தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் France’s New Anti-capitalist Party backs fascist-led putsch in Ukraine பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி உக்ரைனின் பாசிசத் தலைமையிலான ஆட்சிமாற்றத்தை ஆதரிக்கிறது
By Alex Lantier Use this version to print| Send feedback கியேவில் உக்ரைன் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் ஆட்சியைக் கவிழ்த்த பிப்ரவரி 22 கவிழ்ப்பை பிரான்சின் போலி-இடது புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியும் (NPA) மற்றும் பப்லோவாத நான்காம் அகிலத்தின் ஐக்கியச் செயலகத்தில் (UFSI) இருக்கும் அதன் சக சிந்தனையாளர்களும் வரவேற்றுள்ளனர். அப்பட்டமான அரசியல் பிற்போக்குத்தன முகாமிற்குள் அவர்கள் சென்றுள்ளதன் மறுக்கவியலாத ஒரு சான்றாக, ரஷ்யாவுடன் போருக்கு நெருக்குகின்ற அத்துடன் பாசிசக் குழுக்களால் தலைமை நடத்தப்படுவதாய் பப்லோவாதிகள் ஒப்புக்கொள்கின்ற ஒரு ஏகாதிபத்திய-ஆதரவு உக்ரைன் ஆட்சியுடன் அவர்கள் ஒருங்கிணைத்துக் கொள்கின்றனர். USFI இன் ”உக்ரைன் குறித்த அறிக்கை”, கியேவில் ஆட்சிக்கவிழ்ப்பில் இருந்து எழுந்திருக்கும் ஆட்சியானது சமூக சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்கவும் அத்துடன் ரஷ்யாவுடன் மற்றும் உக்ரைனில் உள்ள ரஷ்ய மொழி பேசுபவர்களுடன் மோதலைத் தூண்டவும் நோக்கம் கொண்டிருக்கிறது என்ற உண்மை குறித்து ஒரு திரையிட்ட குறிப்பை அளிக்கிறது. “இந்த வெகுஜன இயக்கத்திற்கென ஜனநாயக, தேசிய மற்றும் சமூகப் பிரச்சினைகளில் எந்தவிதமான முற்போக்கான வேலைத்திட்டமும் இல்லை” என்று எழுதுகின்ற இது கூறுகிறது: “புதிய ஆளும் கட்சிகள் நாட்டை சிதறுண்டு போக இட்டுச் செல்கின்ற உள்நாட்டு மோதல் சாத்தியங்கள் உடன்வர சமூகத் தாக்குதல்களை தொடரவிருக்கின்றன”. USFI தனது ஆதரவாளர்களை பின்வரும் அடிப்படையில் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறது: “ முக்கியமான ஒழுங்கமைந்த சக்திகள் எல்லாம், இப்போதைக்கு, வலதில் இருந்தும் அதிவலதில் இருந்தும் தான் இருக்கின்ற அதேவேளையில், அந்த இயக்கத்திற்குள்ளாக ஒரு இடது எதிர்ப்பைக் கட்டியெழுப்ப முயலுகின்ற சமூக மற்றும் அரசியல் சக்திகளை நாம் ஆதரிக்கின்றோம். அவ்வாறு செய்வதன் மூலம், இயக்கத்திற்கு வெளியே இருந்து கொண்டு ஒட்டுமொத்த இயக்கத்தையும் அதன் அதி-வலது பாகத்தைக் கொண்டு அடையாளப்படுத்த அவர்கள் மறுக்கின்றனர்.” கியேவ் கவிழ்ப்பை ஆதரிப்பதை நியாயப்படுத்துவதற்காக, சிரியாவில் சிஐஏவின் வழிநடத்தலில் அல்கெய்தாவுடன் தொடர்புபட்ட போராளிகள் நடத்திய போரை ஆதரிக்க அது பயன்படுத்திய அதே பொய்யை USFI இங்கும் பயன்படுத்துகிறது. ஏகாதிபத்தியத்தால் ஆதரவளிக்கப்படும் ஒரு சிறிய, வலது-சாரி இயக்கத்தை ஒரு வெகுஜன ஜனநாயக எழுச்சியாக அது கூறுகிறது. இந்தப் பொய் ஏன் அப்பட்டமானதாக இருக்கிறதென்றால் உக்ரைன் நிகழ்வுகளாக USFI சித்தரிப்பவையே இதற்கு முரண்படுகின்றன. மைதான் (Maïdan) சதுக்க ஆர்ப்பாட்டங்களுக்குள் வேலை செய்கின்ற உக்ரைன் இடது எதிர்ப்புக் குழுவை சேர்ந்த சக்கார் போபோவிச் (Zakhar Popovych) “ஜனநாயகத்திற்கான ஒரு வெகுஜனக் கிளர்ச்சி” என்ற தலைப்பில் NPA இன் Hebdo Anticapitaliste க்கு அளித்த ஒரு நேர்காணலில், இவை ஒரு ஜனநாயகப் புரட்சி என்பதான பாவனையைப் பராமரித்தார். ஆயினும் போபோவிச் அளித்த உண்மை விபரங்களே இந்தக் கூற்றிற்கு குழிபறிக்கிறது. அவர் எழுதுகிறார்: ”பேர்குட் கலகத்தடுப்பு போலிசாருக்கு எதிரான முதல் தாக்குதல்கள் பிரதானமாக Right Sector இன் நவநாஜிகளால் ஒழுங்கமைக்கப்பட்டதாக இருந்தது. இவர்கள் அதிவலது Svoboda இயக்கத்தை விடவும் தீவிரப்பட்டவர்களாக இருக்கின்றனர்.” “மைதான் சதுக்க மக்கள் பெரும்பாலும் மேற்கு உக்ரைனில் இருந்து வந்தவர்களாகவும் பெரும்பாலும் உக்ரைன் பேசும் மக்களாகவும் இருந்தனர்” என்று அவர் குறிப்பிடுகிறார். ஆட்சிக்கவிழ்ப்புக்கு இட்டுச் சென்ற இறுதிப் பிரச்சாரம் குறித்த அவரது குறிப்புகள் கியேவில் ஒரு வெகுஜனப் புரட்சிகர எழுச்சி நடைபெற்றதாகக் கூறப்படுவதை பொய்யெனக் காட்டுகின்றன: “மாலையில் சில நூறு மக்கள் வந்து சென்ற “சாதாரண” மாலைப் பொழுதைக் கண்ட மைதான் சதுக்கம் பல்லாயிரம் பேர் இரவு முழுவதும் தங்கி உள்ளிருப்பு மேற்கொள்வதைக் கண்டது. இந்த வெகுஜன அணிதிரட்டல் தான் போலிஸ் நிச்சயமாக திட்டமிட்டுக் கொண்டிருந்த “சுத்தப்படுத்தல்” நடவடிக்கையில் இருந்து மைதான் சதுக்கத்தை காப்பாற்றியிருக்க வேண்டும்.” கியேவ் ஆட்சிக்கவிழ்ப்பு ”ஜனநாயகத்திற்கான ஒரு வெகுஜனக் கிளர்ச்சி” என்பதெல்லாம் அபத்தமான பொய்கள். எகிப்திலும் துனிசியாவிலும் ஏகாதிபத்திய ஆதரவு சர்வாதிகாரங்களுக்கு எதிராக மில்லியன்கணக்கான அல்லது பத்து மில்லியன் கணக்கிலான தொழிலாளர்களை அணிதிரட்டி நடத்தப்பட்ட கிளர்ச்சிகள் போலன்றி, இந்த ஆட்சிக்கவிழ்ப்போ பாசிசப் போராளிகளை மையமாகக் கொண்டு அணிதிரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான அல்லது பத்தாயிரக்கணக்கான மக்களை அணிதிரட்டியிருந்தது. யானுகோவிச்சின் பிற்போக்குத்தனமான ஆட்சி தூக்கியெறியப்படுவதற்கான ஒரே முற்போக்கான வழியான எந்த பாரிய வேலைநிறுத்தங்களோ அல்லது தொழிலாளர் அணிதிரட்டல்களோ இருக்கவில்லை. NPA இணைந்து வேலை செய்ய முன்மொழியும் மைதான் சதுக்க அதி-வலது சக்திகளில் Svoboda அல்லது Right Sector ம் கூட இடம்பெறுகின்றன. இவை யூதப்படுகொலையில் பங்குபெற்ற நாஜி SS பிரிவுகளை வெளிப்படையாகப் போற்றுபவை. பாசிசத் தலைமையிலான ஒரு ஆட்சிக்கவிழ்ப்புக்கு போலி-இடது குழுக்கள் அளிக்கும் ஆதரவு தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு எச்சரிக்கை ஆகும். வன்முறையால் ஈர்க்கப்பட்ட உயர் நடுத்தர வர்க்க அடுக்குகளை வேராய்க் கொண்டு, அத்துடன் பாசிசக் கட்சிகள் சமூக அதிருப்தியைப் பிரதிநிதித்துவம் செய்து நியாயமாகப் பேசுவதாக உறுதி கொள்கின்ற இக்குழுக்கள் தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் சோசலிசத்துக்கும் ஆழமான குரோதம் படைத்தவை ஆகும். உக்ரைனிலும் சரி சர்வதேச அளவிலும் சரி எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களுக்கு ஆதரவளிக்கவே அவை முன்னெடுப்பு செய்கின்றன. பப்லோவாத ரஷ்ய சோசலிஸ்ட் இயக்கத்தின் (Russian Socialist Movement - RSM) ஒரு தலைவரான இலியா புட்ரெயிட்ஸ்கிஸ் (Ilya Budraitskis) “உக்ரைனின் ஆர்ப்பாட்ட இயக்கம்: ஒரு Left Sector சாத்தியமா?” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில் Right Sector ஐ புகழ்ந்து தள்ளுகிறார். அவர் எழுதுகிறார்: “Right Sector இன் ‘தேசிய சர்வாதிகார’த்தின் அதிவலது ஆலோசகர்கள் இல்லாமல், Hrushevskogo இன் எந்த தடுப்புப் போராட்டங்களும் அல்லது அமைச்சக உள்ளிருப்புகளும் ‘புரட்சியின் தலைமையகங்களாக’ மாற்றப்பட்டிருக்க முடியாது. ’ஒழுங்கின் கட்சி’ (party of order) உருவடிவம் பெறுவதை அல்லது ‘அவசர கால நிலை’ மேலிருந்து ஸ்தாபிக்கப்படுவதை உண்மையில் தடுத்திருக்கக் கூடிய எந்த நிகழ்வுகளும் அங்கு இருக்கப் போவதில்லை, அது நிச்சயம்.” பாசிஸ்டுகளை ஸ்தாபக-எதிர்ப்பு கிளர்ச்சியின் தலைவர்களாக புட்ரெயிட்ஸ்கிஸ் உயர்த்திப் பிடிப்பது ஒரு பயங்கர மோசடி. தொழிலாளர்களுக்கு எதிரான ஆழமான சமூக வெட்டுகளை நடத்துவதற்கு தயாரிக்கப்பட்ட ஒரு ரஷ்ய-விரோத ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் உக்ரைனிய எதிர்க்கட்சிகளுக்கு ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவும் அத்துடன் உக்ரைனிய நிதியப் பிரபுக்களது ஒரு பிரிவின் ஆதரவும் கிட்டியது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதென்கிற ஒரு பிற்போக்குத்தனமான முன்னோக்கின் மீது தான் சுதந்திர சதுக்க (மைதான்) ஆர்ப்பாட்டங்கள் அழைப்பு விடுக்கப்பட்டன. யானுகோவிச், வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு அஞ்சி, ஓய்வூதிய வெட்டுகள் மற்றும் பாரிய எரிபொருள் விலை அதிகரிப்புகள் ஆகியவை இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத்துடனான கூட்டமைவு ஒப்பந்தத்தை (association agreement) திடீரென கைவிட்டதன் பின்னர், சென்ற நவம்பரில் இவை தொடங்கின. ஆர்ப்பாட்டங்களின் போது, பல பத்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் மைதான் சதுக்கத்திற்கு விஜயம் செய்து ஆட்சிமாற்றத்திற்கு அழைப்பு விடுத்தனர். ஐரோப்பா மற்றும் யூரோ-ஆசியாவிற்கான (Eurasia) அமெரிக்க வெளியுறவுச் செயலக அதிகாரியான விக்டோரியா நியூலாண்ட் கூறியிருப்பதன்படி, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய தசாப்தங்களில் உக்ரேனிய எதிர்ப்புக் குழுக்களுக்கு நிதியாதாரம் அளிப்பதில் அமெரிக்கா 5 பில்லியன் டாலர் செலவிட்டிருக்கிறது. தொழிலாள வர்க்கத்தை முற்றிலும் நிராகரிக்கின்ற விதமாக புட்ரெயிட்ஸ்கிஸ், அதி வலதின் வெற்றி தவிர்க்கமுடியாதது என்பதான பிற்போக்குத்தனமானதும் முற்றுமுழுதாய் அவநம்பிக்கையானதுமான ஒரு பார்வையை முன்வைக்கிறார். ஒரு “Left Sector” ஐ, அதாவது அதிவலது சக்திகளுடன் இணைந்து வேலைசெய்கின்ற நாஜி ஆதரவு Right Sector இன் ஒரு போலி-இடது பதிப்பை, கட்டியெழுப்புவதை ஒரு ஒட்டுமொத்த சகாப்தத்தில் “இடது” கட்சிகளை கட்டியெழுப்புவதற்கான மாதிரியாக அவர் ஆலோசனை மொழிகிறார். அவர் எழுதுகிறார்: “எனது காரணநியாயம் எத்தனை பலவீனமானதாக தோன்றலாம் என்பதை நான் முழுமையாகப் புரிந்து வைத்திருக்கிறேன், ஆனாலும் ஒரு ‘Left Sector’ இன் சாத்தியம் குறித்தும் ஆர்ப்பாட்டத்தில் மேலாதிக்கம் செய்வதற்கான அதன் போராட்டம் குறித்துமான இந்த உரையாடல் உக்ரைனிய சூழலுக்கு மட்டுமல்லாது, வருங்காலத்தில் இதேபோன்ற (இதைவிட மோசமானதாக இல்லையென்றால்) சூழல்களை நாம் எதிர்கொள்கின்ற ஒவ்வொரு சமயத்திலும், முக்கியமானதாக இருக்கும் என்ற உணர்வு இப்போதும் எனக்கு இருக்கிறது.” ஒரு “Left Sector” முன்னோக்கு உக்ரேனைக் கடந்து வருங்காலத்திற்கும் முக்கியமானது என்று புட்ரெயிட்ஸ்கிஸ் கூறும் கருத்து, போலி-இடது கட்சிகள் வருங்காலத்தில் சர்வதேச அளவில் அதிவலது சக்திகளுடன் சேர்ந்து வேலை செய்வதை நியாயப்படுத்துவதற்கு அவரது வாதங்களைப் பயன்படுத்தும் என்பதையே வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. பிரான்சுக்குள்ளாக, வளர்ச்சி கண்டு வரும் நவபாசிச தேசிய முன்னணி (FN) (இக்கட்சி வார்த்தைஜால முறையீடுகளை செய்து வருவதோடு பல்வேறு சமூகப் பிரச்சினைகளிலும் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்திருக்கிறது) உடன் சேர்ந்து ஆர்ப்பாட்டங்களில் NPA பங்கேற்பதற்கு இது நியாயம் கற்பிக்கும். புட்ரெயிட்ஸ்கிஸ் எழுதுகிறார், ஒரு “Left Sector” ஐக் கட்டியெழுப்புவது ”அண்மை வருங்காலத்தில் அநேகமாக எதிர்பார்க்கக்கூடிய புரட்சிக்குப் பிந்தைய சூழலில் தீவிர இடது சக்திகளைக் கட்டியெழுப்ப அனுமதிக்கும், அப்போது உக்ரைன் கம்யூனிஸ்ட் கட்சி (KPU) தனது ஏளனத்திற்குரிய வாழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வரும். இப்போது KPU ஐ (ரஷ்ய மொழி பேசும் பிராந்தியங்களின் கட்சியுடன் சேர்த்து) தடை செய்யக் கோரும் கோரிக்கை - இதற்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் அழைப்பு எப்போதும் உரத்த குரலாய் இருக்கிறது - கம்யூனிச-விரோத பாரம்பரியத்துடன் மட்டும் தொடர்புபட்டதல்ல, மாறாக நிதியப் பிரபு பரம்பரைகளுடனும் பிற்போக்குத்தனமான ரஷ்ய-ஆதரவு தேற்றலிலும் தனது கதியை பிரிக்கவியலாமல் பிணைத்துக் கொண்டிருக்கிற KPU இன் அரசியல் வேலைத்திட்டத்துடனும் கூட அதேஅளவில் தொடர்புபட்டதாய் இருக்கிறது.” ஆர்ப்பாட்டங்களின் வெற்றிக்குப் பின்னர் KPU ஐ அழித்து விட புட்ரெயிட்ஸ்கிஸ் விடும் அழைப்பு சில்லிடச் செய்வதாய் இருக்கிறது. புட்ரெயிட்ஸ்கிஸ் கனவுகாணுகின்ற KPU வீழ்ச்சி என்பது தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர எழுச்சிக்கு நடுவில் திவாலான, முதலாளித்துவ ஆதரவு ஸ்ராலினிசக் கட்சி ஒன்று வீழ்ச்சி காண்பது அல்ல; மாறாக போலி-இடது தன்னை எந்த நாஜி-ஆதரவு சக்திகளை நோக்கித் திசையமைவு செய்து கொள்கிறதோ அந்த சக்திகளால் KPU நிர்வாகிகளும் வாக்காளர்களும் கலைக்கப்படுவதையே அவர் கனவு காண்கிறார். Svoboda இன் கருத்துகள் இதை தெளிவாக்குகின்றன. 2010 இல், Svoboda இன் நிர்வாகிகள் கட்சியின் வலைத் தளத்திலான ஒரு கருத்துமன்றத்தில் பின்வரும் கருத்தினைப் பதிவிட்டனர்: “கிழக்கு மற்றும் தெற்கின் நகரங்களில் ஒரு உண்மையான உக்ரைனிய உக்ரைனை உருவாக்க...நாம் நாடாளுமன்றவாதத்தை இரத்து செய்ய வேண்டும், அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும், ஒட்டுமொத்த தொழில்துறையையும் அனைத்து ஊடகங்களையும் தேசியமயமாக்க வேண்டும், இலக்கியம் ரஷ்யாவில் இருந்து உக்ரைனிற்கு இறக்குமதி செய்யப்படுவதைத் தடைசெய்ய வேண்டும்...குடிமைப் பணி, கல்வி நிர்வாகம், இராணுவத்தில் (குறிப்பாக கிழக்கில்) தலைமைகளை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும், ரஷ்யமொழி பேசும் அறிவுஜீவிகளையும் மற்றும் அனைத்து உக்ரைனச்சம் கொண்டவர்களையும் உருத்தெரியாமல் ஆக்க வேண்டும், உக்ரைன் விரோத அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரையும் தண்டிக்க வேண்டும்.” மைதான் சதுக்க போராட்டங்களின் அடுத்துவந்த வெற்றியானது உண்மையில் கியேவிலும் மற்றும் ரஷ்ய-ஆதரவு கிழக்கு உக்ரைனிலும் Svoboda அல்லது Right Sector இன் குண்டர்களால் அதிகாரிகள் தாக்கப்பட்ட ஏராளமான சம்பவங்களுக்கு இட்டுச் சென்றது. இதில் மிக இழிபெயர் பெற்ற சம்பவமாக, உக்ரைனிய தேசிய தொலைக்காட்சியின் தலைவரான அலெக்சாண்டர் பான்டெலிமோனோவ் Svoboda இன் நாடாளுமன்ற உறுப்பினரும், புதிய ஆட்சியின் பேச்சு சுதந்திரத்திற்கான குழுவின் துணைத் தலைவருமான இகோர் மிரோஷ்னிசெங்கோவினால் அடிக்கப்பட்டு கட்டாய இராஜிமானா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். உக்ரைனின் அதிவலது ஆட்சி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன், கிரிமியா தொடர்பாக ரஷ்யாவுடனான ஒரு இராணுவ மோதலைத் தூண்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்கின்ற நிலையில், NPAவும் அதன் கூட்டாளிகளும் அதனைத் தொடர்ந்து ஆதரிக்கின்றன. அவற்றின் உக்ரைனிய இடது எதிர்ப்பணிக் குழு “ஒற்றுமையின் மூலமாக உக்ரைன் தலையீட்டில் இருந்து காக்கப்படும்” என்கிற தலைப்பில் மார்ச் 7 அன்று விடுத்த ஒரு அறிக்கையின் சாராம்சம் இதுதான். உக்ரைனிய தேசியவாதம் குறித்த சம்பிரதாயமான சில விமர்சனங்களைச் செய்த பின், இந்த ஆவணமானது கியேவில் ஆட்சியை வழிநடத்துகின்ற அதிவலது சக்திகள் மற்றும் அவற்றின் ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் வரிசையில் தன்னை நிறுத்திக் கொள்கிறது. “ரஷ்ய சண்டித்தன”த்தை கண்டனம் செய்கின்ற அது, பாசிசத் தலைமையிலான ஆட்சியை சந்தேகத்திற்கிடமின்றி ஆதரிக்கிறது. அது எழுதுகிறது: “அந்நியத் தலையீட்டின் அச்சுறுத்தலால் நமது அரசாங்கம் முறைமையானதாக ஆகியிருக்கிறது.” ரஷ்யப் படைகள் “திரும்பப் பெறப்பட” கோரும் அது, உக்ரைனின் ரஷ்யர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகள் கியேவ் ஆட்சியை எதிர்க்க வேண்டாம் என எச்சரிக்கிறது: “கிழக்கு மற்றும் தெற்கின் தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்... மோதலுக்கு எரியூட்டுவது மேம்பாடுகளுக்கான வாய்ப்பு வளங்களை அணைத்து விடுகிறது என்பதை.” கியேவ் ஆட்சியை வலுப்படுத்த சர்வதேசரீதியாக துருப்புகளைத் திரட்டவும் உக்ரைன் இராணுவத்தை Maïdan ஆர்ப்பாட்டக்காரர்களின் நிலைப்பாட்டுக்கு வென்றெடுத்து ரஷ்யாவுக்கு எதிரான போருக்காக தயாரிப்பு செய்ய உதவச் செய்யவும் கூட இது ஆலோசனையளிக்கிறது. ரஷ்யர்களையும் ரஷ்ய மொழி பேசும் உக்ரைனியர்களையும் “ஆக்கிரமிப்பு இராணுவங்களின் அணிதிரட்டலுக்கும் நகர்வுக்கும் குழிபறிக்க” அழைப்பு விடுக்கின்ற அது எழுதுகிறது: “சட்டமுறையான ஒழுங்கைப் பராமரிக்கவும், பரஸ்பர பேரினவாதங்களை எதிர்க்கவும், மூலோபாய இராணுவக் கட்டமைப்புகளைப் பாதுகாக்கவும், துருப்புகளிடையே பிரச்சாரத்தை நடத்தவும், அத்துடன் உக்ரைனிய இராணுவங்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிக்கப்படுவதை எதிர்க்கவும் சர்வதேச படையணிகளை உருவாக்குவது அவசியமாக இருக்கிறது... உங்களது நம்பிக்கை பெற்றவர்களைக் கொண்டு அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்க தயாரித்து வைத்திருப்பவர்களைக் கொண்டு படைப்பிரிவுகளை ஒழுங்கமையுங்கள்! உக்ரைனிய இராணுவம் குடிமக்களின்’ கட்டுப்பாட்டில் செயல்பட்டாக வேண்டும்.” பாசிஸ்டுகளுடன் சேர்ந்து வேலைசெய்வதற்கான அழைப்புகளை வெளியிடுகின்ற NPA இன் முடிவும், அத்தகைய நிலைப்பாடுகளை USFI அறிக்கை ஒன்றில் முறையாக ஏற்றுக் கொண்டிருப்பதும் ஒரு அரசியல் மைல்கல்லைக் குறித்து நிற்கின்றன. அதிகரித்துச் செல்லும் ஏகாதிபத்தியப் போர்களும் மற்றும் சமூக நெருக்கடிகளும், இந்த குட்டிமுதலாளித்துவக் குழுக்கள் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவடன் கட்டிப்போடுவதற்கு முதலாளித்துவக் கட்சிகளுடன் சேர்ந்து வேலை செய்த அதேநேரத்தில் “இடது” எனவும் காட்சிதர வழிவகை அளித்திருந்த அரசியல் கட்டமைப்பினை, உடைத்து நொருக்கி விட்டிருக்கின்றன. பாசிசக் குழுக்களுடன் இணைந்து வேலை செய்வதை வழிமொழிந்ததன் மூலம், இந்த முகமூடி நழுவி, பின்னே இருந்த வலது-சாரி நிதர்சனத்தை வெளிப்படுத்தி விட்டிருக்கிறது. NPA இன் பரிணாம வளர்ச்சி - அதன் முன்னோடி புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் (LCR) ட்ரொட்ஸ்கி மற்றும் சோசலிசம் ஆகியவை தொடர்பாகப் பராமரித்த வெறும் குறியீட்டு மட்டத்திலான தொடர்பு எதனையும் கூடத் துண்டிக்கின்ற பொருட்டு ஐந்து வருடங்களுக்கு முன்பாக இது ஸ்தாபிக்கப்பட்டது - அது ஸ்தாபிக்கப்பட்ட சமயத்தில் WSWS செய்த மதிப்பீட்டை முழுமையாக ஊர்ஜிதம் செய்திருக்கிறது. 2009 இல் WSWS எழுதியது: ”LCR தன்னைத்தானே கலைத்துக்கொள்வதன் உண்மையான குறி ட்ரொட்ஸ்கியின் அரசியல் பாரம்பரியத்தை, அதாவது தொழிலாள வர்க்கத்தின் முழுமையான அரசியல் சுயாதீனம், புரட்சிகர சர்வதேசியவாதம், மற்றும் முதலாளித்துவ அரசுடனும், ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களுடனும், அத்துடன் அத்தனை வகையான முதலாளித்துவ தேசியவாத மற்றும் குட்டி-முதலாளித்துவ தீவிரநிலைவாதங்களுடனும் இணைந்து வேலை செய்வதற்கு சமரசமற்ற எதிர்ப்பு ஆகியவற்றின் மீதான வலியுறுத்தலை, குறிவைத்ததாகும்.... தனது வழிகாட்டல் தத்துவமாக முதலாளித்துவ எதிர்ப்பை அது தேர்வு செய்திருப்பதென்பது, ஐரோப்பிய அத்துடன் குறிப்பாக பிரெஞ்சு அரசியல் சூழலின் உள்ளடக்கத்தில் இருந்து பார்த்தால், பின்நோக்கிய மற்றும் வலது நோக்கிய, பயணமாய் மாற்றிக் கொள்வதை நோக்கிய ஒரு பிரம்மாண்டமான அடியெடுப்பு ஆகும். அரசியல்ரீதியாக எந்த பேதமும் இல்லாமல், வர்க்க அடிப்படை அல்லது நோக்குநிலை இவை கருத்தில் கொள்ளப்படாமல் சமூக அதிருப்தியின் அத்தனை வகைகளையும் இது ஏற்றுக் கொள்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பியரி-ஜோசப் பிரவுதான் முன்வைத்த அராஜகவாதத்தில் ஆரம்பித்து 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் Pierre Poujade இன் வன்முறையான வலது-வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வரையிலும் இடது வலது இருபக்கத்திலுமான குட்டிமுதலாளித்துவத்தின் பெரும் பிரிவுகள் ஏற்றுக் கொள்கின்ற வகையான ஒரு வார்த்தைப் பிரயோகமாக இது இருக்கிறது.” நாஜி-ஆதரவுக் குழுக்களுடன் கூட்டணி சேர்வதற்கு NPA அழைப்பு விடுக்கின்ற ஒரு நேரத்தில், நாஜி கட்சிக்குள்ளேயும் கூட தங்களை முதலாளித்துவ-விரோதிகளாக வெளிக்காட்டிக் கொண்ட கூறுகள் இருந்தன என்பதை இங்கே சேர்த்துப் பார்ப்பது பொருத்தம். NPA இன் வரலாற்றுத் தலைவரான அலென் கிரிவின் “புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில் வரலாறு குறித்து அளித்த அகநிலைவாத, மார்க்சிச-விரோத கண்ணோட்டத்தையே NPA தனது பிற்போக்குத்தனமான அரசியலுக்கு அடிப்படையாகக் கொண்டுள்ளது. பெண்ணிய, சுற்றுச்சூழலிய, தொழிற்சங்கவாத, மற்றும் போலி-இடது குழுக்களுடன் “ஐக்கிய முன்னணி”களை கட்டும் திறன்படைத்த ஒரு அமைப்புக்கு அழைப்பு விடுத்து அவர் எழுதினார்: “ஆயினும் LCR போலன்றி, NPA சில பிரச்சினைகளைகளுக்குத் தீர்வு காண்பதில்லை, அவற்றை வருங்கால மாநாடுகளுக்காய் திறந்த நிலையில் விட்டு விடுகிறது, உதாரணமாக அதிகாரத்தைக் கைப்பற்றுதல், இடைமருவல் கோரிக்கைகள், இரட்டை அதிகாரம், இன்ன பிற குறித்த அத்தனை மூலோபாய விவாதங்களைக் கூறலாம். உள்ளபடியே அது தன்னை ட்ரொட்ஸ்கிச வகையினதாக கூறிக் கொள்வதில்லை, ஆனால் புரட்சிகர இயக்கத்திற்கான பங்களிப்பில் ட்ரொட்ஸ்கிசமும் ஒன்று என்று கருதுகிறது. ஸ்ராலினிசத்தின் கீழ் நாம் செய்ய வேண்டியிருந்ததைப் போல், பின்னால் காட்டும் கண்ணாடி கொண்டு ஒரு கொள்கைக்கு வந்தடைகின்றதில் விருப்பம் இல்லாமல், சோவியம் ஒன்றியம் என்னவாக இருந்தது, ஸ்ராலினிசம் என்னவாக இருந்தது என்பதில் எல்லாம் NPAக்கு எந்த நிலைப்பாடும் கிடையாது. காலகட்டம் மற்றும் கடமைகள் குறித்த பகுப்பாய்வின் மீதான உடன்பாட்டை அடிப்படையாகக் கொண்டே கொள்கை உருவாக்கப்படுகிறது.” பரந்த ஐக்கியத்திற்கான ஒரு சகிப்புத்தன்மையுடனான தத்துவம் போல பாவனை செய்கின்ற இந்த பரவலான நடைமுறைவாத மற்றும் மார்க்சிச-விரோதக் கண்ணோட்டத்தின் பிற்போக்குவாத உள்ளடக்கத்தையே உக்ரேனிய பாசிஸ்டுகளை நோக்கிய NPA இன் நோக்குநிலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சோவியத் ஒன்றியத்தையும், ஸ்ராலினிசத்துக்கு எதிராய் சோசலிசத்துக்கான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தையும், அத்துடன் 20 ஆம் நூற்றாண்டின் வர்க்கப் போராட்டங்களையும் நிராகரித்ததன் மூலமாக, ஏகாதிபத்தியத்திற்கும் NPA இன் சொந்த குட்டி முதலாளித்துவ சமூக அடித்தளத்திற்கும் அவசியப்படக் கூடிய கூட்டணிகளை உருவாக்குவதில் இருந்த அத்தனை அரசியல் முட்டுக்கட்டைகளையும் NPA அகற்றி விட்டது. சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவம் மீட்சி செய்யப்படுவதை ஆதரித்த மற்ற போலி-இடது சக்திகளுடனும் மற்றும் ஸ்ராலினிச சக்திகளுடனும் மட்டுமல்ல, சிஐஏ, அல் கெய்தா மற்றும் பாசிசக் கட்சிகளுடனும் கூட “ஐக்கிய முன்னணிகளை” உருவாக்க அதனால் முடியும். ”காலகட்டம் மற்றும் கடமைகள் குறித்த பகுப்பாய்வின் மீதான உடன்பாடு” என்ற ஒரு குறுகிய, வரலாற்று வழிவகையல்லாத முறையை அடிப்படையாகக் கொண்டு NPA உக்ரேனிய பாசிசம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உடன் சேர்ந்து வேலை செய்தது. உக்ரைனில் நெருக்கடி நிலவுவது குறித்தும் யானுகோவிச்சை கவிழ்க்கின்ற கடமையிலும் தான் இது அச்சக்திகளுடன் உடன்பட்டிருக்கிறது. இந்த அணிவரிசையானது ஏகாதிபத்திய சூழ்ச்சிக்கான NPA இன் ஆதரவை மட்டும் பிரதிபலிக்கவில்லை, ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆழமடைகின்ற வர்க்கப் பதட்டங்கள் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு அதன் பிற்போக்குத்தனமான பதிலிறுப்பையும் பிரதிபலிக்கிறது. ஐரோப்பாவெங்கும் ஒவ்வொரு நாட்டிலும், பப்லோவாத சக்திகள் பல தசாப்தங்களாய் தங்களது திசையமைவுக்கு இலக்காகக் கொண்ட சமூக ஜனநாயகக் கட்சிகள் எல்லாமே, 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளால் மதிப்பிழந்து உருக்குலைந்து கொண்டிருக்கின்றன. மிக மிருகத்தனமான சமூக வெட்டுகளை அமலாக்கிய கிரீஸின் PASOK, ஆட்சிக்கான கிரீஸின் முதலாளித்துவ “இடது” கட்சியாக இருந்ததில் இருந்து கன்சர்வேடிவ் தலைமை கொண்ட ஒரு கூட்டணி அரசாங்கத்தில் வேலை செய்கின்ற அத்துடன் பத்து சதவீதத்துக்கும் குறைவாய் வாக்குகளைப் பெறுகின்ற ஒரு சிறு கட்சியாக சுருங்கி விட்டிருக்கிறது. பிரான்சில் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் ஒப்புதல் தரமதிப்பீடுகள் வீழ்ச்சி கண்டு செல்வதைக் கண்டு NPA திகைத்துப் போய் நிற்கிறது. ஹாலண்ட் சமூக வெட்டுகளையும் சுதந்திரச் சந்தை கொள்கைகளையும் அமல்படுத்துவார் என்பதை சிடுசிடுப்புடன் ஒப்புக்கொண்டே 2012 ஜனாதிபதித் தேர்தலில் ஹாலண்டுக்கு NPA வழிமொழிந்தது. இப்போது அது, NPA மற்றும் பிற போலி-இடது குழுக்கள் மீதான வெகுஜனப் பிரமை விலகுவதின் மீது நம்பியிருக்கின்றதும் அத்துடன் பிரான்சின் ஒரே எதிர்க்கட்சித் தரப்பாகக் காட்டிக் கொள்கின்றதுமான மரின் லு பென்னின் நவபாசிச FN இன் எழுச்சியை எச்சரிக்கையுடன் கவனித்துக் கொண்டிருப்பதோடு NPA இன் எதிர்காலம் மீது அது செலுத்தக் கூடிய தாக்கத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது. NPA இன் பிரான்சுவா சபதோ (François Sabado) சென்ற ஜூலையில் அவரது “சர்வதேச சூழ்நிலை மீதான அறிக்கை”யில், முதலாளித்துவ “இடதின்” தாக்குப்பிடிப்பு திறன் மீது அவரது கட்சி கொண்டிருந்த இரும்பு போன்ற உறுதியான நம்பிக்கை உலுக்கப்பட்டிருந்தது என்பதை ஒப்புக் கொண்டார். அவர் எழுதினார், “பிரான்சில் அரசியல் மற்றும் அறநெறிநிலையிலான நெருக்கடி பிரம்மாண்டமானதாய் இருக்கிறது. சோசலிஸ்ட் கட்சியின் கொள்கைகள் மிகப்பெருமளவுக்கு நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. ’கிரேக்க PASOK இன் கதி கிரேக்கத்திற்கு மட்டும் உரியது, சமூக ஜனநாயகக் கட்சி பலவீனமடையலாமே தவிர அந்த மட்டத்திற்கு உருக்குலையாது’ என்றே நாங்கள் கருதினோம். பிரான்சில் சமீபத்திய இடைத்தேர்தலை நாம் பகுப்பாய்வு செய்தால், PSக்கும் இதே வகை உருக்குலைவை நாங்கள் சாத்தியமில்லாததாகக் கூறிவிட முடியாது.” NPA போன்ற ஒரு ஊழலடைந்த, குட்டி-முதலாளித்துவக் கட்சிக்கு, PS இன் உருக்குலைவு சாத்தியத்தை தொழிலாள வர்க்கத்தில் ஒரு வெகுஜனப் புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான சாத்தியத்திற்கு (இதற்கு அக்கட்சி சமரசமற்ற குரோதமுடையதாக இருக்கிறது) வலுவூட்டுவதாகப் பார்க்க முடியவில்லை. மாறாக NPA பல தசாப்தங்களாக அனுபவித்து வந்திருக்கும் பெருமித மற்றும் கவுரவ நிலைகளில் ஒரு படுபயங்கரமான இழப்பைக் கொண்டு அச்சுறுத்துவதாகப் பார்க்கிறது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களை ஒடுக்கிய அதேநேரத்தில் NPA தலைவர்களுக்கு பிரான்சின் பெருநிறுவன நிதியாதாரம் கொண்ட தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் சொகுசான பதவிகளையும், இலாபவாய்ப்பு கொண்ட கல்விக் கையளிப்புகளையும், அத்துடன் ஊடக அணுகலையும் உறுதியளித்திருந்த ஒரு அரசியல் சூழலை PS மேற்பார்வை செய்து வந்திருக்கிறது. FN இன் செல்வாக்கு முதலாளித்துவ வட்டத்திற்குள் வளர்ச்சி காண்கின்ற நிலையில், NPA, அதன் உக்ரைன் கொள்கையின் மூலமாக, ஒருநாள் அதன் புதிய எஜமானர்களாய் ஆக வாய்ப்பிருக்கிற சக்திகளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்வதற்கு இப்போது ஆழம்பார்த்துக் கொண்டிருக்கிறது. தமது முக்கியமான கோட்பாடுகள் பாசிச சக்திகளுடன் எந்தவிதமான கூட்டு சேர்வதையும் தடுக்கும் என்பதாக NPA அல்லது USFI யிடம் இருந்து வருகின்ற ஆட்சேபங்கள் எல்லாம் சிடுமூஞ்சித்தனமான பொய்களாக இருக்கும். உண்மையில் தனக்கு எந்தக் கோட்பாடுகளும் கிடையாது என USFI பெருமையடித்துக் கொள்கிறது. USFI இன் டேனிஷ் பிரிவுத் தலைவரான பெர்டில் விடேட், இடதின் புதிய கட்சிகள் என்ற புத்தகத்தில் எழுதியவாறாக, “இத்தாலிய கம்யூனிஸ்ட் மறுஸ்தாபக கட்சி ஆப்கானிஸ்தானில் இத்தாலிய இராணுவம் தலையீடு செய்வதையும் இத்தாலியில் அமெரிக்க தளங்களையும் ஆதரித்த விடயத்தில் கண்டது போல, ஒரு முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி அதிகாரத்தின் சுவையில் இழுக்கப்பட்டு பிரதானக் கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காது என்பதற்கு எங்களிடம் எந்த உத்தரவாதமும் கிடையாது.” இந்த பிற்போக்குத்தனமான அறிக்கையின் மூலமும், உக்ரேனிய பாசிஸ்டுகளுக்கு வழங்குகின்ற ஆதரவின் மூலமும் USFI, வலது கையூட்டிற்குப் பிரதிபலனாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான எந்த அரசியல் குற்றத்தையும், அது எத்தனை அருவெருப்பூட்டக் கூடியதாக இருந்தாலும், செய்ய அது தயாராக இருப்பதை முதலாளித்துவ வர்க்கத்திற்கு சமிக்கை செய்கிறது. வரவிருக்கும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களில் இது சமூகப் பிற்போக்குத்தனத்தின் அதிவலது முகவராகச் செயல்படும். |
|
|