World Socialist Web Site www.wsws.org |
What way forward for workers in Ukraine? உக்ரேனிய தொழிலாளர்களின் முன்னால் உள்ள பாதை என்ன?
Alex Lantier கியேவில் உள்ள தேர்ந்தெடுக்கப்படாத, மேற்கத்திய ஆதரவிலான ஆட்சியின் ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பாரிய வேலை நீக்கங்களுக்கான எதேச்சதிகார கட்டளைகள், மேற்கிலும் மற்றும் ரஷ்ய மொழி பேசும் பெரும்பான்மையினரைக் கொண்ட அந்நாட்டின் கிழக்கிலும் உள்ள உக்ரேனிய தொழிலாளர்கள் முகங்கொடுத்து வரும் கடும் அபாயங்களை அடிக்கோடிடுகிறது. அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் நிதியுதவி வழங்கப்பட்டு வழி நடத்தப்பட்ட, கடந்த மாத ஆட்சி கவிழ்ப்பின் பிற்போக்குத்தனமான குணாம்சம், மேலதிகமாக தெளிவாகி வருகிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான விவாதங்களை அடிப்படையாக கொண்டு, பிரதம மந்திரி அர்செனி யாட்செனியுக் நேற்று தெரிவிக்கையில், உக்ரேனிய மக்கள் நல பணியாளர்களில் 10 சதவீதத்தினரை, அதாவது 24,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாகவும், இயற்கை எரிவாயு விலைகளில் ஒரு 50 சதவீத உயர்வைத் திணிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். சோவியத் ஒன்றிய முதலாளித்துவ மீட்சிக்குப் பின்னர் எஞ்சியிருந்த மானியங்களை இல்லாதொழித்து, இந்த விலையுயர்வானது மில்லியன் கணக்கான உக்ரேனியர்களின் வாழ்க்கை நிலைமைகளில் ஒரு பேரழிவுகரமான தாக்கத்தைக் கொண்டிருக்கும். இந்த முறைமைகள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிதி மூலதனங்களால் தயாரிக்கப்பட்டு வரும் தாக்குதலின் ஒரு முன்மாதிரி மட்டுமே ஆகும். தேர்தல்கள் முடிந்த பின்னர், கியேவில் அமையும் கைப்பாவை அரசாங்கம் கடுமையான சிக்கன முறைமைகளை மேலதிகமாக நடைமுறைப்படுத்தும். ஐரோப்பிய ஒன்றியம், முக்கியமாக ஜேர்மன் ஏகாதிபத்தியம், உக்ரேனை வெறுமனே ரஷ்யாவிற்கு எதிரான எதிர்கால நடவடிக்கைகளுக்கான ஒரு முக்கிய களமாக மட்டும் காணவில்லை, மாறாக மலிவுகூலி தொழிலாளர்களுக்கான ஒரு முக்கிய ஆதாரவளமாகவும் காண்கிறது. ஒரு வெளிப்படையான கருத்துரையில், ஜேர்மனின் நிதி மந்திரி வொல்ஃப்காங் ஷொய்பிள நேற்று கூறுகையில், “உக்ரேனை ஸ்திரப்படுத்தும் ஒரு சூழ்நிலையை நாம் அடைய வேண்டுமானால், நாம் கிரீஸிடமிருந்து பல அனுபவங்களைப் பெற வேண்டுமென,” கூறினார். 1991இல் சோவியத் ஒன்றிய கலைப்பின் பேரழிவுகரமான சமூக மற்றும் புவிசார்-மூலோபாய விளைவுகளை நேருக்குநேர் சந்திக்குமாறு தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர். ரஷ்யாவிற்கு எதிரான ஒரு யுத்த அச்சுறுத்தலைக் கொண்ட, பொறுப்பற்ற இராஜாங்கரீதியிலான மற்றும் இராணுவரீதியிலான ஆத்திரமூட்டுதல்களுக்காக, உக்ரேனை மற்றும் ஏனைய முன்னாள் சோவியத் குடியரசுகளை வறிய, நவ-காலனித்துவ முகாம்களாக மாற்றுவதே ஏகாதிபத்திய சக்திகளின் கொள்கையாகும். உக்ரேனிலிருந்து பிரிய மற்றும் ரஷ்யாவுடன் இணைய வாக்களித்த கிரிமியாவின் சர்வஜன வாக்கெடுப்பை இடித்துரைத்து, புதிய உக்ரேனிய அரசாங்கத்தால் வரையப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் நேற்றைய பொதுச்சபை தீர்மானம், ஆத்திரமூட்டல் மற்றும் பாசாங்குத்தனத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகும். அந்த சர்வஜன வாக்கெடுப்பு "செல்லாது" என்று கூறி, அமைதி பேச்சுவார்த்தை நடத்தவும், “பதட்டங்களை அதிகரிக்கும் உணர்ச்சிகரமான வார்த்தைகளைப்" பிரயோகிக்க வேண்டாமென்றும் அது அழைப்பு விடுக்கிறது. என்னவொரு பாசாங்குத்தன அசிங்கம்! ஈராக்கிலிருந்து, லிபியா வரையில் எதை அச்சுறுத்தல் என்று அறிவித்து, எந்தவொரு நாட்டையும் தாக்கும் உரிமையை, ஒரு கொள்கையாக கொண்டிருக்கும் அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஆதரிக்கப்பட்ட Right Sector போன்ற பாசிச குழுக்களின் கும்பல்களையும் மற்றும் கையெறி போத்தல்குண்டுகளையும் ஆதரவாகக் கொண்டே கியேவில் அரசு அதிகாரத்திற்கு வந்தது. பாசிச ஸ்வோபோடா கட்சியின் ஆறு நபர்கள் மந்திரிகளாக பெயரிடப்பட்ட பின்னரும், மேற்கத்திய அதிகாரங்கள் கியேவ் ஆட்சியை ஆதரிப்பதைத் தொடர்ந்தன. அவர்களின் ஆத்திரமூட்டும் வாய்சவடால்களில், ஸ்வோபோடா யாரை உக்ரேனிய வெறுப்பாளர்கள் (Ukrainophobes) என்று கருதியதோ அவர்களையும், அனைத்து ரஷ்ய புத்திஜீவிகளையும் "உடல்ரீதியாக ஒழித்துக் கட்ட" இணையத்தில் அழிப்பு விடுத்தமையும் உள்ளடங்கும். மேலும் மேற்கத்திய-ஆதரவிலான ஒரு முன்னணி செல்வந்தரும், முன்னாள் உக்ரேனிய பிரதம மந்திரியுமான யூலியா திமொசென்கோ, ஜனாதிபதி பதவிக்கு அவர் வேட்பாளராக நிற்க போவதை நேற்று அறிவித்தார். ஒரு கசிந்த தொலைபேசி உரையாடலில், திமொசென்கோ உக்ரேனில் உள்ள ரஷ்யர்களை நிர்மூலமாக்க அழைப்பு விடுத்தார். “எனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்து ஒட்டுமொத்த உலகத்தையும் அணிதிரட்டுவேன், அதன் மூலமாக அங்கே ரஷ்யாவின் எரிந்துபோன நிலம் கூட எஞ்சியிருக்காது,” என்று அவர் அறிவித்தார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஆட்சி, அதன் பங்கிற்கு, உக்ரேனுக்கான ரஷ்ய இயற்கை வாயு வினியோகத்தை நிறுத்தும் அல்லது அதிக விலை நிர்ணயிக்கும் அச்சுறுதலோடு எதிர்வினையை காட்டியுள்ளார் — இந்த முறைமை உக்ரேனிய தொழிலாளர்களின் நிதிச்சுமையை கூடுதலாக ஆழப்படுத்த மட்டுமே சேவைசெய்யும். உக்ரேனிய தொழிலாள வர்க்கம், ஒருபுறம், கியேவில் உள்ள மேற்கத்திய-ஆதரவிலான கைப்பாவை ஆட்சி மற்றும் அவற்றின் பாசிச துப்பாக்கிதாரிகளின் பிற்போக்குத்தனமான அரசியலுக்கும், மறுபுறம், ரஷ்யாவின் முதலாளித்துவ செல்வந்த மேற்தட்டுக்களின் நலன்களை பிரதிபலிக்கும் புட்டினின் திவாலாகிப் போன ரஷ்ய தேசியவாத அரசியலுக்கும் இடையே மாட்டிக் கொண்டிருக்கிறது. இந்த விளைவானது, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் போது நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவால் (ICFI) வழங்கப்பட்ட முன்னோக்கு மற்றும் பகுப்பாய்வின் சரியானதன்மையை உறுதிப்படுத்துகிறது. மேற்கு ஐரோப்பாவிலும் மற்றும் அமெரிக்காவிலும் இருப்பதைப் போல, முன்னாள் சோவியத் தொழிலாளர்களுக்கான ஒரே முற்போக்கான பாதை, நிதியியல் மூலதனம் மற்றும் சோவியத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இரண்டிற்கும் எதிரான ஓர் ஐக்கியப்பட்ட போராட்டம் மட்டுமே ஆகும். சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு முன்னால், அக்டோபர் 3, 1991 இல், கியேவில் உள்ள ஒரு தொழிலாளர் மன்றத்தில், உலக சோசலிச வலைத் தளத்தின் தற்போதைய சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்தால் வழங்கப்பட்ட ஓர் உரையில், அவர் சோவியத் அதிகாரத்துவத்தின் தேசியவாத கொள்கைகளின் விளைவுகளைக் குறித்தும், உக்ரேன் உட்பட அந்த குடியரசுகளில் உள்ள முதலாளித்துவ-சார்பு தேசியவாதிகளைக் குறித்தும் எச்சரித்தார். “ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் ஜனநாயகவாதிகளுக்கு இடையிலான மோதல், எதிர்விரோத மாஃபியா கும்பல்களுக்கு இடையிலான மோதலை ஒத்திருக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார். நோர்த் தொடர்ந்து கூறுகையில், “இந்த குடியரசுகளில், தேசியவாதிகள் புதிய "சுதந்திர" அரசுகளை உருவாக்குவதில் தான் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வு தங்கியிருப்பதாக வலியுறுத்துகின்றனர். யாருக்கு சுதந்திரம்? என்று எம்மை கேட்க அனுமதியுங்கள். மாஸ்கோவிலிருந்து "சுதந்திரத்தை" பிரகடனப்படுத்திக் கொண்டு, இந்த தேசியவாதிகள் அவர்களின் புதிய அரசுகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட எந்தவொரு முக்கிய முடிவுகள் எடுப்பதையும் ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் கரங்களில் கொண்டு போய் நிறுத்துவார்கள் என்பதற்கு குறைவாக அவர்கள் வேறொன்றும் செய்யப் போவதில்லை. [அப்போதைய உக்ரேனிய நாடாளுமன்ற சேர்மேனும், விரைவிலேயே உக்ரேனிய ஜனாதிபதியாக ஆக இருந்தவருமான] [லியோனிட்] கிராவ்சக் வாஷிங்டனுக்குச் சென்று, ஜனாதிபதி புஷ் உரையாற்றும் போது ஒரு பள்ளி மாணவனைப் போல அவரது இருக்கையில் நெளிந்து கொண்டிருக்கிறார். “நான்காம் அகிலம் எப்போதுமே தேசியங்களின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாத்துள்ளதோடு, கிரெம்ளின் அதிகார மேற்தட்டால் மேலாதிக்கம் செலுத்தப்பட்ட ஒரு சோவியத் அரசிலிருந்து பிரிந்து செல்வதற்கான உக்ரேனின் உரிமை குறித்து ட்ரொட்ஸ்கி 1939இல் அற்புதமாக பேசி இருந்தார். அது தான் நான்காம் அகிலத்தின் அரசியல் நிலைப்பாடாக உள்ளது. இருந்த போதினும், பிரிவினையானது உக்ரேன் மற்றும் ஏனைய குடியரசுகள் எதிர்கொண்டுள்ள மரணகதியிலான பிரச்சினைகளுக்கு ஒரு விடையளிக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்க நாம் விரும்பவில்லை. உண்மையில், உத்தியோகபூர்வமாக சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட, அந்த சுதந்திர குடியரசுகள் ஓர் ஒருமுகப்பட்ட வடிவத்தில், அவை சோவியத் ஒன்றிய கட்டமைப்பிற்குள் முன்னர் என்ன மாதிரியான பிரச்சினைகளை முகங்கொடுத்தனவோ அதே போன்ற அனைத்து பிரச்சினைகளை — அதுவும் ஒரு 'பெரியளவிலான பொருளாதாரத்தோடு'... ஒரு பெரிய அரசுடன் இருப்பதால் கிடைத்த எந்தவொரு ஆதாயங்களும் இல்லாமல் — முகங்கொடுக்கக்கூடும். “அவ்வாறாயின், சோவியத் ஒன்றியத்தின் உழைக்கும் மக்கள் எந்த வழியில் செல்வது? மாற்றீடு தான் என்ன? புரட்சிகர சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு தீர்வு மட்டுமே காணக்கூடியதாக உள்ளது. முதலாளித்துவத்திற்கு திரும்புவதென்பது, ஒடுக்குமுறையின் ஒரு புதிய வடிவத்திற்கு மட்டுமே இட்டுச் செல்லும். தேசியவாதிகளின் பேரினவாத தூண்டுதல் என்பது அதில் ஒரேயொரு வேடம் மட்டும் தான். சோவியத் தேசிய இனங்களின் ஒவ்வொன்றும் தலைக்குனிந்து, மண்டியிட்டு தனித்தனியாக ஏகாதிபத்தியவாதிகளிடம் சரணடைவதற்கு மாறாக, அனைத்து தேசிய இனங்களின் சோவியத் தொழிலாளர்களும், நிஜமான சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையில், ஒரு புதிய உறவை ஸ்தாபிக்க வேண்டும், மற்றும் அதன் அடிப்படையில் 1917இன் மரபில் மதிப்பார்ந்து தங்கியுள்ள அனைத்தையும் புரட்சிகரமாக பாதுகாப்பதைக் கையிலெடுக்க வேண்டும்,” என்றார். முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் ஏகாதிபத்தியத்தின் ஈவிரக்கமற்ற தாக்குதல், இந்த கருத்துக்களுக்கு புதுப்பிக்கப்பட்ட முக்கியத்துவத்தை வழங்குகின்றன. |
|