Sri Lanka: TNA wins northern provincial council election
இலங்கை : தமிழ் தேசிய கூட்டமைப்பு வட மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்றது
By K. Ratnayake
23 September 2013
இலங்கையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வட மாகாண சபை தேர்தல், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு தமிழ் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் பரந்த எதிர்ப்பபை அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. உடனடி பயனாளிகள், தமிழ் முதலாளித்துவ கட்சிகளின் ஒரு முன்னணியான தமிழ் தேசிய கூட்டமைப்பினரே. கூட்டமைப்பு 78 சதவீத வாக்குகளைப் பெற்று 38 ஆசனங்களில் 30 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
அரசாங்கம், வட மாகாண சபை தேர்தலை நடைத்துவது இதுவே முதல் முறையாகும். இது பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன், தீவின் நீண்டகால இனவாத யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் இடம்பெறுகின்றது.
வடக்கில் 33 சதவீதமானோர் மட்டுமே வாக்களித்த 2010 பொதுத் தேர்தலை விட, இம்முறை வாக்களிப்பு 68 வீதமாக அதிகரித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான வாக்குகள், அதற்கான ஆதரவை அந்தளவு பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக, குறைந்தது 150,000 பேராவது கொல்லப்பட்ட, 23 ஆண்டு காலம் நடந்த போரின் விளைவால் உருவான ஆழ்ந்த பகைமையின் வெளிப்பாடாகும். 2009 மே மாதம் யுத்தத்தின் கடைசி வாரங்களின் போது மட்டும், அரசாங்கம் மற்றும் அதன் இராணுவத்தின் கைகளில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டுப்படுத்தும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பை இராஜபக்ஷ அரசாங்கம் வலுப்படுத்தும் அதேவேளை, இன்று நூறாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் முறையான வாழ்வாதாரங்கள் இன்றி, சிறிய தற்காலிக குடிசைகளில் வசிக்கின்றனர்
இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) அதன் பங்காளியான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பீ.டி.பீ.) உடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது. ஈ.பீ.டி.பீ., அரசியல் எதிரிகள் மற்றும் அதன் நடவடிக்கைகளை எதிர்க்கும் எவர் மீதும் வன்முறை தாக்குதல்களை நடத்த துணைப்படை குழுக்களை பயன்படுத்துவதில் பேர்போன அமைப்பாகும். இந்த கூட்டணியின் வாக்குகள் 2010ல் 34 சதவீதமாக இருந்து, இந்த தேர்தலில் 18 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
அரசாங்கம் வாக்குகளை பெற எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்திய போதிலும் தோற்கடிக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக இராணுவம், அதன் உளவுத்துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஈ.பீ.டி.பீ. துணைப்படை குழுக்களும், வாக்காளர்களையும் எதிர்க்கட்சி வேட்பாளர்களையும் அச்சுறுத்த கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. இராஜபக்ஷ, பொருளாதார வளர்ச்சியின் அறிகுறிகளாக, யுத்தத்தின் போது தகர்க்கப்பட்ட வீதிகள் மற்றும் இரயில் போக்குவரத்துகளை மீண்டும் கட்டியெழுப்பியதுடன் மின்னாலையையும் திறந்து வைத்து உட்கட்டமைப்புத் திட்டங்களை தூக்கிப் பிடித்தார். உண்மையில், இந்த திட்டங்கள் முதன்மையாக, சாதாரண மக்களுக்கு சிறிய நன்மைகளுடன் அல்லது ஒன்றுமே இல்லாமல், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான முயற்சிகளாகும்.
வாக்களிப்பின் பின்னர், ஆளும் கூட்டணியின் பொதுச் செயலாளர் சுசில் பேரமஜயந்த, வடக்கு தேர்தல் ஜனநாயகத்தின் வெற்றி என்று பாசாங்குத்தனமாக அறிவித்தார். இராஜபக்ஷ தயக்கத்துடன் இந்த தேர்தலை நடத்தியது, தமிழ் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை வழங்குவதற்கு அல்ல, மாறாக சர்வதேச சக்திகளை, குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காகவே நடத்தியது. இரு நாடுகளின் ஆளும் தட்டுக்களும் 23 வருடகால உள்நாட்டு யுத்தத்தை முழுமையாக ஆதரித்த போதிலும், அதன் முடிவில் இருந்து, தமது மூலோபாய நலன்களை முன்னெடுக்க அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்களை சுரண்டக்கொள்ள முயன்று வருகின்றன.
வாஷிங்டன், புது டில்லி இரண்டும், கொழும்பின் போருக்கு உதவிகளை வழங்கியதோடு கடன் சுமையில் உள்ள அரசாங்கத்துக்கு நிதி உதவியும் செய்த சீனாவின் செல்வாக்கை கீழறுக்க முயற்சிக்கின்றன.
தேர்தல் முடிவுகள் கொழும்பு அரசாங்கத்தின் மீதான வெகுஜன பகைமையை பிரதிபலிக்கும் அதேவேளை, தமிழ் கூட்டமைப்பின் அரசியல் முன்னோக்கு உழைக்கும் மக்களுக்கு பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தவுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ் தொழிலாளர்களை அவர்களது சிங்கள சகதரப்பினரிடம் இருந்து பிளவுபடுத்த மட்டுமே பயன்படும் சிங்கள-விரோத பகைமையை தமிழ் கூட்டமைப்பு கிளறிவிட்டது. கூட்டமைப்பும் அதன் முதலமைச்சர் வேட்பாளரான வி. விக்னேஸ்வரனும், போரின் முடிவில் கொல்லப்பட்ட புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை ஒரு வீரனாக சித்தரித்து, புலிகள்-சார்பு உணர்வுகளுக்கு அழைப்பு விடுத்தனர்.
கூட்டமைப்பும் ஏனைய தமிழ் குழுக்களும், புலிகளின் தோல்விக்கு காரணமானது என்ன என்பது பற்றி மௌனமாக இருந்துவிட்டன. சோசலிச சமத்துவ கட்சி (சோசக) மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் மட்டுமே, அது வெறுமனே ஒரு இராணுவத் தோல்வி அல்ல என விளக்கியதோடு புலிகளின் முதலாளித்துவ பிரிவினைவாத வேலைத்திட்டத்தை வங்குரோத்தை கோடிட்டுக் காட்டியது. புலிகள், தம்மை தோற்கடிக்க கொழும்பு அரசாங்கத்துக்கு உதவிய அதே சர்வதேச சக்திகளிடமே ஆதரவைத் தேடினர். தமிழ் மற்றும் சிங்கள ஆளும் தட்டுக்கள் இடையே அதிகாரப் பகிர்வைச் செய்யும் ஒரு முதலாளித்துவ வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்ட புலிகள், இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் பக்கம் திரும்புவதை எதிர்க்கின்றனர்.
கூட்டமைப்பினர், அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச சக்திகளின் தலையீட்டுக்கு அழைப்புவிடுத்து ஒரு ஏகாதிபத்திய சார்பு வேலைத் திட்டத்துடன் பிரச்சாரம் செய்தனர். கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமசந்திரன், டைம்ஸ் ஒஃப் இந்தியா ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில், கட்சியின் வெற்றியை “இலங்கை அரசாங்கமும், அதேபோல் இந்தியா மற்றும் சர்வதேச சமூகமும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்," எனத் தெரிவித்தார்.
உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெற முயற்சிப்பதற்கு மாறாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களை தமிழ் முதலாளித்துவ தட்டினர் சுரண்டுவதற்கான இயலுமையை ஏற்படுத்தக்கூடிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு கதவை திறந்து விடக்கூடிய ஒரு அதிகார பரவலாக்கல் "சுயாட்சிக்காக” அழுத்தம் கொடுக்கின்றது.
வடமேற்கு மற்றும் மத்திய மாகாண தேர்தல்களும் அதே நாளில் நடைபெற்றதுடன், அரசாங்கம் தனது கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொண்டது. இராஜபக்ஷ பெருமளவில் சிங்கள இனத்தவர்கள் வாழும் தொகுதிகளில் சிங்களம் இனவாத துரும்பை பயன்படுத்தினார்.
கண்டியில் செப்டம்பர் 18 அன்று நடந்த தனது இறுதி தேர்தல் கூட்டத்தில், "மக்கள் [புலிகளின்] பிரிவினைவாதத்தின் மறுமலர்ச்சி பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று இராஜபக்ஷ அறிவித்தார். ஒரு சர்வதேச சதி இலங்கைக்கு எதிராக தொடர்கிறது என்று அறிவித்த அவர், "சில சக்திகள் குழப்பமான சூழ்நிலைகளை உருவாக்குவதன் மூலம், நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்க முயற்சிக்கின்றன", என்றார்.
இராஜபக்ஷ, ஒரு "மத யுத்தம்" நடப்பதற்கான ஆபத்து உண்டு என்றும் எச்சரித்தார். இது முஸ்லிம்களை மறைமுகமாக குறிப்பதாகும். சமீப மாதங்களில், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை ஆத்திரமூட்டல்களை மேற்கொண்ட பெளத்த பேரினவாத அமைப்புக்களை அரசாங்கம் ஆதரித்தது.
மத்திய மாகாணத்தில், இலட்சக்கணக்கான தமிழ் பேசும் ஏழை தொழிலாளர்கள் வாழும் தேயிலை பெருந்தோட்டங்களில், அரசியல் கட்சிகளாகவும் செயல்படும் தோட்டத் தொழிற்சங்கங்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுத்தன.
அரசாங்கத்தின் முக்கிய தொழிற்சங்க பங்குதாரரான இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து, தொழிலாளர் தேசிய சங்கமும் அரசாங்கத்தை ஆதரித்தது. கடந்த பொது தேர்தலில், தொழிலாளர் தேசிய சங்கம் வலதுசாரி ஐக்கிய தேசிய கட்சியை (யூ.என்.பீ) ஆதரித்த போதிலும், பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது. யூ.என்.பீ. மத்திய மாகாணத்தில் ஆறு ஆசனங்களையும் வடமேல் மாகாணத்தில் இரண்டு ஆசனங்களையும் இழந்தது.
இந்த இரண்டு மாகாணங்களிலும், இராஜபக்ஷ உள் மோதலில் மூழ்கிப் போயுள்ள யூ.என்.பீ.யின் நெருக்கடியை சுரண்டிக்கொண்டார். 1994ல் இருந்து யூ.என்.பீ. 2001ல் நடந்த ஒரு தேர்தலில் மட்டுமே வென்றது. பின்னர், அந்த யூ.என்.பீ. அரசாங்கம், இராஜபக்ஷவின் ஸ்ரீ.ல.சு.க. முன்னோடியான ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையை கவிழ்க்க அரசாங்கத்தை கலைக்கும் வரை மட்டுமே, இரண்டு ஆண்டுகளுக்கும் சிறிது அதிககாலம் அதிகாரத்தில் நீடித்தது.
இன்னொரு பாராளுமன்ற எதிர்க் கட்சியான ஜே.வி.பீ., வடமேல் மாகாணத்தில் அதன் ஒரே ஒரு ஆசனத்தை மட்டுமே தக்கவைத்து கொண்டதோடு அதன் வாக்குகள் வீழச்சியடைந்துள்ளன. இராஜபக்ஷவின் அரசாங்கம் உட்பட பல்வேறு முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அரசாங்கங்களுடன் ஒத்துழைத்ததனால் ஜே.வி.பீ. பரவலாக செல்வாக்கிழந்துவிட்டது.
வடக்கு தவிர்ந்த மற்ற மாகாணங்களில் அதன் நிலையை பாதுகாத்துக்கொண்ட இராஜபக்ஷ அரசாங்கம், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் அதன் சிக்கன நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதை நியாயப்படுத்த தனது தேர்தல் வெற்றியை பயன்படுத்தும். தொழிலாள வர்க்கம், ஏழைகள் மற்றும் இளைஞர்களும் பெரும் ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர்.
வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்ட சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே, அமெரிக்கா தலைமையில் சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களால் உருவாகும் ஏகாதிபத்திய போர் ஆபத்து பற்றியும், அமெரிக்கவுக்கும் சீனாவுக்கும் இடையே ஆழமடைந்து வரும் மோதல்களைப் பற்றியும் விளக்கியது. அது 2008ல் வெடித்த உலக பொருளாதார வீழ்ச்சி உக்கிரமடைவதன் தாக்கம் பற்றியும் எச்சரித்தது.
சோசலிச சமத்துவ கட்சி மட்டுமே, வாழ்க்கை நிலைமைகள் மீதான இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்கள் மற்றும் பொலிஸ்-அரச ஆட்சி வழிமுறைகளுக்கும் எதிராக சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் ஒரு சர்வதேச வேலைத்திட்டத்துக்காக போராடுகிறது. அது உழைக்கும் மக்களை தெற்காசியாவிலும் உலகம் பூராவும் உள்ள தங்கள் சமதரப்பினரின் பக்கம் திரும்பி, சோசலிச கொள்கைகளை அமுல்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கமொன்றுக்காக போராடுமாறு அழைப்பு விடுக்கின்றது.
சோசலிச சமத்துவக் கட்சி, அனைத்து இனவாத மற்றும் தேசியவாத போக்குகளுக்கும் எதிரான இந்த அரசியல் போராட்டத்தின் அடிப்படையில் 101 வாக்குகளை பெற்றது. இந்த வாக்குகள், இன்னமும் சிறிய தொகையாக இருந்த போதும், அது ஒரு சோசலிச மாற்றீட்டுக்கான வர்க்க நனவுடனான ஆதரவை பிரதிநிதித்துவம் செய்கின்றது. கட்சியில் சேர்வதன் மூலம் வெகுஜன புரட்சிகர கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சி கட்டியெழுப்பும் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.
|