Vote SEP in Northern Provincial elections in Sri Lanka
இலங்கையில் வட மாகாண தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்
By Socialist Equality Party
20 September 2013
நாளை நடக்கவுள்ள வட மாகாண சபை தேர்தலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோசக) வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கட்சி அழைப்பு விடுக்கின்றது.
சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம், ஆசியாவிலும் உலகம் பூராவும் வளர்ச்சியடைந்து வரும் ஏகாதிபத்திய யுத்த ஆபத்துக்கும், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் முன்னெடுக்கும் பரந்த சிக்கன நடவடிக்கைகளுக்கும் மற்றும் அதை அமுல்படுத்துவதற்கு பொலிஸ் அரச வழிமுறைகளை அது துரிதப்படுத்துவதற்கும் எதிராக, ஒரு சோசலிச சர்வதேசிய வேலைத் திட்டத்துக்காக தொழிலாளர்களும் இளைஞர்களும் தமது ஆதரவை பதிவு செய்வர்.
சிரியா மீதான அமெரிக்காவின் யுத்த உந்துதலுக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே பிரச்சாரம் செய்வதோடு, மத்திய கிழக்கையும் உலகையும் ஆட்டுவிக்கக் கூடிய ஒரு மோதலின் அழிவுகரமான விளைவுகளைப் பற்றி உலகம் பூராவுமுள்ள தொழிலாள வர்க்கத்துக்கு தெளிவுபடுத்துகிறது. இலங்கை “அணி-சேராது” என்ற இராஜபக்ஷவின் அனைத்து கூற்றுக்களுக்கும் மாறாக, தெற்காசியாவின் எஞ்சிய பகுதிகளைப் போல் இந்த தீவும், அமெரிக்காவுக்கும் ரஷ்யா மற்றும் சீனா உட்பட அதன் எதிரிகளுக்கும் இடையில் வளர்ச்சியடைந்து வரும் பதட்ட நிலைமைகளில் சிக்குண்டுள்ளது.
சிரியா மீதான ஒரு அமெரிக்கத் தாக்குதல், ஈரானுக்கு எதிரான அதே போன்றதொரு தலையீட்டுக்கு ஒரு முன்னோடியாக இருப்பதோடு சீனாவின் சக்தி வளங்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனக் கருதும் பெய்ஜிங்குக்கும் மற்றும் வாஷிங்டனுக்கும் இடையில் இலங்கை அரசாங்கம் ஒரு அவநம்பிக்கையான சமநிலைப்படுத்தும் நடவடிக்கையை அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றது. சிரியா சம்பந்தமான ஒரு அறிக்கையில், “இரசாயன ஆயுதங்களை உற்பத்தி செய்வது, மூலப்பொருட்களை சேகரிப்பது மற்றும் பயன்படுத்துவதை வெறுக்கிறது” என கொழும்பு அரசாங்கம் அறவித்துள்ள போதிலும், சிரிய அரசாங்கத்தையோ அல்லது அமெரிக்க ஆதரவிலான எதிர் போராளிக் குழுக்களையோ குற்றம் சாட்டவில்லை.
2006ல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தை இலங்கை அரசாங்கம் மீண்டும் தொடங்கியபோது, அது நிதி மற்றும் ஆயுதங்களுக்காக சீனாவிலேயே பெருமளவில் தங்கியிருந்தது. இராஜபக்ஷவின் யுத்தத்தை அமெரிக்கா முழுமையாக ஆதரித்த போதிலும், இலங்கை ஜனாதிபதி சீனாவுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவில் இருந்து அவரை தூர விலகச் செய்வதற்காக, 2009ல் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இராணுவத்தினால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களை பற்றிக்கொண்டது. சீனாவுக்கு எதிரான யுத்தத் தயாரிப்பில், ஒபாமாவின் ஆசியாவுக்கு “மீண்டும் திரும்புதல்” திட்டத்தின் பாகமே இலங்கையிலான வாஷிங்டனின் இராஜதந்திர சதிகளாகும்.
அமெரிக்கா மற்றும் இந்தியாவும் -இரண்டு தசாப்தங்களில் முதல் தடவையாக- வட மாகாண சபை தேர்தலை நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை நெருக்கின. இரு சக்திகளும் ஒரு “அரசியல் தீர்வுக்கு”, அதாவது கொழும்பு அரசாங்கம் தமிழ் மற்றும் முஸ்லிம் முதலாளித்துவத் தட்டுக்களுக்கு இடையில் அதிகாரப் பரவலாக்கலுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. இது இலங்கை அரசியலில் தமது செல்வாக்கை விரிவாக்கும் என அவை கணக்கிடுகின்றன.
இராஜபக்ஷ அரசாங்கம் வாஷிங்டனை அமைதிபடுத்துவதற்கு முயற்சிக்கின்ற நிலையில், அது அமெரிக்காவைப் பெயர் குறிப்பிடாமல், இலங்கைக்கு எதிராக “சர்வதேச சதி” உள்ளது என விமர்சிக்கின்றது. முதலாளித்துவ தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) உட்பட பிரதான எதிர்க் கட்சிகள், அதிகாரத்துக்கான தமது சொந்த முயற்சிகளுக்கு அமெரிக்காவின் ஆதரவை எதிர்பார்ப்பதுடன் அமெரிக்காவின் யுத்த திட்டங்களுடன் தாமும் அணிசேர்ந்துகொண்டுள்ளன.
“சர்வதேச சமூகத்துக்கு” விடுத்துள்ள ஒரு வேண்டுகோளில், தமிழ் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், “இலங்கையில் வாழும் மக்களுக்கு நீதியும் நிரந்தர சமாதானத்தின் மூலமான உண்மையான நல்லிணக்கமும் சர்வதேசத்தின் அனுசரணையின் கீழேயே அடையப்பட முடியும்,” என பிரகடனம் செய்துள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம், ஏனைய நாடுகளில் அமெரிக்கத் தலைமையிலான தலையீட்டை பாராட்டும் தமிழ் கூட்டமைப்பு, “உலகம் பூராவும் பல எடுத்துக்காட்டுகளில் சர்வதேச சமூகம் ஒரு இன்றியமையாத பங்கை சரியாக ஆற்றியுள்ளது” என பிரகடனம் செய்கின்றது.
போலி இடதுகளான நவ சமசமாஜக் கட்சியும் (ந.ச.ச.க.) ஐக்கிய சோசலிசக் கட்சியும் (யூ.எஸ்.பீ.) தமிழ் கூட்டமைப்பை ஆதரிக்கின்றன. இரு கட்சிகளும் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் போலி அழைப்பை ஆதரிக்கின்றன. நவசமசமாஜக் கட்சி, சிரியாவுக்கு எதிரான அமெரிக்க யுத்த திட்டங்களை பற்றி மௌனமாக இருந்தாலும், அதன் சர்வதேசிய சமதரப்பினர், சிரிய ஜனாதிபதி பஸார் அல் அஸாத்துக்கு எதிரான அமெரிக்க ஆதரவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கைகளை வெளிப்படையாக அரவனைத்துக்கொண்டுள்ளனர்.
இந்த ஏகாதிபத்திய-சார்பு அணிதிரள்வுக்கு எதிராக, சிரியாவுக்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலை எதிர்க்கும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்தையும் மற்றும் போரின் தோற்றுவாயான முதலாளித்துவத்தை தூக்கிவீசும் சோசலிச வேலைத்திட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு, ஒரு உலக போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப போராடுவதற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளுடன் சோசலிச சமத்துவக் கட்சி இணைந்துகொண்டுள்ளது.
நாளைய தேர்தலின் முடிவு என்னவாக இருந்தாலும், இராஜபக்ஷ அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டவாறு, மேலும் மானிய வெட்டுக்கள் மற்றும் வரி அதிகரிப்புகளுடன் அதன் சிக்கன நடவடிக்கைகளோடு முன்செல்லும். அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு, தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் நிலைமையை சீரழித்துக்கொண்டிருக்கின்றது. 1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள மாபெரும் உலகப் பொருளாதார பொறிவின் தாக்கத்தின் கீழ், இலங்கையின் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏற்றுமதி சந்தைகள் சுருங்கிவருவதோடு, ஆயிரக்கணக்கான தொழில்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றன. இளைஞர்களின் வேலையின்மை அதிகரித்து வருகின்றது.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் அமைதியின்மையையிட்டு பீதியடைந்துள்ள அரசாங்கம், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக இனவாதப் பிரச்சாரத்தை கிளறிவிடுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கில் “சுயாட்சியை” கோரும் தமிழ் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பற்றிக்கொண்டுள்ள அரசாங்கமும் சிங்களப் பேரினவாத அமைப்புகளும், கூட்டமைப்பு பிரவினைவாதத்தை தூண்டுவதாகவும் “புலிகளின் பயங்கரவாதத்தை புதுப்பிப்பதாகவும்” குற்றம் சாட்டுகின்றன. 1948ல் சுதந்திரம் என சொல்லப்படுவது கிடைத்ததில் இருந்தே, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் பலவீனப்படுத்தவும் இலங்கை முதலாளித்துவம் மீண்டும் மீண்டும் தமிழர்-விரோத ஆத்திரமூட்டல்களை பயன்படுத்தி வந்துள்ளது.
அதே சமயம், அரசாங்கத்தின் வர்த்தகர்-சார்பு வேலைத்திட்டத்துக்கு எதிராக போராட்டத்துக்கு வரும் தொழிலாளர்கள், இளைஞர் மற்றும் விவசாயிகளுக்கு எதிராக, உள்நாட்டுப் போரின்போது அபிவிருத்தி செய்யப்பட்ட பொலிஸ்-அரச இயந்திரத்தை அது கட்டவிழ்த்து விடுகின்றது. சுத்தமான குடிநீர் கேட்டு போராடிய வெலிவேரிய கிராமத்தவர்கள் மீதான இராணுவத் தாக்குதலில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டமை, உழைக்கும் மக்களின் எதிர்ப்பின் மீது பயன்படுத்தப்படவுள்ள ஒடுக்குமுறை வழிமுறைகள் பற்றிய புதிய எச்சரிக்கையாகும்.
போலி இடதுகளான நவசமசமாஜக் கட்சியும் யூ.எஸ்.பீ.யும், உழைக்கும் மக்களை எதிர்க் கட்சியான யூ.என்.பீ.க்குப் பின்னால் அடைத்துவிடும் எதிர்பார்ப்புடன், மிகவும் கேடுபயக்கவல்ல அரசியல் பாத்திரத்தை ஆற்றுகின்றன. அவை தொழிற்சங்கங்களோடு சேர்ந்து, நீண்ட இரத்தக்களரி மிக்க தொழிலாள வர்க்க-விரோத வரலாற்றைக் கொண்டுள்ள ஆளும் வர்க்கத்தின் பாரம்பரிய கட்சியான யூ.என்.பீ.யை ஜனநாயக உரிமைகளதும் வாழ்க்கைத் தரத்தினதும் பாதுகாவலனாக சித்தரிக்கின்றன. இந்த வலதுசாரி கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவர பிரச்சாரம் செய்யும் இந்த இரு கட்சிகளும், தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன இயக்கத்தையும் தடம்புரளச் செய்வதோடு ஒரு பொலிஸ் அரசுக்கு விளைபயனுள்ள வகையில் பாதை அமைக்கின்றன.
சீரழிந்துவரும் முதலாளித்துவ அமைப்புமுறைக்குள் ஒழுக்கமான வாழ்க்கைத் தரத்தை பெறவோ ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவோ தொழிலாளர், இளைஞர் மற்றும் விவசாயிகளால் முடியாது. அல்லது, தமிழ் மக்களால் முதலாளித்துவ ஒழுங்கின் கீழ் தமது ஜனநாயக உரிமைகளை வெல்ல முடியாது. அவசியமாவது என்னவெனில், ஒரு சோசலிச மாற்றீடே ஆகும்.
வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை துருப்புக்களை திருப்பியழைக்கக் கோரி, ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் முன்னெடுத்த தமிழர்-விரோத உள்நாட்டு யுத்தத்தை எதிர்த்து இடைவிடாமல் போராடிய அதே வேளை, புலிகளதும் ஏனைய தமிழ் குழுக்களதும் பிரிவினை வாதத்தையும் எதிர்த்துப் போராடிய ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. தெற்காசியாவிலும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசைக் கட்டியெழுப்பவதற்கான வேலைத் திட்டத்தின் அடிப்படையில், சகல வடிவிலான தேசியவாதம் மற்றும் இனவாதத்துக்கும் எதிராக சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த நாம் போராடியுள்ளோம்.
இந்த சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை ஆதரிப்பதன் பேரில், எமது கட்சிக்கு வாக்களிக்குமாறு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, எமது வேலைத்திட்டத்தை கற்று, எமது கட்சியை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்ப இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
|