாரம் ஒரு கட்டுரையை வெளியிட்டது. இது Le Figaro அல்லது Frankfurter Allgemeine Zeitung (FAZ) என்ற இரு இதழ்களிலும் எளிதில் இடம் பெற்றிருக்கலாம். அதில்ஒரு இராணுவ படையெடுப்பை தொடர்ந்து துப்பாக்கி முனையில் வாக்கெடுப்பையும் தொடர்ந்து, புட்டினின் கிரிமியாவில் ஆட்சிமாற்றம்குறைந்தபட்சம் தற்போதைக்கேனும் வெற்றி பெற்றுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த இணைப்பு அவர்களுடைய ஆதரவு நபரான யானுகோவிச்சை கவிழ்த்த மைதானின் செல்வாக்கு பெற்ற ஜனநாயக எழுச்சிக்கு ரஷ்ய அதிகாரத்தின் பிரதிபலிப்பாகும். மாஸ்கோ தனது அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதையே அனைத்தும் காட்டுகின்றதுஎன எழுதியுள்ளது.

உக்ரேன் நெருக்கடி: புருஸ்ஸல்ஸோ மாஸ்கோவோ அல்லஎன்ற தலைப்பில் எழுதிய ஜேர்மனிய சோசலிஸ்ட் மாற்றீடு (SAV) அறிவிக்கிறது: இதைப் பற்றி ஐயம் ஏதும் இல்லை! முதலில் ஜனாதிபதி புட்டின் ஊழல் மிகுந்த உக்ரேனிய அரசாங்கத் தலைவர் யானுகோவிச்சிற்கு ஆதரவு கொடுத்தார். இப்பொழுது அவர் கிரிமியாலில் 6,000 படையினரை நிறுத்தியுள்ளது மாஸ்கோவின் அதிகாரம் செல்வாக்கை தக்க வைப்பதற்கு மட்டுமே.SAV ரஷ்யாவை ஒரு ஏகாதிபத்திய சக்தி என்று குறிப்பிட்டு, உக்ரேனில் நடைபெறும் மோதலை இரண்டு ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையேயான மோதல் என்று விவரிக்கிறது.

SAV சேர்ந்துள்ள கட்சியான இடது கட்சியின் நிர்வாகக் குழு உத்தியோகபூர்வ அறிக்கையில் கிரிமியாவில் ரஷ்ய கூட்டமைப்பின் நடவடிக்கைகள்சர்வதேச சட்டத்திற்கு எதிரானவைஎன்று கூறி ரஷ்யாவைமோதல் போக்கிற்காக கண்டித்துள்ளது.

சமூக ஜனநாயகவாதிகள், பசுமைவாதிகள், இடது கட்சி மற்றும் போலி இடது ஆதரவாளர்களால் காட்டப்படும் போருக்கான வேட்கை, தொழிலாள வர்க்கம் மற்றும் மக்களின் பரந்த பிரிவுகளுடைய உணர்வுகளுக்கு முற்றிலும் எதிரானதாகும். அனைத்து கருத்துக் கணிப்புக்களும், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை சுமத்துவதை பெரும்பாலான மக்கள் எதிர்க்கின்றனர் எனக் காட்டுகின்றன. இவர்கள் இராணுவத் தலையீட்டை கடுமையாக நிராகரிப்பதுடன், மைதானில் பாசிசவாதிகள் இருந்ததால் சீற்றம் கொண்டுள்ளனர் என்பதை காட்டுவதுடன், அதனால் கிரிமியாவை ரஷ்யா இணைத்துள்ளதற்கு பரிவுணர்வு காட்டுகின்றனர்.

செய்தி ஊடகத்தினர், ரஷ்யாவிற்கு எதிராக தங்கள் போர் வெறியில் உச்சக்கட்டக் குரலை ஏற்றுள்ளனர்; ஏனெனில் மக்களிடையே அவர்களின் முரசொலி அதிகம் எடுபடவில்லை என்பதை அவர்கள் நன்கு அறிந்துள்ளனர்.

கடந்த வாரம் Berliner Zeitung வெளிப்படையாகஜேர்மனிய செய்தித்தாட்களும் வானொலி நிலையங்களும் ஏராளமான கடிதங்களையும் வாசகர் கருத்துக்களையும் அவற்றின் ஒருதலைப்பட்ச தகவலை புகார் கூறி பெற்றுவருகின்றன. செய்தி ஊடகம்ரஷ்யாவை தாக்குகிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது. முக்கியமான எதிர்மறை விளைவுகளும் வாசகர் கருத்துக்களில் இணைய தளங்களில் காணப்படலாம். உதாரணம், ஜேர்மனிய தொலைக்காட்சி Tagesschau இன் இணைய தளம்.

இது, இடது கட்சி மற்றும் குட்டி முதலாளித்துவ, போலி இடது போக்குகளுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு நெருக்கமாக நாம் வந்துள்ளோம் என்பதைக் காட்டுகிறது. கடந்த ஆண்டு நாம் இடது கட்சி மற்றும் அதன் போலி இடது துணைக் கட்சிகளுக்கு எதிராக முக்கியமான முன்னேற்றங்களை செய்திருந்தோம். இப்பொழுது அவர்கள் ஏகாதிபத்திய முகாமில் உள்ளனர். நாம் தொழிலாள வர்க்கத்தின் தேவைகள் மற்றும் நலன்களை வெளிப்படுத்துகின்றோம்.

மார்க்சிச-எதிர்ப்பு கருத்துருக்களுக்கு எதிரான போராட்டம்

இப்போக்குகளுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பிரச்சினை பின்நவீனத்துவ, பின்-அமைப்பிய (post-structuralist) இன்னும் பிற மார்க்சிச எதிர்ப்புக் கருத்துக்களின் மீதான தாக்குதல் கருத்துக்களை தீவிரப்படுத்துதல் ஆகும்; இவை பல ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களில் முறையாக வளர்க்கப்படுகின்றன.

ஸ்ரைனர் மற்றும் பிரென்னருடன் இப்பிரச்சினை குறித்து நாம் எடுத்த முக்கியமான நடவடிக்கையை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். (see மார்சிசம் & வரலாறு மற்றும் சோசலிச நனவு மற்றும் The Political and Intellectual Odyssey of Alex Steiner). அப்பொழுது முதல், சமூகத்தைப் பற்றிய எத்தகைய அறிவியல் சார்ந்த உணர்வை கொள்வதில் இத்தாக்குதல் பங்கு, குட்டி முதலாளித்துவ அடுக்குகள் வலதுபுறம் சாய்வதை பெருகிய முறையில் தெளிவாகியுள்ளது.

ஜனவரி மாதம் ஷெபீல்டில் டேவிட் ஹைலாண்டிற்கு கொடுத்த புகழாரத்தில் டேவிட் நோர்த் பிரித்தானிய சோசலிஸ்ட் லேபர் லீக்/தொழிலாளர் புரட்சிக் கட்சி (SLL/WRP) 1971ல் பிரெஞ்சு OCI உடன் முறித்துக் கொண்டதற்கு முக்கியமாக இருந்த அரசியல் முன்னோக்கு பிரச்சினைகளை தெளிவுபடுத்தாமல் போனதற்கு அதிக விலை கொடுத்தது என்று சுட்டிக்காட்டினார். இப்பிரச்சினைகளை தவிர்த்தது என்பதின் பொருள் பிரான்சில் மே-ஜூன் 1968ல் நிகழ்ந்த பெரிய நிகழ்வுகளில் இருந்து வெளிப்பட்ட சர்வதேச புரட்சிகர மூலோபாத்தின் முக்கிய பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டன என்பதாகும். இவை சரியாக கருதப்படவில்லை, அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டத்தில் இணைக்கப்படவும் இல்லைஎன்றார் அவர்.

பிரெஞ்சு அமைப்புடன் முரண்பாட்டில் மற்றொரு கூறுபாடும் இருந்தது. அதன் முக்கியத்துவத்தை SLL உணரவில்லை. நோர்த் தொடர்ந்தார்: கிட்டத்தட்ட இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததில் இருந்து, பிரெஞ்சு புத்திஜீவிகள் மார்க்சிசத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் உள்ளனர். நாஜிக்களுடன் இழிந்த ஒத்துழைப்பால் ஜேர்மனியில் குறைமதிப்பிற்கு உட்பட்டாலும், ஹெய்டெக்கர் பிரான்சில் பல ஆதரவாளர்களை கொண்டிருந்தார். பிரெஞ்சு புத்திஜீவிகளுக்கு இடையே இருத்தலியல் (Existentialism) பெரும் பரபரப்பாக இருந்தது.

1968 மே-ஜூன் எழுச்சிகளுக்குப்பின், சோசலிசப் புரட்சி என்னும் ஆவி குறித்துப்பீதி அடைந்த பிரெஞ்சு புத்திஜீவிகள் மற்றும் மாணவ இளைஞர்களின் பெரும்பிரிவுகளில் பல, முன்பு தாங்கள் மார்க்சிசத்துடன் கொண்டருந்த உறவுகள் அனைத்தையும் துண்டித்தன. 1968க்குப் பிந்தைய அறிவுஜீவித பிற்போக்கு சூழலில் சார்த்தரே கூட மார்க்சிசத்துடன் நெருக்கமான சமரசத்தைக் கொண்டார். கோட்பாட்டு பகுத்தறிவிற்கு ஒவ்வாத புதிய தலைமுறை முன்னணிக்கு வந்தது. லியோத்தார், ஃபூக்கோவின் சகாப்தம் உதயமாயிற்று. OCI உடன் முறித்துக் கொண்டபின், SLL இப்போக்குகள் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை, புரட்சிக் கட்சி தத்துவார்த்த, அரசியல் பணியின் தொலை விளைவு தரும் அவற்றின் உட்குறிப்புக்களை பற்றி தெரிந்திருக்கவில்லை.

ஹம்போல்ட் பல்கலைகழகத்தில் ரோபர்ட் சேர்வீஸ் வருகையில் நாம் தலையிட்டது இப்போக்குகளுக்கு எதிராக ஒரு பெரிய சாதனையாகும். பகுத்தறிவிற்கு ஒவ்வாமை, முறையாக லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் அக்டோபர் புரட்சி மீது தாக்குதல், ஜேர்மனிய ஏகாதிபத்தியம் (நாஜிசம் உட்பட) என்னும் கொள்கைகளுக்கு இடையே உள்ள தொடர்பை தெளிவுபடுத்துவதில் நாம வெற்றி அடைந்தோம்; அதேபோல் தற்போதைய ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கை குறித்ததிலும் மாணவர்கள், தொழிலாளர்கள் என்னும் பரந்த பிரிவுகளுக்கு இந்த புரிதலை தெரிவிப்பதிலும் வெற்றி கொண்டுள்ளோம்.

நாம் ஒரு பகிரங்க கடிதத்தில் எழுதியபடி பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி ஹம்போல்ட் பல்கைலக் கழக அரங்கில் அவருடைய ட்ரொட்ஸ்கி வாழ்க்கை நூல் பற்றிப் பேச சேர்வீஸுக்கு விடுத்த அழைப்பு என்பது ஒருபுத்திஜீவித ஆத்திரமூட்டல்ஆகும். டேவிட் நோர்த்தின் நூல் In Defense of Leon Trotsky, அதைப் பற்றிய Bertrand Patenaude உடையஆய்வு American Historical Reviewe வில்,14 வரலாற்றாளர்கள் Sukrkamp வெளியீட்டு நிறுவனத்திற்கு எழுதிய கடிதம், அதற்கு விடையிறுக்க சேர்வீஸ் மறுத்தது, ஆகியவை அவரை ஒரு வரலாற்றாளர் என்ற நிலைப்பாட்டில் முற்றிலும் இழிவு படுத்தின.

இத்தகைய வரவழைப்பை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள தயாராக இருக்கவில்லை. IYSSE உறுப்பினர் ஸ்வென் ஹேமன் நம் நிலைப்பாட்டை ஹம்போல்ட் பலகலைக்கழகத்தில IYSSE நடத்திய வெற்றிகரமான கூட்டத்தில் நியாயப்படுத்தினார்: இந்த வரவழைப்பை புறக்கணிப்பது பெரும் அறிவார்ந்த தவறாகிவிடும் என்பது மட்டுமின்றி, அரசியல், அறநெறியிலும் தவறாகிவிடும். 20ம் நூற்றாண்டின் அடிப்படை வரலாற்றுப் பிரச்சனைகளுடன் அது தொடர்பு கொண்டிருக்கையில் புறக்கணிக்கப்படக்கூடாது. அரசியல் மற்றும் வரலாற்றில் பொய்கள் என்பது பரந்த நோக்குடைய தாக்கங்களைக் கொண்டவைஎன்றார்.

Der Spiegel இதழில் வெளிவந்த கட்டுரை ஒன்று அதே வாரம் இப்பிரச்சினைகளுக்கு இடையே உள்ள உறவை வெளிப்படுத்திக்காட்டியது. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் பங்கு எப்படி மறுவாழ்வைப் பெற்றது என்பது குறித்து அதில் கூறப்பட்டிருந்த்து. குறிப்பாக பார்பெரோவ்ஸ்கியையும் அவருடைய பேராசிரிய சக ஊழியர் ஹெர்பிரைட் முங்களர் மற்றும் ஏர்னெஸ்ட் நோல்ட பற்றியும் குறிப்பிட்டது; ஏர்னெஸ்ட் நோல்ட 1986ல் நாஜிசத்தை குறைமதிப்பற்கு உட்படுத்திய வரலாற்றாளர்கள் எனப்படுவோரின் மோதலை ஆரம்பித்து வைத்தவராவர். Der Spigel கருத்துப்படிநோல்ட மீது தவறு இழைக்கப்பட்டது. அவர் வரலாற்றளவில் கூறியது சரிதான்என்று பார்பெரோவ்ஸ்கி மேற்கோளிட்டார். ஹிட்லர் மனநோயாளி அல்ல, கொடூரமானவரும் அல்ல. தன்னுடைய சாப்பாட்டு மேசையில் அவர் யூதர்கள் படுகொலையைப் பற்றி பேச விரும்பியவில்லை.

IYSSE இனர், பல துண்டுப்பிரசுரங்களின் மூலம் சேர்வீஸ் அழைக்கப்பட்டதன் பின்னணி குறித்து மாணவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டபின், நிகழ்வு பெரும் தோல்வியில் முடிவுற்றது. பார்பெரோவ்ஸ்கி மற்றும் சேர்வீசுக்கு புத்திஜீவித தோல்வியை ஒப்புக் கொண்டதைப் போல ஆயிற்று. முன்ன்றிவிப்பு இல்லாமல் கூட்டம் இரத்து செய்யப்பட்டு, இரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டது. திறனாயும் கேள்விகளை எழுப்ப மாட்டார்கள் என்று கருதப்பட்டவர்களுக்கு மட்டுமே உள்ளே நுழைய அனுமதி கொடுக்கப்பட்டது. டேவிட் நோர்த் ஒதுக்கப்பட்டார், அதேபோல் போஸ்ட்டாம் வரலாற்றாளர் மரியோ கெஸ்லெருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. இவரும் 14 வரலாற்றாளர்கள் எழுதிய கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தார். ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் விமர்சனரீதியான மாணவர்களும் ஒதுக்கப்பட்டனர்.

பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எழுதிய எதிர்ப்புக் கடிதத்தில் நாம் கூறினோம்: “பார்பெரோவ்ஸ்கியின் நடத்தை ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதலாக இருந்தது என்பதோடு ஒரு கல்வி நிறுவனத்திற்குப் பொருத்தமான நடத்தையின் அத்தனை நிர்ணயங்களையும் மீறியதாக இருந்தது. ஒரு புத்தகத்தை விமர்சனம் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மாணவர்களையும் வரலாற்றாசிரியர்களையும் அவரது கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் அனுமதிக்க மறுத்தார்! அவமதிப்பைச் சம்பாதித்த சேர்விஸின் படைப்பு சவாலைச் சந்திக்கக் கூடாது என்பதை உறுதி செய்து கொள்ள விரும்பிய பார்பெரோவ்ஸ்கி அதற்காக பல்கலைக்கழகத்தின் சுதந்திரமான வெளிப்பாட்டின் மீது தாக்குதலைத் தொடுத்தார். தனது நடவடிக்கையின் மூலமாக பார்பெரோவ்ஸ்கி அரசியல் தணிக்கைக்கு ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கித் தந்திருக்கிறார்.”

வரலாற்றின் தவறானதொரு சித்தரிப்பை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகள் ஜேர்மன் வரலாற்றின் ஒரு அதிமுக்கியமான சமயத்தில் வருகின்றன. ஜேர்மனியின் பல தசாப்த கால இராணுவ ஒதுங்கலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரமிது என்று சமீபத்தில் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையரும் சமீப காலங்களில் கூறிவருவதன் உள்ளடக்கத்தில் நிறுத்தி இத்தகைய  முயற்சிகளைப் பார்க்க வேண்டும். ஜேர்மன் இராணுவவாதத்திற்கு புத்துயிரூட்ட நாஜி சகாப்த குற்றங்களை தணித்துக் காட்டுகின்ற வகையில் வரலாற்றுக்கு ஒரு புதிய பொருள்விளக்கம் அளிக்க அவர்களுக்கு அவசியமாய் இருக்கிறது.

கடிதம் கூறுகிறது: “வரலாற்றின் தவறானதொரு சித்தரிப்பை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகள் ஜேர்மன் வரலாற்றின் ஒரு அதிமுக்கியமான சமயத்தில் வருகின்றன. ஜேர்மனியின் பல தசாப்த கால இராணுவ ஒதுங்கலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரமிது என்று சமீபத்தில் ஜனாதிபதி Joachim Gauck கும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையரும் சமீப காலங்களில் கூறிவருவதன் உள்ளடக்கத்தில் நிறுத்தி இத்தகைய  முயற்சிகளைப் பார்க்க வேண்டும். ஜேர்மன் இராணுவவாதத்திற்கு புத்துயிரூட்ட நாஜி சகாப்த குற்றங்களை தணித்துக் காட்டுகின்ற வகையில் வரலாற்றுக்கு ஒரு புதிய பொருள்விளக்கம் அளிக்க அவர்களுக்கு அவசியமாய் இருக்கிறது. குறிப்பிட்ட கொள்கைக்கு என குறிப்பிட்ட வழிவகைகளும் அவசியமாய் உள்ளன. எதிர்ப்பை அச்சுறுத்துவது மற்றும் அடக்குவதன் மூலமாக மட்டுமே இவ்வாறு வரலாற்றைத் திருத்தி எழுத முடியும் என்று முடிவுக்கு வந்திருப்பதையே பிப்ரவரி 12 அன்றான பார்பெரோவ்ஸ்கியின் நடத்தை காட்டியிருக்கிறது.”

ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் நாம் தலையிட்டதின் வெற்றி, எமது முன்னோக்குகள் மற்றும் எமது கட்சியின் வலிமையை நிரூபிக்கிறது. வலதுசாரிப் போக்கின் உத்தயோகபூர்வக் கொள்கை மற்றும் கருத்தியலை நாம் சவாலுக்குட்படுத்தினால் அது சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும். இது தற்போதைய போர்வெறிக்கும் பொருந்தும். எனவே ஐரோப்பியத் தேர்தல்கள் வரை நாம் வரவிருக்கும் வாரங்களை ஊக்கத்துடன் இதற்கு எதிராகப் போராட பயன்படுத்த வேண்டும்.

இப்பிரச்சினையை, நாம் நம் பிரச்சாரத்தின் மையத்தில் இருத்துவோம், நம் தொலைக்காட்சி உரைகளில், தேர்தல் சந்திப்புக்களில் கவனம் காட்டுவோம். இதைப்பற்றி WSWS ல் அன்றாடக் கட்டுரைகளை வெளியிடுவோம், புதிய போக்குகளைப் பகுப்பாராய்வோம், நம் அரசியல் விரோதிகளுக்கு எதிராக கருத்து விவாதங்களில் ஈடுபடுவோம். பல்கலைக்கழகங்களில் நம் கருத்தியல் தாக்குதலை தொடர்வோம். ஐரோப்பா முழுவதும் சோசலிச சமத்துவ கட்சி (PSG) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தை இவ்வகையில் அடையும் என நாம் நம்புகிறோம்.