World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Opposition mounting among Tamil masses against Sri Lankan government’s land grabbing

இலங்கை அரசாங்கத்தின் நில அபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பு குவிகிறது

By Subash Somachandran and Sujeewa Amaranath
14 September 2013

Back to screen version

இலங்கையின் வடக்கில் இராணுவத்தால் தொடர்ந்தும் பொது மக்களின் காணிகள் பலாத்காரமாக ஆக்கிரமிக்கப்படுகின்றமை, வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் ஆட்சி நிறுவப்பட்டுள்ளது என்ற அரசாங்கத்தின் கூற்று போலியானது என்பதை காட்டுகிறது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகளின் பின்னரும் கூட இந்த மாகாணங்களில் உயர் பாதுகாப்பு வலயங்களை பராமரிப்பதற்காகவும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்காக புதிய பாதுகாப்பு கட்டிடங்களை அமைப்பதற்காகவும் பாதுகாப்பு படையினர் இந்த காணிகளை சட்டவிரோதமாக தம்வசம் வைத்துள்ளன.

வட மாகாண தேர்தலானது ஜனநாயக நம்பகத்தன்மைக்கு அடையாளம் என அரசாங்கம் விவரிப்பது ஒரு கேலிக்கூத்து என்பதை, இந்த இராணுவ ஆக்கிரமிப்பும் பொது மக்கள் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாடும் அம்பலப்படுத்துகிறது.

தமிழ் தட்டுக்களுக்கு எந்தவொரு சலுகையும் வழங்குவதற்கு சிங்கள பேரினவாதிகளின் கசப்பான எதிர்ப்பை முகங்கொடுக்கும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, வாஷிங்டன் மற்றும் புது டில்லியின் அழுத்தத்தின் கீழ் இந்த தேர்தலுக்கு அழைப்புவிடுக்கத் தள்ளப்பட்டார். தேர்தலானது உள்நாட்டு யுத்தத்துக்கு ஒரு “அரசியல் தீர்வு” என அமெரிக்காவும் இந்தியாவும் போலியாக கூறிக்கொள்கின்றன. ஜனாதிபதி இராஜபக்ஷவுடைய அரசாங்கத்தின் யுத்தத்துக்கு ஒத்துழைப்பு அளித்த இந்த நாடுகள், இலங்கை உட்பட இந்த பிராந்தியத்தில் தமது சொந்த பூகோள-அரசியல் நலன்களைக் கொண்டுள்ளன.

கிட்டத்தட்ட மூன்று தசாப்தம் நீண்ட யுத்தத்தின் போது பத்தாயிரக்கணக்கான பொது மக்கள் அவர்களது சொத்துக்களில் இருந்து விரட்டப்பட்டனர். அவர்கள் இப்போது மீளக் குடியேறுவதற்காக தமது சட்டபூர்வமான நிலங்களை திருப்பித் தருமாறு நெருக்குகின்றனர். தமது பிரச்சாரத்தின் பாகமாக 2176 பேர் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இரு தனி வழக்குகளை தக்கல் செய்தனர். அவர்கள் சட்ட மீளாய்வு செய்ய ஆணை பிறப்பிக்குமாறும் தமது காணிகளை அரசாங்கம் அபகரிப்பதை தடுப்பதற்கு ஆணை பிறப்பிக்குமாறும் கோரினர்.

மனுதாரர்களின் படி, 6381 ஏக்கர் பிரதேசம் அல்லது சுமார் 25.8 சதுர கிலோமீட்டர் பிரதேசம் “பொது தேவைக்கு” அவசரமாக கையகப்படுத்தப்படுவதாக ஏப்பிரல் 27 அன்று யாழ்ப்பாண மாவட்ட காணி ஒதுக்கீட்டு அதிகாரி சுட்டிக்காட்டினார். இந்த பிரதேசம் 37.21 சதுர கிலோமீட்டர் வரை விரிவடையும் முழு கொழும்பு மாநகரின் மூன்றில் இரண்டு பங்குக்கு சமனாகும். உண்மையில், இந்த காணிகள் பலர் பயிர் செய்கையில் ஈடுபட்டு வாழ்வாதாரம் தேடும் சிறிய காணித்துண்டுகளாகும்.

காணி கையகப்படுத்தும் சட்டமே தனது பிற்போக்கு நோக்கங்களுக்காக கொழும்பு அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சூழ்ச்சியாகும். முந்தைய அரசாங்கங்கள், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம்களை பலாத்காரமாக வெளியேற்றி அந்த நிலங்களில் வறிய சிங்கள கிராமத்தவர்களை குடியேற்றின. இராஜபக்ஷ அரசாங்கம், இனவாத பதட்டங்களை ஆழப்படுத்துவதற்காக வடக்கிலும் சிங்கள மக்களை குடியேற்றி காலனிகளை ஏற்படுத்த திட்டமிடுவதற்கான அறிகுறிகளும் உள்ளன.

உயர் பாதுகாப்பு வலயம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள [பலாலி மற்றும் காங்கேசன்துறை] பிரதேசத்தை கையளிப்பதை அமுல்படுத்துவதற்காக-[யாழ்ப்பாணத்தில்] பாதுகாப்பு படை தலைமையகத்துக்காக” நிலம் கையகப்படுத்தப்படுகிறது என காணி கையகப்படுத்தும் சட்ட அறிவித்தல் கூறுகின்றது. இதன் அர்த்தம் அரசாங்கம் இந்த காணியை கையகப்படுத்துவதற்கு காணி கையகப்படுத்தும் சட்டத்தை பயன்படுத்துவதோடு அதற்கு சட்ட மறைப்பையும் வழங்குகிறது.

மேன் முறையீட்டு நீதிமன்றம், யாழ்ப்பாண நிலக் கையகப்படுத்தல் அதிகாரி மற்றும் காணி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் உட்பட பிரதிவாதிகளுக்கு, செப்டெம்பர் 27 அன்று மனுவுக்கு பதிலளிப்பதற்காக நீதிமன்றின் முன் தோன்றுமாறு கட்டளையிட்டது.

மக்களின் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிரான அவர்களின் எதிர்ப்பை தோற்கடிப்பதற்கு அரசாங்கமும் இராணுவமும் எவ்வாறு மீரட்டலைப் பயன்படுத்துகின்றன என்பதற்கு பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மன்னார் பிரஜைகள் குழுவால் ஜூன் மாதம் ஏற்பாடு செய்யப்பட்ட, சட்டவிரோத நில அபகரிப்பு பற்றிய ஒரு விழிப்புனர்வு நிகழ்வு, இராணுவத்தால் நிறுத்தப்பட்டது. இந்த நிகழ்வு மே 30 முதல் ஜூன் 1 வரை இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது. முதல் நாள் நிகழ்வுக்கு ஒரு இராணுவ புலனாய்வு அதிகாரி அழைக்காமல் வந்திருந்ததாகவும் அவரது வருகை தொந்தரவாக இருந்ததாகவும் பிரஜைகள் குழுவின் அலுவலர்கள் கூறினர்.

புலனாய்வு அதிகாரி அந்த இடத்தில் இருந்து வெளியேறி இருந்தாலும், மூன்றாவது நாள், மன்னாரில் உள்ள இராணுவத் தலைமையகம் இந்த நிகழ்வுகளுக்கு செயலக அலுவலர்களை அனுப்ப வேண்டாம் என மாவட்ட செயலகத்துக்கு அறிவுறுத்தியதாக மேலதிக பிரதேசச் செயலாளர் பிரஜைகள் குழுவுக்கு அறிவித்திருந்தார். இராணுவத்தின் செயற்பாட்டை கண்டனம் செய்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்ட குழு, பிரதேசத்தில் மேலும் நிலங்களை கையகப்படுத்த இராணுவம் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியது.

வட மாகாண சபை தேர்தல், செப்டெம்பர் 21 நடக்கவுள்ளது. இந்த அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி இராஜபக்ஷ அறிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணி (தே.சு.மு.), ஜாதிக ஹெல உறுமய ஆகிய ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் சிங்களப் பேரினவாத பங்காளிகளதும் மற்றும் எதிர்க் கட்சியான சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியினதும் (ஜே.வி.பீ.) ஆதரவு இராஜபக்ஷவுக்கு உண்டு. இந்தக் கட்சிகள், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண மட்டத்தில் பகிரும், அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை மாற்றுமாறு பிரச்சாரம் செய்கின்றன.

இந்த திருத்தமானது, புலிகளை நிராயுதபாணிகளாக்கும் அதே வேளை இலங்கை தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுக்கு சிறப்புரிமைகளைக் கொடுக்க இந்திய அரசாங்கம் திணித்த அழுத்தத்தின் கீழ், 1987 இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பாகமாக ஏற்படுத்தப்பட்டது. வட மாகாண சபையின் கீழ் அத்தகைய அதிகாரங்கள், பொது மக்களின் நிலங்களை இராணுவம் கையகப்படுத்துவதற்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராக அமைந்துவிடும் என இராஜபக்ஷ அரசாங்கம் அஞ்சுகிறது.

இந்த உடன்படிக்கையையும் கூட மீறும் செயற்பாடுகள், நாட்டின் வடக்கை மலிவு உழைப்பு சுரண்டலுக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலதனத்துக்கு திறந்துவிடும் அவநம்பிக்கையான உந்துதலில் இராஜபக்ஷ அரசாங்கம் எந்த இடத்திலும் நிற்கப் போவதில்லை என்பதையே மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளன. யுத்தத்தினால் ஏற்பட்ட சமுதாய அழிவு மற்றும் கடும் வறுமையும், வடக்கு மக்களில் அநேகமானவர்களை தமது உழைப்புச் சக்தியை அற்ப விலைக்கு விற்க நெருக்கும் என அரசாங்கம் கணக்கிடுகின்றது. அரசாங்கம் இந்த காணிகளில் இராணுவ கட்டிடங்களையும் அமைக்கப் பயன்படுத்தவும் எண்ணுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கில் இயங்கும் பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தேர்தலில் தனது வாக்குகளை அதிகரித்துக்கொள்வதற்காக இந்த காணிப் பிரச்சினையை சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்றது. தமிழ் கூட்டமைப்பு மேன் முறையீட்டு நீதிமன்ற வழக்கை முன்னெடுத்தது, சாதாரண தமிழ் மக்கள் மீதான அனுதாபத்தினால் அல்ல. தமிழ் தொழிலாள வர்க்கத்தை கூட்டாக சுரண்டுவதற்காக, தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுக்கு சலுகைகளைப் பெறுவதன் பேரில், கொழும்பு அரசாங்கத்துடனான பேரம்பேசல்களுக்கு இந்த மாகாண சபை தேர்தலில் வெற்றிபெற கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. தமிழ் கூட்டமைப்பு, வடக்குக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் என்பதை ஏற்கனவே சமிக்ஞை செய்துள்ளது.

தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக ஒடுக்குமுறை ஆட்சியை தொடரும் அரசாங்கம் மற்றும் இராணுவத்திடம் இருந்து தமது நிலங்களை பெறமுடியும் என்ற உத்தரவாதம் மக்களுக்கு கிடையாது. நீதிமன்றங்கள் முதலாளித்துவ அரசை பாதுகாக்கவுள்ள அதேவேளை, அரசாங்கம் நீதிமன்றங்களையும் கையாண்டு, சட்டவாட்சியை அலட்சியம் செய்கின்றது.

காணிகளுக்கான நியாயமான உரிமையை மீண்டும் பெறுவதானது இராணுவ ஆக்கிரமிப்பையும் பாரபட்ச அரச நிர்வாகத்தையும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு நிலங்களை விற்கும் இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளையும் நிறுத்துவதற்கான போராட்டத்துன் பிணைந்துள்ளது. இது, சர்வதேசிய சோசலிசத்தின் பாகமாக, சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதன் பேரில் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்கான போராட்டத்துக்காக தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை கொழும்பு அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கியப்படுத்தும் அரசியல் போராட்டமாகும்.

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் 19 வேட்பாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சி இந்த கொள்கைகளையே அபிவிருத்தி செய்கின்றது. சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு முடிவுகட்டுவதற்காக போராடுவதில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு ஒரு கறைபடியாத வரலாறு உண்டு. எமது போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.