World Socialist Web Site www.wsws.org |
The GM ignition scandal and the case for public ownership GM இன் இக்னிஷன் கருவி மோசடியும், பொதுவுடைமை விவகாரமும்
Shannon
Jones உயிரிழப்பு ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதாக அறியப்படும் இக்னிஷன் கருவி (ignition switch) குறைபாடு குறித்து ஜெனரல் மோட்டார்ஸ் (GM) மற்றும் அரசாங்க ஒழுங்குமுறை ஆணையங்களால் திட்டமிட்டு மூடிமறைக்கப்பட்ட விவகாரத்தின் மீது நாள்தோறும் புதிய ஆதாரங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. பணத்தை மிச்சம் பிடிப்பதிலும், வாகனங்களுக்கு மறுஅழைப்பு விடுப்பதைத் தவிர்ப்பதிலும் நிர்வாகம் விடாப்பிடியாக இருந்ததன் விளைவாக, நூற்று கணக்கில் இல்லையென்றாலும், டஜன் கணக்கான தேவையற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பத்திரிகை செய்திகள் குறிப்பிட்டு காட்டுகின்றன. இறுதியாக GMஆல் மறுஅழைப்பு விடுக்கப்பட்ட 2.6 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை ஓட்டியவர்கள் மரண ஆபத்தில் அல்லது காயப்படும் ஆபத்தில் இருந்தனர் என்பது ஐயத்திற்கிடமின்றி உள்ளது. அந்த வாகனங்களில், வண்டி "ஓடிக் கொண்டிருக்கும்" போதே, என்ஜின், பவர் ஸ்டீரிங் மற்றும் பவர் பிரேக்குகள் செயலிழந்து போய், உயிர்காப்பு பை (airbag) அமைப்புமுறையும் செயலிழந்து, இக்னிஷன் கருவி தற்செயலாக சிக்கலுக்கு உள்ளாகக் கூடியதாக இருந்தது. அதன் விளைவாக விபத்து சமயத்தில் உயிர்காப்பு பைகளின் உதவியும் கிடைக்காதபடிக்கு, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விடும். இந்த குறைபாட்டுடன் தொடர்புபட்ட பல அபாயகரமான விபத்துக்கள், வெளிப்படையாக நடந்திருந்தன. இந்த வெளியாகி வரும் இக்னிஷன் கருவி மோசடிக்கு இடையே, இதனோடு தொடர்பில்லாத, திடீரென பவர் ஸ்டீரிங் செயலிழக்கும் வேறொரு குறைபாட்டிற்காக, GM திங்களன்று மேலும் கூடுதலாக 1.3 மில்லியன் கார்களுக்கு மறுஅழைப்பு கொடுத்தது. அந்நிறுவனத்தின் வெளிப்படையான அலட்சியத்தால் பலியான மனித உயிர்களின் விலை கணக்கிட இயலாததாக உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட பெரும்பாலானவை குறைந்த விலை கார்களாக இருந்தன, அதை ஓட்டிய பெரும்பாலான ஓட்டுனர்கள் இளைஞர்களாவர். தங்களின் அன்புக்குரியவர்களைத் திடீரென இழந்த இழப்பிலிருந்து குடும்பங்களால் ஒருபோதும் மீண்டு வர முடியாது. நிறுவனத்தின் பணக்கணக்கு குறித்து GM நிறுவனத்தின் திட்ட பொறியியல் பிரிவு நிர்வாகி ஒருவரின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது, குறைபாடு மீது ஒரு விசாரணை மேற்கொள்ளுமாறு வழங்கப்பட்ட அவரது உத்தரவு 2005இல் கைவிடப்பட்டது, திங்கட்கிழமையின் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெளியான ஓர் அறிக்கையின்படி, இது ஏனென்றால் “அதை பொருத்தும் செலவு மற்றும் கருவியின் விலை ஆகியவை மிகவும் அதிகம்" என்பதோடு, பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகள் எதுவுமே "ஏற்றுக்கொள்ளத்தக்க வியாபார வழக்கத்திற்கேற்ப இல்லை," என்பதாலும் அந்த உத்தரவு கைவிடப்பட்டது. பெருநிறுவன இலாபத்தின் மேல் தங்கியிருந்த இந்த மனித உயிர்களின் தியாகம், பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான, வாகனத்துறையை பொதுவுடைமையின் கீழ் கொண்டு வருவதற்கான மற்றும் உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான, அவசியத்தை அடிக்கோடிடுகிறது. அரசு தரப்பு ஒழுங்குமுறை ஆணையமான தேசிய நெருஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகமும் (NHTSA), GM நிறுவனமும் இரண்டுமே GM வாகனங்களில் இருந்த அபாயகரமான குறைபாடுகள் குறித்து, அதில் உயிர்காப்பு பைகள் வேலை செய்யாது என்பதையும் மற்றும் இக்னிஷன் கருவி "சரியாக வேலை செய்யாது" அல்லது "நின்றுவிடும்" என்பதையும், பல ஆண்டுகளாக அறிந்திருந்ததாக உள்துறை ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அந்த நிறுவனமும் சரி, ஒழுங்குமுறை ஆணையமும் சரி இரண்டுமே இந்த உண்மைகளைப் பொது மக்களிடம் இருந்து மறைத்ததோடு, குறைபாடோடு இருந்த கார்களைத் திரும்ப கொண்டு வரும் ஒரு மறுஅழைப்புக்கு உத்தரவிட தவறின. அதன் Saturn Ion கார்களில் இருந்த இக்னிஷன் கருவி பிரச்சினைகள் குறித்து அதற்கு 2001 ஆரம்பத்திலேயே தெரியுமென்பதையும், அதன் சொந்த தொழில்நுட்ப தர நிர்ணயங்களையே அந்த கருவி பூர்த்தி செய்திருக்கவில்லை என்றபோதினும் அது அக்கருவிகளை உற்பத்தி செய்ய அனுமதி அளித்ததென்றும் இப்போது GM ஒப்புக் கொள்கிறது. செவ்ரோலெட் கோபால்ட் இக்னிஷன் குறித்து பல வாடிக்கையாளர்களிடம் இருந்து குறைகள் வரத் தொடங்கியதும், GM பொறியாளர்கள் 2005இல் அதை சரி செய்ய பரிந்துரைத்தனர், ஆனால் நிர்வாகம் அதை நிராகரித்தது. அதற்கு மாறாக, Cobalt, Ion மற்றும் ஏனைய ரக வாகனங்களின் இக்னிஷன் கருவிகளில் இருந்த பிரச்சினைகள் குறித்து அறிவுறுத்தி GM அதன் வினியோகஸ்தர்களுக்கு ஒரு குறிப்பறிக்கை அனுப்பியதோடு, சாவி வளையங்களில் இருந்து கனமான பொருட்களை நீக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு கூறுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தியது. 2007ஆம் ஆண்டின் வாகனங்களில் இருந்து மறுவடிவாக்கம் செய்யப்பட்ட இக்னிஷன் கருவியை பொருத்த, 2006இல், GM சத்தமில்லாமல் உத்தரவிட்டது. இருந்தபோதினும், அது அந்த கருவிக்கு ஒரு புதிய பாக எண்ணை ஒதுக்கவில்லை. Automotive Newsஆல் மேற்கோளிடப்பட்ட ஒரு பொறியாளரின் கருத்துப்படி அதுவொரு "அடிப்படை பிழையாகும்". அதே பாக எண்ணைப் பயன்படுத்துவதென்று எடுக்கப்பட்ட முடிவு மீண்டும் ஒரு திட்டமிட்ட மூடிமறைப்பைக் குறித்துக் காட்டுகிறது. இதற்கிடையில், அபாயங்களின் மேலதிக ஆதாரங்கள் வெளியாகின. உயிர்களைப் பறித்த 2005 விபத்துகளில் உயிர்காப்பு பைகள் செயல்படாதமை குறித்தும், இக்னிஷன் கருவி மிகத் தெளிவாக "சரிவர செயல்படாத" நிலையில் இருந்தது குறித்தும் விவாதிக்க, மார்ச் 2007இல், NHTSA மூடிய கதவுகளுக்குப் பின்னால் GM உடன் சந்திப்பு நிகழ்த்தியது. இருப்பினும், GM நிறுவனமோ அல்லது NHTSA ஆணையமோ ஒரு மறுஅழைப்பிற்கு உத்தரவிடவில்லை. அந்த கூட்டத்தில் என்ன உரையாடப்பட்டதென்ற குறிப்புகளும் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை. கருவியின் குறைபாடு காரணமாக 13 பேர் உயிரிழிந்திருப்பதாக அவர்களுக்குத் தெரிய வந்திருப்பதாக GM நிர்வாகிகள் கூறுகின்றனர், ஆனால் நிஜமான எண்ணிக்கை அதையும் விட அதிகமாக இருக்கக்கூடும். கார்கள் ஓடிக் கொண்டிருக்கும் போதே என்ஜின்கள் நின்று விடுகிறதென்று GM வாகனங்கள் குறித்து வாடிக்கையாளர்களிடம் இருந்து NHTSAக்கு 260 புகார்கள் வந்திருப்பதாக நியூ யோர்க் டைம்ஸ் செய்தி தெரிவித்து. உயிர்காப்பு பைகள் வேலை செய்யாமல், Cobalt மற்றும் Ion கார்கள் சம்பந்தபட்ட விபத்துக்களில் 2002 மற்றும் 2012க்கு இடையே 303 பேர் உயிரிழந்திருப்பதாக வாகன பாதுகாப்பிற்கான மையத்தின் வாடிக்கையாளர் குழுவால் NHTSA ஆவணங்கள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கண்டறிந்தது. GM-அரசாங்க மூடிமறைப்புகள் கொடூரமாக மனித உயிர்களைப் பறித்துள்ளது. நியூ யோர்க் டைம்ஸில் வெளியான ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பொய்கள் மற்றும் அலட்சியத்தோடு GM விடையிறுத்துள்ளது. 2010இல் செவ்ரோலெட் கோபால்ட் சம்பந்தப்பட்ட ஒரு விபத்தின் போது உயிர்காப்பு பைகள் செயல்படாமல் இறந்த 23 வயது பெண்ணின் குடும்பத்திற்கு கூறுகையில், அப்பெண்ணின் மரணத்திற்கும் வாகனத்தின் எந்தவொரு குறைபாட்டிற்கும் தொடர்பில்லை என்று GM தெரிவித்தது. மற்றொரு சம்பவத்தில், விபத்தில் பாதிக்கப்பட்டவர் குடும்பம் தொடுத்த வழக்கை அவர்கள் கைவிடவில்லையானால் அவர்களிடமிருந்து வழக்கு செலவுகளை வசூலிக்க நிறுவனம் நடவடிக்கை எடுக்குமென கூறி, GM அந்த குடும்பத்தை அச்சுறுத்தியது. NHTSA வஞ்சகமாக உடந்தையாய் இருப்பதென்பது, அரசாங்கம் பெரு வணிகங்களின் ஓர் அங்கமாக செயல்படுகின்றது என்பதை சித்தரிக்கின்றது. அரசு ஒழுங்குநெறி ஆணையங்களுக்கும், யாரை ஒழுங்குநெறியின் கீழ் நெறிப்படுத்த வேண்டுமோ அவர்களுக்கும் இடையில் அங்கே ஒரு முறையற்ற தொடர்பு உள்ளது. ஒரு சான்றைக் மேற்கோளிட்டு காட்டுவதானால், டிசம்பர் 2013இல், NHTSAஇன் தலைவர் டேவிட் ஸ்டிக்லாந்து, வாகனத்துறையின் சார்பாக தரகு வேலை செய்யும் ஒரு சட்ட நிறுவனத்தில் பொறுப்பேற்க, அவர் தமது பதவியை இராஜினாமா செய்தார். இதே ஊழல் தான், வளைகுடா எண்ணெய் கசிவில் BP உடன் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை ஆணையங்களிலும், வங்கி மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு இடையிலும், பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் மேலோங்கி உள்ளது. பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை இந்த வாரம் GM மோசடி மீது விசாரணை நடத்த உள்ளன. மற்றொரு மூடிமறைப்புக்கு செய்யப்பட்டு வரும் தயாரிப்பாக உள்ள அது, GM ஏன் தாமதமாக மறுஅழைப்பு விடுத்ததென்று விசாரித்து வரும் சபை கமிட்டியின் தலைவரான மிச்சிகனின் காங்கிரஸ் அங்கத்தவர் Fred Uptonஇன் குறிப்புகளால் ஏற்கனவே எடுத்துக்காட்டப்பட்டது. அவர், வாகனத்துறை உற்பத்தியாளரும், NHTSAவும் "புள்ளிகளை இணைக்க தவறிவிட்டன" என்று ஞாயிறன்று தெரிவித்தார். அரசாங்கம் முன்பே அறிந்திருந்தது என்பதை மூடிமறைக்க அல்லது 9/11இல் இருந்து பாஸ்டன் மாரத்தான் குண்டு வெடிப்பு வரையில் ஏற்பட்ட சேதங்களுக்கு அனுசரணையாக இருந்ததை மூடிமறைக்க பயன்பட்ட அதே சலித்து போன மற்றும் மதிப்பிழந்து போன பொய் பிரச்சாரம் அதே நோக்கத்தோடு மீண்டுமொருமுறை வாரி எடுக்கப்படுகிறது. Center for Responsive politicsஇன் கருத்துப்படி, 1989இல் இருந்து GM நிறுவனத்தின் மற்றும் தனிப்பட்ட GM பணியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஓர் அரசியல் நடவடிக்கை குழுவிடமிருந்து Uptonஇன் பிரச்சாரம் 73,750 டாலர்களைப் பெற்றுள்ளதோடு, Ford Motor அரசியல் நடவடிக்கை குழு மற்றும் பணியாளர்களிடம் இருந்து 100,000 டாலருக்கும் அதிகமாக பெற்றுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களின் விளைவாக முந்தையவொரு காலக்கட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்ட மட்டுப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைத் தகர்க்க, கடந்த நான்கு தசாப்தங்களாக, ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினர் இரு கட்சியினரும் ஓர் ஓயாத உந்துதலில் ஈடுபட்டுள்ளனர். 2009இல் GMஇன் நிர்பந்திக்கப்பட்ட திவால்நிலை மற்றும் மறுசீரமைப்பில், அரசு அந்நிறுவனத்திடமிருந்து பெரும்பான்மை பங்குகளைப் பெற்றது, அதை அது நவம்பர் 2010 வரையில் வைத்திருந்தது. ஒபாமா நிர்வாகத்தால் கொண்டு வரப்பட்ட ஒரு சட்ட திருத்தம், ஜூலை 2009க்கு முன்னரில் இருந்து தயாரிப்பு பொருளின் மீதான இழப்பீட்டு உரிமைகோரல் வழக்குகளால், மறுசீரமைக்கப்பட்ட நிறுவனம் பாதிக்கப்படாமல் இருக்க வழிவகை செய்தது. இது எப்போதென்றால் குறைபாடுடைய இக்னிஷன் கருவிகளால் ஏற்பட்ட அபாயகரமான விபத்துக்கள் குறித்து அரசாங்கமும், GM நிறுவனமும் ஏற்கனவே நன்கு அறிந்திருந்த போது தான் நடந்தது. சட்டமீறல் மற்றும் குற்றத்தன்மை என்பது சமகாலத்திய முதலாளித்துவத்தின் வரையறுக்கப்பட்ட உட்கூறுகளாக மாறி உள்ளன என்பதை இத்தகைய உண்மைகள் எடுத்துகாட்டுகின்றன. இதுபோன்ற குற்றங்கள் மனப்பிறழ்வுகளால் ஏற்படுபவை அல்ல. அது உற்பத்தி கருவிகளின் தனியுடைமை மற்றும் இலாபத்திற்கான உற்பத்தியில் தங்கியுள்ள அமைப்புமுறையோடு உள்ளார்ந்து உள்ளன. முதலீடுகள் மீது அதிகபட்ச இலாபங்கள் கோரும் வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்களின் தணியாத முறையீடுகளால் உந்தப்பட்டு, GM போன்ற பெருநிறுவனங்கள் தவிர்க்க விருப்பமின்றி பாதுகாப்பு முறைமைகளை அடிமட்ட அளவிற்கு குறைக்கும் விதத்தில் அவற்றில் சிக்கனம் பிடிக்கின்றன. உயிரைப் பறிக்கும் சாத்தியமுள்ள கார்களை சாலைகளில் ஓடவிட அனுமதி அளித்ததற்குப் பொறுப்பான அனைவரும், GM நிறுவனத்திலும் சரி அரசாங்கத்திலும் சரி இரண்டிலும் உள்ளவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, நீதியின் முன்னால் கொண்டு வரப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முழுமையாக இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் பாதுகாப்பு பிரச்சினைகள் மீதான ஆழ்ந்த குறைகளைத் தீர்ப்பதற்கான எந்தவொரு போராட்டமும், தவிர்க்க இயலாதபடிக்கு, யாருடைய நலனுக்காக சமூகம் ஒழுங்கமைக்கப்படுகிறது? என்ற கேள்வியை முன்னிறுத்துகிறது. விஞ்ஞானப்பூர்வ திட்டமிடல் மற்றும் தரக் கட்டுபாட்டுக்கான ஒன்றோடொன்று பிணைந்த, உயர்ந்த தொழில்நுட்பரீதியிலான சமூகத்தின் தேவையானது, பொதுவுடைமையின் மற்றும் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் தொழில்துறை இருக்க வேண்டியதன் அவசியத்தை உயர்த்துகிறது. இது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தின் அபிவிருத்தியின் மூலமாக மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட முடியும். |
|