சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

TamilNet criticises WSWS article for opposing separatist program

பிரிவினைவாத வேலைத்திட்டத்தை எதிர்த்தமைக்காக WSWS கட்டுரையை தமிழ்நெட் விமர்சிக்கின்றது

By K. Ratnayake
31 August 2013

Use this version to printSend feedback

உலக சோசலிச வலைத் தளம் (WSWS), “இலங்கை பாதுகாப்புச் செயலாளர் சமூக அமைதியின்மை பற்றி பீதியை வெளிப்படுத்துகிறார்” என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையை விமர்சித்து தமிழ்நெட் இணையம் பிரசுரித்த ஒரு கருத்துரை, அது பிரதிநிதித்துவம் செய்யும் சமூகத் தட்டுகள், அதாவது தமிழ் முதலாளித்துவ மற்றும் செல்வந்த மத்தியதர தட்டுகள், தொழிலாள வர்க்கத்தின் மீதும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் மீதும் கொண்டுள்ள வர்க்கப் பகைமையை வெளிப்படுத்துகிறது.
கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியில் கற்கும் இராணுவ அதிகாரிகளுக்கு இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ ஆற்றிய விரிவுரை மீதே உலக சோசலிச வலைத் தள கட்டுரை குவிமையப்படுத்தியிருந்தது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்வரவுள்ள எழுச்சியை நசுக்கவும் வடக்கு மற்றும் கிழக்கில் ஒடுக்குமுறை இராணுவ ஆக்கிரமிப்பை பேணுவதற்கும் இராணுவத்தை தயார்படுத்துவதே இந்த விரிவுரையின் குறிக்கோளாகும்.

பெயர் குறிப்பிடாத “யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழ செயற்பாட்டாளரிடம்” இருந்து மேற்கோள் காட்டியுள்ள தமிழ்நெட் கருத்துரை, வர்க்கப் பிரச்சினை பற்றி உலக சோசலிச வலைத் தள கட்டுரை வலியறுத்துவதற்கு எதிராக, “சுதந்திரத்துக்கான ஈழத் தமிழர்களின் போராட்டத்தை கணக்கில் எடுத்திருந்தால்,” அது ஒரு “நாகரீகமான மதிப்பீடாக” இருந்திருக்கக் கூடும் எனப் பிரகடனம் செய்கின்றது.
பின்னர் மிகவும் வெளிப்படையாக தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ள அந்த “செயற்பாட்டாளர்”, “ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் அவர்களது வரலாற்று தாயகத்தின் இறைமையை அவரோ அல்லது அவளோ அங்கீகரிக்கின்ற ஒரு நிலைமையில் மட்டுமே, முற்போக்கு சிங்கள அரசியலின் தலைவரை அல்லது புத்திஜீவியை தமிழர்களால் அரசியல் ரீதியில் ஆதரிக்க முடியும்,” என எழுதியுள்ளார்.

இந்த விவாதம் வலியுறுத்தும் நச்சுத்தனமான இனவாத அரசியலின் முழு உருவரைவையும் சோசலிச சமத்துவக் கட்சியும், உலக சோசலிச வலைத் தளமும் நிராகரிக்கின்றன. சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.), தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை காப்பதிலும் வடக்கு மற்றும் கிழக்கில் கொழும்பு அரசாங்கத்தின் குற்றவியல் யுத்தத்தை எதிர்ப்பதிலும் கறைபடியாத வரலாற்றைக் கொண்டுள்ளன. எனினும், இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக, இலங்கை முதலாளித்துவத்தின் சகல பகுதிகளில் இருந்தும் அரசியல் ரீதியாக சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட அரசியல் இயக்கத்தின் ஊடாக மட்டுமே தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்களுமாக உழைக்கும் மக்களின் ஜனநயாக உரிமைகளை பாதுகாக்க முடியும் என நாம் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளோம்.

2009 மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்த நீண்டகால உள்நாட்டு யுத்தத்தின் கசப்பான அனுபவங்களால் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. “ஈழ செயற்பாட்டாளர்கள்”, தமிழ்நெட் மற்றும் பல்வேறு தமிழ் முதலாளித்துவக் கட்சிகளால், யுத்தத்தின் அரசியல் படிப்பினைகளைப் பற்றி முற்றிலும் மௌனமாக இருப்பதன் மூலம் மட்டுமே, ஒருவகையான “சுயநிர்ணயம்”, அல்லது தனியான முதலாளித்துவ அரசே தமிழர்களுக்கு ஒரே தீர்வு என்ற பொய்யை கூறித்திரிய முடியும். புலிகள் ஒரு சுதந்திர தமிழ் ஈழத்தை அமைக்கும் முயற்சியையே தமது முழு மூலோபாயமாகக் கொண்டிருந்ததோடு இது உழைக்கும் மக்களுக்கு அழிவையே தோற்றுவித்தது.

யுத்தத்தை தொடங்கி அதை ஈவிரக்கமற்று முன்னெடுத்தமைக்கு ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களே பொறுப்பு. எனினும், அவற்றின் சிங்கள மேலாதிக்கவாத கருத்தியல் தமிழர்களுக்கு எதிராக மட்டுமன்றி, தொழிலாள வர்க்கத்துக்கும் எதிராகத் திருப்பப்பட்டிருந்தது. தொழிலாளர்களதும் வெகுஜனங்களதும் எதிர்ப்புக்கு முகங்கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் முதலாளித்துவ ஆட்சியை பாதுகாக்கவும் தமிழர்-விரோத இனவாதத்தை இடைவிடாமல் கிளறிவந்தன.

சோசலிச மற்றும் சர்வதேசியவாத முன்னோக்கின் அடிப்படையில், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக இலங்கை மற்றும் துணைக் கண்டத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த 1940களில் ட்ரொட்ஸ்கிச இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (பி.எல்.பீ.ஐ.) போராடியது. கிளர்ச்சியடைந்த தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்ட யூ.என்.பீ. அரசாங்கம், 1948ல் உத்தியோகபூர்வமாக சுதந்திரம் பெற்றவுடன் எடுத்த முதல் நடவடிக்கை, ஒரு மில்லியன் தமிழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை அபகரித்ததே ஆகும். இந்த பிற்போக்கு பிரஜா உரிமைச் சட்டத்துக்கு ஆதரவளிக்க ஜி.ஜி. பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ் எடுத்த முடிவில், தொழிலாள வர்க்கத்தின் மீதான தமிழ் முதலாளித்துவத்தின் பகைமை சுருக்கமாக வெளிப்படுத்தப்பட்டது.

லங்கா சமசமாஜக் கட்சிக்குள் பி.எல்.பீ.ஐ. கரைத்துவிடப்பட்டமையும் அதன் பின்னர் அது அரசியல் ரீதியில் பின்வாங்கியமையும், தொழிலாள வர்க்கத்துக்கு அழிவுகரமானதாக நிரூபிக்கப்பட்டது. லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.) 1964ல் சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்துகொண்டதால், ட்ரொட்ஸ்கிசம் வரலாற்று ரீதியில் காட்டிக்கொடுக்கப்பட்டது. இது தொழிலாளர் மத்தியில் பெரும் அரசியல் குழப்பத்தை உருவாக்கிவிட்டதோடு இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட குட்டி முதலாளித்துவ அமைப்புகளுக்கு கதவுகளைத் திறந்துவிட்டது –மக்கள் விடுதலை முன்னிணயின் (ஜே.வி.பீ.) சிங்கள மக்கள்நலவாதமும் புலிகள் போன்ற தமிழ் பிரிவினைவாத குழுக்களும் தோன்றின.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும்/சோசலிச சமத்துவக் கட்சியை, “[ல.ச.ச.க. தலைவர்களான] கொல்வின் ஆர். டி சில்வா போன்ற ‘ட்ரொட்ஸ்கிச’ தலைவர்களுடன் அல்லது ஜே.வி.பீ.யின் ‘ஸ்ராலினிச’ தலைவர்களுடன் சேர்த்துக் காட்டுவதன், மூலம் ஈழ செயற்பாட்டாளர்கள் சோசலிச சமத்துவக் கட்சி மீது அவதூறு சுமத்துகின்றனர். ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்பை எதிர்த்த ஒரே கட்சியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.), அவசியமான அரசியல் படிப்பினைகளை வெளிக்கொணர்ந்ததோடு ஜே.வி.பீ. மற்றும் புலிகள் உட்பட சகல வடிவிலான தேசியவாதம் மற்றும் இனவாதத்துக்கும் எதிராக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த சளைக்காது அரசியல் போராட்டத்தை முன்னெடுத்தது. இந்தச் சாதனைகள் சகலருக்கும் கற்றுக்கொள்ளக் கூடியவாறு சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் என்ற நூலில் உள்ளது.

இந்த ஈழ செயற்பாட்டாளர்கள், தமிழ் பிரிவினைவாத வேலைத் திட்டமானது சகல தமிழர்களதும் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகாக போலியாகக் கூறிக்கொள்கின்றனர். உண்மையில், தமிழ் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களை சுரண்டுவதற்கான தனது “உரிமையை” உத்தரவாதம் செய்வதற்கு ஒரு தனியான அரசை ஸ்தாபிக்க முயற்சிக்கும் விலைபோகும் தமிழ் முதலாளித்துவத்தையே பிரதிநித்துவம் செய்கின்றது. இந்த அடித்தளத்திலேயே புலிகள் யுத்தத்தை முன்னெடுத்ததோடு தமிழ் வெகுஜனங்களை கொடூரமான முட்டுச் சந்துக்குள் தள்ளிவிட்டனர்.

2009ல் புலிகளின் தோல்வியானது அடிப்படையில் ஒரு இராணுவப் பிரச்சினை அல்ல, மாறாக அதன் வர்க்க நோக்கம் மற்றும் அரசியலின் விளைவே ஆகும். அனைத்து முதலாளித்துவ தேசியவாத அமைப்புகளைப் போலவே, புலிகளும் தொழிலாள வர்க்கத்துக்கு எந்தவொரு அறைகூவலும் விடுக்க இயல்பிலேயே இலாயக்கற்றவர்கள். வெகுஜனங்களின் எந்தவொரு சுயாதீன இயக்கத்தையுமிட்டு பீதியடைந்த புலிகள், தமது கட்டுப்பட்டில் இருந்த பிரதேசங்களில் ஜனநாயக-விரோத வழிமுறைகளை நாடினர். அவர்கள் இளைஞர்களை போராளிகளாக பலாத்காரமாக சேர்த்துக்கொண்டதோடு மக்கள் மீது வரிகளை சுமத்தியதுடன் தமது எதிரிகளையும் தம்மை விமர்சிப்பவர்களையும் வன்முறையில் நசுக்கினர்.
தமிழ் வெகுஜனங்கள் மத்தியிலான பரந்த அமைதியின்மையை திசை திருப்ப, புலிகள் இனவாத பகைமையை கிளறிவிட மேலும் மேலும் பிற்போக்கு வழிமுறைகளை நாடினர். அவர்கள் யுத்தத்துக்கும் கொழும்பு அரசாங்கத்தின் குற்றங்களுக்கும், சிங்கள தொழிலாளர்கள் கிராமப்புற வறியவர்கள் உட்பட ஒட்டு மொத்த “சிங்கள மக்கள்” மீதும் குற்றம் சாட்டினர்.

தொழிலாளர்கள் மற்றும் வறிய விவசாயிகளையும் வெடித்துச் சிதறச் செய்ய புலிகள் தற்கொலைக் குண்டுதாரிகளை அனுப்பியதோடு நூற்றுக்கணக்கான சிங்கள மக்களை கொன்றனர். “ஈழத் தமிழர்களின் தமிழ் தாயகத்தை காலனியாக்குவதில் பங்குபெற்றும் ஒழுக்கக் குற்றத்திற்காக” தமிழ்நெட் சிங்கள தொழிலாளர்களையும் விவசாயிகளையும் கண்டனம் செய்கின்றது. இது, வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் கொழும்பு அரசாங்கத்தால் குடியேற்றப்பட்ட வறிய விவசாயிகள் மீதான புலிகளின் வன்முறைத் தாக்குதலை நியாயப்படுத்துவதற்கே ஆகும். தமிழ் பேசும் முஸ்லிம்கள் கொழும்பு அரசாங்கத்தை ஆதரிப்பதாக பொய் குற்றம் சாட்டி அவர்களையும் புலிகள் வடமாகாணத்தில் இருந்து விரட்டினர். கொழும்பு அரசியல் ஸ்தாபனம் தனது கொடூரமான யுத்தத்தை நியாயப்படுத்த முயற்சிக்கையில் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நேரடியாக அதன் கைகளில் பயன்பட்டன.

புலிகளின் பிரிவினைவாத வேலைத்திட்டத்தை எதிர்த்த “குற்றத்திற்காகவும்” கொழும்பு அரசாங்கத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் மற்றும் யுத்தத்துக்கும் எதிராக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த போராடியமைக்காகவும் 1998ல் நான்கு சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களை அவர்கள் கிளிநொச்சியில் கைது செய்ததில், தொழிலாள வர்க்கத்துக்கு புலிகளின் எதிர்ப்பு தெளிவாக வெளிப்பட்டது. தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சோசலிச சமத்துவக் கட்சியின் சோசலிச வேலைத் திட்டத்துக்கு அனுதாபம் கிடைத்துவிடும் என்று பீதியடைந்த புலிகள், பரந்த சர்வதேச பிரச்சாரத்தின் பின்னரே அதன் உறுப்பினர்களை விடுதலை செய்தனர். (பார்க்க: “சோ.ச.க.யும் ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டமும்.”)
புலிகள் எப்போதும் தனியான தமிழ் ஈழத்துக்கான தமது எதிர்பார்ப்புகளை இந்தியா மற்றுன் பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் பிணைத்திருந்தனர். இதன் விளைவாக அவர்களின் “வெளியுறவு கொள்கை” மாறாமல் குறுகிய நோக்கம் கொண்ட நடைமுறைவாதத்தையே அடிப்படையாக் கொண்டிருந்து. குளிர் யுத்தத்தின் முடிவை அடித்து வந்த சர்வதேச உறவுகளிலான மாற்றங்களுக்கு அது தயாரின்றி முழுமையா சிக்கிக்கொண்டது. பின்னர் ஒரு பெருந்தவறாக உணரப்பட்ட, 1991ல் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை, இந்தியாவிலும் மற்றும் சர்வதேச தளத்திலும் புலிகளின் நிலையை பலவீனப்படுத்தியது.

2001 செப்டெம்பர் 11ன் பின்னர், அமெரிக்காவின் “பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தின்” இலக்காக ஆவதை தவிர்ப்பதற்காக புலிகள் சூழ்ச்சித்திட்டங்களில் ஈடுபட்டனர். 2002ல் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட புலிகள், சுதந்திர ஈழத்துக்கான தமது கோரிக்கையை கைவிட்டதோடு பெரும் ஏகாதிபத்திய சக்திகளால் ஏற்பாடுசெய்யப்பட்ட “சமாதான முன்னெடுப்புகளிலும்” விரைந்து இணைந்துகொண்டனர். எந்தவொரு தீர்விலும் புலிகளுக்கு ஒப்பீட்டளவில் ஒரு இரண்டாந்தர பாத்திரத்தை அனுமதிக்கவே அமெரிக்காவும் இந்தியாவும் விரும்புகின்றன என்பது நீரூபணமான உடன் விரைவில் பேச்சுவார்த்தைகள் முறிந்தன.

2006ல் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ யுத்தத்தை மீண்டும் தொடக்கிய போது, புலிகளின் அரசியல் வங்குரோத்து வெளிப்டையாகத் தெரிந்தது. அவர்கள் இலங்கையிலும் துணைக்கண்டத்திலும் சர்வதேசங்களிலும் உள்ள தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்க முற்றிலும் இலாயக்கற்றவர்களாக இருந்தனர். தமது கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் தமிழ் வெகுஜனங்களை முழு அலட்சியத்துடன் நடத்திய புலிகள், ஒரு பிரதேசத்தில் இருந்து இன்னொரு பிரதேசத்துக்கு அவர்களை தள்ளிச் சென்றனர். 2009ல் இலங்கை படைகள் தமது கடைசி தாக்குதல்களை முன்னெடுத்த போது, புலிகள் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு இராஜதந்திர, நிதிய மற்றும் இராணுவ ஒத்துழைப்பை வழங்கிய அதே “சர்வதேச சமூகத்துக்கு” பயன்ற வேண்டுகோள்களை விடுக்கத் தள்ளப்பட்டனர்.

யுத்தத்தின் பின்னரும், எல்லா தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும் எதாவதொரு வடிவிலான “சுயநிர்ணயத்துக்கு” ஆதரவு பெறுவதற்காக ஏகாதிபத்திய சக்திகளை எதிர்பார்த்தன. எதிரி சீனாவிடம் இருந்து இராஜபக்ஷ அரசாங்கத்தை தூரவிலகச் செய்வதற்காக நெருக்குவதற்கு “மனித உரிமைகள்” விவகாரத்தை அமெரிக்கா சுரண்டிக்கொண்டதை அவர்களும் பற்றிக்கொண்டனர். அவ்வாறு செய்ததன் மூலம், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய கட்சிகளும், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவிலும் கொடூரமான தசாப்தகால நவ-காலனித்துவ யுத்தங்களின் பின்னர் சீனாவுக்கு எதிரான மோதலுக்கு தயாராகின்ற நிலையில், அதனுடன் அணிசேர்கின்றன.

1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள பூகோள முதலாளித்துவத்தின் மோசமான பின்னடைவின் மத்தியில், இலங்கையிலும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கம் பெரும் ஆபத்துக்களை எதிர்கொள்கின்ற நிலையிலும், இந்த வங்குரோத்து முன்னோக்குடன் தமிழ் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் கட்டிப்போட்டு வைக்கவே இந்த ஈழ செயற்பாட்டாளர்கள் விரும்புகின்றனர். எமது கட்டுரைகள் எச்சரித்தது போல், உலகம் பூராவும் உள்ள தனது சமதரப்பினரைப் போலவே, இராஜபக்ஷ அரசாங்கமும், முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது திணிப்பதற்கு முயற்சிப்பதோடு எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்கு யுத்த காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ்-அரச இயந்திரத்தை பயன்படுத்தத் தயங்காது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வளர்ச்சியடைந்துவரும் விரோதத்தை எதிர்கொண்டுள்ள இராஜபக்ஷ அரசாங்கம், பிற்போக்கு இனவாத அரசியலை நாடுவதோடு முஸ்லிம்-விரோத மற்றும் தமிழர்-விரோத உணர்வுகளைக் கிளறிவிடும் பல்வேறு சிங்களப் பேரினவாத அமைப்புகளையும் ஆதரிக்கின்றது. இதற்குப் பதில், தமிழ் அல்லது முஸ்லிம் இனவாதத்துடன் பிரதிபலிப்பதல்ல. மாறாக, ஜனநாயக உரிமைகளை காக்கும் இயலுமை கொண்ட ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காகப் போராடுவதே.
தனியான ஈழ அரசுக்கான கோரிக்கையை ஆதரிக்கத் தவறுகின்றமை, “இலங்கை அரசின் இன அழிப்பை” ஆதரிப்பதையே அர்த்தப்படுத்தும் என்ற ஈழ செயற்பாட்டாளர்களின் கூற்றை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கின்றது.

இலங்கை முதலாளித்துவத்தையோ அல்லது முதலாளித்துவ ஈழத்துக்கான கோரிக்கையையோ சோசலிச சமத்துவக் கட்சி ஆதரிக்கவில்லை. நாம், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து உடனடியாக நிபந்தனையின்றி அனைத்து இலங்கை இராணுவங்களையும் வெளியேற்ற வேண்டுமென்றும், தனியான ஈழத்தை உருவாக்க ஆதரிக்க வேண்டாமென்றும் இடைவிடாமல் போராடி வந்துள்ளதோடு, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிப்பதற்கான புரட்சிகர போராட்டத்தில் கிராமப்புற வறியவர்களின் தலைமையாக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி அணிதிரட்ட போராடி வருகின்றோம்.

எமது முன்னோக்கு லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. அதன் சரியான தன்மை கடந்த நூற்றாண்டு முழுதும் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக இலங்கை முதலாளித்துவத்தின் அனைத்து கன்னைகளும் ஜனநாயக உரிமைகள் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கைத் தரங்களுக்கான உழைக்கும் மக்களின் அபிலாஷைகளை இட்டு நிரப்ப முற்றிலும் இலாயக்கற்றவை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளன. தெற்காசியா மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக, சோசலிசப் பாதையில் சமுதாயத்தை முழுமையாக மறு ஒழுங்கு செய்ய, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்காக போராடுவதன் மூலம் மட்டுமே இத்தகைய அபிலாஷைகளை அடைய முடியும்.

தொழிலாளர்களும் இளைஞர்களும் அவசியமான படிப்பினைகளைப் பெறவும், எமது வரலாறு மற்றும் வேலைத் திட்டத்தை கற்கவும் வேண்டும் என்றும், அடுத்து வரும் போராட்டங்களுக்கு அவசியமான புரட்சிகரத் தலைமைத்துவமாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ளுமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.