இலங்கை உள்நாட்டு யுத்தம் தொடங்கி முப்பது ஆண்டுகள்
By Vilani Peiris and Rohantha De Silva
7 August 2013
ஜூலை மாதத்தின் கடைசி வாரம், இலங்கையில் நாடு பூராவும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு 30 வருடங்களை குறிக்கின்றது. இந்தப் படுகொலைகளை அடுத்து வெடித்த 26 ஆண்டுகால இனவாத யுத்தம், 2009 மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமான உயிர்களைப் பலியெடுத்த இந்த கொடூர மோதல்கள், இலங்கையிலும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு தீர்க்கமான துன்பகரமான அனுபவமாகும். இதில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இன்றியமையாத அரசியல் படிப்பினைகள் உள்ளடங்கியுள்ளன.
30வது ஆண்டு குறித்து இலங்கை ஊடகங்களில் வெளிவந்த பல்வேறு கட்டுரைகள், 1983 ஜூலை படுகொலைகளையை “துன்பகர சம்பவம்”, “தமிழர்களுக்கு எதிரான குற்றம்” மற்றும் ஒரு “தேசிய வெட்கம்” என விவரித்துள்ளன. ஆனால் இந்த வன்முறைகள் நடந்தது ஏன் என்பதற்கு எதிலும் விளக்கம் இல்லை –ஒன்று விளக்க முடியாதது என தெரிவிக்கப்பட்டுள்ளது, அல்லது பழைய இனவிரோதம் என பொய்யாக விளக்கப்பட்டுள்ளது. 1948ல் உத்தியோகபூர்வ சுதந்திரத்தில் இருந்து தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் தமது ஆட்சியை நிலைப்படுத்தவும் இலங்கை முதலாளித்துவம் தங்கியிருந்த பிற்போக்கு இனவாத அரசியலிலேயே இந்தப் படுகொலைகளுக்கான மெய்யான காரணம் தங்கியிருக்கின்றது என்ற உண்மையை அவர்கள் அனைவரும் மூடி மறைக்கின்றனர்.
1983 ஜூலை ஒரு பண்புரீதியான திருப்புமுனையாகும். ஜூலை 24 தொடங்கிய அந்த வாரத்தில், சிங்களப் பேரினவாத குண்டர்கள், பொலிஸ் மற்றும் இராணுவத்தின் ஆதரவுடன் கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான பயங்கரத்தை கட்டவிழ்த்து விட்டனர். அது துரிதமாக ஏனைய நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பரவியது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதோடு, பெரும்பாலானவர்கள் காயமடைந்ததோடு ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், தமிழர்கள் செறிந்து வாழும் தீவின் வடக்குக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ இடம்பெயர்ந்தனர். சிறிய தேனீர் கடைகள் மற்றும் பாதை ஓரங்களில் இருந்த விற்பனை தட்டுகள் உட்பட தமிழர்களுக்கு சொந்தமான வீடுகளும் கடைகளும் எரித்து சாம்பலாக்கப்பட்டன. ஆஸ்பத்திரிகளில் இருந்த தமிழ் நோயாளர்களும் தப்பவில்லை. சிறைச்சாலை அதிகாரிகளால் தூண்டிவிடப்பட்ட சிங்கள கைதிகளால் 50க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர்.
ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, புலிகளால் 13 சிப்பாய்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக சிங்களவர்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என இந்த கொலைகாரத் தாக்குதல்களை நியாயப்படுத்தினார். இந்தக் கூற்று முற்றிலும் பொய்யானது. ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) அரசாங்கம், இறந்த சிப்பாய்களின் சடலங்களை பொது மரணச் சடங்கிற்காக கொழும்புக்கு கொண்டு வந்ததன் மூலம் வன்முறைகளை வேண்டுமென்றே தூண்டி விட்டதுடன் வன்முறைகளில் யூ.என்.பீ. குண்டர்கள் முன்னணியில் இருந்தனர். தொடர்ந்து நடந்த அட்டூழியங்கள் தொடர்பாக பெரும்பான்மை சாதாரண சிங்களவர்கள் கவலை தெரிவித்ததோடு சிலர் தமிழ் நண்பர்களையும் அயலவர்களையும் பாதுகாக்க தமது உயிரையும் ஆபத்துக்குள்ளாக்கினர்.
தமிழ் மக்கள் மீது முழு வீச்சில் யுத்தத்தை முன்னெடுப்பதற்கான சாக்குப் போக்காக இந்தப் படுகொலைகளை ஜயவர்தன பற்றிக்கொண்டார். ஆகஸ்ட் 4 அன்று, அரசியலமைப்பு மாற்றம் ஒன்றை கொண்டுவந்த அரசாங்கம், தனியான ஈழத் தமிழ் அரசு பற்றிய எந்தவொரு அறிவுரையையும் சட்ட விரோதமாக்கியதோடு சகல அரசாங்கத் துறை தொழிலாளர்களிடம் ஒரு விசுவாச சத்தியப்பிரமானத்தை கோரியது. சத்தியப் பெறுமானம் எடுக்க மறுத்தமையால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (த.ஐ.வி.மு.) பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவி இரத்துச் செய்யப்பட்டது. டிசம்பரில், வடக்கில் முழு யாழ்ப்பாண குடாநாட்டையும் யுத்த வலயமாக பிரகடனப்படுத்திய அரசாங்கம், அதை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருத்தியது. யூ.என்.பீ. அரசாங்கத்தின் நடவடிக்கைகளையிட்டு ஆத்திரமடைந்த தமிழ் இளைஞர்கள், புலிகள் போன்ற முன்னர் ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்த தமிழ் பிரிவினைவாத ஆயுதக் குழுக்களில் அலையலையாக சேர்ந்தனர்.
தீவின் தமிழ் சிறுபான்மையினரே உடனடி இலக்காக இருந்த அதே வேளை, அரசாங்கத்தின் பரந்த சந்தை-சார்பு நிகழ்ச்சி நிரலுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை தகர்ப்பதற்கான அதன் முயற்சியில் இருந்தே யுத்தம் தோன்றியது. 1977ல் ஆட்சிக்கு வந்த உடனேயே, தேசிய பொருளாதார முறை திட்டத்தை கைவிட்டு, சுதந்திர சந்தை மறுசீரமைப்பை அனைத்துக்கொண்ட, உலகின் முதலாவது அரசாங்கம் யூ.என்.பீ. அரசாங்கமே ஆகும். அது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக ஒரு மலிவு உழைப்பு சந்தையாக தீவை மாற்றுவதற்கு முயற்சித்தது.
தொழிலாள வர்க்கத்தின் உறுதியான எதிர்ப்பு இருந்த போதிலும், தனது தனியார்மயமாக்கல் வேலைத்திட்டத்தை ஈவிரக்கமின்றி திணித்த ஜயவர்தன தொழில், சம்பளம், விலை மாநியங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளையும் வெட்டிக் குறைத்தார். தமது சம்பளம் மற்றும் நிலைமைகளை பாதுகாக்க 1980 ஜூலையில் தீவு பூராவும் நடந்த பொது வேலை நிறுத்தமொன்றை அரசாங்க ஊழியர்கள் தொடங்கிய போது, அரசாங்கம் 100,000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. தொழிற்சங்கங்கள், லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.), ஸ்டாலினிச கம்யூனிஸக் கட்சி மற்றும் நவசமசமாஜக் கட்சியினதும் துரோகத்தினால், விளைவு தொழிலாள வர்க்கத்துக்கு அழிவுகரமானதாக இருந்தது.
தொழிலாள வர்க்கத்தின் மீதான அரசாங்கத்தின் அதிகரித்து வந்த தாக்குதல்கள், கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களுக்கு எதிரான ஆத்திரமூட்டல்களாகியதோடு அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவது உட்பட, ஜனநாயக-விரோத ஆட்சியை நாடுவது வரை சென்றது. 1981ல் சிங்கள குண்டர்கள் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்டு கலாச்சார பெறுமதி வாய்ந்த கட்டிடங்கள் அழிக்கப்பட்டதோடு மீண்டும் தேட முடியாத சுவடிகள் உட்பட முழு யாழ்ப்பாண நூலகமும் எரிக்கப்பட்டன. 1983 கருப்பு ஜூலையானது இந்த நடவடிக்கைகளின் உச்ச கட்டமே ஆகும்.
யுத்தத்தை ஆரம்பித்தமைக்கு யூ.என்.பீ. பொறுப்பாளியாக உள்ள அதே வேளை, 1948ல் உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்றதில் இருந்தே, கிளர்ச்சி செய்துகொண்டிருந்த தொழிலாள வர்க்கத்தையும் ஒரு புரட்சிகர கட்சியையும் எதிர்கொண்டிருந்த இலங்கை முதலாளித்துவத்தின் அரசியல் பலவீனத்திலேயே யுத்தத்தின் வேர்கள் தங்கியுள்ளன. ட்ரொட்ஸ்கிச இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (பி.எல்.பீ.ஐ.) மட்டுமே, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியையும் லண்டனிடம் இருந்து கிடைத்த “போலி சுதந்திரத்தையும்” எதிர்த்த ஒரே கட்சியாகும்.
1948ல் யூ.என்.பீ. அரசாங்கத்தின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று, சுமார் ஒரு மில்லியன் தமிழ் பேசும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை பறிப்பதாகும். பிரஜா உரிமைச் சட்டத்தை கண்டனம் செய்த பி.எல்.பீ.ஐ. தலைவர் கொல்வின் ஆர். டி சில்வா, “அரசு தேசத்துக்கு காலப் பொருத்தமுடையதாகவும் தேசம் இனத்துடன் காலப்பொருத்தம் உடையதாகவும் இருக்க வேண்டும்” என்ற பாசிசக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, என பிரகடனம் செய்ததோடு அது தவிர்க்க முடியாமல் மோதலுக்கு வழி வகுக்கும் என்றும் எச்சரித்தார்.
இனவாத அரசியலின் செல்வாக்கு தவிர்க்க முடியாதது அல்ல, ஆனால் அது 1950ல் லங்கா சமசமாஜக் கட்சிக்குள் பி.எல்.பீ.ஐ. கரைத்துவிடப்பட்டு பின்னர் சமசமாஜக் கட்சி அரசியல் ரீதியில் சீரழிந்ததுடன் பிணைந்திருந்தது. சமசமாஜக் கட்சி மேலும் மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் (ஸ்ரீ.ல.சு.க.) அதன் சிங்களத்தை மட்டும் அரச மொழியாக்கும் வெளிப்படையான இனவாத அரசியலுக்கும் அடிபடிந்து போனது. 1964ல் சமசமாஜக் கட்சி சோசலிச சர்வதேசியவாதத்துக்கான எந்தவொரு நாட்டத்தையும் முழுமையாக கைவிட்டதுடன் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்துடன் இணைந்துகொண்டது.
சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பு, இலங்கை அரசியலில் ஒரு அடிப்படை திருப்புமுனையை குறிக்கின்றது. தெற்கில், சிங்கள மக்கள்நலவாதம் மற்றும் மாவோவாதத்தின் கலவையை அடிப்படையாகக் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.), வேலையற்ற கிராமப்புற சிங்கள இளைஞர்கள் மத்தியில் தளம் ஒன்றை ஸ்தாபித்துக்கொள்வதற்காக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விளைந்த குழப்பத்தை சுரண்டிக் கொண்டது. வடக்கில் ஸ்ரீ.ல.சு.க.-சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சி கூட்டரசாங்கம், 1972ல் தமிழர்களுக்கு எதிரான பாரபட்சமான புதிய அரசியலமைப்பை திணித்ததை அடுத்து, இளம் தமிழர்கள் புலிகள் உட்பட பிரிவினைவாத ஆயுதக் குழுக்களின் பக்கம் திரும்பத் தொடங்கினர்.
சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) மட்டுமே சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஐக்கியத்துக்காகப் போராடிய ஒரே கட்சியாகும். பு.க.க./சோசக சகல வடிவிலான தேசியவாதம் மற்றும் இனவாதத்தையும் இடைவிடாமல் எதிர்த்து, தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்ததோடு, யுத்தத்தின் தொடக்கத்தில் இருந்தே, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அனைத்து துருப்புக்களையும் உடனடியாக நிபந்தனையின்றி திருப்பியழைக்கக் கோரியது.
26 ஆண்டுகால மோதல், யுத்தத்துக்கும் இராணுவத்தின் குற்றங்களுக்கும் பொறுப்பான ஆட்சியில் இருந்த அரசாங்கங்களின் குற்றம் மட்டுமன்றி, தமிழ் பிரிவினைவாதத்தின் அரசியல் முன்னோக்கினதும் குற்றமாகும். தமது எதிரிகளை ஈவிரக்கமின்றி நசுக்கிய பின்னர் செல்வாக்கான ஆயுதக் குழுவாகத் தோன்றிய புலிகள், தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திசையமைவுகொள்ளவே இல்லை. புலிகளின் தனியான ஈழத் தமிழ் அரசு வேலைத் திட்டம், விலைபோகும் தமிழ் முதலாளித்துவத்தின் வர்க்க நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதோடு எப்போதும் இந்தியா மற்றும் ஏனைய சக்திகளிடம் ஆதரவு பெறுவதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
எவ்வாறெனினும், இலங்கையிலான யுத்தம் இந்தியாவில் பிரிவினைவாத இயக்கங்களைத் தூண்டிவிடும் என கவலை கொண்ட புது டில்லி, புலிகளை நிராயுதபாணிகளாக்குவதற்காக இந்திய “அமைதிப் படையை” அனுப்புவதற்காக யூ.என்.பீ. அரசாங்கத்துடன் ஒரு உடன்படிக்கையை -1987 இந்திய-இலங்கை உடன்படிக்கையை- கைச்சாத்திட்டது. மாகாண மட்டத்தில் அதிகாரங்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பகிர்வதற்கு வாக்குறுதியளித்த இந்த உடன்படிக்கையை, புலிகள் உட்பட சகல தமிழ் கட்சிகளும் ஆதரித்தன. இதன் விளைவாக கொஞ்சம் மூச்சுவிடக் கிடைத்த இடைவெளியை சுரண்டிக்கொண்ட யூ.என்.பீ. அந்த வாய்ப்பை தெற்கில் எதிர்ப்பை நசுக்குவதற்காகப் பயன்படுத்திக்கொண்டு, பின்னர் யுத்தத்துக்குத் திரும்பியது.
2009 மே மாதம் புலிகளின் இராணுவத் தோல்வியானது, அதன் அரசியல் குறிக்கோளின் வங்குரோத்தின் விளைவாகும். சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை வர்க்க அடிப்படையில் ஐக்கியப்படுத்தும் எந்தவொரு போராட்டத்தையும் கசப்புடன் எதிர்த்த புலிகள், கொழும்பு அரசாங்கத்தின் குற்றங்களுக்கு ஒட்டு மொத்த “சிங்கள மக்களையும்” குற்றம் சாட்டினர். சிங்கள பொதுமக்கள் மீதான அதன் கண்மூடித்தனமான தாக்குதல், நேரடியாக கொழும்பு அரசாங்கத்தின் கைகளில் பயன்பட்டதோடு இனப் பிளவை மட்டுமே ஆழப்படுத்தியது. தமது கட்டுப்பாட்டிலான பிரதேசங்களில், புலிகளின் எதேச்சதிகார மற்றும் ஜனநாயக-விரோத வழிமுறைகளிலான ஆட்சி, தமிழ் வெகுஜனங்களை அந்நியப்படுத்தியது.
தெற்காசியாவில் அல்லது சர்வதேசத்தில் உள்ள தொழிலாளர்கள் ஒருபுறம் இருக்க, இலங்கையில் தொழிலாள வர்க்கத்துக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எந்தவொரு அழைப்பும் விடுக்க இயல்பிலேயே இலாயக்கற்ற புலிகள், இலங்கை இராணுவம் தமது போராளிகளைச் சூழ்ந்துகொண்ட நிலையில், கொழும்பு அரசாங்கத்துக்கு ஆதரவளித்த அமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய வல்லரசுகளுக்கும், அதாவது “சர்வதேச சமூகத்துக்கு” பயனற்ற அழைப்பு விடுக்குமளவுக்கு கீழிறங்கியிருந்தனர்.
யுத்தத்தின் முடிவு சமாதானத்தையோ சுபீட்சத்தையோ கொண்டுவரவில்லை.
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கீழ், தற்போதைய ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கம், யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பரந்த பொலிஸ்-அரச இயந்திரத்தை பேணுவதோடு தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவம் தமது ஆக்கிரமிப்பை இறுக்கியுள்ளது. யூ.என்.பீ. அரசாங்கம் அதன் சந்தை-சார்பு கொள்கைகளை அமுல்படுத்தும் போது தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக 1983ல் தமிழர்-விரோத இனவாதத்தை கிளறிவிட்டதைப் போலவே, இராஜபக்ஷ அரசாங்கமும், 1930க்கு பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான உலக முதலாளித்துவ பொறிவின் மத்தியில், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தை திணிக்கின்ற நிலையில், தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத பேரினவாதத்தை கிளறிவிடுகின்றது.
கடந்த 30 ஆண்டுகள் பூராவும், பு.க.க/சோசக போராடிய இந்த வேலைத்திட்டம், இன்று தீர்க்கமாக பொருந்துகிறது. இந்த யுத்தம், லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது –உழைக்கும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் ஒழுக்கமான வாழ்க்கை நிலைமைகளையும் உறுதிப்படுத்துவதற்கு இலங்கை முதலாளித்துவத்தின் எந்தவொரு பகுதியும் இலாயக்கற்றுள்ளது. சகல வடிவிலான தேசியவாதம் மற்றும் பேரினவாதத்தை நிராகரிப்பதன் ஊடாக, சோசலிச சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் ஐக்கியப்பட்டுப் போராடுவதே தொழிலாள வர்க்கத்துக்கு அதன் வர்க்க நலன்களை காப்பதற்கான ஒரே வழி. இதன் அர்த்தம், தெற்காசியாவிலும் உலகம் பூராவும் சோசலிசக் குடியரசு ஒன்றியங்களின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசு என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குக்கான போராட்டத்தில், ஆளும் வர்க்கத்தின் அனைத்து கன்னைகளிலும் இருந்து தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்காக அரசியல் ரீதியில் போராடுவதாகும்.
|