தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா Brazil marks 50 years since US-backed coup அமெரிக்க ஆதரவுடனான பிரேசில் ஆட்சிசதியின் 50வது ஆண்டு
By Bill Van Auken Use this version to print| Send feedback இந்த வாரம், பிரேசிலில் 1964 ஏப்ரல் 1இல் நடைபெற்ற இராணுவ ஆட்சிசதியின் 50 ஆவது ஆண்டாகும். இது இலத்தின் அமெரிக்காவின் மிகப்பெரிய நாட்டை 21 ஆண்டுகள் மிருகத்தனமான சர்வாதிகாரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிகழ்வுகள் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை CIA, வெளிவிவகாரத்துறை, பென்டகன் மற்றும் ஜோன் எப். கென்னெடி, லிண்டன் பி. ஜோன்சனின் ஆகிய இருவரின் தலைமையிலான வெள்ளை மாளிகை ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டன. 50 ஆண்டுகளுக்கு முன் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரத்தை நினைவுகூரவும் அதனால் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கானோரை கௌரவிக்குமுகமாகவும் ஒரு தொடர் கலந்துரையாடல்கள், காட்சிக்கூடங்கள், கூட்டங்கள் என்பன நடாத்தப்பட்டன. அத்துடன் பிரேசிலின் தொழிலாளர் கட்சி (PT) இன் தலைவர் டில்மா ரூசெப் (இவரும் சிறையிலிடப்பட்டு அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரத்தால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்) இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் தொலைக்காட்சி உரை ஒன்றை நிகழ்த்தி நாட்டு மக்களிடம் “என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று வலியுறுத்தி பிரேசிலின் மக்கள் “அக்காலத்தைப் பற்றி அறிந்து அதில் இருந்து கற்றுக்கொள்ளலாம், ஏனெனில் நாம் அதை கடந்துவந்து விட்டோம்” என்றார். இதற்கிடையில் அவருடைய நீதி மந்திரி ஜோஸே எடுவார்டோ கார்டோசோ பிரேசிலின் அரசாங்கத்தின் சார்பாக, “சர்வாதிகாரத்தின் கீழ் நடைபெற்ற இறப்புக்கள், சிந்திரவதைகளுக்கு” உத்தியோகபூர்வ மன்னிப்புக்கோரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த பொதுவான மன்னிப்புக்கோரல் ரூசெப்பின் கூற்றான 1964 நிகழ்வுகள் “கடந்துவந்துவிட்டோம்” என்பதை பொய்யாக்கி தற்போதைய பிரேசில் அரசாங்கம் மற்றும் 29 ஆண்டுகளுக்கு முன் மக்கள் ஆட்சிக்கு அதிகாரத்தை கொடுத்த அதன் அடக்குமுறை அமைப்புடைய அடிப்படை தொடர்ச்சியை எடுத்துக்காட்ட உதவுகிறது. 10 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர் கட்சியின் ஆட்சி உட்பட தொடர்ச்சியாக பதவிக்கு வந்த அரசாங்கங்கள் பதவிக்காலம் முழுவதும் 1979இல் ஆளும் இராணுவக்குழு புகுத்திய ஒரு பரந்த பொதுமன்னிப்பை நடைமுறைப்படுத்தின. இப்பொதுமன்னிப்பின் கீழ் ஒரு இராணுவ அல்லது பொலிஸ் அதிகாரிகூட இராணுவ ஆட்சியின்கீழ் நடைபெற்ற குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பது மறுக்கப்பட்டுவிட்டது. சர்வாதிகாரத்தின் குற்றவாளிகள் அனுபவிக்கும் தண்டனை விதிவிலக்கு பற்றிய மனத்தை உறைய வைக்கும் நிரூபணம் நினைவு நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஓய்வு பெற்ற பிரேசிலின் இராணுவ தளபதி ஒருவர் ரூசெப்பின்கீழ் நியமிக்கப்பட்ட உண்மையறியும் குழுக்கள் எனப்பட்ட ஒன்றிற்கு கொடுத்த சாட்சியத்தில் வெளிவந்தது. இந்த முன்னாள் அதிகாரி பௌலோ மால்ஹேஸ், ரியோ டி ஜெனிரோவிற்கு வடக்கே உள்ள பெட்ரோபொலிஸ் என்னும் சிறு நகரில் இருந்த “மரண இல்லம்” என்று அறியப்பட்ட தான் பொறுப்பாக இருந்த இரகசிய சித்திரவதை முகாமில் நடந்த செயல்கள் பற்றிய விவரத்தை விசாரணைக்குழுவிற்கு விளக்கினார். எவ்வாறு நீடித்த சித்திரவதைக்குப்பின் அரசியல் கைதிகள் தூக்கிலிடப்படுவர். தான் பின் அவர்களுடைய விரல்களை முறையாக அறுத்து, பற்களை உடைத்து அவர்களுடைய உடல்கள் ஒருபொழுதும் அடையாளம் காணப்பட முடியாதிருக்க செய்யப்பட்டன என்பதை விளக்கினார். “அவர் சிறிதும் மனவருத்தம் காட்டவில்லை” என்று சாட்சியத்தை பதிவுசெய்த ரியோவின் உண்மை அறியும் குழுவின் வக்கீலான நதீன் போர்கெஸ் பின்வருமாறு கூறினார். “அப்பொழுது ஒரு கம்யூனிச எதிர்ப்புப் போராட்டம் இருந்தது, தீமைக்கு எதிராக நன்மையின் மற்றும் போர் என்பது ஒரு போர்... என்று அவர் கூறினார். உண்மைகளை துல்லியமாக அவர் கூறியது பற்றியும், இராணுவ தலைமையாக அவர் பணியாற்றி குறித்து பெருமிதப்பட்டது குறித்து நான் வியப்படைந்தேன்.” சர்வாதிகாரத்தால் கொலையுண்டவர்கள் 486 என அடையாளம் கண்டதாக பிரேசில் உத்தியோகபூர்வமாக பட்டியிலிடப்பட்டருக்கையில், பல ஆயிரக்கணக்கானவர்கள் இராணுவ ஆட்சியின் கீழ் “மறைந்து போயினர்”. 100,000த்திற்கும் மேலானவர்கள் அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டனர், குறைந்தபட்சம் 50,000 பேர் சித்தரவதைக்கு உட்பட்டனர். பிரேசிலிய தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் மீதான மிருகத்தன அடக்குமுறை, அமெரிக்க அராசங்கத்தின் முழு ஆதரவு மற்றும் நெருக்கமான ஈடுபாட்டுடனும் கட்டவிழ்த்துவிடப்பட்டது. மார்ச் 27, 1964ல், ஆட்சிசதிக்கு சில நாட்கள் முன்பு வாஷிங்டனில் உள்ள வெளிவிவகாரத்துறைக்கு அனுப்பப்பட்ட தந்தி ஒன்றில் அமெரிக்கத் தூதுவர் லிங்கன் கோர்டன், பிரேசிலின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஜோவோ “ஜாங்கோ” கௌலார்ட்டின் அரசாங்கம் தூக்கிவீசப்பட்டதில் அமெரிக்க ஈடுபாட்டின் ஆழத்தையும் மற்றும் வாஷிங்டன் தன் நோக்கத்தை சாதிக்க எந்த அளவிற்கு செல்ல தயாரித்து இருந்தது என்பதையும் காட்டுகிறது. செல்வம் படைத்த, நில உரிமையுடைய குடும்பத்தில் தோன்றிய கௌலார்ட் வாஷிங்டனுக்கு ஆத்திரமூட்டும் வகையில் தொடர்ச்சியான சீர்திருத்த நடவடிக்கைகளை செயல்படுத்தினார். இதில் ITI உடைய துணை நிறுவனம் ஒன்று தேசியமயமாக்கப்பட்டது, பல எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தேசியமயமாக்கப்பட்டது, வெளிநாட்டு நிறுவனங்கள் இலாபங்களை தம் நாட்டிற்கு அனுப்பவதில் விதிக்கப்பட்ட வரம்பு மற்றும் நிலச்சீர்திருத்த திட்டம் ஆகியவை அடங்கும். அவர் கியூபாவிற்கு எதிரான அமெரிக்க பொருளாதாரத் தடைகளையும் எதிர்த்தார். தூதுவர் கோர்டன் ஆட்சிசதியின் சாத்தியமான விளைவுகள் குடிமக்களுக்கு எதிராக இராணுவம் பயன்படுத்தப்படும் “தெளிவாக உள்நாட்டுப்போரையும் உள்ளடக்கியிருந்தது” என்பதை ஒப்புக்கொண்டார். இத்தகைய ஒரு இரத்தம்சிந்துதலை பிரேசில் “1960களில் சீனாவாக” மாற்றுவதைத் தடுக்கும் என்பதால் நியாயப்படுத்தப்பட்டது என்று அவர் வாதிட்டார். கௌலாட்டால் இராணுவத் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட தளபதி ஹும்பெர்டோ காஸ்டெல்லோ பிரங்கோ தலைமையில் நடந்த ஒரு இராணுவ ஆட்சிசதிக்கு கோர்டன் ஆதரவு அளிக்குமாறு வலியுறுத்தினார். காஸ்டெல்லோ பிரங்கோ பிரேசிலில் இருந்த அமெரிக்க இராணுவப்பிரிவினால், அப்பொழுது கேர்னலாக இருந்த வெர்னோன் வால்டர்ஸால் தேர்ந்தெடுக்கப்பட்டார். வால்ட்டர்ஸ் இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலியில் போரிட அனுப்பப்பட்ட பிரேசிலின் கிளர்ச்சிக்கு சார்பான படைகளின் பிரேசிலிய தளபதிகளுடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்தார். பிரேசிலில் ஆட்சிசதியின் வெற்றிக்குப்பின், வால்டர்ஸ் ஜெனரலாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டார். பின்னர் 1970களில் CIA உடைய துணைஇயக்குனராகவும், 1980களில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க தூதராகவும் நியமிக்கப்பட்டார். கோர்டனின் தந்தி, ஜோன்சன் நிர்வாகத்தை “இரகசியமாக ஆயுதங்களை”யும் எரிபொருள் வழங்குதலையும் ஆட்சிசதியின் படைகளுக்கு கொடுக்க வலியுறுத்தினார். அதே நேரத்தில் “வெளிப்படையான தலையீட்டை” தயார்செய்ய அமெரிக்க கடற்படை பிரிவுடன் மரைன்களின் ஒரு பிரிவை பிரேசிலின் கடலோரத்திற்கு அனுப்புமாறும் கேட்டுக்கொண்டார். அவர் பிரேசிலின் தொழிலாள வர்க்கத்தின் “பொது வேலைநிறுத்த முயற்சிகள்” ஒருவேளை வரக்கூடும் என்றும் குறிப்பாக எச்சரித்தார். பிரேசிலில் உள்ள தூதரகம் “துணை நடவடிக்கைகளுடன் நம்மிடமுள்ள வளங்களையும் எதிர்தரப்புப் படைகளை பலப்படுத்த உதவ பயன்படுத்தும்” என்றார். இவற்றில் “இரகசியமாக ஜனாநாயக சார்பு தெரு அணிவகுப்புக்களுக்கு ஆதரவும் மற்றும் “ காங்கிரசில், ஆயுதப்படைகளில், நட்புடைய தொழிலாள வர்க்க, மாணவர் குழுக்கள், திருச்சபை, வியாபாரப்பிரிவில்” இருக்கும் ஜனநாயக, கம்யூனிச எதிர்ப்பு உணர்வு ஊக்குவிக்கப்படுவது ஆகியவை அடங்கும் என்றார். உண்மையில் “இந்த துணை நடவடிக்கைகள்” கௌலாரட் 1961ல் ஜனாதிபதியானதில் இருந்தே நடைபெற்று வந்தன. 1963ல் ஜனாதிபதி கென்னடி அத்தகைய ஆட்சிசதிக்கு பச்சை விளக்கு காட்டியிருந்தார். பல மில்லியன் டாலர்கள் அந்நாட்டில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்களை விலைக்கு வாங்கவும், CIA பொறுக்கி எடுத்த வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தவும் செலவழிக்கப்பட்டன. அமெரிக்க உளவுத்துறை அமைப்பு, AFL-CIO தொழிற்சங்க அதிகாரத்துவம் ஊடாக பிரேசிலில் வலதுசாரித் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரை தேர்ந்தெடுத்து பயிற்சியளித்து சதியின் திட்டமிடலுக்கு ஆதரவளித்தது. மேலும் அமெரிக்க முகவர்கள் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்தை நடத்தவும் வலதுசாரி ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் உழைத்தனர். கோர்டனின் பரிந்துரைகளை பொறுத்தவரை, அவை அனைத்தும் ஜோன்சன் நிர்வாகத்தால் ஏற்கப்பட்டன. இவை Brother Sam நடவடிக்கை என பின்னர் அழைக்கப்பட்டது. ஒரு விமானத்தை ஏற்றிய கடற்படைக்குழு தென் அட்லான்டிக்கிற்கு எண்ணெய் விநியோகங்கள் ஏற்றிய தாங்கிகளுடன் அனுப்பப்பட்டது. இதைத்தவிர 110 டன்கள் ஆயுதங்கள், CS வாயு, 12-gauge சுடுதுப்பாக்கிகள் மற்றும் கலக எதிர்ப்புக் கருவிகள் ஆகியவையும் அடங்கியிருந்தன. இவை பிரேசிலுக்கு விமானம் மூலம் அனுப்புவதற்கு நியூஜேர்சியிலுள்ள McGuire விமானப் படைத் தளத்தில் குவிக்கப்பட்டன. இறுதியில், வெளிப்படையான தலையீடு தேவைப்படவில்லை. ஏனெனில் ஏகாதிபத்தியம் மற்றும் பிரேசிலிய ஆளும் வர்க்கத்தின் ஆணைகளுக்குப் பணிந்து கௌலார்ட் ஆட்சிசதியை எதிர்க்கத்தவறி ரியோவை விட்டு நீங்கி தெற்கு மாநிலமான ரியோ கிராண்ட டோ சல்லுக்கு தன் பண்ணை வீட்டிற்கு சென்று அதன் பின் நாட்டை விட்டு வெளியேறிய முதலில் உருகுவேயிற்கும் பின்னர் ஆர்ஜென்டினாவிற்கு சென்றார். தொழிலாள வர்க்கத்திற்குள் எழுந்த ஓரளவு எதிர்ப்பு அதன் ஸ்ராலினிசத் தலைமையினால் கௌலாரட் அரசாங்கத்திற்கு அடிபணியச்செய்ததன் மூலம் நசுக்கப்பட்டது. கௌலார்ட் திடீரென 1976இல் ஆர்ஜென்டினாவில் இறந்து போனார். கடந்த நவம்பர் மாதம் பிரேசிலிய அரசாங்கம் அவருடைய உடலை எடுத்து CIA ஆலோசனையுடன் இலத்தின் அமெரிக்காவின் சர்வாதிகாரங்கள் நடத்திய Condor படுகொலை நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர் நச்சூட்டி கொலையுண்டாரா என்ற குற்றச்சாட்டை விசாரிக்கச்செய்தது. ஜோன்சன் நிர்வாகம் விரைவில் செயல்பட்டு காஸ்டெல்லோ பிராங்கோவின் இராணுவக்குழுவின் ஆட்சியை அங்கீகரித்தது. தன்னுடைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மக்ஜோர்ஜ் ஃபண்டி உடன் பதிவு செய்யப்பட்ட உரையாடலில், ஜோன்சன் பாரிய கைதுகள், கொலைகள், சித்திரவதை பற்றி ஆரம்ப அறிக்கைகள் வந்துள்ள நிலையில் ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பதல் எச்சரிக்கையைக் கையாள வேண்டும் என்னும் பரிந்துரையை உதறித்தள்ளினார். “சிலர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறி, சர்வாதிகாரத்திற்கு அதன் “உளமார்ந்த” ஆதரவைத் அமெரிக்கா வழங்கவேண்டும் என வலியுறுத்தினார். அமெரிக்க பெருநிறுவனங்களின் உளமார்ந்த ஆதரவும் கிடைத்தது. சாவோ பாலோவில் உள்ள அமெரிக்க வணிகக் குழு பகிரங்கமாக ஆட்சியின் சர்வாதிகார ஆணைகளை ஆதரித்தது, அவை “பொருளாதார உறுதிப்பாட்டை” அடைய தேவை என்று அறிவித்தது. ஜெனரல் மோட்டார்ஸ், போர்ட், பைர்ஸ்டோன், வோக்ஸ்வாகன் மற்றும் பிற நிறுவனங்களும் சர்வாதிகாரத்தின் இரகசியப் பொலிசுடன் நெருக்கமான பிணைப்புக்களை நிறுவி அவற்றிற்கு போர்க்குணமிக்க தொழிலாளர்களின் பெயர்களை கொடுத்தன. அவர்கள பின்னர் கைப்பற்றப்பட்டு, சித்திரவதைக்குட்பட்டு, “மறைந்து போயினர்”. பிரேசிலிய இராணுவம் போலவே இந்நிறுவனங்கள் எவையும் தங்கள் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறக் கேட்கப்படவில்லை. அவை நாட்டில் இருந்து இலாபங்களை தொடர்ந்து பெற்றன, தொழிலாளர் கட்சி அரசாங்கத்தினால் அவற்றின் நலன்கள் பாதுகாக்கப்பட்டன. இந்த ஆட்சிசதி பிரேசிலில் இரு தசாப்தங்கள் நீண்டிருந்த தீயகனாவை கொண்டுவந்தது மட்டுமல்லாமல், உருகுவே, ஆர்ஜென்டினா, சிலி, மற்றும் இலத்தின் அமெரிக்காவின் பிற பகுதிகளிலும் அமெரிக்க ஆதரவுடைய ஆட்சிசதிகளுக்கு ஒரு முன்மாதிரியைக் கொடுத்தது. இது இறப்புக்கள், சித்திரவதைகள், நூறாயிரக்கணக்கானவர்கள் சிறையில் தள்ளப்படுதல் ஆகியவற்றிற்கு இட்டுச்சென்றது. பென்டகனால் பயிற்சி கொடுக்கப்பட்ட பிரேசிலிய இராணுவம், இந்நாடுகளில் அதன் இணையான அமைப்புகளுக்கு அடக்குமுறை பற்றிய “ஆலோசகர்களாக” இருந்தது. இன்று வாஷிங்டன் ஜனநாயகத்தினதும், மக்கள் “தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமை” யின் பாதுகாப்பாளர் என்று உக்ரேன், வெனிசூலா போன்ற தான் இலக்கு வைக்கப்பட்டுள்ள நாடுகளில் காட்டிக் கொள்ளுகையில், பிரேசிலின் ஆட்சிசதியின் ஆண்டு நிறைவு உலகின் முக்கிய கொள்ளைக்கும்பல் ஆட்சி என்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. |
|
|