World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா Indian government abets repression of workers in Saudi Arabia இந்திய அரசாங்கம் சவூதி அரேபிய தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு துணை போகிறது
By Kranti Kumara ஒன்பது மாதங்களுக்கான ஊதியங்கள் வழங்காததால் வேலை செய்வதை நிறுத்திய, ஒரு சவூதி மருத்துவமனையில் வேலை செய்து வரும் ஒன்பது இந்திய பெண் துப்புரவு தொழிலாளர்களை அச்சுறுத்தி, கடந்த மார்ச்சில் பல தொடர்ச்சியான விரோத அறிக்கைகளை வெளியிடுவதில், சவூதி அதிகாரிகளோடு இந்திய அரசாங்கமும் சேர்ந்துள்ளது. தங்களின் ஊதியங்களை திரும்ப பெறுவதற்கு உதவி கோரி, ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை அவர்கள் ஆரம்பத்தில் தொடர்பு கொண்ட போது, இந்திய அதிகாரிகள் எவ்வாறு அவர்கள் தொழில் வழங்குனர்களைத் தொடர்பு கொள்ள முனைந்திருந்தனர் என்பது குறித்தும், சவூதி அரசாங்கம் "அந்த பிரச்சினையை தீர்க்க கோரியும்" கடமைக்காக, பெயரளவிற்கு அறிக்கைகள் வெளியிட்டதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. இந்த காலாண்டில் இருந்து எந்த உதவியும் கிடைப்பதாக தெரியாததால், இந்தியாவின் தெற்கு மாநிலமான கேரளாவிலிருந்து வந்திருந்த அந்த அனைத்து தொழிலாளர்களும், அவர்களின் தொழில்வழங்குனர் அவர்களுக்கான ஒன்பது மாத ஊதியங்களை முழுமையாக திருப்பி தரும் வரையில் வேலைநிறுத்தத்தில் இறங்குவதென்று முடிவெடுத்தனர். தொழிலாளர்கள் இந்த நடவடிக்கையை எடுத்ததும், இந்திய தூதரகம் ஐயத்திற்கிடமின்றி அவர்களுக்கு விரோதமாக திரும்பியது. அது கடுமையாக அச்சுறுத்தும் பல தொடர்ச்சியான அறிக்கைகளை வெளியிட்டதோடு, வேலைநிறுத்தகாரர்கள் உடனடியாக அவர்களின் வேலை நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வரவில்லையானால், அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும்; சிறையில் அடைக்கப்படுவார்கள்; மற்றும் அந்த வரம்பில்லா சவூதி முடியாட்சியால் வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரித்தது. “சவூதி சட்டங்களை மீறுபவர்களாக யாராவது அடையாளம் காணப்பட்டால், வேலைநிறுத்தம் போன்ற நடவடிக்கைகளில் தன்னிச்சையாக ஈடுபட்டு வந்தால், அவர்கள் சவூதி அதிகாரிகளின் அபராதம், சிறைத் தண்டனை மற்றும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவது போன்ற தண்டனைகளை முகங்கொடுப்பார்கள்," என்று இந்திய தூதரக அறிக்கை குறிப்பிட்டது. “சவூதி அரேபியாவில் இந்தியர்களின் நலன்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்லும் முறையை தூதரகம் கொண்டுள்ளது," என்று அது தொடர்ந்து குறிப்பிட்டது. சவூதி அரேபியாவில் 2.8 மில்லியன் புலம்பெயர்ந்த இந்திய தொழிலாளர்களின் தலைவிதியின் மீது நீண்டகாலமாக அலட்சியமாக இருந்து வரும் ஒரு அரசாங்கமாக இருந்தாலும் கூட, இந்த அறிக்கை முன்னுதாரணமற்ற ஒன்றாக உள்ளது. அந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் கொடுமையான நிலைமைகளின் கீழ் வேலை செய்கின்றனர் என்பதோடு, அவர்களுக்கு ஜனநாயகரீதியில் மற்றும் ஒருங்கிணைந்து பேரம்பேசும் அடிப்படை உரிமைகளும் கூட மறுக்கப்பட்டுள்ளன. இந்திய தூதரக அறிக்கை, மருத்துவமனை துப்புரவாளர்கள் வேலையிட நடவடிக்கையில் இறங்க ஊக்குவித்ததற்காக, பெயர் குறிப்பிடாமல் சமூக பணியாளர்கள் மற்றும் "சட்டவிரோத முகவர்களைக்" குற்றஞ்சாட்டும் அளவிற்கு சென்றது. "சில சுய-பாணியிலான சமூக பணியாளர்களும், சட்டவிரோத முகவர்களும் சவூதி அரேபிய முடியாட்சியில் உள்ள சில இந்திய பெண் தொழிலாளர்களை வேலைநிறுத்தத்தில் இறங்க செய்ய, தூண்டிவிட்டு வருவதாக தூதரகத்தின் கவனிப்பிற்கு வந்துள்ளது. இத்தகைய சட்டவிரோத முகவர்கள் வேலைநிறுத்தம் குறித்த செய்திகளைப் பிரசுரிக்க சமூக ஊடகங்கள் மூலமாக முயன்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது," என்று தூதரகம் குறிப்பிட்டது. இத்தகைய அறிக்கைகளை வெளியிட்டதன் மூலமாக இந்திய அரசாங்கம், அந்த தொழிலாளர்களை மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை ஒடுக்கவும், சவூதி அரேபியாவில் உள்ள அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களையும் மிரட்ட அவர்களை ஒரு முன்னுதாரணமாக்கவும் சவூதி எதேச்சதிகார ஆட்சிக்கு அனுமதி வழங்குகிறது. அந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் துப்புரவாளர்களில் ஒருவர், மணியம்மா விலாசினி, அவர்களுக்கு உதவ இந்திய தூதரகம் ஒன்றுமே செய்யவில்லை என்று இந்தோ-ஆசிய செய்தி சேவையிடம் (IANS) முறையிட்டார். பின்னர் அவர் தொழிலாளர்கள் முகங்கொடுத்து வரும் பரிதாபகரமான நிலைமைகள் குறித்த குறிப்புகளை அளித்தார். அவர்களின் தொழில் வழங்குனர்கள் அவர்களுக்கு விடுமுறை அளிக்க மறுத்திருந்ததாகவும், அவர்களின் இரண்டு ஆண்டுகால ஒப்பந்தங்கள் முடிந்த பின்னரும் அவர்களைச் செல்ல அனுமதிக்கவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார். “இந்திய தொழிலாளர்களிடம் அவர்கள் வேற்றுமை காட்டுவதாக" மணியம்மா விலாசினி தெரிவித்தார். “ஏனைய சகல தொழிலாளர்களுக்கும் ஊதியத் தொகை கிடைத்துள்ளது. ஆனால் இதனால் எங்களுக்கு பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளது," என்று தெரிவித்தார். இந்தியாவின் பெருநிறுவன ஊடகங்கள், சவூதி அரேபியாவில் தொழிலாளர் போராட்டத்தை பெருமளவிற்கு இருட்டடிப்பு செய்துள்ளன. சிறந்த பத்திரிகை என்றில்லை, ஆனால் ஒரேயொரு பத்திரிகை — வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுடன் இணைந்த லைவ் மின்ட் இதழ் — இந்த பிரச்சினை குறித்து ஒரேயொரு கட்டுரை பிரசுரித்தது. அது இந்திய தூதரகத்தால் வெளியிடப்பட்ட உறுதியான விரோத அறிக்கைக்கு பெரும் முக்கியத்துவம் அளித்திருந்தது. வேலைவாய்ப்பின்மையில் இருந்து தப்பிக்க மற்றும் உள்நாட்டில் பிழைக்க வழியின்றி, சவூதி அரேபியா மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளில் குவிந்துள்ள மில்லியன் கணக்கான ஆசிய தொழிலாளர்களின் வேலையிட மற்றும் வாழ்விட நிலைமைகள் வருந்தத்தக்கதாக உள்ளன என்பது முறையாக ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. எந்தவொரு சட்ட உரிமைகளும் இல்லாமல் அவர்கள், அவர்களின் கடவுச்சீட்டில் தேவையான முத்திரை இல்லை என்பது போன்ற சிறிய சிறிய குற்றங்களுக்காக கூட, அபராதங்கள் விதிக்கப்படுதல், கடுமையாக அடிக்கப்படுதல், சிறைவாசம் மற்றும் வெளியேற்றம் உட்பட அவர்களின் தொழில் வழங்குனர்கள் மற்றும் அரசிடமிருந்து கடுமையான தண்டனைக்கு ஆளாகி உள்ளனர். ஒரு எழுதப்பட்ட குற்றவியல் சட்ட நெறிமுறை கூட இல்லாத, இவ்விதத்தில் அது முற்றிலும் விலக்கீட்டுரிமையோடு செயல்பட அனுமதிக்கும் வகையில், சவூதி ஆட்சி இந்த ஆண்டு ஜனவரியில், ஒரு சவூதி பிரஜையை கொன்றார் என்று ஒரு தொழிலாளரை அதன் கட்ட பஞ்சாயத்து நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டிய பின்னர், அவரின் தலையைத் துண்டித்தது. இதேபோன்று 40 இந்தோனேஷிய தொழிலாளர்கள் "சூனியம் மற்றும் மாந்திரீகம்" ஆகியவற்றிற்காக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர், இது அடிக்கடி சுமத்தப்படாத ஒரு குற்றச்சாட்டல்ல, அவர்களின் சொந்த மத நடைமுறைகளை பின்பற்றியதற்காக இது நடக்கிறது. மேலும் அவர்கள் சிறையில் வாட்டி வதைக்கப்பட்டு வருகிறார்கள். இந்த தொழிலாளர்களில் ஐவருக்கு, அவர்களின் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் தீர்ந்து போயுள்ளதால், தற்போது மரணதண்டனையை முகங்கொடுக்கும் நிலைமையில் உள்ளனர். கடந்த ஆண்டின் இறுதியில் சவூதி ஆட்சி, அது வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் மற்றும் மேலதிகமாக அவர்களை மிரட்டுவதை நோக்கமாக கொண்டு, நிதாகத் (Nitaqat) என்ற "சவூதி-பிரஜையை வேலையில் அமர்த்தும்" ஒரு தொழிலாளர் சட்டத்தை கொண்டு வர ஒரு ஒருமித்த தேசியளவிலான பிரச்சாரத்தைத் தொடங்கியது (பார்க்கவும்: “Migrant workers clash with Saudi police amid mass deportation raids”). வெறும் மூன்று மாதங்களில் 250,000க்கும் மேலான வெளிநாட்டு தொழிலாளர்களை நாட்டை விட்டு அனுப்பி விட்டதாகவும், அவர்களில் 134,000 பேர் இந்தியர்கள் என்றும் ஜனவரியில் சவூதி ஆட்சி ஒரு சிறிய அறிக்கையில் அறிவித்தது. அதேவேளையில் பல ஏனைய அரசாங்கங்கள் அவர்கள் நாட்டினரை வெளியேற்றுவதை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டிருந்த நிலையில், இந்திய அரசாங்கம் எந்தவொரு மறுப்பும் காட்டவில்லை, நடைமுறையில் அது அதன் சொந்த பிரஜைகளின் பரந்த வெளியேற்றத்தையே ஏற்றுக் கொண்டு உறுதிப்படுத்துவதாக இருந்தது. சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தொழிலாளர்களை நோக்கிய இந்திய அரசாங்கத்தின் மனோபாவம் அலட்சியம் என்பதிலிருந்து வெளிப்படையான விரோதம் என்ற நிலைக்கு மாறியிருப்பதை எது விவரிக்கிறது? கேள்விக்கிடமின்றி, மத்திய கிழக்கில் உள்ள 7 மில்லியன் இந்திய தொழிலாளர்களிடமிருந்து ஆண்டுக்கு 30 பில்லியன் டாலர் வரவை இந்த தொழிலாளர் போராட்டம் தொந்தரவிற்கு உள்ளாக்கி விடுமோ என்பதில் இந்திய அரசாங்கமும், மேற்தட்டும் கவலை கொண்டுள்ளன. இந்த தொகை இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பில் முழுமையாக 10 சதவீதத்திற்கு சமமாகும். மற்றொரு பிரதான காரணம், இந்திய அரசிற்கும், மத்திய காலக்கட்டத்திய சவூதி முடியாட்சிக்கும் இடையிலான அதிகளவிலான நெருங்கிய உறவாகும். கடந்த தசாப்தத்தின் போது, புது டெல்லியில் இந்திய அரசாங்கம் அமைத்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சவூதி அரச குடும்பத்தை புகழ்ந்து பாராட்டி உள்ளது. ரியாத்துடன் நேசம் பாராட்டுவதன் மூலமாக, இந்தியாவின் பரம-எதிரியான பாகிஸ்தானுக்கு நீண்டகாலமாக சவூதி ஆட்சி வழங்கி வரும் ஆதரவை மட்டுப்படுத்த முடியுமென இந்திய மேற்தட்டு நம்புகிறது. இதையும் விட முக்கியமாக, இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் சவூதி அரேபியா அதிக பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்தியா அதன் இறக்குமதியில் மூன்று கால் பகுதிக்கு இறக்குமதியைச் சார்ந்துள்ளது. ரியாத் உடன் முன்பில்லாத அளவிற்கு நெருங்கிய உறவுகளை நோக்கும் இந்திய வெளியுறவு கொள்கையின் இந்த மீள்-நிலைநோக்கு, 2006இல் அரசர் அப்துல்லாஹின் இந்தியாவிற்கான நான்கு நாள் பயணத்தால் கட்டியங் கூறப்பட்டது. அவரது வருகை, 1955க்கு பின்னர், சவூதி முடியாட்சியின் இந்தியாவிற்கான முதல் விஜயமாக இருந்தது. அந்த சவூதி தலைவருடன் வர்த்தகர்கள் மற்றும் ஏனைய மூத்த அதிகாரிகளின் ஒரு பெரிய பரிவாரமும் வந்திருந்தது. இந்திய மேற்தட்டால் எழுதப்பட்ட குடியரசு அரசியலமைப்பை, ஜனவரி 26, 1950இல் உத்தியோகபூர்வமாக ஏற்று கொண்டமைக்கான ஓர் ஆண்டு கொண்டாட்டமான, இந்திய குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினருக்கான உயர் மரியாதையும் இந்த மத்தியகால எதேச்சாதிகாரிக்கு வழங்கப்பட்டது. அதற்கு பதிலாக, 2010இல், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதம மந்திரி மன்மோகன் சிங் சவூதி முடியாட்சிக்கு விஜயம் செய்தார். அந்த விஜயத்தில் இருதரப்பின் சார்பாக "ரியாத் பிரகடனம்" என்பது வெளியிடப்பட்டது, அது இரு நாடுகளுக்கு இடையே இன்னும் நெருக்கமான அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான கட்டமைப்பை அமைக்க வழிவகுத்தது. சவூதி அரேபியாவிலிருந்து செய்து வந்த அதன் எண்ணெய் இறக்குமதிகளை இந்தியா கடந்த தசாப்தத்தில் வேகமாக அதிகரித்துள்ளது. பின்புலத்தில் பொருளாதார தடைகளின் அச்சுறுத்தலோடு, அதன் ஈரானிய எண்ணெய் இறக்குமதிகளை வேகமாக குறைக்க வேண்டுமென்ற இந்தியா மீதான அமெரிக்க அழுத்தம் இதற்கான முக்கிய காரணமாக இருந்தது. இந்தியாவின் ஆண்டு கச்சா எண்ணெய் இறக்குமதிகளில் முழுமையாக 20 சதவீதம் சவூதி அரேபியாவின் கணக்கில் வருகிறது, ஈரானிலிருந்து 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இறக்குமதி செய்யப்படுகிறது. 2011-2012க்கான இருதரப்பு இந்தோ-சவூதி வர்த்தகம் 37 பில்லியன் டாலராக இருந்தது, இதில் இந்திய எண்ணெய் இறக்குமதிகள் மட்டும் 31 பில்லியன் டாலராகும். சவூதி ஆட்சி இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி, ஆயுதங்கள் வழங்குவதில் மற்றும் வங்கி பரிவர்த்தனைகளுக்கு உதவுவதில் நீண்டகால வரலாறைக் கொண்டிருப்பதற்கு இடையிலும், சவூதி ஆட்சியுடன் அதிகரித்து வரும் அதன் கூட்டுறவின் பாகமாக, “பயங்கரவாதத்தை" எதிர்கொள்ள புது டெல்லி ரியாத்துடன் உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்ள தொடங்கி உள்ளது. அந்நாட்டின் இளவரசர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி சல்மான் அல் சௌத்தின் விஜயத்தோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இந்த பெப்ரவரியில் ஒரு புதிய உயரத்தை எட்டியது. 2006இல் அரசர் அப்துல்லாஹ்க்கு பின்னர் ஒரு சவூதி அதிகாரியின் அந்த உயர்மட்ட விஜயம், முன்நிகழ்ந்திராத விதத்தில் பாதுகாப்புத்துறை கூட்டுறவு மீதான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையோடு நிறைவுற்றது. இந்த பாதுகாப்பு கூட்டுறவு ஒரு புதிய தொடக்கத்தைக் குறிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் வலியுறுத்தினார்: “இது வெறுமனே வாங்குவோர்-விற்போர் சம்பந்தப்பட்டதல்ல, மாறாக அதையும் கடந்து இராணுவ பயிற்சி அளிப்பு, கூட்டு உற்பத்தி மற்றும் இராணுவ ஒத்திகைகள் மீது இரு தரப்பும் வேலை செய்ய வேண்டுமென நான் வலியுறுத்துவேன்," என்றார். இந்திய ஆளும் வர்க்க மேற்தட்டின் பிற்போக்குத்தனமான வெளிநாட்டு கொள்கை போக்கு இவ்விதத்தில் இருக்கையில், சவூதி அரேபியாவில் கொடூரமாக சுரண்டப்படும் மற்றும் ஒடுக்கப்படும் புலம்பெயர்ந்த இந்திய தொழிலாளர்களை நோக்கி இந்திய தூதரகம் வெளிப்படையாக விரோதம் காட்டுவதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை. |
|