World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

No to war against Syria!

சிரியாவிற்கு எதிரான போர் வேண்டாம்!

By Political Committee of the Socialist Equality Party (US)
2 September 2013

Back to screen version


1. சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்களை சிரியாவிற்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்காக ஒபாமா நிர்வாகமும் அதன் நட்பு நாடுகளும் தயாரிக்கும் திட்டங்களுக்கு எதிராக தங்கள் கூட்டான பலத்தை அணிதிரட்ட அழைப்பு விடுகிறது.
சிரியா மீது குண்டுத் தாக்குதல் நடத்த தான் காங்கிரசின் அங்கீகாரத்தை பெறப்போவதாக ஜனாதிபதி ஒபாமா சனிக்கிழமை கொடுத்துள்ள அறிக்கையின் அர்த்தம், தாக்குதல் தாமதப்படுத்தப்படுகின்றதே ஒழிய, கைவிடப்படவில்லை என்பதுதான்.

காங்கிரசை வாக்களிப்பிற்கு நாடுவது என்பது பொய்களை அடிப்படையாக கொண்ட போரை சட்டரீதியாக்கும் நோக்கம் கொண்ட ஒரு இழிந்த அரசியல் சூழ்ச்சியாகும். பிரித்தானிய பாராளுமன்றத்தில் போர் ஆதரவுத் தீர்மானம் அதிர்ச்சிதரும் வகையில் தோல்வி அடைந்தபின், ஒபாமா நிர்வாகம் பெரும்பான்மையான அமெரிக்க மக்களால் எதிர்க்கப்படும் சட்டவிரோதப் போருக்கு அரசியல் மூடுதிரையை தோற்றுவிக்க முற்படுகிறார். சிரியா மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ் ஒப்புதல் தரும் என்பதை நல்ல காரணத்துடன்தான் ஒபாமா எதிர்பார்க்கிறார். மேலும், காங்கிரசில் விவாதம் என்னும் போலித்தனம், போருக்கான முடிவு  ஜனநாயக முறைப்படி எடுக்கப்பட்டது, “மக்களின் விருப்பத்தை” வெளிப்படுத்துகிறது எனக் கூறவும் உதவும். இந்த வாதம், போரை எதிர்ப்பவர்களுக்கு எதிரான அடக்குமுறை விரிவாக்கத்தை நியாயப்படுத்தவும் உதவும்.

2. ஒபாமா நிர்வாகம் பயன்படுத்தும் மையப் பொய்களில் ஒன்று, இராணுவ நடவடிக்கை “மட்டுப்படுத்தப்பட்ட” தாக, சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கு தண்டனை கொடுக்கும் நோக்கம் உடையதாக மட்டும் இருக்கும் என்பதாகும்.

சிரியாவில் கட்டவிழ்த்து விடப்படவிருக்கும் பாரிய குண்டுத்தாக்குதலில் எதுவும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கப்போவதில்லை. ரோசா தோட்டப் பேச்சில் ஒபாமா தாக்குதல்கள் சிரிய இராணுவத்தின் “திறனைப் பெரிதும் குறைக்க” முற்படும் என்று கூறினார். இது மிகப் பெரிய அளவில் தளபாடங்களை அழித்தல், ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களை கொல்லுவது என்பதை வேண்டிநிற்கிறது. அமெரிக்க இராணுவத் திட்டம், 2003ல் ஈராக்கிற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட “அதிர்ச்சி மற்றும் பயம்” போன்ற தந்திரோபாய ரீதியான பெயர்களை தவிர ஏனைய அனைத்தையும் கொண்டிருக்கும்.

அமெரிக்க இராணுவ நடவடிக்கை அதன் மூலோபாய நோக்கங்களை  பூர்த்தி செய்யும் வரை தொடரும். அதாவது சிரிய உள்நாட்டுப் போரின் போக்கை அமெரிக்க ஆதரவுடைய எதிர்த்தரப்பிற்கு ஆதரவாகத் திருப்பும் வரையும், சாத்தியமானால் ஜனாதிபதி அசாத்தை கொன்று, ஆட்சியை முடக்கி, அமெரிக்காவின் பொம்மை அரசாங்கம் ஒன்றை நிறுவப் பாதை அமைக்கும்.

சிரியாவிற்கும் அப்பால், ஈரான், ரஷ்யா மற்றும் பிற அமெரிக்காவின் பிராந்தியப் போட்டியாளர்களின் செல்வாக்கை இல்லாதொழிக்கும்  நோக்கம் உள்ளது. சிரியாவிற்கு எதிரான யுத்தம் விரைவில் ஈரானுடனான ஒரு இராணுவ மோதலுக்கு இட்டுச்செல்லும். ஞாயின்று நியூயோர்க்டைம்ஸ், ஒபாமா தன் ஊழியர்களிடம் காங்கிரஸ் இணைவை நாடுவதற்கான மிகக் “கட்டாய” காரணம் “தனியாகச் செயல்படுவது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவரை இடர்படுத்தும், அவருக்கோ காங்கிரசின் அதிகாரம் அவருடைய அடுத்த இராணுவ மோதல் மத்திய கிழக்கில், ஒருவேளை ஈரானுடன் நடத்தும்போது, தேவைப்படும்” என்றார் எனக் கூறுகிறது.

3. நிர்வாகம் மோசமான நெருக்கடியில் உள்ளது என்பதில் ஐயம் இல்லை. போருக்கான பாதை ஒபாமா எதிர்பார்த்தபடி சுமுகமாகச் செல்லவில்லை. நச்சுவாயுத் தாக்குதல் கூற்று பொதுமக்களை போருக்கு விரைவில் ஆதரவைக் கொடுக்க வைக்கும் என்று ஒபாமா நம்பினார். கேள்விகளுக்கு விடையளிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, கேட்கப்படு முன்னரே ஏவுகணைகள் இயக்கப்படும், குண்டுகள் வீசப்படும் எனக் கருதினார். அதில் பிரித்தானிய பிரதமர் டேவிட் காமரோன், சிரியா இரசாயன ஆயுதங்கள் பயன்பாடு குறித்த எக் குற்றச்சாட்டுக்களுக்கும் ஆதாரம் கொடுக்க முடியாதது தெளிவானபோது, இத்திட்டங்கள் பிரித்தானிய பாராளுமன்ற வாக்கெடுப்பில் பின்னடைவை கண்டன.

அமெரிக்காவிற்குள் மக்கள் ஆதரவு இல்லாவிடினும் போருக்குச் செல்ல ஒபாமா தயாராக இருக்கையில் —கருத்துக் கணிப்புக்கள், சிரியா மீது இராணுவத் தாக்குதல்களை ஆதரிப்பவை மிகவும் குறைவாக 9% என்றுதான் இருந்தது— பாராளுமன்றத் தோல்வி அரசியல் அளவில் ஏற்கமுடியாத நிலைமையைத் தோற்றுவித்துவிட்டது. நிர்வாகம் உள்நாட்டு ஆதரவு அல்லது நம்பகமான சர்வதேச ஆதரவு இல்லாமல் போரைத் தொடங்குவது அரசியல் ரீதியாக ஆபத்தானது என்ற முடிவிற்கு வந்தது. காங்கிரசில் வாக்கெடுப்பு என்பது போருக்கு பரந்த மக்கள் ஆதரவு உள்ளது என்னும் போலித்தனத்தை தோற்றுவிக்கும் நோக்கத்தை கொண்டது.

4. காங்கிரசில் விவாதத் தேதிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், வரவிருக்கும் நாட்கள், சிரிய அரசாங்கத்தின் இரசாயன ஆயுதங்கள் பயன்பாடு பற்றிய கூற்றுக்களை மத்தியப்படுத்தி போருக்கு ஆதரவாக ஒரு பாரிய செய்தி ஊடகப் பிரச்சாரம் இருக்கும்.

இக்குற்றச்சாட்டுக்களில் நம்பகத்தன்மை ஏதும் கிடையாது. ஏற்கனவே பல அறிக்கைகள் அல்குவேடா பிணைப்புடைய பயங்கரவாத அமைப்புக்களுடன் இணைந்துள்ள எதிர்த்தரப்பைத்தான் நச்சுவாயுத் தாக்குதலுடன் இணைத்து குறிப்பிடுகின்றன. இந்த அறிக்கைகளில், அசாத்தை எதிர்க்கும் சவுதி அரேபிய உளவுத்துறை அமைப்புக்கள் வழங்கிய இரசாயன ஆயுதங்களை, எதிர்த்தரப்புச் சக்திகள் பயன்படுத்தியுள்ளன என சாட்சியங்களிடம் இருந்து வந்துள்ள அறிக்கைகள் அடங்கும். மேலும் அமெரிக்க ஆதரவுடைய எதிர்த்தரப்புச் சக்திகள் முன்னதாகவும் இராசயன ஆயுதங்களை பயன்படுத்தின மற்றும் அவை நரம்பை தாக்கும் சரின் வாயுவை வைத்திருந்தபோது பிடிபிட்டன என்ற உண்மையும் உள்ளது.

வெளிவிவகாரச் செயலர், ஜோன் கெர்ரி வெள்ளியன்று வெளியிட்ட அமெரிக்க ஒற்றாடல் நிறுவங்களின் “உளவுத்துறை மதிப்பீடு” ஒரு பொய்களின் தொகுப்பும், எந்த உருப்படியான ஆதாரமும் இல்லாத வெற்றுக் கூற்றுக்களும் ஆகும். நிர்வாகம், ரஷ்யாவில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு சான்றுகளை ஐ.நா.வின் சுதந்திர பரிசோதனைக்கு கொடுக்குமாறு கோரியவற்றை நிராகரித்துவிட்டது.

5. சிரிய இராணுவமே நச்சுவாயுவைப் பயன்படுத்தியது என்று உறுதிப்படுத்தப்பட்டாலும்கூட, இது அமெரிக்கத் தலையீட்டின் சூறையாடல் மற்றும் ஏகாதிபத்திய தன்மையை மாற்றிவிடப்போவதில்லை. அமெரிக்கா கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்சி மாற்றத்தை இலக்காகக் கொண்டு இப்பிராந்தியத்தில் தனது நட்பு நாடுகளுடனும் பிரித்தானியா மற்றும் பிரான்ஸுடனும் இணைந்து செயல்பட்டு உள்நாட்டுப் போரைத் தூண்டியுள்ளது. அசாத் ஆட்சி ஈரானுடனும் ரஷ்யாவுடனும் அது கொண்டுள்ள நெருக்கமான உறவுகளால், நீண்ட காலமாக மத்திய கிழக்கில் அமெரிக்க தந்திர உத்திகளுக்கு சாத்தியமான தடையாக காணப்பட்டது.

ஒபாமா நிர்வாகத்தின் பாசாங்குத்தன கூற்றுக்கள், “மனிதாபிமான நோக்கங்களால்” உந்துதல் பெறுகின்றன என்பது அதன் நீண்ட, குருதி படிந்த மத்திய கிழக்கு வரலாற்றால் அம்பலமாகின்றன. அமெரிக்கா மிகச் சமீபத்தில் கூட எகிப்திய இராணுவம் கடந்த மாதம் நடத்திய பரந்த கொலைகளை ஏற்றுக்கொள்ள சிரமப்படவில்லை; அந்த இராணுவமோ பில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்க உதவிநிதியாக பெறுகிறது.

இப்பொழுது தயாரிக்கப்படும் பேரழிவிற்கு எதிரான ஓர் உறுதியான போராட்டம் தேவைப்படுகிறது. ஆனால் போரை எதிர்ப்பதில் காங்கிரஸ் மீது எந்த நம்பிக்கையும் வைக்கப்பட முடியாது—இந்த நிறுவனம், வெள்ளை மாளிகையைவிட சற்றும் குறைந்திராமல், பெருநிறுவன, நிதிய உயரடுக்கின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டுள்ளது.
ஜனநாயக, குடியரசு என்னும் இரு கட்சிகளின் உயர்மட்ட அதிகாரிகளும் ஏற்கனவே போருக்குத் தங்கள் ஆதரவை அறிவித்துள்ளனர். முழு அரசியல் ஆளும்பிரிவும் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்னும் மறைப்பில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான முடிவிலாப் போரை நடத்தியுள்ளது. போர்த்தீர்மானம் எதிர் வாக்களிக்கப்பட்டாலும் அது போரைத் தாமதப்படுத்துமே ஒழியே, தடுத்த நிறுத்திவிடாது. இது பிரித்தானியாவிலும் உண்மைதான். அங்கு அமெரிக்கக் காங்கிரஸ் நடவடிக்கையை அடுத்து ஏற்கனவே போருக்கு ஒப்புதல் கொடுக்க மற்றொரு வாக்கெடுப்பிற்கான தந்திர உத்திகள் நடைபெறுகின்றன.

6. போர் நிறுத்தப்பட வேண்டும் என்றால், காங்கிரஸ் மற்றும் இரு பெரும் வணிகக் கட்சிகளில் இருந்து தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்களால் சுயாதீனமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போருக்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை ஜனநாயக உரிமைகள், வாழ்க்கைத்தரங்கள் மீது நடத்தப்படும் இடைவிடா தாக்குதல்களை எதிர்த்து முன்னணியில் இருத்தப்படவேண்டும். சாரம்சத்தில் இது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் ஆகும்.

இது ஒன்றும் காத்திருந்து கவனத்துடன் பார்க்கும் நேரம் அல்ல,  நனவாக அரசியல் நடவடிக்கை எடுக்கும் நேரமாகும். இது உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும். போரை எதிர்க்கும் அனைவரும் தங்கள் குரல் கேட்கும்படி செய்ய வேண்டும். போர் தொடர்பான கேள்வி ஆளும் உயரடுக்கினதும், அதன் பிரதிநிதிகள் கைகளில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் சகோதர சர்வதேச கட்சிகளும் ஆர்ப்பாட்டங்கள், அணிவகுப்புக்கள், உள்ளிருப்பு இன்னும் பிற போர் எதிர்ப்பு வெளிப்பாடுகளை காட்ட அழைப்பு விடுகின்றன. இவை பணியிடங்களிலும் பள்ளிகளிலும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

உலகசோசலிசவலைத்தளம் அரசியல் நிலைமையை தொடர்ந்து பகுப்பாய்ந்து போர்ச் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தும். நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட சோசலிச சமத்துவக் கட்சியும், அதன் சர்வதேச சமூக சமத்துவத்திற்கான மாணவர்கள், இளைஞர்கள் அமைப்பும் போருக்கான மக்கள் எதிர்ப்பை எவ்வளவு ஊக்கம் கொடுத்து ஒழுங்கமைக்க முடியுமோ அவ்வளவையும் செய்யும். உலக சோசலிச வலைத் தள வாசகர்களை எங்களுடன் இப்போராட்டத்தில் இணையுமாறு அழைப்பு விடுகிறோம்.  (தொடர்பு கொள்ள இங்கே அழுத்தவும்)