சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!
|
|
சோசக பிரச்சாரக் குழு சிரியாவுக்கு எதிரான அமெரிக்க யுத்த அச்சுறுத்தலைப் பற்றி கலந்துரையாடியது
By our correspondent
13 September 2013
வட மாகாண சபை தேர்தலில், இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) மட்டுமே சிரியாவுக்கு எதிரான அமெரிக்க போர் அச்சுறுத்தல் மூலம் எழுந்துள்ள ஆபத்துக்களை பற்றி பேசும் ஒரே கட்சியாகும். சோசலிச சமத்துவக் கட்சி, யாழ் மாவட்டத்தில் 19 வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியுள்ளது. சிரியா மீதான அமெரிக்க போர் உந்துதலை எதிர்ப்பதற்கு ஞாயிறன்று யாழ்ப்பாணத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடைபெறும்.
சோசலிச சமத்துவக் கட்சியுடன் பேசிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், 2009 மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்த, கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் முன்னெடுத்த நீண்டகால இனவாத யுத்தத்தில் தங்கள் அனுபவங்களை கூறினர். போர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது.
தேர்தல் பிரச்சாரத்தில், பிரதான தமிழ் முதலாளித்துவ கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மேல்தட்டினருக்கு பயன்தரும் வகையில் கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு அதிகார பரவலாக்கல் ஒழுங்கை பிரேரிக்கின்றது. சோசக, தமிழ் மற்றும் சிங்கள தொழிலாள வர்க்கத்தை சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்த போராடுகிறது.
பிரச்சாரத்தில் சோசலிச சமத்துவக் கட்சியினர்
உலக சோசலிச வலைத்தள செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு உயர்தர வகுப்பு மாணவி தெரிவித்ததாவது: "சிரியாவுக்கு எதிராக போர் நடத்த அமெரிக்காவுக்கு உள்ள உரிமை என்ன? இரசாயன ஆயுதங்கள் குற்றச்சாட்டானது போரை முன்னெடுப்பதற்கான ஒரு பொய் என்றுதான் நான் நினைக்கிறேன்."
அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய நாடு மற்றும் சிரியா ஒரு சிறிய நாடு என்று அவள் விளக்கினாள். அமெரிக்க தனது ஆதிக்கத்தை பரப்ப முயற்சிக்கின்றது எனக் கூறிய அவர், சிரியா மீதான தாக்குதல் ஒரு பரந்த போராக மாறும் என்பதையும் அது கொடூரமானதாக இருக்கும் என்றும் அவர் ஒப்புக் கொண்டார். "போருக்கு எதிராக தொழிலாளர்களை திரட்டுவதற்கு முயற்சிக்க வேண்டும்."
சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கை பற்றி பேசிய அவர், "அமெரிக்கா, தன்னுடன் சீனா பொருளாதார ரீதியாக போட்டியிடுவதை நிறுத்தி அதை கீழறுக்க விரும்புகிறது. [உலகில்] எங்கு வேண்டுமானாலும் அமெரிக்கா தனது அதிகாரத்தை பயன்படுத்த முயற்சிக்கின்றது," என்றார்.
தொடக்கத்தில் புலிகள், வறியவர்களுடன் ஒரு இணைப்பை கொண்டிருந்தனர். ஆனால் பின்னர், பணக்காரர்களின் கட்சியாகி முதலாளித்துவத்தைத் தழுவிக்கொண்டனர் என அவர் தெரிவித்தார். "கூட்டமைப்பு [தமிழ் தேசிய கூட்டமைப்பு] ஒரு முதலாளித்துவக் கட்சி ஆகும். நான், தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட்டு நமது உரிமைகளை பெற போராட வேண்டும் என்பதில் உடன்படுகிறேன்," என அவர் விளக்கினார்.
ஒரு முதல் ஆண்டு பல்கலைக்கழக மாணவர், "நாங்கள் இங்கு பல பிரச்சினைகளை கொண்டுள்ள போது, ஏன் நீங்கள் சிரியாவை பற்றி பேசுகிறீர்கள்?" என்று கேட்டார்.
சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர் ஒருவர், சிரியாவுக்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலானது ஒவ்வொரு நாட்டிலும் உழைக்கும் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்று விளக்கினார். "அதன் பூகோள அரசியல் நலன்களால் நகர்த்தப்படும் அமெரிக்கா, இராணுவ சக்தியை பயன்படுத்தி உலகம் முழுவதும் தனது மேலாதிக்கத்தை மீண்டும் பெற முயன்று வருகிறது. சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக தோன்றியுள்ள அதே வேளை, அமெரிக்கா பிற ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவுடன் போருக்கு தயார் செய்யத் தொடங்கியுள்ளது. ‘ஆசியாவுக்கு மீண்டும் திரும்புதல்’ என்ற அதன் மூலோபாயத்தின் அர்த்தம் இதுவே. தொழிலாள வர்க்கம் மட்டுமே இந்த யுத்தத்தை நிறுத்தும் இயலுமை கொண்டது."
தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகின்றனர்
அவர் தமிழ் கூட்டமைப்பின் பிற்போக்கு நிலைப்பாட்டையும் விளக்கினார்: அமெரிக்கா உலகில் எங்கும் எதை செய்திருதந்தாலும், “தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க" கூட்டமைப்பு வாஷிங்டனை நாடுகிறது. தமிழ் கூட்டமைப்பு, தமிழ் உயரடுக்கின் வர்க்க நலன்களுக்காக, கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள, ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவை பெற முயல்கிறது.
மற்றவர்களும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். "அவர்களால் [தொழிலாளர்கள்] எப்படி போரை நிறுத்த முடியும்?" என ஒரு தொழிலாளி கேட்டார்.
ஒரு சோசலிச சமத்துவக் கட்சி குழு உறுப்பினர் பதிலளிக்கையில்: "தொழிலாள வர்க்கமே முழு உலகிற்கும் உற்பத்தியாளர்கள். அவர்கள் உலகளவில் மொழி அல்லது தேசிய பிளவுகள் அனைத்தையும் நிராகரித்து ஒன்றுபட வேண்டும். ஒரு சோசலிச பதாகையின் கீழ் ஐக்கியப்படுவதன் மூலம், சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் போருக்கு எதிராக போராடவும் முதலாளித்துவத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வரவும் முடியும்,” என்றார்.
ஆர்வத்துடன் உரையாடலை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த ஒரு மீனவர் மேலும் கூறியதாவது: "நாங்கள் உடனடியாக எரிபொருள் விலை உயர்வு பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். போர் தொடங்குகிறது என்றால், அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரிக்கும், அதனால் மற்ற பொருட்களின் விலையும் அதிகரிக்கும். அது நடந்தால் நாங்கள் பட்டினி கிடக்க மாட்டோமா?”
ஒரு பெண் தொழிலாளி தனது சொந்த அனுபவத்தை விவரித்தார்: "நீங்கள் சொன்னதை கேட்டவுடன், நாம் கடந்த 30 ஆண்டுகளில் இங்கு நடந்ததை ஒப்பிட முடியாளவு ஒரு பயங்கரமான போரை எதிர்கொள்ள நேரும் என்று நான் கூட உணர்ந்தேன். எங்களுக்கு நடந்தது சிரிய மக்களுக்கு நடக்கக் கூடாது. போர்கள் எங்கும் தொடங்கக் கூடாது. நான் போரில் என் குழந்தைகள் இரண்டை இழந்துள்ளேன். முதல் பிள்ளை புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பில் சிக்கி இறந்தார். இரண்டாவது பிள்ளை 2009 போரின் இறுதி கட்டங்களில் வன்னி பகுதியில் வசித்து வந்தார். அவர் பின்னர் காணாமல் போய்விட்டார்.
"என் கணவர் எங்கள் பிள்ளைகளுக்கு நடந்தவற்றை எண்ணி பிறகு வேதனையில் இறந்தார். நான் தற்போது ஒரு வாடகை வீட்டில் எங்கள் மீதமுள்ள இரண்டு குழந்தைகளுட்ன ஒரு கடினமான வாழ்க்கை வாழ்கிறேன். போரின் துயரமும் அதிர்ச்சியும் இன்னமும் எனக்கு எதிரொலிக்கின்றன. நான் இன்னொரு போரை பற்றி கேட்கும் போது என் உடன் சிலிர்க்கின்றது. நான் சிரியாவுக்கு எதிரான போரை எதிர்க்கிறேன். "
சோசலிச சமத்துவக் கட்சிக் குழு பிரச்சாரத்தின் போது மற்றவர்களுடனும் பேசியது.
சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தை படித்துக் கொண்டிருந்த ஒரு தொழிலாளி தெரிவித்ததாவது: "தமிழர்கள் உட்பட இலங்கையில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய கட்சி கிடையாது. நான் என் சொந்த அனுபவத்தில் இருந்து இதை புரிந்தவன். நான் உங்கள் அறிக்கையை படித்தேன், உங்கள் சர்வதேச திட்டம் மற்றும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு சோசலிச புரட்சியே என்ற உங்கள் அறிக்கையை என்னால் ஏற்க முடிகிறது."
போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்கள் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டமைக்கு சகல பெரும் வல்லரசுகளும் பொறுப்பு என்று அந்த தொழிலாளி கூறினார். “சாதி, இனம், மொழி, மத வேறுபாடுகள் இன்றி அனைவரும் மனிதர்களாக கருதப்பட வேண்டும் என்பது ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இதுதான் சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் என்று நான் நினைக்கிறேன். அதன்படி செயற்பட்டு வருபவர்கள் நீங்களே என்ற நான் நினைக்கின்றேன்.” அவர், தமது சொந்த சுய நலனுக்கு செயற்படும் கட்சிகளை விமர்சித்தார். "உறுப்பினர்கள் மேலும் சலுகைகள் பெறுவதற்கு கட்சிகளை மாற்றிக்கொள்கின்றனர்," என கூறிய அவர், தமிழ் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்டால் அது தனக்கு ஆச்சரியமாக இருக்காது என்றார்.
தனிப்பட்ட முறையில் முள்ளிவாய்க்கால் கொலைகளை அனுபவபூர்வமாக கண்ட இன்னொரு நபர், தான் உயிர் பிழைத்தது ஒரு அதிசயம் என்றார். "தனது அதிகாரத்தை பயன்படுத்த முற்படும் அமெரிக்கா, சிரியா மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கின்றது. அது நடந்தது என்றால் ஒரு உலக போர் வெடிக்க முடியும். நாங்கள் போரை விரும்பவில்லை," என்று அவர் கூறினார். |