World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு 

The war against Syria and American democracy

சிரியாவிற்கு எதிரான போரும் அமெரிக்க ஜனநாயகமும்

By Joseph Kishore
31 August 2013

Back to screen version

அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரியும் ஜனாதிபதி பாரக் ஒபாமாவும் நேற்று பிற்பகல், தனித்தனி அறிக்கைகளில் வியாழனன்று பிரித்தானிய பாராளுமன்றம் போருக்கான ஆதரவு வாக்குப் பிரேரனையை நிராகரித்துள்ளமையானது, அமெரிக்க நிர்வாகத்தின் சிரியா மீதான தாக்குதல் திட்டங்களில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெளிவுபடுத்தியுள்ளனர்.

தன்னுடைய கருத்துக்களில் ஒபாமா, தான் “எடுக்க வேண்டிய பல நடவடிக்கைகள் குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை” என்று பாசாங்குத்தனமாக கூறினார். ஆனால் வாஷிங்டனில் விவாதங்களானது தாக்குதல் நடக்குமா என்பதற்கு பதிலாக எப்பொழுது நடக்கும் என்பதைப்பற்றித்தான் உள்ளன.

ஒபாமாவும் தாக்குதல் அதனுடைய நோக்கத்தில் “மட்டுப்படுத்தப்பட்டு” இருக்கும் என்று மீண்டும் மீண்டும் பொய் கூறினார். உண்மையில் வாஷிங்டன் பார்வையில் நடவடிக்கையானது, சிரியாவில் அமெரிக்கா உள்நாட்டுப் போரைத் திருப்பிவிடும் நோக்கத்தை கொண்டது; இப்போர் அசாத்தை அகற்றுதல், மத்தியக் கிழக்கில் ஈரான், ரஷ்யா, சீனா ஆகியவற்றின் நிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்துதல் என்று உள்ளன.

ோருக்கு அது விரைகையில், அமெரிக்க ஆளும் வர்க்கம் மக்களில் பெரும்பாலானவர்களுடைய போர் எதிர்ப்பு உணர்வை இகழ்வுடன் கருதுகிறது. ஒரு தசாப்தத்திற்கும் மேலான தொடர்ந்த முடிவிலாப் போர் மற்றும் “பயங்கரவாதத்தின் மீதான போருக்கு” தொடரும் வேண்டுதல், ஆப்கானிஸ்தானின் அனுபவங்கள், குறிப்பாக ஈராக் படையெடுப்பை நியாயப்படுத்த கூறப்பட்ட பொய்கள்—இவைகள் அனைத்தும் பொதுமக்கள் நனவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்க மக்களில் 9 சதவிகிதத்தினர்தான் சிரியா மீது இராணுவத் தாக்குதல்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர், இது சிரிய பஷர் அல் அசாத்தின் ஆட்சி இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என நிரூபிக்கப்பட்டால் 25 சதவிகிதம் என உயரும் என்று கருத்துக் கணிப்புக்கள் காட்டுகின்றன. அமெரிக்கா மற்றும் அதனுடைய நட்பு நாடுகளுக்கு இப்பொழுது இரசாயன ஆயுதப் பயன்பாடுதான் பிரச்சாரத்தில் முக்கியமாக உள்ளது.

ஆயினும்கூட இந்த உணர்வுகள் அரசியல் ஸ்தாபனத்திலும் அரச அதிகாரத் துணை நிறுவனங்களிலும் வெளிப்பாட்டைக் காணவில்லை—குறைந்தபட்ச முதலாளித்துவ அரசியலின் வடிவமைப்பிற்குள்கூட. அரசாங்கமும் செய்தி ஊடகமும் உறுதியாகப் போருக்கு ஆதரவாக இருக்கின்றன. ஒரு தசாப்தத்திற்கும் மேலான முடிவிலா, பேரழிவு கொடுக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பின், மற்றொரு தாக்குதலுக்கான எதிரிகள் என நம்புவதற்கு பெரும்பாலான மக்கள் இன்னும் எதிராக உள்ளனர்.

உத்தியோகபூர்வ கருத்தை மக்களின் பெரும்பாலானவர்களின் உண்மை உணர்வுகளிலிருந்து பிரிக்கும் பிளவு கிட்டத்தட்ட முன்னோடியில்லாத தன்மையில் உள்ளது. வியட்நாம் போரின்போது, அரசியல் ஸ்தாபனம் அமெரிக்க ஈடுபாடு பற்றிப் பிளவுகளைக் கொண்டிருந்தது. இரு அரசியல் கட்சிகளும் கணிசமான “போர் எதிர்ப்பு” பிரிவுகளைக் கொண்டிருந்தன. செனட்டர் வில்லியம் புல்பிரேட் தலைமை தாங்கிய காங்கிரஸ் குழு போர் எதிர்ப்பு உணர்விற்குக் கணிசமாக பங்களிப்புக்களைக் கொடுத்தது.

1990-91ல் முதலாவது புஷ் நிர்வாகம் ஈராக்கிற்கு எதிரான முதல் போருக்கு தயாரானபோது, அது இசைவு வாக்கைப் பெற வேண்டும் என்ற கட்டாயத்தை உணர்ந்தது; 48 செனட்டர்கள் எதிர்த்து வாக்களித்த நிலையில் அது இயற்றப்பட்டது. 2003ல் கூட ஈராக் போரைத் தொடர்ந்த ஆண்டில், ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் இரண்டாவது புஷ் நிர்வாகத்தை விமர்சிப்பதாகக் காட்டிக்கொண்டனர். பாசாங்குத்தனமாகவும், நேர்மையற்றதாகவும் போர் எதிர்ப்பு உணர்வு இருந்தபோதிலும்கூட, அத்தகைய உணர்வை வெளிப்படுத்திய வகையில் கெர்ரி ஜனநாயக வேட்பாளர் நிலையை 2004ல் பெற்றார், ஒபாமா 2008ல் ஜனாதிபதிப் பதவியை பெற்றார்.

இப்பொழுது கருத்துக் கணிப்புக்கள் 2003 ஐ விட போருக்கு அதிக எதிர்ப்பைக் காட்டுகையில், எதுவும் பொருட்படுத்தப்படுவதில்லை. செய்தி ஊடகம் முன்னைய போக்கைத்தான் பின்பற்றுகிறது. வியட்நாம் சகாப்த காலத்தில் பொது மக்களின் போர் எதிர்ப்பு உணர்வுக்கு கணிசமான பங்களிப்பு கொடுத்து அரசாங்கத்தின் பொய்களை அம்பலப்படுத்திய டஜன் கணக்கான செய்தியாளர்களை பட்டியலிடுவது கடினமில்லை—இது பென்டகன் பத்திரங்களை நியூ யோர்க் டைம்ஸும், வாஷிங்டன் போஸ்ட்டும் 1971ல் வெளியிட்டதில் உச்சக் கட்டத்தை அடைந்தது.

இன்று செய்தி ஊடகம் வெளிப்படையாக அரசாங்கத்தின் ஊதுகுழலாகச் செயற்படுகிறது; தன்னுடைய மைய நோக்கமே அரசாங்கத்தின் பொய்களை பரப்பி, அரசாங்க இரகசியங்களை மூடி மறைத்தல் என்று காண்கிறது. செய்தியாளர்களை இராணுவத்தில் “பொதிந்து இருக்கச் செய்யும் வகையிலும் சிறிது திறனாய்வுச் சிந்தனையைக் காட்டினாலும் வெளியே அவர்களை அகற்றிவிடும் முறையிலும் இது பெருநிறுவனமயமாதல் வழிமுறையால் மாற்றப்பட்டுவிட்டது (CNN ஆனது 2003ல் பீட்டர் அர்னெட்டை ஈராக் படையெடுப்பு குறித்த அவருடைய திறனாய்ந்து கூறப்பட்ட தன்மைக்காக பதவியை விட்டு வெளியேற்றியது.)

பொதுவாக செய்தி ஊடகத்தில் இன்று காணப்படும் அதிகாரப் போக்கு உணர்வு நியூ யோர்க் டைம்   ஸின் ரோஜர் கோஹனால் வெளிப்படுத்தப்படுகிறது; தன்னுடைய வெள்ளிக் கிழமை கட்டுரையில், அவர் சிரியப் போருக்கு ஆதரவாக எழுதியுள்ளார். தாராளவாத செய்தியாளர் மக்கள் உணர்வைக் குப்பையில் போடுங்கள் என்று எழுதினார்: “அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் போர்க் களைப்பு என்பது ஒரு சமூகம் மூலோபாய முக்கியத்துவத்தை இழந்துவிடுவதற்குக் காரணமாகக் கூடாது; பொது மக்கள் கருத்தையொட்டி தேசிய நம்பகத்தன்மை இழக்கப்பட்டுவிடக்கூடாது.”

முழுப் பொய்களையும் ஆதரமாகக் கொண்டு துவக்கப்பெற்ற ஈராக் போருக்குப் பத்து ஆண்டுகளுக்குப் பின், ஒரு பெருநிறுவனக் கட்டுப்பாட்டுச் செய்தித்தாள்கூட அல்லது செய்தி நிறுவனம்கூட வெள்ளை மாளிகையிலிருந்து வெளிவரும் ஆதாரமற்ற கூற்றுக்களை கட்டுக்கதைகளின் தொகுப்பு என்று வினாவிற்கு உட்படுத்தவில்லை.

இந்த மாற்றத்தை எப்படி விளக்க முடியும்? சிரியா குறித்த நெருக்கடி அமெரிக்க அரசியல் வாழ்வின் ஆழமான உண்மை நிலையை வெளிப்படுத்துகிறது. மே 2003ல் உலக சோசலிச வலைத் தளம் எழுதியதாவது: “ஈராக் போர் அடிப்படையாகக் கொண்டிருந்த பெருமளவிலான, அப்பட்டமான பொய்யின் தன்மை, மற்றும் அசட்டையும் எதிலும் நம்பிக்கையற்ற தன்மை கொண்ட ஒரு செய்தி ஊடகத்தின் பதில் மொழி, இவை முதலாளித்துவ ஜனநாயக முறையின் பொதுவான நிலைமுறிவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த வெளிப்பாடுகளாகும். ஐக்கிய அமெரிக்க அரசுகளின் அரசியல் வாழ்வு அமெரிக்க அரசின் சிறு குழுவினர் ஆட்சியின் கூடுதலான குணநலன்களை, கோணல்மாணலான பார்வையில் பிரதிபலிக்கிறது.”

பத்து ஆண்டுகளுக்குப் பின், இப்போக்குகள் இன்னும் பெரிய அளவில்தான் உள்ளன. பெருநிறுவன மற்றும் நிதியப் பிரபுத்துவம் 2008ல் தொடங்கிய நெருக்கடியை பயன்படுத்தி தன்னுடைய கரங்களில் இன்னும் அதிக தேசிய செல்வத்தை குவித்துக் கொண்டது. அரசாங்க கொள்கை, மக்களில் உயர்மட்ட 1 சதவிகிதத்தினரால்தான் நிர்ணயிக்கப்படுகிறது.

வெளியுறவுக் கொள்கை தவிர்க்க முடியாமல் உள்நாட்டுக் கொள்கையுடன் பிணைந்துள்ளது. அரச நிறுவனங்கள் மக்களின் சமூக அக்கறைகள் குறித்து முழுமையான பொருட்படுத்தாத் தன்மை—வறுமை, வேலையின்மை, சமூகப் பணிகளின் அழிப்பு—அதனுடைய இயல்பான துணையை வெளியுறவுக் கொள்கையில் காண்கிறது. 90 சதவீதமான கீழ்மட்ட வருமானம் உடையவர்கள் நினைப்பது பொருட்படுத்தப்படுவதில்லை; செய்தி ஊடகம் இச் சிந்தனையை பிரச்சாரப் பொய்களுடன் பிணைக்க, திரித்து எழுதும் பங்கு அதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

முதலாளித்துவ சமூகத்தின் வடிவங்களை பாதுகாத்தல் என்பது இன்றைய அமெரிக்காவிலுள்ள சமூக சமத்துவத்துவமின்மை அளவுகளுடன் பொருந்தியிராது. எட்வார்ட் ஸ்னோவ்டென் வெளிப்படுத்தியுள்ள பரந்த உளவுபார்த்தல் கருவிகள் —பொலிஸ் அரசின் வடிவமைப்பு— எல்லாவற்றிற்கும் மேலாக ஆளும் வர்க்கத்தின் போர், சமூக எதிர்ப் புரட்சிக் கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளிப்படுவதை எதிர்க்க இயக்கப்படுகிறது.

சிரியாவிற்கு எதிரான போர் உந்துதல் மற்றும் அமெரிக்க ஆளும் வர்க்கம் மேற்கொண்ட முந்தைய போர்களுக்கும் இடையே மற்றொரு குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. வியட்நாம் போர் வெகுஜன போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தூண்டிவிட்டது, அது கணிசமான எதிர்ப்பு பின்னர் பல தலையீடுகளில் நிகரகுவா, எல் சார்வடோர் தொடங்கி 1991 ஈராக் போர் வரை நிகழ்ந்தவைகளுக்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஈராக் போருக்கு எதிராக வெகுஜன எதிர்ப்புக்கள், பல மில்லியன் மக்கள் பங்குபற்றியமையும் நடந்தேறின.

இன்றும் எதுவும் இல்லை. வெகுஜன உணர்வு, போர் ஆதரவைப் பெற்றுவிட்ட காரணத்தால் அல்ல. உண்மையில் இது ஈராக் போருக்கு எதிரானதைவிட சிரியப் போருக்கு இன்னும் குறைந்த மக்கள் ஆதரவுதான் உள்ளது. மாறாக நீண்டகாலமாக “போர் எதிர்ப்பு இயக்கம்” எனக் குறிப்பிடப்படுவது, மத்தியதர வர்க்கத்தின் ஒரு பிரிவு, ஜனநாயகக் கட்சியுடன் பிணைந்ததால் வழிநடத்தப்பட்டது. பல தசாப்தங்களாக இந்த சமூகத் தட்டு பெருகிய முறையில் அரசியல் ஸ்தாபனத்துடன் ஒருங்கிணைந்துவிட்டது, பங்குச் சந்தை ஏற்றத்தால் செல்வம்மிக்கதுடையதாக ஆயிற்று, நிதியப் பிரபுத்துவம் உதிர்க்கும் ரொட்டிகளைத் தின்று வளர்கிறது.

மத்தியதர வர்க்க “இடது” ஈராக் போர் எதிர்ப்புக்களுக்கு விடையிறுப்பு செய்யும் வகையில், எதிர்ப்பை ஜனநாயகவாதிகளுக்குப் பின்னே திசை  திருப்பியது: ஒபாமா நிர்வாகம் பதவிக்கு வந்தபின், அவைகள் குரல் கொடுப்பதில்லை. அவைகள் இப்பொழுது போருக்கும் “மனித உரிமைகள்” ஏகாதிபத்தியத்திற்கும் பெரும் ஆதரவாளர்களாகிவிட்டன. இந்த வழிவகையில் உச்சக்கட்டம் 1999ல் சேர்பியாவிற்கு எதிரான போருக்கான ஆதரவில் வெளிவந்தது. சிரியப் போர் “அவர்களுடைய போர்” என்றுதான் பெரும்பாலும் உள்ளது.

இந்த நிலைமாற்றம் இன்னும் தெளிவாக போருக்கு எதிரான போராட்டத்தின் உண்மையான வெகுஜன அடித்தளம் தொழிலாள வர்க்கம் என்பதை தெரிவிக்கிறது. போர் எதிர்ப்பு இயக்கம் புதுப்பிக்ப்படுவது அவசியமாகும், ஆனால் அது பெருநிறுவன, நிதியப் பிரபுத்துவத்திற்கும் அதனது போலி இடது துணை அமைப்புக்களுக்கும் எதிராகத்தான் அபிவிருத்தி செய்யப்பட முடியும். அமெரிக்க ஆளும் வர்க்கம் சிரிய, மத்திய கிழக்கு, உலகம் முழுவதும் இருக்கும் மக்களுக்கு எதிராக தயாரிக்கும் இரத்தம் கொட்டும் பேரழிவை, தொழிலாள வர்க்கம் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உலக சோசலிசப் புரட்சிக்கான வேலைத்திட்டத்திற்காக அணிதிரட்டப்படுவதின் மூலம்தான் எதிர்க்கப்பட முடியும்.