சிரிய நச்சுவாயுத் தாக்குதல் குறித்த ஐ.நா. அறிக்கைக்கு ரஷ்யா சவால் விடுகிறது
By Peter Symonds
19 September 2013
சிரியாவில் ஆகஸ்ட் 21 இரசாயன ஆயுத தாக்குதல் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஜனாதிபதி பஷர் அல்-அசாத் உடைய அரசாங்கம்தான் அதற்கு பொறுப்பு என்பதை நிரூபிக்கின்றது என்ற ஒரு தொகை கூற்றுக்களை வெளியிடும் அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் சவால் விடுத்தார்.
இந்த அறிக்கை ஒருதலைப்பட்சமாகவும் பக்கசார்பானதாகவும் உள்ளது என்று லாவ்ரோவ் விவரித்தார். அசாத் எதிர்ப்பு சக்திகள் இரசாயன தாக்குதலில் ஈடுபட்டுள்ளதை நிறைய சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன என்றார் அவர். சிரிய எதிர்த்தரப்பு கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸுக்குப் புறத்தே Tவில் தாக்குதல் நடத்தினர் என்பதை நிருபிக்க ஐ.நா. பாதுகாப்புக் குழுவிற்கு சான்றுகள் தர இருப்பதாகவும் அவர் கூறினார்.
செவ்வாயன்று டமாஸ்கஸில் ஜனாதிபதி அசாத்தைச் சந்தித்த ரஷ்யாவின் துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் ஐ.நா. அறிக்கையை திரிபுபடுத்தப்பட்டது என்று குறைகூறினார். சிரிய அரசாங்கம் வழங்கிய சான்றுகளை விசாரணையாளர்கள் கிட்டத்தட்ட புறக்கணித்துவிட்டனர் என்றும் கூறினார். “இந்த அறிக்கைக்கு அடித்தளமான தகவல்கள் போதுமானதாக இருக்கவில்லை என்றும் நாம் ஆகஸ்ட் 21 நிகழ்விற்கு அப்பாலும் அதைத்தொடர்ந்தும் நடந்தவற்றையும் எவ்விதத்திலும் அறிய வேண்டும்” என்றார் அவர்.
ஐ,நா. அறிக்கை எவரையும் குற்றம் கூறவில்லை என்றாலும், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அதன் தொழில்நுட்ப பின்னிணைப்புக்களின் சில விடயங்களை எடுத்துக் கொண்டு, மீண்டும் அசாத் அரசுதான் கூத்தா தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் அனைத்தும் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் அவற்றின் போக்கு அரசாங்க இராணுவப் படைகளை சுட்டிக்காட்டுகின்றன எனக் கூறகின்றன.
ஐ.நா.விற்கு அமெரிக்கத் தூதரான சமந்தா பௌவர், “தொழில்நுட்ப விவரங்கள் அரசுதான் இத்தகைய பெரிய அளவு இரசாயன ஆயுதத் தாக்குதல்களை நடத்தியிருக்க முடியும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளன” என்றார். பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகள் செய்தி ஊடகத்திடம், விஷேட சிரிய அரசாங்கப்படைகள்தான் ராக்கெட்டுக்கள் சுடப்படுவதற்கு மூலகாரணம் என அறிக்கை தெரிவிக்கிறது என்றனர்.
ஐ.நா. அறிக்கை அப்படியான எதையும் குறிப்பிடவில்லை. அது ஒரு பொதுவான கிழக்கு/தென்கிழக்கிலிருந்து செலுத்தப்பட்ட பாதை ஆராயப்பட்ட ஐந்து பாதிக்கப்பட்ட இடங்களில் இரண்டினை நிர்ணயிக்க முடியும் என்று கூறுகிறது. அறிக்கை எந்த இடத்தில் இருந்து ராக்கெட்டுக்கள் செலுத்தப்பப்பட்டன என்பது பற்றி அது ஏதும் கூறவில்லை. ரியாப்கோவ் கூறினார்: “சில நீண்டகால விளைவுடைய ஆய்வுகள் போதுமானதற்ற தகவல்களின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது பற்றி நாங்கள் வியப்படைகிறோம்.”
அசாத் ஆட்சியை பொறுத்தவரை, அதன் படைகள் முன்னேறும் தாக்குதலில் இருக்கையிலும் ஐ.நா.ஆய்வாளர்கள் சிரியாவில் இருக்கையிலும் ஆகஸ்ட் 21ம் திகதி இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது என்பது அரசியல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ அர்த்தமற்றது. அதிகரித்துவரும் சான்றுகள் சுட்டிக்காட்டுவது போல, அல் குவேடாவுடன் தொடர்புள்ள பிற்போக்குத்தன இஸ்லாமியவாத சக்திகளின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டுள்ள அசாத் எதிர்ப்புச் சக்திகள், அமெரிக்கத் தலைமையிலான இராணுவத் தலையீட்டிற்கு போலிக்காரணத்தை முன்வைக்க இவ்வாறான தாக்குதலை நடாத்துவது கூடுதலாக சாத்தியமானது. (See: “New York Times on Syria: All the propaganda fit to print”)
நேற்று Independent பத்திரிகையில் எழுதிய மூத்த மத்திய கிழக்கு செய்தியாளர் ரோபர்ட் பிஸ்க் சிரிய செய்தியாளர் ஆகஸ்ட் 21 இரவு தாக்குதல் நடத்தியபோது அரசாங்க படைகளுடன் இருந்த சிரிய செய்தியாளர் ஒருவரின் கருத்துக்களை மேற்கோள் காட்டியுள்ளார். அதில் இவர் தன்னுடைய நண்பருடன் இரசாயனத் தாக்குதல்களில் பாதிப்புப் பெற்ற இடங்களில் ஒன்றான மோவாடாமியே புறநகரில் இருந்தார். அந்த இடத்தில் நச்சுவாயு பயன்படத்தப்பட்டதற்கான சான்று ஏதும் இல்லை. “அவருக்கு நினைவு இருப்பது எல்லாம் தொலைக்காட்சியில் வாயுவினால் பாதிப்படைந்தவர்களின் முதல் தோற்றத்தை பார்த்தபோது தாங்களே நச்சுப்புகைக்கு ஊடே போரிட வேண்டியிருக்குமோ என்ற அரசாங்க படைகளின் அச்சத்தைத்தான்” என பிஸ்க் எழுதியுள்ளார்.
மேற்கு அதிகாரிகள் ஐ.நா. அறிக்கையின் கண்டுபிடிப்பான அப்பகுதியில் ராக்கெட்டின் சிதைவுகளில் இருந்த சிரிலிக் எழுத்துக்களை ஆராய்ந்து, ரஷ்யா ஆயதங்களை வழங்கியது என்ற முடிவிற்கு வந்துள்ளனர். ஆனால் சிரியச் செய்தியாளர் பிஸ்க்கிடம் கூறினார்: “இதில் பிரச்சினை, லிபியாவிற்குப்பின் பல ரஷ்ய ஆயுதங்களும் பீரங்கிகளும் சிரியாவிற்குள் கடத்தப்பட்டன. எவர் அதிகம் வைத்திருக்கின்றார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது. லிபியர்கள் தங்கள் எண்ணெயை போதுமான அளவு உற்பத்தி செய்யவில்லை, ஆனால் கடாபியின் ஆயுதங்களை ஏற்றமதி செய்ய முடியும்.”
இக்கருத்துக்கள் அசாத்-விரோத கிளர்ச்சியாளர்களுக்கு இரசாயன ஆயுதங்கள் பெறக்கூடிய மற்றுமொரு சாத்தியமான மூலத்தை சுட்டிக்காட்டுகின்றன. கடந்த மே மாதம், ஐ.நாவில். சிரியாவில் மனித உரிமைகள் மீறலை விசாரிக்கும் ஆணையத்தின் மூத்த உறுப்பினரான கார்லா டெல் பொன்டே எதிர்த்தரப்பு கிளர்ச்சியாளர்கள் நரம்பை தாக்கும் வாயுவைப் பயன்படுத்தினர் எனக் குறிப்புக் காட்டினார். ஜூலை மாதம் ரஷ்ய வெளியுறவு அமைச்சரகம் 100 பக்க அறிக்கை ஒன்றை ஐ.நா.விடம் கொடுத்தது. அதில் கடந்த மார்ச்சில் அலெப்போ நகரில் நடத்தப்பட்ட சரின் வாயுத் தாக்குதல் அசாத் எதிர்ப்புச் சக்திகளால் செய்யப்பட்டது என்ற சான்றுகள் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
சிரிய இராணுவத்தின் இரசாயன ஆயுதங்களை தகர்க்கும் தீர்மானம் பற்றி மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே கடந்த வார இறுதியில் செய்துகொண்ட உடன்பாட்டை சட்டரீதியாக்க ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரித்தானிய, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா தொடர்ந்து பேச்சுக்கள் நடத்துகையில் ஐ.நா. இரசாயன ஆயுதங்கள் அறிக்கை பற்றி ரஷ்யா குறைகூறல்கள் வெளிவந்துள்ளன.
மாஸ்கோ இப்பொழுது, சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவிற்கு சட்டபூர்வ மறைப்கை கொடுக்கும் எவ்வித பலவீனமும் தீர்மானத்தில் இருக்கக்கூடாது என வலியுறுத்துகிறது. ஒபாமா ஆட்சி எப்படி லிபியாவில் பறக்கும் பகுதி கூடாது பற்றிய ஐ.நா. தீர்மானத்தை பயன்படுத்தி லிபியத் தலைவர் முயம்மர் கடாபியை அகற்றும் அதன் முயற்சிகளுக்கு ஒரு முழு வான் போரை நடாத்த பயன்படுத்தின என்பதை ரஷ்ய, சீன அரசாங்கங்கள் முற்றிலும் உணர்ந்தவை.
ஆனால் ஐ.நா. பாதுகாப்புக் குழுவிடம் இருந்து சட்டப்பூர்வ மறைப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அமெரிக்கா, சிரியா மீது தாக்குதலை நடத்தத் தயாரிப்பை செய்துள்ளது. ஒபாமா தற்காலிகமாக பொதுமக்கள் எதிர்ப்பில் இருந்து போரின் விளிம்பில் இருந்து திரும்பியுள்ளபோதிலும், சிரியா மீது அமெரிக்கத் தாக்குதலுக்கான செயற்பட்டியல் உள்ளது. பென்டகன் சிரிய இலக்குக்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தக்கூடிய நான்கு ஏவுகணைத் தாக்குதல்கள் திறனுடைய கப்பல்களை கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியில் இருந்து திரும்பப் பெறவில்லை.
அமெரிக்க பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல் நேற்று அறிவித்தார்: “இராணுவத்தை பயன்படுத்துதல் என்னும் விருப்பத் தேர்வு எங்கு உள்ளதோ அங்கேயே வைத்திருக்க வேண்டும். ஜனாதிபதிக்கு நாங்கள் நம் ஆயுதங்களும் படைகளும் அப்படியே உள்ளன என்று உறுதியளித்துள்ளோம்.” அதே செய்தியாளர் கூட்டத்தில் ஹேகல், அசாத் எதிர்ப்புச் சக்திகளுக்கு ஆயுதம் கொடுக்கும் பொறுப்பை CIA இடம் இருந்து பென்டகன் பொறுப்பெடுத்துக் கொள்ளலாமா என நிர்வாகம் பரிசீலிக்கிறது என்றார். இது இன்னும் நவீன ஆயுதங்களை வழங்குவதற்கு முன்னோடி ஆகும்.
ஒரு அமெரிக்கத் தாக்குதலை நியாயப்படுத்த எத்தனை போலிக் காரணங்களும் பயன்படுத்தப்படலாம், உருவாக்கப்படலாம். ஒபாமா நிர்வாகம் அமெரிக்க-ரஷ்ய இரசாயன ஆயுதங்கள் உடன்பாட்டைப் பயன்படுத்தி அசாத் அரசாங்கம் தன் கடமைகளை நிறைவேற்றவில்லை என்று கூறலாம். டமாஸ்கஸ் தனது அனைத்து இரசாயன ஆயுதங்கள் பற்றிய கணக்கை கொடுப்பதற்கு முதல் காலக்கெடு இன்னும் சில நாட்களில் எதிர்வரும் சனிக்கிழமைவரை தான் உள்ளது.
திங்களன்று துருக்கியபோர் விமானங்கள் ஒரு சிரிய ஹெலிகாப்டரை கீழே வீழ்த்தியது, மத்திய கிழக்கில் அமெரிக்க நட்பு நாடுகளின் ஆத்திரமூட்டல் தன்மையை எடுத்துக் காட்டுகிறது. சிரிய அரசாங்கம் ஹெலிகாப்டர் துருக்கிய வான்வழிக்குள் தவறிச் சென்று விட்டது என்பதை ஒப்புக் கொண்டது. ஆனால் துருக்கி வேண்டும் என்றே அழுத்தங்களை அதிகரிக்க அது சிரியாவிற்குத் திரும்புகையில் அதை சுட்டுவீழ்த்தியது எனக் குற்றம் சாட்டியுள்ளது. ஹெலிகாப்டர் சிரியப் பகுதிக்குள் கீழே விழுந்து நொருங்கியது.
ஒபாமா நிர்வாகத்தின் போர் விமானங்களின் பொறுப்பற்ற தன்மை ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷிற்கும் ஒபாமாவிற்கும் முன்னாள் பாதுகாப்பு மந்திரியாக இருந்த ரோபர்ட் கேட்ஸ் நேற்றைய கருத்துக்களில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. ஒபாமாவின் சிரியக் கொள்கையை விமர்சித்த கேட்ஸ், “நான் முக்கியமாகக் கூற விரும்புவதன் அடித்தளம் ஒருசில நாட்களில் ஒரு தொகை விடயங்களை வெளிப்படுத்துதலாகும். ஒரு விடயத்தையோ அல்லது ஒரு கொள்கையையோ எடுத்துக்காட்டுதல் அல்லது மதிப்பிடுதல் என்பது ஒரு மூலோபாயம் அல்ல.” என்றார்.
பிராந்தியத்தில் அதிக ஸ்திரமற்ற நிலைமையை சுட்டிக்காட்டி, கேட்ஸ் சிரியா மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல், “மத்திய கிழக்கில் ஒரு பெரும் சிக்கலான நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவது போல் ஆகும்... ஒரு இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுவிட்டால் அதன் விரும்பா விளவுகளை பற்றி ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா ஏதேனும் எமக்கு கற்பிக்கவில்லையா?” என்றார்.
ஆயினும்கூட, ஒபாமா நிர்வாகம் இறுதியில் அதற்கு முன் இருந்த புஷ் நிர்வாகம் போலவே அதே மூலோபாய தேர்வைத்தைத்தான் கொண்டுள்ளது. அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்று வீழ்ச்சியை இராணுவ பலத்தை ஆக்கிரோஷமாக பயன்படுத்துவதன் மூலம் ஈடுகட்டுவது என்பதாகும். ஈராக் படையெடுப்பிற்கு ஒரு தசாப்தத்திற்குப்பின், பிராந்தியத்தில் பேரழிவைத் தூண்டும் அச்சுறுத்தலுடன் ஈரான், ரஷ்யா, சீனாவை இதனுள் இழுக்ககூடிய சாத்தியப்பாட்டுடன் மற்றொரு புதிய குற்றம்சார்ந்த போருக்குத் அமெரிக்கா தயாரிப்பை செய்கின்றது.
இதுதான் முன்னாள் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டாவின் கருத்துக்களிலும் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இவர் கேட்ஸுடன் பேசுகையில், ஒபாமா சிரியாமீது போர் தொடுத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார். அமெரிக்க ஜனாதிபதி ஒரு “சிவப்புக்கோட்டை” வரைந்தால், தன் சொல்லை அவர் செயல்படுத்துவதைத்தான் இந்நாட்டின் நம்பகத்தன்மை தங்கியுள்ளது” என்றார் பானெட்டா.
|