Northern provincial council election: TNA and Tamil media spreads deadly illusions
வட மாகாகாண சபை தேர்தல்: தமிழ் கூட்டமைப்பும் தமிழ் ஊடகங்களும் உயிராபத்தான மாயைகளை பரப்புகின்றன
By W.A. Sunil
11 September 2013
வடமாகாண சபை தேர்தலுக்கான தற்போதைய பிரச்சாரத்தின் போது, சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) கடற்தொழிலாளர்கள், தொழிலாளர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சர்வதேசிய சோசலிச வேலைத் திட்டத்தை பற்றி கலந்துரையாடியதோடு கணிசமானளவு பிரதிபலிப்பையும் வென்றது. மக்களுக்கு இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லாத அதேவேளை, பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் வென்றால், அது குறைந்தபட்சம் ஒருசில பிரச்சினைகளைத் தீர்க்கவாவது உதவும், என்ற மாயை சில பகுதியினர் மத்தியில் காணப்படுகிறது.
சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுடன் பேசிய ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர், தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்றால் “அது தமிழ் மக்களுக்கு அனுகூலமானதாக இருக்கும். குறைந்தபட்சம் [இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள] எமது நிலங்களை மீண்டும் பெறுவதோடு பொலிசாருடன் எமது சொந்த மொழியில் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியதாகவும் இருக்கும்” என்றார்.
இதே போன்ற கருத்தை வெளியிட்ட ஒரு மாணவன், “ஏனைய கட்சிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை,” எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எமக்குள்ள [தமிழ் மக்களுக்கு] கடைசி வாய்ப்பு இது என்றே நினைக்கிறேன்”, என்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதேபோல் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட உதயன், தினக்குரல் மற்றும் வலம்புரி போன்ற ஊடகங்களும் இத்தகைய மாயைகளை முன்னிலைப்படுத்தும் பிரச்சார மழையைப் பொழிகின்றன.
மாகாணத்தின் ஆட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை கொண்டுவருவதை தவிர வேறு மாற்றீடுகள் கிடையாது எனக் கூறுவதற்காக, வடக்கு மற்றும் கிழக்கிலான அரசாங்கத்தின் தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பும், ஜனநாயக உரிமை மீறல்களும் மற்றும் சிங்கள காலனித்துவ திட்டங்களை நோக்கிய நகர்வுகளும் மேற்கொள் காட்டப்படுகின்றன.
ஏகாதிபத்திய சக்திகளதும் இந்தியாவினதும் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்படும் ஒரு அதிகாரப் பரவலாக்கல் உடன்பாட்டின் ஊடாக, வட மாகாண சபையில் அதிகாரத்தை பெற்றுக்கொண்டால், தம்மால் ஜனநாயக உரிமைகளை ஸ்தாபிக்கவும் கொழும்பு ஆளும் தட்டை தடுத்து நிறுத்தவும் முடியும் என தமிழ் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு கூறிவருகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் கொள்கைகளும் தமிழ் மக்களுக்கு ஒரு மாற்றீடாக இருக்கப் போவதில்லை, மாறாக, மேலும் அழிவுகளுக்கே வழிவகுக்கும்.
முதலாவதாக, இது தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சிங்கள வர்க்க சகோதரர்களுக்கு எதிராக இருத்தும் இன்னொரு இனவாத பொறியாகும் –சிங்கள நிர்வாகத்திற்கு எதிராக தமிழ் நிர்வாகம்! தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகள், கொழும்பு அரசாங்கத்தின் பேரினவாத வேலைத்திட்டம் மற்றும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஆயுதத்தின் ஒரு சிறுபான்மை பிம்பமே ஆகும்.
இரண்டாவதாக, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளின் காப்பாளன் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோரணை போலியானதாகும். ஜனநாயக உரிமைகள் என அவர்கள் அர்த்தப்படுத்துவது எதுவெனில், தமிழ் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களை சுரண்டுவதற்கான அவர்களது உரிமைகளையே ஆகும். வடக்கு மற்றும் கிழக்கில் அதிகாரப் பரவலாக்கலுக்கான அவர்களின் கோரிக்கை, கொழும்பு அரசாங்கத்துடனான பேரம்பேசல்களுடனும் ஏகாதிபத்தியத்தின் பின்னணியுடனும் அத்தகைய ஒரு பிராந்தியத்தை ஸ்தாபித்துக்கொள்வதற்கே ஆகும். அவர்களுக்கு ஒடுக்குமுறை நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கு பொலிஸ் அதிகாரங்களும், முதலீட்டுக்கு குத்தகைக்கு விட காணி அதிகாரங்களும் தேவை. இவை சாதாரண வெகுஜனங்களுக்கு அல்ல.
மூன்றாவது, அவர்கள் அதிகாரப் பங்கீட்டைப் பெறுவதற்காக ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்து உதவியை எதிர்பார்த்து அவர்களின் பக்கம் திரும்புவது மிகவும் ஆபத்தானதாகும். தமிழ் கூட்டமைப்பு அத்தகைய ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கும் மற்றும் ஏகாதிபத்திதய நிதி மூலதனத்துக்கு அழைப்பு விடுப்பதற்கும், கொழும்பு அரசாங்கத்தின் மீது ஏகாதிபத்திய சக்திகளதும் இந்தியாவினதும் அழுத்தத்தை திணிக்கப் பார்க்கிறது. உலக மேலாதிக்கத்துக்காக இராணுவ பலத்தை பயன்படுத்துவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் தற்போது முயற்சிக்கின்ற நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு வாஷிங்டனின் மூலோபாய தேவைகளுக்கு சேவகம் செய்யத் தயாராக உள்ளது.
அமெரிக்கா, மத்திய கிழக்கில் சிரியாவுக்கு எதிராக ஒரு யுத்தத்தை முன்னெடுக்கத் தயாராக உள்ளதோடு இந்தப் பிராந்தியத்தில் வாஷிங்டன் சீனாவுக்கு எதிரான யுத்தத்தை தயாரித்துக்கொண்டிருக்கின்றது. இராஜபக்ஷ அமெரிக்காவுடனான தடைகளை அகற்ற முனையும் அதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பானது சீனாவுடனான முரண்பாடுகளில் வாஷிங்டன் மற்றும் இந்தியாவுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த முற்றிலும் ஆபத்தான வழியின் படி, யாழ்ப்பாண நகரசபை உறுப்பினர்கள் என நம்பப்படும் இரு தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பு மாணவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழான தமிழ் நிர்வாகம், தமிழ் மக்களுக்கு “நன்மையளிப்பதாக” இருக்கும் எனத் தெரிவித்தனர். அவர்கள் அமெரிக்காவுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை நியாயப்படுத்தியதோடு வாஷிங்டனின் யுத்தக் கொள்கையையும் பாதுகாத்தனர். “அவர்கள் என்ன செய்திருந்தாலும் செய்துகொண்டிருந்தாலும், எமக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவை. நீங்கள் அமெரிக்காவுக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தால் அது எமக்கு பிரதிகூலமாக அமையும்” என அவர்கள் தெரிவித்ததோடு கூட்டமைப்புக்கான வாக்குகளை சிதறடிக்க முயற்சிப்பதாக சோசகவை குற்றம் சாட்டினர். இத்தகைய கருத்துக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் தற்போது இடம்பெறும் கலந்துரையாடல்களை சுட்டிக் காட்டுகின்றன.
சோசலிச சமத்துவக் கட்சியின் சோசலிச மற்றும் அனைத்துலகவாத கொள்கைகள் மீதான ஈர்ப்பையிட்டு பீதியடைந்துள்ள கூட்டமைப்பும் அதன் பங்காளிகளும், தமது வங்குரோத்தான பிற்போக்கு பாதை அம்பலத்துக்கு வருவதை தடுப்பதற்காக ஏங்குகின்றனர். தமிழ் கூட்டமைப்பு பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்டது. இராஜபக்ஷ அரசாங்கத்தைப் போலவே சோசலிச பதாகையின் கீழ் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் ஐக்கியப்படுவதையிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தட்டுக்களும் மரண பீதியடைந்துள்ளன.
கடந்த 60 ஆண்டுகால சிங்கள முதலாளித்துவ ஆட்சியினதும் தமிழ் முதலாளித்துவத்தின் இனவாத அரசியலினதும் கசப்பான அரசியல் படிப்பினைகளை தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளும் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர் விரோத பாரபட்சங்கள், படுகொலைகள் மற்றும் யுத்தத்துக்கும் சிங்கள முதலாளித்துவம் பிரதான பொறுப்பாளியாக இருக்கும் அதேவேளை, தமிழ் முதலாளித்துவ கட்சிகள் அதற்கு எதிரான இனவாத அரசியலை முன்னெடுத்தமை அத்தகைய தாக்குதல்களை பலப்படுத்துவதற்கே பங்களிப்பு செய்துள்ளன.
குறிப்பாக தொழிலாளர்களும் இளைஞர்களும் பிரிவினைவாத புலிகளின் தோல்வியின் படிப்பினைகளை கிரகித்துக்கொள்ள வேண்டும். புலிகளின் பிரிவினைவாத ஆயுதப் போராட்டமானது தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்கான ஏனைய “போர் தவிர்ப்பு வழிமுறைகள்” தோல்விகண்ட பின்னர், “கடைசி முயற்சி” அல்லது “கடைசி வாய்ப்பு” என புகழப்பட்டன. புலிகளின் தோல்வி அடிப்படையில் அந்த அமைப்பின் இராணுவப் பலவீனத்தால் தோன்றியதல்ல. புலிகளின் பிரிவினைவாத முன்னோக்கானது ஒரு இனவாத முட்டுச் சந்தாகும். புலிகள், கொழும்பு அரசாங்கத்துக்கு முழுமையாக அதரவளித்த அதே வல்லரசுகளிடம் –இந்தியா, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம்- இருந்து உதவி பெறுவதற்கு முயற்சித்தனர். புலிகள் சிங்கள அல்லது தமிழ் தொழிலாளர்களுக்கு கூட அறைகூவல் விடுக்காமல், இந்த சக்திகளில் தங்கியிருந்தனர். மாறாக, புலிகள் தமிழ் வெகுஜனங்கள் மீதான தமது ஜனநாயக-விரோத பிடியை தக்கவைத்துக்கொள்ள இனவாத பிளவுகளை ஆழப்படுத்துவதன் பேரில், சிங்கள மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இனவாத யுத்தத்துக்கு எதிராக சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தமிழ் மற்றும் சிங்கள தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட இடைவிடாமல் போராடிய ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.) மட்டுமே ஆகும். இந்த ஐக்கியத்தின் பாகமாக, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை நிபந்தனையின்றி திருப்பியழைக்குமாறு அது இடைவிடாமல் கோரிவருகின்றது.
சிங்கள மேலாதிக்கவாத முதலாளித்துவ ஆட்சியை தூக்கி வீசி, ஆசியாவிலும் சர்வதேசத்திலும் ஐக்கிய சோசலிச குடியரசுகளின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை, அதாவது தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிக்காமல் தமிழ் மக்கள் தமது ஜனநயாக உரிமைகளை வெல்ல முடியாது என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. இந்த முன்னோக்கு மிகவும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சியின் சோசலிச முன்னோக்கை படிக்குமாறும் சிங்கள மற்றும் தமிழ் பேசும் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர கட்சியாக அதை கட்டியெழுப்ப இணைந்துகொள்ளுமாறும் எமது தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆதரவளிக்குமாறும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் நாம் அழைப்புவிடுக்கின்றோம்.
|