The Obama administration, public opinion and the drive to war
ஒபாமா நிர்வாகமும், பொதுமக்கள் கருத்தும் மற்றும் போர் முனைப்பும்
By Joseph Kishore
5 September 2013
வாஷிங்டனில் ஒரு அரசியல் ஜால விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒபாமா நிர்வாகமும் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளது முன்னணி அங்கத்தவர்களும் சிரியாவுக்கு எதிரான போர் ஆயத்தத்தில் ஒரு மோசடியான விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிரிய ஜனாதிபதியான பஷார் அல்-ஆசாத் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படுவதன் மீதும், பொய்களும் உறுதிப்படுத்தப்படாத கூற்றுகளும் நிறைந்து காணப்படும் இப்போதைய “ஆதாரத்தின்” மீதும் அமெரிக்க நாடாளுமன்றம் தமது வேடதாரித்தனமான கோபத்தை வெளிப்படுத்துகின்ற வகையில் அநேகமாக அடுத்த வாரத்தில் வாக்களிக்க இருக்கிறது என்கிற நிலையில், ஒபாமா உள்ளிட்ட உயர் அரசாங்க அதிகாரிகள், அதற்கு முந்தைய கால அவகாசத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
”பதட்டமூட்டக் கூடியதாக” கருதப்படும் எதுவொன்றும் - அதாவது அமெரிக்க மற்றும் உலக மக்களின் கண்களில் படக்கூடாத எந்தவொரு விடயமும் - திரைக்குப் பின்னால் மட்டுமே விவாதிக்கப்படும் என்ற பேரில் சிரியாவுக்கு எதிரான மூர்க்கத்தனத்திற்கான உண்மையான காரணங்களும் அதன் பின்விளைவுகளும் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டிருக்கவில்லை. இரசாயன ஆயுதங்களின் பயன்பாடு குறித்த பொய்கள், அது தான் போர் முனைப்புக்கு பின்னாலிருக்கும் நோக்கமென்பதாகக் கூறும் கூற்று, அத்துடன் வரவிருக்கும் மோதல் “மட்டுப்படுத்தப்பட்டதாக” இருக்கும் என்ற வாக்குறுதி ஆகியவை உட்பட ஒபாமா நிர்வாகத்தின் முன் முகாந்திரங்கள் அத்தனையுமே ஊடகங்களாலும் இரு பெருவணிகக் கட்சிகளாலும் உள்ளது உள்ளபடி ஏற்று கொள்ளப்பட்டிருக்கின்றன.
இந்த பரபரப்புகளில் பொதுமக்களின் உணர்வுகளுக்கு ஏறக்குறைய எந்தவொரு பிரதிபலிப்பும் இல்லை. மாறாக போருக்கு எதிரான மனோநிலையை அச்சுறுத்துவதையும் சட்டவிரோதமாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையின் பகுதியாகவே நாடாளுமன்ற விவாதங்கள் அமைந்திருக்கின்றன.
அமெரிக்க மக்களிடையே போருக்கு எத்தனை ஆழமான எதிர்ப்பு இருக்கிறது என்பது ஆளும் வர்க்கத்திற்கு நன்கு தெரியும். நேற்று வெளியான வாஷிங்டன் போஸ்ட்/ஏபிசி நியூஸ் கருத்துக் கணிப்பு ஒன்றின் படி, 36 சதவீதம் பேர் தான் இராணுவத் தாக்குதல்களுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் 59 சதவீதம் பேர் இராணுவத் தாக்குதல்களுக்கு எதிராக இருக்கின்றனர். சிரிய அரசாங்கம் அப்பாவி மக்களின் மீது இரசாயன ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருப்பதாகக் கூறும் அமெரிக்க அரசாங்கத்தின் மையமான பிரச்சாரத்தைக் கூறி, திட்டமிடப்பட்டிருக்கும் இராணுவத் தாக்குதல்கள் இந்தத் தாக்குதலுக்கான பதிலிறுப்பாகக் கருதப்படுகின்ற அனுமானத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கே இந்த பதில் கிடைத்திருக்கிறது.
வயது, பாலினம், அரசியல் சார்பு, கல்வி, வருமானம் அல்லது பிராந்தியம் என எதன் அடிப்படையிலும் நாட்டின் மக்கள்தொகையின் எந்தவொரு பிரிவும் போரை ஆதரிக்கவில்லை. இருந்தபோதிலும் போருக்கான எதிர்ப்பு பணக்காரர்களைக் காட்டிலும் ஏழை அமெரிக்கர்களிடையே தான் அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்(50,000 டாலருக்குக் குறைவாய் வருவாய் ஈட்டுவோரில் 63 சதவீதம் பேர் போரை எதிர்க்கின்றனர், 100,000 டாலருக்கு மேல் வருவாய் ஈட்டுவோரில் 51 சதவீதம் பேர் போரை எதிர்க்கின்றனர்). வயது மிகுந்தவர்களைக் காட்டிலும் குறைந்த வயதினர் போருக்கு அதிகமான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர் ( 18-39 வயது வரையானோரில் 65 சதவீதம் பேர் போரை எதிர்க்கின்றனர், 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோரில் 55 சதவீதம் பேர் போரை எதிர்க்கின்றனர்).
அரசியல் ஸ்தாபகத்திற்கும் வெகுஜனங்களுக்கும் இடையிலான பிளவு போர் விடயத்தில் மட்டுமாய் வரம்புபட்டதில்லை. எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு எதிராய் அரசாங்கமும் ஊடகங்களும் கட்டவிழ்த்து விட்ட நச்சுப் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் இருந்தபோதும், அரசாங்கத்தின் குற்றவியல்தனத்தை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருந்த இந்த விழிப்பூட்டிக்கே(whistleblower)மிதமிஞ்சிய மக்கள் ஆதரவு இருந்தது என்பதை கருத்துக்கணிப்புகள் காட்டின. மக்கள் மனோநிலை “தேசத்தின் அரசியல் ஸ்தாபகத்தின் ஒன்றுபட்ட கண்ணோட்டத்திற்கு ஏறக்குறைய முற்றிலும் எதிரானதாகச் செல்கிறது” என்று அந்த சமயத்தில் ஒரு கருத்துக்கணிப்பு நிபுணர் கூறினார். போர் விடயத்திலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
முழுமையாக இரண்டு வாரங்கள் விடாப்பிடியான ஊடகப் பிரச்சாரம் நடந்தேறியிருக்கிறது, வெற்றுவாய்வீச்சுத் தொகுப்பாளர்களும் செய்திச் சேவையாளர்களாக வேலை செய்யும் அரசின் முகவர்களுமாய், விமர்சனம் கூட வேண்டாம், பாரபட்சமின்மையெனும் வேடத்தைக் கூடப் புறந்தள்ளி விட்டு இந்த பிரச்சாரத்தை நடத்தியிருக்கிறார்கள். அதற்குப் பின்னரும் கூட இத்தகைய அளவுக்கு போர் எதிர்ப்பு மனோநிலை இருக்கிறது என்பது தான் இதில் மிகவும் முக்கியமான அம்சமாகும்.
வெகுஜன மனோநிலை வெளிப்பாடு காணத்தக்க எந்தவொரு உண்மையான களமும், நிலவக் கூடிய பிளவை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. பொதுவாக நியூயோர்க் டைம்ஸ் மற்றும் பிற முக்கிய பத்திரிகைகளில் வெளிவரக்கூடிய போர் ஆதரவுக் கட்டுரைகள் மற்றும் தலையங்கங்களில் வருகின்ற பின்னூட்டங்களில் பெரும்பாலானவை போர் எதிர்ப்பு கண்ணோட்டத்தினை கொண்டதாக இருக்கின்றன. அதிலும் மற்ற வாசகர்கள் ”படிக்கப் பரிந்துரைக்கிற”முன்னிலைக் கட்டுரைகளில் ஏறக்குறைய இந்த நிலை தான் முழுமையாக காணப்படுகிறது. அரசியல் கட்சிகளும் சரி அல்லது ஊடகங்களும் சரி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து கொஞ்சம் கூட அக்கறை காட்டுவதில்லை என்கிற கோபத்தை அநேகப் பின்னூட்டங்கள் வெளிப்படுத்துகின்றன.
முதலாளித்துவ அரசியலில் நடந்திருக்கும் உருமாற்றத்தைக் கணக்கிலெடுக்க கடந்த காலத்தைப் போற்ற அவசியமில்லை. வியட்நாம் போரின் போது நாடாளுமன்ற விசாரணைகள் மிக முக்கியத்துவம் பெற்றவையாக இருந்தன. சில அரசியல்வாதிகள் பரந்த மக்களின் மனோநிலைக்கு விண்ணப்பமும் செய்தனர், அத்துடன் ஊடகங்கள் அரசாங்கத்தின் பொய்கள் மற்றும் இரகசியங்களை அம்பலப்படுத்துவதற்கான ஒரு பொறிமுறையாக சேவை செய்தன. ஈராக் குறித்த 1991 வாக்கெடுப்புக்கு முன்னதாக விரிவான அமர்வுகள் இடம்பெற்றன. 2003 ஆம் ஆண்டில் கூட, புஷ் நிர்வாகம், முழுக்கப் பொய்களை அடிப்படைகளாகக் கொண்டு எனினும், போருக்கான ஒரு நியாயத்தை ஸ்தாபிக்க மிகவும் மெனக்கெட்டது. ஈராக் ஆக்கிரமிப்புக்கு முன்னதாய் பல மாத காலம் நெடிய முஸ்தீபுகள் நடந்தேறின.
இப்போதோ, மத்திய கிழக்கு முழுக்கவும் ஒரு உள்நாட்டுப் போரை தூண்டக் கூடிய சாத்தியம் மற்றும் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஒரு நேரடி மோதலை தூண்டக் கூடிய சாத்தியம் ஆகியவை உள்ளிட கணக்கிட முடியாத பின்விளைவுகளைக் கொண்ட ஒரு போரைத் தொடங்குவதற்கான முடிவு எந்தவொரு விரிவான பொது விவாதமும் இன்றியே முன்னெடுக்கப்படுகிறது. சென்ற வாரத்தில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு தோல்வி கண்டதற்குப் பின்னால் தான் கேபிடல் ஹில் நடைமுறைகள் முன்வந்திருக்கின்றன, அவையும் ஒரு வாரத்திற்குள்ளாக முடிவுக்குக் கொண்டுவரப்படும்.
ஜனநாயக மற்றும் அரசியல் வடிவங்களின் சிதைவு என்பது ஒரு சமூக நிகழ்முறையின் - எல்லாவற்றுக்கும் மேல் சமூக அசமத்துவம் அசாதாரண வளர்ச்சி கண்டதின் ஒரு வெளிப்பாடே. தாயகத்திலும் வெளிநாடுகளிலும் ஆழமான மக்கள்விரோதக் கொள்கைகளை அமல்படுத்துகின்ற தீர்மானத்துடன் இருக்கும் நிதிப் பிரபுத்துவத்துடன் கூட்டுச் சேர்ந்திருக்கக் கூடிய இராணுவ மற்றும் உளவு எந்திரத்தினால் அரசு நடத்தப்படுகிறது. பரந்த பெரும்பான்மை மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்கு எதிரான ஒரு நிரந்தர சதியாக இது நிலவுகிறது.
ஒபாமா நிர்வாகம் இந்த நிகழ்முறையில் ஒரு குறிப்பிட்ட உச்சத்தைக் குறித்து நிற்கிறது. “மாற்றத்திற்கான வேட்பாளர்”, “உருமாற்றப் போகின்ற”ஜனாதிபதி (இப்படித் தான் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் 2008 அறிக்கை கூறியது) தான் அமெரிக்க வரலாற்றின் மிகவும் வலது-சாரி அரசாங்கத்திற்குத் தலைமை கொடுத்து நிற்கிறார். முக்கியமாக போர் எதிர்ப்பு மனோநிலையின் காரணத்தாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவரான ஒபாமா - நோபலுக்கான அமைதிப் பரிசை வென்றவர் - இராணுவவாதம் வரலாற்றுப் பெருமளவுக்கு விரிவு காண்பதை மேற்பார்வை செய்திருக்கிறார். ஆளில்லா விமானங்கள் மூலம் படுகொலை செய்வது மற்றும் ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் இப்போது சிரியா போர் ஆகியவை கொண்ட ஒரு சர்வதேசக் கொள்கையும் இதில் அடங்கும்.
புஷ் நிர்வாகத்தின் ஆரம்ப வருடங்களில் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்து நடத்திய, உயர் நடுத்தர வர்க்கத்தின் மிகச் சலுகை படைத்த பிரிவுகளை பிரதிநித்துவம் செய்த, ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான அமைப்புகள் எல்லாம் இப்போது போர் ஆதரவு அமைப்புகள் ஆகி விட்டன. ISO மற்றும் அதன் சர்வதேச ஒத்த சிந்தனை அமைப்புகளைப் போன்று “இடது” எனக் கூறிக் கொள்ளும் அமைப்புகளும் அவற்றின் ”தாராளவாத” கல்வியறிஞர்களின் கூட்டமுமாய்ச் சேர்ந்து கொண்டு கடந்த இரண்டாண்டு காலத்தில் போருக்கான சித்தாந்த நியாயத்தைத் தயாரித்து வந்திருந்தனர். அமெரிக்கப் பொறியமைவுடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மேலாதிக்கம் செலுத்திய ஒரு உள்நாட்டுப் போரை “புரட்சி”யாக இவர்கள் சித்தரித்து வந்தனர்.
இப்போது போர் எதிர்ப்பு என்பது தீர்மானகரமாக பரந்த மக்களை நோக்கி அதாவது தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்புகிறது. திட்டமிடப்பட்டுக் கொண்டிருக்கும் விடயத்தை நோக்கி பொதுவான குரோதம் இருக்கிறது என்பது மறுக்க முடியாதது. ஒபாமாவை முன்பு ஆதரித்தவர்களைப் பொருத்தவரை, பொய் கூறி நம் தலையில் பல விடயங்களைக் கட்டி விட்டார்கள் என்கிற உணர்வு அவர்களிடம் பெரியளவில் இருக்கிறது.
இந்த விரோதத்திற்கு ஒரு செயலூக்கமிக்க நனவான அரசியல் வடிவம் கொடுக்கப்பட வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு வெளியே இந்தப் போராட்டத்திற்குத் தலைமை வழங்கக் கூடிய ஒரு அரசியல் சக்தி வேறெதுவும் இல்லை. ஒபாமா நிர்வாகத்தின் நடவடிக்கைகள் பரந்த மக்களின் நம்பிக்கைகளால் உத்தரவிடப்பட்டதாக இருக்கப் போவதில்லை, மாறாக அவரும் ஒட்டுமொத்த அரசியல் எந்திரமும் பிரதிநிதித்துவம் செய்கின்ற வர்க்க நலன்களாலேயே உத்தரவிடப்பட்டதாக இருக்கும் என்பதை சோசலிச சமத்துவக் கட்சி ஆரம்பத்தில் இருந்தே விளங்கப்படுத்தி வந்திருக்கிறது. முதலாளித்துவ அமைப்புமுறையிலும் அது சேவையளிக்கின்ற நிதிப் பிரபுத்துவத்தின் தயவுதாட்சண்யமற்ற நலன்களிலும் தான் தான் போருக்கான மூலம் தங்கியிருக்கிறது.
வரவிருக்கும் போருக்கு அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் எதிர்ப்பை அணிதிரட்டுவதற்காகவே சோசலிச சமத்துவக் கட்சி போராடி வருகிறது. முடிந்த அளவுக்கு கூட்டங்களை நடத்தவிருக்கிறோம், ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைக்க இருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் ஒரு செயலூக்கமான பங்கினை வகிக்க எங்களது வாசகர்களையும் ஆதரவாளர்களையும் நாங்கள் அழைக்கிறோம். தொழிலாள வர்க்கத்தின் குரல் செவிமடுக்கப்பட வேண்டும். இன்றே சோசலிச சமத்துவக் கட்சியை தொடர்பு கொள்ளுங்கள், இணையுங்கள்.
|