போருக்கு எதிர்ப்பு பெருகுகையில் பென்டகன் சிரியா மீது பாரிய தாக்குதலுக்கு திட்டமிடுகிறது
By Bill Van Auken
7 September 2013
அமெரிக்க மக்களிடையே அதன் போர்த் திட்டங்களுக்கு பெரும் எதிர்ப்பை எதிர்கொள்கையிலும், காங்கிரஸ் இராணுவ பலத்தை பயன்படுத்த ஒப்புதல் கொடுக்கும் தீர்மானத்தை நிராகரிக்கலாம் என்ற நிலையிலும், உலக அரங்கில் முன்னோடியில்லாத அளவிற்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள தன்மையின் மத்தியிலும், ஒபாமா நிர்வாகம், ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட தாக்குதலை விட சிரியா மீது பரந்த தாக்குதலுக்கு திட்டமிடுமாறு பென்டகனுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஒபாமா, “சிரியாவிற்கு எதிரான ஒரு இராணுவத் தாக்குதலின் இலக்கு என நிர்வாகம் கூறியிருந்த ‘தரக்குறைப்பு மீது’ அதிக வலியுறுத்தலை கொடுக்க இப்பொழுது உறுதியாக உள்ளார். அதாவது திரு அசாத்தின் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தும் திறனை ‘தடுக்கவும், தரக்குறைப்பு செய்யவும்’ ” என்று நியூ யோர்க் டைம்ஸ் வெள்ளியன்று பெயரிடப்படாத பென்டகன் அதிகாரிகளை மேற்கோளிட்டுக் கூறியுள்ளது.
டைம்ஸின் கருத்துப்படி, மற்றும் அதே போன்ற தகவல்கள் வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல், CNN படியும், சிரிய போர்த் திட்டம் கிழக்கு மத்தியதரைக் கடலில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கக் கடற்படையில் இருந்து க்ரூஸ் ஏவுகணைகள் சிலவற்றை உள்ளடக்கியிருக்கும் என்பது மட்டும் இல்லாமல், ஒரு நீடித்த குண்டுத் தாக்குதலை, அமெரிக்க போர் விமானங்கள் பிராந்தியத்திலே உள்ள தளங்கள் மற்றும் அமெரிக்காவில் இருந்தே வருபவற்றின் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதையும் உள்ளடக்கியிருக்கும்.
கப்பலில் இருந்து அனுப்பப்படும் ஏவுகணைகளைவிட கூடுதலான ஆற்றலைக் கொண்ட விமானப் படைத் தாக்குதல்களின் பயன்பாடு, “கடின இலக்குகளுக்கும்”, “முதல் அலை, இலக்குகளை அழிக்கவில்லையென்றால் தொடரும் தாக்குதல்களுக்கும்” பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்று ஜேர்னல் கூறியுள்ளது. “கிடைக்கும் விருப்பத் தேர்வுளில், க்ரூஸ் ஏவுகணைகளை தாங்கும் ஆற்றல் உடைய B-52 குண்டு வீச்சு விமானங்கள்; கட்டாரை தளம் கொண்ட, குறைந்த உயரத்தில் பறக்கும் B1 கள், தவிரவும் மிசௌரியை தளம் கொண்ட B-2 தெரியாமல் குண்டு வீசுபவையும் உள்ளன; இவை, வழிகாட்டி மூலம் இயக்கப்படும் குண்டுகளை கொண்டவை” என்று ஜேர்னல் கூறியுள்ளது.
இத்தகைய தயாரிப்புக்களை எதிர்கொள்கையில், வேண்டுமென்றே அறியாமையில் இருக்கும் ஒருவர்தான், சிரியாவிற்கு எதிரான தாக்குதல், “சர்வதேச விதிமுறைகளை” நிலைப்படுத்தவும், கூறப்படும் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதற்காக சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தை தண்டிப்பதற்கும் என இன்னமும் நம்புவார்.
ஒபாமா நிர்வாகம் அதன் கூற்றான, அசாத் ஆட்சிதான் ஆகஸ்ட் 21 அன்று நடந்ததாகக் கூறப்படும் டமாஸ்கஸுக்கு வெளியே நடந்த இராசயனத் தாக்குதலுக்கு பொறுப்பு என்பது குறித்து சிறிதளவு சரிபார்க்கக்கூடிய சான்றையும் இன்னமும் அளிக்கவில்லை.
அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்குமாறு ஒரு அரசாங்கத்தைக் கூட நம்பிக்கை கொள்ள வைக்க முடியாத நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ரஷ்யாவில் G20 உச்சிமாநாட்டில் கடுமையான படுதோல்வியை சந்தித்தார். இத்தகைய தாக்குதலுக்கு சான்று எங்கேனும் பகிர்ந்து கொள்ளப்பட முடியும் என்றால், ஊகிக்கக்கூடிய வகையில் அது நாடுகளின் தலைவர்கள் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் கூடிய இடத்தில்தான். ஆனால் ஒபாமாவிடம் அத்தகைய சான்று ஏதும் இல்லை, உலகில் அனைத்து அரசாங்கங்களும் அதை அறியும்.
ஆகஸ்ட் 21 நிகழ்வு, வாஷிங்டன் மற்றும் அதன் பினாமிகளான அல் குவேடா தலைமையிலான ஆயுதமேந்திய இஸ்லாமியவாத போராளிகள், சிரியா மீது மட்டும் இல்லாமல், இன்னும் ஒரு பரந்த போரை நடத்த காரணங்களை வழங்க நடத்திய ஒரு ஆத்திரமூட்டுதலாகும்.
முதலில், இப்பொழுது தயாரிக்கப்படுவது சிரிய அரசாங்கம் மற்றும் அதன் இராணுவத்தின் மீது முழு அளவிலான தாக்குதலாகும். நோக்கங்களில் ஒன்று, அசாத்தை படுகொலை செய்து சிரிய இராணுவத்தின் பெரும்பகுதியை அழிப்பதாகும். இதையொட்டி ஆயிரக்கணக்கிலான சிரியக் குடிமக்களும் —ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என— கொல்லப்படுவர்.
இந்த நோக்கங்கள், அமெரிக்க ஆளும் நடைமுறைக்குள் தெளிவாக உச்சரிக்கப்படுகிறது. செப்டம்பர் 5ம் திகதி CSIS என்னும் மையத்தில் முக்கிய பகுப்பாய்வாளராக இருக்கும், முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஆன்டனி கோர்ட்ஸ்மன், “அமெரிக்கத் தாக்குதல்களுக்கும் சிரிய உள்நாட்டுப் போரில் தலையீட்டிற்கும் அர்த்தமுள்ள முடிவை வடிவமைத்தல்” என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
“நீடித்த மூலோபாய விளைவை அமெரிக்கா சாதிக்க வேண்டும் என்றால், அது சிரிய இரசாயன ஆயுதங்களை பற்றி குவிப்புக் காட்டுவதற்குப் பதிலாக, உண்மையில் பெரிய க்ரூஸ் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி, சிரிய உள்நாட்டு போரின் விளைவை மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கோர்ட்ஸ்மன் எழுதுகிறார். “ஒரு குறுகிய காலத்தில், இதன் அர்த்தம், இரசாயன ஆயுதங்கள் மீது குவிப்புக் காட்டுவது என்பதற்கு மாறாக உள்நாட்டுப் போரின் மீது தாக்கத்தை கொடுக்கும் உயர் மதிப்புடைய இராணுவ இலக்குகள் மீது கவனம் செலுத்தவேண்டும்.”
“ஒரு மட்டுப்படுத்தப்பட்ட, குறுகிய கால தன்மையில் நமக்கு ஆதரவாக நிலைமையைக் கொண்டுவருவது போதாது” என்று அவர் தொடர்ந்து வலியுறுத்துகிறார். அமெரிக்கத் தாக்குதல், வாஷிங்டனின் சார்பில் குறுங்குழுவாத உள்நாட்டுப் போரை நடத்தும் பாசிச வகைப்பட்ட இஸ்லாமியவாத துப்பாக்கிதாரிகளான “எழுச்சியாளர்கள்” என்று அழைக்கப்படுவோருடைய பெரும் போர் விரிவாக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும் என அவர் வாதிட்டுள்ளார்.
இது ஏற்கனவே நடைபெற்று வருகிறது. வெள்ளியன்று டைம்ஸ் ஆப் லண்டன் தகவல் கொடுத்துள்ளதாவது: “CIA, சௌதி அரேபியா மற்றும் பிற அரபு நாடுகள் சிரியாவின் எழுச்சியாளர்களுக்கு புதிய ஆயுதங்கள் அளிப்பதை மேற்பார்வையிடுகிறது; அவை அடுத்த வாரம் தொடங்க இருக்கும் அமெரிக்க குண்டுத் தாக்குதலை நன்கு பயன்படுத்த அவற்றிற்கு உதவும்.”
புதிதாகக் கொடுக்கப்பட்ட பாரிய ஆயுதங்களில், டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், தரையில் இருந்து வானுக்குச் செலும் ஏவுகணைகள் இன்ன பிறவும் அடங்கியுள்ளன. சௌதி உளவுத்துறைத் தலைவர் இளவரசர் பண்டர் பின் சுல்த்தான் அல்-சௌத் இடம் இருந்து இரசாயன ஆயுதங்கள் பெறுவதும் இருக்கலாம்—இவை மற்றொரு ஆத்திரமூட்டல் தேவையானால் பயன்படுத்தப்படலாம்.
இந்த ஆயுதங்கள், அல் குவேடா தலைமையில் இருக்கும் போராளிகளுக்கு செல்லும், குறுங்குழுவாத படுகொலைகளை டமாஸ்கஸிலும் மற்றும் நாடெங்கிலும் நடத்துவதற்கு இவர்களுடன்தான் அமெரிக்க அரசாங்கம் இப்பொழுது நெருக்கமான செயற்பாட்டு ஒற்றுமையைக் கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் நோக்கம் சிரியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஆனால் இன்னும் பரந்த பிராந்தியப் போர்த்தயாரிப்பிற்கு இலக்கு கொள்கிறது, ஈரானை இலக்கு வைக்கிறது—இதன் நோக்கம் எண்ணெய் வளமுடைய, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பேர்சிய வளைகுடா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உள்ள தடைகள் அனைத்தையும் அகற்றவேண்டும் என்பதாகும். கடந்த தசாப்தம் முழுவதும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட போர்களுக்குப்பின் இருந்த அதே கொள்ளை முறை நோக்கங்களைத்தான் ஒபாமாவும் தொடர்கிறார்.
அமெரிக்க செனட் வெள்ளியன்று, செனட் பெரும்பான்மைத் தலைவர் ஹாரி ரீட், செனட் வெளியுறவுக் குழுவால் ஏற்கப்பட்ட, முறையாக இராணுவ வலிமையை பயன்படுத்துவதற்கான ஒப்புதல் சட்டத்தை அறிமுகப்படுத்த அனுமதிப்பதற்காக குறுகிய காலத்திற்குக் கூடியது. முழு செனட்டும் அதன் விடுமுறை காலத்தில் இருந்து திங்களன்று கூடும் என்றும் அடுத்த புதன்கிழமைக்குள் சிரியப் போரை ஆதரித்து வாக்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தீர்மானம் ஏற்கனவே பேரழிவிற்கு உட்பட்டுள்ள மத்திய கிழக்கு நாட்டில் 60 நாட்கள் வான் தாக்குதலுக்கு அனுமதிப்பதுடன், ஒபாமா நிர்வாகம் இன்னும் தாக்குதல்கள் தேவை என நினைத்தால் மேலும் ஒரு 30 நாட்கள் நீட்டிப்பும் வழங்குகிறது.
சட்டத்தின் பொருளுரை எப்படி இருந்தாலும், காங்கிரசின் இரு மன்றங்களலும் இயற்றப்பட்டாலும் படாவிட்டாலும், (பெருகிய முறையில் சந்தேகம்தான்), நிர்வாகம் சட்டவரைவை முதலில் அளித்தபோதே அதன் இராணுவ நோக்கங்களின் தொலைதூர தாக்கங்கள் கொண்ட தன்மையை தெளிவாக்கியுள்ளது. இத்தீர்மானம், சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் அல்லது அத்தகைய ஆயுதங்கள் அல்லது அவற்றுடன் “தொடர்புடைய கூறுபாடுகள்” “சிரியாவிற்குள், சிரியாவிற்கு இருந்து அல்லது சிரியாவிலிருந்து” பெருகுவதை தடுக்க, வரம்பற்ற இராணுவ வலிமையை அனுமதிக்கிறது. இத்தகைய சொல்லாட்சி, ஈரான் அல்லது ரஷ்யா அல்லது சிரியாவுடன் “தொடர்புடைய”, உதவியளிக்கும் என்று அமெரிக்கா நிர்ணயிக்கும் எந்த நாட்டின் மீதும் தாக்குதலை நடத்த அனுமதிக்கும்.
இதுதான் அமெரிக்கத் தலையீட்டின் நோக்கமாக உள்ளது என்பது, கடந்த வாரம் வாஷிங்டனில் ஏராளமான உயர்மட்ட இஸ்ரேலிய இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் பிரதிநிதிகள் வந்ததில் இருந்தும், முறையாக முரசு கொட்டும் பிரச்சாரமான சிரியாவில் தலையீடு, ஈரான் அணுவாயுதத்தை பாதுகாப்பதை தடுக்க தேவை என கூறப்படுவதில் இருந்தும் நன்கு தெளிவாகியுள்ளது.
வெள்ளியன்று நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டபடி, ஒபாமா நிர்வாகம், இராணுவ வலிமையை பயன்படுத்த ஒப்புதல் பெறுவதற்கு, காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்க, அமெரிக்கன் இஸ்ரேல் பொது விவகாரங்களுக்கான கமிட்டி (American Israel Public Affairs Committee -AIPAC) போன்ற சியோனிச செல்வாக்கு அமைப்புக்களை அதிகம் நம்பியுள்ளது.
காங்கிரஸ் விவாதங்களில் என்ன முடிவுகள் ஏற்பட்டாலும், வரவிருக்கும் போர் குறித்து அமெரிக்காவில் சட்டமன்ற விவாதம் இதுதான் கடைசி முறையாக இருக்கும். அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியின் ஆழம், அமெரிக்க மக்கள் என்ன கருதினாலும் சரி, அது ஆக்கிரமிப்பு போருக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதுதான் அதன் பொருளாதாரச் சரிவுகள் மற்றும் ஆழ்ந்த உள் முரண்பாடுகளை ஈடு செய்யும் ஒரு வழிமுறையாக காணப்படுகிறது.
இது, பரந்த இராணுவ, உளவுத்துறைக் கருவிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதும், பெருநிறுவன, வங்கிகள் மற்றும் பெரும் செல்வந்தர்களின் நலன்களுக்கு முற்றிலும் அடிபணிந்ததுமான ஒரு அரசாங்கத்தின் சதி ஆகும். இது முழுப் பொய்களின் அடிப்படையில், அதுவும் பெரும்பாலான அமெரிக்க மக்கள் இராணுவ நடவடிக்கையை எதிர்க்கும் சூழலில் அவர்கள் அமெரிக்க மக்களை போருக்குள் இழுக்கின்றனர் என்பதை ஒபாமாவும் அவருடைய ஆதரவாளர்களும் புரிந்துகொண்டுள்ளனர். இறுதியில், இது பாரிய அடக்குமுறை மூலம்தான் மேற்கொள்ளப்பட முடியும்.
பரந்த மக்களின் எதிர்ப்பை அணிதிரட்டுவதற்கூடாகவே வரவிருக்கும் போரை நிறுத்த முடியும். இது ஒபாமா நிர்வாகம், காங்கிரஸ், இரு பெருவணிக அரசியல் கட்சிகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோரின் சுயாதீன நடவடிக்கையை வேண்டிநிற்கிறது. போருக்கு எதிரான போராட்டம், வாழ்க்கைத் தரங்களை காப்பதுடனும், அடிப்படை ஜனநாயக உரிமைகளை காப்பதுடனும் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும். இவை இராணுவ வாதம், ஏகாதிபத்திய ஆக்கிரோஷம் இவற்றின் ஆதாரமாக இருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் ஆளும் நிதிய தன்னலக்குழுவின் கீழ் இடையறா தாக்குதலுக்கு உட்பட்டுள்ளன.
சோசலிச சமத்துவக் கட்சி இந்த எதிர்ப்பை அமைப்பதற்கு போராடுகிறது, கூட்டங்களை நடத்துகிறது, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுகிறது. நம் வாசகர்களையும் ஆதரவாளர்களையும் இப்போராட்டத்தில் இன்றே சேருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
|